திருக்கயிலையில் பேரொளி பொங்க திருத்தோற்றம் அளிக்கும் கந்தபுரியில் ஈசனின் செல்லப் பிள்ளையான செந்தில் ஆண்டவன் வழக்கம் போல் தமது இளையவர்களோடு உல்லாசமாக உப்பரிகையிலும் உயர்ந்த துவஜஸ்தம்பங்களிலும், கயிலைமலை சிகரத்திலும் விதவிதமான வேடிக்கைகள் புரிந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அது சமயம் நான்முகன் தேவாதிதேவர்களும், மாமுனிவர்களும் புடை சூழ கயிலையங்கிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் எழுப்பிய “ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர” என்ற கோஷம் கந்தபுரியிலும் ஒலித்தது.
தேவாதி தேவர்களும், முனிவர்களும், சிவக் கோவில் திருவாயில் மணி மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த முருகப் பெருமானை நமஸ்கரித்து, “மேஷவாஹனனான மால்மருகனுக்கு ஜே! வேலனுக்கு அரோகரா!” என்று துதிபாடினர். முருகன் தமது மென்கரம் உயர்த்தி அனைவரையும் அநுக்கிரஹித்தார். அவர்கள் சிவக்கோவிலுக்குச் சென்றனர்.
பிரம்மதேவன் சிவகுமாரனைப் பார்த்தார். அவரது அருளாணைப்படி மிக அற்புதமான நிகழ்ச்சி ஒன்று நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிவகுமாரனைக் கண்டும் காணாதவர்போல் வேறொரு பக்கமாக திரும்பிப் பார்த்த வண்ணம் சிவ கோவிலுக்குள் பிரவேசித்தார் பிரம்மதேவன் .
பிரம்மனின் செயலைப் புரிந்து கொண்ட முருகன் சற்று கோபமாக, “என்னைப் புறக்கணித்து ஓரமாகச் செல்லும் இவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். நானும் ஈசனும் ஒன்றே என்பதனை உணர்த்த வேண்டும். திரும்பவரும் போது இவரை பரீக்ஷிக்கலாம்” என்று தமக்குள் எண்ணினார்.
பிரம்மதேவர்மற்றும் தேவாதி தேவர்கள், முனிவர்கள் சிவக் கோவில் சென்று, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோமகனை, மாசிலாப் பெருமானை ஜோதியுள் ஜோதியான அம்பல வாணனை, தருமத்தின் நாயகனை தூய திருமேனியனை கற்பக மலர்களால் அர்ச்சித்து திருப்பாத மலர்களைத் துதி செய்தார்.
“சந்திரகலாதரா/ சர்வாலங்கார பூஷிதா! கல்யாண சுந்தரா! ஜகத்ரக்ஷகா! தேவரீருடைய சரணகமலங்களைத் தரிசித்துப் போகவே நாங்கள் வந்தோம்” என்று விண்ணப்பித்தார்.
ஈசனும் மனம் மகிழ நான்முகனையும், தேவாதி ஈசனும தேவர்களையும், முனிவர்களையும் அநுக்கிரஹித்து, “உங்கள் வருகையால் யாம் மகிழ்ச்சி கொண்டோம். பிரம்ம தேவனால் ஓர் உசிதமான நற்காரியம் நடக்க உள்ளது.
”யாம் வேறு; முருகன் வேறல்ல. மாணிக்க மணியும் ஒலியும் போல் இருவரும் ஒருவரே எனும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி அற்புதத் திருவிளை யாடல் ஒன்று ஆரம்பமானது
ஈசனின் குமரனால் நடக்கப் போகும் இந்த திருக்கூத்திற்கு நான்முகனே நாயகன் ஆனான்.
”பரந்தாமா! தேவரீர் கண்ஜாடையில் தானே இந்த ஜகமே இயங்குகிறது. லட்சம் குழந்தைகளோடு விளையாடும் முருகன் சற்று நேரம் என்னோடும் விளையாடட்டும். எமக்கு அது பேரானந்தம் தானே” என புன்னகை களி நடனம் புரிய செப்பினான் சதுர்முகன்!
பிரம்மதேவன் ஈசனைப் பணிந்து புறப்பட்டார். சிவக் கோவில் வாயிலில் கோடி மன்மதசொரூபனாய் நின்று கொண்டிருந்த முருகன் நான்முகனைப் பார்த்ததும், “இப்படி வாரும். நீர் தானே னே எம்மை அலட்சியப் படுத்திவிட்டு என் ஐயனின் திருமாளிகைக்குச் சென்றவர். நீர் யார்?உமது தொழில் என்ன?” என்று வினவினார்.
”ஈசனருளால் படைக்கும் தொழில் புரிகிறேன்!” என்று நயமுடன் நவின்றார் நான்முகன்.
”அங்ஙனமாயின் உமக்கு வேதம் வருமோ?”
“பதினெட்டு புராணங்களிலும் வல்லமைப் பெற்றிருக் கிறேன். சிவபெருமானிடம் சிவாகமங்களை முறை யோடு கற்றுத் தேர்ந்துள்ளேன். அத்தோடு மற்றவர்க்கு அருளிச் செய்யும் ஆசானாகவும் விளங்குகிறேன்.”
”நன்று! நன்று! அந்த அளவுக்கு வல்லமை பெற்றவரோ தாங்கள்? அங்ஙனமாயின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தை எடுத்துச் சொல்வீராகுக! உமது வல்லமையை நான் அறிந்து கொள்ள வேண்டாமா?”
வெற்றிவேலவன் வினவியது கேட்டு, மலரோன், “வேதங்களுக்கெல்லாம் முன் சொல்லப்படும். ”ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்து ரிக் வேதத்தைச் சொல்லத் தொடங்கினார்.
சரவணபவன் இடைமறித்து, ‘பிரம்மதேவரே! நிறுத்தும்” என்றார்.
நான்முகன் கலங்கிப் போனான். கந்தன் குறுநகை மேலிட “நீர் ஆரம்பத்தில் கூறிய ஓம் என்ற மந்திரத்தின் பொருள் யாது?” என்று திருவாய் மலர்ந்தார்.
”ஓம்'” என்றால் பிரணவம்!'”
“பிரணவம் என்றால் என்ன?”
நான்முகன் திகைத்தான்.
முருகன் அவரைப் பார்த்து, ”ஓம் என்ற மந்திரத்தின் பொருள் பிரணவம்! பிரணவம் என்ற மந்திரத்தின் பொருள் ஓம். அப்படித்தானே! நன்றாக இருக்கிறது நீர் வேதம் கற்றுக் கொண்ட முறையும் கற்பிக்கும் முறையும்” என்றார்.
தரணிக்கே தாரக மந்திரமாயுள்ள ஓம் என்ற சொல்லுக்குப் பொருள் புரியாது நான்முகன் விழிப்பது கண்டு வேலவன் மேலும் சினங்கொண்டார்.
“பிரணவத்தின் பொருளைப் புரியமுடியாத நீர் எவ்வாறு படைப்புத் தொழில் புரிகின்றீர்?”என்று வினவினார்.
பிரம்மதேவனின் நான்கு தலைகளும் குலுங்கும் வண்ணம் குட்டினார். அருகே நின்று கொண்டிருந்த வீரவாகு தேவரிடம் ‘பிரம்மதேவனைப் பிடித்துச் சிறையிலிடுக! என்று ஆணையிட்டார்.
வீரவாகுதேவர் சற்றும் தாமதியாது ஐயனின் ஆணையை நிறைவேற்றினார்.
கந்தக் கடவுள் படைப்புத் தொழிலை, தாமே ஏற்று நடத்தத் திருவுள்ளம் கொண்டு கந்த வெற்புக்குச் சென்றார்.
ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு ஒரு திருக்கையில் ஜப மாலையும், ஒரு திருக்கரத்தில் கமண்டலமும், மற்ற இரு கரங்களிலும் வரதமும், அபயமும் விளங்க படைப்புத் தொழிலைத் தாமே தொடங்கினார் முருகன்.
நான்முகனும் வேலவனும் நடத்தும் இந்த அற்புதத்தைப் புரிந்து கொள்ள முடியாத அமரர்கள் பிரம்மனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை கண்டு அஞ்சினர். நெஞ்சு உருகினர்.
பிரம்மதேவனைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், இந்திரன் முதலிய தேவர்களுடன் சிவபெருமானிடம் சென்று முறையிடுவது என்று எண்ணினர். அனைவரும் திருக்கயிலாய மலையை வந்தடைந்தனர்.
கயிலைமலைத் தலைவாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்த நந்தி தேவரிடம் உத்தரவு பெற்று, சிவக்கோயிலுட் சென்று பரமனையும், பிராட்டியாரையும் வணங்கினர் தேவர்கள்.
கொன்றை மாலை சூடிய சிற்றம்பலத்துப் பேரழகனார் தேவர்கள் பால் திருவிழி மலர்ந்து, வந்த காரணத்தை வினவினார்.
திருமால், “பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் புரியாது மயங்கிய பிரம்மதேவனைச் சரவணன் சிறையிலடைத்து விட்டார். அத்தோடு படைப்புத் தொழிலையும் புரிகின்றார். ஐயனிடம் இதற்கொரு முடிவு காணவே நாங்கள் வந்துள்ளோம்” என்றார்.
”பிழை புரிந்தவன் பிரம்மன். எமது குமரன் கந்தன் அளித்த தண்டனை முற்றிலும் பொருத்தமானதே! பிரம்மன், தனது பேதமையால், பாலகன் என்று கருதிக் கந்தனை வணங்காது சென்றான். அதன் பலனையே அனுபவிக்கிறான்.
தேவர்களே! சிவன் வேறு; அவன் குமரன் வேறு என்று எண்ணற்க! நானே குமரன்; குமரனே நான். என்னையும் குமரனையும் வேறுபட்டவர் என்று எண்ணுபவர்துன்பம் அடைந்து கொடிய நரகத்தில் மீள முடியாமல் வீழ்வர்.
குமரனிடம் அன்பு காட்டுபவர், உய்யும் நிலையை அடைவர்! அவனை வணங்காது எம்மை மட்டும் வணங்கு வோர்க்கு ஒருபோதும் முக்தி கிட்டாது! இந்த உண்மை களைப் பிரம்மன் உணரவேண்டும் என்பதற்காகவே பிரம்மனை எமது குமரன் சிறையிட்டானே அன்றித் தன்னை வணங்காமையால் அல்ல.
பிரணவத்தின் பொருள் நானும் அவனுமே! பிரணவமாவது அகரம், உகரம், மகரம்,விந்து,நாதம், சக்தி, காந்தம் என்று ஏழு வகைப்படும். அவற்றுள் சக்தி என்பது வேலாயுதமாகும். மற்றைய ஆறும் ஆறுமுகங் களாகவும், அவற்றிற்கு உண்மைப் பொருளாகவும் விளங்குபவன.
வேதம், எம்மை ஒருமுறையும், நம் குமரனை ஓம்-ஓம்-ஓம் என்ற பிரணவத்தோடு இணைத்து மும்முறையும் அழைக்கும். இவ்வுண்மைகளை உணராது செருக்குற்ற பிரம்மனைச் சிறையிலிருந்து விடுவிப்பது எங்ஙனம் சாத்தியமாகும்?”
“மூலப்பொருளே! பிரணவ சொரூபமே! தேவரீர் தேவர்களின் எண்ணற்ற பிழைகளைத் திருவுள்ளம் கனிந்து பொறுத்தருளவில்லையா? அதுபோல் பிரம்மனின் இப்பிழையையும் பொறுத்தருளக் கூடாதோ? தங்களையன்றி எங்களைக் காத்துத் தஞ்சமளிக்க வல்லார் எவரோ?” என்று திருமால் விண்ணப்பித்தார்.
வேணிபிரான் தேவர்பால் திருவுளம் இளகினார். “அஞ்சற்க!” என்று அவர்கட்கு அபயம் அளித்து, அருகே நின்ற நந்திதேவரை நோக்கினார்.
“நந்தி! கந்தவெற்பு சென்று நமது கந்தனைக் கண்டு நாம் சொன்னதாகப் பிரம்மனைச் சிறைமீட்டு வருவாயாக!” என்று ஆணையிட்டார்.
அரனாரின் ஆணையைச் சிரமேற்கொண்டு, நந்தி தேவர், கணங்கள் புடைசூழ கந்தவெற்பை அடைந்தார்.
நவமணி பீடத்தில் அமர்ந்து படைப்புத் தொழிலைப் புரிந்து கொண்டிருந்த முருகக் கடவுளின் திருப்பாதங் களைப் பணிந்து, பரமனின் திருவாசகத்தை மொழிந்தார் நந்திதேவர் ! அம்மொழி கேட்டு முருகன் குறுநகை சிந்தினார்.
“நான்முகனை விடுவிப்பது என்பது நடவாத காரியம். தந்தையிடம் சொல்லிவிடும். இனியும் இந்த இடத்தை விட்டு நீர் போகாவிடில் சிறையிடுவேன்.” உம்மையும் இங்கு
கந்தனின் மொழி கேட்டு அஞ்சி நடுங்கிய நந்திதேவர், உடனே அவர் திருமுன் நில்லாமல், அவரது மலரடியைத் தொழுது, கயிலாயமலைக்குத் திரும்பினார். ஆறுமுகப் பெருமான் மொழிந்ததைப் பரமனிடம் பகர்ந்தார்.
பிரணவமூர்த்தியான ஈசனார், புன்முறுவல் பூத்தார். இடபவாகனத்தில் அமர்ந்தார். பூதகணங்கள் புடைசூழ, திருமாலுடனும் மற்ற தேவர்களுடனும் கந்தவெற்பிற்கு எழுந்தருளினார்.
வீரவாகுதேவருடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்த சிவச்செல்வன், பெருமானைப் பார்த்ததும், விரைந்து வந்து திருப்பாதங்களைத் தொழுது எழுந்தார்.
எம்பெருமான் ஆறுமுகப் பெருமானை ஆரத் தழுவி அக மகிழ்ந்தார். “பிரம்மனைச் சிறையினின்றும் விடுவிப்பாயாக ” என்று கேட்டுக் கொண்டார்.
“எந்தையே! எல்லாவற்றையும் அறிந்த ஆதிமூலமே! பிரணவத்தின் பொருள் புரியாத பிரம்மன் படைப்புத் தொழிலை எவ்வாறு நடத்த இயலும்! அவரை விடுவிப்பது என்பது ஆகாத காரியம்!” என்று பிடிவாதமாக விடையிறுத்தார் முருகன்!
பெருமான் சினங்கொள்வார் போல் குமரனைப் பார்த்தார்.
”குமரா! பிரம்மனை விடுவிப்பாய் என்று நான் ஆணையிட்ட பின்னும், நீ அதனைத் தட்டிக் கழிக்கலாமோ?” என்று குழைவோடு கேட்டார்.
திருசடைப் பெருமானின் கனிமொழிகளைக் கேட்டு, கார்த்திகேயன் ஐயனின் ஆணைக்கு அடிபணிந்தார். அருகே நின்றிருந்த வீரர்களிடம் பிரம்மனைச் சிறை யினின்றும் விடுவித்து அழைத்துவரப் பணித்தார்.
வீரர்கள், பிரம்மனைச் சிறையினின்றும் அழைத்து வந்தனர்.
எம்பெருமான், “கந்தா வருக” என்று மைந்தனை அழைத்து, ஆனந்தப் பெருக்குடன் அணைத்து மகிழ்ந்தார்!
நான்முகன் மனம் மகிழ சித்த சுத்தி பெற்ற நிலையில், “கருணைக்கடலே! திருக்குமரனின் திருவருளால் நான் பேரின்பம் பெற்றேன். பிரணவத்தின் பொருள் கேட்டு எனக்கும் திருவடி தீட்சையை அருளிய தேவரீர் மைந்தனால் என்னையே நான் உணரப் பெற்றேன்” என்று வேண்டினார்.
தேவர்கள் சந்தோஷித்தனர். சிவபெருமான் அனை வரையும் திருநோக்கம் செய்தார்.
”நானும் நம் குமரனும் ஒன்றே என்ற உண்மையை உணர்த்தவே இந்நிகழ்ச்சி நடந்தது. பிரம்மன் முன் போல் படைப்புத் தொழிலைப் புரிவார்.
செல்வக் குமரா! பிரம்மனும் அறியாத பிரணவத்தின் பொருளை எனக்கு அறிவிக்கமாட்டாயா?” என்று நயமாக கேட்டார்.
அது கேட்டு ஆறுபடைக் குமரன், “தந்தையே! உலகெல்லாம் ஈன்றருளிய அன்னைக்கு, பிறர் அறியாதவாறு தேவரீர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை எல்லோரும் கேட்குமாறு கூறலாமோ? எதற்கும் இடம் பொருள் ஏவல் என்பதில்லையா?” என்றார்.
சிவகுமரன், ஜபமாலையும் கமண்டலமும் களைந்தார்.
“ஷண்முகா! நீ மொழிந்தது முற்றிலும் உண்மை! மாசி திங்கள்-மகநாள் ஆகம சிக்ஷைக்கு உகந்த நாள். அன்று உன்னிடம் சீடனாக இருந்து உபதேசம் பெறுவேன்” என்று மொழிந்தார். சரவணனும் சம்மதித்தான்.
எம்பெருமான் நவின்ற நன்னாளும் வந்தது! அப்பொன்னாளில் சிவனும் சிவக்குமாரனும், ஓர்அழகிய திருத்தலத்திற்கு எழுந்தருளினர்.
அங்கு அரனார், குருவிற்கு ஏற்ற சீடனாக கந்தவேல் முன்னால் காட்சி அளித்தார்.
ஆசானிடம் சீடன் நடந்துகொள்வது போல் திருவிளையாடல் புரிந்தார்.
திருச்சடைப் பெருமானார், அன்புக்குமரனை வாரி எடுத்து, மடிமீது அமர்த்திக் கொண்டு சிரம் தாழ்த்திக் கரம் குவித்து, தமது திருச் செவிகளை, அவரது செம்பவள வாயருகே கொடுத்தார்.
அண்டங்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் ஆதி பரமேசுவரன், அடக்க ஒடுக்கமாக பயந்து நடுங்கும் சீடனாகக் காட்சி அளிக்க, தந்தைக்கு உபதேசிக்கும் சாமியாக எழுந்தருளிய சாமிநாதன் மெதுவாக இறைவனது திருச் செவியில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளைத் தேனமுதம் போல் மழலை மொழியில் செவி குளிர உபதேசித்தார்.
ஞான பண்டிதனான வேத முதல்வன் உச்சி குளிர்ந்தார். அகமகிழப் பிரணவ புத்திரனை வாழ்த்தி அருளினார். முன்போலவே திருக்கயிலாய மலைக்கு எழுந்தருளினார் கயிலை மலைவாசன். முருகப் பெருமானும் கந்த வெற்பை வந்தணைந்தார்.
இத்தருணம் அகத்திய மாமுனிவர், கந்த வெற்பிற்கு வந்தார். முருகனை அடிபணிந்து போற்றினார்.
அகத்தியரைத் திருநோக்கம் செய்த ஆறுமுகப் பெருமான், “அகத்திய முனிவரே! தங்கள் வருகை எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! தங்களுக்கு யாது வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
அகத்தியர் மனங்குளிர, “அமரர் குலம் காக்க வந்த பிரணவ சொரூபனே! இந்த எளியவனுக்கும் தேவரீர் பிரணவத்தின் பொருளையும், ஆகமநெறிகளையும் உபதேசித்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
அகத்தியரின் ஆவலைப் பூர்த்தி பண்ணத் திருவுள்ளம் பற்றிய கந்தப் பெருமான் அகத்தியமுனிவருக்கு பிரணவத்தின் பொருளையும், இருபத்து எட்டு ஆகமங்களின் பொருளையும் உபதேசித்து அருளினார்.
அகத்திய முனிவரும் முருகப் பெருமான் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம் பெற்றார்.
கந்த புராணம் – 11 பிரணவ மந்திர சொரூபன்… அகத்தியர் முருகன் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம்…