அஞ்ஞாதவாசச் சருக்கம்
பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு கால வனவாசத்தை வெற்றிகரமாக முடித் தனர். இனி ஓர் ஆண்டுக்கால அஞ்ஞாத வாசம் முடிக்க வேண்டும். அதனால் தருமபுத்திரர், உடன் வந்திருந்த அந்தணர் களைத் திருப்பி அனுப்ப எண்ணி, அவர் களைப் பார்த்து, “அந்தணப் பெருமக்களே பன்னிரண்டு ஆண்டுக்கால வனவாசத்தை உங்கள் ஆசியினால் வெற்றிகரமாக முடித்திட்டோம். இனி ஓர் ஆண்டுக் காலம் யாருக்கும் தெரியாமல் மறைவாக வாழ்தல் வேண்டும். அதனால் இனி நீங்கள் உங்கள் இருப்பிடத்துக்குச் சென்றுவிடுங்கள்” என்று கூறி, அவர்களின் பிரிவுக்காகவும், தனக்கு ஏற்பட்ட நிலையைக் குறித்தும் வருந்தினார்.
அப்பொழுது தௌமியர், பாண்டவர் களிடம், “நீங்கள் மறைந்து வாழ வேண் டுமே என்று தளர வேண்டியதில்லை; அதற்காகத் துயரப்படவேண்டாம். இதற்கு முன் தைத்திரியர்களால் வஞ்சிக்கப்பட்ட இந்திரன் ஒரு காலத்தில் நிஷத்தேசத்தில் மறைந்திருந்தான். அவ்வாறு மறைந்திருந்து பகைவர்களை அழிக்கும் காரியங்களை வெற்றிகரமாகச் செய்தான். திருமால் அதிதி வயிற்றில் ஒடுங்கியிருந்து, மனிதனாகப் பிறந்து, வாமனனாகச் சென்று மூன்றடி மண்கேட்டுப் பெற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாகி வளர்ந்து திருவிக்கிரம் அவதாரம் எடுத்து, மாபலியை அடக்கி னார். அதன் மூலம் உலகத்தைக் காப்பாற் றினார். விருத்திராசூரனைக் கொல்வ தற்காக இந்திரனுடைய வஜ்ஜிராயுதத்தில் ஸ்ரீமந்நாராயணன் மறைந்திருந்தார்.
திரேதாயுகத்தில் இராவணாதியர் வதத்திற்காக வைகுந்தவாசன் அயோத்தி மன்னன் தயரதன் மனைவி கோசலை தன் புனித வயிற்றில் தங்கி, “உலகில் இராமராகப் பிறந்து, பதிநான்கு ஆண்டுகள் தம்பியோடும் ஜானகியோடும் காட்டிற்குச் சென்று துன்பப்பட்டார். இவ்வாறு மகாத் மாக்கள் மறைந்தும், ஒளிந்தும், ஒடுங்கியும் வாழ்ந்தே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி யுள்ளனர்” என்று அறிவுரை கூறினார். அதன்பின் அந்தணர்கள் பாண்டவர்களிடம் விடைபெற்றுச் சென்றனர். “பாண்டவர்கள் எங்கே போனார்கள்?” என்று கேட்பவ ருக்கு, “பாண்டவர்கள் எங்களை நடு நிசியில் விட்டுவிட்டு எங்கேயோ சென்று விட்டார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.
இயமனிடம் பெற்ற வரம்
அந்தணர்கள் எல்லாம் சென்றபின் பாண்டவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி, “எந்த இடத்தில் ஓர் ஆண்டு மறைவாகத் தங்கி வாழலாம் ” என்று ஆலோசனை செய்தார்கள்.அப்பொழுது அர்ச்சுனன், தர்மபுத்திரரை நோக்கி, “அண்ணா! நச்சுப் பொய்கையினிடத்து இயமனிடம் மறைந்து வாழ்தற்கான வரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதனால் நம்மை யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி ஓரிடத்திலேயே அனைவரும் தங்கி வாழலாம். நம்முடைய நண்பர்கள் நாடுகள் சால்வம், வைதேகம், பாஞ்சாலம், கலிங்கம் எனப் பல இருந்தாலும், விராட மன்னனுடைய மச்சநாடுதான் நாம் மறைந்து வாழ்தற்கு ஏற்றது.” அதற்குக் காரணங்கள் :
(1) “மறைவாக வாழ்தற்கு ஏற்ற நகரம் விராடனுடைய நகரம்.”
(2) ”விராட மன்னன் நம்மீது அன்பு கொண்டிருப்பவன்.”
(3) ”அரவக் கொடியோன் துரியோதனன் பேச்சைக் கேளாதவன். எனவே அந்த விராடனுடைய மச்சநாட்டிலே மறைந்து ஓர் ஆண்டினைக் கழிக்கலாம்” என்று கூறினான். அர்ச்சுனன் கூறியதை அனைவரும் ஏற்றனர்.
அப்பொழுது தருமபுத்திரர், “தம்பியரே! நான் உயர்ந்த துறவியாய் உருக்கொண்டு விராட மன்னனை அணுகி, தருமபுத்திர ருக்குத் துணையாக இருந்தவன்!” என்று கூறி அம்மன்னனுக்குத் துணையாக இருப்பேன். ‘கங்க பட்டர்’ என்பது என் பெயர். “அரசனோடு பொழுது போக்காகச் சூதாடுவேன்; ஜோதிடம், பட்சி சகுனங் கள், வேதவேதாந்தங்கள், நீதி சாஸ் திரங்கள் போன்றவற்றில் இருந்து நல்ல வற்றை எடுத்துக் கூறுவேன். அவனுக்கு உற்ற நண்பனாக இருப்பேன் . எனவே என்னைப் பற்றிக் வேண்டாம்” எனக் கூறினார். கவலைப்பட
அடுத்து, பகாசூரன். இடும்பன் போன்ற வர்களைக் கொன்ற, வலிமைமிக்க தம்பி பீமனே ! ”நீ விராட நாட்டில் எவ்வாறு மறைந்திருந்து வாழ்வாய் ” என்று கண் களில் நீர் ததும்பத் தருமபுத்திரர் கேட்டார். அதற்குப் பீமன், “மன்னனே! நான் விராடன் அரண்மனை மடப்பள்ளியில் அறுசுவை உணவைத் தயாரிக்கும் சமையற் காரனாக இருப்பேன். சமையல் வேலை எனக்கு நன்றாகத் தெரியும்; மல்யுத்தம் புரிந்து மன்னருக்கு உற்சாகத்தை ஊட்டு வேன். என் பெயர் ‘பலாயனன்’ பொறு மைக் குணமிக்க தருமராசருக்கு அறுசுவை உணவு சமைத்துக் கொடுத்தவன் என்று சொல்லிக் கொள்வேன்” என்று கூறினான்.
பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்
அதன்பிறகு தருமபுத்திரர், “அர்ச்சுனா! உன்னுடைய எதிர்காலத்திட்டம் என்ன?” என்று கேட்டார். அதற்கு, “உருப்பசி எனக்குச் சாபமாகக் கொடுத்த பேடியுரு வத்தை இந்த ஓர் ஆண்டிற்குப் பயன் படுத்திக் கொள்வேன். திரெளபதிக்குத் துணையாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்வேன் .என் பெயர் ‘பிருகந்நளை’ விராட மன்னன் மகள் உத்தரை முதலாக உள்ள பெண்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்து ஓர் ஆண்டு காலத்தைக் கழிப் பேன்” என்று அர்ச்சுனன் கூறினான்.
அடுத்து மாத்ரி தேவி மகன் நகுலனைப் பார்த்து, “அன்பும் பண்பும் கொண்ட தம்பி! நீ என்ன செய்யப் போகிறாய்” என்று தருமபுத்திரர் கேட்டார். அதற்கு அழகு ததும்பும் மேனியையுடைய நகுலன். “அண்ணா! நான் குதிரைகளின் நல்லிலக் கணங்களை அறிந்தவன்; ‘வாம்பரி வடிவும், உரைதரு சுழிகளும், ஒளியும், பற்றிய திறனும் கந்தமும், குரலும் பல் வகைக் கதிகளும், பிறந்த சொல்தகு நிலனும் ஆயுவும் உணர்வேன். துயருள பிணிகளையும் தவிர்ப்பேன், அதனால் அரண்மனைக் குதிரைகளைப் பாதுகாப்பவ னாக இருப்பேன். என் பெயர் தாமக்கிரந்தி ” என்று கூறினான்.
அதன்பின் நான்காவதாக இளையோன் சகாதேவனை அணுகி, அவனுடைய நிலை யாது எனக் கேட்டார். வயதில் இளைய வனாக இருந்தாலும் அறிவில் சிறந்த சகாதேவன், வன், “மன்னா! பசுக்களின் இலக் கணங்கள் எனக்குத் தெரியும். எனவே அரண்மனைப் பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாக இருப்பேன். ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க் கையில் ஓர் கொடும்பாடில்லை அல்லவா! அதனால் இப்பணியைத் தேர்ந்தெடுத்தேன். என் பெயர் தந்திரிபாலன்” என்று தரும புத்திரரிடம் கூறினான்.
தருமபுத்திரர், பாஞ்சாலியைப் பார்த் தார். தங்களுக்காக அவள் பட்ட கஷ்டங் களை எண்ணிப் பார்த்தார். கண்களில் கண்ணீர் ததும்ப எதையும் கேட்காது நின் றார். அவருடைய மனக்குறிப்பை உணர்ந்த திரெளபதி, “மன்னா! விராடனுடைய அந்தப்புரத்தில் பணிப் பெண்ணாக இருப் பேன். பட்டத்தரசி சுதேஷணைக்குத் துணையாக இருப்பேன். திரெளபதியின் தோழியாக இருந்ததாகச் சொல்லிக் கொள்வேன். என் பெயர் விரதசாரிணி. எனக்குக் காதலர்கள் எனக் கந்தருவர்கள் ஐந்து பேர் இருப்பதாகவும் எனக்கு ஆபத்து வரும் காலத்தில் அவர்கள் என்னைப் பாதுகாப்பார்கள் என்று என் பாதுகாப்புக்காகக் கூறிக் கொள்வேன். ஓர் ஆண்டு அரண்மனையிலேயே வண்ண மகளாய் இருந்து கழித்துவிடுவேன்” என்று கூறினாள்.
பாஞ்சாலி கூறியதைக் கேட்ட தரும புத்திரர்,”திரெளபதி, கணவனுக்குக் குறை வற்ற செல்வம், வெற்றி, புகழ் முதலா னவை சேர்தலும், பூமியில் மழை பொழி தலும் பெண்களின் கற்புத் திண்மைப் பொருட்டேயாகும்” என்று சான்றோர்கள் கூறியபடி நீ விளங்குகின்றாய் என்றாலும் “இப்பொழுது இந்த ஓர் ஆண்டு நின் கற்பினைக் காத்தற்குக் கணவனோ, பிள்ளைகளோ இல்லாததால் தெய்வத் தையும்,மனத்திண்மையையும் துணை யாகக் கொண்டு இருப்பாயாக என்று அறிவுரை கூறினார்.
அப்பொழுது தௌமியர், “பாண்டவர் களே! நீங்கள் அறிவிலும், சாதுரியத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். என்றாலும் சில அறிவுரைகளைக் கூறுகின்றேன் கேளுங் கள், பெற்ற தந்தை, ஞானாசாரியன், தமை யன், கடவுள், அரசன் ஆகியவர்கள் ஐந்து தந்தைகளாகக் கருதப்படுபவர்கள். எனவே நீங்கள் (விராட) அரசனைத் தந்தையாகக் கருத வேண்டும். பொதுவாக அரசனி டத்தில் அதிகமாகப் பேசக்கூடாது. கேட்ட பின் எந்த ஆலோசனையும் சொல்ல வேண்டும். நாமாக முன்வந்து சொல்லக் கூடாது. அவர்களிடத்தில் நெருப்பினைப் போல நெருங்கி இருக்கக்கூடாது. அதற்காக தொடர்பில்லாமல் ஒதுங்கியும் இருக்கக் கூடாது. அரசனிடத்தில் பணிபுரிகின்றவன் மனத்தை அடக்குதல் வேண்டும். சோம்ப லாக இருக்கக்கூடாது. அரசன் பாராட்டி னாலும் அவமதித்தாலும் ஒன்று போலக் கருதவேண்டும். அரசனுடைய ரகசியங் களை வெளியில் சொல்லக்கூடாது. உட் பகையுடையுயவர்களைக் கூட அரசன் துணையாக வைத்திருக்கலாம். அதற்காக அவன்மீது வெறுப்புக் கொள்ளக்கூடாது. நேரம் பார்த்துச் சொல்லித்திருத்த வேண்டும். அரசனுக்கு முன்பே சென்றிருக்க வேண்டும். அரசனுக்கு இருபக்கங்களில் அமரலாம். தும்முதல் சோம்பல் முறித்தல் போன்றவற்றைச் செய்தல் கூடாது. அரசன் சொல்லிய பணியை எந்த நேரத்திலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அவன் கூறியவற்றிற்கு மாறானவற்றை கூறக் கூடாது. பகைவர்கள், ஒற்றர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து அவற்றின்படி ஓர் ஆண்டு காலத்தைக் கழியுங்கள் உங்களின் ஓர் ஆண்டுக்கால அஞ்ஞாதவாசம் வெற்றிகர மாக முடிய வாழத்துகிறேன்” என்று கூறினான். பின்னர் பாண்டவர்கள் தெளமியனுக்கு விடைகொடுத்தனுப்பினர்.
பாம்பாகச் சீற வேண்டும்
அதன் பின்னர் பாண்டவர்கள் தங்க ளுடைய ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி, காளிகோயில் அருகிலுள்ள ஒரு வன்னிமாத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்தனர். தங்களைத் தவிர மற்றவர்கள் அவற்றை எடுக்கவோ, பார்க்கவோ முனைந்தாலும் அவை பாம்பாகச் சிற வேண்டும் என வேண்டிக் கொண்டனர். தருமபுத்திரருடைய அருளால் அவ்வாறே ஆயிற்று. பின்னர் அவர்கள் தனித்தனியாக விராடனுடைய அரண்மனைக்குப் போக முடிவு செய்தனர்.
முதலில் தருமபுத்திரர் விராட மன்ன னிடம் சென்று அவனை, வணங்கினார். அவரைப் பார்த்தவுடன் விராடன் உள்ளத் தில் ஒரு மதிப்பான எண்ணம் உண்டா யிற்று. நீங்கள் யார்? என்று கேட்டான். அதற்கு “நான் தருமபுத்திரன் ஆலோசகராக இருந்தவன். அவருக்கு வேண்டிய ஜோதிடம், நிமித்தம் போன்றவற்றைக் குறித்துக் கொடுப்பேன். பொழுது போக்காக அவரிடம் சூதாடிக் கொண்டிருப் பேன். என் பெயர் கங்கபட்டர். சிலநாள் வரைதான் இருப்பேன். தருமபுத்திரர் வந்தவுடன் அவருடன் போய்விடுவேன்” என்றார். உடனே “தனக்கு உதவியாக இருந்து, என் பக்கத்தில் எப்பொழுதும் இருங்கள். ஆஸ்தான வித்துவானாகச் செயல்படுங்கள்” என்று கூறி அவரைத் தன்னுடன் இருக்கச் செய்து கொண்டான்.
சமையல் கூட தலைவன்
இரண்டாவதாக பீமன் மன்னனிடம் வந்தான். ‘நீ யாரப்பா?’ என்று விராட மன்னன் வினவ, “நான் சமையற்காரனா யிருந்தேன். பாண்டவர்களிடத்தில் பணி யாற்றியவன். நன்றாகச் சமைப்பேன். மல் யுத்தமும் செய்வேன். போட்டி வைத்தீர் களானால் என் திறமையைக் காட்டுவேன். என் பெயர் பலாயனன்” என்றான். உடனே மன்னன் மறு மொழி கூறாது அரண்மனை சமையல் கூடத் தலைவனாக நியமித்தான்.
சிறிது நேரம் கழித்து பேடி வடிவத்தில் அர்ச்சுனன் வந்தான். “நீ யார்? பாண்டவர் களிடம் இருந்தாயா?” என்று கேட்டான். ஆம்; ”திரெளபதிக்குத் துணையாக இருந்தவள்தான். நன்றாக நாட்டியம் ஆடுவேன். அரண்மனை மகளிர்க்கு நாட்டியம் சொல்லிக் கொடுப்பேன். என் பெயர் பிருகந்நளை” என்று கூற, மன்னன் தன் மகள் உத்தரைக்கு நாட்டிய ஆசிரியராக நியமித்தான்.
அடுத்து நான்காவதாக நகுலன் குதிரைப் பாகன் வடிவத்தில் வந்தான். குதிரைகளின் குலம், சாதி, உடலின் மணம், நிறம்,சுழி போன்ற குதிரைகளின் இலக்கணங்களை அறிவேன். பாண்டவர்களின் குதிரை களைப் பாதுகாத்து இருந்தேன். என் பெயர் தாமக்கிரந்தி எனக் கூறிவிட்டு குதிரையைப் பற்றிச் சில தகவல்களைக் கூறலானான்.
- குலம் (பிறப்பு) எந்த நாட்டுக் குதிரை என அறிதல். அரபிக் குதிரையா? பாரசீகக் குதிரையா? என்பன போன்ற அறிதல்.
- வருணம் (சாதி) – ஏறிச் செலுத்துதற்
குரியன,தேரில் கட்டிச் செலுத்தற்கு உரியன என்பன போன்றவற்றை அறிதல். இதன் மூலம் கந்தம், நிறம், குரல்,சுழி, கதி போன்றவற்றை அறியலாம்.
- கந்தமாவது குதிரை அங்கத்தி னின்று வீசும் மணம். இதிலிலிருந்து இது நன்று, அல்லது தீது என அறியலாம்.
- நிறமாவது பெண்மை, செம்மை, பொன்மை, கடுமை போன்ற நால்வகை நிறங்களிலும் வெள்ளி, நித்திலம், செம்பஞ்சு, வண்டு, அழல் முதலியனவாகப் பலவற்றின் ஒளி அமைதல்.
- குரல் – கனைப்பு, இன்னின்னபடி குரல் இருப்பின் இவ்வாறு இருக்கும் என அறிதல்.
குற்றமற்ற சுழிகள்
- சுழி குற்றமுள்ள சுழிகள், குற்றமற்ற சுழிகள் என அறிதல், சந்திரம், முன்வளை யம், கேதாரி பட்டடை போன்றவை குற்ற முள்ள சுழிகள் என்பர். கழுத்தில் வலமாகச் சுழித்திருக்கும் தேவமணி முதலியன குற்றமற்ற சுழிகள் என்பர்.
- கதி (நடை) -இது பலவகைப்படும். பஞ்சகதி நவகதி என்பர். (இந்தக் குதிரை பற்றிய இலக்கணத்தைப் பற்றித் திருவிளை யாடல் புராணமும் கூறுகின்றது.)
இவ்வாறு குதிரைகளைப் பற்றிக் கூறிய வுடன் மன்னன் மகிழ்ந்து குதிரைப் பாகர் கட்கு அதிபதியாக்கினான்.
அடுத்து ஐந்தாவதாக, சகாதேவன் வந்தான். இடையர் கோலத்தில் வந்தான். அரசனிடத்தில், “நான் பசுக்களைப் பாதுகாப் பேன். பாண்டவர்கள் அரண்மனையில் பசுக் களைப் பாதுகாத்து வந்தேன். இங்குள்ள பசுக் கூட்டங்களை நன்கு பாதுகாப்பேன். பசுவின் இலக்கணத்தைப் பற்றியும் நான் அறிந்துள் ளேன். என் பெயர் தந்திரிபாலன்” என்றான். உடனே அவனைப் பசுக்கூட்டங்களைக் காப்பதற்குரியவனாக நியமித்தான்.
அரசியின் அந்தபுரத் தோழி
இறுதியாகத் பாஞ்சாலி அலங்காரம் செய்யும் வண்ணமகளாக வந்தாள். ‘நீ யார் எந்த ஊர்’ என்று மன்னன் கேட்க அதற்குத் பாஞ்சாலி , “பாஞ்சாலியிடத்து இழிவில் லாது பணிபுரிந்து வந்தேன். பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்கின்றமையால் நான் இங்கு வர நேர்ந்தது. மலர்களைத் தொடுத் தல், சந்தனம் அரைத்தல், மகளிர் கூந்தல் பின்னல் போன்ற வேலைகளைச் செய்வேன். என் காதலர்கள் கந்தர்வர்கள் ஐந்து பேர் இருக்கின்றார்கள். எனக்கு ஆபத்துக் காலத்தில் வருவார்கள்” என்று கூறினாள். உடனே மன்னன் அவளை அரசியின் தோழி யாக நியமித்து அந்தப்புரத்திற்கு அனுப்பினான். அவளும் அரண்மனையில் அந்தப்புரத் தோழியாக இருந்தாள்.
பாண்டவர்கள் மீது விராடனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அதனால் தான் அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வந்தவர் கட்கு உரிய பணிகளைக் கொடுத்தான். அவர்கள் பாண்டவர்களோ என்ற சந்தேகம் சில சமயம் அவனுக்கு எழும். அது உண்மையாயிருக்கும் பட்சத்தில் அவர்கள் விராட நாட்டில் இருக்கிறார்கள் என்ற செய்தி கௌரவர்க்கு பரவி அதனால் அவர்களின் அஞ்ஞாதவாசத்துக்கு இடையூறு ஏற்படும். என்று எண்ணி, அவர்களை அதைப்பற்றிக் கேட்பதையே தவிர்த்தான். அறநெறி தவறாத பாண்டவர்கள் இருந்ததனால் விராட நாடு முன்னை விட பல்வகை வளங்களிலும் பாங்குடன் சிறந்திருந்தது.
கீசகன்வதைச் சருக்கம்
ஒரு நாள் மல்யுத்தம் செய்யக்கூடிய மல்லன் ஒருவன் தன்னுடைய வீரத்தைக் காட்ட விராட நகருக்கு வந்தான். மல் யுத்தம் என்பது ஆயுதமின்றி உடல் வலிமை கொண்டு போர்செய்தல் ஆகும். தோளுடன் தோள் பொருந்தி மோதுதல், தலையைத் தலையாலே இடித்தல், பலசாலிகளாக வலம் வருதல், கைமுட்டிகளால் குத்துதல், காலுடன் கால் சேரப்பின்னுதல், மார்பைக் கொண்டு எதிராளி மார்பைத் தாக்குதல், உதைத்தல், கரங்களால் சுற்றுதல், நகவிரல் களைக் கொண்டு மெய்யில் புதைத்தல் புருவத்தையும் மூக்கையும் வாயோடு சேர்த்துச் சிதைத்தல் எனப் பலவகையாகப் போரிடுவார்கள்.
இத்தகைய பல யுத்திகளை அறிந்த மல்லன் ஒருவன் தன்னை எதிர்ப்பாரின்றிச் சவால்விட்டுக் கொண்டு செருக்கொடு வந்தான். பலாயனன் என்னும் பீமன் அந்த மல்லனை எதிர்கொண்டு கடுமையாகவும் உக்கிரமாகவும் தாக்கி அவனுடன் மல் யுத்தம் செய்து தோற்கடித்தான். இதனால் விராடனுக்கு பீமன்மேல் ஒரு நல்ல மதிப்பு ஏற்பட்டது.
சூதவமிசத்தைச் சேர்ந்த கேகயன் என்ற மன்னனுக்கு மாளவி, அவள் தங்கை இராச கன்னி என்ற இருமனைவியர் இருந்தனர். இவர்களில் மாளவிக்குக் கீசகன் என்ப வனும், உப கீசகர், நூற்றைவர் என்பவர் களும் மகன்களாக இருந்தனர். இவர்கள் காலகேயர் என்ற அசுரரின் அம்சமான வர்கள். கீசகனுக்கு, பாணன், சிங்கபலன் என்ற வேறு பெயர்களும் உண்டு. பதினாயிரம் யானை பலம் கொண்டவன். முரடன், காமாந்தககாரன். மாளவியின் தங்கை இராச சுன்னியிடத்துப் பிறந்தவள் சுதேஷ்ணை என்பவள் ஆவள். மச்ச நாட்டரசன் நாட்டரச விராட மன்னன், சுரதை என்ப வளை மணந்திருநதான். இவள் மூலமாக விராடனுக்குச் சுபேதன், சதானிகன், சங்கன், வராகன், வராககேது என்ற மைந்தர்கள் பிறந்தனர். இவள் சில காலம் வாழ்ந்து இறந்துவிட்டாள். அதனால் இரண்டாம் தாரமாக சுதேஷ்ணையை மணந்து கொண்டான். அவளுக்கு உத்தரன் என்ற ஆண் மகனும், உத்தரை என்ற பெண்மகளும் பிறந்தனர்.
சுதேஷ்ணை திருமணத்திற்குப்பின் கீசகன் தன் தம்பியர்களோடு விராடனு டைய மச்ச நாட்டிற்கு வந்து சேர்ந்தான். மிக்க பலசாலியாதலால் மன்னனுக்குச் சேனைத் தலைவனாக இருந்து பலநாடு களை வென்றான். அந்த நாட்டு மன்னர் களைக் கப்பம் கட்டச் செய்தான். அதனால் அரண்மனையில் அவனுக்கு மன்னனை விட செல்வாக்கு அதிகமிருந்தது. அவனைத் தட்டிக் கேட்கயாராலும் முடிய வில்லை.
காமப் பரவசத்தில் கீசகன்
தன்னுடைய அதீத பலத்தினாலும், மன்னனிடம் இருந்த அதிகச் செல்வாக்கி னாலும் கீசகன், செருக்கடைந்திருந்தான். அப்பொழுது, ஒரு நாள் அந்தப்புரத்தில் உள்ள சோலையில் பாஞ்சாலியைப் பார்த்து, அவள் மீது மிக்கமோகம் கொண்டு காமப் பரவசன் ஆனான்.
அதனால் அவன்,அவள் யார் என்பதை மற்ற மகளிர் மூலம் அறிந்து கொண்டான். அரசியின் தோழி அவள் என்றவுடன். அவளைச் சாதாரணமானவள் எனத் தவறாகக் கருதிவிட்டான். அவள் தன் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவன் என நினைக்கவே இல்லை. அதனால், அவன் திரெளபதியை அணுகி, “மயில் போன்ற சாயலையுடைய மங்கையே! உன்னைப் போன்ற அழகுடைய பெண் உலகில் எங்கணும் இல்லை; ஏன்! பதிநான்கு உலகங்களிலும் இல்லை. நான் உன்மீது மோகம் கொண்டுள்ளேன். ஆதலின் என் உயிர் நீங்காதவாறு என்னைத் தழுவிக் கொள்” என்று கூறி வேண்டினான். பின்னர், தன்னுடைய மானத்தையெல்லாம் விட்டு அவள் மலரடிகளில் விழுந்து வணங்கினான்.
கீசகன் கூறிய தகாத வார்த்தைகளைக் கேட்டு, திரெளபதி, மனம் மருண்டு, திகைத்துப் போய் அந்தக் கொடியவனிடம், ”யாரிடம் என்ன சொல்ல வேண்டுமென்ற இங்கிதமே உனக்குத் தெரியவில்லை. நாகரிகம் அற்றவனாக இருக்கின்றாயே. சொல்லக் கூடாத வார்த்தைகளை யெல்லாம் கூசாமல் சொல்கின்றாயே! நீ சொன்ன இந்த வார்த்தைகளை என்னு டைய காதலர்கள் ஐவரில் யார் கேட்டாலும் உன் உயிர் உன்னிடத்தில் இருக்காது. அதனால் அவர்கள் காதில் விழுவதற்கு முன் ஒடிவிடு” என்று மிரட்டிவிட்டு, அவனுடைய தங்கையாகிய சுதேஷ்ணை யிடம் சென்று முறையிட்டாள். ஆனால் அக்கயவனோ அவள் பின் தொடர்ந்தான். அதைக் கண்ட அவள் தங்கை அரசி சுதேஷ்ணை ‘இங்கு வராதே’என்று கோபத் தோடு கூறி அவள் கண்ணீரைத் துடைத் தாள். அவனும் திரும்பிச் சென்றான்.
தன் இல்லம் சென்ற கீசகன் திரெளபதி யின் நினைவாகவே இருந்தான். உண்ப தில்லை; உறங்குவதில்லை; அவளைப் பற்றியே பிதற்றிக் கொண்டிருந்தான். அதனைக் கண்டு சுதேஷ்ணை மிகுந்த வேதனையடைந்தாள். பின்னர், பாஞ்சாலியை அழைத்து, “பெண்ணே! என் தம்பி உன்னையே நினைந்து ஏங்குகின்றான்; உருகுகின்றான்; உடல் வாடுகின்றான். இன்னும் சில நாட்கள் போனால் உன்னையே நினைந்து நினைந்து உயிரை விட்டு விடுவான் போல உள்ளது. அவனை நீ எப்படியாவது காப்பாற்று” என்று கூறிய அவள், ஒரு பூமாலையைத் பாஞ்சாலி கையில் கொடுத்து “வண்ண மகளே! நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இந்தப் பூமாலையை அவனிடம் கொடுத்து. இரண்டொரு வார்த்தைகள் இனிமையாகப் பேசிவிட்டு வந்துவிடு; அவன் மன ஆறுதல் பெற்றுவிடுவான். உனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். என்மேல் கருணை கொண்டு செய்வாயாக” என்று வற்புறுத் திக் கூறிப் பலவாறு வேண்டிக் கொண்டு அனுப்பினாள்.
அவள் கண்களில் நீர் பெருகியது. மறுக்கவும் முடியவில்லை. எதிர்க்கவும் முடியவில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் விபரீத நிலைமையைக் கண்டு அஞ்சி, சூரியனை நோக்கி, “ஆதவனே! அலை மோதி வருகின்ற துன்பமாகிய இருளை நீ தான் போக்கிக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டி வணங்கிப் பின்னர் பூமாலையுடன் கீசகன் இல்லத்திற்குச் சென்றாள். கீசகனைக் கண்டு வணங்கி, தான் கொண்டு வந்த பூமாலையைக் கொடுத்தாள். பூமாலையைக் கொடுத்த வுடன் திரெளபதி தனக்கு இணங்கி விட்டாள் என்று தவறாக நினைத்து அவள் கைகளைப் பிடிக்க நெருங்கினான். அதனைக் கண்டு அவள் நடுநடுங்கி, அங்கிருந்து வேகமாக ஓடி விராடனுடைய அரசவையிடத்துச் சென்று வாடிய பூங்கொடி போலக் கீழே விழுந்தாள்.
சபை நடுவே ஏற்பட்ட அவமானம்
அவள் பின்னால் வந்த கீசகன், அங்கிருப்பவர்களை லட்சியம் செய்யாமல் மிகுந்த கோபத்துடன், “சீ தாசி! என்னை ஏமாற்றிவிட்டா ஓடி வருகின்றாய். உன்னை என்ன செய்கின்றேன் பார்” என்று பலவாறு நிந்தித்து எட்டி உதைத்தான். மீண்டும் அவளை நெருங்கப் போகும் பொழுது, அவளுடைய வேண்டுதலுக்கு இணங்கி, சூரியன் அனுப்பிய கிங்கரன் ஒருவன் பெருஞ்சூறைக் காற்றுப் போலத் தாக்கி அவனைப் பற்றி வீசி எறிந்தனன். சபை நடுவே தனக்கு ஏற்பட்ட அவமானத் தால் அவன் திரும்பிச் சென்றான்.
அதனைக் கண்டான் பலாயனன் என்னும் பீமன்; மிகுதியான கோபங் கொண்டு அவனை அடித்து வீழ்த்த எண்ணி, அங்கிருந்த ஒரு பெரிய மரத்தைப் பிடுங்க ஆயத்தமானான். அவனுடைய செயலைக் கண்டார் கங்கபட்டர் என்னும் தருமபுத்திரர். அதனால் அவர், “பலாயனா! சமைத்தற்கு விறகு வேண்டுமாயின் இந்த மரத்தை இங்கு பிடுங்காதே. இது உனக்கு உதவாது. காட்டிடத்துள்ள வற்றல் மரங்கள் தான் உனக்கு உதவும். அதனைப் பயன் படுத்திக் கொள்; உணவு நன்றாக வேகும்” என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்பி னார். அவர் கூறியதன் உட் குறிப்பு :-
“இப்பொழுது இங்கு நீ அவனைக் கொன்றால் நீ யார் என்பதனை இங்குள் ளவர் அறிவர். அதனால் நம் அஞ்ஞாத வாசத்துக்கு ஆபத்து வரும். யாரும் இல்லாத காட்டிடத்து இவனைக் கொல்ல லாம். அப்பொழுது இவனைக் கொன்றவர் யார் என்பது தெரியாமலே போய்விடும்” என்பதாம்.
கீசகன் சென்றபின் பாஞ்சாலி, விராட மன்னனிடம் வந்து கால்களில் விழுந்து வணங்கி, “மன்னவா! உங்கள் மைத்துனர் கீசகர் செயலை நேரில் பார்த்தீர்கள். பார்த்தும் பேசாமல் இருந்துவிட்டீர்கள். உங்கள் செங்கோலாட்சி என்பது இது தானா? மன்னர்க்கு, பகை, நட்பு, அயலார் என்ற வேறுபாடு காட்டா நடுவு நிலைமை இருத்தல் வேண்டும். உங்கள் மைத்துனரின் அடாவடிச் செயலைப் பார்த்தும் ‘நமக் கென்ன’ என்று பேசாமல் இருந்துவிட் டீர்கள். இஃது குடிமக்களைக் காக்கின்ற கொற்றவனுக்குத் தகாது” என்று கூறிக்கண்டித்தாள். அப்பொழுதும் அவன் வாயைத் திறக்கவில்லை. அந்த அளவு கீசகனிடத்துப் பயம் இருந்தது. அதே போல அரசன் மனைவி சுதேஷ்ணையிடம் முறையிட்டாள். அவளும் மெளனமாக இருந்தாள். கங்கபட்டரும் அரசனைப் பார்த்து, ”அரசே! அக்கிரமம் நேரில் நடக்கின்றது. அதனைப் பார்த்துக் கொண்டு நீங்களும், இந்த அ அவையும் வாளா இருக்கின்றீர்கள். இது என்ன நியாயம்? கொதித்து எழ வேண்டாமா? அவனுக்கு உரிய தண்டனை கொடுத்திருக்க வேண் டாமா. அதனை விடுத்து அனைவரும் வாய்மூடி மௌனியாக இருப்பது என்ன காரணம் பற்றி? என்று இடித்துப் பலவாறு கூறினார். பதில் பேச முடியாத வனாகி, கீசகனுக்கு அஞ்சி அங்கிருந்து விராட மன்னன் சென்றுவிட்டான். பட்டத்தரசியும் உடன் சென்றுவிட்டாள். அங்கிருந்த அவையினர் “இனி கீசகனால் என்ன துன்பம் நேருமோ?” என்று அஞ்சி நடுங்கினர்.
பாஞ்சாலியின் நடிப்பு
அன்று சூரியன் மறைந்தான். ஊர் உறங்கும் நேரத்தில் கண்ணீர் பெருக்கி வருந்திக் கொண்டிருக்கும் திரெளபதி காலோசை கேட்காதபடி மடப்பள்ளி சென்று பீமனைப் பார்த்து, “எனக்குள்ள பெருந்துன்பத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யார் இருக்கின்றார்கள்; நீங்கள் இதனைக் கவனிக்கக் கூடாதா? அதனால் தான் இங்கு வந்துள்ளேன்” என்று கூறி னாள். பீமன் அதனைக் கேட்டு, “பாஞ்சாலி! நீ தந்திரமாக இணங்குவது போல நடித்து, அவனை ஓர் இடத்திற்கு வரச் சொல். எனக்கு அந்த இடத்தையும் நேரத் தையும் கூறிவிடு; பின்னர் நான் அங்கு வந்து அவனைத் தீர்த்துக் கட்டி விடுகிறேன்” என்றான். பின்னர் இருவரும் தத்தம் இடத்திற்கு ஏகினர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. அவள் நினைவாகவே இருந்த கீசகன் உடனே பாஞ்சாலியிடம் வந்து, “பொற்கொடியே! விராட மன்னன் ஆட்சி வலிமையாயிருக்கிறது என்றால் அதற்கு என்னுடைய வலிமைதான் காரணம். ஆகையால் அவ னிடம் நீ முறையிடுதலில் எந்தவிதப் பயனுமில்லை. அதனால்தான் உன்னை உதைத்தபோதும் இழிவான சொற்களால் வைதபோதும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது மட்டுமல்லாமல் உனக்குக் காவலாக யாரோ கந்தர்வர்கள் ஐவர் இருக்கின்றார்கள் என்றாயே! அவர்கள் என் வலிமைக்கு அஞ்சி, வராமல் இருந்துவிட்டார்கள் போலும்! அதனால் உன்னை ஆதரிப்பார் யாருமில்லை. எனவே எனக்கு இணங்கிவிடு. உன்னுடைய போக்கை மாற்றிக் கொள் அதுதான் உனக்கு நல்லது” என்று கெஞ்சி, அவள் காலையும் பிடிக்கலானான்.
அதற்குத் திரெளபதி, “கீசகனே! நீர் சொல்வது உண்மைதான். ஆபத்துக் காலத்தில் கந்தவர்கள் கைவிட்டுவிட்டார் கள். அவர்களை நம்புவதில் பயனில்லை என்பதை அறிந்து கொண்டேன். எனவே உனக்கு இணங்குகிறேன். ஆனால் இதனை உன் சகோதரர்களுக்கும் தோழர்களுக்கும் சொல்லமாட்டேன் என்று உறுதிமொழி செய்தால் என்னை நீ அடையலாம்” என்றாள். அவ்வாறே அவனும் உறுதி மொழி கொடுத்துத் தனியாக வரு வருவதாக ஒப்புக்கொண்டான்.
அப்பொழுது பாஞ்சாலி அவனிடம், “நடன சாலையில் பெண்கள் இருப்பார்கள். பகலில் ஜன நடமாட்டம் இருக்கும். இரவில் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அங்கு வந்துவிடு; உனக்காக நான் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின் றேன்” என்று கூறிச் சென்றாள். மறுநாள் இரவு கீசகன் செத்த பிணத்திற்கு அலங் காரம் செய்வது போலத் தன்னை அலங் காரம் செய்து கொண்டான்.மகிழ்ச்சி யோடு சென்றான். யாகத்திற்கு வைத்தி ருக்கும் புனித நெய்யை ஒரு வெறி நாய் குடிக்கச் செல்வது போல, அவன் காம வெறிப் பிடித்து, அந்த அர்த்தராத்திரியில் யாரும் காணாதவாறு நடன சாலைக்குள் புகுந்தான். கட்டிலில் யாரோ ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்தான். பாஞ்சாலியை வேறு இடத்தில் இருக்கச் செய்து, பீமன்தான் பெண்ணுருவில் படுத்திருந்தான்.
எதிர்பார்க்காது குத்து விழுந்தது
எந்தத் தடையும் இல்லாது வந்த கீசகன் முதுகைக் காட்டிப் படுத்திருந்த பெண் ணுருவைத் தீண்டினான். அமைதியாக இருக்கவே நன்றாகப் பிடித்தான். கெட்டியாக இருந்தது.மென்மையாக இருக்க வேண்டிய உடம்பு சுரசுரப்பாகவும் கெட்டி யாகவும் இருக்கின்றதே என வாரி எடுக்க முனைந்தான். உடனே கோபத்துடன் எழுந்தான் பீமன். “முட்டாளே! காமாந்தகாரா! பெண்ணாசைப் பிடித்து வேகமாக வந்த தற்கு இந்தா? முதல் பரிசு என்று முகத்தில் ஒரு குத்துவிட்டான். எதிர்பார்க்காது குத்து விழவே கீசகன் தடுக்கிக் கீழே விழுந்தான். பின்னர் அவன் எழுந்தான். படுத்திருந்தது பெண் இல்லை. ஆண் ஆண் என்று என்று உணர்ந்த அவன் பீமனைப் பலங்கொண்ட மட்டும் குத்தினான். மேகத்தின் இடிமுழக்கம் போல ஓசை எழ, ஒருவர்க்கொருவர் குத்துக்களை விட்டுக் கொண்டார்கள். ஒருவரையொருவர் கீழே தள்ளினார்கள். மார்பில் குத்தினார்கள்; பல்லால் கடித்தார்கள். தோள்களால் ஏற்றினார்கள். நீண்ட நேரம் மாறிமாறிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதியில் பீமன் ஒவ்வொரு குத்திற்கும் ஒவ்வோர் உறுப்பு எலும்புகள் முறியும் படியாகச் செய்தான். அதனால் கீசகன் தள்ளாடலானான். வாயிலி ருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தவெள்ளம் பெருகியது. பின்னர் அவன் கால்களைத் தன் கால்களைக் கொண்டு பற்றிப் பிணித்து அவன் கால்கள் முறிந்து போகும்படி செய்தான். தோள்களின் எலும்புகளையும் முறித்தான். அடுத்து எந்தக் காலால் பாஞ்சாலியை எட்டி உதைத்தானோ அந்தக் காலைப் பற்றிக் கொண்டு உயரே அவனைத் தூக்கி, காற்றாடி போலப் பலமுறை சுழற்றி தரையிலே ஓங்கி அடித்தான். துணி துவைப்பது போலத் தரையில் போட்டுத் துவைத்தான். அந்தக்கயவனுடைய தலைமயிரைப் பிடித்துத் தரதரவென்று பலமுறைச் சுழற்றிச் சுழற்றித் தரையில் அடித்தான். பின்னர் பீமன் சீறி சிங்கம் ஒன்று யானை மீது பாய்வது போலப் பாய்ந்து அவன் பாதங்களையும் தலையையும் ஒன்றாகும் படி சுருக்கி, அதன்பின் அவனைத் தசைப் பிண்டமாக்கி உருத்தெரியாது செய்தான். ஒரு மரத்தைக் கைகளால் பிசைந்து பிசைந்து அதனின்று தோன்றிய நெருப்பின் சுவாலையைக் கொண்டு இன்புறும்படி பாஞ்சாலிக்குக் காட்டினான். இவ்வாறு பீமன் கீசகனைக் கொன்றொழித்தான்.
கந்தருவனோடு போரிடுகிறான்
நடன சாலையில் இருவரும் போரிடு கின்ற போரோசையைக் கேட்டு, உப கீசகர்கள், கீசகன் பெண் மோகத்தினால் யாரோ கந்தருவனோடு போரிடுகிறான் என்று நினைத்து, ஓடி வந்து பார்த்தார்கள். அங்கு தன் தமையன் தசை உருண்டையாக உருத்தெரியாமல் இருப்பதைப் பார்த்து மிகவும் கோபங் கொண்டு இதற்குக் காரணம் வண்ணமகளே என்று முடிவு செய்து, அவளை இறந்த கீசகனோடு ஒன்றாக எரிக்க முயற்சி செய்தார்கள். இதனை அறிந்து திரெளபதி கூக்குரலிட பீமன் அதனைக் கேட்டு, மீண்டும் வந்து, மரம் முதலியவற்றைக் கொண்டு உப கீசகர்கள் அனைவரையும் அந்த இரவிலேயே அடித்துக் கொன்றான். பின் இருப் பிடம் சேர்ந்தான். கீசகன், உபகீசகர்கள் நள்ளிரவில் மாண்டதால் கொன்றது யார் என யாரும் அறியாது போனார்கள். மறு நாள் நகரத்தார் அனைவரும் பார்த்து யாரோ கந்தருவனால் கீசகனும் அவன் தம்பியர் உபகீசகர்களும் மாண்டார்கள் என்று முடிவு செய்தனர்.
குடிமக்கள் மகிழச்சி அடைந்தனர்
பாஞ்சாலி மற்றவரிடத்தில், “கீசகன் நேற்றிரவு என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். என் காதலர்களான கந்தர்வர்கள் அவர்களைக் கொன்றுவிட் டனர்” என்று பெருமையோடு சொல்லிக் கொண்டாள். அதனால் மற்றவர்கள் அவளிடத்தில் அச்சம் கொண்டார்கள். தீங்கு செய்ய நினைத்தவர்களும் கீசகனுக்கு நடந்தது நமக்கும் நடந்துவிடும் என்று ஒதுங்கிச் சென்றார்கள். விராட மன்னனும், அவன் மனைவி சுதேஷ்ணையும் கீசகன் மாண்டதால் நாட்டின் பாதுகாப்பு குறைந்து விட்டது என்று முதலில் நினைத்தாலும், விரதசாரிணியின் காதலர்கள் நம் நாட்டைப் பாதுகாப்பார்கள் என்று மன ஆறுதல் கொண்டார்கள். அதன் பின் கீசகனுக்கும், அவனுடைய தம்பியர்க்கும் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தார்கள். கீசகன் மாண்டதால் விராட நாடு நிம்மதியடைந்தது. குடிமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலானார்கள்.
தட்சிண நிரைமீட்சிச் சருக்கம்
பாண்டவர்கள் பன்னிரண்டு வருட வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, அஞ்ஞாத வாசத்தை விராட மன்னனுடைய அரண்மனையில் இருந்து கொண்டு காலத்தைக் கழித்து வந்தார்கள்.
துரியோதனன் ஓராண்டு அஞ்ஞாத வாசத்திற்குள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கருதிப் பல நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பினான். அவர்களும் பல இடங்களில் தேடிப் பயனின்றித் திரும்பித் தங்களால் ”பாண்டவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை” என்றார் கள். சிலர் “அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்” என்று தங்கள் கருத்தைக் கூறினார்கள்.
துரியோதனன் தன்னுடைய அவையைக் கூட்டி, “பாண்டவர்களைக் காண முடிய வில்லை; இனி செய்யவேண்டுவது யாது?” எனக் கேட்டான். அதற்குக் கர்ணன், “நண்பா! பாண்டவர்கள் பெயர்களையும் வடிவத்தையும் மாற்றிக் கொண்டு எங்கே யாவது உயிரோடுதான் இருப்பார்கள். ஓர் ஆண்டு கழித்தவுடன் நம்மோடு போர் செய்ய வருவார்கள்” என்றான். துரியோ தனன் அதற்கு, “நான் பல நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பிப் பார்தேன். அவர் களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. அதனால் அவர்கள் உயிரோடு தான் இருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது” என்று கூறினான். அதனைக் கேட்டுத் துரோணர், “துரியோதனா! தெரியாது பேசுகின்றாய். தோள் வலிமையும் நிலைபெற்ற அறநெறியும்.
சிவபெருமானின் பாசுபதாஸ்திரமும், எல்லாவற்றிற்கும் மேலாகக் கண்ணபிரா னின் திருவருளும் குறைவறப் பெற்ற அவர்களுக்கு இறப்பு என்பதே கிடையாது. நிச்சயம் உரிய காலத்தில் வருவார்கள்” என்று கூறினார். கிருபாச்சாரியாரும் துரோணர் கூறியதையே வழிமொழிந்தார். பின்னர் பிதாமகர் பீஷ்மர் எழுந்து, ”துரியோதனா! பாண்டவர்கள் வசிக்கின்ற நாடு நீர்வளம், நிலவளம், குடிவளம் மிக்க தாயிருக்கும் ; தெய்விக மணம் அங்கு கமழும்; கோயில்களில் நித்திய நைமித்திக பூசைகள் குறைவில்லாது நடக்கும். களிக்கின்றவர்களைத் தவிர கவலையுறு கின்றவர்களை அங்குக் காணமுடியாது. ஆலயங்களில் வேத கோஷங்களும் பிரபந்த வோசைகளும் எங்கும் நிறைந்திருக்கும். பசுக்கள் வளம் மிகுதியாக இருக்கும். மாதம் மும்மாரி பொழியும்; வறுமையும், நோயும்; உட்பகையும் அங்கு காணப்படா. நல்ல அறநெறிகளையுடைய சான்றோர்கள் அவர்கள். ஆகையினால் அவர்களிருக்கும் நாடு இப்படித்தான் எல்லா வளமுடையதாக இருக்கும்” என்று கூறினார்.
பீமனால்தான் கொல்ல முடியும்
இதனைக் கேட்ட ஒற்றர்கள், “பிதாமகர் கூறியன அனைத்தும் விளங்குவது விராட மன்னனுடைய மச்ச நாட்டில் தான்” என்று கூறினார்கள். ஒற்றர்கள் கூறியவற்றை ஆராய்ந்து பார்த்த துரியோதனன், “பாண்ட வர்கள் ஒற்றர்கள் கூறியபடி மச்ச நாட்டில் தான் இருக்கவேண்டும். அதுமட்டு மல்லாது வேறு காரணமும் இருக்கின்றது.
பதினாயிரம் யானை பலமுடையவர்கள் எனப் பகாசூரன், சராசந்தன், பீமன், கீசகன், என்ற இவர்களோடு என்னையும் குறிப்பிடுவார்கள். (சிலர் பலராமன், பீமன், சல்லியன், கீசகன், துரியோதனன் எனக் கூறுவர்) இந்த ஐவரில் பகாசூரனும், சராசந்தனும் பீமனால் கொல்லப்பட்டார் கள். இப்பொழுது நள்ளிரவில் கீசகன் கொல்லப்பட்டிருக்கிறான் என்றால், பீமன் தான் கொன்றிருக்க வேண்டும். வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது. அது உண்மையாயின் பீமன் அங்குதான் (விராட நாட்டில்) இருக்கவேண்டும். அங்கு அவன் இருக்கின்றான் என்றால், மற்றைய பாண்டவர்களும் அங்கு தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில்தான் இருப்பார்களே தவிர தனித்தனியாகப் பிரிந்து இருக்கமாட்டார் கள். இரண்டாவது அரசிக்குத் தோழியாக இருக்கின்ற விரதசாரிணி என்ற வண்ண மகள் திரெளபதியாவாள். தன்னைக் காக்கின்ற கந்தர்வர்கள் ஐந்து பேர் உளர் என்று சொல்லிக் கொள்வது பாண்டவர் களையே. அந்தக் கந்தர்வர்களில் ஒருவன் தான் கீசகனைக் கொன்றான் என்று அவளே கூறியிருக்கிறாள். அந்தக் கந்தருவன் பீமன் தான் என்பதில் ஐயமில்லை. என எனவே பாண்டவர்கள் விராடனுடைய மச்ச நாட்டில்தான் இருக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மை. இப்பொழுது நம் முடைய வேலை அங்கிருந்து அவர்களை வெளிப்படுத்துவதுதான். அதற்குரிய வழி யாது? கூறுங்கள்” என்று கூறினான்.
எளிதில் தோற்கடித்து விடலாம்
உடனே கர்ணன், “மன்னா! நாம் ஒரு பெருஞ்சேனையின் மூலம் விராட நாட்டி லுள்ள பசுக்களைக் சுவர்ந்து வந்து விடலாம். பாண்டவர்கள் அங்கு இருந்தால் அவர்கள் பசுக்களைப் போகவிடமாட் டார்கள். அப்பொழுது அவர்கள் வெளியே வந்தே தீர வேண்டும். அவ்வாறு வெளியே வந்துவிட்டால், நாம் மீண்டும் அவர்களை வனவாசத்திற்கும், அஞ்ஞாதவாசத்திற்கும் அனுப்பிவிடலாம். யாரும் வந்து மீட்கவில்லையென்றால் பசுக்களை அஸ்தினா புரத்திற்கு ஓட்டி வந்துவிடலாம். கீசகன் தற்போது இல்லையாதலால், அவர்கள் போரிட வந்தாலும் அவர்களை எளிதில் தோற்கடித்துவிடலாம்” என்றான். இந்த யோசனையைத் துரியோதனனும் சபை யோரும் ஒப்புக்கொண்டார்கள்.
அரசர் ஒருவர் மற்ற நாட்டு அரசருடன் போரிடக் கருதினால், வேறு எந்தக் காரணமும் இல்லையென்றால், அவர் களுடைய பசுக்களைக் கவர்ந்துவிடுவர். இது பண்டைக்கால மரபு ஆகும். அஃதாவது ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், குழந்தையும், பெண்டிரும், முதுமையோரும் பிறர்க்குத் தீங்கு செய்யாத இனத்தவர் ஆவர். போர் மூளும்போது அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் போகச் சொல்லி முரசறைவர். அங்ஙனம் போதற்கு அறிவில்லாத பசுக்களை எதிரி கள் கவர்ந்து சென்று விடுவர்.
பசுக்களைக் கவர்ந்து சென்றால் கெளரவக்குறைவு தனக்கு ஏற்படும் என்று கருதி, மீண்டும் பசுக்களை மீட்க எதிரிநாட்டு மீது படை யெடுத்துச் செல்வர். இவற்றைப் பற்றித் தொல்காப்பியமும், புறப்பொருள் வெண்பா மாலையும் நன்கு கூறுகின்றன. எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருதலை புறப்பொருள் திணைகளில் வெட்சித் திணையின் பாற்படும். அந்த வீரர்கள் வெட்சிப் பூவை அணிந்து கொண்டு சென்று பசுக்களைக் கவர்ந்து வருவர். ஆதலின் அதற்கு வெட்சித் திணை என்று பெயர் வந்தது. அதுபோலவே கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டு வருகின்றவர்கள் கரந்தைப் பூவைச் சூடிச் செல்வர். அதனால் அதற்குக் சுரந்தைத் திணை என்று பெயர். இவ்விரண்டு திணைகளுக்கு பூக்களை யொட்டியே பெயர் வந்ததைக் காண்க. இவற்றிலிருந்து பண்டைக்காலத்தில் வாழ்ந்தவர்கள் ‘பசுக்களைக் கவர்ந்து வருதல் என்பதைப் போர் ஆரம்பிப்பதற்கு ஒரு காரணமாகக் கொண்டிருந்தனர் என்பது புலனாகின்றது.
விராட நாட்டின் மீது போர்
விராட நாட்டு ஆதிரைகளைக் கவர்ந்து வரவேண்டுமென்று முடிவு செய்தவுடன், விந்தியமலைக்கும். இமயமலைக்கும் இடையிலுள்ள ஆரிய வர்த்தம் என்ற புண்ணிய பூமிக்கு வடமேற்குத் திசை யிலுள்ள திரிகர்த்த தேசத்தை ஆண்டு வந்த சுசர்ம ராஜன் என்பவன், அப்பொழுது எழுந்து, துரியோதனனை வணங்கி, “மன்னர், மன்னா! மச்சநாட்டு மன்னனா கிய விராடன்; அவன் மைத்துனன் கீசகன் சேனாதிபதியாக இருந்தபோது, என்னைத் தோற்கடித்து, என்னுடைய செல்வத்தைக் கொள்ளை கொண்டு போனான். செருக்கும் கொண்டிருந்தான். கீசகன் இல்லையாத லால் விராடனுடைய பலம் பெருமளவு குறைந்துள்ளது. ஆதலின் இந்தச் சமயத்தில் விராட நாட்டின் மீது படையெடுக்க எனக்கு அநுமதி கொடுக்க வேண்டும்” என்ற வேண்டிக் கொண்டான். அதனைத் துரியோதனன், கர்ணன் முதலானோர் ஆதரித்தனர்.
பசுக்களைக் கவரச்சூழ்தல்
அப்பொழுது அவர்கள், “முதலில் சுசர்மராஜன் தன்னுடைய சேனையைக் கொண்டு மச்சதேசத்தின் தெற்குப் பகுதியைத் தாக்கி அங்குள்ள பசுக்களைக் கவர்ந்து வரட்டும். அப்பொழுது விராட சேனையெல்லாம் அவனுடன் போரிட அப்பகுதிக்குச் சென்றுவிடும். அந்த நேரம் பார்த்து. துரியோதனன் தலைமையில் கௌரவ சேனையை அழைத்துக் கொண்டு வடக்குப்பக்கம் தாக்கி, அங்குள்ள பசுக் களையெல்லாம் கவர்ந்து வர வேண்டும்” என்று முடிவு செய்து அதன்படி சுகர்மா என்னும் திரிகர்த்தராசனுக்கு விராட நாட்டின் தெற்குப் பகுதியைத் தாக்கும்படி அனுமதி கொடுத்தனர். திரிகர்த்தராஜனும் ஓர் அக்குரோணி சேனை தன்னைச் சூழ்ந்து வர விராட நாட்டின் தெற்குப் பகுதியைத் தாக்கி அங்குள்ள பசுக்களைக் கவரச் சூழ்ந் திட்டான்.
ஓர் அக்குரோணி சேனை என்பது இப்பொழுது ‘பட்டாலியன், ரெஜிமண்ட் என்று சொல்கின்றார்களே அதைப்போன்று சேனையின் ஒரு பிரிவாகும். தேர்கள் இருபத்தோராயிரத்து எட்டு நூற்று எழுபது (21870) யானைகள் இருபத்தோராயிரத்து எட்டு நூற்று எழுபது (21870) குதிரைகள் அறுபத்தைந்தாயிரத்து அறுநூற்றுப்பத்து (65610) காலாட்படை ஒரு லட்சத்து ஒன்பதி னாயிரத்து முந்நூற்றைம்பது (109350) என்ற இவை அடங்கிய பிரிவுதான் அக்குரோணி என்பதாகும். ஓர் அக்குரோணி சேனையில் யானை, தேர்,குதிரை, காலாட்படைகள் 1:1:3:5 என்ற விகிதத்தில் இருக்கும்.
திரிகர்த்தராஜன் பசுக்களைக் கவர்ந்து விடவே, இடையர்கள் அஞ்சி ஓடிப்போய் “ஆநிரைகளைத் திரிகர்த்தராஜன் கவர்ந்து சென்றான்” என்று விராடனிடம் முறை யிட்டனர். அதனால் விராட மன்னன் கோபங்கொண்டு தன் மைந்தர்கள் நால்வ ருடன் மேருமலைக்கு ஒப்பான தேரில் ஏறிக்கொண்டு தன் சேனைகளுடன் சுசர்ம ராஜன் சேனைகளைத் தாக்கப் புறப்பட் டான். அப்பொழுது கங்கபட்டர், விராட மன்னனிடம்,”மன்னரே! உங்களுடன் பலாயனன் (பீமன்), குதிரைகளைக் காக்கும் தாமக்கிரந்தி (நகுலன்) பசுக் களைப் பாதுகாக்கும் தந்திரிபாலன் (சகா தேவன்), ஆகியவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு அவர்களால் வெற்றி கிட்டும்” என்றார். கங்கபட்டரின் யோசனையைக் கேட்ட விராடனும். அம்மூவருக்கும் வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து தன்னோடு அழைத்துச் சென்றான்.
ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தனர்
இருதிறத்துச் சேனைகளும் முரசங்களும் வாத்தியங்களும் முழங்க, தங்கள் தங்கள் சேனைத் தலைவர்களின் ஆணைகளை ஏற்று தேரொடு தேர்; குதிரையொடு குதிரை; யானையொடு யானை; காலாட் படையொடு காலாட்படை என ஒருவர் மேல் ஒருவரும் ஒன்றின் மேல் ஒன்றும் தனித்தனியாக போரிட்டனர். பின்னர் வில் வீரர்களோடு வில்வீரர்கள்; மல்லர்களோடு மல்லர்கள், கவண் வீரர்களோடு கவண் வீரர்கள், கதை வீரர்களோடு கதை வீரர்கள் என ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து தாக்கிப் போரிடலாயினர்.
உக்கிரமாகப் போரிட்டதனால் வீரர்களின் தலைகள் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதைந்து கிடந்தன; குதிரைகளின் தலைகள் பந்துகள் போல உருண்டோடின; துதிக்கை அறுந்த யானைகள் துடிக்க லாயின ; தேர்கள் சிதைத்து ஆங்காங்கு குவியலாகக் கிடந்தன; இரத்த வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து ஓடலாயிற்று. வாள்கள், வேல்கள், தோமரங்கள், பேரீட்டி கள், முத்தலைச் சூலங்கள் முதலானவை இரத்த வெள்ளத்தில் அடித்துச் செல்ல லாயின. தேர்களும், யானைகளும், குதிரை களும், அந்த இரத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைத்தல், வில் நாணைத் தெறிக்கும் ஒலி முதலான பேரோசைகள் கடலோசையை அடக்கிவிட்டன. கடலே செந்நிறமானதென்றால் போரின் கடுமையை நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
இறுதியில் விராட மன்னனின் சேனைகளுக்குத் தோற்றுச் சுசர்ம ராஜனின் சேனைகள் புறங்காட்டி ஓடலாயின. விராடனின் மைந்தர்கள் ஆக்ரோஷத்தோடு போரிட்டனர். விராடன் தன்னுடைய வில்லை வளைத்து அம்புகளைச் செலுத்தி திரிகர்த்தராஜனின் தேர், வில் முதலான வற்றை அழித்தான். உடனே திரிகர்த்த ராஜன் வேறொரு தேரில் ஏறி. விராடனின் தேர், தேர்ப்பாகன்,குதிரைகளை அழித்ததோடு அவ்விராடனைத் தேர்க் காலில் வில் நாணின் மூலம் கட்டி அப்போர்க்களத்தை விட்டுச் சென்றான்.’
இதனைக் கங்கபட்டர் கண்டார். உடனே திரிகர்த்தராஜனின் செயலைப் பலாயனனுக்குச் சுட்டிக்காட்டிப் போரிடும்படி குறிப்பாகக் கூறினார். உடனே பீமன் விராட மன்னனை, மன்னனை, திரிகர்த்தராஜனோடு போரிட்டு. அவன் தேர், தேர்ப்பாகன், குதிரைகள் முதலானவற்றை அழித்து, தேர்க்காலில் உள்ள கட்டினை அவிழ்த்து விராடனை விடுவித்தான். மாறாகத் திரிகர்த்தராஜனைத் தேர்க்காலில் சுட்டி இழுத்து வந்து கங்கபட்டர் முன் நிறுத்தினான்.
பசுக்களை மீட்டனர்
அதற்குள் தாமக்கிரந்தியும், தந்திரி பாலனும் (நகுல சகாதேவர்) திரிகர்த்த ராஜன் சேனைகளோடு போரிட்டுத் தோற் கடித்தனர். பின்னர் திரிகர்த்தராஜன் கவர்ந்து சென்ற பசுக்களையும் மீட்டனர்.
விராடன் பாண்டவர்கள் என்று தெரியாது கங்கபட்டர், பலாயனன், தாமக் கிரந்தி, தந்திரிபாலன் ஆகிய நால்வர்க்கும் நன்றி கூறினான். அப்பொழுது, “இப்பொ ழுது நீங்கள் செய்த உதவிக்கு எதனை நான் கொடுப்பேன்?என்னுயிரைப் போகாது தடுத்த உங்களுக்கு என்னுடைய நாடு நகரம் அனைத்தையும் கொடுத்தேன்” என்றான். அதனைக் கேட்டுச் கங்கபட்டர், விராடனை நோக்கி. ‘மன்னனே! இந்தத் திரிகர்த்தராஜனை விட்டிடுவாயானால் நீ முன் சொன்ன செல் சொன்ன செல்வம் அனைத்தையும் கொடுத்தது போலாகும். ஆதலின் திரிகர்த்த ராயனை விட்டு விடுவாயாக என்று வேண்டிக் கொண்டார்.”இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும்” பண்பு டைய அவரின் “பண்பு பெருந்தன்மையைப் பாராட்டி, விராட மன்னன் திரிகர்த்த ராஜனைத் தேர்க்காலிலிருந்து விடுவித்து அவன் நாட்டிற்குப்போக அனுமதித்தான்.
“திரிகர்த்தராஜனும் திசைகளை நோக்காமல் நிலமகளை நோக்கி வெட்கத்துடன் நாணி தன் படையுடன் போய்ச் சேர்ந்தான்.
மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி