பாண்டவர்கள் காட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நாளில், ஒருநாள்,பாஞ்சாலி, நெல்லி மரத்தில் இனிமையான நெல்லிக்கனி ஒன்று தொங்குதலைக் கண்டாள். அதன்மேல் விருப்பம் கொண்டு. தனக்கு அதனைக் கொடுக்க வேண்டும் என அர்ச்சுனனை வேண்டினாள். அவனும் அதனை மறுக்காது அந்த நெல்லிக்கனியை மரத்தினின்று கீழே விழச் செய்து அத் பாஞ்சாலியிடம் மகிழ்ச்சியுடன் கொடுத் தான்.
துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே
இதனைக் காட்டில் வாழ்கின்ற முனிவர் கள் கண்டார்கள். அவர்கள், யாரிடமும் கேட்காது அர்ச்சுனனும், திரெளபதியும் சேர்ந்து செய்த செயலுக்கு வருந்தி, தர்மபுத்திரரிடம், “யுதிஷ்டிரரே! இந்த அர்ச்சுனன் பறித்த நெல்லிக்கனி சாதாரண மானதன்று. ஆண்டுக்கொருமுறைதான் தோன்றும். அக்கனியை ஆண்டுக்கு ஒரு முறையே உண்ணும் அமித்திர முனி வன்தான் உண்பான். ஆண்டு முழுவதும் அந்நெல்லிக்கனி, அவனைப் பசியில் லாமல் இருக்கச் செய்யும். வேறு எவற்றையும் அம்முனிவன் உண்ணமாட்டான். அவனுக்கு இக்கனி கிடைக்கவில்லை யென்றால் அடுத்த கனி தோன்றும் வரை பட்டினியாகத்தான் இருப்பான். அர்ச்சுனன் அறுத்ததை அறிந்தால் அந்த முனிவன் சபித்து விடுவான். இதனை அறியாது துன்பம் வரக்கூடிய காரியத்தைச் செய்து விட்டீர்களே” என்று கூறி வருந்தினார்கள்.
உடனே தர்மபுத்திரர் தம்பியரைப் பார்த்து, ”நாம் தவறான காரியத்தை செய்து விட்டு முனிவரின் சாபத்திற்கு ஆட்பட்டு விட்டோம்.இதற்கு என்ன பரிகாரம் செய்ய முடியும்?” என்று கேட்டார். அனைவரும் ஒன்று கூடி கண்ணனால் தான் இதனைத் தீர்க்க முடியும் என்று கருதினர். அதனால் கண்ண பெருமானை மனத்தால் வணங்கி, ”பரந்தாமனே! பாற்கடல் வண்ணா! கருணாமூர்த்தியே! முன்பு துருவாச முனிவரிடமிருந்து எங்களைக் காத்தது போல இப்பொழுதும் எங்களைக் காக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். சரணம் அடைந்தவர்களையெல்லாம் காக்கும் ஆபத்பாந்தவன் அல்லவா அவன். ஆதலின் கண்ணபிரான், பாண்டவர்களின் இக்கட்டான நிலையை உணர்ந்து உடனே அவர்கள் முன்வந்து நின்றார்.
கண்ணபிரான் – “தர்மபுத்திரரே! நீயும் உன் தம்பியரும். பாஞ்சாலியும் தங்கள் தங்கள் மனத்திலுள்ள எண்ணங்களைப் பூரணமாக ஒன்றினையும் ஒளியாது முற்றுமாக கூறுவீர்களேயானால் இந்த நெல்லிக்கனி மீண்டும் கிளையில் சென்று பொருந்தி விடும். அதன் மூலம் முனிவரின் சாபத்திலிருந்து தப்பிக்கலாம் கூறினார். என்று
அதன்பின் கண்ணபிரான், பாண்ட வர்களை நெல்லி மரத்தின் கீழே அழைத்துக்கொண்டு சென்று, அந்த நெல்லிக்கனியை தன் கையில் தாங்கி, “ஆகாய வாணியே! பூமா தேவியே/ வன தேவியே! இந்தப் பாண்டவர்கள் சொல்லு கின்ற உண்மையான உள்ளக்கிடக்கைகளை ஏற்று மீண்டும் இக்கனி முன்போல் இம்மரத்தில் பொருந்துமாறு அருள் புரிய வேண்டும் ” என்று கூறி, அக்கனியைத் தர்மபுத்திரர் கையில் கொடுத்தார். தர்மபுத்திரரும் அக்கனியை கையில் ஏந்திக் கொண்டார்.
இரண்டு முழம் மேலே உயர்ந்தது
முதலில் தர்மபுத்திரர், “எம்பெருமானே! கண்ணபிரானே! சத்தியமும், பொறுமை யும் எம்மை காக்கின்ற எம்பெருமானாகிய நீரும் நீடூழி நிலை பெற்று இருக்கக்கடவீர். பாவமும் பொய்யும் கோபமும் அரக்கக் குலங்களைப் போல பால நசித்து போகட்டும்” என்ற இவற்றை என்னுள்ளம் ஆதரித்து, இரவும் பகலுமாக இதே எண்ணத்தில் உள்ளது” என்று சொல்ல நெல்லிக்கனி தர்மன் கையிலிருந்து இரண்டு முழம் மேலே உயர்ந்தது.
அடுத்து வாயுவின் மைந்தனாகிய பீமன் எழுந்து வந்து, “ஆதி மூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்காக கருடாழ்வார் மீது அலை குலைய ஓடி வந்து தன் சக்கராயுதத்தால் அந்த யானையைப் பற்றி கௌவிய முதலையை வீழ்த்தி அன்று அந்த யானைக்கு அருள் புரிந்த எங்கள் நாயகனே! பிறன் மனைவியை பெற்றதாயெனவும் புறங் கூறிப் பொய்த்துயிர் வாழ்தல் சிறுமை எனவும், பிறர் படும் துயரம் தான்படும் துயரம் எனவும் என்னும் எண்ணம் இறுதிவரை என் மனத்தை விட்டு நீங்காதிருக்க வேண்டும் “என்றான். உடனே அந்த நெல்லிக் கனி மேலும் இரண்டு முழம் மேலே உயர்ந்தது.
சுத்த வீரனாக விளங்க வேண்டும்
அடுத்து, காண்டீபத்தை கையில் ஏந்திய அர்ச்சுனன், “மெய்ஞான வடிவாகவே வந்து விளங்கும் மெய்ப்பொருளே! மைம்முகில் வண்ணனே! எம்மானே! நீர்க் குமிழி போல அழியும் இந்த உடம்பில் பொருந்திய ஆத்மாவை இழந்தாகிலும் ஒழுக்க முடை முடைமை, வாய்மை, நல்ல குடிப்பிறப்பு, தன்னிலையில் தாழாதிருத் தல் தாழ்வுவரின் உயிர் வாழாதிருக்கும் படியான மான முடைமை முதலான இவற்றைப் பெறாமல் மனித தேகம் எடுத்துப் பயனின்றி இறப்பது ஆத்மாவுக்கு ஈனமாகும். மேலும் உலகில் பிறந்தவர்கள் மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞான போதத்தை 2. মে வேண்டும். அல்லது சுத்த வீரனாக விளங்க வேண்டும்” என்று கூறினான். இவ்வாறு கூறியவுடன் அந்த நெல்லிக்கனி மேலும் இரண்டு முழம் மேலே உயர்ந்தது.
அடுத்து, நான்காவதாக, மாத்ரி தேவி யின் புதல்வனான நகுலன், “சுதர்சனம் என்னும் திருச்சக்கரத்தை ஏந்திய செந்தாம ரைக் கையனே! பவள வண்ணனே! அரவணை பள்ளி கொண்டவனே! நற்குலம், நல்லெழில், நற்செல்வம், முதலானவற்றைப் பெற்றிருந்தாலும் நற்கல்வியும், அந்த நற்கல்விக்கேற்ற நல்ல ஞானமும், பெறாதவர்கள் இவ்வுலகில் மணமற்ற முருக்கம்பூ போன்று அற்பமாய் மதிக்கத்தக்கவராவர்; அத்தகையவர்களை எக்காலத்தும் மதிக்க மாட்டேன்” என்றான். உடனே அந்த நெல்லிக்கனி மேலும் இரண்டு முழம் மேலே உயர்ந்தது.
அடுத்து ஐந்தாவதாக மாத்ரி தேவியின் மற்றொரு புதல்வன், எல்லோருக்கும் இளையவன், தெளிந்த ஞானமுடையவன், கண்ணனை இதயக் கமலத்தில் வைத்தவன் ஆகிய சகாதேவன், “பக்தவத்சலா’ பாண்டு ரங்கா! பரந்தாமா! சத்தியமே தாய்; அளவு படாத ஞானமே தந்தை; எந்நாளும் தர்மமே சகோதரன்; கருணையே தோழன்; சாந்த குணமே சகல நன்மைகளைத் தரும் தர்ம பத்தினி; பொறுமையே புதல்வன். இந்த ஆறு பேரும் தான் எனக்கு உண்மையான உறவினர்கள்; மற்றவர்கள் எனக்கு உற்ற உறவினர்கள் ஆகார்” என்று தன் இதயக் கமலத்தில் இருந்ததை அப் படியே எடுத்துக் கூற நெல்லிக்கனியானது மேலும் இரண்டு முழம் மேலே உயர்ந்தது.
இறுதியாக, யாகாக்னியில் தோன்றிய வளும், பாஞ்சாலன் பெற்ற திருமகளும், திட்டத்துய்மன் உடன்பிறப்புமான, திரௌ பதி, ”ஜனார்த்தனா, மதுசூதனா! நாராயணா! ஸ்ரீதரா! இருடிகேசா! கேசவா! மாதவா! கோவிந்தா! திரிவிக்கிரமா! வாமனா! பத்மநாபா, தாமோதரா என்ற ஆறிரு நாமத்தானே! ஒன்றோடொன்று நீங்காத ஐம்புலன்கள் போன்று பாண்ட வர்கள் ஐவரும் எனக்கு நல்ல நாயகர்களாக இருந்தும், இன்னமும் வேறொருவன் எனக்குப் புருஷனாகும்படி என்னுடைய பெரியமனம் விரும்புகின்றது. ஆனாலும் அழகிய இப்பூமியில் புருஷர்கள் என்னும் பேரற்றிருக்குமானால் பெண்ணாகப் பிறந்த யாரையும் பதிவிரதைகள் என்று சொல்ல லாம். எனவே புருஷர்கள் உள்ள வரையில் பதிவிரதைகள் என்று சொல்வதற்கு இட முண்டோ?” என்று தன் உள்ளக்கிடக் கையை எடுத்துக் கூறினாள். இவ்வாறு பாஞ்சாலி கூறியவுடன் இன்சுவை மிக்க தேவாமிர்தம் போன்ற அந்த நெல்லிக்கனி மரக்கிளையில் முன்னிருந்த இடத்திலேயே நன்றாகப் பொருந்தி விட்டது.
பாஞ்சாலியின் இந்தக் கூற்றிலிருந்து சில விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன. ‘ஐம்புலன்கள் போல ஐந்து கணவர்கள் இருக்க இன்னும் ஒருவரை விரும்பும் என்று கூறிய திரெளபதி ‘கற்புடை மாதர் எழுவரில் திரெளபதி ஒருத்தி என்பது எவ்வாறு பொருந்தும் என ஐயம் எழலாம். அதற்குரிய சமாதானம்:- ‘நினைத்தலும் செய்தலோடொக்கும் என்பது இக்கால நிலை. ‘தீவினையைச் செய்தாலன்றி எவரும் நினைத்தலால் குற்றமில்லை’ என்பது துவாபர யுகத்தில் இருந்த கருத்து. ஆகலின் பாஞ்சாலி கூறியதில் குற்ற மில்லை என்பர். அதனால் தான் திரௌ பதியை, ‘வசிட்டன் நல்லற மனைவியே யனையாள்’ என்றார் வில்லிபுத்தூரார்.
இனி வைஷ்ணவ சித்தாந்தப்படியும் பொருத்திக் கொள்ளலாம். இறைவனை நாயகனாகவும், தம்மை நாயகியாகவும் பாவித்து ஆழ்வார்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர். எனவே ‘வேறொருவன்’ என்பதை எம்பெருமானைக் குறிக்கின்றது எனக் கொள்ளலாம். ”தம்மை, ஒத்தாரும் மிக்காரும் இல்லாத மாமாயனுக்காக்கி அந்த பரம புருஷனை நோக்க அனைத்து உயிர்களும் ஸ்திரீபிராயம் (பெண்) ஆதலின் நவவித சம்பந்தங்களில் ஒன்றான பர்த்தா – பார்யா (கணவன்- மனைவி ) சம்பந்தம் எனக்காட்டலாம் அல்லவா?” இவ்வாறு கொள்ளுதலில் எந்தவித இழுக்கும் இல்லை என்க.
இவ்வாறு பாண்டவர்களும் பாஞ்சாலியும் உள்ளது உள்ளபடியே தங்கள் தங்கள் உள்ளக்கிடக்கைகளைச் சொல்லி, பறித்த நெல்லிக்கனியை அதே மரத்தில் அதே இடத்தில் பொருந்த வைத்தார்கள். இதனால் அமித்திர முனிவரின் சாபத்திலி ருந்து தப்பினார்கள்.
தன்னை சரணம் அடைந்தவரது அல்லலை நீக்கிய அருளாளன் கண்ண பிரான். பாண்டவர்களிடம் விடை பெற்று, துவாரகாபுரி போய்ச் சேர்ந்தார். உண்மை பேசுதலில் சிறந்தவராகிய பாண்டவர்கள் அங்கேயே தங்கினார்கள்.
பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் நெருங்கும் கட்டம் வந்து விட்டது.
பாண்டவர்கள் விஷ்ணு சித்தன் என்னும் முனிவனுடைய தபோவனம் சென்று அங்கு வசித்து வந்தனர். தீவினையே உருக்கொண்ட துரியோதனன் பாண்டவர் களை அந்த வனத்திலேயே கொன்றுவிட வேண்டுமென்று முடிவு செய்து, காள மாமுனிவனை அழைத்து வரச்சொன்னான். அம்முனிவனும் அங்கு வந்து நிற்க, துரியோதனன், “காளமாமுனிவரே! பாண்டவர்களைக் கொல்லும் பொருட்டு யாகம் ஒன்று செய்வீராக” என்றான். அவ்வாறே செய்வதாக அந்த முனிவன் ஒப்புக்கொண்டு, காட்டிற்குச் சென்று அபிசார யாகம் செய்தான். (அபிசாரயாகம் என்பது பிறர்க்குத் தீங்கு விளைவிக்க வேண்டி (அல்லது) கொல்லுதல் வேண்டி மந்திரப்பிரயோகம் செய்து நடத்தும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் ஓர் அபிசார மந்திரத்திற்கு ஏழுமுறை நெய் துடுப் பினால் நெய் வார்த்து மந்திர உச்சாடணத் துடன் ஓமம் செய்ய வேண்டும். இத்தகைய சடங்குகளுக்கு அடுத்தது யாமளம். யாமளம் என்பது அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகும்.)
பாண்டவர்கள் ஐவரையும் கொன்று வருக
இவ்வாறு காள மாமுனிவனால் செய்யப் பட்ட அந்த அபிசார யாகத்தினின்று கொடிய பூதம் ஒன்று எழுந்தது. அதனிடம் அக்காள மாமுனிவன், “பாண்டவர்கள் ஐவரையும் கொன்று வருக” என்று கட்டளையிட்டான்.
அதற்கு அந்தப்பூதம் “நீ சொல்லிய படியே அந்தப் பாண்டவர்கள் ஐவரையும் கொன்று விடுகிறேன். ஆனால் அந்த பாண்டவர்கள் இன்றைய தினத்தில் என் கண்ணில் படவில்லை என்றாலும், இறந்து கிடந்தாலும் திரும்பி வந்து உன்னைக் கொல்வேன்” என்று அச்சுறுத்திப் பாண்ட வர்களைத் தேடிச் சென்றது.
துரியோதனன் சூழ்ச்சியை யம தர்ம. ராசன் அறிந்து கொண்டு, பாண்டவர் களைக் காப்பாற்ற வேண்டுமென்று எண்ணி, அவர்கள் வசிக்கும் காட்டிடத்தே மான் வடிவம் எடுத்துக் கொண்டு வந்தான். அந்த தபோவனத்தின் ஆசிரமத்தில் ‘த்விஜன்’ என்ற ஒரு பிராமணச் சிறுவன் இருந்தான். அவன் முப்புரி நூலோடு மான் தோலையும் அணிந்து கொண்டிருந்தான். மான் வடிவில் வந்த இயமன், சிறுவனது மான் தோலைக் கவர்ந்து கொண்டு ஓடலானான். அதன் பின் ஓடிய அந்த அந்தணச் சிறுவன் ‘த்விஜன்’ மானின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், தர்மபுத்திரரிடம் வந்து முறையிட்டான். தர்மபுத்திரர், “சிறுவா! பயப்படாதே! அந்த மான் தோலைப்பற்றி தருகிறேன்” என்று கூறி மான் தோலைக் கவர்ந்தோடிய மானின் பின் தொடர்ந்து சென்றார்.
பாண்டவர்கள் திக்கு முக்காடினர்
அந்த மான் காற்றினும் வேகமாக ஓடலாயிற்று. பாண்டவர்கள் கையில் சிக்குவது போல நிற்கும். அதனைப் பிடிக்க போகும்போது காற்றினும் வேகமாய்ப் பறக்கும்; மறுபடியும் நிற்கும்; பின்னர் அதே மாதிரி வேகமாக ஓடும்; இவ்விதம் பாண்டவர்களைத் திக்கு முக்காடச் செய்தது. நெடுந்தூரம் அலைக்கழித்தது. பின்னர் அந்த மான் மறைந்தது. அந்த ஒரு மானைத் துரத்தியதாலேயே பாண்டவர்கள் ஐவரும் வீரமும் ஆண்மையும் குலைந்து, தேகம் தளர்ந்து, கை கால்கள் சோர்ந்து நாக்கு வறள, நடக்க முடியாது சோர்ந்து போயினர். அதனால் ஒரு மரத்தின் கீழே அமர்ந்தனர். (யமனே மான்வடிவெடுத்து இந்த ஆட்டங் காட்டியதனால் பாண்ட வர்கள் இந்த நிலை அடைந்தனர் என்பது குறிப்பு).
அந்த்ப் பாண்டவர்கள் களைத்து போய் ஓரிடத்தில் சோர்ந்து இருந்தபோது. இயமன் ஒரு பக்கத்தில் விஷ நீரைக் கொண்டே ஒரு குளத்தை உருவாக்கினான். பின் அசரீரியாக வானில் அங்கேயே இருந்தான்.
எல்லோரும் களைப்போடு இருப்பதைக் கண்ட தர்மபுத்திரர் நகுலனைப் பார்த்து, “தம்பி! இந்த மரத்தின் மேல் ஏறி நீர் நிறைந்த குளம் ஏதாவது சென்று தெரிகிறதா? பார்” என்றார். அவனும் மரத்தின் மீது ஏறிப் பார்த்து விட்டு இறங்கி வந்து, ”அண்ணா’ கொஞ்ச தூரத்தில் நீர் நிலையை அடுத்து வளரும் செடி வகைகளும் கொக்கு வகைகளும் தென்படுகின்றன. அந்த இடத்தில் கட்டாயமாக நீருள்ள குளம் இருக்கும் ” என்றான். ”அப்படியானால் போய்ப் பார்த்து நீர் கிடைத்தால் நீயும் குடித்து விட்டு எடுத்துக் கொண்டு வா” என்று தர்மபுத்திரர் கூற, நகுலன் விரை வாகச் சென்றான்.
போன இடத்தில் எதிர்பார்த்தபடி ஒரு குளம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு அம்பறாத் தூணியிலும் தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம் என்று நகுலன் பொய்கையில் நீரைக் குடிக்கப் போனான்.
உடனே அசரீரியானது, “மாத்ரி புத்திரன் நகுலனே! இது என்னுடைய குளம்; என் கேள்விக்கு விடை கூறிவிட்டு பின்னர் குடி” என்றது. அதைக் கேட்டு நகுலன் திடுக்கிட்டான். தாகத்தின் வேகத்தினால் அசரீரி சொன்னதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தண்ணீரைக் குடித்து விட்டான். கரை ஏறியதும் மயக்கம் உண்டாகிக் கீழே விழுந்தான்.
என் கேள்விக்குப் பதில் சொல்!
போன நகுலன் திரும்பி வரவில்லை யென்று தர்மபுத்திரர் சகாதேவனை அனுப்பினார். அவனும் குளத்தருகே சென்றான். அங்கே தன் சகோதரன் நகுலன் படுத்திருப்பதைக் கண்டான். அவனை யாரோ கொன்று விட்டார்கள் என்று எண்ணி, தாகம் பொறுக்க மாட்டாது தண்ணீர் அருகே சென்றான். அப் பொழுதும் அசரீரி, ”சகாதேவா! இது என் குளம்; என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு பின்னர் தண்ணீரைக் குடி” என்றது நகுலனைப் போலவே இவனும் தாகம் மேலிட்டவனாகி, அசரீரி கூறியதைப் புறக்கணித்து, தண்ணீரைக் கண்டதும் எடுத்துக் குடித்தான். அவனும் உடனே மயங்கி கீழே விழுந்தான்.
நகுலன், சகாதேவன் ஆகிய இருவருமே திரும்பி வராததைக் கண்டு தர்மபுத்திரர் மனக்கவலை அடைந்து அர்ச்சுனனைப் பார்த்து, ”தண்ணீருக்காக போன இருவரும் இன்னும் திரும்பி வரவில்லை? காரணமும் தெரிய வில்லை அதனை அறிந்து கொண்டு நீரும் கொண்டு வா” என்று கூறி அர்ச்சுனனை அனுப்பினார்.
அர்ச்சுனனும் வேகமாகச் சென்றான். குளத்தருகில் தம்பியர் இருவரும் இறந்து கிடப்பதைக் கண்டான். திடுக்கிட்டு இதற்குக் காரணம் யாராக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டே, தன் தாகத்தை தீர்த்துக் கொள்ள பொய்கையில் இறங்கினான். அப்போதும் அசரீரி, ”அர்ச்சுனா! இது என்னுடைய பொய்கை. நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறி விட்டு பின்னர் தண்ணீர் குடிப்பாய்” என்றது. அர்ச்சுனனுக்குக் கோபம் அதிக மானது. அதனால் தன்னுடைய வில்லை எடுத்து இரண்டு அம்புகளை விட்டான். அவையெல்லாம் வீணாகிப் போனதைச் கண்டு திடுக்கிட்டான். அப்பொழுது அசரீரி மீண்டும். ‘உன்னுடைய பாணங்கள் என்னை ஒன்றும் செய்யா. என்னுடைய கேள்விக்கு விடை சொல்லி விட்டு தண்ணீரைக் குடி. அதுதான் உனக்கு நல்லது. இல்லையென்றால் தம்பியர் களைப் போல நீயும் இறந்து போவாய்” என்றது. பெரிய யுத்தம் தான் செய்ய வேண்டும் போல உள்ளது என்று எண்ணிய அர்ச்சுனன், அதற்குள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அசர்ரியின் எச்சரிக்கையை மீறிக் குளத்து நீரை குடித்தான் கரையேறும் பொழுதே மயங்கி அவனும் கீழே விழுந்தான்.
இது அரக்கர்களுடைய வேலை
மூன்று தம்பியரும் வராத காரணத்தால் தர்மபுத்திரர் மனம் வருந்தி, பீமனைப் பார்த்து,”தம்பியர் மூவரும் சென்று நெடு நேரமாகியும் இன்னும் திரும்பவில்லை. என்னவானார்கள் என்றும் தெரியவில்லை. நீ போய் சீக்கிரம் அழைத்து வா” என்று அவனை அனுப்பினார். அவனும் குளத் தருகே வந்தான். அங்கு தன் தம்பியர்கள் மூன்று பேரும் இறந்து கிடக்கக் கண்டான். அவனுக்குத் துக்கம் மேலிட்டது. “இது அரக்கர்களுடைய வேலையாகத்தான் இருக்கும் அவர்களைக் கொன்று வீழ்த்து வேன் என்று எண்ணி அதற்குள் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கருதிக் குளத்தில் இறங்கினான். உடனே அசரீரி, ‘பீமசேனா! இது என் குளம். அதனால் என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு பின்னர் தண்ணீரைக் குடி. இல்லை யென்றால் உன் தம்பியர்போல்தான் நீயும் இறந்து போவாய் ” என்றது. அதனைக் கேட்ட பீமன் மிக்க கோபங்கொண்டு,”நீ யாரடா என்னை கேள்வி கேட்க? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கூறி குளத்திற்குள் சென்றான். தண்ணீர் குடித்தான். கரையேறியவுடன் அவனும் மயங்கி விழுந்தான்.
தர்மபுத்திரர் மயங்கி விழுந்தார்
“ஒரு நாளும் இதுபோல நடந்ததே இல்லையே! நெடு நேரமாகியும் தம்பியர் நால்வரும் திரும்பவில்லையே! என்ன காரணம் என்றும் தெரியவில்லையே. நீரைக் காணாமல் அலைந்து கொண்டிருக் கின்றார்களோ தெரியவில்லையே” என்று பலவாறாக எண்ணி, தர்மபுத்திரர் தன் தம்பியர்களைத் தேடி குளம் இருக்கும் காட்டிற்குச் சென்றார். தன் தம்பியர்களைத் தேடிக்கொண்டு போன அத்தருமபுத்திரர் சோகமும் தாகமும் மிகுந்து அந்த குளத் திற்கு அருகில் மயங்கி சோர்ந்து வீழ்ந்தார்.
அந்தச் சமயத்தில் துரியோதனன் தூண்டு தல்படி காளமாமுனிவன் பாண்டவர் களைக் கொல்வதற்காக அனுப்பிய பூதமானது அவ்விடத்தே வந்தது. முதலில் தர்மபுத்திரரைப் பார்த்தது. சோர்வினால் மயங்கி வீழ்ந்திருக்கும் அவர் இறந்து விட்டார் என்று எண்ணி அப்பால் சென்றது. அங்கு தம்பியர் நால்வரும் விஷ நீரைக் குடித்து மாண்டிருப்பதை பார்த்தது. அதனால் அப்பூதம் கோபம் கொண்டு வேள்வி செய்த இடத்திற்கே போய், தன்னை ஏவிய காளமா முனிவனையே கொன்று யாகத்தினுள் மறைந்தது.
பூதம் தன்னை தூண்டி அனுப்பிய காளமா முனிவனையே கொன்றது. ஏனென்றால், அபிசாரவோமம் செய்து அந்த வோமத்தினின்று வேள்வியினின்று எழுப்பப்பட்ட பூதமாதலால் அதனுடைய வருகையை வீணாக்கக் கூடாது. வீணாகப் போனால் கோபம் கொண்டு அப்பூதம் அனுப்பியவனையே கொன்று விடும். இப்பொழுது அப்பூதத்தின் வருகை வீணாகப் போனதால் கோபித்து அது அனுப்பிய காளமா முனிவனையே கொன்று விட்டது.
நேர்மையும் வாய்மையும் தவறாத தர்மபுத்திரரே!
மயங்கிச் சோர்ந்து விழுந்திருந்த தர்மபுத்திரர் இயமனின் திருவருளினால் உயிர் பிழைத்து எழுந்தார். அறநெறியில் தவறாத தர்மபுத்திரர் உயிர்பெற்று எழுந்து தண்ணீர் வேட்கை தோன்ற, தம்பியர் போன அடிச்சுவட்டையே பின்பற்றி குளத்தினருகே சென்றார். அங்கு தம்பியர் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டார்.
இறந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருகால் பகைவர்களால் இவர்கள் மாய்ந்தனரோ என்று சந்தேகித்து, அவர்கள் உடம்பினைப் பார்த்தார். ஒருவர் உடம்பிலும் ஒரு காயமும் இல்லாததைப் பார்த்தார். ஆகையால் பகைவரால் இறக்க வில்லை என்பதை உணர்ந்தார். பின் எவ்வாறு இறந்தார்கள் என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஒரு வேளை துரியோதனன் இந்தக் குளத்து நீரில் விஷம் கலந்திருப்பான், அவர்கள் அதனைக் குடித்து இறந்திருக்கலாம்” என்று சந்தேகம் கொண்டார். அது உண்மையா என்று அறிய, குளத்தில் இறங்கி, தர்மபுத்திரர் தாமரை மலர் போன்ற தன் கைகளால் அத்தண்ணீரை அள்ளிப் பருகப் போகும் நேரத்தில், அசரீரியாயிருக்கும் இயமன், “நேர்மையும் வாய்மையும் தவறாத தர்மபுத்திரரே! உன் தம்பியர் என் பேச்சைக் கேட்காமல் இந்தத் தண்ணீரைப் பருகி, இறந்து போனார்கள். நீ நிதானமானவன். அதனால் அவர்கள் செய்த தவற்றை நீ செய்யாதே. என் வினாக்களுக்கு பதில் அளித்து விட்டு பின்னர் இந்த நீரைப் பருகுவாயானால் உயிர் பிழைத்திருப்பாய். என் பேச்சை புறக்கணிப்பாயானால் உன் தம்பியர் போலச் சந்தேகத்திற்கு இடமின்றி இறப்பாய்” என்று கூறி எச்சரித்தது.
தர்மபுத்திரர் “இஃது யாரோ யக்ஷனு டைய குரல் போல உள்ளது” என்று எண்ணி, “ஐயா! நீ யார் என்றே தெரிய வில்லை. யாராக இருந்தாலும் நீங்கள் வினாக்களைத் தொடுக்கலாம். என்னால் இயன்றவரை குற்றமறப்பதில் சொல்லு கின்றேன்,” என்றார். உடனே அசரீரி ஒன்றன் பின் ஒன்றாக கேள்விகளைக் கேட்க, தர்மபுத்திரர் உடனுக்குடன் பதில் சொல்லலானார்.
(1) அசரீரி:- எது தினமும் சூரியனை உதிக்கச் செய்கின்றது?
தர்மபுத்திரர்:- பிரம்மம்.
(2) அசரீரி:- மனிதனுக்கு எது சிறந்த துணை?
தர்மபுத்திரர்- தைரியமே மனிதனுக்குச் சிறந்த துணை.
(3) அசரீரி:- எந்த சாஸ்திரங்களைப் படித்தால் மனிதன் அறிவுடையவன் ஆவான்?
தர்மபுத்திரர்:- சாஸ்திரங்களைப் படித்தலோடு பெரியோர்களின் துணை சேர்ந்தால் மனிதன் அறிவுடையவன் ஆவான்.
(4) அசரீரி:- பூமியைக் காட்டிலும் பொறுமையானது எது?
தர்மபுத்திரர்- மக்களைப் பத்து மாதம் சுமக்கும் தாய் பூமியைக் காட்டிலும் பொறுமையானவள்.
(5) அசரீரி :- வானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?
தர்மபுத்திரர்- மக்களை அவையத்து முந்தி இருப்பச் செய்கின்ற தந்தை.
(6) அசரீரி – காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தர்மபுத்திரர்:- மனம்
(7) அசரீரி:- புல்லினும் அற்பமானது எது?
தர்மபுத்திரர் :- கவலை
(8) அசரீரி:- உலகைச் சுற்றி வருபவ னுக்குத் துணையாக இருப்பது எது?
தர்மபுத்திரர்:- கல்வி
(9) அசரீரி :- இல்லறத்தானுக்கு யார் நண்பன்?
தர்மபுத்திரர்:- வாழ்க்கைத் துணையாக விளங்கும் மனைவி.
எது இன்பம்?
(10) அசரீரி :- இறக்கின்றவனுக்கு துணையாக வரக்கூடியது எது?
தர்மபுத்திரர்:- தானம் (தர்மம்) அது தான் மரணத்தின்பின் தொடர்ந்து வரக்கூடியது.
(11) அசரீரி:- பாத்திரங்களுக்குள் பெரியது எது?
தர்மபுத்திரர்: எண்ணில் கோடி ஜீவ ராசிகளையும் தன்னுள் அடக்கியிருக்கும் பூமியே பெரிய பாத்திரம்.
(12) அசரீரி:- எது இன்பம்?
தர்மபுத்திரர்- நல்லொழுக்கத்தில் நிலை பெற்றிருத்தலே இன்பம்.
(13)அசரீரி:- எதை நீக்கினால் மனிதன் அனைவரின் நன்மதிப்பைப் பெறுவான்?
தர்மபுத்திரர் – கர்வத்தை நீக்கினால் மனிதன் அனைவரின் நன்மதிப்பைப் பெறுவான்.
(14) அசரீரி :- எதனை விட்டால் துயரம் இல்லை?
தர்மபுத்திரர் கோபத்தை அறவே நீக்கினால் துயரம் இல்லை.
(15) अवती:- எதை விட்டால் செல்வந்தன் ஆகலாம்?
தர்மபுத்திரர் ஆசையை விட்டால் செல்வந்தன் ஆகலாம்.
(16) அசரீரி :- பிராமணியம் என்பது குலத்தினாலா? படிப்பினாலா? ஒழுக்கத்தி னாலா? எதனால்?
தர்மபுத்திரர்: குலமும் படிப்பும் பிராமணியத்திற்குக் காரணங்கள் ஆகா. நல்லொழுக்கமே காரணம். ஒழுக்க மில்லாதவன் பிராமணன் ஆகான். அந்தணர் என்பர் அறவோர் அல்லவா! எனவே ஒழுக்கமில்லாதவன் பிராமணன் ஆக மாட்டான்.
(17) அசரீரி:- உலகில் எது பெரிய ஆச்சரியம்?
தர்மபுத்திரர்:- நாள்தோறும் மனிதர்கள் இறக்கக் கண்டும் எஞ்சியுள்ள மனிதர்கள் தாம் மட்டும் நிலையாக இருக்க வேண்டுமென்று எண்ணுவதுதான்.
(18) அசரீரி:- உயர்ந்த சாஸ்திரங்கள் எவை?
தர்மபுத்திரர்- வேதங்கள் எழுதாக்கிள வியாய் குரு சிஷ்ய பரம்பரை கேள்வி மூலமாய் வந்தது ஆகலின் அவை பெருமை மிக்கன உயர்ந்தன.
(19) அசரீரி:- இல்லறத்திற்குப் பெருமைதருவது எது?
தர்மபுத்திரர்- மனைத்தக்க மாண் புடையளாகிய மனைவி.
(20) அசரீரி :- மகளிர்க்கு இயற்கையாய் இருக்க வேண்டிய குணம் யாது?
தர்மபுத்திரர்:- நாணம் (தகாதவற்றில் உள்ளம் ஒடுங்குதல்).
(21) அசரீரி – மனிதனது இரு செவிகளுக்கு இனிது எது?
தர்மபுத்திரர்:- இனிது இனிது குழந்தையின் மழலைச் சொற்கள் இனிது (இதனால் தான் திருக்குறள் “குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” எனக் கூறுகின்றது.)
(22) அசரீரி :- மலர்களுள் மணமுடையது எது?
தர்மபுத்திரர்: நறுமணம் வீசுகின்ற சாதிமல்லி.
(23) அசரீரி :- நிலைத்திருப்பது எது?
தர்மபுத்திரர்:- ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்
(24) அசரீரி :- செல்வர்களுக்குப் பாதுகாவ லாவது எது?
தர்மபுத்திரர்:- ஈகை (வரிசையறிந்து ஈதல் )
கற்க வேண்டியது யாது?
(25) அசரீரி:- தவத்தில் காத்தற்கு அரியது எது?
தர்மபுத்திரர்:- நல்லொழுக்கம்.
(26) அசரீரி :- கற்க வேண்டியது யாது?
தர்மபுத்திரர்:- அறிவை வளர்க்கும் நூல்கள்
(27) அசரீரி – கல்வி எவ்வாறு கற்க வேண்டும். தர்மபுத்திரர்- ஐயந்திரிபறக் கற்க வேண்டும்.(கற்க கசடற கற்பவை – குறள்)
(28) அசரீரி வருந்தல் இல்லா வாழ்க்கை எது?
தர்மபுத்திரர் கடன் படாது வாழ்தல்.
(29) அசரீரி :- உதவி என்பது எது?
தர்மபுத்திரர்:- அறமே.
(30) அசரீரி :- இறந்தும் இறவாதவர் யார்?
தர்மபுத்திரர்:- அறம் செய்தவர்.
(31) அசரீரி :- உயிர் வாழ்ந்தும் இறந்தவராக கருதப்படுபவர் யார்?
தர்மபுத்திரர்:- உலோபியர்.
(32) அசரீரி – வடிவம் இருந்தும் உயிர் இல்லாதது எது?
தர்மபுத்திரர்:- பொம்மை.
(33) அசரீரி :- பிறந்திருந்தும் சொல்லப் பட்ட (குறிப்பிட்ட) சரீரம் இல்லாதது எது?
தர்மபுத்திரர்:- இரு பிறப்பெடுக்கும் முட்டை (பிறக்கும்போது அசையாத முட்டையாக இருக்கிறது. பின்னர் தான் அசைகின்ற குஞ்சாக மாறுகின்றது. அதனால் பிறந்ததும் அம்முட்டை சொல்லப்பட்ட சரீரத்தோற்றம் இல்லாமல் இருக்கின்றது).
(34) அசரீரி:- அற்பமென்பது யாது?
தர்மபுத்திரர்- ஈ என இரத்தலும் ஈயேன் என்றலும் ஆம்.
(35) அசரீரி :- மெய்யுறுதி என்பது யாது?
தர்மபுத்திரர்- சத்தியம்
(36) அசரீரி:-நீக்க வேண்டியது யாது?
தர்மபுத்திரர்:- நீக்க வேண்டியது பொய்யே.
(37) அசரீரி:- விரதத்தில் சிறந்தது யாது?
தர்மபுத்திரர் ஐம்பொறிகளைக் குற்றம் சாராமல் பாதுகாத்தல், மனத்தை அது சென்ற புலத்தின் கண் செல்ல விடாது அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, தீயதனின் நீக்கி நல்லதன் கண் செலுத்துதல்).
கடன் என்பது யாது?
(38) அசரீரி:- நோன்பின் உயர்ந்தது யாது?
தர்மபுத்திரர்- கொல்லாமை
(39) அசரீரி:- கடன் என்பது யாது?
தர்மபுத்திரர்- பிதிரர்க்குச் செய்ய வேண்டுவதே கடன்.
(40) அசரீரி:- கடவாதிருத்தல் எது?
தர்மபுத்திரர்:- தாய் சொல்லைக் கடவாதிருத்தலே. தந்தையர்
(41) அசரீரி – பெருமை வாய்ந்த தெய்வம் எது?
தர்மபுத்திரர் :- கேசவன், நாராயணன், மாதவன்,கோவிந்தன், விஷ்ணு, மது சூதனன். திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், இருடிகேசன், பத்மநாபன், தாமோதரன் எனப் போற்றப்படும் பன்னிரு நாமத்தோனாகிய திருமால்.
சகாதேவன் உயிர் பிழைத்தான்
தன் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, விஷநீரைப் பருகாது, தான் கேட்ட கேள்விக்கெல்லாம் அருமையான விடை களை உடனுக்குடன் அளித்ததனால் இயமன் தன் சுயரூபத்தோடு தர்மபுத்திர ரைக் கட்டியணைத்து, துரியோதனன் செய்த சூழ்ச்சியையும், நச்சுப் பொய்கை உருவாக்கி முறியடித்த விதத்தையும், தெளிவாகக் கூறி விளங்க வைத்தான். பிறகு இயமன், “தர்மபுத்திரரே! உன் தம்பியர்களுள் தீ விரும்பிய ஒருவனை மட்டும் உயிர் பெறச் செய்யலாம்” என்று கூறி அதற்குரிய மந்திரத்தையும் கூறி அருளி னான். உடனே தர்மபுத்திரர் யாவர்க்கும் பின்னவனாகிய சகாதேவனை, இயமன் கற்றுத்தந்த மந்திரத்தினால் உயிர் பெறச் செய்து மகிழ்ந்தான்.
அப்பொழுது இயமன், “யுதிஷ்டிரா! உன் தாயிடத்துப் பிறந்த ஆற்றல் மிக்க பெரு வீரனான பீமனைப் பிழைக்க செய்வதை விட்டு விட்டு மாத்ரி தேவியின் புதல்வனும், மற்றவர்களைவிட வலிமை யில் குறைந்தவனுமாகிய சக சகாதேவனை ஏன் பிழைக்கச் செய்தாய்?” என்று கேட்டான். அதற்கு தர்மபுத்திரர், “ஐயனே! என் தாய்க்கு வாரிசாக நான் இருக் கின்றேன். என் சிற்றன்னை மாத்ரி தேவிக்கு ஒரு வாரிசு இருக்க வேண்டுமென்று என் இளவல் சகாதேவனைத் தேர்ந்தெடுத்து எழுப்பினேன். இதில் என்ன தவறு உள்ளது?” என்றார்.
தர்மபுத்திரர் இருதாயர் பிள்ளைகளுக் குள் வேற்றுமை பாராட்டாது சமன் செய்து சீர் தூக்கும் கோல் போலச் சமமாக நோக்கு தலைக் கண்டு இயமன் மனமகிழ்ந்து மற்ற தம்பியர்களின் உயிரையும், போரிடு வதற்குரிய ஆயுதங்களையும், அவற்றிற் குரிய மந்திரங்களையும் அருளி, “நேர்மை யின் சின்னமே! தர்மபுத்திரா; உங்களுக்கு விதிக்கப்பட்ட பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்து விட்டது. இனி அஞ்சாத வாசம் செய்ய வேண்டிய ஓராண்டி லும் பிறரால் அறியப்பட முடியாத மாற்று ருவம் உங்களுக்குப் பொருத்தமாக அமையும்” என்று கூறி, தர்மபுத்திரரையும், உயிர்பெற்றெழுந்த தம்பியரையும் வாழ்த்தி மறைந்தான்.
இயமன் சென்றபிறகு, தர்மபுத்திரர் தன் நம்பியர் நால்வரோடு தமது இருப்பிடம் சேர்ந்து, அங்கு பாஞ்சாலியிடம் தாங்கள் நச்சுப் பொய்கையில் உயிரிழந்ததையும் இயமனால் உயிர் பெற்று வந்ததையும் கூறினார். அதன்பின் பாண்டவர்கள் அந்த வனத்திலேயே தங்கியிருந்தனர்.
இவ்வாறு உயிர் போய், பின் பிழைத்த பாண்டவர்களைப் பற்றிய செய்திகள், அஸ்தினாபுரத்திலும் பாஞ்சால நகரிலும் பரவின. உடனே பிதாமகர் பீஷ்மர், ஆசாரியர் துரோணர், விதுரர், மாசற்ற பண்பாளர் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் மற்றும் பல சுற்றத்தினர்கள் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். பாண்டவர்களும் அவர்களை நன்முறையில் எதிர்கொண்டு வரவேற்று உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தனர்.
அப்பொழுது பிரம்மச்சரிய விரதம் காத்து காமத்தை வென்றவராகிய தூய பிதாமகர் பீஷ்மர் பாண்டவர்களிடம். “பீமன் மந்தார மலரையும், பொற்றாமரை மலரையும் அழகாபுரி சென்று கொண்டு வந்த வகையையும், இந்திரகுமாரன் அர்ச் சுனன் பாசுபதம் சிவபெருமானிடமிருந்து பெற இந்திரலோகம் சென்றதையும், நிவாதகவச கால கேயர்களை அழித்ததை யும் பின்னர் இந்திரனால் சிறப்புப் பெற்று மீண்ட உயர் சிறப்புத்தன்மையையும் துரியோதனன் சூழ்ச்சிப்படி காளமாமுனி வன் ஒமத்தீயினின்று அனுப்பிய பூதமானது கொன்று விடாதபடி இயமன் நச்சுப் பொய்கையை உண்டாக்கிக் காத்த வகையையும் அறிந்து மைந்தர்களே! உங்களை இந்தப் பூவுலகமே புகழ்ந்து பேசுகின்றது. எங்களுக்கு அது பெருமை யாக உள்ளது. பாற்கடல் வண்ணன் பரந்தாமனின் பவித்திரமான திருவருள் குறைவில்லாமல் உங்களுக்கு உள்ளது. எனவே இனி உங்களுக்கு எந்தவிதத் துன்பமும் நேராது” என்று கூறி வாழ்த்தி னார். வந்தவர்கள் அனைவரும் பாண்ட வரை வாழ்த்திச் சென்றனர்.
தர்மபுத்திரர் தன் தம்பியர்களோடும், பாஞ்சாலியோடும் இனிது மகிழ்ந்து இருந்தார். பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும் முடிந்தது.