காம்யக வனத்தில் பாண்டவர்கள் தங்கியிருக்கும்போது ஒருநாள் தர்மபுத்திரர் தௌமியரையும், பாஞ்சாலியையும் பர்ண சாலையில் இருக்கச் செய்து, தம்பியரோடு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது அந்தப் பர்ண சாலை வழியாகச் சிந்து நாட்டரசன் சயத்திரதன் என்பவன் தனது படைகள் சூழ்ந்து வர ஆடம்பரத்துடன் கெளட குலத்தரசன் பெற்ற கன்னிகையை மணந்து கொள்ள விரும்பி மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தான். இவன் திருத ராட்டிரர் மகளும், துரியோதனனின் தங்கையுமான துச்சளையின் கணவன். சயிந்தவன் என்று அழைக்கப்படுபவன். இவன் பர்ணசாலை அருகே பாஞ்சாலியைக் கண்டான்.
பாஞ்சாலியைக் கண்ட அவன், அவள் மீது மோகம் கொண்டான். காமப் பரவசனானான். அதனால் யாகாக்னியில் தோன்றிய பாஞ்சாலன் கன்னியாகிய பாஞ்சாலியின் அருகில் வந்து, மையல் கொண்டு “தேவாமிர்தம் போன்ற இனிய சொல்லையுடையவளே! அன்னமும் அன்னமிலாத் துறவிகளும் தளர்வடையும் படியான நடையையுடையவளே! மயில் போன்ற சாயலையுடையவளே! மானே! தேனே! கரும்பே!’ எனப் பலவாறு பிதற்றிய அவன் மேலும் “நெருப்பிலே பிறந்து, பாஞ்சாலன் செல்வ மகளாய் வளர்ந்து, இந்த பஞ்சைப் பாண்டவர்களுக்காக நீ ஏன் காட்டிலே துன்புறுகின்றாய்? என்னிடம் வந்தால் உன்னைச் சிந்து நாட்டு பட்டமகிஷியாக அல்லவோ ஆக்குவேன். எனவே என்னுடன் வருக” என்று பல ஆசை வார்த்தைகளைத் தராதரம் தெரியாது கொட்டலானான். அவையெல்லாம் பாஞ்சாலியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலக் கர்ணக் கடூரமாய் நெருப்பெனச் சுட்டன. அவன் நடந்து கொண்ட விதமும், சொன்ன வார்த்தை களும் பாஞ்சாலிக்கு அச்சம் ஊட்டின. அதனால் தௌமியனை அண்டி நின்றாள். அப்பொழுதும் அந்த கீழ் மகன் விடவில்லை. விடாமல் அவள் பின் தொடர்ந்து கார்மேகம் போன்ற அவளின் நெடிய கரிய கூந்தலைத் தொட்டிழுத்து, தன்னுடைய அழகிய தேர்தனில் வைத்துக் கொண்டு போனான்.
பாஞ்சாலியை கடத்திச் செல்லல்
பாஞ்சாலியோ கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்ட கணவர் ஐவரையும் கூவி அழைத்தாள். வேத விற்பன்னனாகிய தௌமியனும் பின் தொடர்ந்து, ”சயத்திரதனே! நீ நெருப்பிலே கையை வைக்கின்றாய்; வேண்டாம். அதனால் பாஞ்சாலியை விட்டுச் செல்லவும்; இல்லையெனில் பாண்டவர்கள் வந்து உன்னைக் கொன்றொழிப்பர்” என்று அச்சுறுத்தினான். பாஞ்சாலியின் கூவு தலையும், தௌமியனின் அச்சுறுத்தலை யும் காதில் வாங்காது, பெண் பித்தன் சயிந்தவன், பாஞ்சாலியுடன் தேர் ஏறி சென்று கொண்டிருந்தான்.
இரத்த வெள்ளத்தில் மிதந்த சயிந்தவன்
பாண்டவர்கள் வேட்டையாடி ஆசிரமம் வந்த போது அங்கு யாரும் இல்லாதிருப்ப தைக் கண்டு திடுக்கிட்டனர். வாசலின் தேர்ச்சுவடு தெரிந்ததும் அதைப் பின்பற்றி வேகமாகச் சென்றனர். அச்சுவடு தெளமி யனிடம் சேர்ந்தது. பின்னர் தௌமியன் மூலம் நடந்ததை அறிந்து மிகுந்த கோபத் துடன் சயிந்தவனைத் தேடி சென்றனர். முதலில் சயிந்தவன் சேனையைக் கண்டு தாக்கிச் சின்னாப் பின்னப்படுத்தி அழித் தனர். பின்னர் சயிந்தவன் தேர் அருகே சென்றனர். பாஞ்சாலி பாண்டவர்களைக் கண்டதும் பெருமகிழ்ச்சியுற்றாள்.
தன் பின்னால் பாண்டவர்கள் வருதலைக் கண்ட சயிந்தவன் “இவர்களை யெல்லாம் என் ஓரம்பினால் உன் கண்ணெதிரில் கொன்று அழிப்பேன்” என்று வீரவசனம் பேசினான். அதனைக் கேட்ட பாஞ்சாலி, ”வீணாக அலட்டிக் கொள்ளாதே! சத்தியத்தையே கவசமாகக் கொண்டுள்ள தர்மபுத்திரர், பதினாயிரம் யானைபலம் கொண்ட பகாசூரனையும் இடும்பனையும் கொன்றொழித்த பீமன், சிவபெருமானோடு போரிட்டுப் பாசுபதம் பெற்ற அர்ச்சுனன், வேலேந்திய வீரமுடைய நகுல சகாதேவர்கள் ஆகிய பெருவீரர்களையா வெல்லப்போகிறாய்? உன்னால் முடியுமா? அவர்கள் உம்முடைய மைத்துனர்கள் என்று எண்ணாத பாவியே! தங்கைக்கும், தாரத்துக்கும் வேறுபாடு அறியாத அயோக்கியனே! இதோ அவர்கள் வந்து விட்டார்கள். தங்கை துச்சளையின் கணவன் என்ற காரணத்தினால் கொல்லாது விட்டாலும் உன் மானத்தைச் சந்திச் சிரிக்கச் செய்யாமல் விடமாட்டார்கள்’ என்று பலவாறு சுடுசொற்களை அம்புகளாகச் சரமாரியாக வீசினாள்.
அவள் பேசி கொண்டிருந்த அக்கணத்தி லேயே பாண்டவர்கள் ஐவரும் சிங்கங்கள் என புகுந்து சயிந்தவன் தன் உடன் வந்த மன்னர்களையும், சேனைகளையும் நாசப் படுத்தினார்கள். அவனுடைய நால்வகை சேனைகளும் பாண்டவர்களின் அம்பு களால் பிளக்கப்பட்டு உடல்வேறு தலைவேறு ஆக இரத்த வெள்ளம் ஓட எங்கும் பிணக்காடாயின.
இதனைக் கண்ட சயிந்தவன் மிக்க கோபங் கொண்டு, அம்புகளைச் சரமாரி யாக தொடுக்க, தர்மபுத்திரர் அவற்றைத் தடுத்தார்; மீண்டும் தர்மபுத்திரர் அம்பு களை அவன் தேகம் புண்ணாகத் தொடுத்து பாஞ்சாலியை மீட்டார். ஓடி வந்த பீமார்ச்சுனர்கள், ”இவனைக் கொல்லாது விடோம்” என்று வீர முழக்கமிட்டு அவன் மேல் வேங்கையெனப் பாயலாயினர். இதைத் தர்மபுத்திரர் அறிந்து, ”தம்பியரே! இவன் நம் தங்கை துச்சளையின் கணவன். அவனைக் கொல்லாதீர். அவனை அழைத்து வாருங்கள்” என்று ஆணையிட்டார்.
உடனே பீமார்ச்சுனர்கள், தர்மபுத்திர ரையும். பாஞ்சாலியையும், நகுல சகாதேவரையும், தௌமியரையும் பர்ண சாலைக்கு அனுப்பி விட்டுச் சயத்திரனைத் தொடர்ந்து போயினர். சயத்திரதன் இந்த பீமார்ச்சுனர் தன்னை தொடர்ந்து வருகின்றார்கள் என்பதை அறிந்து அச்சம் கொண்டு, தேரை விட்டு இறங்கி ஓர் ஈச்சம்புதரில் ஒளிந்து கொண்டான். ஒளிந்த வனைக் கண்டு விட்டான் பீமன்; அவன் தலை மயிரைப் பற்றி இழுத்தான். கீழே தள்ளினான். பலங் கொண்ட மட்டும் கால்களால் உதைத்துத் தள்ளினான். அதனால் அவன் மயக்கமுற்றான். ஓடோடி வந்த அர்ச்சுனன் பீமன் செயலைக் கண்டான். அவனைப் பணிந்து “இவன் மயக்கமுற உதைத்தது முறையன்று; அண்ணனின் ஆணையும் அதுவன்று; அண்ணனின் வார்த்தையை மீறி விட் டாயே!” எனக் கடிந்து கொண்டான்.
பாண்டவர் தாசன்
மயக்க உணர்வு பெற்ற சயத்திரதன் மெல்ல உணர்வு பெற்று எழுந்தான். பீமன் தன் அர்த்த சந்திரபாணத்தால் சயத்திரதன் தலையில் பெண்களுக்கு ஐங்கூந்தல் என்றாற்போல ஐங்குடுமிகள் வைத்து அவனை விகாரப்படுத்தினான். பின்னர் அவனைப் பார்த்து ‘நீ உயிரோடிருக்க வேண்டுமென்றால் ஜனக் கூட்டங்களின் நடுவிலும், சபைகளின் நடுவிலும் ‘நான் பாண்டவர்தாசன்’ (பாண்டவர்களுக்கு அடிமைப்பட்டவன்) என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். அப்படிச் சொன்னால்தான் உன் உயிர் உன்னிடத்தில் இருக்கும். வெற்றி பெற்றவன் தோற்ற வனுக்கும் பிறன் மனைவியை விரும்பிய வனுக்கும் இப்படித்தான் செய்வார்கள் என்பதை அறிந்துகொள்” என்று கூற சயத்திரதனும் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொண்டான். பீமனும் ஜனக் கூட்டத்தின் நடுவிலும் சபை நடுவிலும் அவனைப் பாண்டவர் தாசன்’ என்று சொல்லச் செய்து அவமானப்படுத்தினான். பின்னர் அவனைக் கயிற்றால் கட்டி. தேரினில் ஏற்றி தர்மபுத்திரர் உறைகின்ற பர்ண சாலைக்கு முன் இழுத்து வந்து நிறுத்தி னான்.
பாஞ்சாலியின் புன்சிரிப்பு
அவ்வாறு நிறுத்திய பின், பீமார்ச்சுனர் தர்மபுத்திரரை நோக்கி, “அண்ணா! உங்கள் ஆணைப்படியே இந்தச் சயத்திரதனைக் கொல்லாது உயிரோடு கொண்டு வந்தோம் ‘ என்றனர். பின்னர் பீமார்ச்சுனர் தர்மபுத்திரரிடம், “இவன் பெயரைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் ” என்று சொல்ல, அவனும் தளர்ச்சியோடு ‘என் பெயர் பாண்டவர்தாசன்’என்றான். அதனைக் கேட்டு பாஞ்சாலியின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல மலர்ந்து பொலிவு பெற்றது, புன்சிரிப்பும் உற்றாள்.
தர்மபுத்திரர் சயத்திரனைக் கண்டு, அவன் இருக்கின்ற கோலத்தைப் பார்த்து தன் தம்பியர்களைக் கடிந்து கொண்டார். பின்னர் அவனைக் கட்டினின்று விடுவித்து, அவனது கண்ணீரைத் துடைத்து, “மைத்துனா’ பகுத்தறிவு கொண்ட நாம் இந்தக் கேடுகெட்ட செயலைச் செய்ய லாமா? தாய், தங்கை, தாரம் என்ற வேறுபாடு தெரியாமல், முறை தவறி நடந்து கொண்ட உனக்கும், ஐந்தறிவுடைய குரங்கு போன்ற விலங்கிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? எக்காலத்தும் யாவரும் தூற்றுகின்ற பெரும் பழியைப் பெற்றாயே! நீ செய்த இச்செயல் என்றைக்கும் உனக்கும் அவமானம்தானே! நன்றாகச் சிந்தித்துப்பார். இனியாவது திருந்தி வாழ் என்று பல அறிவுரை வார்த்தைகள் கூறி வழி அனுப்பினார்.
சிவனிடம் வரம்பெற்ற சயத்திரதன்
தர்மபுத்திரரால் கருணை கொண்டு விடு விக்கப்பட்ட சயத்திரதன் தான்பட்ட அவமானத்தை எண்ணி எண்ணி வருந்தி னான். அந்த வருத்தத்தைவிட பாண்டவர் களைப் பழிவாங்க வேண்டுமென்ற வெறியுணர்வுதான் அவன் உள்ளத்தில் வளர்ந்தது. அதனால் ஓர் அழகான சோலையை அடைந்து சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரியலானான். அப்பொழுது சிவபெருமான் தோன்றி, ”சயத்திரதா! உனக்கு என்ன வரம் வேண்டும்” என்றார். அதற்குச் சயத்திரன், பெருமானே! பாண்டவர்களைக் கொல்லும் படியான வரமும், அதற்கு வேண்டிய ஆயுதங்களும் தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவன் விரும்பிய படியே வேண்டிய ஆயுதங்களை கொடுத்த அவர், தானே அர்ச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்ததாலும், பாண்டவர்கள் கண்ண பிரானால் காக்கப்படுவதாலும் அவனை நோக்கி, ‘சயத்திரதனே! பாரதப் போரில் ஒரு நாள் அர்ச்சுனனைத் தவிர மற்றைய பாண்டவர் நால்வரையும் போர் செய்ய வொட்டாது தடுப்பாய் ” என்று வரமீந்தார். பின்னர் மறைந்தார். பாரதப்போரில் ஒரு நாள் அர்ச்சுனனைத் தவிர மற்றைய பாண்டவர்களை போர் செய்யவொட்டாது தடுப்பாய் என்று சிவபெருமான் கூறியதனால் பாண்டவர்கள் யாரையுமே அவன் கொல்ல முடியாது என்பது நிதரிசனமாயிற்று. வரங்களைப் பெற்ற சயத்திரதன் மகிழ்ச்சியோடு தன் நாடு அடைந்தான்.
பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலி யோடும் தெளமிய முனிவரோடும் காம்யக வனத்தில் வாழ்ந்து வந்தனர்.
மகாபாரதம் – 30 பாஞ்சாலியைக் கண்ட அவன், அவள் மீது மோகம் கொண்டான்… ஏன்…? Asha Aanmigam