ஸநாதனம் – ஒரு சவால்
அழியாதது
ஸநாதனம் எனும் ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு என்றும் உள்ளது என்பது பொருள். என்றும் உள்ளது எனும்பொழுது அழியாதது என்பது தெளிவு.
அழியாதது எனில், ‘ஆதி இல்லாதது, தொடக்கம் இல்லாதது, தோன்றாதது’ என்று புரிந்துகொள்ளலாம்.
ஏனெனில், தோன்றியவை அனைத்தும் அழியும், ‘பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்’ இது பொது நியதி.
மேலும், ‘மாறாதது’ என்றும் தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் மாற்றம் உள்ள அனைத்தும் அழியும்.
தொடக்கமும் முடிவும் இல்லாதது, மாறாதது, என்றும் உள்ளது எனப் பொருள்படும் ஸநாதனம் என்ற வார்த்தை ஹிந்து மதத்திற்கு உரியது.
ஹிந்து மதத்தின் அடிப்படை நூல் வேதங்கள். இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அழியாதவை. எனவே அவை ஸநாதனம்.
ஹிந்து மதத்திற்கு ஸநாதன தர்மம், வேதமதம் என்ற பெயர்களும் வழக்கில் உள்ளவைகளாகும்.
அழியாதது, மாறாதது என்பதைப் புரிந்துகொள்ள ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும்.
ஸநாதனம்
புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கும் முன்னும், கண்டுபிடித்த நேரத்திலும்,இப்பொழுதும் புவியீர்ப்பு விசை உள்ளது. இதை ஸநாதனம் எனலாம்.
நமது பாரத நாட்டு ரிஷிகளாகிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அழியாத மாபெரும் உண்மைகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன .
வேதத்தில் உள்ளவை யாரோ ஒருவரால் கண்டுபிடிக்கப் பட்டவை அல்ல.
முனிவர்கள் தங்கள் தவத்தின் மூலம் இறைவனோடு ஒன்றியிருக்கும் பொழுது கண்டவைகளே மந்திரங்கள்.
அம்முனிவர்களில் சிலர் உள்ளத்தில் மிக உயர்ந்த உண்மைகளை உணர்ந்தார்கள்.
வேறு சிலர் தங்கள் கண்களால் ஒளிமிக்க பொன் எழுத்துக்களில் மந்திரங்களைக் கண்டனர்.
இவ்வாறு தாங்கள் கண்டவற்றை அவர்கள் தங்கள் சீடர்களுக்குக் கூறினர். அச்சீடர்கள் அவர்களுடைய சீடர்களுக்குக் கூறினார்.
இவ்வாறு செவி வழியாகவே வந்த இந்த உண்மை களுக்குச் சுருதி என்று பெயர்.
தமிழில் எழுதாக்கிளவி என்பது பொருந்தும்.
வேதக்காரர்கள்
இத்தகு அழியா உண்மைகளைத் தொகுத்து, நான்காகப் பகுத்து, நான்கு வேதங்களாக வேதவியாசர் நமக்கு வழங்கினார்.
அவையே ரிக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்கள்.
இவைகளில் கூறப்பட்டுள்ள அழியாத ஸநாதன உண்மைகள் பலப்பல.
வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஹிந்துக்களை, ஸநாதனிகளைத்தான் வேதக்காரர்கள் என்று அழைப்பது பொருத்தமானது.
ஆனால், வேதக்காரர்களாகிய ஹிந்துக்கள், ஸநாதனிகள் வேதங்களைப் பார்ப்பதுமில்லை, படிப்பதுமில்லை.
இதனால்தான், அறிவிலிகள் ஹிந்துமதத்தைப் பல விதமாக இழித்துக் கூறினாலும், உண்மை அறியாததால் வேதக்காரர்கள் மௌனமாக எதிர்வினையாற்றாமல் இருக்கிறார்கள்.
ஸநாதன உண்மைகள்
வேதங்களில் கூறப்பெற்றுள்ள அழியாத ஸநாதன உண்மைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
I.ஓங்காரம்
பரம்பொருள் அசைவற்றிருந்தது. அதில் சலனம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஒலி எழுந்தது. அந்த ஒலியே ஓங்காரம். இது வேதம் கூறும் உண்மை.
அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளும் சேர்ந்து ஓம் என்ற சப்தம் வருகிறது. அனைத்து எழுத்துக்களும் இந்த ஓங்காரத்தினுள் அடங்கிவிடும்.
பரம்பொருளின் மிக அருகிலுள்ள வாசல் ஓம். ஓங்காரத்தை ஓதி இறைநிலை அடையலாம்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஜெபம் செய்தால் நல்ல எண்ணங்கள் தோன்றும். நினைவாற்றல் அதிகரிக்கும். இது ஸநாதன உண்மை.
II.ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம்
இது யஜுர் வேதத்தில் உள்ள ஈஸாவாஸ்ய உபநிஷ தத்தின் முதல் மந்திரத்தின் முதல் வரி.
இதன் பொருள் இறைவன் ( கடவுள் ) எங்கும் நிறைந்துள்ளார் என்பதாகும்.
கடவுள் எங்கும், எதிலும், எல்லாமுமாக உள்ளார் என்பது வேதம் கூறும் உண்மை.
எங்கும் நிறைந்திருக்கிறார் என்னும்போது கடவுளுக்கு உருவம் இருக்க வாய்ப்பில்லை.
ஓர் எல்லை இருந்தால்தானே உருவம் இருக்க முடியும்.
நமக்கு ஓர் உருவம் உள்ளது என்றால் நாம் எல்லைக்கு உட்பட்டவர்கள். இவ்வளவு உயரம், இவ்வளவு அகலம் என்ற எல்லைகள் இருப்பதால்தான் உருவம் உருவாகிறது.
எங்கும் நிறைந்திருந்தால் உருவம் இருக்க வாய்ப்பில்லை. எனவே கடவுள் உருவமற்றவர் என்பது தெளிவு.
இவ்வாறு கடவுள் எங்கும் நிறைந்துள்ளார் என்ற அழிக்க முடியாத ஹிந்து மதக் கொள்கைதான் ஸநாதனம்.
III. ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி டு
இது ரிக் வேத மந்திரம்.
ஒன்று பரம்பொருள், அறிஞர்கள் பலவாறு பகர்கிறார்கள் என்பது இதன் பொருள்.
ஸத் என்பதற்கு உள்ளது. உண்மை என்று பொருள்கள் உண்டு .
பரம்பொருள் ஒருவர்.நமக்குப் புரியும் வண்ணம் கூறுவதானால் கடவுள் ஒருவர், அறிஞர்கள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள்.
பல நாமங்களில், பல ரூபங்களில் ஹிந்துக்கள் கடவுளை வழிபடுகிறார்கள்.
எங்கும் நிறைந்தவராக, எல்லாமாக இருப்பது இறைவனே. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அணுக்களால் ஆனவை. அணுக்கள் உருவமற்ற சக்தி.
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மொத்த சக்தியைத்தான் நாம் இறைவன், பரம்பொருள், கடவுள் என்கிறோம்.
நம் முன்னோர்கள், ரிஷிகள், ஞானிகள், பக்தர்கள், பண்டிதர்கள் தங்கள் தவத்தால்,முயற்சியால், தங்கள் அனுபவத்தில் கண்டு, தெளிந்த ரூபங்களையும்,நாமங்களையும் எல்லோருக்கும் பயன்படும்படியாக உலகிற்கு உரைத்தார்கள்.
பரம்பொருள், பிரம்மம், பிரபஞ்சப் பேராற்றல் எந்த வடிவையும் எடுக்க வல்லது, எதையும் செய்ய வல்லது.
எல்லாம் செய்ய வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம்
– என்ற வரிகள் இதை நமக்கு விளக்கும். இதன் காரணமாகவே ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத பரம்பொருளை ஆயிரம் நாமத்தில், ரூபத்தில் வழிபடுகிறான் ஹிந்து, ஸநாதனி.
எங்கும் நிறைந்த உருவமற்ற பரம்பொருளை நாம் கணபதியாக, சிவனாக, விஷ்ணுவாக, தேவியாக, முருகராக, தர்மசாஸ்தாவாக… எந்த வடிவில் வழிபட்டாலும் அந்தந்த வடிவில் தோன்றி நமக்கு அருள்வார் அவர்.
உருவமில்லாத இறைவன் எவ்வடிவிலும் வருவார். அருள்வார் என்பது அழியாத, அழிக்க முடியாத உண்மை. இது ஸநாதனம்.
IV. ப்ரம்ம ஸத்யம் ஜகத் மித்யா
இதன் பொருள், பரம்பொருள் மட்டும் உண்மை; இந்த பிரபஞ்சம், உலகம் வெறும் தோற்றம் என்பதாகும்.
இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பது நாம் அறிந்ததே.
அணுக்களுக்கு உருவம் இல்லை. ஆனால் அணுக்களில் உள்ள நேர், எதிர், சம சக்திகள் (புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான்) பல விதங்களில் சேர்ந்து பல உருவமுடையதாக நமக்குக் காட்சி தருகின்றன.உருவமே இல்லாதவை. உருவங்களாகத் தோன்றுகின்றன.
திரையரங்குகளில் புரொஜக்டர்களிலிருந்து வரும் ஒளிக் கற்றைகள் பல உருவங்களை, அசைவுகளைத் தோற்றுவிப்பது போன்ற வெறும் தோற்றமே இப்பிரபஞ்சம்,உலகம். இதுவும் ஸநாதன உண்மை.
V. உலகின் உற்பத்தி
உலகின் உற்பத்தி குறித்து வேதத்தில் கூறப்பெற்றுள்ளது.
தைத்திரீய உபநிஷதத்தில்,
ஆத்மன: ஆகாச: ஸம்பூத : |
ஆகாசாத் வாயு: | வாயோரக்னி: | அக்னேராப: |
அத்ப்ய: ப்ருதிவீ | – எனக் கூறப்பெற்றுள்ளது.
இறைவனிலிருந்து ஆகாசம், ஆகாசத்திலிருந்து காற்று. காற்றிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து தண்ணீர், நீரிலிருந்து மண் எனப் பஞ்சபூதங்களின் தோற்றம் கூறப்பெற்றுள்ளது.
பஞ்சபூதங்களைத் தவிர இப்பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. தாவரங்கள், மனிதர்கள் என எல்லா உயிர்களும் பஞ்ச பூதங்களால் ஆனவை.
பஞ்சபூதங்களின் அடிப்படைத் தன்மைகளான ஓசை. ஊறு. ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை நாம் அறிய நம் உடம்பில் காது, தோல், கண், நாக்கு, மூக்கு என ஐந்து அறிகருவிகள் உள்ளன.
இவை ஐந்தும் செயலற்றுப்போனால், நாம் உலக விஷயங்கள் எதையும் அறிய இயலாமல், ஒரு மரக்கட்டை போன்ற நிலைக்குத் தள்ளப்படுவோம். இது மாறாத நிலையான ஸநாதன உண்மை.
இத்தகைய உண்மைகள்தான் ஸநாதனம். இவையே ஹிந்து மதக் கொள்கைகள்.
VI. இறைநிலை அடைவதே மனிதப் பிறவியின் இலக்கு
இப்பிறவி நமக்குக் கிடைத்திருப்பதே இறைநிலை அடையத்தான், தன்னை அறிதலே இறைநிலை அடைதல்.
தன்னை அறிந்து இன்பமுறவே வெண்ணிலாவே – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
– என்கிறார் வள்ளலார்.
“ஒரு பாதையின் வாயிலாகவோ, பல பாதைகளின் வாயிலாகவோ அல்லது எல்லாப் பாதைகளின் வாயிலாகவோ, இலக்கை எட்டிப் பிடியுங்கள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இறைநிலை அடையப் பல வழிகளைச் சநாதனம் கூறுகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
1. பக்தியோகம்
இறைவனுடைய புகழைப் பாடுதல், சிந்தித்தல் மற்றும் வழிபாடு மூலமாக இறைவனை அடையலாம்.
அ. இறைவனைத் தன்னிகரற்றவர் என்ற அளவில் சிந்தித்து நாமஜெபம், பூஜைகள் மூலம் அடையலாம் என்பது சாந்த பாவனை.
பிரகலாதன், மார்க்கண்டேயன் போன்றோர் சாந்த பாவனையில் வழிபட்டு இறையருள் பெற்றார்கள்.
ஆ. இறைவன் என் எஜமான், நான் அவனுடைய தொண்டன் என்பது தாஸ்ய பாவனை.
ஆஞ்சனேயர், நந்தனார் போன்றோர் தாஸ்ய பாவனையால் இறைநிலை அடைந்தார்கள்.
இ. இறைவன் என்னுடைய குழந்தை என்பது வாத்சல்ய பாவனை.
யசோதா, ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றோர் வாத்சல்ய பாவனையில் வழிபட்டு நிறைநிலை அடைந்தார்கள்.
ஈ. இறைவன் என்னுடைய தோழன் என்பது சக்யபாவனை.
அர்ஜுனன், சுந்தரர் போன்றோர் சக்ய பாவனையால் பலன் அடைந்தார்கள்.
உ. இறைவன் என்னுடைய கணவன் அல்லது காதலன் என்பது மதுர பாவனை.
மீரா. ஆண்டாள் போன்றோர் மதுரபாவனையால் பரமனை அடைந்தார்கள்.
இவைபோன்ற பாவனைகள் மூலமாக நாம் விரும்பும் வடிவில் இறைவனைக் காணலாம். இறைநிலை அடையலாம். என்பது ஸநாதன உண்மை.
2. ஞானயோகம்
பரம்பொருள் பற்றிய தத்துவத்தைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் மூலமாக ‘நான் இந்த உடம்பல்ல, நான் ஆத்மா,நானே பரம்பொருள்’ என்ற நிறைநிலையை அடையலாம் என்கிறது ஸநாதனம்.
நம்மில் உயிர், உடல் என இருகூறுகள் உள்ளன. இதில் உடம்பை விட்டு உயிர் பிரிந்ததும், “ஐயோ அவர் போய்விட்டார்” எனக் கூறுகிறோம்.
உடல் அங்கேதான் இருக்கும். ஆயினும் உயிர் பிரிந்ததும், “அவர் போய்விட்டார்” என்பதிலிருந்து நாம் உடம்பல்ல; உயிர்தான் என்பது தெளிவாகும்.
இந்த உடம்பே அழிவது. உயிர் அழியாதது.
கீதையில் வரும்,
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைனம் தஹதி பாவக: |
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோசயதி மாருத: I – என்ற
பாடல் மூலம், ஆயுதங்கள் நம்மை வெட்டாது, தீ எரிக்காது. தண்ணீர் நனைக்காது, காற்று உலர்த்தாது என்பன போன்ற உண்மைகளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தோம் எனில், நம்மை உணர்ந்தோம் எனில் அது முக்திநிலை.
மரணத்திற்குப் பிறகு முக்தி என்பதல்ல. உடலில் இருக்கும் பொழுதே நான் உடம்பல்ல ஆத்மா, பரமாத்மா என்ற அனுபவத் தெளிவு வந்தால் அதுவே முக்திநிலை.
3.கர்மயோகம்
செய்யும் செயல் அனைத்தும், அதன் பயன் அனைத்தும் இறைவனுக்காக எனப் பலனில் பற்றின்றி தொண்டு செய்து இறைநிலை அடையலாம்.
நரேன் (சுவாமி விவேகானந்தர்) முதலியோர் ஸ்ரீராம கிருஷ்ணருடன் அமர்ந்திருந்த பொழுது, ஜீவ தயா என்ற வார்த்தையைக் கேட்ட உடன் ஸ்ரீராமகிருஷ்ணர், ந தயா, சேவா என்கிறார் .
உயிர்களிடம் தயை காண்பிக்கும் தகுதி,உரிமை இறைவனுக்கே உரியது. நாம் உயிர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்’ என்பதே இதன் கருத்து.
நரேன் அறையை விட்டு வெளியே வந்து, “நான் இன்று ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். காலம் வரும் பொழுது இந்த உயர்ந்த கருத்தை உலகெங்கும் எடுத்துக் கூறுவேன்” என்றார்.
அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: |
அஹமாதிஸ்ச மத்யஞ் ச பூதானாம் அந்த ஏவ ச ||
“நான் எல்லா உயிர்களிலும் இருக்கிறேன்” என்கிறார் கீதையில் பகவான்.
எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதை உணர்ந்து சேவை செய்ய வேண்டும். “நம் கண்முன் நடமாடும் மனிதர்க ளுக்குள் இருக்கும் இறைவனைக் காண முடியாதவர்கள் ஆலயக் கருவறைக்குள் இருக்கும் திருவுருவில் உறையும் இறைவனைக் காண்பது எவ்வாறு இயலும்” என்று கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இந்த உண்மைதனை உணர்ந்து எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல், ‘அனைவரிலும் உறையும் இறைவனுக்குத் தொண்டு செய்கிறோம்’ என்ற மனப்பான்மையுடன் செயல் புரிந்தால் முக்திநிலை அடையலாம்.
4. ராஜயோகம்
உடலையும், மனத்தையும் அதற்குரிய சரியான வழிகளைக் கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்தால் மனம்
ஒருமைப்பட்டு உண்மை நிலையை உணரலாம். ராஜயோகத்தில் அஷ்டாங்கயோகம் (எட்டுப்படிகள்) என்ற
ஒரு பகுதி உள்ளது. அதனைப் பார்ப்போம்.
அ. யமம் – இது ஐந்து பெரிய விரதங்களாம். அவை,
i). அஹிம்சை (துன்பம் செய்யாமை )
ii). ஸத்யம் (உண்மை பேசுதல்)
iii). அஸ்தேயம் (திருடாமை )
iv). பிரம்மச்சரியம் (புலனடக்கம் )
v). அபரிக்ரஹம் (தேவைக்கு மேல் ஏற்காதிருத்தல்)
ஆ. நியமம்
இது நாம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து ஆசாரங்களாம். அவை,
1).சௌசம் (அகப்புறத் தூய்மை)
ii). சந்தோஷம் (மகிழ்ச்சி,திருப்தி)
iii). தவநெறி (புலன்களை வாட்டல்)
iv). ஸ்வாத்யாயம் (ஞானநூல்களைக் கற்றல்)
V). ஈஸ்வர ப்ரணிதானம் (இறைவழிபாடு)
இ .ஆசனம்
‘யோகம்’ என்ற சொல்லுக்கு, மனத்தை ஒன்றுபடுத்தி இறைவனில் நிறுத்துவது என்பதும் பொருள். மனம் ஒன்றுபடும் போது இறையனுபவம் உண்டாகும். மனம் ஒன்றுபட் வேண்டுமாயின் மனதைப் பற்றியுள்ள மாசுகளாகிய காமம், வெகுளி, மயக்கங்கள் மறைய வேண்டும்.
அவைகளை ஓரளவு அழிப்பதற்கான விரதங்களும், ஆசாரங்களுந்தான் முதல் இரண்டு நிலைகளில் விளக்கம் பெற்றுள்ளன. அத்தகைய சித்த சுத்தியைப் பெற்றவன் குருவின் உபதேசப்படி உடம்பைத் திடப்படுத்துவதற்காக ஸித்தம், பத்மம் முதலிய ஆசனங்களைப் பயின்று நெடு நேரம், அனாயாசமாக உறுதியாய் அமர்ந்து பிராணாயாமம், தியானம் ஆகியவை பயில வேண்டும். அவ்வாறு ஒருநிலையில் அமருவதே ஆசனம்.
ஈ.பிராணாயாமம்
ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் மூலம்
பிராணாயாமம் முறைப்படி பயில்வதால் மனத்தில் எஞ்சியுள்ள மாசுகள் அகலும்; தாரணை, தியானங்கள் பண்ணப் பெரிதும் உதவும். ரேசகம் என்றால் மூச்சை அளவாக வெளியே விடுதல். பூரகம் என்றால் மூச்சை அளவாக உள்ளே இழுத்தல். கும்பகம் என்றால் மூச்சை அளவாக அடக்கி நிறுத்துதல்,இவற்றைச் செய்து பழகினால் மூக்குச் சரடு போட்டுக் காளையைக் கட்டுப்படுத்துவது போன்று மனத்தை எளிதில் அடக்கலாம். இவையெல்லாம் குருவினிடத்தில்தான் பழக வேண்டும்.
உ. பிரத்யாஹாரம்
நமது மனம் எப்போதும் ஐம்பொறிகள்
வழியாக வெளியேறிக் கிளம்பி அலைகிறது. ஐம்பொறிகளாகிய வாயில்களையும் அடக்குவதுதான் பிரத்யாஹாரம். ஏகாந்தமும், தூயதும் ஆகிய இடத்தில் அமர்ந்து யோகம் பழகினால் பிரத்யாஹாரம் தானே அமையும்.
ஊ. தாரணை
குறிப்பிட்ட ஒரு பொருளில் மனத்தைச் சற்று நேரம் நிறுத்திப் பழகுவது தாரணை. ஒரு மந்திரத்திலோ, வடிவத்திலோ மனத்தை நிறுத்தலாம். அப்பொருள் உடம்பின் உள்ளேயோ, வெளியேயோ இருக்கலாம். எண்ணெய் ஒழுக்கு போல் மனம் வெகுநேரம் ஒரு பொருளை எண்ணிக் கொண்டிருப்பது. குருவின் உபதேசப்படி அமைத்துக் கொள்ளலாம்.
எ.தியானம்
முன்கூறிய பொருளில் இடைவிடாது குறிப்பிட்ட நேரம் மனம் நிலைபெற்றிருப்பது தியானம்.
ஏ.ஸமாதி
எட்டாவது நிலை ஸமாதி எனப்படும். தியானப் பொருளின் உருவத்தை ஒழித்துவிட்டு அதன் கருத்தை (நினைவை) மட்டும் தியானித்தால் அது ஸமாதி எனப்படும்.
மேற்கூறிய பயிற்சிகளால் அஷ்டமா ஸித்திகள் வந்த டையும். ஆன்ம போதத்தால்,அவைகளையும் நிலையற்றவை எனத் தள்ளிச் சென்றால் ஸமாதி என்ற பிரம்மானுபூதி உண்டா கும். அவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை; பேரின்பநிலை அதுவே.
ஸமாதியில் இரண்டு வகைகள் உண்டு. அவை
அ. ஸவிகல்ப ஸமாதி, ஆ. நிர்விகல்ப ஸமாதி.
ஸவிகல்ப ஸமாதியில் தியானிப்பவனும், தியானிக்கப்படும் பொருளும் உண்டு. அதாவது தான் வேறு, ஆண்டவன் வேறு என நினைக்கும் பேதம் உண்டு. அதனை, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் உவமை மூலம் விளக்குகிறார். “கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும் பண்டங்களை ஒருவன் காணமுடியும்; எடுத்து அருந்தி இன்புற முடியாது. அதுபோல ஸவிகல்ப ஸமாதியில் ஒரு யோகி இறைவனது ஒளி வடிவைக் காணத்தான் முடியும். இறைவன் மயமாக, இறைவனே தானாக ஒன்றமுடியாது”.
ஆனால், நிர்விகல்ப ஸமாதியில் தானும், பிரம்மமும் ஒன்றே என்ற அத்வைத அனுபூதியைப் பெறுகிறான். அவனது எல்லா வாசனைகளும், பந்தங்களும் அற்றுப்போகின்றன. அதுவே உயர்வற உயர்ந்த தனிநிலை. இதனைக் கைவல்ய நிலை என்பர்.
5.சைவ சித்தாந்த வழி
சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் மூலமாக ஸாலோக (இறை உலகில்), ஸாமீப (இறைவன் அருகில்), ஸாரூப (இறைவனின் உருவில்), ஸாயுஜ்ய (இறைவன் மயமாக) நிலைகளாகிய இறைநிலையை அடையலாம் என்பதும் ஸநாதனமே.
VII.மஹாவாக்கியங்கள்
வேதங்களில் ஜீவாத்ம பரமாத்ம உறவைத் தெரிவிக்கின்ற அனைத்து வாக்கியங்களும் மஹா வாக்கியங்கள் எனப்படும்.
ஆயினும் ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு வாக்கியத்தை அவ்வேதத்தின் மஹாவாக்கியமாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. அதன்படி,
ரிக்வேதம் – ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம
யஜுர் வேதம் – அஹம் ப்ரஹ்மாஸ்மி
ஸாம வேதம் – தத்வமஸி
அதர்வண வேதம் – அயமாத்மா ப்ரஹ்ம
இந்நான்கின் பொருள்,
- உணர்வே (அறிவு ) பிரம்மம்
- நானே பிரம்மம்
- அது நீ ஆகிறாய்
- இந்த ஆத்மா பிரம்மம்.
அனைத்தும் பரம்பொருளே என்பதுதான் இவ்வாக்கி யங்களின் கருப்பொருள்.
கடவுள், பிரம்மம் எங்கும் நிறை சக்தி என்ற கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால் ஓரளவு புரியும்.இதனை முழுமையாகப் புரிய ஆழ்ந்த ஆராய்ச்சி அறிவு அவசியம்.
இதுவும் அழியாத உண்மை, ஸநாதனம்.
VIII.வினைக் கோட்பாடு
ஹிந்து சமயத்தின் மிகச்சிறந்த கோட்பாடுகளில் ஒன்று மறுபிறப்புக் கொள்கை. இது ஆதாரபூர்வமான விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கை.
இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை நாம் தினசரி வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்கிறோம். சுவரில் பந்தை எறிந்தால் அது திரும்பி வருவதும், சிறிய மிதவையில் நின்று கொண்டு ஆகாயத்தில் கல் எறிந்தால் மிதவை பின்நோக்கி நகர்வதும் எதிர்வினைக்கு உதாரணங் களாகும்.
கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கணாதரின் வைசேஷிக சூத்திரத்தில் ஒவ்வொரு வினைக்கும் சம அளவிலான எதிர்வினை• (For every action there is an equal and opposite reaction) என்ற கருத்து மிகத் தெளிவாகவே கூறப்பெற்றுள்ளது. ஆனால் இது கி.பி .18 -ஆம் நூற்றாண்டில் வந்த ஐசக் நியூட்டன் அவர்கள் பெயரில் ஒரு பௌதிக நியதியாக பிரபலமாக்கப் பெற்றுள்ளது.
பௌதிகத்திற்குப் பொருந்துகின்ற இந்த நியதி இறைவன் படைப்பிலுள்ள அனைத்துக்கும், சிறப்பாக மனிதனுக்கும் பொருந்துகின்றது. இந்த அடிப்படையில் வேத விற்பன்னர்களான நம் ஞானிகள் கண்டுபிடித்துச் சொன்னதுதான் வினைக் கோட்பாடு.
அதன்படி, நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பிரதிபலனாக நன்மையும், தீயசெயலுக்குப் பிரதிபலனாகத் தீமையும் விளைகின்றன. இதன் உண்மையை ஓர் எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம்.
வினைப்பயன் இல்லாதிருக்குமானால் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்துமே இறைவன் படைப்பில் வேறுபாடு இன்றித்தான் பிறக்க வேண்டும். ஆனால், குழந்தைகள் பிறக்கும்போது சில குருடாகவும், சில செவிடாகவும்,சில ஆரோக்கியமாகவும், சில நோஞ்சானாகவும்,சில ஏழை வீட்டிலும், சில பணக்காரர் வீட்டிலும் பிறக்கின்றன. எவ்விதக் காரணமும் இன்றிப் பிறக்கும்போதே குழந்தைகளைப் பாரபட்சத்துடன் கடவுள் உருவாக்குகிறார் என்பது கடவுளை நேர்மையற்றவராகக் காட்டிவிடும். ஆனால், அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் முதல்வனாகி, விருப்பு வெறுப்பற்று இருக்கின்ற இறைவன் நேர்மையற்றவராக இருக்க முடியாது.
ஆகவே, குழந்தைகள் பிறக்கும்போது ஏதோ ஒரு காரணத்தினால்தான் மாறுபாடுகளுடன் பிறக்கின்றன என்று உணர்ந்து, அது ஒவ்வொருவரும் முன் பிறவிகளில் செய்த வினையின் பலன்தான் என்று கண்டுபிடித்தனர்.
மேலும், மறுபிறவி இல்லை என்னும் கொள்கை உடைய மதத்தினர். “ஒரு பிறவியில் நாம் செய்யும் நன்மை தீமைகளின் அடிப்படையில் நமக்கு நித்திய சொர்க்கம், நித்திய நரகம் கிடைக்கும்” என்று கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி ஒருவன் தீமையே செய்யவில்லை எனில் அவனுக்கு நித்திய சொர்க்கம் அதாவது நிரந்தர ஆனந்தம் கிடைக்கும் என்பதே அவர்கள் கொள்கை.
எனில், ஒரு குழந்தை பிறந்ததும் இறந்ததெனில் அது தீமையே செய்ய வாய்ப்பில்லை. எனவே அதற்கு நிரந்தர சொர்க்கம் கிடைக்குமா?.
மறுபிறவிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மற்ற சமயத்தினர் இத்தகையக் கேள்விகளுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்கத் தெரியாமல் விட்டுவிட்டனர்.
ஆனால், ஹிந்து சமயம் இதற்குச் சரியான விடை தருகிறது.
மனிதனின் ஏற்றத்தாழ்வுகளுக்கும், பிறப்பிற்கும் காரணம் வினைகளே என்கிறது.
இப்படிப்பட்ட மனிதனின் பிறப்பிற்குக் காரணமான வினைகளை ஹிந்துக்கள் மூன்றாகப் பிரித்தனர்.
பல பிறவிகளிலும் செய்த நன்மை தீமைகளின் சேமிப்பைச் சஞ்சித வினை எனவும், இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதற்காக எடுத்துக்கொண்ட வினைப்பயனை பிராரப்த வினை எனவும், இந்தப் பிராரப்த கர்மாவை அனுபவிக்கின்ற கால கட்டத்தில் நாம் சம்பாதிக்கின்ற வினைப்பயனை ஆகாமிய வினை என்றும் பிரித்தனர் .
இங்கே,நாம் செய்கின்ற வினைக்குத் தகுதியான வினைப்பயன் ஜடம். ஆதலால் அவ்வினைப்பயன் தானாகவே நம்மை வந்து அடையாது. ஆகவே, எந்த வினைக்கு எந்தப் பலனை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்னும் முடிவைச் சகல சக்தியும் படைத்த இறைவன் ஒருவனே எடுக்க முடியும்.
இதையே கண்ணபரமாத்மா கீதை அத்யாயம் : 10.33- இல்,
அக்ஷராணாம் அகாரோSஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச |
அஹமேவாக்ஷய கால: தாதாஹம் விச்வதோமுக: ||
இப்பாடலில் வரும் தாதாஹம் – என்பதற்கு வினைப்பயனை அளிப்பவன் நானே (பகவானே) என விளக்கம் அளிக்கிறார் ஆதிசங்கரர்.
இதில் நாம் செய்கின்ற வினைகள் நல்லவை ஆனாலும், தீயவையானாலும் இரண்டுமே பலனைக் கொடுத்து நம்மைக் கட்டுப்படுத்துபவைதான். நமது ரிஷிகள், “மனிதன் அனைத்து வினைகளிலிருந்தும் விடுபட்டு வினைப்பயன்கள் இல்லாத. மறுபிறப்பு இல்லாத நிலையை அடைவதே முக்தி ஆகும்” என்றனர்.
வினையே செய்யாமல் யாரும் வாழமுடியாது. வினை செய்யும்போது வினைப்பயன் உருவாகியே தீரும் .
அப்படியானால் முக்தி அடைவது எப்படி? சஞ்சிதம்.
பிராரப்தம், ஆகாமியம் ஆகிய மூன்று வினைகளும் இல்லாது அழிந்தால்தான் முக்தி கிடைக்கும்.
ஜப, தியானங்களின் மூலமாக மனம் ஒன்றுபட்டு உலகை மறந்தநிலை வரும்பொழுது சஞ்சித வினை முழுவதும் அழிந்து போகும்.
பிராரப்த வினை அனுபவித்துதான் அழியும். இனி மீதியிருக்கும் ஆகாமியம் நம்மைப் பற்றாமலிருக்க என்ன செய்வது?
இதற்கு ஓர் அற்புதமான வழியைப் பகவத் கீதையில் பகவான் கண்ணன் கொடுக்கிறார். அதுதான் பற்றில்லாமல் வினையைச் செய்வது, அதாவது ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்பது. வினையின் பலன் கிடைக்காது என்பதில்லை, பலன் கிடைத்தே தீரும். ஆனால், பயனின் மீது நமக்குப் பற்று இல்லாதபோது அந்த வினையின் பயன் நம்மை வந்து அணுகாது.
இவ்வாறு மூன்று வினைகளையும் அழித்து முக்தி பெறலாம் என்பது அழிக்க முடியாத உண்மை – ஸநாதனம்.
IX. இருப்பதை அழிக்க முடியாது
ஸ்ரீமத் பகவத்கீதையில்,
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: |
உபயோரபி திருஷ்டோSந்தஸ் த்வனயோஸ் தத்வதர்சிபி: ||
“இருப்பதை அழிக்க முடியாது. இல்லாததை ஆக்க முடியாது, தத்துவத்தைத் தெரிந்தவர்கள் இதனைப் புரிந்து கொள்வர்” என்பது இதன் பொருள்.
அன்றே ஹிந்துமத சாஸ்திரங்கள் சொன்ன உண்மை களில் சிலவற்றைத் தற்கால விஞ்ஞானமும் கண்டுபிடித் துள்ளது. அவற்றில் மேலே சொன்ன கீதைபாடலும் ஒன்று.
மொத்த பிரபஞ்ச சக்தி என்றும் மாறாமல் உள்ளது என்ற இந்த உண்மை ஸநாதனம்.
X. வாய்மையே வெல்லும்
ஸத்யமேவ ஜயதே – வாய்மையே வெல்லும்.
இது முண்டக உபநிஷத வாக்யம் . இதையே பாரத நாட்டின் லட்சிய வாக்காக நமது அரசு முத்திரையில் இணைத்துள்ளோம்.
ஆனால் பாரதியர்களுக்குத் தற்பொழுது வாய்மை வெல்லும் என்பதில் நம்பிக்கை இல்லை, காரணம் மெக்காலே கல்வித் திட்டம்.
1835 -இல் பாரதம் வந்த மெக்காலே பாரத நாடு முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுத் தன்ராணிக்கு, “பாரதநாடு முழுக்கச் சுற்றிப் பார்த்தேன்.திருடர்கள் இல்லை, பிச்சைக்காரர்கள் இல்லை. இந்தச் சூழலில் மதமாற்றமோ,நாட்டைப்பிடிப்பதோ நடக்கவே நடக்காது. ஆனல் நான் வகுத்துள்ள கல்வித் திட்டத்தை இங்கு நடைமுறைப் படுத்தினால் இவர்கள் பண்பாட்டை அழித்து பாரத் நாட்டை நாம் பிடித்துவிடலாம். உங்கள் அனுமதி தேவை” எனக் கடிதம் எழுதுகிறான்.
அனுமதி கிடைத்ததும் 1836 -இல் மெக்காலே கல்வித் திட்டம் பாரத நாட்டில் புகுத்தப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. அதன் விளைவு உண்மை பேசி வளமுடன் வாழ முடியாது என நாம் அனைவரும் நம்புகிறோம். இந்நிலை மாற வேண்டும். வாய்மையே வெல்லும் என்பதை நம்பி அதன்படி மக்கள் வாழ்ந்து வளம்பெறும் பண்டைய காலம் வரவேண்டும்.
இது போன்ற இன்னும் சில ஸநாதனக் கருத்துக்களைப் பார்ப்போம்.
1. தர்மோ ரக்ஷதி ரக்ஷித: தர்ம ஏவ ஹதோ ஹந்தி
அறத்தைக் காத்தால் அது நம்மைக் காக்கும். அறத்தை அழித்தால் அதுவே நம்மை அழிக்கும்.
2.உன்னை நீயே உயர்த்திக்கொள், உன்னைத் தாழ்த்திக் கொள்ளாதே! நீயே உனக்கு நண்பன்,நீயே உனக்கு எதிரி.
3.தீதும் நன்றும் பிறர் தர வாரா.
4.நம்மைச் (ஆத்மாவை) சுற்றி
i.தூல தேகமாகிய அன்னமய கோசம்
ii. பிராணனும், கர்மேந்திரியங்களும் சேர்ந்த பிராணமய கோசம்
ii. மனமும் ஞானேந்திரியமும் சேர்ந்த மனோமய கோசம்
iv. புத்தியும் ஞானேந்திரியமும் சேர்ந்த விஞ்ஞானமய கோசம்
v.பிராணவாயுவும் சுழுத்தியும் சேர்ந்த ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்து கோசங்கள் உள்ளன .
ஸநாதனம் – ஒரு சவால் தொடரும்……