வெண்மதி சூடிய ஓங்கார சொரூபனான பரமேசுவரனின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய தேஜஸின் வெம்மையைத் தாங்க முடியாமல் அந்தப்புரம் நோக்கி ஓடினாள் பார்வதிதேவி!
அங்ஙனம் ஓடியபோது அம்பிகையின் பாதங்களை அலங்கரித்திருந்த நவரத்தின அணி ஆபரணம் அறுபட்டு இறைவன் காலடியருகே வீழ்ந்து சிதறியது. அலறி அடித்துக் கொண்டு அந்தப்புரம் ஓடும் அம்பிகை இதைக் கவனிக்கவில்லை. இதுவும் ஈசனின் ஒரு திருவிளை யாடல் அன்றோ!
அந்தப்புரம் வந்த தேவியார், அக்னியின் வெம்மை தணிந்ததும் சற்று மன ஆறுதல் கொண்டார்கள்.
எம்பெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளையும் வெப்பம் தணித்து சரவணப் பொய்கையில் எம்பெருமான் சேர்த்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு பார்வதி பிரமித்தார்கள். அமரர்களுக்கு ஆறுமுகக் குழந்தையைத் தரிசிக்கும் பாக்கியம் முதலில் கிட்டியதே என்று சினங் கொண்டார்கள்.
தமக்குப் புத்திரன் முதலில் தோன்றாதவாறு செய்த தேவாதி தேவர்கள் மீது சினம் கொண்ட சங்கரி, “தேவாதிதேவர்கட்டு புத்திரர் பிறக்காதிருக்கக் கடவது” என்று சாபம் கொடுத்தாள். சக்தியின் சாபம் தேவர்களை மன வருத்தம் கொள்ளச் செய்தது.
சக்திதேவியார் ஈசனின் திருமுன் சென்று அருகில் அமர்ந்தார்கள். பயம் தெளிந்து பவ்வியமாக பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஈசுவரியைப் பார்த்து, ஈசுவரன் “சங்கரி! எங்கு சென்றாய்?” என்று ஒன்றும் புரியாதவர் போல் கேட்டார்.
”பிரபோ! தீப்பொறிகள் வெம்மை தாங்க மாட்டாது அந்தப்புரம் சென்றேன்!”
“பார்வதீ! கங்கையைத் திருசடை தாங்கிய இந்த சங்கரன் பக்கத்தில் இருக்க அனலென்ன செய்யும்?” என வேடிக்கையாகச் சொன்னார்.
புன்னகை முகத்தில் அரும்ப, சக்திதேவியை அரவணைத்துக் கொண்டார் அரவணிந்த அண்ணல்.
சிவனும் சக்தியும் ஆனந்தத்தின் திருவாய் – சத்தியத்தின் உருவாய் அமர்ந்த காட்சி அகில லோகத்தையும் இன்பத்தில் உறையச் செய்தது.
இந்த சமயத்தில் சிவன் சேவடிகள் அருகே சிதறுண்ட கிடந்த நவரத்தின மணிகள் கண்ணைக் கூசும் வண்ணம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அங்ஙனம் தம்முன் சிதறுண்ட கிடக்கும் நவரத்தின மணிகளை இறைவன் திருநோக்கம் செய்தார்.
இறைவனின் அருட்பார்வையால் நவரத்தினங்கள் அந்தந்த ரத்தினங்களின் வண்ண நிறத்தைக் கொண்டு ஒன்பது காளிகா தேவியர்களாக ஈசுவரியின் அம்சத்தோடு அவதரித்தார்கள்.
மாணிக்கவல்லி, முத்துவல்லி, புட்பராகவல்லி, கோமேதகவல்லி, வைடூரியவல்லி, வைரவல்லி, மரகதவல்லி, பவளவல்லி, இந்திரநீலவல்லி என்று அந்தந்த ரத்தினங்களின் வண்ண நிறத்தைக் கொண்டு திருநாமம் பெற்றார்கள். இறைவியையும் வணங்கி நின்றார்கள். இறைவனையும்
கமலமலரின் மென்மையான இதழ் போன்ற கருவிழிகளும், தீர்க்கமான நாசியும் கொண்டு அழகுத் திருமகளாய்த் தோற்றம் தரும் ஒன்பது கன்னியர் வயிற்றில் ஈசனின் அருட்பார்வையால் கர்ப்பம் உண்டானது.
இதைக் கண்ணுற்ற பார்வதிதேவியின் முகம் சிவந்தது. கண்கள் கோபத்தால் உக்ரமானது.
“கன்னியர்களே! வீணாக கர்வம் கொள்ளாதீர்! நீங்கள் கர்ப்பம் தரித்தாலும் குழந்தை பிறக்கக் காலதாமத மாகும்!”
காளிகாதேவியர், சங்கரியின் சாபத்தால் சஞ்சலம் கொண்டனர். கருத்தரித்தும் குழந்தை பிறக்க முடியாது போன ஏக்கம் மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது.
பர்வதகுமாரியின் சாபத்தினாலும், மோகத்தின் மிகுதியாலும் நவகன்னியர் தேகத்தில் வியர்வை இடைவிடாமல் பெருகிக் கொண்டே இருந்தது.
பரமசிவன் நவசக்தியர்களை விழி மலர்ந்தார். விமலர் விழிமலர் அருளிலே நவசக்தியரின் வியர்வைத் துளியிலிருந்து இலக்ஷம் வீரர்கள் தோன்றினர்.
அவ்வாறு தோன்றிய லக்ஷம் வீரர்களும் மேனியில் திருவெண்ணீறும், ருத்ராக்ஷ மணி மாலைகளும், பொன்னாடையும், வீரக் கரங்களிலே வாளும், கேடயமும் கொண்டு பரமதேஜஸுடன் விளங்கினர்.
லக்ஷம் வீரர்கள் விமலரின் திருநாமத்தைத் துதி செய்த னர். பரமசிவன் அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.
“வீரமைந்தர்களே! அசுரர்களை அழிக்க சரவணப் பொய்கையில் எமது குமாரன் அவதரித்துள்ளான். அவனுக்கு நீங்கள் உற்ற துணைவர்களாக-படைகாக்கும் பராக்கிரமசாலியர்களாக விளங்குவீராகுக!”
இறைவனின் பேரருளால் பெருமை கொண்ட லக்ஷம் வீரர்கள், ஈசனையும், ஈசுவரியையும் தொழுது பணிந்து சிவநாமத்தை ஜபித்த வண்ணம் சரவண பொய்கைக்குச் சென்றனர்.
இதே சமயத்தில் இறைவியின் சாபத்தால், கருவுற்றிருந்த நவசக்தியர் குழந்தை பிறக்காத வேதனையில் அவதியுற்றனர். சாபவிமோசனத்திற்காக அல்லும் பகலும் சிவனையும், சக்தியையும் சிந்தையில் இருத்தி அருந்தவம் புரிந்தனர்.
கர்ப்பத்தில் சிசுக்கள் வளரத் தொடங்கின. பூபாரம் தாங்க முடியாது துயருறும் பூமாதேவிபோல் நவசக்தி கன்னியர், கர்ப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். வயிற்றில் வளரும் சிசுக்கள் சிவனைத் தியானித்துக் கொண்டிருந்தன.
காளிகாதேவியர் கங்காதீசுவரரான ஈசனிடம் பிரார்த்தித்தனர். “தேவியின் சாபத்தை போக்கி தங்களுக்கு நற்கதி அருள வேண்டும்!” என்று மன்றாடினர். ஈசன் நவசக்தியர் மீது கருணை கொண்டார்.
ஈசன் கடைக்கண்ணால் பார்வதியைத் திருநோக்கம் செய்தார். ஈசனின் கருணை விழியில் அகம் குளிர்ந்த அம்பிகை பேரானந்தம் பொங்க, புன்முறுவல் பூத்தமுகத்துடன், ”என் அம்சத்தில் பிறந்த கன்னியரே! உங்களுக்குத் திருவருள் புரிந்தோம்!” என்று அநுக்கிரஹித்தாள்.
சாபம் நீங்கப் பெற்ற நவகன்னியர் ஒன்பது பேரும் ஒன்பது மைந்தர்களைப் பெற்றனர்.
நவசக்தியரின் கருவிலே உருவான வீரர்கள் கருவெனும் ருஹத்தை விட்டகன்று சிவமெனும் பேரொளிக் கோவிலில் பிரகாசம் பொங்கத் தோன்றினர்.
ஸ்ரீ திருமாலின் நாபிக் கமலத்தில் நின்றும் நான்முகன் தான்றினாற் போல், நவசக்தியர் நாபிக்கமலத்தில் இருந்து நவவீரர்கள் உதித்தனர்.
மாணிக்கவல்லி – வீரவாகுதேவர்
முத்துவல்லி – வீரகேசரி
புட்பராகவல்லி – வீரமகேந்திரர்
கோமேதகவல்லி – வீரமஹேசுவரர்
வைடூரியவல்லி- வீரபுரந்தரர்
மரகதவல்லி – வீரமார்த்தாண்டர்
பவளவல்லி – வீராந்தகர்
இந்திரநீலவல்லி – வீரதீரர்
வைரவல்லி – வீரராக்ஷசர்
ஒன்பது வீரர்களும் நவசக்தியர் போன்ற அழகும், அணி ஆபரணங்களும் பூண்டு நல்ல பொலிவோடும், வீரத்தோடும், தீரத்தோடும், வலிமையோடும் காணப்பட்டனர். நெற்றியில் திருவெண்ணீறும் மேனியில் ருத்ராக்ஷ மாலைகளும் தரித்து சிவனருட் செல்வர்களாக எட்சி அளித்தனர்.
நவசக்தியர் தங்கள் புதல்வர்களுடன் ஈசனையும், சுவரியையும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர்.
இறைவன் தேவியிடம், “நவசக்தியர் பெற்றெடுத்த இவ்வீரப் புதல்வர்கள் நமது நந்திகணத்தவர்கள். நமது குமாரன் சூரனை சம்ஹாரம் செய்யப் போகும் போது நம் குமாரனுக்கு உற்ற துணைவர்களாக விளங்குவர்!” என்று அநுக்கிரஹித்த ஈசன் ஒன்பது வீரர்களுக்கும் “ஓம்” என்ற திருவெழுத்து பொறித்த வீரவாளினை பரிசளித்தார்.
“குமாரர்களே! நீங்கள் ஒன்பது பேரும் லக்ஷம் வீரர்களோடு சேர்ந்து வாழ்வீர்களாகுக!”
சிவபெருமான் நவசக்தியரையும், அவர்கள் பெற்றெடுத்த நவவீரர்களையும் லக்ஷம் வீரர்களையும் தங்கள் அருமைப் புதல்வன் முருகனுக்கு உற்ற துணைவர்களாக – உடன் பிறந்தவர்களாக இருக்கும் படியான பேரருளை வர்ஷித்து, சக்தியுடன் ரிஷபத்தில் அமர்ந்து தங்கள் குமாரனைக் காண பொய்கைக்குப் புறப்பட்டார். சரவண
சிவகணத்தவர்கள் இசை முழக்கம் செய்ய தேவர்களும் பிரணவங்களும் சிவநாமம் ஒலிக்க – விஞ்சையர் பண் இசைக்க – தேவாதி தேவர்கள் கற்பக மலர்களை வர்ஷிக்க – சூரிய சந்திரர்கள் வெண்பட்டுக் குடைபிடிக்க – பூதர்கள் வெண்சாமரம் வீச – ரிஷப கொடிகள் காற்றில் அசைந்து ஆட – அமரர்கள் ஆலவட்டம் சுற்ற – சுத்தசிவயோகியர் தூபதீபாராதனைகள் காட்ட – கந்தர்வ மகளிர் நடனமாட- தேவகன்னியர் பாலிகை ஏந்தி வர – ரிஷபாரூட மூர்த்தியான பரமேசுவரன் சரவணப் பொய்கையை வந்தடைந்தார்.
ரிஷப வாஹனத்தில் எழுந்தருளிய பிராட்டியாரும், பெருமானும் சரவணப் பொய்கையில் கார்த்திகை மகளிர் சிவபாலனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்க்கும் அழகைக் கண்டுகளித்தனர். அம்பிகையின் திருமேனியில் தாய்ம்மை பொங்கிப் பூரித்தது.
ஈசன் ரிஷபத்தில் நின்றும் இறங்கி உமையுடன் சரவண பொய்கை அருகே சென்றார். கார்த்திகைப் பெண்கள் சிரமீது கரம் உயர்த்தி அம்பிகையைச் சேவித்தனர்.
பெற்றோர்களைப் பார்த்து ஆறு குழந்தைகளும் தாமரை முகம் மலரப் புன்னகை பூத்தன.
முக்கண்ணன் இறைவியை அன்போடு அழைத்து, “பர்வதராஜகுமாரி! நமது குமரனை எடுத்து வருவாயாக!” என்று அன்பு கட்டளையிட்டார்.
பார்வதி பொய்கையில் இறங்கி ஆறு குழந்தை களையும் ஆனந்தம் பொங்க நோக்கினாள். ஆரத் தழுவி ஆறு குழந்தைகளையும் தம் இரு திருக்கைகளாலும் வாரி அணைத்து கொஞ்சினாள்.
அன்னையின் அரவணைப்பால் ஆறு குழந்தைகளும் திவ்ய தேஜசுடன் கூடிய ஆறுமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட குழந்தையாகக் காட்சி அளித்தது.
“கந்தன்” என்று பெயர் பெற்றார் சிவக் கொழுந்து!
கந்தம் என்றால் கலத்தல் – ஒன்று சேர்க்கப்பட்டவர் என்று பொருள்.
சிவசக்தி கடாக்ஷத்தால் ஆறு முகமும் ஒரு திருமுகமாகி பன்னிரெண்டு திருக்கரங்களும் இரு திருக்கரங்களாயின.
மஹேஸ்வரி மைந்தனை உச்சி மோந்து தமது திருமுலைப்பாலை நவரத்தினங்கள் பதித்த பொற் கிண்ணத்தில் ஏந்தி, பாலூட்டினாள்.
ஞானப் பிழம்பான கந்தன், அருள் மயமான சக்தியின் திருஞானப் பாலை உண்டு ஞானமும் அருளும் பெற்றார் கருணையே உருவான கந்த கடவுள் ஆனார்.
பார்வதிதேவியார் கந்தனை இறைவனிடம் கொடுத்தாள்.
இறைவன் பெருங்கருணையோடு அணைத்து மகிழ்ந்தார். ரிஷப வாகனத்தில் சிவனும் சக்தியும் நடுவிலே சிவசக்தி பெற்ற செந்தூர்க் குமரனும் எழுந்தருளினர்.
உண்மையே உருவான இறைவன் – அறிவே வடிவான இறைவி – இன்பமே அன்பான முருகன் இணைந்து எழுந்தருளிய திவ்ய காட்சி பகலும், இரவும் அந்திப் பொழுதும் கலந்தாற் போலிருந்தது.
உண்மை, அறிவு, இன்பம் (சத்து-சித்து -ஆனந்தம்) எனும் வேதப் பொருளை உணர்த்தும் சோமாஸ்கந்த மூர்த்தியாக – சச்சிதானந்த சொரூபனாக சோமசுந்தரக் கடவுள் தோன்றினார்.
உமை, கந்தன் இவர்கள் இருவரோடும் கூடிய மூர்த்தியாக விளங்கியதால் எம்பிரான் சோமாஸ்கந்த மூர்த்தி என்னும் திருநாமம் பெற்றார்.
இக்கோலாகல காட்சியைக் கண்ட அமரர்கள் ஆனந்தப் பெருக்குடன், “கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! ஆறுமுகனுக்கு அரோகரா!” என்றெல்லாம் சரணம் சொல்லி பரவசம் பூண்டு பூமழைப் பொழிந்தனர்.
சிவபெருமான் அன்பர்களுக்கு அருள் செய்தார்.
“அமரர்களே! அச்சத்தை அகற்றுங்கள். இனிமேல் அசுரர்க்கு அஞ்சி நடுங்க வேண்டாம். எமது மைந்தன் கார்த்திகேயன் உங்களுக்கு எல்லாம்வல்ல உய்யும் வழியை அருளவே அவதரித்துள்ளான்.
கார்த்திகைப் பெண்களால் எமது குமாரன் வளர்க்கப்பட்டமையால் கார்த்திகை அவனுக்கு உகந்த நந்நாளானது! கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவர்.”
தேவர்களும், பூதகணத் தலைவர்களும், கின்னரர் களும், கிம்புருடர்களும் சென்னி மீது கரம் குவித்து, “துயரத்திலிருந்து விடுபட்டோம்!” என்று ஆனந்தத்தோடு ஆரவாரம் செய்தனர். ஆடிப்பாடி மகிழந்தனர்.
அதுசமயம் வசிஷ்ட முனிவரின் பேரப்பிள்ளைகளும், பராசரமுனிவர்களின் புத்திரர்களுமான குப்தர், அனந்தர், நந்தீ, சதுர்முகன், சக்ரபாணி, மாலி எனும் ஆறு முனிவர்களும் சோமஸ்கந்த மூர்த்தியின் திருமுன் பணிவோடு வந்து நமஸ்கரித்து நின்றனர்.
பார்வதிக்கு ஈசன் ஆறு முனிவர்களைப் பற்றிய விருத்தாந்தங்களைக் கூறலானார்.
“தேவீ! இவர்கள் அறுவரும் வசிஷ்டரின் பௌத்திரர்கள். ஒரு சமயம் இவர்கள் இந்த சரவணப் பொய்கையில் நீந்திக் களித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களின் அஜாக்ரதையால் தடாகத்திலுள்ள மீன்கள் மாண்டு போயின.
அத்தடாகத் தருகே தவம் செய்து கொண்டிருந்த இவர்கள் தந்தையார் பராசரருக்கு புதல்வர்கள் மீது கடும் கோபம் வந்தது. பாவப்பட்ட மீன்களைக் கொன்ற பாதகச் செயலுக்கு இவர்களை மீன்களாகும் படி சபித்தார். முனிவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து தந்தையிடம் சாபவிமோசம் தந்தருளும்படி வேண்டினர்.
பராசரர் புதல்வர்கள் மீது பச்சாதாபம் கொண்டு. “அம்பிகையின் ஞானப்பாலுண்டு சுய உருவம் பெறுவீர்! அது வரை இந்த பொய்கையில் மீன்களாகவே இருக்கக் கடவீர்!” என்று சாப விமோசனம் சொன்னார் பராசரர்!
நம் செல்வனுக்கு நீ ஊட்டிய ஞானப்பால் பொய்கையில் சிந்தியது. அந்த ஞானப்பாலை உண்ட ஆறு மீன்களும் சாபவிமோசனம் பெற்று முன் போல் சுய உருவம் பெற்றனர். ” என்று திருவாய் மலர்ந்தார் ஈசன்.
சிவனும் சக்தியும் முனிபுத்திரர்களை அநுக்கிரஹம் செய்து கடாக்ஷித்தனர்.
ஈசன் முனிபுத்திரர்களை அன்போடு திருநோக்கம் செய்து, “முனிவர்களே! நீங்கள் திருப்பரங்குன்றம் சென்று தவத்தைத் தொடருங்கள். நம் குமரன் அவ்விடம் வந்து உங்களுக்கு அருள் செய்வான்” என்று அருளிச் செய்தார். முனிபுத்திரர்களும் சோமஸ்கந்த மூர்த்தியைத் துதி பாடி பணிந்தனர். ஈசன் கயிலைக்கு எழுந்தருளினார்.
கந்த புராணம் – 8 வெம்மையைத் தாங்க முடியாமல் அந்தப்புரம் நோக்கி ஓடினாள் பார்வதிதேவி Asha Aanmigam