பார்வதிக்கு வரம் அளித்து அருள் புரிந்த அம்பலவாணர், கயிலை மலை ஞான பீடத்தில் ஜோதி சொரூபனாய் எழுந்தருளியிருந்தார். ஈசன் தமது திருமண வைபவத்தை மனுஷ்ய சம்பிரதாயப்படி நடத்தத் திருவுள்ளம் கொண்டார். அந்தப் பொறுப்பான சடங்கினை நிறைவேற்ற தகுதி வாய்ந்தவர்கள் சப்தரிஷிகள் என்ற எண்ணத்தில், அவர்கள் தம் முன்னே வரவேண்டும் என்று நினைத்தார்.
அங்ஙனம் ஈசன் நினைத்த மாத்திரத்திலேயே அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கிரசர் எனும் சப்தரிஷிகள் ஈசன் திருமுன் வந்து நின்றனர். ஈசனின் திருநாமத்தை ஜபித்து,துதி செய்தனர்.
“நித்தியமாகவும், நிர்மலமாகவும் தரிசனம் தரும் நீலகண்டப் பிரபோ! மூன்று காலங்களிலும் முத்தொழில் புரியும் முழுமுதற் பரம்பொருளே! சப்தரிஷிகளின் பணிவான நமஸ்காரங்கள். ஐயனின் ஆணையைக் கேட்க சித்தமாய் நிற்கின்றோம். தேவரீர் திருவாய் மலர்ந்து எங்களை ஆட்கொள்வீர்!” என்று பிரார்த்தித்தனர்.
சதாசிவ பிரம்மமான பரமேசுவரன் சப்தரிஷிகளைத் திருக்கண் மலர்ந்து, “சப்தரிஷிகளே! நான் பர்வதராஜனின் குமாரத்தி பார்வதியைப் பாணிக்கிரகணம் செய்து கொள்ளப் போகிறோம். அதனால் நீங்கள் எழுவரும் சதிபதியாய் இமவான் இருப்பிடம் சென்று எனக்குப் பெண்பேசி முடித்து, முகூர்த்த நாள் குறித்து வருவீராகுக” என்று அன்பு கட்டளை இட்டார்.
ஈசனின் அமுதமொழி கேட்டு சப்த ரிஷிகள் இனம் தெரியாத பேரானந்த பெருவெள்ளத்தில் மிதந்தனர். இப்பேர்ப்பட்ட பெரும் பாக்கியம் தங்களுக்கு கிட்டியதே என்று எண்ணி பொங்கி பூரித்தனர். ஈசனின் ஆசி பெற்று மேற்கொண்டு நடக்க வேண்டிய ஏற்பாட்டைத் துவங்கினார்.
சப்தரிஷிகள் பர்ணசாலை சென்று தங்கள் பத்தினி களிடம் ஈசன் விவாஹ வைபவத்தைப் பற்றிக் கூறினர். முனி பத்தினியர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் அளவிலா உற்சாகம் ஊஞ்சலாடியது.
சப்தரிஷிகள் தங்கள் பத்தினிமார்களுடன் ஆகாச மார்க்கமாக இமவானின் நகரமான ஒளஷதிபிரஸ்தம் சென்றடைந்தனர்.
ஆகாச மார்க்கமாக வருகை தரும் சப்தரிஷிகளைத் தூரத்தே பார்த்துவிட்ட இமவான் தனது மனைவி மேனையுடன் மேளவாத்தியங்கள் முழங்க, வேதம் ஒலிக்க – பூரண பொற்கும்ப மரியாதைகளுடன் எதிர் கொண்டழைத்து ஆசனமளித்து புண்ணிய தீர்த்தத்தால் பாத பூஜை புரிந்தனர்.
“உங்கள் வருகையால் எங்கள் சுற்றமும் நட்பும் பெருமை கொள்கிறது. உங்களைப் போன்ற ரிஷிகளின் வருகையால் எங்கள் நாட்டில் மும்மாரி பொழிகிறது. உங்களைப் போன்ற பக்த சிரோன்மணிகளின் பாதம் படுவதால் எங்கள் நகரத்தில் பாபங்கள் நீங்கி புண்ணியம் பெருகி சுபிக்ஷம் நிலைக்கிறது. உங்களால் எங்கள் நாட்டிற்கு பெருமை.”
மன்னரின் இத்தகைய உபச்சார வார்த்தைகளால் உளம் மகிழ்ந்த சப்தரிஷிகள், “இமவான் பெற்ற பேறு இந்த வையத்தில் வேறுஎவரும் பெறமுடியாது. மன்னா! தாங்கள் எடுத்த பிறவி அனைத்திலும் புண்ணியத்தையே செய்துள்ளனர். அதனாலன்றோ உமக்கு பகவானுக்கே பெண் கொடுக்கும் பாக்கியம் கிட்டியுள்ளது. எங்களது வருகையைப் பற்றி ஆங்கிரஸ முனிவர் விளக்கமாகச் சொல்வார்.” என்றனர்.
ஆங்கிரஸ முனிவர் மன்னர்க்குத் தங்கள் வருகையைப் பற்றிக் கூறலானார்.
”பர்வதராஜா! நாங்கள் ஈசனுக்குப் பெண் கேட்டு வந்துள்ளோம். கயிலாசபதியான பரமேசுவரன் உங்கள் புத்திரி பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.”
சப்தரிஷிகளின் வருகையின் நோக்கத்தைத் தெரிந்து கொண்ட இமவானும் மேனையும் அம்ருதம் பருகிய ஆனந்தம் கொண்டனர். இருவரும் சப்தரிஷிகளைப் பணிந்து போற்றினர்.
”தவசிரேஷ்டிரர்களே! அகில லோகநாயகரான ஈசனின் திருவுள்ளத்தை என்னென்பது. பரமனை மருமகனாக அடைய என்ன தவம் செய்தோமோ!” என்று சொல்லித் தங்கள் புத்திரி பார்வதியை அழைத்து வந்து முனிவர் களின் ஆசி பெறச் செய்தனர்.
ஆங்கிரஸ முனிவர் இமவானை மேலும் புகழ்ந்து, “மன்னா! இந்த விவாஹவைபவத்தால் நீ தன்யனானாய். பிறவிப் பயனைப் பெற்றோம். ஆயிரம் அசுவமேத யாகம் செய்த புண்ணியத்தை நீயும் உன் மனைவியும் அடைந் தீர்கள். மூவுலகும் உங்கள் புகழைக் கொண்டாடும். எங்கள் ஈசனுக்கு உங்கள் பெண்ணைக் கொடுக்க பரிபூரண சம்மதம் தானே! இது சம்பிரதாயத்திற்காக கேட்கப்படும் கேள்வி.” என்றார்.
ஆங்கிரஸ முனிவர் இங்ஙனம் கேட்டதும் இமவானின் பட்ட மகிஷி மேனையின் முகம் சற்று மாறியது. முனிவர்கள் இதை கவனிக்கத் தவறவில்லை.
முனிவர்கள் மேனையைப் பார்த்து “நீங்கள் ஏதோ சொல்ல எண்ணுவதில் தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது” என்று வினவினர்.
மேனை தயக்கத்துடன், “தவமுனிவர்களே! நான் சற்று குழப்பம் அடைந்துள்ளேன். அதற்குக் காரணம் ஈசனின் மகிமை மலையத்தன என்றாலும், அவரது சில லீலைகள் புரியாத புதிராக உள்ளது. தக்ஷனைக் கொன்றது போன்ற சிவனுடைய சம்ஹார லீலைகள் என் மனதை சஞ்சலப் படுத்துகிறது.
மேலும் ஈசன் புலித்தோல் ஆடை அணிவதும். பாம்பை அணிகலனாக பூண்டிருப்பதும், மயானத்தை வாசஸஸ்தலமாக கொள்வது போன்ற விஷயங்களும் எமக்குப் புதிராக உள்ளது. மாயை என் மனதை மயக்குகிறது. எதனால் எனக்கு இந்த சலனம் என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் என் உள்ளம் தெளிவு பெற வேண்டும்” என்று வினவினாள்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்டரின் மனைவியான அருந்ததிதேவி மேனையின் மனதை மாற்றுவதில் ஈடுபட்டாள்.
அமரர் குலம் காக்க ஆலகாலவிஷம் உண்ட ஈசனின் பிரபாவத்தைச் சொன்னாள்.
இலக்ஷக்கணக்கான தேவர்களையும் தவசியர்களையும் கொடுமைப் படுத்திய அரக்கர்களை சம்ஹாரம் செய்து அகில லோகத்தையும் ரட்சித்த வீர தீர பிரபாவங்ளைச் சொன்னாள்.
அருந்ததி மேனைக்கு ஞான மார்க்கங்களை எடுத்துச் சொல்லலானாள். இவற்றை எல்லாம் கேட்டு மேனையின் மனம் தெளிந்தது. சப்தரிஷிகளிடம் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். முனிவர்கள் மேனைக்கு நல்லாசி நல்கினர்.
பரமசிவன், பார்வதி திருமண ஏற்பாட்டில் அனைவருடைய சம்மதத்தையும் பரிபூரணமாக பெற்ற முனிவர்கள் முகூர்த்த நாள் குறித்து, இமவானிடம் விடை பெற்றுக் கயிலைக்குப் புறப்பட்டனர்.
ஆகாச மார்க்கமாக கயிலையை வந்தடைந்த சப்தரிஷிகளும், பத்தினிமார்களும் ஈசனைத் தொழுது பணிந்து முகூர்த்த நாள் மற்றும் திருமணம் பற்றிய நல்ல செய்தியைச் சொல்லினர்.
ஈசன் முகம் மலர்ந்தார். சப்தரிஷிகளையும் அவர்தம் பத்தினிமார்களையும் அநுக்கிரஹித்து அனுப்பிவைத்தார்.
இமவான் உற்றார், உறவினர், அறவோர், அருந் தவசியர், அரண்மனை அதிகாரிகள் அனைவரையும் அழைத்து பார்வதியின் திருமணத்திற்கான ஏற்பாடு களைத் தொடங்கினார்.
இமவான் தனது புத்திரன் மைனாகனை அழைத்து, பார்வதியின் திருமணத்தைப் பற்றிச் சொல்லி, தேவதச்சனான விசுவகர்மாவை அழைத்து பிரம்மாண்ட மான கல்யாண மண்டபம், தங்கும் விடுதிகள், அரங்க மேடைகள் போன்ற பற்பல மணி மாளிகைகளைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆணையிட்டான். மைனாகன் தேவதச்சனை அழைத்து வந்து அனைத்து ஏற்பாடுகளையும் தானே முன்னின்று நடத்தினான்.
மயன் பார்ப்போர் மதிமயங்கும் வண்ணம், அதி அற்புதமான இலக்ஷ யோசனை நீள அகலம் கொண்ட அலங்கார அழகுமணி மண்டபம் அமைத்தான். சித்திரங்கள்,சிங்காரப் பதுமைகள் என்று ஆங்காங்கே மயன் தனது கலைவண்ணத்தில் கை வண்ணத்தைக் காட்டினான். நகரில் நோக்கு மிடமெல்லாம் கண்ணைப் பறிக்கும் ஒளி மயம். சிறு சிறு அருவிகள் அற்புதமான வளைவுகள், விளையாட்டு அரங்கங்கள், அகன்ற திண்ணைகள் என்று எங்கு பார்த்தாலும் அலங்காரம், ஐசுவரியம்.
மண்டபத்திலுள்ள தூண்களைத் தட்டினால் இசை எழுப்பும்! பளிங்கு சுவர்கள் நோக்கினால் முகம் தெரியும். பிரதிபலிக்கும் நிலைக் கண்ணாடி அறைகள். இங்ஙனம் மயனின் வேலைப்பாட்டை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
மண்டபத்துத் தூண்கள் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு பிரகாசமாகக் காணப்பட்டன.
பார்ப்போர் வியக்கும் அளவிற்கு மேகத்தை முட்டும் மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும் வண்ண வண்ண ஒளி சிந்தின.
சாலைகளும், சோலைகளும், கோசாலைகளும் பார்க்க பிரமிப்பை உண்டாக்கியது. கோசாலையில் பசுக்கள் இலக்ஷக்கணக்கில் கட்டப்பட்டிருந்தன.
தவசியர், வேதியர், தங்குவதற்கு கங்கை நதிதீரம் தெய்வீகப் பொலிவுடன் கூடிய பர்ணசாலைகள் கட்டப்பட்டிருந்தன. காமதேனு, கற்பக விருக்ஷம் கல்யாணத்திற்கு வருவோர்க்கும், போவோர்க்கும், தங்குவோர்க்கும் அனைத்து செல்வத்தையும் வர்ஷிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மொத்தத்தில் இமவான் நிர்மாணித்த நகரம் பார்ப்ப தற்கு அஷ்ட ஐசுவரியங்களும் பொங்கி பிரவாஹம் எடுக்கும் சௌபாக்கிய லோகமாக விளங்கியது.
இவற்றை எல்லாம் பார்த்து மகிழ்ந்த இமவான். மயனுக்கு பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து கெளரவப்படுத்தினான். வருணனுக்கு வெள்ளம் தானம் என்பது போல் மயனுக்கு எற்கு இவை எல்லாம்!
இப்படியாகக் கல்யாணத்திற்கான ஏற்பாட்டின் பெரும் பகுதியை முடித்துவிட்ட இமவானும் மேனையும் கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சிவக் கோயில் திருவாயில் வந்த இமவான் திருவாயிலில் காவல் புரியும் நந்தி தேவரைப் பணிந்து, அனுமதி பெற்று உள்ளே சென்றார்.
நவரத்தின பொன்தட்டில் பூ, பழம், நவரத்தினங்கள், குங்குமம்,மஞ்சள் நிறைந்திருக்க, பகவானின் பாதகமலங்களில் சமர்ப்பித்து தம்பதியர் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்து எழுந்தனர்.
ஈசன் மனமகிழ்ச்சியோடு அவற்றை ஏற்றுக் கொண்டார்.
”பர்வதராஜா’ சர்வமங்களம் உண்டாகட்டும்! திருமணத்திற்கு முன்னதாகவே யாம் எமது சிவகணத்த வர்கள் சூழ உனது நகருக்கு வருவோம்” என்று அருள் புரிந்தார் பரமேசுவரன்.
இமவான், மேனை மீண்டும் ஐயனை நமஸ்கரித்து புறப்பட்டனர். அவர்கள் விடைபெற்றுச் சென்றதும் ஈசன் நந்தி தேவரை அழைத்து, “நந்தி! நமது திருமணத்தில் கலந்து கொள்ளவதற்கு ருத்ர கணங்கள், தேவர்கள் நம்முடன் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வும் ” என்று ஆணையிட்டார்.
நந்தி நிஷ்டையில் அமர்ந்தார். திருமணத்தில் கலந்து கொள்ளப் போகிறவர்களை உள்ளத்திலே கொண்டு மானசீகமாக அழைப்பு விடுத்தார்.
காலாக்கினிருத்ரர், கூர்மாண்டருத்ரர் என்று பல கோடி ருத்ர கணத்தவர். முப்பத்து முக்கோடி தேவர்கள், திருமால், நான்முகன், இந்திரன், பிரஹஸ்பதி, சப்தரிஷிகள், அசுரர், சுக்கிராசாரியார், சூரிய, சந்திரர், முனிவர், நாகர், அசுவனி தேவர், அஷ்டவசுக்கள், திக்கு பாலகர்கள், ஏகாதச ருத்ரர்கள், நவக்கிரஹ தேவர்கள் கந்தர்வர், அப்ஸரஸ், கின்னர், கிம்புருடர், வித்தியா தரர்கள், மஹோதரர்கள், ஹாஹா, ஹுஹு எனும் தேவ லோக இசை வல்லுனர்கள், தும்புரு, நாரதர், அதிதி, திதி, தனு, கத்ரு, அருந்ததி, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, ஸ்வதா, ஸ்வாஹ, மதி, த்ருதி, லக்ஷ்மி, சரஸ்வதி என்று தேவ மகளிர் அவைரையும் கயிலைக்கு வரச் செய்தார் நந்தி.
அனைவரும் சிவக் கோவிலில் ஈசனின் திருமுன் கூடினர். ஈசன் அனைவரிடமும் திருமணத்தைப் பற்றிய ஏற்பாட்டைச் சொல்லி மகிழ்ந்தார்!
தேவாதிதேவர்கள் சிவநாமத்தைப் பதினான்கு லோகங்களும் ஒலிக்கும் வண்ணம் கோஷித்தனர். எல்லோரும் கல்யாணத்திற்குப் புறப்படுவதற்கான ஏற்பாட்டைத் துவங்கினர்.
சங்கநிதி, பதுமநிதி சகல லோகத்தவருக்கும் அணிமணி, ஆடை, ஆபரணங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தன.
பரமேசுவரன் பிரம்மாதி தேவர்களின் விருப்பத்திற்கு இணங்கத் திருக்கோலம் கொண்டார்.
பொன்னாற் மேனியில் அணிந்திருந்த புலித்தோல் வஸ்திரம், பாம்பணிகள் முதலியவற்றைக் களைந்தார். பொன்பட்டு வஸ்திரம், நவரத்தின அணி மணி ஆபரணங்கள் தூய திருமேனியில் சாத்திக் கொண்டார்.
கும்போதரன் குடைபிடிக்க, கந்தர்வ மகளிர் சாமரம் வீசினர். பொற்பாதக் குறடுகள் திருப்பாதகமலங்களில் அலங்கரிக்க ரிஷபவாஹனத்தில் எழுந்தருளினார். மூவுலகும் திரண்டு வர திரு உலா புறப்பட்டது.
வேதம் ஒலித்தது ! கீதம் இசைத்தது! “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கரா சம்போ மஹாதேவா! சாம்பசதாசிவா!” போன்ற கோஷங்கள் திக்கெட்டும் ஒலித்துக் கெண்டே இருந்தன
சங்கு, கொம்பு, காஹளம், பேரீ, முரவம்,துர்யம், துந்துபிகள், டிண்டிமம் போன்ற வாத்தியக் கருவிகள், வீணை – புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகள் ஏககாலத்தில் எண்திசையும் பரவியது.
வீதி எங்கும் கஸ்தூரி குழம்பால் பூசி பன்னீர் தெளித் திருந்தனர். வெண்கொற்றக் குடையும் ரிஷபகொடியும் திருவீதி உலாவில் அழகிற்கு அழகு செய்தன.
ருத்ரகன்னியர் நாட்டியம் ஆடினர். பிரதம கணங்கள் தண்டம் ஏந்தி வந்தனர்.
எங்கும் பூ மழை பொழிந்து கொண்டே இருந்தது.
ஈசனின் திருவீதி வந்தடைந்தது. உலா ஓஷதிபிரஸத நகரை
வேதகோஷங்களும், வாத்திய ஓசையும் இமவான் நகரத்தை பெருமைப் படுத்தியது.
சிவபெருமானை இமவானும் மேனையும் ராஜ மரியாதைகளுடன் வரவேற்று திருமாளிகைக்குள் எழுந்தருளச் செய்தனர். பொன்மணி ஆசனத்தில் ஈசனை எழுந்தருளச் செய்து பாதபூஜை செய்தனர்.
இத்தருணத்தில் இமய மலை குலுங்கியது. இமயபர்வதம் சிறுகச் சிறுக தாழே அழுந்திக் கொண்டே இருந்தது. அதனால் தென்திசை உயர, வடதிசை தாழ்ந்தது. திருமணத்திற்கு வருகை தந்தோர் திக்குமுக்காடினர். அச்சத்தால் அலறினர், பயத்தால் நடுங்கினர்.
இதுவும் அந்த ஈசனின் திருவிளையாடல்தான் என்பதனை எவரும் அறிந்திலர்! ஈசன் அன்பர்களைக் காக்க அருள் செய்தார். அருகே நின்று கொண்டிருந்த நந்தியை விளித்தார். நந்தி பணிவோடு ஈசன் எதிரில் வந்து நின்றார்.
ஈசன் நந்தியைத் திருநோக்கம் செய்து, “நந்தீ! இக்கணமே அகஸ்தியரை நம்முன் அழைப்பாய்!” என்று அன்பு கட்டளை இட்டார்.
நந்திதேவர் தியான நிலையை மேற்கொண்டு, மானசீகமாக அகஸ்தியரை அழைத்தார். அடுத்த விநாடி அகஸ்தியர் ஈசன் திருமுன் பிரசன்னமானார்.
அகஸ்தியர் ஈசனை வலம் வந்து நமஸ்கரித்து சிரமீது கரம் உயர்த்தி பணிவோடு நின்றார்.
ஈசன் அகஸ்தியரைத் திரு நோக்கம் செய்து “அகஸ்தியா’ நீ இப்பொழுதே தென் திசைக்குச் சென்று பொதிகை மலையில் இருப்பாயாக. உன்னால் பூமி சமமாகும் ” என்று சொன்னார்.
ஐயனின் ஆணையை ஏற்றுக் கொண்ட போதிலும் அகஸ்தியர் மனதில் ஓர் வேதனை! அதனை ஈசனிடம் சமர்ப்பித்தார்.
”மகாபிரபோ! இந்த எளியவனுக்கும் தேவரீர் திருமணத்தைத் தரிசித்து மகிழ வேண்டும் என்ற ஆசை உண்டல்லவா?”
கண்களில் நீர் மல்க, உடல் விதர் விதர்ப்ப விண்ணப்பித்த அகஸ்தியரைத் திருநோக்கம் செய்த ஈசன், “அகஸ்தியா” பொதிகை மலையில் இருந்து கொண்டே எமது திருமணத்தை உனது ஞானதிருஷ்டியால் பார்க்கும் படியான ஓர் சக்தியை அளித்தோம் ” என்று ஆறுதல் சொல்லி அநுக்கரஹித்தார். அகஸ்தியர் ஈசனின் ஆணையை நிறைவேற்றப் புறப்பட்டார்.
அகஸ்தியர் தென்திசை வந்து பொதிகை மலையில் திருப்பாதம் பதித்ததும் பூமி சமமானது. திருமணத்திற்கு வந்தோர் ஆரவாரம் செய்தனர், வெற்றி முழக்கமிட்டனர்.
திருமணச் சடங்குகள் ஆரம்பமானது! நான்முகன் அலங்காரத்திற்கான அணி மணி ஆபரணங்களைத் தங்க தாம்பாளத்தில் வைத்து ஈசன் திருமுன் சமர்ப்பித்தார்.
“சுந்தரரான கயிலை பெருமானே! பிரம்மாதி தேவர்களின் சமர்ப்பணமான இந்த நவரத்தின அணி மணி ஆபரணங்களையும் தேவரீர் திருமேனியில் சாத்திக் கொள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
ஈசன் மனம் மகிழ்ந்து ஆபரணங்களை அணிந்து கொள்ள இசைந்தார். சதுர்முகன் சந்தோஷித்து ஆபரணங்களை இறைவனுக்குச் சாத்தி மகிழ்ந்தார்.
வட்டநிலா வடிவு கொண்ட செந்தாமரைமுகம் வட்ட கருவிழிகள் – கொவ்வைப் பழம் போன்ற செக்க சிவந்த அதரங்கள் – சங்கு போன்ற கண்டத்தில் ஆலகால நஞ்சின் நீலநிற அடையாளம் – திவ்யமான பேரொளி பொங்கும் அணி மணி ஆபரணங்களால் அகன்ற மார்பில் புரளும் அழகு – பொன்பட்டு வஸ்திரங்களாலும், அணி மணி ஆபரணங்களினாலும் சர்வாலங்கார பூஷிதராய்த் திருத்தோற்றம் அளித்த பரமேசுவரன் கோடிக் கண்ககான மன்மதனுக்கு நிகரான பிரம்ம தேஜஸை பெற்றார்.
இப்பேர்ப்பட்ட சௌந்தரிய சாமுத்ரிகா லக்ஷணத்துடன் கூடிய சுந்தரப் பொலிவுடன் வந்த ஈசனைக் கண்டு பெண்கள் மதி மயங்கினர்.
“ஈசன் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஈசனால் தான் ஓர் கௌரவம் என்று கூறினர். வைத்த விழி வாங்காமல் ஈசனையே பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பல கோடி!
திருவீதி உலாவரும் ஈசன் திருமண மண்டபத்தின் திருவாயில் வந்தடைந்ததும் மேனை தேவமகளிர் சூழ்ந்து வர, ஈசனை வணங்கி வரவேற்று, அவரது பங்கஜ மலர்ப்பாதங்களைப் பயபக்தியுடன் பாலாபிஷேகம் செய்து மலர் சாத்தி பூஜித்தாள்.
இப்பேர்ப்பட்ட தேவாதி தேவனை- ராஜாதி ராஜனை -அழகு சுந்தரனைப் பற்றி தவறாக ஐயம் கொண்டோமே என்று எண்ணி ஒரு கணம் வேதனைப்பட்டாள் மேனை! திருமாலும், நான்முகனும் திருவாயில் வந்து ஈசனை அழைத்துக் கொண்டு மணமேடை சென்று நவரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
இந்த சமயத்தில் பார்வதி தேவிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
முனிபத்தினிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா போன்ற புண்ணிய தீர்த்தங்களின் புனிதநீரைப் பொற்குடங்களில் நிரப்பி நன்னீராட்டினர்.
பொன் வண்ணப் பட்டாடையைப் பார்வதியின் திருமேனியில் மிக அழகாக கட்டினர். தொட்டால் துவளும் மென்மையான திருப்பாத கமலங்களில் செம்பஞ்சுக் குழம்பு பூசினர்.
இரத்தின, மாணிக்க கற்கள் பதித்த பசும்பொன் தண்டைகளையும், கலீர் கலீர் என ஒலிக்கும் வெண்முத்து கொலுசுகளையும் திருவடிக்கு அணிவித்து அழகு செய்தார்கள்.
ஈசனின் நீலகண்டத்தைக் கட்டித் கழுவும் தேவியின் மென்கரங்களில் நவரத்தின வளையல்கள் கை விரல்களில் மோதிரம் – திருச்செவிகளில் தோடு, மாட்டல், ஜிமிக்கி தொங்கட்டான் போன்ற காதணிகள் செண்பக பூப் போன்ற மூக்கில் மூக்குத்தி, பில்லாக்கு – நீள் கழுத்தைச் சுற்றி சங்கிலி, முத்துச் சரம், பவள மாலை, சுட்டிகை போன்ற நவரத்தின அணி ஆபரணங்கள் கொடி இடையைச் சுற்றி ஒட்டியாணம் – நீள் கூந்தலை வாரி விட்டு முடிச்சில் மலர்ச்சரங்கள் – நெற்றியில் முத்துச் சரங்கள் என்ற வண்ணம் அம்பிகையின் அங்கமெல்லாம் தங்கமாய்த துலங்கியது.
இவ்வாறு அலங்கார பூஷணியாக விளங்கிய பர்வதராஜகுமாரி பார்வதியை முனி பத்தினியர்களான அதிதி, திதி, சுபர்ணி, சரசா, அனுசூயை,அருந்ததியும் நான்முகன் நாயகியான கலைவாணி, நாராயணன் தேவியர்களான ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் அழைத்து வந்து பரமேசுவரன் பக்கத்தில் அமரச் செய்னர்.
பார்வதி தேவியும் கற்பக மரத்தைச் சுற்றியிருக்கும் காமவல்லிக் கொடிபோல், ஈசனின் பக்கத்தில் நேசமுற அமர்ந்திருந்தாள்.
அதுசமயம் பதினெட்டு வகையான மேள வாத்தியங்கள் ஒலி எழுப்பின. சப்தரிஷிகளின் வேத கோஷம் திக்கெட்டும் பரவியது.
இமவான். பரமேசுவரனை வெண்பட்டு வஸ்திரா பரணங்களால் ஆராதனை செய்தான். பிரம்மதேவன் திருமந்திரங்களைச் சொல்ல -இமவான் மனைவி மேனை, கலச நீர் வார்க்க -இமவான் சிவபெருமா னுடைய தண்டை சிலம் பணிந்த சேவடிக் கமலங்களை விளக்கி அப்புண்ணிய அபிஷேக தீர்த்தத்தை தன் மீதும் மனைவி மீதும் புரோஷித்துக் கொண்டான். உள்ளுக்கும் பருகினான். மனைவியையும் பருகச் செய்தான். தூப மலர்களால் திருப்பாதங்களை அர்ச்சித்தான்.
பின்னர் பார்வதி தேவியின் கையைப் பற்றி சிவபெருமான் திருக்கரத்தோடு சேர்த்து, “சர்வாலங்கார பூஷிதையும், சர்வ மங்கள சோபியுமான என் கன்னிகை பார்வதியை, கயிலாசபதியான சர்வேஸ்வரனுக்கு கன்னிகாதானம் செய்து என் குமாரத்தியைத் தேவரீருக்கு சமர்ப்பிக்கின்றேன் என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தான் இமவான்!
திருமண வைபவங்கள் மங்களகரமாக நடந்து கொண்டிருந்தன. ஹோம சம்பந்தமான மங்கள சடங்கு களை நான்முகன் மற்றும் மாமுனிவர்கள், வேத விற்பன்னர்கள் ஒன்று 17 கோடி மந்திர ஆராதனை களுடன் பக்தி சிரத்தையுடன் நடத்திக் கொண்டிருந்தனர்.
அம்மி மிதிக்கும் வைபவத்தில், பரமேசுவரன் பார்வதி கரங்களால் தேவியின் திருவடிகளைத் தன்னிரு கர மிருதுவாகப் பிடித்து அம்மி மீது வைத்து இருவரும் அருகே நின்றிருந்த அருந்ததியை நோக்கினர். அக்னியை வலம் வந்தனர்.
திருமணச் சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக மங்களகரமாக நடந்த வண்ணம் மாங்கல்ய தாரணம் எனும் மங்கள முகூர்த்த வேளையை நெருங்கியது.
முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், சிவகணத்தவர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள் மங்கள கோஷம் எழுப்ப – வேதம் முழங்க – மங்கல இசை ஒலிக்க -கற்பக மலர்களும் மந்திராக்ஷதைகளும் தூவ பரமேசுவரர் பார்வதி தேவியாரின் திருக்கழுத்தில் மாங்கல்ய தாரணம் செய்தார்.
இக்கோலாகல வைபவங்களை எல்லாம் பொதிகை யில் இருந்த வண்ணம் அகஸ்திய மாமுனிவர் தமது பத்தினி லோபமுத்திரையுடன் கண்டு களித்துப் பேரின்ப கடலில் மூழ்கியிருந்தார்.
பரமசிவனும் பார்வதிதேவியும் மணமக்களாக இருந்த திருக்கோலத்தைத் தரிசித்து கோடானுகோடி தேவர்கள் குதூகலம் கொண்டார்கள்.
இத்தருணத்தில் ரதிதேவி சிவபெருமானைத் தரிசித்துக் கணவனைத் திரும்பப் பெற எண்ணி கண்ணீர் மல்க பிரார்த்தித்தாள். பரமேசுவரன் ரதியின் பிரார்த்தனையை ஏற்று அவளுக்குத் திருவருள் புரிந்தார்.
“ரதிதேவி! மன்மதன் உனது கண்களுக்கு மட்டும் தான் தெரிவான். மற்றவர்களுக்கு அவன் அரூபனாவான். இருப்பினும் அவன் காமபாணம் தொடுத்து மோக மூட்டும் காமலீலைகளைச் சரிவரச் செய்வான்! காமதகனத்தால் யாம் காமாரி என்ற திருநாமத்தை ஏற்போம்”.
ரதிதேவி கண்களுக்கு மன்மதன் தோன்றினான். இருவரும் குதூகலம் கொண்டனர். இருவரும் ஈசனை மணக்கோலத்தில் கண்டுமகிழ்ந்து தரிசித்து சந்தோஷித்தனர்.
இத்தகைய சுபமுகூர்த்த வேளையில் இமவான் தனது மனைவியோடும், மகன்களோடும் ஈசனையும் ஈசவரியையும் நமஸ்கரித்து பணிவோடு நின்றான். கயிலைப் பேரரசர் இமவானுக்குத் திருவருள் புரிந்தார்.
மலைவளைத்த பெருமான் – கருணைக்கடலான ஈசன் உமாமஹேஸ்வரியைத் திருக்கரம் பற்றிய கல்யாண வைபவத்தைக் கண்டுகளித்தோர் அனைவரும் பேரானந்த பெரு வெள்ளதில் மூழ்கினர். அனைவரும் ஈசனின் திருவருளால் திருமணயோகம், புத்திரபாக்கியம், நிறைந்த ஆயுள் ஆரோக்கிய ஐசுவரியத்தோடு கூடிய சுகமான மணவாழ்வைப் பெற்றனர்.
இங்ஙனம் சகல லோகத்தவருக்கும் அருள் பாலித்த ஞான கூத்தனான அம்பலவாணர் பார்வதி தேவியுடன் ரிஷபத்தில் திருக்கயிலைத் திருமாமலையில் எழுந்தருளினார்.