பிரம்ம தேவனின் மனோவதி நகரமாளிகையில் தேவர்கள் புடைசூழ பிரம்மதேவன் பத்மாசனத்தில் எழுந்தருளியிருந்தார். பக்கத்தில் திருமாலும் எழுந்தருளியிருந்தார். நான்முகன் தமது சகோதரனான மன்மதனை மனத்தால் நினைத்தார்.
அக்கணமே மன்மதன் கரும்புவில் தாங்கித் தனது பாரியாள் ரதி தேவியாருடன் பிரம்ம தேவன் முன்னால் தோன்றினான். இருவரும் இருகரம் கூப்பித் தொழுதனர். பிரம்மன் தம்பதியரை அருளிச் செய்து, ஆசனம் அளித்து கெளரவப் படுத்தினான்.
மன்மதன் பணிவன்போடு, “சகோதரரே! என்னை அழைத்த காரணம் என்னவோ?” என்று வினவினான்.
”மன்மதா! சூரபன்மனின் கொடுமையால் நாம்படுகின்ற வேதனை நீ அறியாததல்லவே! அவனை அழிக்கத் தகுந்த சந்தர்ப்பம் இப்பொழுதுதான் வந்துள் ளது. அவனை சம்ஹாரம் செய்ய அருட் செல்வனை அவதரிக்கச் செய்கிறேன் என்று ஈசன் திருவாய் மலர்ந்துள்ளார்.
சனகாதி முனிவர்க்கு ஆத்மஞான போதனை செய்து கொண்டிருக்கும் ஈசனையும், அந்த ஈசனை மணப்பேன் என்று தவமிருக்கும் பார்வதியையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்கு உனது மன்மதபாணம் பாலமாக அமையவேண்டும், உனக்கு இது கை வந்த கலைதானே!
நாரணனையும், பிருந்தையையும் மயல் கொள்ளச் செய்தவன் நீ. இந்திரனை அகல்யை மீது மோகிக்கச் செய்தாய். இவ்வளவு எதற்கு? என்னையே திலோத்தமை யிடம் மயங்க வைத்தாய்!
மலரோன் மொழிகேட்டு மன்மதன், “தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்றாலும் ருத்ரர் கோபக்காரர் ஆயிற்றே. அவர் கோபத்தால் நெற்றிக் கண்ணைத் திறந்தால் என்கதை முடிந்துவிடுமே! இவற்றை எல்லாம் தாங்கள் அறியாததல்லவே””
சகோதரனின் எதிர்வாதம் பிரம்மனுக்குச் சினத்தைக் கொடுத்தது.
”மன்மதா! குதர்க்கம் பேச இதுவா நேரம் | என் சொல்லை ஏற்காவிட்டால் வீண் சாபத்திற்கு ஆளாவாய்”!
சகோதரனின் சுடுமொழி கேட்டு, மன்மதனும் ரதியும் பிரம்ம சாபத்திற்கு அஞ்சி நடுங்கினர்; நெக்குருகினர். இருவரும் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்படுபவர் போல், பிரம்ம சாபத்திற்குத் தலை வணங்கினர். ரதி ஒரு முடிவிற்கு வந்தாள்.
ரதிதேவி கணவரிடம், “பேரழகுப் பெருமானே! நான்முகனின் சாபம் ஒரு புறம் இருக்கட்டும். சிவனுக்குக் கோபம் வந்தால் நெற்றிக் கண்ணுக்கு பஸ்மம் ஆவது திண்ணம். சிவ நிந்தனைக்கு மட்டும் ஆளாகக் கூடாது.
முக்கணப் பெருமான் தமது முல்லை சிரிப்பால் அகிலத்தையும் அழித்துவிடும் ஆற்றல் பெற்றவர். சிவனை சரணடைவோம்.
நான்முகனின் கட்டளை, மனைவியின் போதனை, தேவர்களின் துயரம், ஈசனின் கோபம் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்த மன்மதன் தனக்குள் ஓர் முடிவிற்கு வந்தான்.
நான்முகனின் கோபத்தால் துயரத்தை அனுபவிப்ப தற்கு அந்த ஈசனின் கோபத்திற்குப் பலியாவது எத்தனையோ மேலானது. அதனால் நான் ஈசனையும் ஈசுவரியையும் மோகவலைக்குள் விழச் செய்வேன் என்ற முடிவிற்கு வந்த மன்மதன் அவை அறிய “பிரம்மதேவரின் ஆணையைச்சிரமேற்கொண்டேன். எனக்கு வெற்றிகிட்ட வாழ்த்துங்கள். தாம்பூலம் கொடுத்து என்னைத் தன்யனாக்குங்கள்”.
மன்மதனின் மொழிகேட்டு பிரம்மதேவர், தமது கழுத்தில் அணி செய்யும் நவரத்தின பொன்மணி மாலையைக் கழற்றி “சகோதரா! ஜெய் விஜயீபவ!” என்று வாழ்த்தி மன்மதன் கழுத்தில் அணிவித்தார்.
திருமால் நவரத்தின பதக்கத்தை அணிவித்து நல்லாசி நல்கினார். தேவேந்திரன் கற்பகவிருக்ஷம் தனக்களித்த அணிமணி ஆபரணங்களை மன்மதனுக்கு அணிவித்தான்.
அஷ்ட திக்கு பாலகர்கள் தங்களுக்கு இஷ்டான நவரத்தினங்களால் செய்யப்பட்ட விதவிதமான ஆபரணங்களை, ரதி, மன்மதனுக்குக் கொடுத்து மன்மதனின் நெற்றியில் வெற்றித் திலகம் இட்டனர்.
மன்மதன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தான்.நான்முகனையும், நாரணனையும் வலம் வந்து வணங்கினான். அவர்கள் அவனை உள்ளன்போடு கட்டித்தழுவி “மங்களானி பவந்து” என வாழ்த்தி வழி அனுப்பினர்.
தேவர்கள் அன்பின் மிகுதியால் மன்மதனையும் ரதியையும் பூமலர் தூவி வாழ்த்தினர். நான்முகனையும் நாரணனையும் போற்றி துதி பாடினர்.
மன்மதனுக்காக தேவர்கள் அற்புதமான தேரை உருவாக்கிக் கொடுத்தனர். தேரை இழுத்துச் செல்ல கூட்டம் கூட்டமாக பச்சைக் கிளிகள் தேரைச் சூழ்ந்து காணப்பட்டன.
மன்மதனுக்காக தேரில் வைக்கபட்டிருந்த ஐநூறு மலரம்புகளின் வாசனை திக்கெட்டும் பரவியது. தேன் சிந்தும் புஷ்ப பாணங்களை நிரப்பிய அம்பு வாளியைத் தனது முதுகில் கட்டிக் கொண்டான் மன்மதன். மாமரத்தின் இளம் தளிரை வாளாக இடையில் சொருகிக் கொண்டான்.
குயில்களின் கூச்சலும், அலைகடலின் ஓசையும் எக்காளமாகவும், முரசாகவும் ஒலி செய்தன. அலைகள் கவரிவீச, மீன் கொடி வாகனத்தில் பறக்க – சந்திரன் குடை போல் நிழல் கொடுக்க -தென்றலான ரதத்தில் மன்மதன் அமர்ந்து தனது தேவியுடன் கயிலைக்குப் புறப்பட்டான்.
மன்மதன் மயக்கும் அதிரூப சுந்தரனாக ரதத்தில் அமர்ந்திருந்தான்.
தூய்மையான குங்கும நிறம் கொண்ட வஸ்திரத்தை அணிந்து கொண்டான். சுருளேறிய காரிருள் கூந்தலை அழகுற கோதிமுடித்து வாசமிகு கற்பக மலர்களால் அலங்கரித்துக் கொண்டான். தான் அணிந்திருந்த சிகப்பு தலைப் பாகையில் கொண்டை, குஞ்சரங்களை கட்டியிருந்தான்.
செவிகளிலே குண்டலம், அழகுத் திருமேனியில் பொன்னால் செய்யப்பட்ட கவசம் அணி செய்தது.
திருமேனியில் சுகந்த பரிமள சந்தனம் பூசி அணி மணி ஆபரணங்களை அணிந்து கொண்டான். மன்மதன் அழகுத் திருமகனாக – ஆணழகும் பெண்ணழகும் கொண்ட பேரழகின் பிறப்பிடமாய்க் காணப்பட்டான்.
கையில் கரும்புவில்லை எடுத்துக் கொண்டான். தேர்த்தட்டில் ஏறி அமர்ந்தான். மன்மதன் அமர்ந்த கோலத்தைக் காண்பதற்கு வானத்து வெள்ளி நிலவு தேர்த்தட்டில் பவனி புறப்பட்டதோ என்று சொல்லும்படியாக இருந்தது.
கற்பக மரத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் காமவல்லிக் கொடிபோல் மன்மதன் பக்கத்தில் ரதி தேவி வந்து அமர்ந்தாள்
ரதம் புறப்படத் தொடங்கியது. அத் தருணத்தில் நன்னி மித்தங்கள் பல தோன்றின. வாயு வேகத்தில் கயிலையை அடைந்தான் மன்மதன்.
திருக்கயிலை வாயிலில் நந்தி தேவர் பொற்பிரம்பும் உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து கொண்டிருந்தார். மன்மதன் நந்தி தேவரை நமஸ்கரித்தான்.
”நந்தி தேவா! நீரே பிதா! நீரே பிதாமகன் ! நீரே குருமகான் ! கருணையின் பெருகனார்” என்றெல்லாம் பலவாறு வியந்து புகழ்ந்து பேசினான்.
சிவனையும், பார்வதி தேவியையும் சேர்த்து வைக்கும் படியான நற்பணிக்கு அடி எடுத்து வைக்கப் போகும் தனக்குத் தகுந்த ஆலோசனையும் சொல்லி அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தான்.
நந்தி பெருமான் முகம் மலர, “மன்மதா! உன் எண்ணம் பலிதமாகும். வெற்றி உன்னை வந்து சேரும். மேற்கு திருவாயிற் புறம் வழியாக ஈசனின் திருச் சந்நதிக்குச் செல்வாய் ! ஈசன் முன்பு சனகாதியர்க்கு ஞானோபதேசம் செய்யப் போகும் தருணத்தில் என்னிடம், உன்னைத் தவிர வேறு எவரையும் தம்மைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளார். அதனால்தான் உன்னை மட்டும் அனுப்புகிறேன்” என்றார்.
மன்மதனும் ரதிதேவியும் நந்தியை வலம் வந்து நமஸ்கரித்து அவரது ஆசி பெற்று மேற்குத் திருவாயில் நோக்கிச் சென்றனர்.
மேற்கு சன்னதியில் பிரணவப் பொருளான பரமேசு வரன் முத்துக்கள் பதித்த நவரத்தின சிம்மாசனத்தில் அலங்காரமாக போடப்பட்டிருந்த புலித்தோல் மீது சின்முத்திரையுடன் கூடிய யோக நிலையில் எழுந் தருளியிருந்தார்.
நானிலம் போற்றும் நான்மறை நாயகனான பிரகதீசுவரன் கோடி மன்மதனுக்கு நிகரான அழகுடன் காட்சி அளித்தார்.
ஸ்படிகத்திற்கு ஒப்பான திருமேனியில் புலித் தோலைப் பொன்னாடையாகக் கொண்டிருந்தார். சிங்கத்தின் தோலை உத்தரீயமாக அரைதனில் சுற்றியிருந்தார். இரண்டு முழங்கால்களையும் சேர்த்து யோகப் பட்டம் கட்டியிருந்தார்.
இப்பேர்ப்பட்ட செளந்தரியத்தோடு கூடிய சிவபெருமானின் திவ்ய தரிசனம் கண்டு மன்மதனும் ரதியும் ஒரு கணம் திகைத்து போயினர்.
இத்தருணத்தில் நான்முகன், தேவேந்திரன், பிரஹஸ்பதி அருந்தவசியர் மற்றும் தேவர்கள் கயிலைக்குத் திருப்பாற்கடல் போல் திரண்டு வந்தனர். திருமலையில் ஓரிடத்தில் ருத்ரஜபம் செய்த வண்ணம் கூடி இருந்தனர்.
மன்மதன் எம்பெருமான் திருமுன் நின்று, பிழை பொறுத்தருள பிரார்த்தித்தான். புன்னைமர நன்னிழலில் மறைந்து நின்றான். வில் எடுத்தான். நாணேற்றினான். சுகம் தரும் மோகனாஸ்திரத்தைத் தொடுத்தான். மலரம்புகள் ஐந்தும் பரமனின் பொன்னாற் மேனி தனைத் தழுவும் படிப் பிரயோகித்தான். ரதி தேவி பயத்தால் மயக்கநிலை கண்டாள்.
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறு என்பது போல் மன்மதன் நெஞ்சம் குற்ற உணர்வால் வருந்தத்தான் செய்தது.
இந்த மனோகரமான வேளையில் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி, மன்மதனுக்கு வெற்றி உண்டாகட்டும். காமன் தொடுத்த கணை சங்கரர்க்கு விரக தாபத்தை உண்டாக் கட்டும் என்று மாசீகமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
கணை தொடுத்த கட்டழகுச் செல்வன் மோகனாஸ்திரத்தை ஜபம் செய்து கொண்டிருந்தான். மன்மதன் ஏவிய ஐந்து மலர்வாளிகளும் ஈசனின் திருமேனியைக் குதூகலிக்கச் செய்வதற்கு மாறாக பார்வதி தேவியின் வைரம் இழைத்த மேனியை மோகக்கடலில் மூழ்கடிக்கச் செய்தது.
ஈசன் மூன்று கண்களையும் திறந்தார். அவ்வளவு தான் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய உக்ரமான ஒரு தீப்பொறி ஜூவாலை மன்மதனை பஸ்பமாக்கியது.
வெள்ளிப் பனிமலையில் வெண்புகை சூழ்ந்தது. ரதிதேவி சற்று மயக்கம் தெளிந்தாள். கணவனுக்கு ஏற்பட்ட நிலை கண்டு நெஞ்சம் பதை பதைத்தாள், அழுது புலம்பினாள்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேவாதி தேவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
ஆனால் ஈசன் ஏதும் அறியாதாற் போல் மெளன நிலையில் எழுந்தருளியிருந்தார். ஈசனின் யோகநிலை கண்டு கயிலையின் ஒருபுறத்து கூடியிருந்த தேவாதி தேவர்கள் ஈசனைப் பலவாறாக தோத்திரம் செய்து கொண்டேயிருந்தனர்.
“சனகாதி முனிவருக்கு ஆத்ம சொரூபத்தைப் பற்றிய விளக்கங்களைப் போதிக்கும் மௌன குருவே! தேவாதி தேவர்களின் கோடி நமஸ்காரம்.
மூவுலகிலும் அனைத்தையும் தோற்றுவிப்பவரும் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பவருமான பரமேசுவரா! எங்கள் சகஸ்கரகோடி வந்தனம்.
எவரிடம் இந்த பிரபஞ்சங்கள் தோன்றினவோ, அவ்வாறு தோன்றிய பிரபஞ்சங்களைக் காத்தருளும் கருணாமூர்த்தியானவர் எவரோ அவருக்கு சிரசா வந்தனங்கள்.
வேதவாக்கியங்களுக்கு எட்டாதவரும், கர்மேந்திரியங் களுக்கும், ஞானேந்திரியங்களுக்கும் புலப்படாதவரும், அளவிட முடியாத ஆனந்த சாகரத்தைப் பெற்றிருப்ப வருமான பரந்தாமனுக்கு நமஸ்காரம்!
மூன்று வேதங்களுக்கு மூல புருஷர், மூன்று வேதங்களையும் திருமுகமாகக் கொண்டவர், மூன்று லோகங்களுக்கும் மத்தியில் எழுந்தருளியிருப்பவர், வேதசாரமாக விளங்குபவர், நீலகண்டத்தைப் பெற்றிருப்பவர், லோக சிருஷ்டி நடத்தி லயத்தை அடையச் செய்த சிருஷ்டிகர்த்தாவான சத்குருவே! கோடானுகோடி நமஸ்காரம்.
உலகங்களுக்கெல்லாம் பதியும் மகாபிரபுவுமாகிய கல்யாண குணங்களைக் கொண்ட பரமார்த்த சொரூப மூர்த்தியே! நமஸ்காரம்! காத்தருளும் கருணாமூர்த்தி!
உங்கள் அருட்பிரசாதம் எங்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யவும்.
தேவாதி தேவர்களின் இத்தகைய துதிகேட்டு, திங்கள் முகத்தவரான திங்கள் சூடிய பிரான், நந்தியை அழைத்தார். கயிலைக்குத் திரண்டு வந்திருக்கும் தேவாதி தேவர்களைத் தமது முன்னே வரச் சொல்லுமாறு கட்டளை இட்டார். நந்திதேவர் அக்கணமே அனைத்து தேவர்களையும் அழைத்து வந்து ஈசனின் திருமுன்னால் நிறுத்தினார்.
”சம்போ மகா தேவா சரணம்! சாம்ப சதா சிவா சரணம்!” என்று தவசியரும் தேவர்களும் ஓலம் இட்டனர்.
மாணிக்க வண்ணனான மலை வளைத்த தம்பிரான் – குணக் குன்றான ஞானானந்தர் தேவாதி தேவர்களைத் திரு நோக்கம் செய்தார்.
“உங்கள் விண்ணப்பத்தை யாம் அறிவோம். சூரனை வென்று உங்களைக் காக்க அருட்குமரன் அவதரிப்பான். அமைதியாகச் செல்வீராகுக!” என்று அருள் செய்தார்.
தேவாதி தேவர்கள் மன்மதனைத் தேடினர். மன்மதனின் மலரம்பு கண்டவர் மன்மதனைக் காணாது பயந்தனர். அது சமயம் ரதிதேவி இந்திரனிடம் நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் சொல்லி மன்மதன் பஸ்பமானான் என்ற விஷயத்தையும் கூறினாள். இது பற்றி ஈசனிடம் கேட்க அஞ்சியவர்களாய்த் தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.
ரதிதேவி கண்களில் நீர் பெருக, ஈசன் திருமுன் தனது கணவனுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தைச் சொல்லிப் புலம்பினாள். “எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நோவது போல் என் கணவன் உங்கள் தண்டனைக்கு ஆளாகி விட்டாரே! என்று சொல்லி வருந்தினாள். என் கணவரை என்னிடம் திரும்பத் தாருங்கள் ” என்று பிரார்த்தித்தாள்.
ரதியின் பிரார்த்தனையைச் திருச் செவிசாய்த்த சங்கரர் அன்பு மேலிட, “பெண்ணே! வருந்தாதே! உனது பதியை யாம் உம்மிடம் உயிர்ப்பித்துத் தருவோம். அதற்கான சந்தர்ப்பம் பார்வதீ பரிணயத்தின் போது ஏற்படும். அதனால் சிறிது காலம் பொறுமையுடன் இருப்பாய்!” என்று கூறி ரதிக்கு ஆறுதல் பல சொன்னார் ஈசன்!
ரதிதேவி ஈசனைப் பணிந்து போற்றி தனது இருப்பிடம் சென்றாள். ஈசுவரன் பார்வதி தேவியிடம் தமது திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் கெ கொண்டு மேருமலைக்குப் புறப்பட்டார்.
கந்த புராணம் – 5 ரதி மன்மத சம்பவம் | Asha Aanmigam