பிரம்ம தேவன் தமது புத்திரர்களான சனகர், சனந்தனர் முதலான முனிவர்களுக்குப் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்படிச் சொன்னார். ஆனால் பிரம்மபுத்திரர் களோ தந்தையின் ஆணையை ஏற்க மறுத்தனர்.
பிரம்ம புத்திரர்கள், ஈசனைத் தரிசித்து முக்தி நிலை அடைவதற்கான ஞான மார்க்கத்தைப் பெறப் போகிறோம் என்று சொல்லினர். சிவனின் சன்னதி சென்று, பணிவன்போடு ஈசனிடம், தாங்கள் முறையோடு வேதம் அத்யாயனம் செய்ய சித்தம் கொண்டுள்ளோம் என்று பிரார்த்தித்தனர்.
நீக்கமற எங்கும் நிறைந்துள்ள கருணைக் கடலான உமாமஹேஸ்வரர் ஆலமர நிழலில் அமர்ந்து பசு, பதி, பாசம் எனும் மூன்றின் தத்துவங்களை வேத ரகசியமான முடிவோடு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் முதலான முனிவர்களுக்கு விளக்கமாக போதித்துக் கொண்டிருந்தார்.
சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரை பிடித்து சிவஞான போதனைகளைச் செய்தார்.
ஈசனின் ஞானமார்க்க போதனையால் மனதில் பரபூரண யோகநிலை கண்டனர் பிரம்மபுத்திரர்கள். அவர்கட்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நிவர்த்தியானது. உள்ளத்தில் தெளிவு பிறந்தது. பிரம்ம புத்திரர்கள் ருத்ர ஜபத்தால் ஈசனைத் துதி செய்தனர். ஏகாந்த நிலையில் தங்கள் மனதை லயிக்கச் செய்தனர்
இங்ஙனம் சர்வலோக ரக்ஷகரான பரமேசுவரன் தக்ஷிணா மூர்த்தியாக ஆலமரநிழலில் அமர்ந்து பல யுகங்களாக மோனத்தவமிருந்த காலகட்டத்தில் தேவலோகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
ஈசனிடம் அநேகவிதமான வரம் பெற்ற அசுர வேந்தன் சூரபன்மன் மமதையால் இந்திரனை வெற்றி கொண்டான்.
சூரபன்மனின் மகன் பானுகோபன் தேவர்களையும் மற்றும் முனிவர்களையும் சிறைப்பிடித்தான். இந்திரன் மகன் ஜயந்தனைச் சிறைபிடித்தான்.
சூரபன்மனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. அமரேந்திரன் தாங்கொணாத் துயருற்றான். மோனநிலையில் அமர்ந்து விட்ட ஈசனைக் கடும் தவத்தால் தனது துயரத்துக்கு முடிவு காண முற்பட்டான்.
தேவேந்திரன் தவம் புரிவதற்காக வேண்டி மேரு மலைக்குச் சென்றான். நமசிவாய மந்திரத்தைச் சிந்தை யிலே கொண்டு தவத் தொடங்கினான். பல்லாண்டு காலம் அன்ன ஆகாரமின்றி அரிய தவமிருந்தான்.
அமரனின் அற்புதமான தவத்தால் திருவுள்ளம் கனிந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஈசன், ரிஷபாரூட மூர்த்தியாக தேவேந்திரன் முன்னால் பிரசன்னமானார். தேவேந்திரன் தவம் கலைந்து எழுந்து, சிரமீது கரம் உயர்த்தி ஈசனை நமஸ்கரித்தான்.
பரமசிவன் மலர்ந்த முகத்துடன் தேவேந்திரனைத் திருநோக்கம் செய்து, “தேவேந்திரா! என்னை நினைத்து உன்னை வருத்தி உத்தமமான தவம் புரியும் காரணம் என்னவோ?” என்று வினவினார்.
‘ஞான சேகரா! மதிசூடிய பெருமானே! சப்த விடங்கனே! மாசிலாப் பெருமானே! தேவரீர் அறியாததும் உண்டோ? சூரபன்மனின் கொடுமையால் மானம் இழந்தேன்; மகுடம் இழந்தேன். அமராவதிபட்டணம் இழந்தேன். அன்புப் புதல்வன் ஜயந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சூரபன்மன் லக்ஷக்கணக்கான தேவர்களை அடிமை கொண்டுள்ளான்.
இந்த நிலையில் ஐயனின் பாதகமலங்களைத் தவிர புகலிடம் வேறு ஏது? மஹாப் பிரபோ! சூரபன்மனை சம்ஹாரம் செய்து அமரர் குலம் காத்தருளவும்.
தேவேந்திரனின் பரிதாப நிலை கண்டு பரமேசுவரன், ”தேவேந்திரா! எம்மை மதியாத தக்ஷனின் யாகத்திற்குச் சென்று என்னை அவமதித்தாய். தக்ஷனுக்குத் துணை போனாய்! அந்த பாபம் தான் உங்களை இப்படி பற்றிக் கொண்டது” என்றார்.
இந்திரன் ஈசனைப் பிழை பொறுத்தருளப் பிரார்த்தித்தான்.
ஈசன் தேவேந்திரனுக்கு அருள் செய்து, “தேவேந்திரா! சூரபன்மனை என்னால் நேரடியாக சம்ஹாரம் செய்ய முடியாது. எம்மை அவன் அரியதவத்தால் ஆட்கொண்டவன். அவனது மேன்மையான தவத்தால் என்னிடமிருந்து வரம் பல பெற்றுள்ளான் அவன் அசுரகுலத்தின் ஏகச் சக்கராதிபதியானான். ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அதிகாரியானான்.
எந்த தேவர்களாலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்றும், எனது அம்சமாகத் தோன்றும் தேவகுமாரனால் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும் என்றும் வரம் வாங்கியவன். அதனால் உங்கள் பொருட்டு எமது அம்சமான புத்திரனை அவதரிக்கச் செய்து சூரனின் ஆணவத்தை அடக்கி அமரர் குலம் காத்தருளுவோம்!” என்று சொல்லி அந்தர்த்தியாமியானார்.
“ஈசனிடம் அவதரிக்கப் போகும் குமாரனால் அமரர் குலம் ரக்ஷிக்கப்படும் ” என்னும் ஈசனின் அருள் வாக்கால் அகம் மலர்ந்த அமரேந்திரன் அருட்குமரன் அவதரிக்கப் போகும் நன்னாளை காணக் காத்திருந்தான். அதே சமயத்தில் தேவேந்திரன் உள்ளத்தில் ஓர் சலனம்!
“ஈசன் குருஸ்தானத்தில் அமர்ந்து யோகநிலையை மேற்கொண்டுள்ளார். ஈசுவரியோ மேரு மலையில் தவமிருக்கிறாள். இந்த நிலையில் இவர்கட்கு குமரன் தோன்ற மார்க்கம் ஏது? இவர்கள் இருவரும் ஒன்று சேருவது எப்போது?”
இப்படிப்பட்ட எண்ணங்களால் பெரும் சஞ்சலம் அடைந்த அமரேந்திரன் மனதை தேற்றிக் கொண்டு தனது இருப்பிடம் சென்றான்.
தேவேந்திரன் தனது குலகுருவான பிரஹஸ்பதி மற்றும் தேவர்கள் புடை சூழ பிரம்ம தேவன் எழுந்தருளியிருக்கும் மனோவதி பட்டணம் சென்றான். அங்கே அன்னவாஹனத்தில் நான்முகனும் வெள்ளைத் தாமரைப் பூவினில் நாமகளும் எழுந்தருளியிருந்தனர்.
தேவாதி தேவர்கள் நான்முகனை சுந்தர சுலோகங் களால் பாடி போற்றிப் பணிந்தனர்.
“கலைமகள் நாதனே! சிருஷ்டிகர்த்தாவே! உலகை ரக்ஷிக்கும் சதுர்முகதேவா! சூரபன்மனை சம்ஹாரம் செய்ய ஈசனிடம் அருட்குமரன் ஒருவன் அவதரிப்பான் என்று அருள் செய்தார். ஆனால் ஈசன் கயிலை மலையிலும், ஈசுவரி மேருமலையிலும் தனித்தனியே வாசம் புரியும் நிலையில் குழந்தை பிறப்பது எவ்வாறு சாத்தியமாகும் ? இதற்கு உகந்த உபாயம் ஐயன்தான் கூற வேண்டும்.”
இந்திரனின் மொழி கேட்டு நான்முகன், “அமரேந்திரா! உனக்கு ஏற்பட்ட சந்தேகம் நியாமமானது தான். இருப்பினும் இதற்கு தகுந்த மார்க்கம் காண்பதற்கு ஸ்ரீவிஷ்ணு பகவானிடம் செல்வோம்” என்றார்.
நான்முகன், இந்திரன் முதலிய தேவர்கள் முனிவர்களை அழைத்துக் கொண்டு வைகுண்டம் எனும் ஸ்ரீயப்பதி வந்தார்.
அங்கே ஹரி பகவானான ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீ வைஷ்ணவ பரமபாகவதாள் சூழ்ந்து நின்று துதி பாடிக் கொண்டிருக்க, அனந்தன் மீது பள்ளி கொண்டிருந்தார். ஸ்ரீதேவி, பூ தேவி பரந்தாமனின் கொண்டிருந்தனர். திருப்பாதகமலங்களை வருடிக்
தேவேந்திரன், திருமாலைச் சேவித்து சூரபன்மனின் அக்கிரமங்களைச் சொல்லி வருந்தினான். சூரனை வெல்வதற்கு ஈசன் சொன்ன சமாதானத்தையும் எடுத்து இயம்பினான்.
இந்திராதி தேவர்களின் குறைகேட்டு கோவிந்தன் கமலமுகம் மலர, “அமரர்களே! அசுரனுக்காக அஞ்ச வேண்டாம். தமக்கு பிறக்கப் போகும் அருட் குமரனால் அமரர் குலம் காக்கப்படும் என்று ஈசன் அருளிச் செய்துள்ளதால் நாம் உறுதியுடன் பயமின்றி இருப்போம்.
எதற்கும் ஈசன் ஞானயோகத்தை விடுத்து, மோக இன்பத்தில் மூழ்கச் செய்ய உகந்த வழி காண்போம். மன்மதன் முயற்சியால் ஈசன் மீது மலரம்பு எய்து பார்வதி தேவியார் மீது மையல் கொள்ளச் செய்யலாம்.”
திருமாலின் இந்த அற்புதமான ஆலோசனையை அனைத்துத் தேவர்களும், முனிவர்களும் உளமாற ஏற்று உள்ளம் மகிழ்ந்தனர். அனைவரும் அனந்தன் சேவடி போற்றி அடுத்து நடக்க வேண்டிய ஏற்பாட்டிற்கு வழி செய்யப் புறப்பட்டனர்.
கந்த புராணம் – 4 யோக நிலையில் சிவன்… தேவேந்திரன் தவம் | Asha Aanmigam