பன்னிரண்டு ஆண்டு கால வனவாசம் முடிக்கும் பொருட்டுப் பாண்டவர்கள் காட் டிற்குச் சென்றபின் இந்திரனின் அமரா வதிப்பட்டினம் போன்ற அழகு பெற்று விளங்கும் அஸ்தினாபுரத்தைக் கண்ணி லான் திருதராட்டிரர் ஆண்டு வந்தார். பாண்டவர்கள், தன் தம்பி பிள்ளைகள் அல்லவா? அதனால் அவருக்கு ஓரளவு பாசம் இருந்தது. அதனால் பாண்டவர்கள் எப்படி காட்டில் இருக்கின்றார்கள் என்பதை அறிய, ஓர் அந்தணனை அனுப்பினார். அவனும் பாண்டவர்களை சந்தித்துப் பார்த்து விட்டு வந்து மன்னர் திருதராட்டிரரிடம் நலமாக இருப்பதாகக் கூறினான்.
விதுரரிடம் முறையிட்ட திருதராட்டிரர்
அந்தணன் சென்று வந்த செய்தியைத் தன் தம்பி விதுரரிடம் கூறினார் அம்மன்னர். அதனைக் கேட்ட விதுரர் கௌரவர்கள் பாண்டவர்களுக்குச் செய்த சொல்லாணாத் தீங்குகளையெல்லாம் சொல்லி நினைவுபடுத்தினார். அதன் பின், ”பாண்டவர்கள் பராக்கிரமசாலிகள். தர்மநெறிப்படி நடப்பவர்கள்; கண்ணபிரா னின் ஆதரவுடன் நிச்சயம் கௌரவர்களைப் பழிக்குப் பழிவாங்குவார்கள். அதை உன்னால் தடுக்கவே முடியாது என்று எச்சரிக்கை செய்து தன் இருப்பிடம் சேர்ந்தார். விதுரரின் எச்சரிக்கையைக் கேட்ட திருதராட்டிரர், பாண்டவர்கள் பராக்கிரமசாலிகள் ஆதலின் தன் குமாரர்களான கௌரவர்களை எப்படி பழிவாங்குவார்களோ என்று அஞ்சி கவலையோடு அமர்ந்திருந்தார்.
அப்பொழுது துரியோதனன் தன் தம்பிய ரோடும், மாமன் சகுனியோடும், நண்பன் கர்ணனோடும் தன் தந்தை திருதராட்டி ரரைக் காண வந்தான். தன் தந்தை மிகுந்த துக்கத்தோடு இருப்பதை அறிந்த துரியோதனன், “தந்தையே! தாங்கள் கவலையோடு இருப்பதற்குரிய காரணம் யாது?” எனக் கேட்டான். அதற்குத் திருதராட்டிரர், “நீங்கள் செய்யக்கூடாத தீய செயல்களைப் புரிந்து பாண்டவர்களைக் காட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள். அடிபட்ட புலி சும்மா இருக்காது. உங்களை அவர்கள் சும்மா விட மாட்டார்கள்; பழிக்குப்பழி வாங்கியே தீருவார்கள். அப்பொழுது நீங்கள் என்ன ஆவீர்களோ என்று எண்ணித்தான் கவலையோடு இருந்தேன்” என்றார்
புறக்கண் இல்லாத திருதராட்டிரர் கூறியதை அறக்கண் இல்லாத துரியோ தனன் கேட்டு நகைத்து, “தந்தையே! அஞ்ச வேண்டாம். அந்தப் பாண்டவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. மாமன் சகுனி, தம்பியர், கர்ணன், பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், அஸ்வத் தாமா போன்ற ஆற்றல்மிக்க வீரர்கள் நமக்குத் துணையாக இருக்கும்பொழுது நீங்கள் என் கவலையுற வேண்டும்? அந்தப் பாண்டவர்களை நான் ஒருவனே வென்று விடுவேன். நீங்கள் கவலையுற வேண்டாம்” என்று ஆறுதல் கூறினான்.
அதன் பின் துரியோதனன் தன் தம்பியர், மாமன் சகுனி, நண்பன் கர்ணன் ஆகியவர் களோடு அமர்ந்து கொண்டு, “என் தந்தை மிகுந்த கவலையுடனிருக்கின்றார். இந்த விதுரர் வேறு சும்மா இருக்காமல் பாண்ட வர்களின் வீர தீர பராக்கிரமங்களைச் சொல்லி அவரைப் பயமுறுத்தியிருக் கின்றார். அதனால் ரொம்ப கவலையுடன் இருக்கின்றார். அவர் கவலையைப் போக்கு வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்” என்று கூறினான்.
அப்பொழுது கர்ணன், “நண்பரே! பாண்டவர்கள் துவைத வனத்திலிருப்பதாக அறிகின்றேன். நாம் நால்வகைப் படை களோடும், சிற்றரசர்களோடும் பாண்ட வர்கள் வசிக்கும் காட்டிற்குச் சென்றிடு வோம். நம்முடைய ஆடம்பரமான செல்வச் செழிப்புடைய வாழ்வினைக் கண்டு அவர்கள் மனம் புழுங்கி, அந்த த்வைத வனத்தை விட்டு நீண்ட தூரம் சென்றிடுவர். பின்னர் அவர்களைப் பற்றிய செய்திகள் உன் தந்தையார் காதில் விழா. அதனால் அவர் கவலையற்றிருப்பார்” என்று கூறினான்.
சகுனியின் யோசனை
கர்ணன் கூறிய யோசனையைத் துரியோதனன் ஏற்றுக்கொண்டான். ஆனால் அதற்குக் காரணம் வேண்டுமே. தந்தை யிடம் என்ன காரணம் கூறி அனுமதி கேட்பது?” என்று கூறினான். “அந்த அனுமதி பெறுவது ரொம்ப சுலபம். இடையன் ஒருவனை மன்னரிடம் அனுப்பி ‘பசுக்களைக் கொடிய விலங்குகள் வந்து துன்புறுத்துகின்றன. ஆதலின் எங்கள் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிடச் செய்யலாம். “அதையே காரண மாகக் காட்டி அந்த விலங்குகளை விரட்ட நம்மை தந்தையார் அனுப்புவார். நாம் எளிதாகப் போகலாம்” ம்’ என்று கூறினான் உட்பகையே வடிவமாகக் கொண்ட சகுனி.
சகுனி தீட்டிய திட்டப்படியே மன்னன் திருதராட்டிரருடைய அனுமதியைத் துரியோதனன் பெற்று விட்டான். மாமன் சகுனி, தம்பியர்கள், நண்பன் கர்ணன் ஆகியவர்கள் சூழ்ந்துவர. பின்னே நால்வகைப்படைகள் வர பொற்றேரில் ஏறி, பல்லியங்கள் முழங்க கண்ணிலான் பெற்ற மகன் துரியோதனன் வேகமாக துவைத் வனத்தை அடைந்தான். பாண்டவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்திலேயே வந்த அத்துரியோதனன், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சோலையில் உடன் வந்தவர்களுடன் தங்கினான்.
மறுநாள் காலை துரியோதனன், தெய்வ மகளிர் போன்ற அழகான பெண்களுடன் நீராடுவதற்காக அருகிலிருந்த அழகான நீர் நிறைந்த குளத்தில் யாரும் வரவொட்டாது தடுக்க சில வீரர்களை அனுப்பினான். அவர்களும் அருகிலுள்ள மலர்கள் நிறைந்த தூய்மையான நீரையுடைய -குளத்தருகே சென்றபோது அங்கு ஏற்கனவே அக்குளத் தில் நீராடுவதற்காக சில கந்தர்வர்கள் வந்திருப்பதைக் கண்டார்கள். உடனே துரியோதனன் ஏவலர்கள், கந்தர்வர்களிடம் சென்று, “மாட்சிமை தங்கிய எங்கள் அஸ்தினாபுரத்து மன்னர் துரியோதனன் இக்குளத்தில் நீராடுவதற்காக இங்கு வருகை தர உள்ளார். ஆகலின் நீங்கள் யாரும் இங்கு இருக்கக் கூடாது. இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள்” என்று கூறி அதட்டினார்கள்.
கந்தர்வர்கள் மறுப்பு
அதனைக் கேட்ட கந்தர்வர்கள் அவர் களின் அதட்டலுக்கு சிறிதும் அஞ்சாது, “வீரர்களே! இந்த குளம் எங்களுக்குரியது. வெளியார் யாரும் இதில் நீராடக்கூடாது. எங்கள் மன்னர்தான் இதில் நீராடுவார். இதனை அறிந்து தேவர்களும் இங்கு வரமாட்டார்கள். அப்படியிருக்க தீய செயல்களையே புரிந்து, பழியையே பெரும் புகழாகக் கொண்டு விளங்கும் மானிடனாகிய துரியோதனன் நீராடுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும்? அவன் இங்கே நீராடவும் முடியாது. நெருங்கவும் கூடாது. மீறினால் அவமானம்தான் பட வேண்டும். இதனை உங்கள் மன்னரிடத்தில் உடனே போய்ச் செல்லுங்கள் ” என்றார்கள்.
கந்தர்வர்கள் தன்னை இழிவாகப் பேசியதைக் கேட்டு அரவக் கொடியோன் துரியோதனன் வெகுண்டு சீறி எழுந்தான். உடனே தன் நாற்படைகளை ஏவி. “குளத்தைக் காக்கின்ற சுந்தருவப் படை களை விரட்டி அடியுங்கள்” என்று கட்டளையிட்டான். உடனே துரியோதனன் படையினர்க்கும், கந்தர்வர்க்கும் இடையே உக்கிரமான போர் நடைபெறலாயிற்று. கந்தருவர் செலுத்திய அம்புகளால் துரியோதனன் சேனையினர் அனைவரும் அஞ்சிப் புறங்காட்டி ஓடினர். எதிர்த்தாக்கு தல் நடத்த அவர்களால் முடியவில்லை. இதனால் கோபங் கொண்ட துரியோதனன், தன் மாமன் சகுனி, நண்பன் கர்ணன் தம்பியர் சூழ்ந்துவர நால்வகைப் படை களுடன் சென்று கந்தர்வர்களைத் தாக்கினான். துரியோதனன் விடுத்த அம்புகளால் சிலர் மடிந்தனர். உயிர் பிழைத்த சிலர் ஓடிப் போய், தங்கள் அரசன் சித்திரசேனனிடம் முறையிட்டனர்.
சித்ரசேனன் கோபம்
தன் சேனையில் சிலர் மடிந்தனர் என்பதைக் கேள்வியுற்ற சித்திரசேனன் மிகுந்த கோபங் கொண்டு, கந்தர்வ வீரர் களுடன் புறப்பட்டுத் தேரேறி, துரியோத னன் சேனை மீது பெருந் தாக்குதல் நடத்தினான். அம்புகளை மழையெனப் பொழிந்தான். எதிர்த்தோர் இறந்து வீர சொர்க்கம் அடைந்தனர். கெளரவ வீரர்கள் உயிருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தனர். கர்ணன் இதனைக் கண்டான். எதிர்த்து வருகின்ற கந்தர்வப் படை மீது மூர்க்கமான தாக்குதல் நடத்தினான் சித்திரசேனன். தாக்குதல் நடத்திய கர்ணன் மீது சரமாரியான அம்புகளைத் தொடுத்து அவனைத் திணற னன் தாக்கு தாக்கு அடித்தான். அவனிடம் கர்ணன் பிடிக்க முடியாமல் தனது தேரினையும், வில்லினையும் களத்தே விட்டுப் புறமுதுகு காட்டி ஓடி விட்டான்.
துரியோதனனைச் சிறைப்பிடித்தல்
பெரு வீரனாகிய கர்ணனும் தோற்றோடு தலைக் கண்டு, துரியோதனன் மனம் பொறாமல் தன் படைகளோடு சித்திர சேனனை எதிர்த்துப் போர் செய்தான். சித்திரசேனனும் தயங்காமல் எதிரிட்டுக் சுடும் போர் புரிந்து, அவனையும், அவன் மாமனையும், அவன் தம்பியரையும் வளைத்துப் பிடித்து, தன் பெரிய தேரினில் இறுகக் கட்டி, உடன் வந்த பெண்டிரையும் சிறைப் பிடித்து, தன் இருப்பிடம் போக ஆயத்தமானான். அப்பொழுது கௌரவ சேனையில் தப்பிய சிலர் தர்மபுத்திரரிடம் சென்று “மன்னரே, நின் தம்பியராகிய துரியோதனாதியரை, சித்திரசேனன் சிறை பிடித்துத் தேர்க்காலில் கட்டித் தன் ஊருக்கு இழுத்துப் போக உள்ளான். அவனை அந்த இக்கட்டிலிருந்து மீட்டு, பகைவர்க்கும் அருளுகின்ற தங்கள் பரிவு காட்டும் நெஞ்சத்தை வெளிப்படையாக காட் டுங்கள்” என்று வேண்டினர்.
தர்மபுத்திரரின் இரக்கம்
தர்மபுத்திரர் அதனைக் கேட்டு மனமிரங்கி, தம்பி பீமனை நோக்கி, “தம்பி பீமா ! நீ போய் சித்திரசேனன் தேர்க்காலில் கட்டியுள்ள துரியோதனனை விடுவித்து, அவனை இங்கு அழைத்து வருவாயாக ” என்றார். அதனைக் கேட்டவுடன் பீமன் கோபமுற்றவனாகி, “அண்ணா! பாம் புக்குப் பால் வார்க்கப் போகிறீர்களா? அவர்கள் நமக்குச் செய்த தீங்குகள் கொஞ்சமா நஞ்சமா? இப்பொழுது வன வாசத்தில் அகப்பட்டுத் துன்பப்பட்டு கொண்டிருப்பதும் அவனால்தான். நாம் செய்ய வேண்டிய செயலைத் தான் கந்தருவர்கள் செய்துள்ளார்கள். இதில் நாம் செய்யத்தக்கது ஒன்றுமில்லை” என்று கூறி மறுத்தான்.
பீமன் கோபமாகக் கூறியதை தர்ம புத்திரர் கேட்டு, “தம்பீர அடைக்கலம் புகுந்தவர்களைக் காக்க வேண்டியது நம் கடமை அல்லவா! திரேதாயுகத்தில் பகை வரிடமிருந்து ‘இராமா சரணம்! இராகவா சரணம் ‘என்று கூறி வந்த வீடணனுக்கு இராமபிரான் அடைக்கலம் கொடுக்க வில்லையா? சரணம் புகுந்த ஒரு புறாவுக்காக சிபிச் சக்கரவர்த்தி தன்னையே அரிந்து கொடுக்க வில்லையா? எனவே எக்காலத்தும் நாம் பழி தரும் செயலைச் செய்யக்கூடாது. மேலும் நீ துரியோதன னைக் கொல்வதாக அன்று கெளரவர் சபையில் சபதம் செய்துள்ளாய். இன்று சித்திரசேனன் தேர்க்காலில் கட்டப் பட்டுள்ள துரியோதனனை அவன் கொன்று விட்டால் உன் சபதம் என்னாவது? திரௌபதி எவ்வாறு தன் கூந்தலை முடிப்பது? எனவே அவன் செய்த தீங்குகளை எண்ணிப்பார்க்காது மீட்டு வருதல் தான் தர்மம்” என்றான்.
அர்ச்சுனனும், “அண்ணா! பீமா! நம் தமையனாரின் சொல்லை மீறக்கூடாது. மறுத்து பேசவும் கூடாது. ஆகலின் நாம் எல்லோரும் சென்று சித்திரசேனனின் தேர்க்காலில் கட்டப்பட்டுள்ள துரியோத னனை மீட்டு வருவோம், வாருங்கள்” என்று கூறி தம்பியரை அழைக்க, பீமனும் உடன்பட்டு, உடன்வர ஒப்புக்கொள்ள அனைவரும் விரைவாக போர்க்களம் போய்ச் சேர்ந்தனர்.
துரியோதனனை மீட்ட பாண்டவர்கள்
சுந்தர்வ வீரர்கள் பாண்டவர்கள் நால்வரைக் கண்டதும் இவர்கள் யாரா யிருக்கக் கூடும்? என்று எண்ணினார்கள். அப்பொழுது பாண்டவர்கள் நால்வரும், “கந்தர்வர்களே! நாங்கள் அண்ணல் தர்மபுத்திரரின் தம்பியர். அவருடைய கட்டளையால் இங்கு வந்துள்ளோம். சிறைப்பிடித்து வைத்துள்ள துரியோதன மன்னரையும், எங்கள் குலத்தவரையும், பெண்டிர்களையும் உடனே விடுதலை செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் உங்களைக் கொல் வோம்” என்று கூறி அச்சுறுத்தினர். அதனைக் கேட்ட கந்தர்வர்கள், “எங்க ளையா அச்சுறுத்துகின்றீர்கள்? உங்களை உயிரோடு விடப் போவதில்லை” என்று கூறி பாண்டவர்களுடன் போரிடலாயினர். அதனால் பாண்டவர்கள், அம்புக் கூடுகள் கட்டி அக்கந்தர்வ வீரர்களை எங்கும் போக வொட்டாமல் தடுத்துக் கொல்லலாயினர். கடுமையாக போரிடவும் செய்தனர்.
சித்திரசேனன், “வந்திருப்பவர்கள் வலிமை மிக்க பாண்டவர்களே” என நிச்சயித்து, அவர்கள் அருகில் சென்றான். தன் பழைய நண்பனான அர்ச்சுனனைப் பார்த்தவுடன் சித்திரசேனன் பெருமகிழ்வு கொண்டான். போரை நிறுத்தச் சொல்லி, அர்ச்சுனனைக் கட்டித் தழுவிக் கொண் டான். நலம் விசாரித்தான். மற்ற பாண்டவர் களிடமும் அன்பாக, பேசினான்.
பின்னர், சித்திரசேனன் அர்ச்சுனனை நோக்கி, “வில்லுக்கோர் விசயனே! இந்தப் பாவி துரியோதனன் தன் செல்வச் செருக்கை வெளிப்படுத்தி, உங்களைத் துன்புறுத்துவதற்காக இந்த துவைத் வனத்திற்கு வந்தான். இதை அறிந்த இந்திரன்,”பாண்டவர்களுக்குத் தொல்லை கொடுக்க வந்த அந்த துரியோதனாதியர் அனைவரையும் சிறைப்பிடித்து அழைத்து வாருங்கள் ” என்று கட்டளையிட்டான். அவன் ஆணைப்படி இவர்களைச் சிறை பிடித்து கந்தர்வலோகம் அழைத்து செல்ல உள்ளோம். இவ்வாறு நாங்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்பட, நீங்களோ அவர் களுக்கு ஆதரவாக எங்களுடன் போரிட வரலாமோ? முறையா?” என்று கேட்டான்.
அதற்கு அர்ச்சுனன், ”சித்திரசேனா! எங்கள் தமையனாரைப் பற்றி அனைவரும் அறிவர். அவர் பகைவர்க்கும் அருளும் பாங்கினர். அவர்தான் உங்களை எதிர்த்துப் போரிட்டு துரியோதனாதியரை மீட்டு வரச்சொல்லியுள்ளார். அவர் கட்டளையை நாங்கள் மீறமாட்டோம். உடனே எங்க ளுடன் அத்துரியோதனாதியர் கூட்டத்தை அனுப்புக” என்றான்.
துரியோதனனுக்கு தர்மபுத்திரர் அறிவுரை
அதன்பின் கந்தர்வகுல மன்னனான சித்திரசேனன் அர்ச்சுனனோடு தர்மரிடம் சென்றான். சித்திரசேனனைக் கண்டவுடன் தர்மபுத்திரர் அவனை வணங்கி, “ஐயனே! துரியோதனனையும், அவனுடன் வந்தவர் களையும் விடுதலை செய்யுங்கள் அப்படி செய்தால் மீண்டும் எங்களுக்கு அரசாட் சியைக் கொடுத்ததற்கு ஒப்பாகும்” என்று வற்புறுத்திக் கூறினார். அதனை கேட்டு யாழிசை வல்லவர் கோனாகிய சித்திர சேனன், சிறைப் பிடித்த துரியோத னாதியரையும், பெண்களையும் விடுவித்து, தர்மபுத்திரரை வாழ்த்தி விண்ணகம் போய்ச் சேர்ந்தான்.
பின்னர் தர்மபுத்திரர் துரியோதன னுடைய அவிழ்த்து, கட்டுக்களையெல்லாம் “தம்பி! என்ன காரியம் செய்தாய்! உனக்கேன் இந்த வேலை?” என்று கூறி அவனுக்குப் பல நல்ல உப தேசங்களைச் செய்தார்.
பகைவர்க்கும் அன்பு காட்டும் தர்ம புத்திரரின் உயர் சிறப்பினையும் “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் ” என்ற குறள் உண்மை யாதலையும் இந்த வரலாற்றின் மூலம் அறியலாம்.
நாணித் தலைகுந்த துரியோதனன்
என்றும் அழியாத புகழினை நிறுவிய வனும், சத்தியவிரதனுமான தர்மபுத்திரர் துரியோதனை விடுவித்து, நல்ல உப தேசங்கள் பல செய்து அஸ்தினாபுரத்திற்கு அனுப்பினார். தீமை செய்தலைத் தவிர வேறு ஒன்றும் அறியாத துரியோதனன். தனது படைகளுடன் நாணி, வெட்கி தலைகுனிந்து, ஒரு சோலையை அடைந்து தான்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் பெருந்துயரமுற்றான். இந்த அவமானத்தை தாங்கிக்கொண்டு உயிர் வாழ்தலைவிட இறப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தான்.
அந்தச் சமயத்தில் புறமுதுகிட்டோடிய கர்ணன் வந்து, துரியோதனனிடம் தன் தேரின் சக்கரங்கள் புதையுண்டதால், கந்தர்வர்களை வெற்றி கொள்ள முடிய வில்லை என்று ஒரு காரணம் கற்பித்துக் கூறினான். பின் அவன் செய்த போரின் முடிவு என்ன என்று கேட்டான். சோகத்தில் மூழ்கியிருந்த துரியோதனன் சித்திரசேனன் தன்னை தேர்க்காலிலிட்டுக் கட்டியதையும், பின்னர் தர்மபுத்திரரால் விடுவிக்கப் பட்டதையும் எடுத்து கூறினான்.
துரியோதனன் மனஉளைச்சல்
”பகைவர் இகழும் படியான ஓர் இழிவு எனக்கு ஏற்பட்டு விட்டது. இனி நான் உயிர் வாழ்தலில் அர்த்தமில்லை” என்று கூறிய துரியோதனன் கர்ணனை நோக்கி, “கர்ணா, இனி நீ துச்சாதனனுக்குத் துணையாக இருப்பாய்’ இனி அஸ்தினா புரம் போய்ச் சேருங்கள்* மனமுடைந்து கூறினான். என்று
துரியோதனன் மனம் நொந்து கூறிய தைக் கேட்ட நண்பன் கர்ணன், ”அரசே! “அ நீ உயிர் விட்டால் மற்றவர்கள் உயிர் வாழ் வார்கள் என்று நினைக்கின்றீரா? எனக்கு உத்தரவு கொடுங்கள்; அந்தக் கந்தர்வர் களைக் கொன்று வருகின்றேன்” என்று கூறி அவனைத் தேற்றினான். ஆனாலும், துரியோதனன் தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை. அவனது மனப்போக்கினை உணர்ந்து, அவனது மனத்தை மாற்ற பாதலத்துத்தானவர்கள் ஒரு பெண் பேயை அந்த துரியோதனனைத் தூக்கிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பேயும், துரியோதனனைத் தூக்கிக்கொண்டு சென்று பாதலத்துத்தானவர்கள் முன் கொண்டு போய் வைத்தது.
துரியோதனனின் உடல் பெருமை
உடனே அந்த பாதலத்துத்தானவர்கள் துரியோதனனை நோக்கி, “துரியோதனா! உன்னுடைய வலிமையறியாது உயிர்விட நினைக்கின்றாயே! இது கோழையின் செயல் அல்லவா! உன்னுடைய தேகத்தில் நாபிக்கு மேற்பட்ட பாகம் வஜ்ஜிரக் குவியலால் ஆக்கப்பட்டது. அது எந்த அஸ்திரங்களாலும் பிளக்க முடியாதது அதே போல நாபிக்குக் கீழேயுள்ள பாகம் புஷ்பமயமாகவும், கவரும் தன்மையதாக வும் உள்ளது. ஆக உன்னுடைய தேக மானது மேற்பாகம் ஈசுவரராலும், கீழ்ப்பாகம் தேவியாலும் அமைக்கப்பட்டு வல்லமையுடையதாக இருக்கின்றது. எனவே பாண்டவர்க்கு அஞ்ச வேண்டிய அவசியமே உனக்கு இல்லை” என்று கூறியதோடு மேலும், “மன்னவனே! முன்னொரு தடவை தானவர்களாகிய நாங்களும், தேவர்களும் போரிட்டுக் கொண்டோம். போரில் எங்கள் மன்னன் மடிந்தான். அதனால் நாங்கள் சிவபெரு மானிடம் சென்று ‘எங்களுக்கு மன்னன் இல்லையே’ என்று முறையிட்டோம். அப்பொழுது “அஸ்தினாபுரத்து மன்னன் துரியோதனன்தான் உங்கள் அரசன்” என்று கூறி அருள் செய்தான். இவ்வாறு சிவ பெருமானே கூறியிருத்தலால் நீ எங்களுக்கு அரசனாவாய். உனக்குப் போரிலும் உதவி செய்ய எண்ணியுள்ளோம். ஆசுலின் மன்னரே! நீங்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. மனத் துயரையெல்லாம் நீக்கிக் கொண்டு அஸ்தினாபுரம் சென்று ஆட்சிப் புரிவீராக. எங்கள் துணை உங்க ளுக்கு என்றும் கிடைக்கும்” என்று கூறித் தேற்றி அத் தானவர்கள் துரியோதனனை மீண்டும் அவன் இருந்த இடத்திலேயே கொண்டு போய் விட்டு விட்டார்கள்.
மறுநாள் காலை தானவர்கள் கூறிய உறுதி மொழிகளை நம்பி, துரியோதனன், தன் மாமன் சகுனியோடும், நண்பன் கர்ணனோடும், தம்பியரோடும் அஸ்தினா புரம் போய்ச் சேர்ந்தான்.
காங்கேயன் அறிவுரை
அஸ்தினாபுரம் வந்த அரவக்கொடி யோன் துரியோதனன் அரசவையில் அமர்ந்திருந்தான். அப்போது கங்கையின் புதல்வனாகிய காங்கேயன் என்னும் பிதாமகர் பீஷ்மர், நடந்தன அனைத்தையும் அறிந்து துரியோதனனை நோக்கி, ‘மைந்தா! ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்றபடி பாண்டவர்க்குத் தீங்கு செய்ய நினைத்துச் சென்றாய். நீ நினைத்தது நடக்கவில்லை. மாறாக கந்தர்வர் கையில் சிக்கிக் கொண்டாய். சிறைப்பட்டாய். அவமானப்படுத்தப்பட்டுத் தேர்க்காலில் கட்டப்பட்டாய். அப்பொழுது யாரும் உனக்குத் துணையாக வரவில்லை.ஆனால் நீ துன்புறுத்தி அவமானப்படுத்திய அப்பாண்டவர்களே, பழிக்குப்பழி வாங்காது நல்லெண்ணத்தோடு உன்னை விடுவித்து நலத்துடன் உன்னை அனுப்பி யுள்ளார்கள். இதன் மூலம் நீ அவர்களின் தோள்வலிமையை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இன்னா செய்தார்க்கும் இனியவே செய்கின்ற அவர்களின் நற்பண்பினை உணரக்கூடிய மற்றொரு நல் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புக்களை நன்குப் பயன்படுத்திக் கொண்டால் நீ நீண்ட காலம் அரசாட்சி செய்யலாம்.குருவம்சமும் செழிக்கும். அதனால் பாண்டவர்களுடன் சேர்ந்து வாழ்வாயாக நல்லதையே நினைத்து அதனையே செய்க. உனக்கு என்றுமே நன்மை கிடைக்கும்” என்று அறிவுரைகள் கூறினார். பல
இராச சூய யாக ஆசை
பாதலத்துத்தானவர்கள் துணையிருப்ப தனால் துரியோதனன் செருக்குக் கொண்டு பீஷ்மர் கூறிய அறிவுரைகளை அசட்டை செய்து அலட்சியப் படுத்தினான். அதன் பின்னர் துரியோதனன் தன் மாமனோடும், தம்பியரோடும், கர்ணனோடும் வந்து பீஷ்மரைப் பார்த்து பாண்டவர்கள் செய்ததைப் போன்று இராசசூய யாகம் செய்ய வேண்டும் என்று கூறினான்.
அதனைக் கேட்ட பீஷ்மர், “மைந்தனே! தந்தையான திருதராட்டிரரும், தமைய னான தர்மபுத்திரரும் உயிரோடிருப்பதால் இராசசூய யாகம் செய்தல் கூடாது. எனவே அதனை விடுத்து திருமாலையே பர தேவதையாகக் கொண்ட வைஷ்ணவ யாகத்தை சிறப்புடன் செய்யுங்கள். அதுவே மேலானது” என்று கூறினார்.
துரியோதனன் பிதாமகர் பீஷ்மர் கூறியபடியே வைஷ்ணவ யாகத்தை செய்யத் தொடங்கினான். முதலில் அந்த யாகத்திற்கு வரும்படியாக எல்லா மன்னர்களுக்கும் தூது அனுப்பினான். அதனால் எல்லா அரசர்களும் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்கள். அடுத்து, துரியோதனன் காட்டிலுள்ள தர்மபுத்திர ருக்கும் தூது அனுப்பினான். அந்த அந்தணன் தர்மபுத்திரரை யாகத்திற்கு அழைக்கவும், சத்திய விரதனாகிய தர்மபுத்திரர், “பதின்மூன்று வருடங்கள் கழித்துத்தான் அஸ்தினாபுரம் வருவேன். இடையில் வருதற்கில்லை என்று நான் சொன்னதாக உன் மன்னருக்குக் கூறி விடவும் ” என்று கூறி அந்த அந்தணனைத் திருப்பி அனுப்பி விட்டார். அதே நேரத்தில் தன்பால் வந்த அந்தணனிடம், பீமன், “என் கதாயுதத்திற்கு துரியோதனாதியர் நூறு பேரையும் களப்பலியாக இடும் கள வேள்வியை கண்டிட, என் தமையனார் தர்மபுத்திரர் அஸ்தினாபுரம் வருவார் என்று சொல்வாயாக ” என்று சொல்லி அனுப்பி னான்.
பாண்டவர்கள் வருகையைச் சிறிதளவும் பொருட்படுத்தாது துரியோதனன் வைணவ யாகத்தைச் சிறப்புறச் செய்து முடித்தான். தேவர்களும் வந்து அவிர்ப்பாகம் பெற்றுச் சென்றார்கள். துரியோதனன் பழையபடி அஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சி செலுத்தி வந்தான்.
இப்பால், பாண்டவர்கள் தாங்கள் தங்கியிருந்த துவைதவனத்தை விட்டு முன்னர் தங்கியிருந்த காம்யகவனம் சென்று அங்கேயே தங்கியிருந்தார்கள்.