பாண்டவர்கள் தங்களுக்கு விடுத்த பன்னிரண்டாண்டு வனவாசத்தில் பத்து வருடம் முடித்தார்கள். தர்மபுத்திரர் முதலானோர். நந்திசேன வனத்திலிருந்து மீண்டும் காம்யக வனத்திற்குச் சென்றனர்.
அங்கு தங்கியிருக்கும்போது ஒருநாள் கண்ணபிரான் சத்தியபாமையோடு அங்கு எழுந்தருளினார், தர்மபுத்திரர் முதலா னோர், அவர்களை எதிர்கொண்டு வரவேற்று வணங்கி ஆசனம் தந்து உபசரித்தனர். அப்பொழுது கண்ணபிரான் தர்மபுத்திரரோடு சில வார்த்தைகள் பேசி கொண்டிருக்கும் போது காலனை புறங்காட்டி ஓடச் செய்த மார்கண்டேயர் அங்கு வந்தார்.
மிருகண்டு மாமுனிவரின் புதல்வர்
இந்த மார்கண்டேயர் மிருகண்டு மாமுனிவரின் புத்திரர் ஆவார். மிருகண்டு முனிவர்க்கு நீண்ட காலம் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அதனால் அவர் நான்முகனைக் குறித்து கடுந்தவம் செய் தார். பிரம்ம தேவனும் பதினாறு ஆண்டே ஆயுள் இருக்கும்படியான நல்ல அறிவும் உயர் பண்பும், சிறந்த பக்தியுமுடைய மகன் ஒருவன் பிறக்கும்படியாக அருள் புரிந்தார். அவ்வாறே அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ‘மார்கண்டேயன்’ என்று பெயர் வைத்தார். சிறுவயதிலேயே வேத சாஸ்திரங்களையெல்லாம் கற்ற அம்மார்கண்டேயர் சிவபெருமானிடத்து எல்லையில்லாத பக்தி கொண்டிருந்தார். தலங்கள் தோறும் சென்று அப்பெரு மானைச் சேவித்து வந்தார்.
மார்கண்டேயனுக்குப் பதினாறு வயது தொடங்கியது. மிருகண்டு முனிவர் மிகுந்த துயரம் கொண்டார். உண்மையை மார்கண்டேயரிடம் கூறினார். மைந்தன் தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு தலங்கள் தோறும் சென்று உருவுமாகி, அருவுமாகி, உருவும் அருவுமாகி நின்ற பிரானை, திரிபுரம் எரித்த தேவனை, நெற்றிக்கண்ணை உடையானை, உமை யொரு பாகனை வணங்கித் தொழுதார். தனக்கு நான்முகன் விதித்த கெடுவை வெல்ல வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார். விதித்த கெடுவுக்குக் கெடுவைக்க கூடிய பெருமான் சிவபெருமானே என்பதை உணர்ந்து அவர் திருவடிகளைப் பற்றுவ திலேயே நாட்டங்கொண்டார்.
பதினாறு வயது முடிகின்ற நாள் வந்தது. திருக்கடவூர் என்னும் தலத்திற்கு வந்தார். அங்கு எழுந்தருளியிருக்கின்ற பெரு மானை வழிபட்டு கொண்டிருக்கலானார். அவரின் ஆயுள் காலம் முடிந்தது அறிந்த கூற்றுவன், முதலில் இயம தூதர்களை அனுப்பினான். அவர்களால் அவரை நெருங்கவும் முடியவில்லை. அதனை அறிந்த யமன் தானே அங்கு வந்தான். இலிங்கப் பிரானாகி நின்ற பெருமானை வழிபட்டு கொண்டிருந்த மார்கண்டேயரை தன் பாசக்கயிற்றின் மூலம் பற்ற முனைந்தான். ஆனால் சிவபெருமானையே தழுவிக் கொண்டு அவனிடமே அடைக் கலம் புகுந்தார். அடைக்கலம் புகுந்தவனை காத்தல் சான்றோர்க்கு அழகல்லவா! அதனால் இலிங்க உருவிலிருந்தோன்றிய சிவபெருமான் தன் கால்களால் அந்த யமனை உதைத்து வீழ்த்தினார். பின்னர் மார்கண்டேயனுக்கு அருள் புரிந்து என்றும் பதினாறு வயதிருக்கும்படி செய்தார். அதன் மூலம் ஏழு சிரஞ்சீவிகளுள் மார்கண் டேயர் ஒருவர் ஆனார். பின்னர் காலனை எம்பெருமான் உயிர்ப்பித்து அருள் செய்தார்.
மார்கண்டேயருக்கு வரவேற்பு
இத்தகைய சிறந்த தவச்சிரேட்டராகிய மார்கண்டேயரைத் தர்மபுத்திரர் சுண்ண பிரானோடு சென்று எதிர் கொண்டு வரவேற்று வணங்கி ஆசனம் தந்து உபசரித்தார்.
அப்போது மார்கண்டேயர், “தர்ம புத்திரரே! தீயவன் அரவக் கொடியோன் துரியோதனனால் தர்மசீலர்களாகிய நீங்கள் தம்பியரோடு கானகம் புகுந்து அனுபவிக் கின்ற துயரங்கள் எல்லாம் பகவான் நீல மேக வண்ணனாகிய கண்ணபிரான் திருவருளால் விரைவில் நீங்கி, பின்னர் நீங்கள், உங்கள் நாட்டை மீண்டும் பெறுவீர்” என்று வாழ்த்தியருளினார்.
அப்பொழுது நாரதமுனிவர் அங்கு வந்தார். தர்மபுத்திரர் அவரை வணங்கி வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து பலவாறு உபசரித்தார். அவற்றையெல் லாம் ஏற்றுக்கொண்ட நாரத மாமுனிவர், சிரஞ்சீவியாக விளங்கும் மார்கண்டேயரை பார்த்து, “முனிவர் பெருமானே! தங்களுடைய வாய்ச் சொற்களை விரும்பி கேட்கும் இம்மன்னனுக்கு வேண்டிய நல்ல அருளுரைகளைப் பகருங்கள்” என்று கூறி, அவ்விடம் விட்டு ஏகினார்.
நாரதர் சென்ற பின் தர்மபுத்திரர் மார்கண்டேயரை நோக்கி, “தவச்சிரேட் டரே! பாவங்கள் பலவற்றை செய்தும் துரியோதனாதியர் இன்பத்தை பெற்று வாழ்கின்றார்கள். அறநெறிகளையே கடைபிடித்து வருகின்ற எங்களுக்கோ சொல்லொணாத் துன்பங்கள் உண்டா கின்றன. இதற்கு என்ன காரணம்? கூறுவீராக” எனக்கேட்டார்.
கர்மாவின் பலன்
மார்கண்டேய மாமுனிவர், “தர்ம புத்திரரே! ஒருவன் செய்கின்ற நல்வினை, தீவினைகளாகிய இரண்டும் இறக்கும் போது அவனுடைய உடலோடு போய்விடா. எடுக்கின்ற பிறப்புக்கள் தோறும் தொடரும். தர்மம் செய்பவர்கள் இவ்வுலகில் மட்டுமல்லாது மறுமையிலும் இன்பம் அடைவர். மாறாக அறம் செய்யாதவர்கள் இம்மையிலும் மறுமை யிலும் இன்பம் அடையவே மாட்டார்கள்.
‘அறம் செய்யாதவர்கள் இம்மையில் இன்பமும், அறம் செய்பவர்கள் இம்மை யில் துன்பமும் அடைகின்றார்களே என்றால் அதற்குக் காரணம் அவர்களின் பழவினையேதான். எனவே பாவங்களைச் செய்கின்ற துரியோதனாதியர் இவ்வுலகத் திலும், அவ்வுலகத்திலும் இன்பம் பெறார். மறுமையில் ஏழு நரகங்களில் போய் விழுவர். நல்லோர்களாகிய நீங்களோ பூமியின் பாரத்தைக் குறைப்பதன் பொருட்டு இவ்வுலகில் அவதாரம் செய்துள்ளீர்கள். எனவே சில நாட்கள் கழித்து, பாவம் செய்கின்றவர்களை கௌரவர்களைக் கொன்றொழித்து அரசாட்சியை நிச்சயம் கைப்பற்றுவீர்கள்” என்று கூறினார்.
இங்கு, தர்மபுத்திரர் கேட்ட கேள்விக்கு திருவள்ளுவர் ஓர் அருமையான குறளில் பதில் கூறியுள்ளார். இக்குறள் ‘அழுக் காறாமை’ என்ற அதிகாரத்தில் வரும்.
”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்”
”அழுக்காற்றினை பொருந்திய மனத்தையுடையவனது ஆக்கமும், ஏனைய செம்மையுடையவனது கேடும் உளவாயின் ஆராயப்படும் என்று உரை கூறுகின்ற கச்சி உலகளந்த பெருமானுக்குக் கைங் கரியம் புரிந்த பரிமேலழகர் ‘நினைக்கப் படும்’ என்பதற்கு கூறும் விளக்கம் மிகவும் அருமையானது ஆகும். அஃது வருமாறு.
ஆக்கமும் கேடும் முறையே அழுக்காறு உடைமையினாலும், செம்மை மனத்து உடைமையினாலும் வருதல் கூடாமையின் அறிவுடையேரால் இதற்கு ஏதுவாகிய பழவினை யாதென்று ஆராயப்படுதலின் நினைக்கப்படும்’ என்றார். அதற்கு மேலும், அவர் ”இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத்திருத்தகு மாமணி கொழுந்துடன் போந்தது” என்ற சிலப்பதிகார (அடைக்கலக்காதை ) வரிகளைச் சான்று காட்டுகிறார்.
வைவச்சுத மனு
தர்மபுத்திரர் மார்கண்டேய முனிவரை வணங்கி, வைவச்சுத மனுவினுடைய கதையைச் சொல்லும்படி பிரார்த்திக்க சிரஞ்சீவியாகவும், பரிசுத்த தவத்தினராயும் விளங்கும் அம்முனிவர் கூறலானார்.
“அறக்கடவுளின் திருமகனே! யுதிஷ்டிரரே! சூரியன் செய்த தவத்தினால் வைவச்சுதன் என்னும் மன்னன் பிறந்தான். அவன் சிறந்த திவ்வியத் தலமாக விளங்கும் பத்ரிகா ஆசிரமத்தில் இரு கைகளை உயரத் தூக்கிக் கொண்டும். ஒரு காலால் நின்று கொண்டும், சில காலம் தலை கீழாக நின்று கொண்டும், கண் மூடாமல் பதினாயிரம் வருடங்கள் கோரமானதும், உறுதியானது மான தவத்தைச் செய்து கொண்டிருந்தான்.
ஒருநாள் அவன் சீவணி நதியில் மூழ்கி, நீராடி கரையேறுகின்ற காலத்து, ஒரு சிறிய மீன் அம்மன்னவனை நெருங்கி, “அரசனே! என்னை பெருமீன் விழுங்கி விடாதபடி வேறொரு நீர் நிலையில் விட்டு என்னைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டியது.
மீனின் அறிவுரை
அதனால் அம்மன்னன் அம்மீனை யெடுத்து அருகிலுள்ள நல்ல நீரையுடைய ஒரு கிணற்றில் விட்டான். தினந்தோறும் வந்து பார்த்து அதன் நலனை அறிந்து சென்றான். ஆனால் அந்த மீனானது வளர்ந்து பருமனாகி, கிணறே கொள்ளா மல் போயிற்று. அதனால் மன்னன் அதனை ஆற்றில் விட்டான். அங்கேயும் அந்த மீன் வளர்ந்து, பருமனாகி, ஆறே கொள்ளாமல் போய் விட்டது. பின்னர் அதனை எடுத்து அலைகள் வீசுகின்ற பரந்த ஆழமான கடலில் விட்டான். அப்பொழுது அந்த மீன், “மன்னவனே! நான் சொல்வதைக் கேட்பாயாக! இன்னும் சில நாட்களில் ஏழு கடல்களும் பொங்கி எழுந்து சப்த லோகங்களும் அழியும்படியாகப் பிரளய காலம் வரப்போகின்றது. அதற்கு முன்ன தாகவே நீர் பெரிய ஓடம் ஒன்று வகையுறச் செய்து, உண்பதற்கான பல பொருள்களை யும், அந்த ஓடத்தினுள் வைத்து சப்தரிஷி களோடு (அகத்தியர்) புலத்தியர், ஆங்கிரசு, கௌதமர், வசிட்டர், காசிபர், மார்கண் டேயர்) பிரளயத்தில் அமிழ்ந்தாலும் அழியாது வந்து சேருவீர்களாயின் உங்களைக் காப்பாற்றுவேன்” என்று கூறி அம்மீன் கடலுள் சென்றிட்டது.
அந்த மீன் கூறியபடியே பிரளயம் தோன்றி ஏழு கடல்களும் (உவர் நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் கடல்கள்) பொங்கி எழுந்தன. வைவச்சுத மனுவும் அந்த மீன் கூறியபடியே சப்தரிஷிகளோடு கூடிய ஓடத்தினை, மீன் அருகே கொண்டு போக, அந்த மீன் மனுவிருக்கும் இடம் வந்து, அந்த ஓடத்தின் கயிற்றினைத் தனது தலையிலுள்ள கொம்பினால் சுற்றிக் கட்டியிழுக்க அவ்வோடம் வீசுகின்ற கடலினுள் புகுந்தது. அலை
யானை துதிக்கை அளவு பெருந்தாரை யாக மழையினை சப்த மேகங்களும் ஒன்று சேர்ந்து பொழிய, அதனால் பெருங்கடல் உண்டாயிற்று. அந்தப் பெருங் கடலில் மேருமலையும் அதனைச் சூழ்ந்துள்ள மலைகளும், சூரியனும், சந்திரனும் மூழ்கின. அதனால் எவ்விடத்திலும் காரிருள் படிந்திருந்தது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்து பிரளயம் நீங்கிய பின்னர் பெரு நீர் வடிந்து, பழைய நிலையை அடைந்தது.
மீன் வடிவில் வந்த திருமால்
மீன் வடிவில் வந்த திருமால், “யுகாந்த காலம் பிரளயத்தில் உங்களை காக்கும் பொருட்டு மீன் வடிவம் எடுத்தேன். நான் இலக்குமி தேவியினுடைய கணவன்; இந்த வைவச்சுத மனுவினால் பிரளய வெள்ளத்தால் அழிந்த ஏழுவகைப்பட்ட பிறப்புக்களும் மீண்டும் சிருஷ்டிக்கப் படும்” என்று கூறி அம்மீன் மறைந்தது.
அதன்பின் வைவச்சுத மனு வேந்தன் சப்தரிஷிகளோடு சேர்ந்து கடுந்தவம் புரிந்து, தாவர ஜங்கமங்களாகிய எல்லா உயிர்களையும் தன் அழியாத தவத்தால் சிருஷ்டித்து இந்த உலகத்தில் நீண்ட நாள் மன்னனாக ஆட்சி புரிந்து வந்தான்.
தர்மபுத்திரர், “முனிவரே! யுக முடிவு (ஊழிக்காலம்) கற்பம் (பிரமனுக்குரியவாழ் நாள் அளவு) ஆகியவை பற்றிக் கூறுக” என்று கேட்க, மார்கண்டேய முனிவர்,
“கிருதயுகம், திரேதாயுகம், துவாரயுகம், கலியுகம் என்ற இந்த நான்கு யுகங்களும் கூடியது மகாயுகமாகும். இந்த மகா யுகங்கள் இரண்டாயிரம் சேர்ந்தது பிரம்ம னுக்கு ஒரு தினமாகும். அதனைத்தான் கற்பம்’ என்பர். அந்த பிரம்ம தினத்தின் பகற் பொழுது முடியும்போது பதிநான்கு இந்திரர்களின் ஆயுட்காலம் முடியும். (அஃதாவது பதிநான்கு இந்திரரது கூட்டிவரும் ஆயுட்காலம் பிரம்மனுக்கு ஒரு பகற் பொழுதாகும்). இரவு முடியும் பொழுது மூவுலகும் ஒடுங்கச் சமுத்திர வெள்ளம் மேலெழுந்து மேருமலையும் அமிழப் பொங்கும். இப்படி பிரம்மனது ஆயுட் காலத்தில் ஒரு தினம் கழியும் ” என்று விளக்கம் தந்தார்.
தர்ம வியாதன்
மார்கண்டேயர், “தருமராசனே! வேத சாத்திரங்களில் சொல்லுகிறபடி சிறிதளவும் பிறழாது தாழ்ந்த குலத்தினர் நடப்பராகில் அவர்கட்கும் மோட்சம் கிட்டும் என்பதற்கு ஒரு கதை கூறுகின்றேன் கேட்பாயாக ” என தர்மபுத்திரருக்குக் கூறலானார்.
சோலைகள் சூழ்ந்து விசிட்டம் என்னும் ஓர் அழகிய மாநகரில் கெளசிகள் என்றோர் அந்தணன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு வேதங்களை ஒதிக்கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த மரத்தின் மேல் இருந்த கொக்கானது அவன் மீது எச்சம் இட்டது. அதனால் மிகுந்த கோபங்கொண்டு அந்தக் கொக்கினைக் கோபத்தோடு உற்றுப் பார்த்தான். உடனே அந்தக் கொக்கு எரிந்து போனது. அதனால் அந்த அந்தணனுக்குத் தான் ஒரு பெரிய முனிசிரேட்டராக ஆகிவிட்டோம் என்ற இறுமாப்பு வந்து விட்டது.
கௌசிக அந்தணன்
அதன்பின் அந்தக் கெளசிக அந்தணன் நாள் தோறும் பிக்ஷை ஏற்று தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். ஒருநாள் கற்பில் சிறந்த நங்கை ஒருத்தி வீட்டில் பிக்ஷைக்குச் சென்று அவளுடைய வீட்டு வாயிலின் முன் நின்றான். திருமகள் போன்று விளங்கும் அந்நங்கை, இவனுக் குப் பிக்ஷையிட எழுந்து வரும் சமயத்தில், அவளுடைய கணவன் பசியோடு வீட்டி னுள் புகுந்தான். அதனால் அவள் அவனுக்கு வேண்டிய உணவு முதலாயின அளித்து உபசாரம் செய்து விட்டு, பின்னர் வாயிற்படியில் பிக்ஷைக்கு நின்றிருந்த அந்தணனுக்குத் தான் கொண்டு வந்த உணவினை இடும் பொழுது “கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளினால் தாமத மாகி விட்டது. அந்தணரே! பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று இதமாகக் கூறினாள்.
வீட்டு வாயிலில் நின்றிருந்த அந்தக் கௌசிக அந்தணன். ”பெண்ணே! விருந்தினரை காட்டிலும் கணவன் உயர்ந்த வனோ? மேலும் நான் ஒரு முனிவன். அப்படியிருந்தும் நின் வாயிற்படியின் கண் என்னை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டாய். இது தகாது” என்று கூறி, மிகுந்த கோபத்தோடு தன் இரு கண்கள் சிவக்க அவளை ஏறிட்டுப் பார்த்தான். அதனை கண்டு அந்நங்கை சிறிதும் அஞ்சாமல், புன்முறுவலோடு, “முனிவர் பெருமானே சற்று முன்னால் நின்னுடைய பார்வையை கொண்டு காட்டில் எரித்தாயே, அந்த சக்தியை நினைத்து என்னைக் கோபிக்க வேண்டாம். என்னை கொக்கென்று நினைத்துக் கொண்டாயா?” என்று நிதானமாகப் படபடப்பு இல்லாமல் கூறினாள். முனிவருக்கோ ஒரே ஆச்சரியம்! “காட்டிலே நம் பார்வை கொண்டு கொக்கை எரித்த கதை இவளுக்கு எப்படி தெரிந்தது” என்று வியந்து போனார். அப்பொழுது அந்நங்கை, “முனிவரே! மங்கையர் கற்பின் மகிமையை நீ உணர வில்லை. மங்கையர்க்கு மணாளனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? வேதங்களைத் தெளிவாக கற்ற நீர் அந்த வேதங்களில் கூறப்பட்டுள்ள மங்கையரின் கற்பின் சிறப்பை உணரவில்லையே. கோபமுடையவன் உயர்ந்த தவசியாக மாட்டான் என்பதை முதலில் உணர்ந்து கொள். தர்மத்தின் நற்சொரூபத்தை நீ அறிய வேண்டுமானால் மிதிலையில் வாழ்கின்ற தவசியர் ஒழுக்கத்தை மேற்கொண்டிருக் கும் தர்மவியாதன் என்ற வேடனிடம் அறிவாயாக” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். கெளசிகனும் மிதிலை மாநகரை அடைந்தான்.
மிதிலைக்கு வந்த கெளசிக அந்தணன் இறைச்சி விற்கின்றவனாகிய தர்ம வியாதன் என்பவனைச் சந்தித்தான். அவன் கௌசிக அந்தணனை அன்புடன் வர வேற்று, “முனிவர் பெருமானே! விசிட்ட மாநகரில் வாழும் கற்புடைய நங்கை ஒருத்தி அனுப்ப நீர் அறநெறிகளைப் பற்றி அறிய இங்கு வந்துள்ளாய் போலும்” என்று கூறினான். அதனைக் கேட்டு கௌசிக முனிவன், தர்ம வியாதரே! தத்துவ அறிவும், கல்வி அறிவும் மிக கொண்டுள்ள நீர் உயிர்களைக் கொன்றதனால் கிடைக்கும் இறைச்சி விற்கின்ற தொழிலை மேற் கொண்டுள்ளாயே அது எவ்வாறு பொருந் தும்? சொல்வாயாக என்று கேட்டான்.
தர்ம வியாதன்
அதற்கு அந்தத் தர்ம வியாதன், “முனிவர் பெருமானே! தனக்கென்று விதிக்கப்பட்ட எந்த ஒரு தொழிலையும் நியாயமாக செய்வதில் எந்தவிதத் தவறு மில்லை. வேடர் குலத்தில் பிறந்தவன் நாள். அதனால் இந்த தொழிலை செய்து வருகின்றேன். மேலும் நான் எந்த உயிரையும் கொல்வதில்லை. பிறரால் கொண்டு வரப்பட்ட இறைச்சியைத்தான் விற்கின்றேன். அதனையும் நியாயமான இலாபத்தை வைத்துக் கொண்டுதான் விற்கின்றேன். அந்த இலாபத்திலும் வறியவர்க்கென்று ஒரு பங்கு ஒதுக்கு கின்றேன். மீதியைக் கொண்டு தான் நான் இல்லறம் நடத்தி வருகின்றேன்.
“பல விரதங்கள் இருந்து தவம் செய்து என்னை என் தாய் தந்தையர் பெற்றனர். அவ்வாறு பெற்ற அவர்களை நான் நாள் தோறும் போற்றி வருகின்றேன். நான் தாழ்ந்த வேடர் குலத்தில் பிறந்திருந்தாலும் சத்தியம், சாந்தம், கருணை, தூய்மை முதலான நற்குணங்களைப் பெற்றுள் ளேன்” என்று கூறினான்.
தர்மவியாதன் தர்மத்தைப் பற்றி மேலும் கூறலானான். முனிவரே! ”கொல்லாமை என்பது மிக உன்னதமான அறம்தான் என்றாலும் சில சமயங்களில் கொல்லுதல் தொழில் செய்ய வேண்டி உள்ளது. இறைச்சி விற்கும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும், வேள்வியில் பலி கொடுப்பதற்காகவும், தீயவர்களை அழிக்க போர் புரிகின்ற காலத்தும், துஷ்ட மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், கொலைத் தண்டனை மூலம் கொடியாரைத் தண்டித்ததற்காகவும், பயிர்கள் நன்கு வளர்வதற்காகவும் உயிர்களை அழிக்க லாம். அவ்வாறு அழியும் உயிர்களுக்கு மறு பிறப்பு கிடையாது. என்றெல்லாம் அறநூல்கள் கூறுகின்றன. எனவே குலத்துக்கென விதிக்கப்பட்ட தொழிலைச் செய்தலில் எந்தவித தவறுமில்லை. அதனால்தான் வேடனாகிய நான் இறைச்சி விற்கும் தொழிலைச் செய்து வருகின்றேன்.
மேலும் ஒருவன் எடுத்த சரீரம் நல்வினை, தீவினை என்ற இரண்டின் விளைவாக பிறந்திடலால் குற்றமில்லாத இன்பமோ துன்பமோ முற்பிறப்பில் செய்த வினையினால் வினைவதன்றி, நடுவில் இப்பிறப்பில் செய்யும் செயல்களால் விளையா.
முற்பிறப்பு வினைகள்
தெளிந்த அறிவில்லாதவர் இன்பம் வந்தபோது தன்னால் வந்தது என்பர். துன்பம் வந்தால் தெய்வத்தினால் வந்தது என்பர். ஒருவன் இன்பத்தையே நாடுவானாயின் பொதுவாக அவனுக்குத் துன்பம் நேராது.
“நல்லொழுக்கத்தையே மேற்கொண்டு அறநெறியில் தவறாது விளங்கும் பெரியோர்களில் சிலர் செய்யும் நற்செயல்கள் சிதையினும் சிதையும். மாறாக நடுவு நிலை தவறி இழிவான செயல்களைச் செய்கின்ற கீழ்மக்கட்கு அவர்கள் எடுக்கின்ற செயல்கள் எளிதாக முடியும். இந்த விபரீதமான முடிவுக்கு காரணம் அவரவர்கள் முற்பிறப்பில் செய்துள்ள வினைகளே ஆகும். எந்த உயிரும் கொடிய ஊழ்வினை தீரும்போது அது தேகத்தை விட்டு விடும். அப்போது உருவம் இல்லாத ஆன்மாவும் அவ்உடலை விட்டு நீங்கும்.”
இவ்வாறு தர்ம வியாதன் அறநெறி களைச் சொல்லி கொண்டு வர, கௌசிக அந்தணன் அவனைப் பார்த்து, “ஆன்மா வானது எத்தகைய உருவத்தையுடையது? வினையின் பயனாக உடலும் எந்த இடத்தில் போய்ச் சேரும்” என்ற கேள்வி களை எழுப்பினான்.
ஆன்மாவுக்கு உரு கிடையாது
அதனைக் கேட்டு தர்ம வியாதன், “முனிவரே! ஆன்மா என்றும் உருவ மில்லாதது. ஆனால் அந்த ஆன்மா தூல தேகத்தில் இருந்து ஸ்தூல தேகத்தில் குடிபுகும். அந்த ஸ்தூல உடம்பையும் விட்டு நீங்கி, சூட்சும தேகத்தில் புகுந்தும் அங்கேயும் தங்காது. அந்த உடம்பையும் விட்டு யாதனா சரீரத்தைத் தாங்கி நிற்கும். அழியும் உடம்பை, அழியாத ஆன்மா தானே என்று மயக்கியிருத்தலால். தேகாத்மா வாதத்தால் நரகத்தில் யம வேதனையை பட தொடங்கி, அதனைத் தூல சரீரமாயிருந்தபோது தான் செய்துள்ள நல்வினைக்கேற்ப சுகத்தையும், தீவினைக் கேற்ப துயரங்களையும் அனுபவிக்கும். அனுபவித்த பின்னர் அந்த நரகத்தில் மிச்சமாக நிற்கும்படி ஆக்கிக் கொள்ளும். சுத்த சாத்வீக வினையாக இருக்குமானால் தேவலோகத்தில் தேவனாக பிறக்கும். அங்ஙனமின்றி அந்த ஆன்மா நன்மை தீமை கலந்த வினையாயின் மானிடனாகப் பூலோகத்தில் பிறக்கும். தீயவினைகளே ஓங்கி நிற்குமாறு அந்த ஆன்மா, தமோ குணத்துக்குரியவைகளான விலங்கு முதலான இழிந்த பிறப்புக்களில் பிறக்கும்.
”சரீரத்தை ஆன்மாவினும் வேறுபட்டது என்று ஒருவன் அறிவானேயாயின் தான் உழலுகின்ற பிறவியாகிய பெருங்கடலை எளிதில் தாண்டி மோட்சத்தை அடைந்து, இறைவனோடு சேருவான்”.
இவ்வாறு கூறிய தர்ம வியாதன் மேலும் பக்குவமான தத்துவ ஞான உண்மைகளைக் கூறலானான்.
“கெளசிக அந்தணரே! இருவகை அறங்களுள் துறவறம் மிகச் சிரமமானது. துறவற வொழுக்கத்தில் சிறிதளவு தவறுவாரேயாயின் அவர்களுக்கு மோட்ச கதி கிட்டாது. ஆனால் சிறப்பித்து பேசப் படுகின்ற மற்றோர் அறமாகிய இல்லறத்தை மேற்கொண்டுள்ள இல்லறத் தவர் ஒழுக்கம் தவறுவாராயினும், தாம் செய்கின்ற சிறந்த நல்வினைகளால் மறுமை இன்பத்தை அடைவர். மேலும் தென்புலத்தார்,தெய்வம், சுற்றம். விருந்தினர் ஆகிய இவர்களுக்கு உற்ற துணையாக இருத்தலினால் கற்புடைய மனையாளோடு வாழும் இல்லற வாழ்வே மிகச் சிறந்தது ஆகும். அந்தக் கற்புடைய மனைவிக்குக் கடவுள் அவள் கணவனே யாவான். அந்த கணவனுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர்கள் அவனை ஈன்றவர்களேயாவர்” என்று இவ்வாறு கூறிய தர்மவியாதன், மேலும், ‘ஐயனே! என் தாய் தந்தையர்களைத் தெய்வமாக கொண்டு பணிவிடைகள் செய்து வருதலி னால் நான் இத்தகைய பெருஞ்சிறப்பு எய்தியுள்ளேன். நீயோ பெற்றெடுத்த தாய் தந்தையர்களை வருந்தும்படி அலைய விட்டு, எல்லார் வீட்டு வாயில்களிலும் வந்து கையேந்திப் பிக்ஷைக்கு நிற்கின்றாய். ஆதலால் உண்மையான தத்துவ நெறியை நீ அறிந்த Μια ποτ σταθού στι ου. இனியாவது உன் வயதான பெற்றோர்களிடம் சென்று அவர்களைத் தெய்வமாகப் பாவித்து, அவர்கள் முதுமைப்பருவத் துன்பத்தைப் பொக்கி தன் தன்கு பாதுகாப்பாயாக. அதோடு இல்லறத்தில் இருந்து ஒழுகு சிறப்புடைய மனை வாழ்க்கையில் நிலைத்திருந்து நடப்பாயாகில் கொடிய தீவினைப் பயன் மேலான நற்கதியைப் பெறுவாய்” என்று பல அறிவுரைகளைக் கூறினான். நீங்கி,
மகிழ்ச்சி அடைந்த கௌசிகன்
தர்ம வியாதனுடைய நல் அறிவுரை களையெல்லாம் கே கேட்ட கௌசிகன் மிக்க மகிழ்ச்சி கொண்டு, “ஐயனே! அடைதற் கரிய மோட்சத்தினை அடைவதற்குரிய தர்ம நெறிகளையெல்லாம் அருளிய நீ யார்? நான்முகனோ? அறிவில் சிறந்த ஆதிசேடனோ? தர்ம தேவதையோ? சொல்வாயா வாயாக இத்தகைய உண்மை நெறிகளையெல்லாம் உணர்ந்த நீ சூத்திர ஜாதியில் பிறந்ததற்கு முற்பிறப்பில் நீ செய்த செயல் யாது?” என்று கேட்டான்.
முற்பிறப்பில் செய்த தவறு
அதற்குத் தர்ம வியாதனாகிய அந்த வேடன், “கெளசிக முனிவரே! நான் முற்பிறப்பில் வேதங்களை நன்கு கற்ற அந்தணனாயிருந்தேன். அப்போது ஓர் அரசனோடு நட்பு கொண்டு, அவனுடன் காட்டில் வேட்டையாடச் சென்றேன். அங்கு மான் தோலை போர்த்திக் கொண் டிருந்த ஒரு முனிவரை, மான் என தவறாக நினைத்து அம்பினை ஏவிலிட்டேன். அதனால் அவர் அடிபட்டு தரையில் விழுந்து இறப்பதற்கு முன் வெகுண்டு “இருள் போன்ற கரிய உடம்பினையுடைய வேடனாக பிறப்பாய்” என்று சாபமிட் டார். அதனைக் கேட்டு நான் அஞ்சி, அவர் அருகே சென்று, அவர் உடம்பில் பட்டிருந்த அம்பினை மெல்ல எடுத்து, புண்ணுக்கு மருந்து தடவி, அவர் துன்பத்தினைப் போக்கி, “ஐயனே! என் பிழை பொறுத்திடுவீர்”, என வேண்டி நின்றேன். அதனால் அந்த முனிவர் மனமிரங்கி,”நீ வேடனாக பிறந்தாலும் தர்ம ஞான மார்க்கத்தை கடைபிடிக்கும் முனிவனாகுவாய்” என்று அருளினார். அந்த முனிவர் கூறியபடியே எனக்கு வேட சரீரம் வந்துள்ளது” என்றான். இதனைக் கேட்டு கெளசிகன் வியப்படைந்து தர்ம வியாதனைப் பெரிதும் பாராட்டினான்.
அதன்பின் அக்கெளசிக முனிவன் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு. தனக்கு நல் வழி காட்ட உதவியாக இருந்த பத்தினிப் பெண்ணிடம் சென்று அவளை மனமாரப் பாராட்டினான். அதன் பின் தன் வீட்டிற்கு வந்து தன் தாய் தந்தையரை வணங்கி அவர்களை நன்கு பாதுகாத்து வரலானான். தர்ம வியாதன் சொற்படி நற்குண நற்செய்கைமிக்க நங்கை யொருத்தியை நன்மணம் புரிந்து நல்ல முறையில் இல்லற வாழ்க்கையை இனிது நடத்தலானான்.
முருக பெருமானின் திரு அவதாரம்
மார்கண்டேயர் கூறிய அருளுரைகளை யெல்லாம் கேட்டிருந்த தர்மபுத்திரர், “முனிவர் பெருமானே! ஆறுமுகங்களும் பன்னிரு கைகளும் உடைய திருமுருகப் பெருமானின் திரு அவதாரச் சிறப்பை கூறுக” என்று கேட்க, அம் முனிவர் கூறலானார்.
ஒரு காலத்தில் அசுரர்களுடைய தொல்லையைத் தாங்க முடியாமல் தேவர்கள் பெரிதும் துன்பமுற்றார்கள். அசுரர்கள் இந்திராதி தேவர்களைத் தங்கள் அடிமைபோல நடத்தினார்கள். இதனால் மனம் நொந்த தேவேந்திரன் தேவர்கள் தன்னைச் சுற்றி வர கயிலாயத்துக்குச் சென்று அங்கு உமையொரு பாகனாக விளங்கும் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்.
பின்னர், அப்பெருமானை நோக்கி. பரமேசுவரா! பார்வதிமணாளா! கயிலாய வாசா! திரிபுராந்தகா! அசுரர்கள் கொடுக் கின்ற தொல்லைகளால் எல்லையற்ற துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றோம். அதனால் உங்களிடம் அடைக்கலமாக வந்துள்ளோம். அடைக்கலப் பொருளைக் காப்பது தங்கள் கடமை அல்லவா! அதனால் ஒரு புதல்வனை சிருட்டித்துக் கொடுத்து எங்கள் துன்பத்தைப் போக்கி காப்பாயாக’ என்று குறையிரந்து தின்றார்கள்.
இளவொளி வீசும் பிறைச் சந்திரனை யும், கங்கையையுமுடைய செஞ்சடை தாங்கிய அப்பெருமான் மனமிரங்கி, தன்னுடைய சுக்கிலமாகிய அக்கினியை, அக்கினிதேவன் பூஜிக்கும்படி கொடுத்து, பின் தேவராஜனாகிய இந்திரனை நோக்கி, “இந்திரனே அஞ்ச வேண்டாம். தன்னிகரற்ற அசுரர்களை அழிக்கக்கூடிய பாலகன் ஒருவன் தோன்றுவான். அவன் உங்கள் துன்பங்களை எல்லாம் நீக்குவான். இனி நீங்கள் நிம்மதியாகச் செல்லலாம்” என்று கூறி அனுப்பினார். தேவர்களும் மிக்க மகிழ்ச்சியோடு அமராவதிப் பட்டினம் சென்றார்கள்.
அக்னி தேவனின் யாகம்
அக்னி தேவன் அந்த சுக்கிலத்தைப் புசித்தான். ஆனால், அதனைத் தாங்கு தற்குச் சக்தியற்றவன் ஆனான். அதனால் சப்தரிஷிகள் அக்னிதேவனை அழைத்து ஒரு யாகத்தை அவன் நன்மை அடையும் படி செய்தனர். அந்த யாகத்திற்கு சப்தரிஷிகள் தங்கள் மனைவிமார்களைப் பணிவிடை செய்ய அனுப்பினார்கள். யாகத்திலிருந்து தோன்றிய அவிர்ப் பாகத்தை அந்தச் சப்தரிஷிகள் தேவர் களுக்குக் கொடுத்துத் திருப்தி செய்தனர். அப்போது அக்னிதேவன் சப்தரிஷிகளின் மனைவிமார்களின் மேல் இச்சை கொண்டு, அதனால் உடல் இளைத்தான்.
அக்னிதேவன் あし மேலீட்டால் இளைத்துப் போனதை அவன் மனைவி ஸ்வாஹை என்பவள், அறிந்து, அந்தச் சப்த ரிஷிகளின் மனைவிமார்களின் கற்புக்குப் பங்கம் நேரிடாமல் இருக்கச் சூழ்ச்சி செய்து கற்பினில் சிறப்பித்துப் பேசப்படு கின்ற வசிட்டரின் மனைவியாக அருந்ததி தவிர மற்றைய அறுவரின் வடிவத்தைத் தானே எடுத்துக் கொண்டு அந்த ஸ்வாஹை அக்னி தேவனோடு சேர்ந்தாள். (அருந்ததி யினுடைய தவத்தின் மகிமையாலும், கணவனாகிய வசிட்ட மாமுனிவருக்கு மன முவந்து செய்யும் பணி விடைகளாலும் அவளுடைய திவ்ய ரூபத்தை ஸ்வாஹை தேவிக்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.)
ஆறுமுகனின் தோற்றம்
அக்னி தேவனோடு சேர்ந்த ஸ்வாஹை அக்னி தேவனிடமிருந்து சிவபெருமான் கொடுத்த விந்துவை ஏற்றாள். ஆனால் அவளாலும் அதனைத் தாங்க முடிய வில்லை. அதனால் அவள் இமயமலை சாரலிலுள்ள சரவண பொய்கையின் அருகே இருந்த நாணலில் சிந்த வைத்துச் சென்றாள். அந்த விந்து எல்லாவிடத்திலும் கிளர்ந்தெழுகின்ற அக்னியின் பிறப்பை போல வானளாவ உயர்ந்து, பிரதமை திதி முதல் பஞ்சமி திதி வரையுள்ள ஐந்து நாட்கள் தங்கி, ஆறாவது நாளாகிய சஷ்டி திதியில் ஆறுமுகங்களோடும் மற்றைய அவயங்களோடும் தாமரை போன்ற பன்னிரண்டு கைகளோடும் உலகம் உய்ய ஒரு தனி முதல்வனாய் ஒப்பற்ற பாலகனாய் தோன்றி பொலிவு பெற்றது.
(பிரதமையில் வீரியம் சரவணப் பொய்கையில் ஆறு தடவை போடப்பட அது திரண்டு ஆறு தலைகளும், பன்னி ரண்டு காதுகளும், பன்னிரண்டு கண்களும், பன்னிரண்டு கைகளும் கொண்டு, ஒரு கழுத்தோடும், ஒரு தேகத்தோடும். பாலனாக தோன்றத் தொடங்கியது. இரண்டாவது திதியாகிய த்விதியையில் குழந்தையாகத் தோன்றியது. மூன்றாவது திதியாகிய திருதியையில் குழந்தையாக நன்கு விளங்கியது; நான்காவது திதியாகிய சதுர்த்தியில் அங்கங்களோடும் அவற்றின் அவயங்களோடும் குகன் ஆயினான். ஐந்தாவது திதியாகிய பஞ்சமி திதியில் உலகமெல்லாம் அவனைச் சரண் அடை யும்படியாகக் கந்தனாயினான். ஆறாவது திதியாகிய சஷ்டி திதியில் அளத்தற்கரிய ஆற்றலுடைய ஷண்முகனானான்.)
தாமரை மலர் போன்ற பன்னிருகைகளிடத்தும் வேல் முதலிய ஆயுதங்கள் தாங்க முருகப் பெருமான் திரு அவதாரம் செய்தான். பன்னிரு கைகளிலும் படை முதலான விளங்குதலை, பரிபாடல் (5)
“அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமும் மானும் வாளும் செறியிலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும் வேறுவேறு உருவின் இவ்வாறிரு கைக் கொண்டு”
என்று கூறுகின்றது. பிறந்தவுடன் முருக பெருமான், சிவபெருமான் முன்னொரு தடவை திரிபுரத்தை அழிக்க மேரு மலையை வில்லாகத் தூக்கி நிறுத்தியது போல இவனும் அம்மலையை எடுத்து நிறுத்தினான். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல வலிமைமிகு கிரௌஞ்ச மலையோடு வேறு மலை கூட்டங்களை யும் ஊடுருவி சென்று பூமியின் மேல் பொடிப் பொடியாய் விழும்படி கொடிய அம்பினைத் தொடுத்து ஆச்சரியமான திருவிளையாட்டுகளைச் செய்து காண் பித்தான். அவன் செய்கின்ற வீர விளை யாட்டுக்களைக் கண்டு தேவர்கள் மனம் நடுங்கினர்.
கந்தனைக் கொல்ல இந்திரன் முயற்சி
”வசிட்ட மாமுனிவர் மனைவி அருந்ததி அல்லாத சப்தரிஷிகளின் மனைவி யரிடத்தில் அக்னி தேவன் பெற்ற குழந்தை இந்தக் கந்தன்” என முனிவர்கள் சொல்ல அதனைத் தேவர்கள் கேட்டு இந்திரனிடம் கூறினார்கள். அதனால் இந்திரன் சுந்தனைச் சாதாரணமானவனாக நினைத்து, அப்பெரு மானைத் கொல்லும்படி சப்த மாதர்களை (அபிராமி, இந்திராணி, கவுமாரி, காளி, நாராயணி, மகேசுவரி, வராகி) அனுப்பி வான். அவர்களோ அவன் பாலகள் ஆனதால் அவனைக் கொல்ல முயற்சி செய்யாமல் தாய்மை உறவு பூண்டனர். அதனால் இந்திரன் மேலும் கோப முற்றான்
அப்பெருமான் சிவபெருமானின் புதல்வன் என்பதை அறியாமல் “கந்த னாகிய இந்தப் பாலகனைக் கொல்வேன்” என்று வீர வாதம் பேசி, பெருந்தேவ சேனையோடு வெள்ளை யானையாகிய தன் ஐராவதத்தின் மீது ஏறிச் சென்று எதிர்த்துப் போரிட்டான். அப்பெருமா னுடைய கண்களிலிருந்து நெருப்பு கொழுந்து வீசிச் சுட்டெரித்தலாலே இந்திரனுடன் சென்ற தேவசேனை அவனிடம் சரண் புகுந்தது. தன்னுடைய சேனை, முன்னின்று எவற்றையும் முடிக்கும் முருகப் பெருமானிடம் சரண் புகுந்ததை கண்டு, இந்திரன் வெகுண்டு தன் வச்சிரப்படையை அப்பெருமான் மீது ஏவினான். உடனே அப்பெருமானுடைய வலது தோளிலிருந்து ஏராளமான போர் வீரர்கள் தோன்றி, அந்த இந்திரனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
வச்சிரப்படையால் அடித்த தோள்களி னின்று வீரர்கள் உற்பத்தியானதைக் கண்டு. இந்திரன் கந்தன் பெருமையுணர்ந்து நடுநடுங்கி, “இந்த பாலகன், உலகமுண்ட பெருவாயன் ஆகிய திருமாலோ? நான்முகனோ? சிவபெருமானோ? அச்சிவபெருமானைப் பிரார்த்தித்தபோது அப்பெருமான் கருணையோடு அசுரர்களை அழிக்க மகனொருவன் தோன்றுவான் என்றானே அந்த மகன்தானா? தெரிய வில்லையே அவனையே கேட்டறியலாம்” என்று நினைத்து, முருகப்பெருமானிடமே சென்று, “கந்தா சரணம்! வேலா சரணம்.” என்று கூவிக் கொண்டே அவன் திருவடி களில் விழுந்து வணங்கினான். அங்கு வந்த முனிவர்கள் மூலம் அசுரர் ளை அழிக்க சிவபெருமான் தோற்றுவித்த மகன் இவனே என்பதை இந்திரன் அறிந்து மீண்டும் அவனை வணங்கி, எழுந்து நின்று. “கடம்பா! கார்த்திகேயா! என் பிழை பொறுக்க வேண்டும். சூரபதுமன் முதலான அசுரர்களால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்க வேண்டும்’ என்று வேண்டி னான்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றிய அக்குமரக் கடவுள், “தேவராஜனே! அஞ்சேல். எட்டுத் திக்கிலும் புகழும்படி யான நின் தேவசேனைகளுக்குத் தலைவ னாகித் தேவசேனாதிபதியாவேன். பின் அசுரர்களைக் கொன்று உன்னைக் காப் பாற்றுவேன் ” என்று உறுதிமொழி கொடுத்தான்.
சூரபதுமன் வதம்
இந்திரனிடத்தில் சொன்னபடியே ஆறுமுகப் பெருமான் தேவசேனாதிபதி யாகித் தேவர்களுக்குத் தொல்லை விளைத்த தாருகாசூரனையும், சிங்க முகாசூரனையும் வென்றான். கொன்றான். இவர்களுடைய தமையன் சூரபதுமன் இந்திர ஜாலத் தேரேறி வந்து முருகப் பெருமானுடன் மாயப் போர் புரிந்தான். அப்பெருமான் பஞ்சாட்சரத்தையே துணையாகக் கொண்டு அவன் புரிந்த மாயைகளை யெல்லாம் தன் வேலினால் தகர்த்தெறிய அவன் மாமரமாக நின்றான். உடனே திருமால் மருமகனாகிய முருகப் பெருமான் தன் ஞானசக்தி வேலினால் அதனைப் பிளக்க, மாமரமாக நின்ற சூரபதுமன் மயிலும் சேவலும் ஆனான். பின்னர் அந்த மயிலைத் தனக்கு வாகன மாகவும் சேவலைக் கொடியாகவும் கந்த பெருமான் ஆக்கி கொண்டான். அதனால் இந்திரன் பெரு மகிழ்வுற்றான்.
சூரபதுமனாதிய அசுரர்களைக் கொன் றொழித்த கந்தன் கருணையை எண்ணிப் பார்த்து இந்திரன், தன் வளர்ப்பு மகளாகிய தேவசேனையைத் திருமணம் செய்து கொடுக்க எண்ணினான். அதனால் அவன் ஆறுமுக பெருமானை நோக்கி, “நான் செய்த தவத்தின் பயனாக வளர்க்கப்பட்ட வளும், ஐராவதமாகிய வெள்ளை யானை யால் வளர்க்கப்பட்டவளுமாகிய தெய்வ யானையம்மையை (தேவசேனை) வெந்தழல் போல் ஒளி வீசுகின்ற கூரான வேலை ஏந்தியவனே! நீர் மணந்து கொள்ள வேண்டுகிறேன்” என்று வேண்ட, கந்தப் பெருமான் அதற்குச் சம்மதித்தான்.
தெய்வயானையுடன் திருமணம்
தேவர்களும், முனிவர்களும் சூழ்ந் திருப்ப, நான்முகனோடும், திருமா லோடும், விநாயகப் பெருமானோடும் எழுந்தருளிய சிவபெருமானின் இடப் பாகத்தில் மருவிய பார்வதிக்கு, “இவன் நின் புதல்வன் ” என்று கந்தனை, கடம்பனை, சரவணனை, சண்முகனை, இந்திரன் சுட்டிக் காண்பித்தான். அதனால் ஆறுமுகப் பெருமான் உலகங்களையெல் லாம் படைத்து, காத்து அழிக்கின்ற முத்தொழில்களைப் புரிகின்ற சிவபெரு மானையும், உமையம்மையையும் வணங்கிப் போற்றினான். சிவபெருமான் அப்பெருமானுக்கு அப்போது தெய்வத் தன்மை வாய்ந்த கடப்பம் பூ மாலையை யும், வெற்றியையே உண்டாக்குகின்ற வெற்றி வேலையும் தந்து அருளினான்.
அதன் பின் மயனால் கட்டப்பட்ட குற்றமற்ற திருமண மண்டபத்தை அப்பெருமான் அடைந்தான். தேவேந்திரன் தவத்தினால் பெற்ற தெய்வயானையை அத்திருமண மண்டபத்தில் ஆறுமுகப் பெருமான் வலப்பக்கத்தில் நிற்க வைத்து, தனது உள்ளங்கையால் நீரைத் தாரை வார்த்துக் கன்னிகா தானம் செய்து கொடுக்க அந்த ஆறுமுகப்பெருமான் ஏற்றான். பின்னர் சிவபெருமான் முன்னர் கொழுந்து விட்டெரிகின்ற அக்னி சாட்சி யோடு விவாகத்தைச் செய்து முடித்தான். அதன்பின் சிவபெருமான் பார்வதி அன்னையோடு கயிலையங்கிரியை அடைந்தார்.(இத்திருமணம் திருப்பரங் குன்றத்தில் வைதிக நெறிப்படி நடத்தப் பட்டது என்பர்).
கந்தப்பெருமானும் தெய்வயானையும் ஆசனத்தில் அமர்த்திருக்க, जी தேவ னும், அவன் மனைவி ஸ்வாஹா தேவியும். கங்கா தேவியும் அக்கந்தப் பெருமானை நெருங்கி வந்து அப்பெருமான் அவர்களு டைய பிள்ளை என்பதை விவரமாக உணர்த்த காங்கேயன் மகிழ்ந்து அவர்கள் கேட்ட வரத்தை கொடுத்து அனுப்பினான்.
கார்த்திகை பெண்கள்
அதன்பின் வசிட்டர் மனைவி அருந்ததி அல்லாத மற்ற ஆறு முனிவர்களின் பத்தினி மார்கள், கந்தப்பெருமானை நோக்கி, பெருமானே! தாங்கள் அக்னி பகவானிடத்து உங்களைப் பெற்றோம்” என்று தேவர்கள் கூறிய பழிச் சொற்களால் எங்கள் கணவன்மார்கள் எங்களை நீக்கி விட்டார்கள். ”எனவே எங்களுக்கு விமோ சனம் தந்தருள்வாயாக” என்று வேண்டினர். அதனைக் கேட்டு முருகப் பெருமான் மனமிரங்கி அந்தப் பெண்களை நீக்கு தலில்லாத கார்த்திகைப் பெண்களாக என்றும் விளங்கும்படி நட்சத்திரப் பதவியில் நிலை பெற வைத்தார்.
(இந்த கார்த்திகை பெண்களால் பெறப் பட்டவன் என்ற கருத்தினால் முருகன் ‘கார்த்திகேயன்’ என்று கூறப்பட்டான். அதனால் கார்த்திகை நட்சத்திரமும் சிறப்புடைய நட்சத்திரமாயிற்று). ஆக, ருத்திரன், அக்னி, ஸ்வாஹை. ஆறு கிருத்திகை பெண்கள் (அருந்ததி அல்லாத சப்தரிஷிகளின் மனைவிமார்கள்) ஆகிய டய தேஜஸினால்தான் கந்தன் இவர்களுடைய உண்டானார் என்பதை அறிக).
இந்திரனுடன் போர்
திருமாலின் மருமகனாகிய கந்தப் பெருமான், தேவேந்திரனுக்கு உதவி புரிந்த விவரங்களையும், அவனுக்கு மருமகன் ஆன தன்மையையும் அறிந்த மயிடா சூரன் என்பவன் கோபித்துக் கடல் போன்ற தன் நால்வகைச் சேனைகளுடன் புறப்பட்டு, இந்திரனை எதிர்த்துப் போரிட அமராவதிப் பட்டினத்தை முற்றுகையிட்டான். இந்திராதி தேவர்கள் அவனுடன் உக்கிர மாகப் போரிட்டுத் தோற்றார்கள். இதனை அறிந்த கந்தப்பெருமான் வெருண்டு, தேவர்கள் படைத் தலைவனாகி (தேவ) சேனாதிபதியாகி) இந்திரன் முதலானோர் சூழ்ந்துவர, எதிர்த்துப் போரிட்ட அசுரர்கள் மீது கொடிய ஆயுதங்களைச் செலுத்திக் சுடும் போர் புரிந்தார். அசுரர்களும் உக்கிர மாக போரிட்டார்கள். வெற்றி தோல்வி என்பது இல்லாமல் கொடிய போர் நடந்தது. இறுதியில் கந்தப் பெருமான் தன் ஒளிரும் வேல்தனை விட்டு அவன் தலையைக் கொய்து, பெறுதற்கரிய அவனது உயிரை இயமனுக்கு விருந்தாகப் படைத்திட்டான். தேவர் சேனைகளுக்குத் தலைவனாகி போரிட்டதனால் முருகப் பெருமானைத் ‘தேவ சேனாபதி’ என்றும் அழைப்பர்.
அறுபடை வீடுகள்
முருகப்பெருமான், தேவர்களுக்குத் துன்பம் செய்த அசுரர்களையெல்லாம் தன் வேலினால் வீழ்த்தி, தெய்வ யானையோடு விண்ணவரும் மண்ணவரும் போற்ற விளங்கினான். அப்பெருமான் முக்கியமாக வீற்றிருக்கும் இடங்கள் ஆறாகும். அவற்றை ஆறுபடைவீடுகள’ என்பர். அவையாவன:
1) திருப்பரங்குன்றம்
2) திருவாவினன்குடி (பழனி)
3) திருவேரகம் (சுவாமி மலை)
4) திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
5) பழமுதிர்ச்சோலை
6) குன்றுதோறாடல்
குன்றுகள் இருக்குமிடமெல்லாம் ‘குமரன் வீற்றிருப் பான்’ என்பர். திருத்தணிகை, வள்ளிமலை, மயிலம் போன்ற தலங்கள் இதில் அடங்கும். இந்த ஆறுபடை வீடுகளின் பெருமையைக் திருமுருகாற்றுப்படை மிக அழகிய முறையில் எடுத்துக் கூறுகின்றது.
(முருகப்பெருமானின் வரலாற்றைக் கந்த புராணம் போன்ற நூல்கள் கூறுவதற்கும், இங்கு இருப்பதற்கும் நிறைய வேறு பாடுகள் உள்ளன).
மகாபாரதம் – 28 மார்கண்டேயர் கதை… முற்பிறப்பில் செய்த தவறு… அறுபடை வீடுகள்… Asha Aanmigam