இந்திரனின் சிறப்புடைய விருந்தினராகத் தேவ லோகத்தில் தங்கியிருந்த அர்ச்சுனன், தன் தமையனார், தன்னைப் பிரிந்து என்ன பாடுபடுவாரோ என்று எண்ணி, எங்கி, வருந்தி, தன் தந்தை இந்தி ரனைக் கண்டு வணங்கி, தன் தமையனார் தர்மபுத்திரரிடம் செல்ல வேண்டுமென்ற தன் விருப்பத்தை வெளியிட்டான். உடனே இந்திரனும், அர்ச்சுனனைத் தன் தெய்விகத் தேரின் மேல் ஏறச்செய்து, அதனை அவன் செலுத்திவர, தான் தன்னுடைய ஐராவதத்தின் மேல் அமர்ந்துவர, தேவர்கள் சூழ்ந்து வர, தர்மபுத்திரர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.
இந்திரன் முதலில் அர்ச்சுனனை அனுப்பி விட்டுத் தான் ஓரிடத்தில் தங்கி யிருந்தான். வெற்றிகளையே அணிகலன்களாக அணிந்திருக்கும் அர்ச்சுனன் தர்ம புத்திரர் முதலானவர் மகிழ்வுறும்படி அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அர்ச்சுனன் முதலில் தமையன்மார்களாகிய தர்மபுத்திரர், பீமசேனன் ஆகிய இருவரையும் வணங்கி அவர்களின் நல்லாசி பெற்றான். பின்னர் தம்பியர் நகுல சகாதேவர்கள் தன்னை வணங்க, தான் அவர்களைத் தழுவிக் கொண்டு நல்லாசி கூறினான். அதன்பின் யாகாக்னியில் தோன்றிய பாஞ்சாலன் திருமகள் திரௌ பதியைக் கண்டு இதமான சொற்களைக் கூறி அவளின் பிரிவுத்துயரை போக்கினான். அதற்கு பின் அங்கிருந்த முனி சிரேட்டர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி அவர்களின் நல்லாசியினைப் பெற்றான்.
அதன்பின் அங்கு வந்த தேவேந்திரனைத் தர்மபுத்திரர் தம் தம்பியரோடும் திரௌ பதியோடும் எதிர் சென்று வணங்கி வரவேற்று உபசரித்தார். பின்னர் தர்மபுத்திரர் தங்களை ஆட்கொண்ட இந்திரனின் கருணைத் திறத்திற்கு மனமுருகினார். தாங்கள் செய்த தவத்தினால்தான் அப்பெருமானின் அருள் திறம் கிட்டியது எனப் போற்றி தர்மபுத்திரர் புகழ்ந்தார்.
இந்திரனின் வாழ்த்து
இந்திரன், அவர்களின் உபசரிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, “தர்மபுத்திரரே! வாய்மைச் செல்வரே! கௌரவர் நடத்திக் காட்டிய வஞ்சனைமிக்க சூதாட்டத்தினால், பொறாமைமிக்க தீயகுணம் கொண்ட துரியோதனன் உங்கள் நாட்டை யும் செல்வத்தையும் கவர்ந்து கொள்ள நீங்கள் வெங்கான் வந்து சொல்லொணாத் துன்பம் அடைகின்றீர். இது நெடு நாள் நீடிக்காது. வனவாசமும் அஞ்ஞாத வாசமும் முடிந்தவுடன் அந்தப் பாழ்த் துரியோதனாதியரை கொன்றுக் குவித்து உங்களுக்குரிய நாட்டை நிச்சயம் மீட்கப் போகின்றீர். பின்பு நன் முறையில் ஆட்சி செய்து குரு வம்சத்தின் பெருமையை மேலும் சிறந்து விளங்க செய்யப் போகின்றீர். என்னுடைய மனமார்ந்த வாழ்த்து உங்களுக்கு என்றும் உண்டு” என்று கூறி வாழ்த்தினான்.
இந்திரன் மேலும் தர்மபுத்திரரிடம், ”இந்த அர்ச்சுனன் சாதாரணமானவன் அல்லன்; பெரும்புகழுக்கு இருப்பிடமான வன்; இவன் செய்த அரிய செயல்கள் ஒன்றா இரண்டா… இல்லை… பலப் பல. முதலில் யாரும் பெறுதற்கரிய பாசுபதாஸ் திரத்தை, பிறவா யாக்கைப் பெரியோனா கிய சிவபெருமானைக் குறித்து அரிய தவம் செய்து பெற்றான். தேவர்களிடத்தில் பல திவ்வியாஸ்திரங்களைப் பெற்றுள்ளான். இவை மட்டுமா ? யாராலும் வெல்ல முடியாத எனக்குத் தொல்லை கொடுத்து வந்த நிவாத கவச காலகேகயர்களை அழித்து அவர்களை இயமனுலகுக்கு அனுப்பினான். அந்தச் செயல் மூலம் விண்ணாட்டை எனக்குரியதாக்கினான். இத்தகைய வீரம் செறிந்த அருமையான தம்பி உமக்கு இருக்கும்போது உம்முடைய நாட்டை நீர் பெறுவது என்ன அரிய செயலா. இல்லை எளிய செயலே.எனவே நீங்கள் எளிதில் உங்கள் நாட்டை மீண்டும் பெறுவீர்களாக” என்று கூறினான்.
இவ்வாறு இந்திரன் அர்ச்சுனனைப் பாராட்டிக் கூறியதைக் கேட்டு, “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் ” போல பெரிதும் உள்ளங்களித்து ”உம்முடைய அருள் இருக்குமானால் எங்களுடைய துன்பமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல நீங்கி விடும்” என்றார் தர்மர்.
இந்திரன் அமராவதி நகர் அடைதல்
அதன் பின் இந்திரன் அனைவரையும் வாழ்த்தி, தர்மனுடைய தீர்த்த யாத்திரைக் காக அனுப்பிய உரோமச முனிவரோடும், உடன் வந்த வானவர்களோடும் தன்னுடைய அமராவதி நகரம் போய்ச் சேர்ந்தான்.
அவன் சென்ற பின் தர்மபுத்திரர், அர்ச்சுனனிடம் “பாசுபதாஸ்திரம் பெற்ற வகையைக் கூறுக” என்று கேட்க, அர்ச்சுனன், தான் சிவபெருமானைக் குறித்து கடுமையான முறையில் தவம் செய்த வகையையும், தன்னைக் கொல்ல மூகாசூரன் பன்றியுருவில் வந்த வகையையும், அவனைக் கொல்லும் பொருட்டு சிவபெருமான் வேடர் வடிவில் வந்த வகையையும், அந்த மூகாசூரப் பன்றியைக் கொன்ற வகையில் தங்கள் இருவர்க்கும் போர் ஏற்பட்ட வகையையும், தன் காண்டீப வில்லால் சிவபெருமான் அடி யுண்ட வகையையும், தன்னை மன்னித்துச் சிவபெருமான் மனமுவந்து பாசுபதாஸ் திரம் அளித்த வகையையும், பின்னர் தேவர்கள் பல திவ்விய ஆயுதங்களைக் கொடுத்த வகையையும், நிவாத கவச காலகேகயர்களைக் கொன்று இந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியை மீண்டும் கொடுத்த வகையையும், இந்திரனின் சிறப்பு விருந்தினனாக ஐந்தாண்டுகள் அவனோடு தங்கியிருந்த வகையையும் விளக்கமாக எடுத்துக் கூறினான். தர்மபுத்திரர் உள்பட அனைவரும் அர்ச்சுனனின் வீர தீர செயல் களைக் கேட்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி னர். எல்லாவற்றிற்கு மேலாக முக்கண்ணனாகிய சிவபெருமானையே நேரில் தரிசித்த அர்ச்சுனனுடைய பெருந் தவத்தின் பயனை அறிந்து பெரிதும் பாராட்டினர்.
இவ்வாறு தர்மபுத்திரர் முதலானோர் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் பீமன் மட்டும் தனியனாய் குளத்தில் நீராடச் சென்றான். அப்பொழுது சர்ப்பங்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆதிசேடன் போன்ற மலைப்பாம்பொன்று, வாயுவின் புத்திரனாகிய பீமனை இறுகச் சுற்றி பிடித்து வளைத்துக் கொண்டது. தேவர்களையெல்லாம் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த பீமன் அந்த பாம்பினு டைய வாயிலிருந்து விடுவித்து கொள்ளப் பலமுறை முயன்று பார்த்தும் முடியாத வனாய்.”ராகுவின் வாயிலே நுழைந்து வருந்தும் சந்திரன் போல ஒளி குன்றிப் போனான்” அந்தப் பாம்பின் பலமான கட்டிலிருந்து விடுபட முடியாதவனாகி அவன் தளர்ச்சியடைந்து அப்பாம்பினை நோக்கி ”ஏ பாம்பே! நீ யார்? வலிமை மிக்க அரக்கனோ? அசுரனோ? இயக் கனோ? பூமியைத் தாங்குகின்ற ஆதி சேடனோ? சொல்வாயாக? நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை இறுகப் பிடிக்கின்றாய் ? அறக்கடவுளாக விளங்கும் தர்மபுத்திரரின் இளவல் நான். பதினாயிரம் யானை வலிமை படைத்த நான் உன் கட்டிலிருந்து விடுபட முடியாமல் போனது ஏது பற்றி? கூறுவாயாக ” என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகளைக் கேட்டான்.
அதற்கு அந்தப் பாம்பு. “ஏ பீமனே! மேருமலையேயானாலும் எனக்கு நேரே வருமானால் அந்த மலையின் வலிமை எல்லாம் என்னிடத்து வந்து சேரும் என்ற வரத்தை நான் பெற்றுள்ளமையால், நீ உன்னுடைய வலிமையை இழந்தாய். உன் தந்தை வாயு பகவான் முன் ஒருமுறை எங்கள் குலத்தலைவன் ஆதிசேடனிடம் காட்டிய பகையும், உன் தம்பி அர்ச்சுனன் காண்டவ வன தகனத்தின் போது எங்கள் குலத்தவரை அக்னிக்கு இரையாகும்படி செய்த செயலும் சேர்ந்து உங்கள் மேல் கொடிய சினம் கலந்த பகை உண்டாக்கி யுள்ளது. அதனால் இப்பொழுது பழிக்குப் பழியாக உன்னை உண்டு, என் பசியைத் தீர்த்துக்கொள்ள போகிறேன்” என்று பதில் கூறியது.
பாம்பிடம் தர்மர் வேண்டுதல்
அதனை கேட்டு பீமனுக்கு, அந்த பாம்பின் பிடியிலிருந்து விடுபடும். நம்பிக்கையெல்லாம் இழந்தவனாகி, “இனி இந்தப் பாம்பிற்கு நல்விருந்தாக வேண்டியதுதான்” என்று முடிவு செய்து, அவன் ”எம்பெருமானின் சோதனை இது” என்று எண்ணி, அவன் ஐம்புலன்களை ஒடுக்கி, மனத்தை ஒரு வழிப்படுத்தி, அப்பெருமானையே நினைந்து வழிபட லானான்.
அந்த நேரத்தில் பீமனைத் தேடி தர்மபுத்திரர் அங்கு வந்தார். தன் தம்பி பாம்பின் வாயில் அகப்பட்டு கொண்டிருப்பதைக் கண்டார். மனம் நொந்தார்.பின்னர், அவர் “ஏ பாம்பே! உன்னுடைய கோரப்பசிக்கு வேண்டிய விலங்குகளை நான் கொண்டு வந்து கொடுக்கின்றேன்.என் தம்பியை விட்டு விடு என்று கூறி வேண்டினார். அதற்கு அந்த பாம்பு, “நீ யார்?” என்று கேட்டது. அதற்குத் தர்ம புத்திரர், “நான் சந்திர வம்சத்து பாண்டு ராசாவின் மைந்தன். நாங்கள் சகோதரர் ஐவர். விதியின் காரணமாக வஞ்சகமாக ஆடிய சூதாட்டத்தில் கௌரவர்களிடம் தோற்று. நாட்டின் ஆட்சியை இழந்து பன்னிரண்டு ஆண்டு வனவாசம் செய்ய வந்துள்ளோம்” என்றார்.
அகத்திய முனிவரின் சாபம்
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அந்த பாம்பு, “பெருமை மிக்க தர்ம புத்திரரே! நானும் உன் சந்திர வம்சத்தை சேர்ந்த நகுஷன் என்னும் மன்னன் ஆவேன். ஆயு என்ற மன்னனின் மைந்தன் நான். நான் நூறு அசுவ மேத யாகங்களை வெற்றிகரமாகச் செய்தேன்.அதனால் கிடைத்ததற்கரிய இந்திர பதவி எனக்குக் கிடைத்தது. அந்த இந்திர பதவியை பெற்று, சிவிகையில் செல்லுகின்ற காலத்து என்னுடைய கர்வத்தினாலும், இந்திராணி மேல் கொண்ட காதல் மிகுதியினால் அவளைச் சேர வேண்டுமென்ற என்னு டைய பேராசையாலும், பல்லக்கைத் தாங்கி செல்கின்ற சப்த முனிவர்களில் குறு முனிவராகிய அகத்திய மாமுனிவர் மெது வாக சென்றமையால் நான் ஆத்திரமுற்று ‘வேகமாகச் செல்லவும்’ என்ற பொருளில் ‘சர்ப்ப, சர்ப்ப’ என்று கூறி கத்தினேன். அதனால் அகத்திய மாமுனிவர் வெகுண்டு ‘சர்ப்ப சர்ப்ப’ என்று என்னை கூறிவிட்டமையால் நீ உண்மையிலேயே பெரியதொரு ஸர்ப்பமாகித் தரையில் புரண்டு கிடப்பாயாக’ என்று கொடிய சாபம் தந்தார். சாபம் பெற்ற நான் இந்திர பதவி இழந்து மலைப்பாம்பானேன். நான் என் தவற்றினை உணர்ந்து அம்முனிவரை பணிந்து, ”அகத்திய மாமுனிவரே! என் பிழை பொறுத்து, சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என வேண்டி நின்றேன். ன்று கூறு கத்து பெற்ற நான்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று அகத்தியர் மனமிரங்கி, “நகுஷ மன்னனே! நீ இதே வடிவில் நீண்ட காலம் இருப்பாய். நீ கேட்கும் தர்ம நெறி பற்றிய வினாக்களுக்குத் தக்க பதில்களை ஒருவர் கூறுவார். அந்த நாளில் நீ சாப விமோசனம் பெற்று பழைய வடிவம் பெறுவாய் ” என்று கூறியருளினார். எனவே தர்மபுத்தி ரரே! நான் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் தக்க பதில் அளிப்பாயானால் உன் தம்பியை விடுவிப்பேன். அதோடு என் சாபமும் நீங்கும் ” என்று கூறியது.
கேள்வியும் பதிலும்
இவற்றையெல்லாம் கேட்ட தர்ம புத்திரர், “ஏ நகுஷப் பெருமானே! பாம்பு வடிவில் உள்ள நீ கேள்விகளைக் கேட்கவும், என்னால் முடிந்தவரை தக்க பதில்களைத் தருகின்றேன். பிறகு உன் விதிப்படியும், பீமன் விதிப்படியும் நடக்கட்டும்’ என்று கூறினார். உடனே பாம்பு வடிவில் உள்ள நகுஷ மன்னன் கேள்விகளைக் கேட்கலானான்.
பாம்பு : தர்மநந்தனா! உலகில் பிறந்தவற்றில் உயர்ந்த பிறப்பு எது?
தர்மர் : ஏழுவகைப் பிறப்புக்களில் உயர்ந்தது மனித பிறப்பே.
பாம்பு : எந்தெந்த நற்குணங்களை யுடையவன் உயர்ந்த அந்தணன் ஆகின்றான்? அவன் கொள்ள வேண்டிய செல்வம் யாது?
தர்மர் : நாகமே! சத்தியம், தவம்,
பொறுமை, நன்னடத்தை, முதலான வற்றை பொருந்தியவன் உயர்ந்த அந்தணன் ஆவான். அவன் கொள்ள வேண்டிய செல்வம் உயர்ஞானமேயாகும்.
பாம்பு : யுதிஷ்டிரரே! மேலே நீங்கள் கூறிய உயர்ந்த குணங்களை பெற்றுள்ள ஒரு சூத்திரன் உயர்ந்த அந்தணனாக முடியுமா?
தர்மர்: கருவிலே தொடர்புடைய காரணத்தினால் மேற்கூறப்பட்ட உயர் குணங்களையுடைய சூத்திரன் பிராமணனாக முடியாது. ஆனால் ஸத்சூத்திரனாக விளங்க முடியும்.
பாம்பு : பாண்டு மைந்தரே! அந்த ஸத்சூத்திரன் சுவர்க்கம் புகுவானா?
தர்மர் : சர்ப்பமே! அந்த வருணத்திற்கு சொல்லப் பட்ட குணங்களைத் தவறாது பின்பற்றினால் ஸத்சூத்திரன் சொர்க்கம் புகுவான்.
பாம்பு கேட்ட வினாக்களுக்கெல்லாம் தர்மபுத்திரர் தகுந்த விடைகள் கூறினமையால் மலைப்பாம்பானது அந்த நொடி யிலேயே நகுஷமன்னனாக மாறியது. (பாம்பு கேட்ட வினாக்கள் வருணாசிரம ஒழுக்கங்களைப் பற்றியே இருந்தனால், அக்காலத்தில் வருணாசாரமே (குலா சாரமே) முக்கியமாகக் கருதப்பட்டது என்பதை இந்த கேள்வி பதில்கள் மூலம் அறியலாம்).
சாபவிமோசனம் பெற்ற நகுஷமன்னன்
சாபவிமோசனம் பெற்ற நகுஷமன்னன், தர்மபுத்திரரை நோக்கி, “சந்திரகுலத்து செம்மலே! நம் சந்திர குலத்துக்குப் பெரும்பழி உண்டாகும்படி செயல்படு கின்ற துரியோதனாதியரை விரைவில் அழித்து மீண்டும் அரசாட்சியைப் பெற்று நீண்ட காலம் தர்ம நெறிப்படி ஆட்சி செய்வீராக” என்று ஆசீர்வாதம் செய்து விண்ணிலே மறைந்து சொர்க்கம் புகுந்தான்.
தர்மபுத்திரர் பாம்பினின்று விடுபட்ட பீமனைக் கட்டித் தழுவி, மகிழ்ந்து அவனோடு தான் தங்கியிருந்த நந்தி சேனவனத்திற்கு சென்றார். நடந்தவற்றை யெல்லாம் அனைவர்க்கும் கூறி அங்கேயே தன் தம்பியரோடும் பாஞ்சாலியோடும் அந்தணப் பெருமக்களோடும் வாழ்ந்து வந்தார்.