கந்தர்ப்ப கிரியில் தர்மர் முதலானோர் தங்கியிருக்கின்ற காலத்தில், ஒருநாள் விண்ணிலிருந்து பொன்மயமான ஒரு மந்தார மலர் கீழே விழுந்தது. அதனை எடுத்த திரெளபதி, அதனுடைய ஒப்பற்ற அழகினைத் தன் செழு மலர்க் கண்களால் வியந்து நோக்கினவளாய் வலிமை மிக்க பீமனிடம் சென்று, “பீமசேனரே! இந்த பெரிய செழிப்பான, காண்பவர் கண்ணைக் சுவரும்படியான அழகு மிக்க மந்தார மலர்களில் மேலும் சில கொணர்ந்து கொடுப்பீராக” என வேண்டி நின்றாள்.
“காற்றிலேறிய அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே” என்றாற்போல் பீமன் உடனே துள்ளி எழுந்தான். திரெளபதியிடம் சென்று,”பெண்ணே இப்பொழுதே நான் சென்று, அம்மலர் எந்த உலகத்தில் இருந் தாலும், எந்தத் தடை வந்தாலும், அதனை யெல்லாம் நீக்கிக் கொண்டு வருகின்றேன், அஞ்சற்க” என்று கூறி, உரோமச முனி வரை அணுகி, “முனிவர் பெருமானே! இந்த மந்தார மலர்கள் எங்குள்ளன” என்று கேட்டான். அதனைக் கேட்ட அம்முனிவர் பெருமான், பீமனைப் பார்த்து, “இந்த மலர்களை கொண்ட சோலைகள் இரு நிதிச் செல்வனாகிய (சங்கநிதி, பதுமநிதி) குபேர னுடைய நகரமாக விளங்கும் அழகாபுரி யில்தான் உள்ளன” என்று கூறினார்.
முனிவர் வார்த்தைகளைக் கேட்டதும், பதினாயிரம் யானைகள் பலம் கொண்ட பீமன், தேவாமிர்தம் போன்ற இனிமை யான பாஞ்சாலி சூடுதற்குரிய மலர்களைக் கொண்டு வரும்பொருட்டு குபேரனுடைய அழகாபுரி நோக்கிச் செல்லனான்.
கழுத்திலுள்ள மாலைகள் அசைத லினால் உண்டாகிய காற்றினாலும், வேக மாகச் செல்லுதனால் உண்டாகிய காற்றினா லும், இரண்டு கைகளை வீசி நடக்கும் பொழுது எழும் காற்றினாலும், பெருமூச்சு விடுகின்ற காற்றினாலும், காட்டிலுள்ள பெரிய பெரிய கிளைகளையுடைய மரங் கள் வேரற்று அடியோடு விழவும், அம் மரங்களை சார்ந்திருந்த பறவைகள் போக இடம் இல்லாமல் துன்பம் அடையவும், ஆக எல்லா திசைகளிலுள்ள அனைத்தும் அழியும்படி வீசுகின்ற பிரளய காற்று போல ஒரு பெரிய சுழல் காற்றென பேரார வாரத்தோடு மந்தார மலரைக் கொணர வேண்டுமென்ற பேரார்வமுடையவனாய் விரைவாக பீமன் அழகாபுரியை நோக்கிச் செல்லலாயினான்.
சுதலி வனம்
காற்றைவிட கடுகிச் செல்கின்ற காற்றின் மைந்தன் பீமன் காஞ்சன வனத்தைக் கடந்து, அநேக காததூரம் சென்று கதலி வனத்தை அடைந்தான். அவ்வனத்தைக் காக்கின்ற காவலர்கள், அனுமதியின்றி பீமன் வந்ததைக் கண்டு, அவனுடன் போரிட, அவர்கள் மேல் அவன் சிங்கம். யானைக் கூட்டத்தை தை வீழ்த்தல் போல பாய்ந்து ஒரு நொடியில் அவர்களைக் கொன்றொழித்து சிங்கம் போல வெற்றி முழக்கம் செய்தான்.
அவன் எழுப்பிய பேரொலியால் அவ்வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையின் செல்வனாகிய இராம பக்த அனுமான் தன் சகோதரன் பீமன் வந்துள் ளான் என்பதை அறிந்து கொண்டான்.
(நாமக்கல்லிலும், சுசீந்திரத்திலும், நங்கநல்லூரிலும் விசுவரூப தரிசனம் தந்து உலகோரால் கண்கண்ட தெய்வமாக மதிக்கப்படும் இந்த அனுமனின் பெருமையை எவ்வளவு வேண்டுமென்றா லும் எடுத்துக் கூறலாம். அதற்கு அளவே யில்லை. என்றாலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இந்த இராம பக்த அனுமானின் பெருமையை ஒரே பாட்டில் மிகச் சிறப்பாக எடுத்து காட்டுகின்றார். அந்த பாடலை காண்போம்.)
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்துக் காப்பான்”
(நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லப்பட்ட ஐம்பூதங்களில் ஒன்றான வாயு (காற்று) தேவன் பெற்றெடுத்த அனுமன், அந்த ஐம்பூதங் களில் ஒன்றாகிய ஆகாயத்தின் வாயிலாக கடலைத்தாவி, இராமபிரானுக்காகச் (இலங்கைக்கு தூதனாக) சென்று, அந்த ஐம்பூதங்களில் ஒன்றாகிய பூமியிடத்தே (நிலம்) தோன்றிய சீதாப்பிராட்டியைக் கண்டு தொழுது, பகைவனின் ஊராகிய இராவணனது இலங்கையில் அந்த ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தான். அத்தகைய சிறப்பும். மேன்மையும் உடையவனாகிய அவ்வனு மன் எம்மிடத்து அருள் செய்து காப்பான். ஆகலின் அவனை மனதார வணங்கு வோம்.இப்பாடலின் மூலம் ஐம்பூதங் களின் சேர்க்கையும், ஆற்றலும் ஒருங்கே படைத்தவன் இராம பக்த அனுமான் என்பது பெறப்படுகின்றது).
திரேதாயுகத்தில் அஃதாவது இராமா யண காலத்தில் அசாத்திய சாதனைகள் பல படைத்த அந்த அஞ்சனா தேவியின் மகன் அனுமன், கற்பாந்தத்தில் பிரமனது பதவியைப் பெறுவதற்காக இந்த துவாபார யுகத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். அவன் தன் சகோதரன் பீமன் வருகையை அறிந்ததும் அந்தக் கதலி வனத்திலுள்ள ஒரு மலைமேல் ஏறிக்கொண்டான். தன் நீண்ட வாலினால் திசைகளை முற்றும் அகப்படுத்திய அவன், பீமன் வருகின்ற வழியை மறித்து கொண்டு தன் கை கால்களை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டான்.
பீமன், அனுமன் வழி மறித்திருப்பதைக் கண்டதும் எரிச்சல் அடைந்தான். பெரும் சப்தம் இட்டான். அந்த சப்தத்தைக் கேட்டு விழிப்பது போல விழித்து, “தேவர்களும் வர முடியாத இந்த அடர்த்தியான காட்டு வழியில் பேரொலி செய்து கொண்டுவரும் மானிடனே நீ யார்?” என்று கேட்டான்.
அதனைக் கேட்டு, தர்மரின் இனையோன் பீமன், “என்னை யார் என்று கேட்கின்ற கிழக்குரங்கே! நீ யார் சொல்” என்று சற்று செருக்கோடு கேட்டான். அதற்குப் பதிலளிக்க வந்த அனுமன், ”தம்பி! நான் வானர ராஜன், நீயோ சின்னாள் பல்பிணி சிற்றறிவுடைய சாதாரண மானிடன். என்னை ‘நீ யார்’ என அலட்சியமாகக் கேட்பதற்குக் காரணம் அதி வீர பராக்கிரமசாலி என்ற பெருமித நினைப்போ?” என்று கூறினான்.
“அதுசரி. நான் அவசரமாக செல்ல வேண்டும். உன் நீண்ட வாலை எடுத்து விடு” என்றான் பீமன். “தம்பீ/ எனக்கு வயதாகி விட்டது. உடம்பு வேறு சரியாக இல்லை. அதனால்தான் படுத்திருக் கின்றேன்.நீ ஏன் என்னை இவ்வளவு அவசரமாக எழுப்புகின்றாய்? மனிதராகிய உங்களுக்குப் பகுத்த பகுத்தறியும் அறிவு உண்டு. எங்களுக்கோ அந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இல்லை. பொதுவாக பகுத் தறிவு படைத்துள்ள மனிதர்கள் பிற உயிர் களிடம் கருணை காட்டுவதுதான் முறை. மேலும் நீ அறிவுடையவன் போலத் தோன்றுகின்றாய். ஆனால் என்னிடம் கருணை காட்டாமல், என்னை இம்சிக் கின்றாயே! இது நியாயமா? உனக்குத் தகுமா?
“அது இருக்கட்டும் நீ யார்? எங்கே போகிறாய் ? இதற்கு மேல் உன்னால் செல்ல முடியாதே. இது தெய்வ லோகத்திற்குப் போகும் பாதை, உன்னைப் போன்ற மனிதர்கள், இந்த எல்லையைத் தாண்டி போக முடியாது.நீ இங்கேயுள்ள பழங்களை வேண்டிய அளவு பறித்துப் புசித்து விட்டுப் பின் திரும்பிச் செல்லலாம். அதுதான் உனக்கு நல்லது” என்று நிதானமாகக் கூறினான், செயற்கருஞ் செயல்களை எல்லாம் ஆற்றிய அனுமன்.
அனுமன் மீது கோபம்
அனுமனுடைய வார்த்தைகளை எல்லாம் கேட்க கூடிய நிலையில் பீமன் இல்லை. அவனோ கோபம் மிக அடைத் தாள். அதனால் அவன், “ஏ வானரமே! நான் கடித்திரியன். குரு வம்சத்தில் பிறந் தவன். குந்தி தேவியின் மகன், வாயுவின் புதல்வன். அவசரமாகச் சென்று கொண்டி ருக்கின்றேன். என்னை தடுக்காதே. வழியை விட்டு விலகிச் செல்” என்று கத்தினான்.
அனுமனுக்கோ தன் தம்பியிடம் இன்னும் கொஞ்சம் விளையாட வேண்டு மென்ற ஆசை. அதனால் அப்பெருமான் புன்முறுவல் பூத்து, “தம்பி! இந்த வழியில் போகாதே என்று சொல்கின்றேனே நீ கேட்கவில்லையா! என் சொல்லை மீறிச் சென்றால் உனக்குத் துன்பம் நேரும் என்றான்.
அதற்கு பீமசேனன், “ஏ குரங்கே! எத்தகைய துன்பத்தையும் நான் எதிர் கொண்டு வெல்லக்கூடியவன் என்பதை நீ அறிய மாட்டாய், அதனால் அதனால் தான் நீ அஞ்சி அஞ்சி சொல்லுகின்றாய். எழுந்து வழியை விட்டு அப்பால் செல் செல். அதுதான் இப்பொழுது நீ செய்ய வேண்டியதாகும்’ என்று கூறிச் சீறினான்.
அதற்கு அனுமன், ”தம்பீ! நான் வயதான வன். அதனால் எழுந்திருக்க எனக்குச் சக்தி இல்லை. அவசியம் போய்த்தான் ஆக வேண்டுமென்றால் என்னைத் தாண்டி செல்லலாமே” என்றான். அதற்கு பீமன், “ஐயோ வானரமே / பிராணிகளைத் தாண்டி செல்லக்கூடாது என்பது சாஸ்திரம். இது உனக்கு எங்கே புரியப் போகின்றது? எனவே உன்னை நான் தாண்டி செல்லக் கூடாது. இல்லாவிட்டால் அன்று இராம கைங்கர்யத்துக்கு என் தமையனார் அனுமன் கடலைத் தாண்டி சென்றதைப் போல அல்லவா ஒரே பாய்ச்சலில் உன்னைத் தாண்டி சென்றிருப்பேன்” என்றான். அனுமன் அதனை கேட்டு ‘மானிடனே! கடலைத் தாண்டியதாக இப்பொழுது நீ சொன்ன அந்த அனுமன் யார்? அவரைப் பற்றிச் சொல்லுக” என்றார். அனுமனை பற்றி பீமன் கூறுதல்
பீமன் அனுமனைப் பார்த்து, வானரமே! என் தமையனார் அனுமானை உலகமெல்லாம் நன்கு அறிந்து அவரை வழிபடும் தெய்வமாக கொண்டிருக்கும் போது நீ இன்னும் அறியாதது எனக்கு வியப்பாகத்தான் உள்ளது. திரேதாயுகத்தில் இராமன் பத்தினியாகிய சீதாப் பிராட்டி யைத்தேடி நூறு யோசனை அகலமும் நீளமும் உள்ள கடலைத் தாண்டி தென் இலங்கை சென்றான். அங்கு சீதாப் பிராட்டியைக் கண்டு இராமபிரான் கொடுத்த கணையாழியைக் கொடுத்து, இராமபிரான் விரைவில் வந்து மீட்டு செல்வார்” என்று தேறுதல் கூறி திரும்பும் பொழுது தான் வாலினால் இலங்கையை எரித்தான்.
“பின் ‘கண்டனென் கற்பினுக் கணியை கண்களால்’ என்று தான் சீதையை கண்ட வரலாற்றைக் கூறி, அவள் கொடுத்த சூடாமணியையும் இராமபிரான் கையில் கொடுத்து அவர் துயரத்தைப் போக்கினான். அந்த இராமபிரானுக்குக் கடைசி வரை அவனுடைய அடியனாக இருந்தான். அப்பெருமானையே தன் உள்ளத்தில் படுக்க பதித்து வைத்தவன்; நினைப்பும் மூச்சும் இராமபிரானாக இருந்தவன்; இன்னும் சிரஞ்சீவியாக இருப்பவன். வாயுவின் மைந்தன்; அஞ்சனையின் புதல்வன். என் இனிய தமையன்; அவனுடைய ஆசியினால் அவனுடைய வலிமையை நான் பெற்றுள்ளேன். ஆகலின் வழியை விடு. அல்லது ஒதுங்கி நில்; அவ்வாறு செய்ய வில்லையென்றால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று அதட்டினான்.
எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்ட அனுமன், ‘பீமனே! குற்றமில்லாதவனே! ‘கோபம் குடி கெடுக்கும்’ என்பார்கள். அதனால் கோபப்படாதே. “உன்னை காட்டிலும் மிகுந்த வயதானவன். எழுந்திருக்கக்கூட சக்தி இல்லை என்று நான் சொன்னேன். நீ கேட்கவில்லை. தாண்டி செல்ல மனமில்லை என்கிறாய். அப்படியானால் கீழே நீண்டு கிடக்கின்ற வாலை நகர்த்தி விட்டுப் போகலாமே. அதையாவது செய்” என்றான்.
அனுமனிடம் பக்தி
தன் வலிமையில் அதீத நம்பிக்கை கொண்ட பீமன், இந்த குரங்கினது வாலை என்னால் எளிதில் நகர்த்த முடியும்” என்று எண்ணி, அதன் வாலைப் பிடித்து நகர்த்த முயன்றான். முடியவில்,ை பலங்கொண்ட மட்டும் நகர்த்த முயன்றான். முடிய வில்லை.வாலை அசைக்கக் கூட அவனால் முடியவில்லை. அசைத்து அசைத்துப் பார்த்த அவன் விழிகள் பிதுங்கின; முடியாமையால் உடல் வியர்த்தது. கடைசியில் ஓர் அணுவளவு கூட அவனால் அந்த வாலை அசைக்க முடியவில்லை. “மலையை எடுத்தாலும் எடுக்கலாம் போல உள்ளது. ஆனால் இந்த வாலை அணுவளவும் அசைக்க முடிய வில்லையே” என்று எண்ணினான்; வருந்தினான், வெட்கமுற்றான்.
பின்னர் சற்று யோசித்தான். “இது சாதாரணக் குரங்கன்று; இந்தக் குரங்கு என்னை விட வலிமையாக உள்ளது” என்பதை உணர்ந்து கொண்டான். அதனால் அந்த அனுமன் மீது அவனுக்கு ஒரு பக்தி ஏற்பட்டது. அதனால் அவன் அனுமனை நோக்கி, “பெரியவரே! நீர் யார்? சித்தரா? தேவரா? கந்தர்வரா? சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான். இனியும் இவனிடம் விளையாடக் கூடாது என்று எண்ணிய அனுமன், “பாண்டவ வீரனே? செயற்கருஞ் செயல்களை எல்லாம் செய்தவனே நீ மரியாதையோடு கூறிய அந்த அனுமன் நான்தான்” என்றான்.
தான் இந்நேரம் தகராறு பண்ணி கொண்டிருந்தது தன் தமையன் அனுமானிடம்தான் என்பதை அறிந்ததுமே, பீமன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான். அப்பெருமானுடைய திருவடிகளில் விழுந்து விழுந்து வணங்கினான். தான் மரியாதை குறைவாகப் பேசியதற்குப் பலமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் பீமன், ‘மாருதி அண்ணலே! என் இனிய அண்ணனே! உம்மை எதிர்பாராத இந்த இடத்தில் நான் கண்டதற்குக் காரணம் நான் முன் செய்த நல்வினையேயாகும். என்னைக் காட்டிலும் பாக்கியசாலிகள் வேறு யாரும் இல்லை” என்று கூறிய அவன், “பெருமானே! அன்று இராம கைங்கர்யத்துக்காகக் கடலை தாண்டியபோதும், அசோக வனத்தில் சீதாப்பிராட்டியின் முன் இருந்தபோதும் எடுத்த அந்த விசுவரூபத்தை அடியேன் செய்து ஆனந்தம் தரிசனம் செ கொள்ள வேண்டும் ” என்று வேண்டினான்.
பீமன் வணங்கிய அனுமன்
அனுமன் அதற்கிசைந்து, அன்று வாமன வடிவில் வந்து மாவலியிடம் மூன்றடி மண் இரந்து பெற்று, பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்று காட்டிய ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திருவிக்கிரம பெருமானை போல இங்கும் அனுமன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்று பேருருவத்தைக் கா காட்டியதோடு, தன் அகன்ற மார்பினில் என்றும் இடம் கொண்டிருக்கும் பட்டாபிஷேக ராம வடிவத்தையும் காட்டியருளினான். அதனைக் கண்ட வீமன் வியப்படைந்து நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கி பெரு மகிழ்வு எய்தி பலவாறு போற்றி னான். பின்னர் ”ஐயனே! மெய்யனே! தாங்கள் பழைய வடிவத்தையே எடும்” என்று சொல்ல அவ்வாறே அனுமனும் தன்னுடைய பேருருவை சுருக்கிக் கொண் டான். பின்னர் அனுமன் பீமனை அன் போடு தழுவிக் கொண்டான். அனுமனால் தழுவிக் கொள்ளப்பட்டதால் பீமன் முன்னைவிட பலமுள்ளவனாக ஆனான்.
பின்னர் அனுமன்,”தம்பீ! சமயம் நேரும்போது என்னை நினைக்கலாம் அப்பொழுது வேண்டிய உதவிகளைச் செய்வேன். உங்கள் ஆற்றல் எனக்கு நன்றாகத் தெரியும். இனி உங்களுக்கு எப்பொழுதும் ஜெயம்தான். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்” என்றான். அதற்கு பீமன், “பெருமை மிக்க அண்ணலே ! நாங்கள் எல்லோரும் உம்மைக் கண்டதால் பாக்கியசாலிகள் ஆனோம். தங்கள் ஆசியினால் பகைவரை நிச்சயம் வெல்வோம்” என்றான்.
பொன்மலர் பறிக்க வழி சொல்லுதல்
“தம்பீ! பீமா! நீ போர்க்களத்தில் சிம்மநாதம் எழுப்பும்போது என்னுடைய குரலும் உன்னுடைய முழக்கத்தோடு சேர்ந்து ஒலிக்கும். அது பகைவரை நடுங்கச் செய்யும். அதுமட்டுமன்று. தம்பி அர்ச்சுன னின் காண்டவதகனத்தின்போது அக்னி பகவானால் அளிக்கப்பட்ட தெய்விக தேர்க் கொடியில் நான் இருப்பேன்.உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்” என்று வாழ்த்திய அனுமன் மீண்டும், “தம்பீ! இவ்விடம் வந்ததற்குரிய காரணம் யாது?” என கேட்டான்.
பீமன், “அண்ணலே! கெளரவர்களின் வஞ்சனையான சூதாட்டத்தில் நாடு, நகரம் முதலானவற்றை இழந்து பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் செய்ய வந்த இக்காட்டிடத்து பொன்மயமானதொரு மந்தார மலர் விண்ணினின்று கீழே விழ, அதனைத் திரெளபதி கண்டு, அதனைப் போன்ற மந்தார மலர் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளாள். அதனால் இங்கு வந்தேன். அதன் மூலம் தங்களைத் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்” என்று கூறினான்.
அதனைக் கேட்டு, “பீமா! பாஞ்சாலி விரும்பிய அந்த பொன்மலர், வடக்குத் திக்கு பாலனாக விளங்குபவனும், சங்க நிதி, பதுமநிதி ஆகிய இரு நிதிகளுக்கு அதிபதியாக இருப்பவனும் ஆகிய குபேரனது அழகாபுரி நகரில் உள்ளது. அதனை இயக்கர்களும், அரக்கர்களும் காத்து வருகின்றனர். தரும நெறியிலிருந்து பிறழ்ந்தவர்கள் அதனைப் பெறுதல் இயலாது. ஆனால் நீ தர்ம நெறியில் நடக்கின்றவன் ஆகையால் அந்த மலர் உனக்குக் கிடைக்கும்” என்றான்.
உடனே பீமன், “பெருமானே! தங்களது அருள் இருக்குமானால் அதனை நான் நிச்சயம் பெறுவேன். அம்மலர் இருக்கும் இடத்திற்குரிய வழியைச் சொல்லுவீராக” என்று கேட்க, அனுமன், “இந்த கதலி வனத்திலிருந்து இரு நூறு யோசனை தூரம் போய், அதற்கு மேலும் செல்வாயாகில் அந்த பூவினைக் கொண்டுள்ள சோலைகள் தோன்றும், ஆனால் வழியில் காவலர்கள் இருப்பர். அவர்களை வெற்றி கொண்டு செல்க என்று கூறி அப்பீமனுக்கு விடை கொடுத்தனுப்பினான்.
பின்னர் பீமன், அனுமன் திருவடி களைப் பலமுறை வணங்கி விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து வேகமாக வித்தியா தார் உலகினை அடைந்தான். அதனைக் கடந்து தேவர்கள் போற்றுகின்ற சக்கர மலையைச் சேர்ந்தான். அங்கிருந்து நடந்து சென்று பெரிய திவாகர மலையைக் கண்டான். அங்கு புண்டரீகன் என்னும் அரக்கன் பீமனைக் கண்டு கண்டு பெரும் போரிடலானான். அவனுடன் பீமன் கடுமையாகப் போரிட்டுக் கொன்றான். அதன்பின் அவன் அங்கிருந்து சென்று உயர்ந்து விளங்கும்படியான சந்திர சைலமென்னும் மலையை அடைந்தான். அதனைத் தாண்டி நீண்ட தூரம் சென்ற அவன் சங்கநிதி, பதுமநிதி என்ற இருநிதி செல்வம் பெற்ற குபேரனது அழகாபுரியை அடைந்தான். அங்கு, அந்நகரைச் சுற்றிலும் மணம் வீசுகின்ற பொன்மலர் சோலைகளும் குளங்களும் இருக்கக் கண்டான்.
அந்தச் சோலைகளை பீமன் நெருங்கி னான். அப்பொழுது அங்கு கரிய திருமேனி உடையவர்கள்; செந்நிற தலைமுடியுடைய வர்கள்; அனல் கக்குகின்ற கண்களை யுடையவர்கள்; வளைந்த பிறைச் சந்திரன் போன்ற கோரப் பற்களையுடையவர்கள், குகை போன்ற பெரிய வாயினையுடை யவர்கள்; ஈரேழு பதிநான்கு உலகங்களை யும் இமைப் பொழுதில் வெல்லக்கூடிய ஆற்றலுடையவர்கள்; அவர்களில் சிலர் மூக்கினை மார்பகத்துப் பெற்றுள்ளார்கள். மற்றும் சிலர் முதுகினில் முகத்தையுடை யவர்களாயிருக்கின்றார்கள். இன்னும் சிலர் காது, தலை, கால், கை ஆகியவை ஆயிரம் ஆயிரமாகக் கொண்டுள்ளார்கள். இந்தகைய காவலர்கள் நூறாயிரவர் பீமளைக் கண்டதும் யமனைப் போல அஞ்சாது தடுத்து நின்று,
“அற்ப மானிடனே! தேவர்களும் காண்பதற்கரிய இச்சோலையினிடத்து எந்தத் தைரியத்தில் இங்கு வந்தாய்? உனக்கு என்ன அறிவு என்பதே இல்லையா? வீணாக சாகாதே; ஓடிப்போய் விடு” என்று அதட்டினார்கள்.
காவலர்களுடன் சண்டை
பீமன் அதற்கு, “கொடியவர்களே! முன் திரேதா யுகத்தில் இராவணாதியர்களைக் கொன்றது இராமபிரான் தானே? அவன் மானிடன் இல்லையா? எண் எண்ணிப் பாருங்கள். உங்கள் அரக்கர் கூட்டத்தை யெல்லாம் இயமனுக்கு விருந்தாகப் படைத்து பின்னர் இந்த சோலைகளிலுள்ள பொன் போன்ற மந்தார மலர்களைக் கொண்டு செல்வேன்” என்று கூறினான்.
அதனைக் கேட்ட அந்த கொடிய அரக்கர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குன்றின்மேல் பொழிகின்ற இடியை யுடைய மேகங்கள் போலக் கோபங் கொண்டு ஆரவாரம் செய்து, அந்த பீமன் மீது எண்ணற்ற ஆயுதங்களை சொரிந் தார்கள். அவற்றையெல்லாம் பீமன் தன் கதாயுதத்தைக் கொண்டு அடித்து நாசப்படுத்தினான். மறுபடியும் அவர்கள் தோமரம், உலக்கை போன்ற ஆயுதங்களை வீசி எறிந்தார்கள். அவற்றையும் தன் கதாயு தத்தால் மாறி மாறி அடித்து நொறுக்கி னான். தன்னை நெருங்கிய அரக்கர்களை யெல்லாம் தரையின் மேல் அடித்து அழிந்து கீழே விழச் செய்தான். சில அரக்கர்களை இரு கைகளினால் பிடித்துப் பிசைந்து எறிந்தான் மற்றும் சிலரைத் தன் கால்களால் துவைத்து அழித்தான். வேறு சிலரைப் பம்பரம் போலச் சுழற்றிச் சுழற்றி நிலத்தில் அறைந்தான். மேலும் சில அரக்கர்களை பந்துகள் போல மேலே எறிந்து எறிந்து கொன்றான். இப்படி தன்னை எதிர்க்க வந்த எல்லா அரக்கர்களையும் பீமன் கொன்றொழித்தான்.
அரகர சிவசிவ’
மீண்டும் ஒரு நூறாயிரம் அரக்கர்கள் வந்து வெகுண்டு போர் செய்ய பீமன், யானை கூட்டங்கள் மேல் வலிமை மிக்க சிங்கம் ஒன்று அஞ்சாது பாய்ந்து அழிப்பது போல அவர்கள் அனைவரையும் தனது வில்லினால் வளைத்து, உடனே செலுத்திய அம்புகளால் அழித்தான். உயிர் பிழைத்தவர்களில் சிலர் ‘அரகர சிவசிவ என்று கூறி தப்பித்துச் சென்றனர். வேறு சிலர் இரவலர்கள் போல வேடந்தாங்கி, “ஐயா… சாமி, பிச்சை போடுங்க ” என்று சொல்லி ஓடிப்போனார்கள்.
உயிர் பிழைத்த அரக்கர்களில் சிலர் விரைவாக ஓடிச் சென்று தங்கள் மன்னனாகிய குபேரனிடம் நடந்தவற்றைக் கூறினர். உடனே அவன் வெகுண்டு, ‘தன் சேனைத் தலைவனாகிய சங்கோடணனை அழைத்து, “நீ வேண்டிய சேனைகளுடன் சென்று நம் சேனைகளை நாசம் செய்கின்ற பீமனைக் கொல்லாது கட்டி இழுத்துவா” என்று உத்தரவு இட்டான்.
அந்தச் சேனைத் தலைவனும் மன்னன் குபேரன் உத்தர உத்தரவை ஏற்று. பெரும்படை டன் சென்று, பீமனுடன் கடும் போரிட் டான். பீமனும் தன்னுடைய கதாயுதத்தால் வந்த சேனைகளையெல்லாம் அழித்து நாசம் செய்தான். ‘தலை ‘தன தப்பினால் போதும்’என்ற நிலையில் பீமனால் அடிபட்ட சங்கோடணன் திரும்பி ஓடி விட்டான். அவன் மன்னனைப் பார்த்து ”அரசே! இங்கு வந்திருப்பவன் சாதாரண மானிடன் அல்லன்; அவன் சிவபெரு மானே ஆவான். அவனை வெல்லுதல் என்பது யாராலும் இயலாது. நான் தப்பி பிழைத்ததே ஆச்சரியம். எனவே இப்பொழுது என்ன வேண்டுமென்று கேட்டு அவனுக்கு அதனைக் கொடுத் தனுப்புவதே தகுதியானது. ஏனெனில் அவன் நாடு பிடிக்க வந்தவன் அல்லன்” என்று கூறினான்.
குபேரன் அளித்த பொன் மலர்கள்
அதனைக் கேட்டு குபேரன், தன் மகன் உருத்திர சேனனை அழைத்து, அவனிடம், பீமன் இருக்குமிடம் சென்று அவன் நிலையை அறிந்துவா” என்று கூறி அனுப்பினான். உருத்திரசேனனும் சென்று “பீமன் பொன் போன்ற மந்தார மலர்க்காகவே வந்துள்ளான்” என்பதை அறிந்து தந்தையிடம் கூறினான். பின்னர் தன் தந்தையின் அனுமதிப்பெற்று பீமனுக்கு வேண்டிய பொன் மலர்களை கொடுத்தான். பீமன் அதனை பெற்றுக் கொண்டு குபேரனை வாழ்த்தி அவ்விடம் விட்டு அகன்றான். பின்னர் உருத்திரசேனன் பீமனுக்கு பொன் மலர் கொடுத்து அனுப்பியதைக் கூறினான். அதனால் குபேரனும் மன நிம்மதி அடைந்தான். பொன்மலர்களைப் பெற்ற பீமன் அங்குள்ள குளத்தில் மூழ்கி வேண்டிய நீரைப் பருகிச் சற்று இளைப்பாறினான்.
பாஞ்சாலினால் பொன் போன்ற மந்தார மலர் கொண்டு வர அழகாபுரிக்கு அனுப்பப்பட்ட பீமன் நீண்ட நாட்களாகியும் வராததை அறிந்து தர்மபுத்திரர் பெரிதும் துயரமுற்றார். அதனால் பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனும் இடும்ப வனத்தில் தாய் இடும்பியுடன் வாழ்பவனுமாகிய கடோத்கஜனை நினைத்தார். நினைத்தவுடன் அந்த பீமன் திருமகன் கடோத்கஜன் தர்மபுத்திரர் முன் வந்து அவரது இருபாத மலர்களை தன் சிரசில் படியும்படி வணங்கி எழுந்தான். அவனைப் பார்த்து தர்மபுத்திரர், “கடோத் சுஜா| என்னிடம் சொல்லாமல் உன் சிறிய தாய் திரெளபதியின் பேச்சை மட்டும் கேட்டுக்கொண்டு உன் தந்தையார் பீமன் குபேரனுடைய அழகாபுரிக்கு மந்தார மலர் கொண்டு வரச் சென்றுள்ளார். என்னை அங்கு அழைத்து கொண்டு போவாய்” என்று கூற, அந்தக் கடோத்கஜன் பேய்கள் கட்டிய தேரில் தன் பெரிய தந்தையினை அமர்த்தி, தேரினைச் செலுத்த தர்மரும் சில விநாடிகளில் பீமன் இருப்பிடம் போய் சேர்ந்தார். தன் தமையனைக் கண்டவுடன் பீமன் அஞ்சி, “தங்களிடம் சொல்லாமல் வந்தது தவறுதான் பொறுத்துக்கொள்க” என்று வேண்ட, தர்மபுத்திரரும் ”இனி அத்தகைய தவற்றினைச் செய்யாதே” என எச்சரித்தார். பின்னர் மூவரும் தங்கள் இருப்பிடமாகிய கந்தர்ப்பக் காட்டிற்கு வந்தனர். மகளாகிய கடோத்கஜனை அவன் தாய் இருக்கும் இடும்ப வனத்திற்குப் போக விடை தந்தனர். பீமன் தன் சகோதரர்களைச் சந்தித்து மகிழ்ச்சியடைந்தான். திரெளபதி யிடம் தான் கொண்டு வந்த பொன் போன்ற மந்தார மலரைச் சேர்த்தான். அவளும் அதனைப் பெற்று பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள்.
அதன் பின்னர் தர்மபுத்திரர் உரோமச முனிவரிடத்தில் செவிக்குப் பயனாக சிவபெருமானுடைய சிறப்புகளைக் கேட்ட வண்ணம் அந்தக் கானகத்தில் நாளைக் கழித்து வந்தார்.