“கேளுங்கள் முனிவர்களே: பரமாத்மா கருடனுக்கு நித்திய சிரார்த்தத்தைப் பற்றியும். புண்ணிய தீர்த்த ஸ்தலயாத்திரையை பற்றிச் சொல்லி முடிந்ததும். கருடன், பகவானை நோக்கி, “சர்வேசா! ஆசௌசம் என்பது யாது? அதைப் பற்றி அடியேனுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான்.
ஆதிநாயகன், கருடனை நோக்கிக் கூறலானார்: “ஒ, வைனதேயா! பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும் அவனது தாயாதிகளுக்கு பத்து நாட்கள் வரையில் ஆசௌசம் உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்களையும் தேவதா ஆராதனைகளையும் செய்யக் கூடாது. ஆசௌசமுடையவர்கள் வீட்டில், அந்தத் திட்டு நீங்கும் வரையில் யாருமே உணவருந்தக் கூடாது. நெருப்பில் வீழ்ந்து இறந்தவனுக்கும் சிங்கம், புலி முதலிய மிருகங்களால் இறந்தவனுக்கும். நாடுவிட்டு நாடு சென்றபோது வேறு ஊரில் இறந்தவனுக்கும். உடனே கருமம் செய்யக் கூடாது. ஆகையால், அந்தக் கிரியைகளைச் செய்யத் துவங்குகிற நாள் முதல் அவனது குடும்பத்தி லுள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆசௌசம் உண்டாகும். ஒருவன். இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும்.
அரசனுக்கும் தவஞ்செய்யும் பூசுரனுக்கும் மகவேள்வி களைச் செய்யும் விப்பிரனுக்கும். அவர்களது தாயத்தார் இறந்தால் ஆசௌசம் இல்லை. ஒருவனுக்குப் பெண் பிறந்தால் அதன் தாயத்தாருக்கு ஆசௌசம் இல்லை. பெற்ற தாய்க்கு மட்டும் பத்து நாட்கள் கள் ஆசௌசம் உள்ளது என்பதும். தந்தைக்கு ஸ்நானம் மட்டுமே போதுமானது என்பதும் சிலரது அபிப்பிராயம். திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும் யாகஞ்செய்யும் காலத்திலும் உற்சவம் செய்வதற்காகக் கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் நேர்ந்தால், அந்த ஆசௌசம் அந்தத் தொழிலில் முனைந்து உள்ளவர்களுக்கு அந்தக் காலங்களில் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தின் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்த ஆசௌசத்தோடு பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தாருக்கு நிவர்த்தியாகும். ஆசௌசம் வருவதற்கு முன்னதாகவே, பிராமணருக்குத் தானம் கொடுக்க உத்தேசித்துள்ளவற்றை ஆசௌசம் வந்த பிறகு கொடுக்கலாம். அவற்றைப் பிராமணர்களும் வாங்கலாம். பசுக்களையும் பிராமணர்களையும் மங்கையரையும் பாதுகாக்கும் விஷயத்திலும்: யுத்த பூமியிலும் ஒருவன் தன் உயிரை இழந்தால், அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு. ஆசௌசமே இல்லையென்றும் ஸ்நானம் செய்தாலே போதும் என்று சொல்பவர்களும் உண்டு!” என்று திருமால் கூறியருளினார்.