தர்மபுத்திரர் உள்ளிட்ட பாண்டவர்கள், பாஞ்சாலி ஆகியவர்கள், தவம் செய்ய சென்ற தம் சகோதரன் அர்ச்சுனன் இன்னும் வரவில்லையே. எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றானோ என வருந்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது இந்திர னால் அனுப்பப்பட்ட உரோமச முனிவர் அங்கு வந்தார். அவர் அவர்களிடம் அர்ச்சுனன் சிவபெருமானிடம் பாசுபதம் பெற்ற வரலாற்றையும், இந்திரனுடைய வேண்டுகோளால், அவனுக்குப் பகைவர் களாக இருந்த நிவாத கவச காலகேகயர் களை வென்று அழித்ததையும், தற்போது இந்திரனின் சிறப்பு விருந்தினராக இருப்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.அதனைக் கேட்டு பாண்டவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அப்பொழுது இசையில் வல்ல நாரதர் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலின் பயனை எடுத்து கூறி தம் இருப்பிடம் சென்றார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தர்மபுத்திரர், தம்பியரோடும் பாஞ்சாலி யோடும், அந்தணர் குழுவோடும், உரோமச முனிவரோடும் தீர்த்த யாத்திரை செய்யப் புறப்படலானார். முதலில் பொதிய மலையைச் சார்ந்த புனிதமான அகத்திய தீர்த்தத்தில் நீராட முடிவு செய்தனர். அதனால் முதலில் அகத்தியரின் வரலாற்றை உரோமச முனிவர் தர்மபுத்திர ருக்குக் கூறலானார்.
பொதிகையில் வாழ்ந்த அகத்தியர்
ஏக காலத்தில் ஊர்வசியைக் கண்டு அவளிடம் காதல் கொண்ட மித்திரன் வருணன் என்னும் இரு தேவர்களின் விருப் பத்தால் அருகில் இருந்ததொரு குடத்தி னின்று அகத்தியர் பிறந்தார். அதனால் இவரை கும்பமுனி, கும்ப சம்பவர். கலசயோநி என்று இவரை வேறு பெயர்கள் இட்டு அழைப்பர். இவர் இயற்றிய முதல் தமிழ் இலக்கணத்திற்கு அகத்தியம் என்று பெயர். இவர் இவர் பொதியமலையில் வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம் இவருடைய பித்ருக்களில் சிலர் தலை கீழாகத் தொங்கிக்கொண்டு தவம் செய்தனர். இதனைக் கண்டு அகத் தியர் அவர்களைப் பார்த்து, “ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு தவம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அகத்தியரே! மகனே! நாங்கள் உன்னுடைய முன்னோர்கள். நீ திருமணம் செய்து கொள்ளாது இருக்கின்றாய். அதனால் நீ புத்திர பாக்கியமும் பெறாது இருக்கின்றாய். அதனால் உனக்குப் பின் எங்களுக்குப் பிண்ட பிண்டம் போடுவதற்கு வாரிசுகள் இல்லாமல் போகிறார்கள். அதனால் கிடைக்க வேண்டிய ‘புத்’ என்ற நரகம் கிடைக்காமலிருக்கும் பொருட்டு நாங்கள் தலைகீழாக இருந்து கொண்டு தவம் செய்கிறோம். நீ திருமணம் செய்து கொண்டு புத்திரப் பாக்கியம் பெற்றா யானால் நாங்கள் இவ்வாறு கஷ்டப் பட்டுக்கொண்டு தலைகீழாக இருந்து தவம் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் உன் விருப்பத்தின் தன்மையிலேயே நாங்கள் செய்யக்கூடிய தவம் அமைந்துள்ளது” என்றனர். தன்னால் தன்னுடைய பித்ருக்கள் கஷ்டப்படக் கூடாதென்ற நல்லெண்ணத்தி னால் அகத்தியர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
விதர்ப்பராசன்
தம் சங்கற்பத்தால் விதர்ப்பராசன் மகளாகிய தாம் சிருஷ்டி செய்த உலோபா முத்திரையையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குழந்தை இல்லாமலிருந்த விதர்ப்பராசன், தனக்கு புத்திரப்பேறு வேண்டும் என அகத்தியரை வேண்ட, அகத்தியர் அருள் கொண்டு, மன்னனே! உனக்கு அழகான பெண் குழந்தை பிறக்கும்; அக்குழந்தை வளர்ந்தபின் எனக்கே மணமுடித்துத் தர வேண்டும் ” என்று கூறினார். புத்திர பாக்கியம் வேண்டும் என்ற ஆசையால் அவன் முதலில் ஒத்துக் கொண்டான். பின்னர் அகத்தியர் கூறியபடி அவர் சங்கற்பத்தால் சிருட்டி செய்த பெண் குழந்தை பிறந்தது. குழந்தை நன்கு வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தது. தம் பெண்ணின் அழகினைக் கண்ட அம்மன்னன், சடாமுடி சடாமுடி தாங்கிய காவி ஆடை அணிந்த ஒரு முனிவருக்குத் தன் பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்க அவன் மனம் ஒப்பவில்லை. பெண்ணை கொடுக்க மறுத்தாலோ முனிவரின் சாபத்திற்கு ஆட்பட நேரிடும். என்ன செய்வதென்று தெரியாமல் அம்மன்னன் தடுமாறிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் பெண் உலோபா முத்திரை, தந்தையின் முகவாட்டத்தைத் கண்டு அதற்கான காரணத்தையும் உணர்ந்து தந்தையை நோக்கி, “தந்தையே! நீங்கள் மனம் வருந்தக்கூடாது என்னை அகத்திய முனிவருக்கே திருமணம் செய்து கொடுங்கள். அவருக்கு என்னைக் கொடுக்க மறுத்து நீங்கள் அவர் சாபத்திற்கு ஆட்படக் கூடாது.எனவே, என்னை அம்முனிவருக்குக் கொடுத்து உங்களைக் காப் பாற்றிக் கொள்ளுங்கள்” என்று உறுதியாகக் கூறி விட்டாள்.
அகத்தியருக்கு திருமணம்
மகளின் சொல்லைக் கேட்டு அரசன் ஒருவாறு சமாதானம் அடைந்து தன் மகளை அகத்திய முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்து ஆடை ஆபரணங்கள் போன்றவற்றை வரிசையாகக் கொடுத் தான். ஆனால் அகத்தியரோ, உலோபா முத்திரையை நோக்கி,”பெண்ணே! நீ இப்பொழுது முற்றும் துறந்த முனிவரின் மனைவி, ஆகலின் உன் தந்தை கொடுத்த அணிகலன்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டு வருக” என்று சொல்ல, தன் கணவரின் சொல்லுக்கேற்ப, தனக்கு தந்தையால் அளிக்கப்பட்ட அணிகலன் களையும் அழகிய ஆடைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டு, மரவுரி ஆடை அணிந்து கொண்டு முனிவருடன் மகிழ்ச்சி யுடன் வாழ்க்கை நடத்தி அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அவரின் அன்பினைப் பெற்றாள்.
ஒரு நாள் அகத்தியர் தன் மனைவியைத் தன்னுடன் சேர அழைத்தார். உலோபா முத்திரை தம் கணவரை வணங்கி. “சுவாமி! தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கின்றேன். என்றாலும் என் உள்ளத்தில் ஓர் ஆசை உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா?” என்று கேட்டாள். அத அதற்கு அகத்தியர், ”உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் சொல்லுக ” என்றார்.
உலோபா முத்திரையின் ஆசை
அதற்கு உலோபாமுத்திரை, “என் தந்தை வீட்டில் இருந்த மாதிரியே நல்ல படுக்கை விரிப்பும் பெற்று, நல்ல அணிகலன்களையும் அணிந்து கொண்டு நான் மகிழ்ச்சியோடு இருக்க, நீங்கள் என்னுடன் சேர வேண்டும் என்பதே ஆசை” என்றாள். என்
பெண்ணே! உன் விருப்பத்தை நிறைவேற்ற என்னிடம் செல்வமேது? நான் காட்டில் வசிக்கும் முனிவன் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவள், “சுவாமி! உங்கள் தவப் பெருமையினால் வேண்டிய செல்வத்தை நீங்கள் அடையலாமே!” என்றாள். அதற்கு அந்த முனிவர், “தவத்தினைக் கொண்டு அழியக்கூடிய செல்வத்தைப் பெற்றால்…. அழியாத மோட்சத்தை அடைவதற்குரிய தவப் பயன் அழிந்துவிடும். அதனால் நான் உன் எண்ணத்தை நிறைவேற்ற மன்னர் களிடம் தானம் பெறச் செல்கிறேன். அப்பொழுதுதான் என் தவம் நெறி கெடாது” என்று கூறி, மன்னர்களிடம் தானம் பெற முடிவு செய்தார். தான் எடுத்த முடிவுக்கு ஏற்ப அகத்தியர் முதன் முதலில் சிருதபவன் என்னும் புகழ் பெற்ற அரசனிடம் சென்றார். அவனும் அவரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கி, பின், “சுவாமி! தாங்கள் இங்கு வந்தமைக்குரிய காரணம் யாது?” என்று கேட்டான் அதற்கு அம்முனிவர், “அரசே! என் மனைவிக்கு அணிகலன் செய்வதற்காக பொன் வேண்டும். உனக்கு ஓர் ஆண்டிற்கு வேண்டியதை வைத்துக் கொண்டு, மீதி இருப்பை ஆராய்ந்து பார்த்து எனக்கு வேண்டியதைக் கொடுப்பாயாக” என்றார். அவன் தன் வருவாய் செலவு கணக்கைப் பார்த்ததில் ஒன்றும் மிச்சமில்லை என்பது தெரியவந்தது. அதனை அறிந்த அகத்தியர் “இவ்விடம் தானம் பெற்றால் குடிமக் களுக்குத் தான் வரிச்சுமை அதிகமாகும்” என்று எண்ணி அகஸ்தியர் வேறிடத்திற்குப் புறப்பட்டார். மன்னன் அதனை அறிந்து, தானும் உடன் வருவதாக கூறினான். பின்னர் இருவரும் வதுவாதிபன் என்னும் அரசனிடம் சென்று சிருதபவனிடத்துச் சொன்னதைப் போலவே கூறினார். அங்கும் வரவு செலவு கணக்கை பார்த்ததில் மிச்சமொன்றும் இல்லை. அதன்பின் அகத்தியர் அந்த இரு மன்னர்களையும் அழைத்துக்கொண்டு தராவ பூபதி என்ற அரசனிடம் சென்றார். அவனிடத்தும் அந்த ஆண்டு வரவு செலவு கணக்கில் மிச்சம் ஒன்றுமில்லை என்பது தெரியவந்தது.
நியாயமான செலவுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்குத்தான் அரசன் குடிமக்களிடமிருந்து வரி வசூல் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், “நியாயமான வருவாயைப் பெற்றுக் கடமைகளை பரிபூரணமாக செய்து, தர்ம சாஸ்திரப்படி நடந்து வரும் எந்த அரசனிடத்திலாவது தானம் பெற்றால், அவனுடைய குடி மக்களுக்கு அளவு கடந்த நஷ்டமும் துன்பமும் உண்டாகும் ” என்பதையும் அகத்தியர் நன்கு உணர்ந்தார். அதனால்தான் அவர் மூன்று அரசர்களிடம் செல்ல வேண்டி நேரிட்டது.
கொடியவன் இல்வளன்
மூன்று அரசர்களுடன் அகத்தியர் மேற்கூறிய காரணத்தினால் பொன்பெற கொடிய அசுரனாகிய இல்வலனிடம் சென்றார். அந்த இல்வலன் நாள்தோறும் பிராமண வேடத்தில் இருந்து கொண்டு தன்பால் வருகின்ற விருந்தினர்களாகிய அந்தணர்களுக்கு, தன் தம்பி வாதாபியை ஆடாக மாற்றி, பின் அதனை வெட்டிக் கொன்று சமைத்து அன்போடு படைப்பான். வந்த விருந்தினர்களும் படைத்த உணவை உண்பார்கள். அவர்கள் உண்டபின் இல்வலன், “வாதாபி வெளியே வா!” என்று கூவி அழைப்பான். வந்த விருந்தினர்கள் மகிழ்ச்சியோடு உண்ட பின், தான் கொன்று, விருந்தாகப் படைத்த வர்களை உயிர் பெற்று அழைக்கும் மந்திரத்தை இல்வலன் கற்றிருந்தான். ஆதலின் ஆட்டுக்கறியாக வயிற்றின் உள்ளே சென்றவன் உயிர் பெற்று. வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். உண்டவரோ அதே இடத்தில் இறந்து போவார். வயிற்றினுள் இருந்து வெளி வந்த வாதாபியோ வேறு ஒருவருக்கு உணவாகப் போவதற்குக் காத்திருப்பான். இவ்வாறு நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த செய்தியை அகத்திய ரிடத்தில் உடன் வந்த வந்த மூவரும் தெரிவித்த னர். அவரும் அதனைக் கேட்டு உண்மையை அறிந்து கொண்டார்.
பயனற்றுப் போன இல்வலனின் கூச்சல்
அகத்தியர் இல்வலன் வீட்டை அடைந்தார். நல்ல பிராமணர் சிக்கினார் என்று மிக்க மகிழ்ச்சியடைந்து அவரை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தான். அதன் பின் வாதாபியாகிய ஆட்டுக்கறியை சமைத்து விருந்தாகப் பரிமாறி அகத்தியரை உண்ணச் செய்தான். அகத்தியரும் நன்றாக உண்டார். விருந்தெல்லாம் முடிந்தபின் இல்வலன் வழக்கப்படி, ‘வாதாபி வெளியே வா’ என்று கூறி வெளியே உயிரோடு வருவதற் குரிய மந்திரத்தையும் கூறினான். அவன் கூறுவதற்குள்ளேயே அகத்தியர், “வாதாபீ! நீ நன்றாக ஜீரணம் அடைவாயாக” என்று சொல்லி, அதற்குரிய மந்திரத்தையும் கூறி, தம் வயிற்றை நன்றாகத் தடவி விட்டுக் கொண்டார். அதனால் வாதாபி வெளியே வர முடியாதபடி நன்றாக வயிற்றிலேயே ஜீரணமானான். இல்லவன் எவ்வளவு கத்தியும் பயனில்லாது போயிற்று.
அதன்பின் இல்வலன் என்ற அந்த அசுரன் அகத்தியரை வணங்கி வேண்டிய பொன்னைத் தானமாகக் கொடுத்து அனுப்பினான். உடன் வந்த அரசர்களுக்கும் வேண்டிய பொன்னைக் கொடுத்தான். தான் பெற்ற பொன்னை தன் மனைவி உலோபா முத்திரைக்குக் கொடுத்து அவளைத் திருப்தி செய்தார். பிறகு இருவரும் மனமொத்துக் கூடினார்கள்.ஓர் ஆண் மகவு பிறந்தது. அவனுடைய பெயர் திருடஸ்யு என்ப தாகும். அவருக்கு ஆண் குழந்தைப் பிறந்ததனால், தலைகீழாகத் தொங்கித் தவம் புரிந்து கொண்டிருந்த அவர் முன்னோர்கள் மேலான மோட்ச பதவியை அடைந்தார்கள்.
விருத்திராசூரன்
இதனைக் கேட்ட தர்மபுத்திரர், ‘மூர்த்தி சிறியதாயிருந்தாலும், அகத்தியருடைய கீர்த்தி மிகப் பெருமை கொள்ள வைக்கின்றது. ஆகலின் அவரைப் பற்றி மேலும் கூறுங்கள் ” என்று வேண்ட, உரோமச முனிவர் மேலும் கூறலானார்.
விருத்திராசூரன் என்ற கொடிய அசுரன் இந்திரன் மீது படையெடுத்து அவனுக்குப் பெருந்தொல்லையைக் கொடுத்து வந்தான். அதனால் பெரிதும் துயரமடைந்த இந்திரன் தேவர்களுடன் சென்று நான்முகனிடம் முறையிட்டான். நான்முகள் அதனைக் கேட்டு ததீசி முனிவரின் முதுகெலும்பை வச்சிராயுதமாகச் செய்து, அவனோடு போரிட்டால் அவனைக் கொல்லலாம் என்றார். அவ்வாறே இந்திரன் முதலா னோர் எல்லா உயிர்களிடத்திலும் காட்டக் கூடிய அன்பும் வேண்டியார்க்கு வேண்டி யாங்கு கொடுக்கக் கூடிய கொடைக் குணமும் கொண்ட ததீசி முனிவரிடத்தில் அவர் முதுகெலும்பை யாசித்தார்கள். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து அப்பெருமகனார் தம் உயிரைக் கொடுத்துத் தன் முதுகெலும்பை வழங்கினார். அதனை இந்திரன் த்வஷ்டா என்ற தேவலோகத்து விசுவகர்மாவைக் கொண்டு வச்சிராயுத மாசுச் செய்து கொண்டு விருத்திரா சூரனுடன் போரிட்டான். அவனோ அந்த வச்சிராயுத்துக்கு எதிராகத் தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்குள் ஒளிந்து கொண் டான்.
பகீரதன்
அதனால் இந்திரன் முதலானோர் அகத்தியரை சரணடைந்து, “கடல் நீரைக் குடித்து குடித்து எங்களைக் காப்பீராக” என வேண்டினர். அகத்தியரும் அருள்கொண்டு அக்கடல் நீரைத் தன் ஒரு கையால் முகந்து கடல் நீர் முழுவதையும் பருகினார். பின்னர் விருத்திரா சூரனை இந்திரன் எளிதில் தன் வச்சிராயுதத்தால் கொன்றொழித்தான்.
அகத்தியர் கடல் நீரை பருகியதனால் கடல் நீர் வற்றி விட்டது. அதனால் எங்கணும் மழை பெய்யாது போய் விட்டது. இதனால் இந்திராதி தேவர்கள் “பருகிய கடல் நீரை வெளியே விடுக” என்று வேண்டினர். ஆனால் அகத்தியரோ பருகிய நீர் முற்றுமே ஜீரணமாகி விட்டது. இனி நீர் எங்கிருந்து வெளிவரும்?” என்று கேட்டார்.
அதனால் இந்திராதி தேவர்கள் நான் முகனிடம் முறையிட்டனர். அந்நான்முகன் சூரிய குலத்தைச் தச் சேர்ந்த பகீரதன் என்பவனால் கடல் நீர் நிரம்பும் “என்று கூறி அவர்களை அனுப்பினான்.
உடனே தர்மபுத்திரர் ஆவலோடு “பகீரதன் என்பவன் யார்? அவன் கடலுக்கு நீரை எவ்வாறு கொண்டு வந்தான் என்பதைக் கூறுவீர்களாக என்று கூறுக” என்று கேட்க, உரோமச மச மாமுனிவர், பகீரதன் ஆகாய கங்கையைக் கொண்டு வந்ததையும், அதனால் கடலுக்கு நீர் வந்ததையும் எடுத்துக் கூறலானார்.
சகரன் என்றொரு மன்னன் முத்தி தரும் நகர், ஏழினுள் ஒன்றான அயோத்தி மாநகரை ஆண்டு வந்தான். அவனுக்கு இருமனைவியர். மூத்தவள் பெயர் சைப்யை; இளையவள் பெயர் வைதர்ப்பி. மூத்தவள் சைப்யைக்கு அசமஞ்சன் என்ற ஒரு மகன் இருந்தான். இளையவள் வைதர்ப்பிக்கோ அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களைச் ‘சகரர்கள்’ என்று அழைத்தனர். சகர னுடைய பிள்ளைகள் ஆதலால் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கபில முனிவர்
சகரன், தனக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் இருக்கின்ற வலிமையை உலகிற்குப் பறை சாற்றி அவர்கள் மூலம் வெற்றிக்கொடி நாட்டி பின்னர் அசுவ மேத யாகம் செய்யத் தீர்மானித்தான். அதனால் சகரன் திக்கு விசயத்துக்காக யாக குதிரையைச் சஞ்சரிக்க விட்டான். அறுபதினாயிரம் சகரர்களையும் அழிக்க எண்ணிய தேவர்கள், அவர்கள் விட்ட குதிரையைப் பாாலத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் கட்டி வைத்துச் சென்றனர். குதிரையை காணாது சகரர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர். அதன்பின் பூமியைத் தோண்டிப் பள்ள மாக்கிப் பாதலத்திற்குச் சென்றனர். அங்கு கபிலமுனிவரின் பின்புறம் கட்டப்பட் டிருக்கும் குதிரையைக் கண்டார்கள். கபிலர்தான் திருடினார் என்று தவறாக எண்ணி அந்த அறுபதினாயிர சகரர்கள் பல நிந்தை வார்த்தைகளை அம்முனிவர் மேல் வீசினார்கள். வெகுண்ட அக்கபிலமுனிவர் தன் கண்களால் அவர்களை உற்று நோக்கிச் சாம்பலாக்கினார். முனிவரைத் தவறாக திருடர் என்று கூறியதனால் அவர்கள் அனைவரும் நரகம் சேர்ந்தனர். தன் மக்களெல்லாம் சாம்பலாகிப் போனதை அறிந்த சகர சக்கரவர்த்தி, பிழை அவர்கள் பால் இருப்பதை அறிந்து, கபில முனிவரிடம் சென்று அவரை வணங்கி தம் மக்கள் பிழை பொறுக்குமாறு வேண்டி னார். அதனால் அவர் மனமகிழ்ந்து குதிரையை அவிழ்த்து கொண்டு போகுமாறு கூற, மன்னன் நாடு திரும்பி தாம் கருதிய அசுவமேத யாகத்தைச் சிறப்புறச் செய்து முடித்தான்.
சகரன் சில காலம் ஆண்டபின் தன் மகன் அசமஞ்சன் புதல்வனும் -பேரனுமாகிய அம்சுமானுக்கு முடி சூட்டி, காட்டிற்குச் சென்று தவம் புரிந்து விண்ணுலகு அடைந்தான். அம்சுமானும் நாட்டைச் சிறந்த முறையில் ஆண்டு வந்தான். அவனுக்கு பின் அவன் மகன் தீலிபனின் மகனும், பேரனுமான பகீரதன் அரசினைப் யேற்றான்.
பகீரதனின் தவ முயற்சி
பகீரதன் தன் முன்னோர்களாகிய சகரர்கள் அறுபதினாயிரவரை மோட்ச உலகுக்கு அனுப்ப தீர்மானித்தான். அதனால் அவன் தன் நாட்டைத் தகுதி வாய்ந்த நல் அமைச்சரிடத்து ஒப்படைத்து விட்டு, வசிஷ்ட மாமுனிவர் கங்கையை கொணர வேண்டுமென்று கூறிய ஆலோசனைப்படி நான்முகனை குறித்து பதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். அவன் தவத்திற்கு மெச்சிய நான்முகன் அவன் முன் தோன்றி, ”அரசே! தேவலோகத்தில் பாயும் ஆகாய கங்கை பூமியில் இறங்கி வந்து சகரர்களின் சாம்பல் மேட்டில் பாயுமாயின் அவர்கள் மோட் சத்தை அணை ஆனால் அந்த ஆகாய விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும்பொழுது அதன் வேகத்தை சிவபெருமான் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது. ஆகையால் அதனைத் தாங்கும் சக்தியுடைய சிவபெருமானைக் குறித்து அருந்தவம் செய்வாயாக” என்று கூறி மறைந்தார்.
நான்முகன் கூறியபடியே பகீதரன் சிவபெருமானைக் குறித்துப் பதினாயிரம் ஆண்டுகள் நீரில் நின்றும், காற்றை உண்டும், வெங்கனலில் இருந்தும் மீண்டும் கடுந்தவம் செய்தான். அவனுடைய கடுந்தவத்திற்கு உகந்த சிவபெருமான். “அரசே! உன் கோரிக்கை நிறைவேற வேண்டுமாயின் கங்காதேவி இம்மண்ணுல கிற்கு வர வேண்டும்; அவளைக் குறித்து இப்பொழுது செய்த மாதிரியே கடுந்தவம் செய்க” என்று கூறி மறைந்தார். மீண்டும் அச்சங்கரன் சொற்படியே ஏழாயிரம் ஆண்டுகள் எந்தவிதத் தயக்கமும் காட் டாது, கருமமே கண்ணாக விளங்கி. கங்காதேவியைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான். கங்காதேவியும் அவன் முன் தோன்றி, “பகீரதா! நான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வருவேனாயின் என் வேகத்தை நிலமகளால் தாங்க முடியாது. சிவபெரு மான் தான் அதனை ஒரு வழிப்படுத்தி உலகிற்கு விடுவார். ஆதலின் அச்சிவபெரு மானை குறித்து மீண்டும் கடுந்தவம் செய்க” என்று கூறி மறைந்தாள். ‘முயற்சி திருவினையாக்கும் ‘ என்பதற்கேற்ப பகீரதன் சிறிதும் தளர்ச்சியடையாது ஐயாயிரம் ஆண்டுகள் அக்கினியின் நடுவில் நின்று கொண்டு கடுந்தவம் செய்தான். மேடு பள்ளங்களையுடைய கரடு முரடான பாதையைக் கண்டு அஞ்சாது வண்டியை இழுத்து செல்லும் எருதினைப் போலத் தனக்கு வந்த தடைகளையெல்லாம் தன்னுடைய முயற்சியினால் முறியடித்துக் காட்டிய பகீரதனின் பேரூக்கத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் ரிடப வாகன ரூடராய் பிரம்மாதி தேவர்கள் புடைசூழ அவன் எதிரில் நின்று காட்சி தந்தார். “பகீரதா! உன்னுடைய தளர்ச்சியடையாத முயற்சியைக் கண்டு நாம் பெருமகிழ்வு அடைந்தோம். ஆகாய கங்கையை நான் என் செஞ்சடையிலேற்று பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இமயமலையின் உச்சியில் பெருக விடுகின்றோம். அந்த புனித இடம் ‘கங்கோத்ரி’ எனப் பெயர் பெறும். நான் பெருக விடுத்த அந்த கங்கையாறானது இறந்த நின் மூதாதையர் களாகிய சகரர்கள் அறுபதினாயிரம் பேர் மீது பாயும். அதனால் அவர்கள் இப்பொழு துள்ள நரகத்தை விட்டு, நற்கதியான மோட்சத்தை அடைவார்கள்” என்று கூறி அருள் செய்து கயிலையங்கிரி சார்ந்தார். பகீரதன் செய்த பெரு முயற்சியினால் சிவபெருமான் சடையில் தங்கிய ஆகாய கங்கை இமயமலையின் உச்சியில் கங்கோத்ரியில் பாய்ந்து பெருநதியாக பாய்ந்தோடியது. அந்த ஆற்று புனித நீரானது சகரரின் சாம்பல் மேட்டின் மேல் பாய அவர்கள் அனைவரும் மோட்ச உலகு அடைந்தனர். இதனால் தான் பெரும் முயற்சி செய்து ஒரு செயலை முடித்தால் ‘பகீரதப் பிரயத்தனம் செய்து முடித்தேன்’ என்கிறார்கள் போலும்.
அகத்தியரும் பாய்ந்து வேகமாக வருகின்ற கங்கை நீரை உள்ளங்கையால் எடுத்து ஆசமனம் செய்து உட்கொண்டு வெளியிட அந்நீர் வற்றிப்போன கடலில் பாய்ந்தது. அதனால் அந்நீர் என்றும் வற்றாத நீர் நிரம்பிய சமுத்திரமாக மாறியது. அனைவரும் அச்சமின்றி வாழும் படியாக பிற நதிகளும் சேர்ந்து பரந்த பெருங்கடலாக பூவுலகில் முக்கால் பாகம் எனச் சூழ்ந்து தற்போதும் விளங்குகின்றது. சகர குமாரர்கள் தோண்டின பள்ளமே கங்கை நீரால் நிறைந்து மீண்டும் பரந்த பெருங்கடலானதால் அதனை ‘சாகரம்’ எனவும் அழைக்கலாயினர்.
அகத்திய முனிவர் வரலாற்றை சொல்லிக்கொண்டு வந்த உரோமசமுனிவர் அவர் விந்திய மலையை அடக்கிய வரலாற்றையும் கூறலானார்.
ஒரு காலத்தில் விந்திய மலையானது கர்வம் கொண்டு மேரு மலையைப் போல மிக உயர்ந்து வானை ஊடுருவிச் சென்று வளர்ந்தது. அதனால் கோள்களும் கிரகங் களும், நட்சத்திரங்களும் செல்லும் வழியறி யாது திகைக்கலாயின. அவை படுகின்ற பாட்டைக் கண்டு தேவர்கள் அகத்தியரைக் கண்டு வணங்கி, “தங்கள் இடரைப் போக்க வேண்டும்” என வேண்டினர். அகத்தியரும் மனமிரங்கி, விந்திய மலையை அணுகி “நான் பொதிய மலை செல்ல வேண்டும்” என்று கேட்டார். உடனே விந்திய மலை தன் உயரத்தினின்று குறுகி அவர் செல்ல வழி கொடுத்தது. அப்பொழுது அவர் அவ்விந்தியமலையிடம், “நான் பொதிய மலையிலிருந்து திரும்பி வருகின்ற வரையில் நீ இப்படியே வளராது இரு” என்று கூறி, அதனை மிதித்துத் தெற்கே சென்றார். அவர் கூறிய படியே விந்தியம் குறுகி இருக்கலாயிற்று. இன்னும் அவ்வாறே இருக்கின்றது. இவ்வாறு அகத்திய மாமுனிவர் நிலவுலகம் செழிக்கும்படி பல அற்புதங்களைப் புரிந்தார். “அத்தகைய மாபெரும் முனிவரின் பெயரை கொண்ட அகத்திய தீர்த்தம் இங்கு உள்ளது. அனைவரும் அதில் நீராடி நற்பயனைப் பெறலாம்” என்று உரோமச முனிவர் கூற, தர்மபுத்திரர் தன் தம்பியருடனும் பாஞ்சாலி உடனும் அந்த புனித அகத்தியத் தீர்த்தத்தில் நீராடி பெரு மகிழ்வுற்றனர்.
கலைக்கோட்டு மாமுனிவர் (ரிஷிய சிருங்கர்)
புனித அகத்திய தீர்த்தத்தில் நீராடிய பின் தர்மபுத்திரர் தன் தம்பியரோடும் பாஞ்சாலி யோடும் தௌமிய முனிவரோடும் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஓரிடத்தில் கெளசிக நதி தீரத்தில் ஓர் அழகான சோலை இருப்பதைக் கண்டார். உடன் வரும் உரோமச முனிவரைப் பார்த்து, “தவ சிரேட்டரே! இந்த அழகான சோலை யாருடையது? சொல்வீராக?” என்று கேட்டார். அதனைக் கேட்டு உரோமச முனிவர், “தர்மபுத்திரரே! இச்சோலை கலைக்கோட்டு மாமுனி என்று அழைக்கப்படும் ரிஷிய சிருங்கர் வாழ்ந்து வரும் இடமாகும். அவர் உலகியலைப் பற்றி அறியாதவர். ஆனால் மேலான தவத்தைச் செய்தவர். அவர்தான் இந்த சோலையில் இருக்கின்றார். அவருடைய பெருமையை பற்றிக் கூறுகின்றேன். கேட்பாயாக” என்று கூறி, அம்முனிவர் பெருமானின் வரலாற்றைத் தர்மபுத்திரருக்கு எடுத்து கூறலானார்.
காசிபன் பெற்ற விபண்டகன் என்னும் முனிவன் இந்தக் கெளசிகநதியில் நீராடும் பொழுது அழகுடன் விளங்கும் ஓர் தேவ மாதுவைக் கண்டான். அவள் மீது பெருங்காதல் கொண்ட அம்முனிவனின் விந்து அவனை அறியாது நீரில் விழ. அதனை மான் ஒன்று நீரோடு சேர்த்து பருகியது. அதன் பயனாக அம்மான் கருவுயிர்த்தது. பின் அம்மான் முகத்தில் மான் கொம்புள்ள ஓர் ஆண் குழந்தையை ஈன்றது. இதனை விபண்டக முனிவன் கண்டு அக்குழந்தைக்கு ‘ரிஷிய சிருங்கர்’ என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தார். அந்த ரிஷிய சிருங்கர் உலகியலைப் பற்றி ஒன்றுமே அறியாது தன் தந்தையுடன் பெருந்தவம் செய்து வந்தார்.
காலடி பட்டதும் பெருமழை
அப்பொழுது அந்த தேசத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யாது மக்கள் பெரும் துன்பம் அடைந்தனர். அப்பொழுது ஒரு முனிவன் அந்த தேசத்து அதிபதியாகிய உரோமபாதனிடம் சென்று, “அரிய தவத்தைத் தன் தந்தையோடு செய்து கொண்டிருக்கும் ரிஷிய சிருங்கரை அழைத்து வந்தால் இங்கு பெரு மழை பொழியும். மக்களின் துன்பமும் நீங்கும்” என்று கூறிச் சென்றான். “அம்முனிவரை இங்கு எவ்வாறு அழைத்து வருவது?” என்று உரோமபாதன் சிந்தித்து கொண்டி ருக்கையில் நான்கு பொது மகளிர் மன்னனி டம் வந்து, “நாங்கள் அம்முனிவரை அழைத்து வருகின்றோம்” என்று வணங்கிக் கூறினர். மன்னன் அனுமதி தர, அவர்கள் ரிஷிய சிருங்கரிடம் சென்று இனிய தீஞ்சுவைக் கனிகளை உண்ணும்படி தந்தனர். அதனை உண்ட ரிஷிய சிருங்கர் “இத்தகைய சுவை மிக்க கனிகள் எங்கே இருக்கின்றன! என்று கேட்க, அம்மகளிர் அக்கனிகள் இருப்பிடத்தைக் காட்டு கிறோம் வாருங்கள்” என்று கூறினர். அதன் பின் அம்முனிவரை அந்தத் தேசத்துக்கு அழைத்து வந்தனர். அம்முனிவன் அந்தத் தேசத்து மண்ணில் நுழைந்து அவன் காலடி பட்டதுமே அங்கு பெருமழை பொழிய லாயிற்று.
இதனைக் கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ந்து அம்முனிவரைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு அழைத் துச் சென்றான். அங்கு தன் மகளாகிய சாந்தையை அம்முனிவர் பெருமானுக்குக் கன்னிகாதானமாகத் திருமணம் செய்து கொடுத்தான். ரிஷிய சிருங்கர் சில காலம் அவளிடம் கூடி இன்பம் அனுபவித்துத் தன் ஆசிரமத்திற்கு வந்தார். அத்தகைய பெரு மழை பொழியவைக்கும் மகான்தான் இந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளார் என்று உரோமச முனிவர் கூறினார். அதன்பின்னர் தர்ம புத்திரர் தன் தம்பியரோடும் பாஞ்சாலி யோடும் கவுசிக நதியில் நீராடி பரசுராமனின் ஆசிரமத்தை அடைந்தனர். (இக்கதையின் சுருக்கம் இராம காதை யிலும் வந்துள்ளது).
பரசுராமன் கதை
தர்மபுத்திரர் முதலானோர் பரசுராமன் ஆசிரமம் அடைந்தனர். அங்கிருந்த தவசிகள், “பரசுராமன் இன்று இங்கில்லை. நாளைய தினம் வருவார் அப்பொழுது அவரைக் காணலாம்” என்றனர். அதனைக் கேட்டு தர்மபுத்திரர் கீர்த்தி வாய்ந்த அந்தப் பரசுராமரைக் காண வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டு அங்கேயே தன்னுடன் வந்தவர்களுடன் தங்கினார். அப்பொழுது அவர், “பரசுராமனின் புகழ் வாய்ந்த வரலாற்றைக் கூறுங்கள்” என்று கேட்க உரோமச முனிவர் கூறலானார்.
பிருகு என்றொரு முனிவன் அரசர் குலப் பெண்ணொருத்தியை மணந்து அரிய தவத்தைச் செய்து வந்தார். அப்பெண்ணும் தன் கணவனிடத்தில் பக்தி பூண்டு, அவருக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்து வந்தாள். அதனால் அம்முனிவர் பெரு மகிழ்வு உற்று, ‘பெண்ணே! நீ விரும்பி யதைக் கேள் தருகின்றேன்’ என்றார். அதனைக் கேட்ட அவர் மனைவி, “முனி வர் பெருமானே! எனக்கும், கன்யாகுப் ஜத்தை ஆண்டு வரும் காதி மன்னனின் மனைவியாகிய என் தங்கைக்கும் பிள்ளைப்பேறு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு அம்முனி வர், “நல்லது; வாரத்தில் திங்கட்கிழமை யன்று நீ தழைத்த அரச மரத்தையும், உன் தங்கை தழைத்துள்ள பலாச மரத்தையும் தழுவி, வணங்கிச் சுற்றி வந்தால் பிள்ளைப்பேறு உண்டாகும் ” என்றார். (பொதுவாக அரசு, அத்தி, ஆல், பலாசு, புன்னை, மா, வில்வம் போன்ற மரங்கள் தெய்வாம்சம் உடையவை என்று கூறுவர்). முனிவர் கூறியபடி அல்லாமல் அவ்விரு வரும் மாறி, அதாவது பிருகு முனிவர் மனைவி பலாச மரத்தையும், அவள் தங்கை அரச மரத்தையும் கட்டித் தழுவி, சுற்றி வந்து வணங்கினர். பின்னர் முனிவர் பெருமானை வந்து வணங்கினார்கள். அவர்கள் தாம் கூறியதற்கு மாறாகச் செய்த செயலை அறிந்த அம்முனிவர் பெருமான், தன் மனைவியிடம், “உன் வயிற்றில் க்ஷத்திரியச் செய்கையுள்ள மைந்தனும், உன் தங்கை வயிற்றில் தவத்தில் சிறந்த வீரியமுள்ள அந்தண்மை பூண்ட சாதுவான மைந்தனும் பிறப்பார்கள்” என்று கூறினார்.
பிரம்மரிஷி
பிருகு முனிவர் கூறியதைக் கேட்ட அவர் மனைவி. அவரை வணங்கி, “தனக்கு க்ஷத்திரிய செய்கையுள்ள மகன் பிறவாதபடி அருள் புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அம்முனிவர் “நீ விரும்பிய படியே உனக்கு மகன் பிறப்பான்” என்றார். அவர் அருள் புரிந்தபடியே அவளுக்குத் தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி பிறந்தார். காதி அரசனின் மனைவியாகிய தங்கைக்குக் கெளசிகன் பிறந்தான். இவர்தான் பிற்காலத்தில் வசிஷ்ட மாமுனிவரால் ‘பிரம்மரிஷி’ என்று போற்றப்பட்ட விசுவாமித்திரர் ஆவார்.
பிருகு முனிவர் மனைவி வயிற்றில் பிறந்த ஜமதக்னி சிறந்த தவசிரேட்டராக விளங்கினார். இவர் இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த ரேணு என்னும் அரசனது மகளாகிய இரேணுகையை மணந்தார். இத்தம்பதி யினருக்கு, ருமண்வான், ஸுஷேணன், வஸூ, விசுவாவஸு, பரசுராமன் என நான்கு மைந்தர்கள் பிறந்தனர். இவர்களில் கடைசி மைந்தனாகிய பரசுராமன் அந்தணர் குலத்தில் பிறந்திருந்தாலும் கோபம், தாபம், போரிடுதல் முதலான க்ஷத்திரியர்க் குரிய குணங்களைக் கொண்டிருந்தார்.
மகாபாரதம் – 23 தீர்த்த யாத்திரைச் சருக்கம்… பொதிகையில் வாழ்ந்த அகத்தியர் | Asha Aanmigam