சூரன் போருக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்தான். அண்டங்களில் இருந்த சேனாவீரர்களைக் களம் புகக் கட்டளை இட்டான். கணக்கிலடங்கா அளவிற்கு வந்துவிட்ட சேனைகள் காலியாக இருக்கும் இடமெல்லாம் வந்து கூடினர்.
சூரன் போர்க் கோலம் பூண்டான். ஈசனைப் பணிந்து போற்றினான் . ஈசன் மற்றும் தேவாதி தேவர்கள் அளித்த படைக்கலங்களையும் தேவர்கள் தந்த படைக்கலங்களையும் எடுத்துக் கொண்டான். அனைத்தையும் தேரில் ஏற்றினான். சிங்கங்கள், குதிரைகள், கூளிகள் பூட்டிய அத்தேரில் ஏறி அமர்ந்தான். சூரனின் தேரைத் தொடரந்து அவனது சிங்க வாகனமும், இந்திரஞாலத்தேரும் புறப்பட்டது.
முருகப் பெருமான், வாயுதேவன் சாரத்தியம் செய்யும் பொன் வண்ணத்தேரில் எழுந்தருளினார். புன்னகையால் அனைவருடைய அச்சத்தையும், பயத்தையும் போக்கினார். போர்களம் புகுந்தார். பூ மழை பொழிந்தன. கோஷங்கள் எழுந்தன. வேதம் ஒலித்தன.
சூரனின் சேனைகளைக் கண்டு அச்சங் கொண்டு இந்திரனின் பயத்தைப் போக்கத் திருமால், “அமரேந்திரா! சூரனின் சேனைகளைக் கண்டு பயப்படாதே! பகைவரை வெல்வதற்கு நம் வேலனுக்கு வேற்படை வேண்டாம்; கண்ஜாடை ஒன்றே போதும். அவுணர்களை அழிப்பதற்கு ஆயிரக் கணக்கில் அஸ்திரம் தேவை இல்லை; அருள் சிந்தும் புன்னகை ஒன்றே போதும். படைகள் தேவை யில்லை நம் குமரப் பெருமானுக்கு; அருள் செய்யும் திருக்கரங்கள் போதும்!” என்றெல்லாம் பலவாறு ஆறுதல் சொல்லி இந்திரனுக்கு உற்சாகத்தை ஊட்டினார்.
போர்க்களத்திலே பாஞ்சசாந்நியம் முழங்கியது. பூதப் படையினரும், அசுரப்படையினரும் இரைச்சலுடன் களம் இறங்கினார். பயங்கரவேல்கள் பறந்தன, அஸ்திரங்கள் பாய்ந்தன. வாள்களும், ஈட்டிகளும், வேற்படைகளும் பறந்த வண்ணமிருந்தன. இருதரப்பினரும் சளைக்காமலும் சாவுக்கு அஞ்சாமலும் போர் செய்தனர்.
அவுணர்கள் தண்டு, சக்கரம், சூலம், பிண்டி, பாலம்,ஈட்டி போன்ற படைக்கலங்களை அடுத்தடுத்து பிரயோகிக்க பூதப்படையினர் முருகன் நாமத்தை ஜபித்த வண்ணம் அஸ்திரங்களை விடுத்து அசுரர்களின் விதவிதமான படைக்கலங்ளை வலுவிழக்கச் செய்தனர். அவற்றைப் பிரயோகித்த அசுரர்களையும் மாண்டுபோகச் செய்தனர்.
அசுரர்கள் வீரத்திற்கு அஞ்சி நடுங்கிய தேவர்களை ரக்ஷிப்பான் வேண்டி, ஆறுமுகப் பெருமான் அவுணர் கூட்டத்திடையே புயலெனப் புகுந்தார். தேரில் இருந்தவாறு லட்சக் கணக்கான அசுர சேனைகளைத் தகர்த்து எறிந்தார்.
அண்டங்களில் இருந்த அவுணர் படைகள் மடைதிறந்த வெள்ளம் போல் திரண்டு வருவது கண்டு முருகப் பெருமான் பாணங்களைப் பொழிந்து அண்டங்களின் வாயிலை மந்திரத்தால் கட்டுப்படுத்தி மூடச் செய்தார். சூரன் சினம் பொங்க தேவப்படையினர் முன்னால் முருகனுக்கு நேராக வந்து நின்றான். முருகன் சூரனைப் பார்த்தார். அவ்வாறு திருமுருகனின் பார்வை பட்டதும் சூரன் ஒருகணம் ஞானம் பெற்றான்!
சூரன் ஆறுமுகனின் பன்னிரு திருத்தோள்கண்டான். ஆறுமுகம் கண்டான். அருள் சுரக்கும் விழிகள் கண்டான். அணிமிகு மார்பு கண்டான். அருள்வடியும் திருத்தோற்றம் கண்டான். பன்னிரண்டு திருப்பாத கமலங்கள் கண்டான்.
இத்தெய்வத்திருக் கோலம் கண்டு தொழுது பணிய வேண்டிய சூரன் அலக்ஷியமாக முருகனை பார்த்து நகைத்தான். முருகப் பெருமானின் பொலிவு கண்டும் புத்தி கெட்டுப்போன சூரன் முருகன் மீது அஸ்திர பிரயோகம் செய்தான். முருகன் அவற்றைப் பயனற்றுப் போகச் செய்தார். வீரபாகு வாளால் சூரனின் படைக்கலங்களைத் தகர்த்தான். சூரன் கடும் கோபம் கொண்டு வீரபாகுவை பந்தாடினான். நல்லவேளை முருகன் திருவிழி மலர் பட்டு வீரபாகு தப்பித்தான். சூரபன்மன் பூதப்படையினரையும், லக்ஷம் வீரர்களை யும் தோற்கடித்து நாலாபக்கமும் சிதறி ஓடச் செய்தான்.
சூரன் மாமலை போன்ற வில்லை விடுத்து வேலவனை எதிர்த்தான். பதிலுக்கு வேலவனும் கயிலை மலை போன்ற கணை விடுத்து சூரனைத் தண்டித்தார். அவன் படைக்கலங்களைச் செயல் இழக்கச் செய்தார்.
சூரன் விடுத்த கணையொன்று முருகனின் தேர்மீது பறந்து கொண்டிருந்த கொடியை அறுத்தது. பதிலுக்கு பசுபதி மைந்தனாம் முருகனும் சூரனின் தேர்க்கொடியை அறுத்துக் கடலில் தள்ளினார். முருகனின் வீரம் கண்டு பூதசேனைத் தலைவனான பானுகம்பனை சங்கு முழங்கச் செய்தான்.
முருகன் தேரில் கொடியில்லாமல் இருப்பது கண்ட அக்னிபகவான் தேவர்களின் விருப்பம் போல முருகனுக் குச் சேவற்கொடியாக நின்று அண்டங்கள் வெடிபடுமாறு கூவினான். தேவர்கள் ஆரவாரஞ் செய்தனர். பூதப் படையினர் பல்வகை இசைக்கருவிகளைப் பிரயோகித்து போர்க்களத்தில் அசுரப்படையினரின் தோல்வியை திக்கெங்கும் பறைசாற்றினார்.
சூரனுக்குக் கோபம் எரிமலைபோல் வெடித்தது. “முருகன் இருக்கும் தைரியத்தில் கூப்பாடு போடும் இந்த கூலிப் படைகளை முதலில் பழிவாங்குகிறேன். பிறகு முருகனை அழிப்பேன்” என்று அடிபட்ட சிங்கம் போல் கூக்குரல் போட்டான். தேவர்கள் மீதும், பூதர்கள் மீதும் அஸ்திரத்தை மழையெனப் பொழிந்தான் சூரன். முருகன் கணை மழை பொழிந்து அசுரப்படையை அழித்து தேவர் படையைக் காத்தார்.
கந்தன் ஏவிய கணையால் சூரனின் கோடிக் கணக்கான மழுப்படைகள், வஜ்ரபடைகள், மழுப்படைகள், வேற்படைகள் அனைத்தும் அழிந்து போயின. கந்தன் ஓராயிரம் கணைகளைச் சூரனின் தோல்வியைத் தழுவி நிற்கும் தோள் மீது பொழிந்தார். சூரனின் படையினரை வயிர மலையில் மீது பொழிந்த கல்மழை போல் சிதறிச் சீரழியச் செய்தார்.
சூரன் உக்கிரமான அஸ்திரங்களை ஷண்முகன் மீது பிரயோகித்தார். சுப்ரமண்யரும் அவனுக்குப் பெரும் சேதத்தை விளைவிக்கும் வண்ணம் போர் தொடுத்தார்.
சக்கிரவாளகிரி, மேருமலை,மஹாசமுத்திரம், பிரம்ம லோகம், விஷ்ணு லோகம், திக் பாலகர்களின் லோகங்கள் என்று அண்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அசுர லோகங்களிலும் முருகனும் சூரனும் சுழன்று சுழன்று அஸ்திரபிரயோகம் செய்து அகில லோகங்களும் அஞ்சி நடுங்கும்படியான வீரப்போர் நிகழ்த்தினர். கந்தனின் கண்பார்வையில் பெருவாரியான அசுரபடைகள் வெந்து சாம்பலாயின.
போர்களத்தில் வீரத்தைக் காட்ட வந்த சூரன் வீரம் இழந்து விவேகம் இழந்து மேற்கொண்டு என்ன செய்வது என்று ஆழ்ந்து சிந்திக்கலானான். சூரனுக்குத் தனது அன்னை மாயையின் நினைவு வந்தது. மனத்தால் மாதாவான மாயையை நினைத்தான் சூரன். அங்ஙனம் நினைத்த மாத்திரத்திலேயே மாயை யானவள் சூரன் முன்னால் வந்து நின்றாள்.
சூரன் கண்ணீர் சிந்திய வண்ணம் தாயின் பாதங்களைப் பணிந்து,”அம்மா! ஒரு சிறுவனால் என் சாம்ராஜ்யமே எழுவர்” என்று கூறிய மாயை அந்த சுதாமந்திரமலை எங்குள்ளது? எப்படி போக வேண்டும் என்ற விஷயங் களைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லி மாயமாய் மறைந்தாள்.
சூரன் இந்திரஞாலத் தேரை வரவழைத்தான். சுதாமந்திரமலை பற்றிய விவரங்களைச் சொல்லி, மந்திர உச்சாடனத்தால் சுதாமந்திரமலையைக் கொண்டு வருமாறு பணிந்து தேரைச் செலுத்தினான்.
கொடுங்கோலன் சூரனுக்கு அடிபணிந்த தேர் இமைப் பொழுதில் மலையைப் பெயர்த்து எடுத்துவந்து சூரன் முன்னால் நிறுத்தியது. மலையிலுள்ள மூலிகை காற்றின் சக்தியால் சூரன் ஈசனிடம் பெற்றுள்ள வரத்தின் மகிமையால் மாண்ட அசுரர்கள் அனைவரும் உயிர்பெற்று எழுந்தனர். சூரனின் உயிரற்றுப் போன உடன்பிறந்தோர், வீரமைந்தர்,வீரப்படையினர் அனைவரும் உயிர் பெற்று எழுந்து சூரனை வணங்கி நின்றனர். அவர்கள் போட்ட கூச்சல் அண்டங்களை நடுங்கச் செய்தது. சூரன் முருகனின் ரதத்தின் முன்னால் நின்று, “பார்த்தாயா! இந்த சூரனின் சக்தியை ?” என்று கேட்டான்.
”அதற்குள் அவசரப் படுகிறாயே! இப்பொழுது தானே சூரியோதயம் ஆரம்பம்! அதற்குள் வீரத்துக்கு விலை பேசுகிறாயே!”
“முருகா! போர்க்களத்தை விட்டுச் செல்வாய்! அதுதான் உனக்கு உகந்தது; உனது வீரத்திற்கும் அழகு.”
சூரனால் உயிர்பெற்று எழுந்த வீரர்கள் கையில் படைக்கலம் ஏந்தி முருகனை எதிர்த்தனர்.
முருகன் பிரம்மாண்டமான பாசுபதாஸ்திரத்தை மந்திரஜபம் செய்து, ஈசனைத் தியானித்து விடுத்தார்.
அஸ்திரத்தின் வன்மையால், அந்த ஒரு அஸ்திரத்தில் நின்று கோடிக்கணக்கான பயங்கர சக்தி கொண்ட அஸ்திரங்கள் வந்தன. பற்பல திக்குகளிலும் சிதறி வந்த அசுரர் படைக்கலங்களைச் செயல் இழக்கச் செய்ததோடு அசுரர்களையும் கொன்றது. அத்தோடு பாசுபதாஸ்திரம் சுதாமந்திரமலையைப் பல கூறாகப் பிளந்து தூள் தூளாக்கியது. முருகன் எய்த அஸ்திரம் கங்கையில் தன்னைப் புனித மாக்கிக் கொண்டு, முருகனின் திருக்கரங்களில் வந்து தங்கியது.
சூரபத்மன் இறந்து கிடக்கும் அசுரர் மத்தியில் பட்ட மரம் போல் நின்று கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இந்திரஞாலத்தேர் நின்று கொண்டிருந்தது.
அதனைப் பார்த்து சூரன், “ஏய் தேரே! எஞ்சியுள்ள தேவசேனாவீரர்களையும், பூதங்களையும் மற்றும் உள்ள வீரர்களையும் அண்ட கோளத்தில் அடைத்து வைப்பாய்! நீயும் அங்கேயே காவலாக தங்கிவிடு” என்று ரதத்திற்குக் கட்டளை இட்டான். நொடிப்பொழுதில் சூரனின் கட்டளையை ரதமும் நிறைவேற்றியது. இந்திரஞாலத்தேர் தேவ வீரர்களுடன் புறப்பட்டது.
சூரனின் செயல்கண்டு தேவர்கள் துக்கத்தில் துவண்டனர். முருகனின் திருநாம வைபவத்தைச் சொல்லி கதறினர். முருகன் கோடிக்கணக்கான அஸ்திரங்களை விடுத்து தேரில் சிக்கியிருக்கும் தேவவீரர்களைத் தெளிவடையச் செய்தார். தேரோடு வீரர்களைத் தமது திருமுன் வந்து நிற்கும்படிச் செய்தார்.
தேவவீரர்களும் பூதகணத்தவர்களும் பெரும் கோஷம் எழுப்பினர். எல்லோரும் முருகனை பணிந்து தொழுது போற்றினர். முருகன் இந்திரஞாலத்தேரை மந்திரத்தால் கட்டுப்படுத்தி தனது பக்கத்திலேயே இருக்கும் படி செய்தார்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சூரன் கண்கள் சிவக்க உடல் துடிக்க – பல்லை, “நற நற” வென்று கடித்த வண்ணம் “முருகா! சூரனிடமா உன் சித்து விளையாட்டைக் காட்டுகிறாய்! நான் உனது தந்தையிடம் வரம் பெற்றவன்; பலம் பெற்றவன்” என்று சொல்லி மின்னல் வேகத்தில் அஸ்திரங்களைப் பொழிந்தான். இமை மூடித் திறக்கும் முன் முருகன் பாணங்களைப் பொழிந்து சூரனை தோற்கடித்தார். அவன் கையில் இருந்த வில் உடைபட்டது.
சூரன் முத்தலைச் சூலத்தைப் பிரயோகித்தான். அந்த சூலத்தின் மகிமையால் முருகனின் பல ஆயுதங்கள் சிதறடிக்கப்பட்டது. முத்தலைச் சூலம் முருகன் முன்னால் வந்து மேற்கொண்டு செல்லமுடியாமல் அசைவற்று நின்றது. முருகன் சூலத்தின் மீது கோடிக் கணக்கான பாணங்களைப் பொழிந்தார்.
ஆனால் சூலமோ பாணங்களை அலக்ஷியப்படுத்தியது. முருகன் கோபம் கொண்டார். ருத்ரமூர்த்தியானார்.படு உக்ரமான குலிசப்படைக் கலத்தை ஏவினார். குலிசாயுதம் சூலாயுதத்தைக் கவ்விக் கொண்டு முருகனிடம் ஒப்படைத்தது. பிறகு குலிசப் படைக்கலம் முருகனின் திருக்கரத்தில் தங்கியது.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், “சிவகுமாரா! இன்னும் திருவிளையாடல் புரிவது ஏனோ ! சூரனை வதம் செய்யும் நேரம் வந்தும் தேவரீர் அவனை எதற்காக கொல்லாமல் விட்டு வைக்கிறீர்கள். பிரபோ! உந்தன் பாதகமலங்களைப் பணிந்து பிரார்த்திக்கின்றோம். சூரனை வெல்லுங்கள் எங்கள் அச்சத்தை அகற்றுங்கள்” என்று பணிந்து ஏக மனதாக பிரார்த்தனை செய்தனர்.
சூரன் சிங்கமாக மாறினான். முருகனை எதிர்த்தான். முருகன் பாணங்களைப் பொழிந்து சிங்க ரூபத்தை அழித்தார். சூரன் சக்கிரவாக பறவையாக மாறினான். அலகினால் பூதப்படையினரைக் கொத்தினான். இறக்கைகளை வீசி ஓங்கி அடித்தான். காலால் அழுத்திக் கொன்றான். மேலும் கீழும் பறந்து தேவசேனைகளுக்கு பெரும் சேதத்தைக் கொடுத்தான்.
ரதசாரதியைப் படுகாயப் படுத்தினான். ரதத்தைச் சிதைத்து தேரில் கட்டியிருந்த குதிரைகளைத் துன்புறுத் தினான்.
பறவையைக் கொல்வது அதர்மம் என்பதனைத் திருவுள்ளத்தில் கொண்ட முருகவேள் சக்கரவாகைப் பறவையோடு விளையாட்டாக போர் புரிந்தார்.
ஷண்முகப் பெருமான் தேரில் இருபத்தாறு உக்கிரமான அஸ்திரங்களைப் பிரயோகித்து சூரனின் மாயைத் தோற்றத்தை அழித்து அஸ்திரங்களையும் பொடி பொடியாக்கினார்.
சூரன் அங்கிங்கெனாதபடி எங்கும் சுற்றித் திரிந்து எண்ணற்ற பூதவீரர்களைக் கொன்று குவித்தான். முருகப் பெருமானின் ரதத்தைச் சுற்றி வட்டமிட்டான்.
ரதத்தில் நின்றும் கீழே இறங்கினார் ஷண்முகன். தேவேந்திரன் மயில் வாகனமாக மாறினான். முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
கந்தக் கடவுள் பாணங்களைப் பொழிந்து சக்கரவாகப் பறவையின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினார். உடலைத் துளைத்து இரு கூறாக்கினார். விண்ணவர் வாழ்த்தி மகிழ்ந்து, ஆரவாரித்து மலர் மழை பொழிந்தனர். ஆனந்தக் கூத்தாடி களித்தனர்.
சூரபன்மன் மண்வடிவத்தைப் பெற்று கடல்களை வற்றச் செய்து கதிரவனை மறைத்தான். பிரபஞ்சம் இருண்டது. அஷ்டதிக்குகளும் திசை தெரியாது போனது.
முருகப் பெருமான் நூறு பாணங்களால் அவனது மாயையை மாய்த்தார்! சூரபன்மன் தண்ணீராய்ப் பிரவாகம் எடுத்து விண்ணை முட்டப் பொங்கி எழுந்தான்; அனல் வடிவமாய் அண்டங்களெல்லாம் தோன்றினான். சூறாவளியாகி மலைகளைப் பெயர்த்து எறிந்து போர் புரிந்தான்.
முருகப் பெருமான், அவனது மாயா வடிவங்கள் அனைத்தையும் இருக்குமிடம் தெரியாது சிதைத்தார். தொடர்ந்து பல நாட்கள் போர் புரிந்து தோற்றான் சூரபன்மன்.
முருகப் பெருமான் அவனைப் பார்த்து,”தோன்றி மறையும் மின்னலைப் போல் நீ எடுத்த மாய உருவங்கள் அனைத்தையும் கணப் பொழுதில் அழித்தோம்! அரிய தவத்தை உடையவனே! உன் ஊனக் கண்கள் மறையட்டும்.
உனக்கு ஞானக் கண்களையும், உள்ளுணர்வையும் அளிக்கின்றோம். என்னுடைய விஸ்வரூபத்தைக் கண்டு உய்யும் மார்க்கத்தை நீ அடைவாயாக!” என்று திருவாய் மலர்ந்தார். கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய விசுவரூபத்தை எடுத்தார் முருகப் பெருமான்!
ஆதியும் அந்தமும் இல்லாத விசுவரூபத்தைப் பார்த்த சூரபன்மன் நல் உணர்வைப் பெற்றான். அவனுடன் இருந்த ஆணவமும், அகம்பாவமும் அடங்கி ஒடுங்கியது.
அரிய வரங்களை அருளிய ஆதி பரம்பொருளாகிய பரமேசுவரனும், அண்டமே நடுங்கும் வண்ணம் அரும்போர் புரிந்து அசுர குலத்தையே அழித்த முருகப் பெருமானும் ஒருவரே என்பதை உணர்ந்தான் சூரபத்மன்.
‘பராக்கிரமசாலியான முருகனைப் பாலன் என்று எண்ணி ஏளனம் செய்தேனே” என்று எண்ணி மனம் உருகினான். அத்துமீறிப் பேசிய வார்த்தைகளையும் அளவுக்கு மீறி அமரர்க்கு இழைத்த துரோகச் செயல் களையும் எண்ணிப் பார்த்துக் கண்ணீர் வடித்தான்; கலங்கினான்.
பரம்பொருளைக் கண்ட பெருமிதத்தில், எல்லா வற்றையும் மறந்தான்; மன மகிழ்ச்சி கொண்டான். “எவருக்கும் கிட்டாத பெரும் பேறு தனக்கு கிட்டயதே” என்று எல்லையில்லா திருவருளுக்கு ஆளாகி ஆனந்தித்தான்
அதுசமயம், ஆறுமுகப் பெருமான், தமது அரிய பிரம்ம ரூப தரிசனத்தை மறைத்து, முன்போல் மயில் மீது தோன்றி, சூரபத்மனின் மெய்யறிவை மயங்கச் செய்தார். அக்கணமே அவனது ஞான உணர்வு நீங்கியது. அஞ்ஞானமும் அகங்காரமும் மீண்டும் அவனைப் பற்றிக் சொண்டது. முருகப் பெருமானைப் பார்த்துச் சினம் கொண்டான்.
”இவன் மாயை சக்தியால் என் உணர்வை மாற்றியிருக்கிறான். இனிமேல் அது என்னிடம் நடக்காது. எனக்கு ஒப்பானவர் எவருமே கிடையாது. எல்லாம் நானே! இப்பாலகனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடுவதற்கு முன்னால், அமரர்களை அழித்து வெற்றி காண்பேன். பின்னர், இந்தச் சிறுவனையும் வென்று வாகை சூடுவேன்” என்று தனக்குள் பலவாறு நினைத்து இறுமாந்தான்.
சூரபத்மன், மாய மந்திரத்தின் சக்தியால் இருள் வடிவம் கொண்டு சந்திர சூரிய மண்டலங்களையும் அண்டங்களையும் மறைத்து அமரர்களையும் அஞ்சி நடுங்கும்படிச் செய்து ஆர்ப்பரித்தான். அமரர்கள் அபயக் குரல் கொடுத்தனர். ஐயனின் நாமம் போற்றி வணங்கினர். “சூரபத்மனைக் கொன்று தங்கள் குலத்தைக் காத்தருள வேண்டும் ” என்று கோடி முறை கூவி அரற்றினர்.
அமரர்களின் ஓலக்குரல் கேட்டதும் முருகப் பெருமான், சூரபத்மனை சம்ஹரிக்கத் திருவுள்ளம் பற்றினார். எங்கும் நல்ல அமைதியையும், சாந்தத்தையும் நிலவச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். தம்முடைய திருக்கரத்திலிருக்கும் வேற்படைக்கு சூரபன்மனின் மார்பைப் பிளந்து வருமாறு ஆணையிட்டு ஏவினார். சர்வ சங்காரகால உருத்திரமூர்த்தி போன்ற வேற்படை, ஆதி அந்தமில்லாத அருணாசல அக்கினி போல் புறப்பட்டது.
அண்டங்கள் அனைத்தும் வேற்படையின் வெம்மை யைத் தாங்க மாட்டாது அஞ்சின. அறிவு மயங்கி ஆர்ப்பரித்து, இருளாகவும், மலையாகவும், மரமாகவும் உருமாறி ஐயனை எதிர்த்துப் போரிட்ட சூரபத்மன். இறுதியில் வேற்படைக்குப் பலியானான்.
சர்வ வல்லமை பொருந்திய வேற்படை, சூரபத்மனின் மார்பைப் பிளந்து உடலை இரு கூறாக்கியது. பின்னர் வேற்படை தூய கங்கையில் புனிதம் பெற்று பகவானின் திருக்கரத்தில் முன்போல் வந்து தங்கியது.
விண்ணும், மண்ணும் குளிர்ந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தேவ துந்திபிகள் ஒலிக்க வேதங்கள் வாழ்த்த – அமரர்கள் ஆனந்தக் கூத்தாட நவ வீரர்களும், இலக்ஷம் வீரர்களும் பூதர்களும் சிவகணத்தவர்களும் முருகப் பெருமானின் பொன் சேவடி போற்றி வாழ்த்தி நின்றனர். சூரபத்மனின் பிளவுபட்ட உடல், ஒரு பாதி சேவலாக வும், மற்றொரு பாதி மயிலாகவும் மாறின.
அந்த நிலையிலும் ஆணவம் அடங்காத சூரபத்மன் மயிலாகவும் சேவலாகவும் மாறிய பின்னும், முருகப் பெருமானை எதிர்த்துப் போராடத் துணிந்தான். முருகப் பெருமான் மயில் மீதும், சேவல் மீதும் திருநோக்கம் செய்தார்.
எம்பெருமானின் அருட்பார்வையில் சேவலும், மயிலும் சினம் தணிந்து, முருகப் பெருமானின் திருப்பாதத்தைத் தஞ்சம் என்று வந்தடைந்தது. சினமுற்ற சேவல் தீர்க்க தரிசனம் பெற்றது! செருக்குற்ற மயிலும், பரமனிடம் பெரும் பற்றுக் கொண்ட ஞானியாய் நின்றது.
சேவலுக்கும் மயிலுக்கும் ஞானத்தை அளித்து ஆட்கொண்டு அருளத் திருவுள்ளம் கொண்டார் ஆறுமுகப் பெருமான்!
சேவலைத் தேரில் கொடியாக அமர்ந்து கூவுமாறும் மயிலை வாகனமாக இருக்கும் பொருட்டும் ஆணை யிட்டார். அவ்வாறே சேவல், வேலவரின் தேரின் மீது ஏறி கொடியாக நின்று கம்பீரமாகக் கூவியது. அதன் பிறகு கந்த பெருமான் இந்திரனாகிய மயில் மீதிருந்து இறங்கி சூரபத்மனாகிய மயில் மீது எழுந்தருளினார்.
அதுவரை மயிலாகவும் சேவலாகவும் நின்ற இந்திரனையும் அக்கினியையும் திருநோக்கம் செய்தார். ஆறுமுகப் பெருமானின் அருட்பார்வையால் அவர்கள் இருவரும் பழைய வடிவைப் பெற்றனர். கந்தப் பெருமானின் அருளால் மாண்ட தேவப் படையினர் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்.
சூரனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஜயந்தன் மற்றும் தேவர்கள் முனிவர்கள் மீட்கப்பட்டனர். ஜயந்தனைக் கண்டு பேரானந்தம் கொண்டான் இந்திரன். தந்தையும் மகனும் முருகனின் திருவடி பணிந்து போற்றினர்.
மயில் வாகனப் பெருமானார் நவவீரர்களும், இலக்ஷம் வீரர்களும் அமரர்களும் புடைசூழ போர்க்களத்தை விட்டுப் புறப்பட்டார். திருச்செந்தூரை வந்தணைந்தார். பொன் வண்ணக் கோவிலில் எழுந்தருளினார்.
எங்கும் பூமழை பொழிந்தது. தேவ துந்துபிகள் ஒலித்தன. சூரபத்மனின் மனைவியாகிய பதுமகோமளையும் மற்ற மனைவிமார்களும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
சூரனின் மகனான இரணியன் சுக்ராச்சாரியாரின் உதவியோடு பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செய்து முடித்தான். பூவுலகில் சகல சௌபாக்கியங்களையும் பெற்ற இரணியன் சிவ தியானத்தில் வாழ்ந்து மேன்மைகளையும் பெற்றான். சகல இந்திராதி தேவர்களும், முனிவர்களும் இலக்ஷம் வீரர்களும், பூதகணத்தவர்களும், ஞானமயில் மீது அமர்ந்து காட்சி தரும் தேவமூர்த்தியை – ஆனந்த ரூபனை ஆறுமுகனை – நீல மயில் மீது எழுந்தருளி ஞாலமெல்லாம் வலம் வந்த வேலவீனன எழுந்தான் திருமகனை – கந்தனை – கடம்பனை – சரவணனை – செங்கோட்டு வெற்பனை – குகனை ஷண்முகனை – பால தண்டாயுதபாணியை ஆயிரம் கோடித் திருநாமங்களால் கோடி முறை அர்ச்சித்து வழிபட்டனர். கந்தப்பெருமான் அனைவர்க்கும் திருவருள் புரிந்தார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. முருகப் பெருமானார், சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். அக்கணமே தேவ தச்சனான மயன் மிக அற்புதமான சிவாலயம் ஒன்றை அமைத்தான். ஸ்ரீ முருகப் பெருமான் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். சிவபெருமான் குமரனுக்குப் பேரருள் புரிந்தார்.
தேவர்களும், முனிவர்களும், நவவீரர்களும்,லக்ஷம் வீரர்களும், பூதப்படையினரும் சிவகுமாரனின் திருப்பாதம் பணிந்து போற்றினர். திக்கு எங்கும் சிவநாமமும், முருகனின் திருநாமமும், திருச்செந்தூர் கடல் அலை ஓசையுடன் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன.
கந்த புராணம் – 3 சூரசம்ஹாரம், சேவலுக்கும் மயிலுக்கும் ஞானத்தை அளித்த ஆறுமுகன்…! | Asha Aanmigam