கருட பகவான், பரமபத நாதனைத் தொழுது. “எந்தையே! பிரயோபவேசம் செய்தல் என்பது யாது? அது எந்த வகையில் சிரேஷ்டமாயிற்று? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்த வீட்டை விட்டு நீங்கிப் புண்ணிய க்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு மரிப்பதால் ஏற்படும் பயன் யாது? தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டுச் சென்ற மார்க்கத்தில் ஒருவன் மாய்ந்தான் என்றால் அவனுக்கு என்ன விளைவு உண்டாகும்? நாளெல்லாம் தீர்த்த யாத்திரை செய்பவனுக்குப் பயன் என்ன? சந்நியாச ஆஸ்ரமம் பெற்றவன் அவ்வாசிரமத்திற்குரிய ஒழுக்கத்திலிருந்து தவறுவானாகில் அவன் எக்கதியை அடைவான்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு சவிஸ்தாரமாகச் சாற்றியருள்வீராக!” என்று வேண்டினான்.
அதற்குப் பரமபத நாதன் மகிழ்ந்து கூறலானார்:
“வைனதேயா! எவன் ஒருவன் ஆகார வியவகாரம் ஒன்றுஞ் செய்யாமல் நியமத்தோடு தர்ப்பாசயனஞ் செய்து, என்னையே தியானஞ் செய்து கொண்டு மரிக்கிறானோ, அவன் நமதுலகை அடைவான். அதனாலேயே, பிரயோபவேசம் என்பது ஏற்றமுடையதாயிற்று. ஒருவன் பிரயோபவேசம் செய்த நாட்கள் எத்தனையோ அத்தனை நாட்களுக்கும் நாள் ஒன்றுக்கு ஒரு வேள்வி செய்த பயன் அவனுக்குக் கிடைக்கும். அவன் உலகியலின் உண்மையையும் வாழ்வியலின் இரகசியத்தை யும் தெய்வீக இயலின் மெய்மையையும் உணர்ந்து, இனி உயிர் வாழ்க்கை வேண்டியதில்லை என்று பிரயோபவேசம் செய்து நல்லுலகமடைவான். ஒருவன் இனி வாழ்வு வேண்டியதில்லை; மரித்து விடுவோம் என்று மனந்துணிந்து. அதை நல்ல முறையில் பிரயோபவேசம் செய்து மரித்து விடுவோம் என்று செயலில் இறங்கி, நடுவில் எழுந்து இல்வாழ்க்கையை மாகப் ஏற்க விரும்பினால், அவன் அந்தணர் மூலமாகப் பிராயச்சித்தங்களைச் செய்து கொண்டு, பிறகு தர்ம மார்க்கத்தில் ஒழுகுதல் வேண்டும்.
சந்நியாசம் செய்து கொண்டு, நியமத்துடனிருந்து, இறந்தவனுக்கு அவன் சந்நியாச ஆசிரமத்தை ஏற்ற நாள் முதல் மரித்த நாள் வரையிலுமுள்ள நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு வேள்வி களின் பயன்கள் அவனைச் சாரும். பிணிகளினால் துன்பமடைந்தும் மரணகாலம் நெருங்கி விட்டதென்றும் எண்ணி சந்நியாச ஆசிரமம் பெற்றுப் பிறகு பிணி நீங்கப் பிழைத்து, இல்வாழ்க்கையை ஏற்று வாழ விரும்பினாலும் இல்லற வாழ்வுக்கு உடன்பட்டாலும் அவன் மஹாரோகம் அடைவான். அவனை விடப் பாவியானவன் ஒருவனும் இல்லை. அத்தகையவனை ஒருவனும் பார்க்கலாகாது. வீடு. மனைவி மக்கள் முதலியோரையெல்லாம் நெடுங்காலம் பிரிந்து, நெடுந்தூரம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாத்திரை செய்பவனுக்கு பிரம்மாதி தேவர்கள் எல்லாம் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்கள். திவ்விய தேச யாத்திரை செய்ய உத்தேசித்துச் சென்று செல்லும் வழியில் விதியால் ஒருவன் மரித்தால் அவன் சுவர்க்கத்தை அடைவான்.
சந்நியாசிகளையும் தீர்த்த யாத்திரை செய்பவர்களையும் க்ஷேத்ராடனம் செய்பவர்களையும், தேவர்கள் எல்லோருமே காப்பாற்றுகிறார்கள். குறிப்பாக விஷ்ணு கணங்களே அவர்களை ரட்சிப்பார்கள். ஒருவன் மரிக்க வேண்டும் என்றே ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தில் நெடுங்காலம் வசித்து சிறிது தீவினை காரணமாக வேறொரு இடத்திற்குச் செல்ல நேரிட்டு, அந்த இடத்தில் மரிப்பானாகில், அவன் மறு பிறவியில் காவிரி தீரத்தில் வைதீக பிராமணக் குலத்திலும் குடும்பத்திலும், சர்வசாஸ்திர சம்பன்னனாகவும் நல்ல ஒழுக்கம் உடையவனாகவும் பகவத் பாகவத ஆசார்ய பக்தியுடையவனாகவும் பிறந்து. இறுதியில் நல்ல உலகத்தை அடைவான்.
இன்ன க்ஷேத்திரத்திற்குச் சென்று அங்குதான் நான் மரிப்பேன் என்றும் அங்கு அவ்விடம் மரிக்காமல் மீளமாட்டேன் என்றும் ஆற்றங்கரையில், நான்கு வேதங்களும் அறிந்த அந்தணர் முன்பு சங்கற்பம் செய்துகொண்டு, யாத்திரை சென்றவன் மீண்டும் தன் ஊருக்கும் தன் வீட்டுக்கும் வருவானேல் அவன் மஹாபாவியாவான். அவனும் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். மரண காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த ஒருவன், விஷ்ணு க்ஷேத்திரங்கள் ஏதாவது ஒன்றில் மரிக்க வேண்டும் என்று நினைத்து, அவன் யாத்திரை செய்ய நடக்கிறான் என்றால், அவன் நடக்கும் அடிகளுக்கெல்லாம் அடியொன்றுக்கு ஒரு பசுவைத் தானம் செய்த பயனையடைவான். எந்தக் காரணத்தாலாவது அவ்வாறு சென்றவன் வீடு திரும்பி விட்டால் அவன் நடந்து சென்ற அடிகளுக்கு அடியொன்றுக்கு பசுவைக் கொன்ற தோஷத்தையடைவான். ஒருவன் தன் இல்லற வாழ்வில் செய்த பாவங்கள். அவன் திவ்விய தேசங்களில் செய்யும் பகவத் பாகவத சேவையாலும் தீர்த்தப் பிரசாதங்களாலும் நிவர்த்தியாகிவிடும். க்ஷேத்திரங்களில் அவன் பாபஞ் செய்து விட்டால், அப்பாவங்கள் எவற்றாலும் எந்த நாளிலும் நிவர்த்தியாகாது.
“கருடா! அன்னியருக்கு உதவி செய்வதை விடத் தன் தாய் தந்தையருக்கும் தன்னுடன் பிறந்தவருக்கும் டன் பிறந்தவளுக்கும் வேண்டியவற்றைக் உடன் கொடுப்பதே சிறப்பானது. ஒரு புத்திரன் தன் தந்தைக்குப் பொருள் முதலியவற்றைக் கொடுத்தால், அந்தச் செயல் உத்தம பிராமணனுக்கு கொடுக்கும் தானத்தால் வரும் புண்ணியத்தைவிட நூறு பங்கு அதிகமான புண்ணியமாகும். தாய்க்குக் கொடுத்தால் அந்தப் புண்ணியப் பயன் ஆயிரம் பங்கு அதிகம்! சகோதரிக்குக் கொடுத்தால் லட்சம் பங்கு அதிகப் பயன் பெறுவான். சகோதரனுக்குக் கொடுத்தால் புண்ணியத்தைக் கணக்கிடுவதற்கேயில்லை. ஒருவன் தான் வருந்திச் சம்பாதித்த பொருளை, நல்ல முறையில் விநியோகிக்க வேண்டும். எவன் ஒருவன் மனிதனாகப் பிறந்தாலும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும் என்பதை மறந்து தன்னுடைய நிலையில்லாத உடலை மிகவும் அக்கறையாகப் போஷணை செய்து ஆடையாபரணங்களால் அதை அலங்கரித்துச் சம்சார சாகரத்திலேயே மூழ்கித் தவிக்கிறானோ இத்தகையவனைப் பார்த்து, “இந்தச் சீவனின் அறிவுத் திறன்தான் என்னே! இவன் மானிட ஜன்மம் பெற்றும், இவனது கருமத்தால் அல்லவோ இவன் நம் கையிலகப்படப் போகிறான்!” என்று யமன் சிரிப்பான்.
மங்கை ஒருத்தி பரபுருஷனைச் சேர்ந்து அவன் மூலம் பெற்ற குழந்தையை அவளது சொந்தக் கணவன் எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவும் போது, அவளோ, “இந்தக் குழந்தையை இவனோ பெற்றான்; இவன் எனக்குத்தான் கணவனே ஒழிய இந்தக் குழந்தைக்கு தந்தையாவானோ? இவனோ பெற்றான்? என்னைக் கூடிக் குலாவிக் குழந்தையைப் பெற்றவன் வேறொருவன் இருக்க, அதை உணராத இவன். இவனே இக்குழந்தையைப் பெற்றவனைப் போலவும், தனக்குரியது போலவும் கொண்டாடுகிறானே!” என்று நினைத்து தன் கணவன் குழந்தையோடு கொஞ்சிக் குலாவுவதைக் கண்டு, அக்கபட மனைவியானவள் தானும் மகிழ்பவளைப் போல இதழ் நெளித்து புன்னகை புரிவாள். பூமி தேவியானவளும், அளவற்ற நிலத்தையும் கொள்ளக் குறையாத நிதியையும் அடைந்தும் கூட, தான் உடுக்காமலும் உண்ணாமலும் பிறருக்குக் கொடுக்காமலும் பொருளீட்டி வைக்கும் மூட மகனைப் பார்த்து, “யாம் இவனுக்கு உரியோமோ? இதையுணராத இந்தப் பேதை மகன் ‘எனது எனது!’ என்கிறானே!” என்று வாய் விட்டுச் சிரிப்பாள்.
பூமியும் மற்ற பொருள்களும் ஒருவனுக்கே உரியவையல்ல. தமது தம்முடையது என்று பிதற்றிக் கொண்டு திரிபவர்களெல்லாம். இறுதியில் அரைஞாண் கயிறும் தமக்குச் சொந்தமாக எடுத்துச் செல்லாமல் அல்லவோ எமனுலகு சென்று விடுகிறார்கள்! நல்ல ஒழுக்கத்திலும் நல்ல நெறியினும் ஒழுகி, உயிரினங்களுக்கு உற்ற சமயத்தில் உதவி செய்து பூதானம் செய்பவனைக் கண்டு புவி மகள் “நம்மாளுடையான் நல்லான்! அவனால் நாம் சத்பிராமணன் கையில் தானமாகக் கொடுக்கப்பட்டோமே!” என்று மகிழ்ச்சியடைவாள். பூதானம் செய்தவனும், புனலில் மூழ்கியேனும் பஞ்சாக்கினி நடுவிலேனும் இருந்து தவஞ் செய்தவனும், வேள்விகளைச் செய்தவனும், யுத்தத்தில் புறங்காட்டாமல் போரிட்டு முன்னேறியவனும் இகத்திலும் பரத்திலும் இன்பம் பெறுவார்கள்!” என்றார் திருமால்.
கருட புராணம் – 24 பிரயோபவேசம், தலயாத்திரைகள், உலக வாழ்க்கை | Asha Aanmigam