தர்மபுத்திரர் முதலான பாண்டவர் களும், பாஞ்சாலியும் அஸ்திரங்கள் பெறு வதற்காகப் போன அர்ச்சுனன் திரும்பி வரவில்லையே என்று பெருந்துக்கத்தில் மூழ்கியிருந்தார்கள். அப்பொழுது பிருஹதச்வர மஹரிஷி என்பவர் அங்கு வந்தார்.
அவரைப் பாண்டவர்கள் முகமலர்ச்சி யுடன் எதிர் கொண்டு வரவேற்று ஆசனத் தில் அமரச் செய்து வேண்டிய உபசாரங் களைச் செய்து வணங்கி எழுந்தனர். பின்னர் யுதிஷ்டிரர், “முனிவர் பெரு மானே! வஞ்சகர்களாகிய கெளரவர்கள் எங்களைச் சூதாட்டத்திற்கு வலிய அழைத்துச் சென்று மாயச்சூதாடி, ஏமாற்றி எங்கள் செல்வத்தையும், நாட்டையும் பறித்துக் கொண்டார்கள். அதன் பயனாக நானும், என் தம்பியர்களும், திரௌபதியும் வனவாசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வந்து விட்டோம். அதோடு இப்பொழுது தம்பி அர்ச்சுனன் அஸ்திரங்கள் பெறச் சென்றுள்ளான். நீண்டகாலமாகியும் இன்னும் வரவில்லை. அதனால் பெருந்துக்கத்தில் மூழ்கியுள்ளோம். எங்களைப் போல துன்பம் அனுபவிக்கின்றவர்கள் இவ்வுலகில் யார் இருக்கின்றார்கள்? யாரும் இல்லை,என்றே சொல்லலாம்” என்று பெரும் வருத்தத்துடன் கூறினார்.
அதனைக் கேட்ட முனிவர் பெருமான். “தர்மபுத்திரரே! அஸ்தினாபுரத்தில் நடந் தன எல்லாவற்றையும் அறிவேன். வருந்த வேண்டாம். துன்பமும், இன்பமும் மாறி மாறி வருவது உலக இயற்கை; இன்னும் பதின்மூன்று ஆண்டு கழித்து உங்களுக்கு நல்லனவே நடக்கும். அர்ச்சுனனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவன் மாவீரன். அவனை வெல்ல யாரா லும் இயலாது. அவன் விரைவில் வேண் டிய வரங்களையும், அஸ்திரங்களையும் பெற்றுக்கொண்டு நலமுடன் திரும்பி வருவான். அதன் பின் பகைவர்களை நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள். உன்னைப் போல துர்பாக்கியசாலி இல்லை என்றாய். உன்னை காட்டிலும் சூதாடி நாட்டை இழந்து பெருந்துயரமுற்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவன்தான் நிடத நாட்டு வேந்தன் நளன் ஆவான். அவன் அடைந்த பெருந்துன்பங்களையும், அவன் அவற்றையெல்லாம் எவ்வாறு நீக்கி வெற்றி கொண்டான் என்பதையும் கூறுகின்றேன் கேட்பாயாக :
நிடத நாட்டின் அரசன்
நிடதநாடு என்றொரு பொலிவும், அழகும் பெற்ற வளமான நாட்டின் அரசனாக இருந்தவன் நளன் என்பவன் ஆவான். நிடதம் என்பது எட்டு சிறப்புடைய மலைகளில் ஒன்றாகும். அந்த எட்டு சிறப்புடைய மலைகளாவன :
(1) இமயம் (2) ஏமகூடம் (3) கந்தமாதனம் (4) கயிலை (5) நிடதம் (6) நீலகிரி (7) மந்தரம் (8) விந்தியம் இத்தகைய சிறப்புடைய உயர்ந்து விளங்கும் நிடத மலையை தன்னுள் கொண்டதால் இந்நாட்டிற்கு ‘நிடத நாடு என்ற பெயர் வந்தது. இந்த நாட்டின் தலைநகரம் ‘மாவிந்தம்’ என்பது ஆகும். இந்நாட்டை ஆண்டு வந்த நளன் என்பவன் தலையேழு வள்ளல்களில் ஒருவன் ஆவான்.
தலையேழு வள்ளல்கள்
தலையேழு வள்ளல்கள் : (1) காரி (2) சகரன் (3)செம்பியன் (4) துந்துமாரி (5) நளன் (6) நிருதி (7) லிராடன். இதன் மூலம் வேண்டியவர்க்கு வேண்டியாங்கு வாரிக் கொடுக்கும் வள்ளல் இவன் என்பது புலப்படுகின்றது. அது மட்டுமல்லாது, பிற நாட்டு அரசர்கள் வணங்கும்படியான பெருமை மிக்க சக்கரவர்த்தியாகவும் இவன் விளங்கி வந்தான். அரிச்சந்திரன், கார்த்தவீரியார்ச்சுனன், நளன், புருகுற்சன், புரூரவன், முசுகுந்தன் என்ற இந்த ஆறு பேரும் எந்தப் பிற அரசர்களையும் பணியாது தரணியாண்ட சக்கரவர்த்திகள் என்பர்.
இத்தகைய உயர் சிறப்புடைய மன்னன் நளன், ஒருநாள் தன் அரண்மனைச் சோலை யில் உலாவிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அங்கிருந்த ஒரு தெய்விக அன்னம் அவன் மனத்தைக் கவர்ந்தது. அதனால் அதனைப் பற்றினான். ‘தனக்கு தீங்கு செய்து விடுவானோ’ என்று அஞ்சிய அந்த அன்னம் நளனைப் பார்த்து, “அரசர்க் கரசே ! என்னைக் கொன்று விடாதே. உனக்கு நான் நன்மை பயப்பனவற்றை செய்வேன்” என்று கூறியது. பின்னர் அவனிடம், “மன்னாதி மன்னனே! விதர்ப்பம் என்ற வளமான நாடு ஒன்று உள்ளது. அதன் தலைநகரம் குண்டினபுரம் என்பதாகும். அந்த நாட்டை வீமன் என்றொரு நீதிநெறி தவறாத மன்னன் ஆண்டு வருகின்றான். அவனுக்கு ஒரே மகள். அவள் பெயர் தமயந்தி என்பதாகும். அவள் தெய்வ மகள் போன்று விளங்கு கின்றாள்; நற்குணங்களையே நான்கு படைகளாகவும், ஐம்புலன்களையே நல்லமைச்சர்களாகவும், பேரழகினையே அணி முரசாகவும், கொண்டு பெண்மை யாகிய அரசினை அந்நங்கை ஆளு கின்றாள். கார்மேகம் போன்ற கரிய அடர்ந்த கூந்தலையுடைய அவள் முழு நிலவு போன்ற முகத்தைப் பெற்றுள்ளாள். தாமரை போன்ற கைகளையும், உடுக்கை போன்ற இடையினையும் உடைய அவள் மென்மையான அழகிய பாதங்களையும் கொண்டுள்ளாள். குயில் போன்ற இனிமையான குரலையும்,மயில்போன்ற சாயலையும்,எங்கள் அன்னம் போன்ற நடையினையும் உடைய அவள் உனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவி ஆவாள். அத்தகைய பெறற்கரிய நங்கைக்கு மண மாலையிட்டு இன்பம் பெறுக” என்று கூறியது. நளன் அதை கேட்டு மகிழ்ச்சி கொண்டு, “அன்னமே! நான் அவளை விரும்புகின்றேன். நீ அவளிடம் தூது சென்று என் மன நிலையை நன்கு உணர்த்தி திரும்புவாயாக” என்று கூறினான்.
அன்னத்தின் தூது
அந்த அன்னம் அங்கிருந்து வளமான விதர்ப்ப நாட்டின் தலைநகரமாகிய குண்டினபுரத்தை அடைந்தது. பின்னர் அரசன் வீமனுடைய அரண்மனையின் அழகு சோலையிடத்துச் சென்றது. சோலை மாடத்து வந்த மங்கை நல்லாள் தமயந்தியின் அருகே சென்றது. தமயந்தி அன்னத்தைப் பார்த்து “நீ யார் எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டாள். அதற்கு அன்னம், ”நான் தேவலோகத்தைச் சேர்ந்த அன்னப்பறவை. அழகிய நற்குணமிக்க நங்கையாகிய உனக்கு ஏற்ற மணாளனைக் கண்டு வந்துள்ளேன். அவனைப் பற்றி நான் சொல்கின்றேன் கேள்” என்று கூறி நளனைப் பற்றி கூற ஆரம்பித்தது.
“நிடத நாட்டின் அரசனாக நளன் என்றொரு மன்னன் ஆண்டு வருகின்றான். வேண்டியவர்க்கு வேண்டியாங்கு வாரி வழங்கும் வள்ளல். கண்டவர் கவரும் அழகான தோற்றமுடையவன். அவன் செம்மனத்தான். தண்ணளியான்; செங் கோலான்; மங்கையர்கள் மனத்தை கவரும் தடந்தோளான். அத்தகைய அழகும், பண்பும், நலங்களும் உடைய அம்மன்னன் உனக்கு ஏற்ற மணாளன் ஆவான். அதேபோல அழகும், பொலிவும், கற்பின் திண்மையும் பொருந்திய நீயும் அவனுக்கு ஏற்றவள் ஆவாய்” என்று கூறியது: அதனைக் கேட்டதும் தமயந்தி, அவன் மேல் காதல் கொண்டாள். அத்தகைய நளனை தனக்குக் கூட்டுவிக்கும்படி அன்னத்தை தமயந்தி வேண்டினாள். அன்னமும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தது. உடனே அந்த அன்னம் நளனிடம் சென்று “நளனே! தமயந்தி உன்மேல் நீங்காத காதல் கொண்டுள்ளாள். உன்னையன்றி வேறு யாருக்கும் மணமாலை சூட்டமாட்டாள். எனவே அவளை விரைவில் மணந்து கொள் வாயாக” என்று கூறிச் சென்றது. அன்னம் கூறிச் சென்றபின் நளன், ‘தமயந்தியே தனக்கு மனைவி’ என்று முடிவு செய்து அவளையே நினைத்தபடி இருந்தான். அவ்வாறே குண்டினபுரத்தில் தமயந்தியும் ‘நிடத நாட்டு மன்னன் நளனே தன் கணவன்’ என்று முடிவு செய்து அவனையே நினைத்தபடி இருந்தாள். அதனால் உண்ணாதும் உறங்காதும் நளன் என்ற திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
தமயந்தியின் சுயம்வரம்
தமயந்தியின் காதல் நிலையை அறிந்த விதர்ப்ப நாட்டு வேந்தன் வீமன், ”இன்றைக்கு ஏழாம் நாள் குண்டின. புரத்தில் தமயந்திக்குச் சுயம்வரம் நடக் கின்றது. எல்லா மன்னர்களும் வருதல் வேண்டும்” என்று எல்லா அரசர்களுக்கும் ஓலை அனுப்பினான். தூதுவர்களையும் அனுப்பினான்.
கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லா நாட்டு அரசர்களும் தமயந்தியின் மேல் காதல் கொண்டு அவளையே மணந்து கொள்ள வேண்டுமென்று விரும்பி குண்டினபுரத்தை அடைந்தனர். நாரத முனிவரால் தமயந்தியின் அழகையும், பண்பு நலங்களையும் அறிந்த இந்திரன், அக்னி, இயமன், வருணன் ஆகிய நான்கு தேவர்களும் தமயந்தியை மணந்து கொள்ள வேண்டுமென்று விரும்பி, சுயம்வரத்தில் கலந்து கொள்ள தீர்மானித்து, குண்டின புரத்துச் சோலையில் வந்து தங்கினர். நிடத நாட்டு நளனும் நாற்படைகளும் சூழ, தேவர்கள் தங்கியிருந்த அதே குண்டின புரத்துச் சோலையில் தங்கினான். அங்கு தேவர்கள் நால்வரையும் கண்டு நளன் வணங்கினான்.
இந்திரனின் வேண்டுகோள்
இந்திரன் நளனைக் கண்டான். அவனின் பெருமிதத் தோற்றத்தையும் பேரழகினை யும் கண்டு, தமயந்தி நம்மையெல்லாம் ஒதுக்கி விட்டு இவனுக்குத்தான் மாலை யிடுவாள் என்று எண்ணினான். உடனே அவன் நளனிடம், “நிடத நாட்டு மன்னனே! எங்களுக்கு ஓர் உதவி செய் வாயாக; தமயந்தியின் பேரழகை அறிந்து அவளை மணந்துகொள்ள விரும்பி இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள நாங்கள் நால்வரும் வந்துள்ளோம். அதனால், எனக்காகத் தமயந்தியிடம் சென்று எனக்கு மணமாலை சூட்டச்சொல்வாயாக. எனக்கு மாலை சூட்ட மறுத்தால். மற்றைய தேவர்களில் ஒருவருக்காவது மாலை சூட்ட செய்வாயாக” என்று கூறி வேண்டினான்.
தமயந்தியை மணந்து கொள்ள விரும்பி வந்த நளனுக்கு, இந்திரன் கூறியதை கேட்டதும் என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. பின்னர் தன்னுடைய விருப் பத்தை வெளிப்படுத்தாது ஒதுக்கி வைத்து விட்டு, தமயந்தியிடம் சென்று, அவர்கட்கு உதவி புரிவதாக வாக்களித்தான். தேவர்கள் மகிழ்ந்தனர். அதனால் மற்றவர் யார் கண்ணுக்கும் புலப்படாதபடி மந்திர மை இட்டு நளனை தமயந்தியிடம் தூதாக அனுப்பினர். தேவர்கள் விருப்பப்படியே நளன் பிறர் கண்ணுக்குத் தெரியாமல் விதர்ப்பநாட்டு அரசன் மகள் தமயந்தி இருப்பிடத்திற்குச் சென்று அவள் முன் நின்றான்.
அவனைக் கண்ட தமயந்தி முதலில் திடுக்கிட்டு, பின் அச்சத்துடன், அவனைப் பார்த்து,”என் எதிரில் நிற்பவனே! நீ யார்?பலத்த காவலையெல்லாம் கடந்து மகளிர்கள் மட்டும் தங்கும் இந்த இடத்தில் எவ்வாறு வந்தாய்? ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய் கூறு!” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்கலானாள். அதற்கு நளன், “அழகுடைய நங்கையே! அஞ்ச வேண்டாம். நான் நிடத நாட்டு மன்னன் நளன். தேவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி, யாரும் என்னைக் காண முடியாதபடி செய்து உன்னிடம் தூதாக அனுப்பினார்கள்” என்றான். ‘நளன்’ என்று சொன்னவுடன் மகிழ்ச்சி கொண்ட தமயந்தி அவனைப் பார்த்து, “நளமகராஜனே! தேவர்கள் உங்களை என்னிடம் தூதாக அனுப்பிய காரணம் என்ன? கூறுவீராக” என்று கேட்டாள். அதற்கு நளன், விதர்ப்பநாட்டு மன்னன் மகளே! தேவர்கள் உன்னை மணந்து கொள்ள விரும்பு கின்றனர். இந்திரனே என்னிடம், “அழகுடைய நங்கை தமயந்தியை எனக்கு மாலையிட சொல்லுங்கள். எனக்கு மாலை சூட்ட விருப்பமில்லையென்றால் வந்திருக்கும் அக்னி, இயமன், வருணன் ஆகிய மூவரில் ஒருவருக்கு மாலையிடச் சொல்லுங்கள்” என்று கூறித் தூதாக அனுப்பியுள்ளான்” என்று கூறினான். மேலும் அவன், ‘தமயந்தி! உலகத்து மன்னர்கள் சின்னாள் பல பிணி சிற்றறிவுடையவர்கள். அவர்களை மணந்து கொண்டால் உனக்கு மூப்பும், பிணியும் வறுமையும் உண்டாகும். எனவே இந்த நால்வரில் ஒருவருக்கு மாலையிடுவது தான் நல்லது” என்று கூறினான்.
தமயந்தி மறுப்பு
அதனைக் கேட்டு தமயந்தி, “அரசே! மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என் மனத்தில் யாரை வரித்துள்ளேனோ அவருக்குத்தான் மாலையிடுவேன். பிறர் தூண்டுதல் காரணமாக நான் மாலையிட மாட்டேன். இந்தச் சுயம்வரத்திற்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும் ” என்று தன் மனத்திலுள்ள எண்ணத்தைக் குறிப்பாக வெளிப்படுத்திக் கூறினாள்.
நளன் தேவர்களிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறியதோடு தன்னைத் தமயந்தி சுயம்வரத்திற்கு வரச் சொன்னதை யும் கூறினான். கொடுத்த பணியை நளன் மனசாட்சியோடு உண்மையாக செய்ததை அறிந்து தேவர்கள் மகிழ்ந்தார்கள். மகிழ்ந்த அவர்களில் இந்திரன் பற்பல தெய்விக அஸ்திரங்களை நளனுக்குக் கொடுத்தான். அக்னியோ அனலின்றி அடிசில் சமைக்கும் மந்திரோபதேசம் செய்தான். வாயு பகவான். குதிரைகள் மிக வேகமாக செல்லுதற்குரிய அசுவமந்திரத்தை உபதேசம் செய்தான். இயமனோ உயர்ந்த ஒரு கதாயுதத்தை கொடுத்தான். இவை எல்லாம் நளனுடைய உண்மையான, நேர்மையான செயலுக்கு அவனுக்குக் கிடைத்த பரிசுகள் ஆகும்.
ஐந்து நளன்கள்
சுயம்வரத் திருநாளில், நளன் தானும் சுயம்வர மண்டபத்திற்கு வரப்போவதாக கூறியுள்ளமையால் நான்கு தேவர்களும் நளன் உருவில் சுயம்வர மண்டபத்தில் புகுந்தனர். அங்கே வரிசையாக அமர்ந் தனர். அவர்களின் நடுவில் உண்மையான நளனும் அமர்ந்திருந்தான். மண மாலை ஏந்தி வந்த தமயந்தியிடம் தோழி சாரதை அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு, வந்திருந்த அரசர்களை பற்றியெல்லாம் கூறிவர, அவர்களை விட்டு நீங்கி வரும்பொழுது ஐந்து நளன்கள் வரிசையாக அமர்ந்திருக்கக் கண்டாள்; திடுக்கிட்டாள். உடனே இது தேவர்களின் சூழ்ச்சி என்பதை உணர்ந்து கொண்டாள். பின்னர் தன் அறிவின் திறத்தால், உண்மையான நளனுக்கு மட்டும் கண்கள் இமைத்திருந்த தாலும், கால்கள் நிலத்தில் தோய்ந்திருந்த தாலும், அணிந்திருந்த மாலை வாடியிருந்த தாலும் ஏனைய நள வடிவத்தில் வந்திருந்த தேவர்களுக்கு அவ்வாறு இல்லாமல் இருந்ததாலும், உண்மையான நளனை எளிதாக அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டவுடனே உண்மையான நிடத நாட்டு மன்னன் நளனுக்கே மாலை யிட்டாள். ஏமாற்றமடைந்த தேவர்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றார்கள். போரிட்டுத் தோற்றார்கள். பின்னர் நளன் – தமயந்தி திருமணம் சிறப்புற நடந்தது. நளன் குண்டின புரத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்தான். பின்னர் தமயந்தியை அழைத்துக் கொண்டு, தன் நகரமாகிய மாவிந்தத்திற்குச் சென்று மகிழ்ச்சியோடு இன்ப வாழ்க்கை நடத்தினான். அதனால் அத்தம்பதியினர்க்கு இந்திரசேனன் இந்திரசேனை என்று முறையே ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் ஆக இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆக அவர்கள் வாழ்க்கை சின்ன சின்னாட்கள் இனிதாகக் கழிந்தது.
சனி பகவானின் சபதம்
நளனுருக்கொண்டு சுயம்வர மண்டபத் திற்குள் வந்திருந்த தேவர்கள் வெட்கத் தோடு விண்ணுலகம் சென்று கொண்டிருக் கும்போது தமயந்தியின் மணமாலையை விரும்பி கலிபுருஷன் (சனி பகவான்) எதிரே வந்து கொண்டிருந்தான். அப்பொழுது தேவர்கள் “திருமணம் முடிந்து விட்டது. தமயந்தி நளனுக்கு மாலை சூட்டி விட்டாள்” என்று அவனி டம் கூறிச் சென்றனர். அக்கலிபுருஷனும் தமயந்தியின் மணமாலையை விரும்பி, தாமதமாகிவிடவே வேகமாக வந்து கொண்டிருந்தான். தேவர்கள் கூறியதைக் கேட்டவுடனே பெருத்த ஏமாற்றம் அடைந் தான். அந்த ஏமாற்றத்தின் விளைவாக அவன் உள்ளத்தில் பழிவாங்கும் உணர்வு ஏற்பட்டது. அதனால், “அவர்கள் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள் என்பதைத்தான் பார்ப்போமே” என்று எண்ணிய அவன், “அத்தம்பதியினரை பிரித்து, அவர்களை வருத்தப்படச் செய்கிறேன் பார்” என்று சபதம் செய்தான். அதற்குத் தகுந்த காலத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் பாதங்களைச் சுத்தி செய்ய கழுவிய நீர், ஒரு பாதத்தின் பின்புறத்தில் படாமல் போய் விட்டது. ஜலம் படாத அந்த இடத்தில், காத்திருந்த கலிபுருஷன் ஈ வடிவில் உட்கார்ந்து, பின் அவனுடம்பில் பிரவேசித்தான். இதனால்தான் பெரியோர்கள் கால்களை நன்றாக அலம்ப வேண்டும் என்பர். எப்பொழுது கலிபுருஷன் நளன் உடம்பில் புகுந்தானோ அப்பொழுதிலிருந்தே துன்பம் என்பது நன்னுக்குத் தொடர்கதையாக வரலாயிற்று.
செய்வதறியாது நின்ற நளன்
தளனுக்குத் தமையன் முறையில் இருந்த புஷ்கரன் என்ற சிற்றரசன், “என்னுடன் சூதாடி வெல்ல முடியுமா?” என்று சவால் விட்டுக்கொண்டு கொடி தூக்கி நளனின் அரண்மனையை அடைந்தான். வினை விளை காலமாதலின் மன்னன் நளன் எதையும் ஆராயாதவனாகி, அவனுடன் சூதாடி தன் நாடு நகரங்களையெல்லாம் தோற்றான். அதனால் நளனும் தமயந்தியும் அந்தணன் ஒருவன் மூலம் தன் மாமனார் மன்னன் விமனது குண்டினபுரத்திற்கு அனுப்பி விட்டான். பின்னர் காட்டிலும் மேட்டிலுமாக நடந்து சென்று கொண்டி. ருந்த அவர்கள், ஓரிடத்தில் இளைப்பாற அமர்ந்தனர். அப்பொழுது அழகான புறா ஒன்று அவர்கள் எதிரே வந்து அமர்ந்தது. அதன் அழகில் மயங்கிய தமயந்தி, அதனைப்பற்றித் தருமாறு தன் கணவன் நளனைக் கேட்டான். அவனும் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அதனைப் பற்றப் போனான். அப்புறாவோ அவன் கையில் அகப்படாமல் பறந்து பறந்து சென்று போக்குக் காட்டியது. அதனால் நளன் தான் உடுத்தியிருந்த ஆடையை வீசிப் பற்ற முனைந்தான். ஆனால் அப்பறவை அத்துணியைத் தன் அலகினால் பற்றிக்கொண்டு, “அரசே! நான்தான் கலிபுருஷன். இன்னும் என்னால் பட வேண்டிய துன்பங்கள் நிறைய உள்ளன” என்று கூறி பறந்து சென்று விட்டது. என்ன செய்வான் பாவம்! செய்வதறியாது திகைத்து நின்றான்.
தன்னுடைய ஆடையை இழந்த அவன், தன் மனைவியின் புடவையிலேயே தன்னை மறைத்துக் கொண்டு மனம் வருந்தி காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். அடர்ந்த இருள் வந்து விட்டது. அங்கு ஒரு பாழ் மண்டபம் தென்பட்டது. அதில் இருவரும் தங்கினார்கள். நள்ளிரவில் விழித்துக் கொண்ட நளன், ‘இவளை விட்டு பிரிந்து சென்று விட்டால், இவள் தன் தாய் வீட்டுக்கு சென்று விடுவாள். அங்கு நலமுடன் இருப்பாள் என்று எண்ணி தன் மனைவியின் உடையில் பாதியை அரிந்து கொண்டு, அதனையே ஆடையாக உடுத்தி அங்கிருந்து வெளியேறினான்.
கார்க்கோடகன்
சென்று கொண்டிருக்கும்பொழுது ஒரு பாம்பு தீயில் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது. அது நளனை அழைத்து, “அரசே! என்னை இந்நெருப்பிலிருந்து காப்பாற்று; உனக்கு நன்மை செய்வேன்” என்றது. ஓர் உயிரை காப்பாற்ற வேண்டு மென்ற கருணை உள்ளத்தினால் அக்னி தேவன் கொடுத்த வரத்தினால் அதனை அவித்து, அப்பாம்பை காப்பாற்றினான். வெளியே வந்தவுடன், அந்தப் பாம்போ அவனைக் கடித்து விட்டது. அதனால் அவன் மேனி கருநிறமாகி, கை கால்கள் குறுகி, குட்டை வடிவம் பெற்று விகார மடைந்தான். அதனைப் பார்த்த நளன் “நாகமே ! நான் உனக்குச் செய்த உதவிக்கு எனக்குச் செய்த நன்மை இதுதானா?” என்று கேட்டான். அதற்கு அந்த நாகம், “நளனே அஞ்ச வேண்டாம். நான் கார்க் கோடகன்; நான் உனக்கு நன்மை செய்ய வேண்டுமென்றுதான் விகாரமாக்கினேன். அப்பொழுதுதான் உன்னைப்பிடித்த சனி நீங்கும் வரை நீர் யார் என்பதை பிறர் அறிய மாட்டார்கள். உண்மை வடிவத்துடன் இருந்தால் பகைவர்களால் உனக்குத் தீங்கு நேரும். அது மட்டுமல்லாது இரண்டு நீல ஆடைகளை உனக்குக் கொடுக்கிறேன். தேவையான போது அவற்றை உடுத்திக் கொள்ளும்; பழைய உருவம் பெறுவீர். ஆனால் இப்பொழுதே இந்த ஆடைகளை உடுத்திக் கொள்ளாதே” என்று கூறிச் சென்றது.
விகார உருவம்
விகார உருவம் பெற்ற நளன் அங்கிருந்து இருதுபன்னன் ஆண்ட அயோத்திமா நகரம் அடைந்தான். அயோத்தி என்பது முத்தி தரும் நகர் ஏழினுள் ஒன்று. சரயு நதிக்கரையில் உள்ளது. அங்கு அக்கினி தேவன் கொடுத்த வரத்தினால் அவன் அரண்மனையில் சமையல் காரனாக அமர்ந்தான்.
பாதி இரவில் உறக்கத்தினின்று எழுந்த தமயந்தி. அப்பாழ் மண்டபத்தில் தம் கணவனைக் காணாது வருந்தினாள். அழுதாள், புலம்பினாள், அழுது கொண்டே தன் கணவனைத் தேடிச் சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு விஷமுடைய மலைப்பாம்பு அவளைச் சுற்றிக்கொண்டு விழுங்க ஆரம்பித்தது. அப்பொழுதும் அவள் தன் கணவனையே நினைத்து அவனைக் கூவி அழைத்து தன்னைக் காப்பாற்றுமாறு புலம்பினாள். அவளின் கதறலைக் கேட்டு ஒரு வேடன் அந்த மலைப்பாம்பைக் கொன்று அவளை மீட்டான். பின்னர் அவன் காமம் வயப்பட்டவனாகி, அவளை அணைக்க முயல, அவள் தன் கற்புத்தீயினால் அவனைச் சாம்பலாகும்படி செய்தாள். நடுக்காட்டில் துணையில்லாது தனித்து நின்ற அவளை, அவ்வழியே வந்த நல்ல உள்ளம் கொண்ட வணிகர் கூட்டம் அவளை அருகிலுள்ள ஊர் ஒன்றில் சேர்த்தது. அது சேதி நாட்டை சேர்ந்த ஊர். அதனை ஆண்டு வந்தவன் சுபாகு என்பவன் ஆவான். அவன் தமயந்தியின் சிறிய தாய் சுநந்தையின் கணவன். அதாவது சிற்றப்பா முறையினன். அவர்களும் இவளை அவ்விடத்தில் தங்கி இருக்கச் சொல்ல, அவளும் அங்கு தங்கலானாள். தங்கியிருந்தாளே தவிர அவள் தன்னுடைய துன்ப நிலை எதையும் கூறவில்லை. தான் யார் என்பதையும் சொல்லவில்லை.
தமயந்தியின் இரு குழந்தைகளையும் காத்து வருகின்ற பாட்டன் வீமன், தன் மகளும், மருமகனும், எங்கிருக்கிறார்கள் என்பதை அறிய எங்கணும் தூதர்களை அனுப்பினான். அவர்களில் சுதேவன் கைரேகைப் பலன் சொல்லுபவனாய், நடித்து சேதி நாட்டு அரண்மனைக்கு வந்து தமயந்தியைக் கண்டான். அவள் யார் என்பதை அவன் சேதி நாட்டு மன்னன் சுபாகுவுக்கும், அவன் மனைவி சுனந்தைக் கும் சொல்ல அப்பொழுதுதான் அவள் யார் என்பதையும், அவளுக்கு ஏற்பட்ட துன்ப நிகழ்ச்சிகளையும் அறிந்தனர். பின்னர் எல்லாம் ஊழ் வினையின் பயன் என்று முடிவு செய்து, அவளை அந்தணனோடு அவள் தாய் தந்தையர் இருப்பிடமான குண்டினபுரத்திற்கு அனுப்பினர். குண்டின புரம் சேர்ந்து அவள் தாய் தந்தையரைக் கண்டாள். தாய் தந்தையர் அவளுக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களையெல்லாம் அறிந்து, “பயப்பட வேண்டாம்; உன்னுடைய துன்பமெல்லாம் விரைவில் நீங்கும் ” என்று ஆறுதல் கூறினர். சித்தி வீட்டில் இருந்தது இருந்தது போலவே இங்கும் கணவனையே நினைத்து நல்லாடை உடுத்தாமல், நல்லணி அணியாமலும், அவனையே நினைத்து இருந்தாள்.
தமயந்தியைக் கண்டு பிடித்து கொண்டு வந்த சுதேவனையே மீண்டும் நளனைத் தேடி வர வீமன் அனுப்பினான். சுதே வனும் பல இடங்களில் சென்று அலைந்து திரிந்து தேடினான். அயோத்தி மன்னன் அவைக்குச் சென்றான். அங்கு விகாரமாய், குள்ளமாய் இருக்கும் ஒருவனைக் கண்டான். அரண்மனையில் வேலை செய்யும் மற்றவர்களும் உடன் இருந்தனர்.
அப்பொழுது சுதேவன், “நடுக் காட்டிலே தன் காதலியை கைவிட்டு போய் விட்டது அரசாள் வேந்தர்களுக்கு பொருத்த மாகுமோ?” என்று நளன் என்று பெயர் குறிப்பிடாமல் கேட்டான். மற்றவர்கள் இதனை இவன் எதற்கு சொல்கின்றான் என்று தெரியாது விழித்திருக்க, குள்ள மாயும் விகாரமாயிருக்கும் அவன் மட்டும். “அவ்வாறு அக்காதலியை நள்ளிரவில் கைவிட்டுப் போனது ஊழ்வினையின் விளைவே ” என்று பதில் கூறினான். இவனிடத்தில் இருந்து மட்டும் இந்த பதில் வந்ததைக் கேட்ட சுதேவன் ‘இவனே நளனாயிருக்கலாம்’என்று அனுமானித்தான். மேலும் அவன்தான் நளன் என்பதையறிய, மற்றொரு சூழ்ச்சி செய்தான். ‘சிவானுக்கிரகத்தால் தமயந்தி கன்னியா யினதால், அவளுக்கு மறுமணம் செய்ய நாளையே சுயம்வரம் நடத்த வீமன் நிச்சயித்துள்ளான்” என்று ஒரு பொய்ச் செய்தியை மன்னன் இருது மன்னனிடம் தெரிவித்தான்.
இருது பன்னன்
தமயந்தி மேல் விருப்பம் கொண்டிருந்த இருது பன்னன் அதனைக் கேட்டு, ”குண்டினபுரம் நீண்ட தூரம் உள்ளதே. எவ்வாறு நாளைக்காலைக்குள் போய் சேர முடியும்” என்று எண்ணி வருந்தினான். தன் மனைவியின் கற்பின் திண்மையை நன்கு அறிந்த நளன் (‘தன்னை அறிதற்கு செய்த சூழ்ச்சியே’ என்று எண்ணி) ”அரசே! கவலை வேண்டாம், குதிரைகள் பூட்டிய தேர் ஒன்று கொடுத்தால் சூரியன் உதிப்பதற்கு முன்னமே குண்டினபுரத்தில் உம்மைச் சேர்ப்பேன்” என்றான். பெரு மகிழ்ச்சியடைந்த மன்னன் குதிரைகள் பூட்டிய தேரைக் கொணரச் சொன்னான். தேரும் உடனே வந்தது. அத்தேரில் இருது பன்ன மன்னனை ஏற்றிக்கொண்டு நளன். சுயம்வரத்தின்போது வாயுதேவன் உபதேசித்த மந்திரத்தை ஜெபித்து, தேரினை ஒட்ட, அத்தேர், சூரியனின் தேரோட்ட வேகமும் குறைவானது என்று சொல்லும்படியாக வேகமாகச் செல்ல லாயிற்று. தேர் ஓடும்பொழுது இருது பன்னனின் மேலாடை கீழே விழுந்து விட்டது. ‘தேரை நிறுத்துக’ என்று உடனே சொல்ல, நளனும் தாமதம் செய்யாது உடனே தேரை நிறுத்தினான். “அந்த கணப்பொழுதுக்குள் தேர் பத்துக்காத தூரம் சென்று விட்டதாம்’ எனப் புகழேந்தி புலவர் தேரோட்ட வேகத்தை வருணிக்கின்றார்.
பொழுது விடிவதற்கு முன்னேயே தேரானது குண்டினபுரத்தை அடைந்தது. திடீரென்று வருகை புரிந்த இருது பன்னனைக் கண்டு வியப்போடு வீமன் வரவேற்றான். பின்னர் தாங்கள் வந்ததற்குரிய காரணம் யாது? எனக் கேட்டான். சுயம்வரத்திற்குரிய அறிகுறியே இல்லாத நிலையை கண்ட இருது பன்னன் முதலில் வாடடமடைந்து, பின்னர் சமாளித்து கொண்டு ‘தங்களைக் காண வந்தேன்’ என்றான். அதன்பின் நளனோடு தான் தங்குதற்குரிய அரண்மனை போய்ச் சேர்ந்தான்.
மறையவன் சுதேவன், வீமனையும், தமயந்தியையும் அணுகித் “தேர்ப்பாகனாக வந்திருப்பவன் நளனேயாவான். இரண்டாம் சுயம்வரம் என்று சொல்லி நளனை, மன்னனோடு வரவழைத்தேன்” என்று கூறியதோடு அயோத்தியில் தான் செய்த சுயம்வரச் சூழ்ச்சியை எடுத்து கூறினான். அவ்வாறு சொன்னதால் நீண்ட தூரத்தில் உள்ள குண்டினபுரத்தை ஒரே இரவில் வர முடிந்தது. இவ்வாறு பேய்க் காற்றிலும் சுடுகி ஒட்டக் கூடிய ஆற்றலு டையவன் நளனே ஆவான். ஆகலின் இவன் நளனே என்றான். வீமனும் அவன் மனைவியும் அவன் நளனே என்பதை உணர்ந்தார்கள். மேலும் அவன் நளனே என்று அறிதற்கு, மேலும் சில உபாயங் களை செய்யலானார்கள். விறகும் நெருப்பும் இல்லாமல் சமைத்தற்குரிய பொருளை கொடுக்கச் செய்தனர். அவன் அதனை வாங்கி அக்னி பகவான் கொடுத்த வரத்தினால் உயர்ந்ததொரு சமையல் செய்தான். நளனே இவன் என்பதை இதன் மூலம் அறிந்து கொண்ட தமயந்தி, மேலும் தெளிவாக அறிந்து கொள்ள தன்னிரு மக்களையும் நளனிடம் அனுப்பினாள்.
நளன் அவ்விரு மக்களையும் பார்த்தான். மகிழ்ந்தான். அம்மக்களை தன் கைகளால் வாரி எடுத்தான், பெருமூச்சு விட்டான். தன்னிரு புயத்தோடு சேர்த்து அணைத்து கொண்டான். பின்னர், “மக்களே! என் மக்களைப் போல இருக்கின்றீர்கள்; நீங்கள் யார் மக்கள்” என்று கேட்டான். அதற்கு அந்த மக்கள், “அடுமடையா! எங்களை எப்படி உன் மக்கள் என்று சொல்லலாம். நாங்கள் நிடத நாட்டு வாள்வேந்தன் நளமகராசனுடைய மக்கள்” என்று இறுமாந்து கூறினார்கள். அதனைக் கேட்ட அவன், கண்களில் நீரை பெருக்கி “என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என்று கூறினான். இவற்றையெல்லாம் பார்த்து வீமனும் தமயந்தியும் ‘இவன் நளனே’ என்று நன்கு அறிந்து கொண்டனர்.
உண்மையை உணர வைத்த சுதேவன்
பின்னர் சுதேவன் இருது பன்னனிடம், உடன் இருக்கும் தேர்ப்பாகன் நளன் என்று கூறி, உண்மை நிலையினை உணர வைத்தான். நளனை அறிவதற்காகவே இந்த இரண்டாம் சுயம்வரம் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் எடுத்துக் கூறினான். உண்மையை உணர்ந்த இருது பன்னன் நளனிடம் சென்று, ”மன்னா! தாங்களை அரசர்க்கு அரசன் நளன் என்று அறியாமல் சிற்றரசனாகிய நான் தங்களை என் தேர்ப்பாகனாக வைத்துக் கொண்டேன் இது என்ன விதியோ?” என்று கூறி தன்னை நொந்து கொண்டான். மன்னிக்கும்படியும் வேண்டிக் கொண்டான். அதற்கு நளன், ”அரசே! என்னைக்கலி வந்து பற்றித் துன்பம் கொடுத்த சமயத்தில் சமய சஞ்சீவியாக என்னை உன்னுடன் இருக்கச் செய்து காப்பாற்றினாய். உன்னுடைய உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் இன்றிலிருந்து எனக்கு உற்ற நண்பன் ஆனாய்” என்று கூறித் தேற்றினான்.
பின்னர் இருவரும் ஒரு பெரிய மா மரத்தின் கீழே அமர்ந்தார்கள். அப்பொழுது அந்த மரத்தில் இருந்த காய்களையும், கனிகளையும், இலைகளையும் எண்ணிப் பார்க்காது மொத்த எண்ணிக்கையை சொல்ல வேண்டும் என்று கூற, அவற்றை எண்ணிப் பார்க்காமலேயே இருதுபன்னன் அக்ஷஹ்ருதய வித்தையைக் கொண்டு சரியாக சொன்னான். அதனைத் தனக்கு சொல்லி கொடுக்க வேண்டுமென்று நளன் கேட்க, இருது பன்னன் “எல்லாரும் வியக்கும் வண்ணம் மிக விரைவாகத் தேரை செலுத்துகின்றீர். அந்த வித்தையை சொல்லி கொடுத்தால், நான் கற்ற வித் தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கி றேன்” என்றான். உடனே நளன் தேரை விரைவாக செலுத்துதற்குரிய அசுவ ஹ்ருதய வித்தையை அந்த அயோத்தி மன்னனுக்கு கற்றுக் கொடுத்தான். பதிலுக்கு இருது பன்னன் நளனுக்குத்தான் அக்ஷஹ்ருதய வித்தையைக் கற்று கொடுத் தான். இவ்வாறு இருவரும் தாங்கள் கற்ற வித்தைகளை மாற்றி கொண்டு நல்ல நண்பராயினர். பின்னர் கலிபுருஷன் நளனை அணுகி, ”உனக்கு நான் பல துன்பங்களைக் கொடுத்தேன். நான் உன்னை விட்டுப் போய் விடுகிறேன். என்னை மன்னித்து விடுக” என்று சொல்லியதோடு, “உன்னுடைய கதையை அறிந்தவர்களையும், பிறர் சொல்ல கேட்ட வர்களையும் நான் அணுக மாட்டேன்” என்று கூறித் தன்னிருப்பிடம் சேர்ந்தான்.
பழைய உருவில் நளன்
பின்னர் நளனிடம் வீமனும் தமயந்தியும் சென்று “ஐயா! நீங்கள் யார் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் இயல்பான வடிவத்தை எடுத்து எங்கள் மனத்திற்கு ஆறுதலையும், அதன் காரணமாக உண்டாகும் மகிழ்ச்சியையும் அளியுங்கள் ” என்று கூறினர். அதற்கு, நளன், “பகைவர்கள் தீங்கிழைப்பார் என்ற காரணத்திற்காக கார்க்கோடகன் என்ற பாம்பு எனக்கு இந்த விகாரமுடைய உருவத்தை கொடுத்தது. இனி இந்த வடிவம் தேவையில்லை” என்று கூறி, அப்பாம்பு கொடுத்த நீல ஆடைகள் இரண்டையும் உடுத்திக் கொண்டான். உடனே பழைய அழகிய வடிவம் வந்தது. நளனின் உண்மையான வடிவத்தை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
வசிய மந்திரம்
அதன் பின் தன் மனைவி தமயந்தி யோடும், இரு மக்களோடும், வீமனோடும் தன் தலைநகராகிய மாவிந்த நகரம் சென்றான். அங்கு புஷ்கரனைச் சூதாட்டத் தில் இருது பன்னன் கற்றுக் கொடுத்த அக்ஷஹ்ருதய வித்தையைக் கொண்டு அவனை வென்றான். அக்ஷஹ்ருதய வித்தை என்பது சூதாட்டத்திற்குரிய தேவதையை வசியப்படுத்தும் மந்திரம் ஆகும். இவ்வாறு நளனின் கதையைக் கூறிய பிருஹதச்வர முனிவர் தர்மரைப் பார்த்து, ‘தர்மபுத்திரரே! உன்னைப் போல துர்ப்பாக்கியசாலிகள் உலகில் இல்லை என்று கூறினாய். உன்னைவிட இந்த நளன் சூதாட்டத்தினால் எவ்வளவு பெரிய துன்பத்தை அனுபவித்திருக்கின்றான் என்பதை எண்ணிப்பார். நீயாவது தம்பிய ரோடும் திரௌபதியோடும் இருக்கின்றாய். அவனோ மக்களை இழந்து, நள்ளிரவில் நடுக்காட்டில் தன் மனைவியை இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.இவை மட்டு மன்று; நன்மைக்கே என்றாலும் பாம் பினால் கடியுண்டு விகார உருவம் அடைந்தான். தனக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசன் இருது பன்னனிடம் தேரோட்டியாகவும் சமையற் காரனாகவும் இருந்தான். கலிபுருஷனின் வசத்துக்கு ஆளாகிய அவன் பல அல்லல் களைப் பட்டு பின்னர் தன் மனைவியைப் பெற்று, மக்களைப் பெற்று இறுதியில் நாட்டையும் பெற்று இனிது வாழ்ந்தான். அவன் பட்ட அல்லல்களை எண்ணிப் பார்த்து அவனை விட நீ மேல் என்று ஆறுதல் கொள்வாயாக. பதிநான்கு ஆண்டுகள் கழித்து உன் துன்பம் எல்லாம் நீங்கும். குரு குலத்திற்கோர் ஒரு சிறந்த மன்னனாக விளங்குவாய்” என்று வாழ்த்து கூறிச் சென்றார்.
மகாபாரதம் – 22 தர்ம ராசாவுக்கு நளன் கதை உரைத்த சருக்கம் | Asha Aanmigam