சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெற்று, அவருடைய பேரருளையும் பெற்று, வெற்றியுடன் திரும்பி வந்த தன் மகனாகிய அர்ச்சுனனுக்கு, இந்திரன் மகிழ்ச்சியுடன் கற்பக மாலை அணி வித்தார். நான்முகன் முன் கொடுத்த அழகிய கிரீடத்தைச் சூட்டினார். பற்பல ஆயுதங்களைக் கொடுத்து அவற்றிற்குரிய மந்திரங்களையும் உபதேசம் செய்தார். வேண்டிய சன்மானங்களையும் கொடுத்தார். மேலும் இந்திரன் அர்ச்சுன னோடு ஒரே பாத்திரத்தில் உணவுண்டு தன் பேரன்பினை அவனுக்குத் தெரிவித்தார். அப்பொழுது இந்திராணி, “சாதாரண மானிடனாகிய அர்ச்சுனனோடு, தேவ ராசனாகிய இந்திரன் ஒரே பாத்திரத்தில் ஒருங்கு உண்ணலாமா?” என்று கேட்டாள். அதற்கு இந்திரன், “அர்ச்சுனன் நீ நினைக்கின்றபடி சாதாரணமானவன் அல்லன். பரந்தாமனாகிய கண்ணபிரானின் அத்தை குமாரன்; என் மகன்; சிவபெரு மானின் பேரருள் பெற்று, அப்பெரு மானிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்றவன். இத்தகைய பெருமைகளை யுடைய இந்த அர்ச்சுனனை மற்றவர்களை போலச் சாதாரணமாக எண்ணி விடக் கூடாது” என்று கூறினார். அங்கிருந்த அனைவரும் (இந்திராணி உள்பட) அவர் கருத்தை ஏற்று, அர்ச்சுனனை மனமார பாராட்டினர். அதற்
அப்பொழுது இந்திரன், அர்ச்சுனனிடம், “மகனே! நீ எனக்கு ஒருவரம் தரவேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகஎனக்குப் பகையாக மூன்று கோடி அசுரர்கள் உள்ளனர். நிவாத கவசர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள், தோயமா புரம் என்ற இடத்தில் அரண் கட்டி வாழ்கின்றனர். அவர்கள் மும்மூர்த்தி களுக்கும் அஞ்சாதவர்கள். அவர்களோடு போரிட்டு, அவர்களை நீதான் அழிக்க வேண்டும்” என்று கூறினார். அர்ச்சுனன் அவ்வறே செய்வதாக வாக்கு தந்தான். உடனே இந்திரன் மாதலியோடு தன் தேரினையும் அழியாத கவசத்தினையும் தந்து அவனை வாழ்த்தி அனுப்பினார். அவனும் இந்திரனை வணங்கி, விடை பெற்றுக் கொண்டான். பின்னர் போர்க் கோலம்பூண்டு மாதலி தேர் ஓட்ட தோயமா புரம் நோக்கிப் புறப்படலானான். தேவர் கள் அவனை வாழ்த்தி வழி அனுப்பினர்.
நிவாத கவசர்
பதினாயிரம் குதிரைகள் பூட்டிய இந்திரன் தேரில் சென்று கொண்டிருக்கும் அர்ச்சுனன், தேர்ப்பாகன் மாதலியிடம் ‘அந்த அவுணர்கள் எத்தகையவர்கள்?” என்று கேட்டான். அதற்கு அந்த மாதலி, ”அர்ச்சுனா! நிவாத கவசர் என்று சொல்லப்படும் அவர்கள், அகன்ற கடற்பரப்பின் நடுவிலே இருக்கும் தோயமாபுரத்தில் வாழ்பவர்கள். காற்றும் உள்ளே நுழைய முடியாத உறுதியான கவசத்தை உடையவர்கள். அதனால்தான் அவர்கள் ‘நிவாத கவசர்’ என்ற பெயர் பெற்றார்கள். அவர்கள் அநேக பிரம்மாக் களின் ஆயுளைக் கண்டவர்கள். மும்மூர்த்தி களையும் புறங்காட்டி ஓடச் செய்தவர்கள்.
இடிபோன்று முழக்கமிட்டு பேசக்கூடியவர்கள். காவிக்கல் போன்ற தலை மயிரினையுடையவர்கள். கார்மேகம் போன்ற கருத்த மேனியையுடையவர்கள்; கூர்மையான வளைந்த பற்களையுடைய வர்கள். இயமனும் அஞ்சும்படியான தோற்றத்தையும், வலிமையையும் உடையவர்கள். ஈரேழு உலகங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழிக்கும் ஆற்றலுடையவர்கள்” என்று விளக்கமாக கூறினான். மாதலி கூறிய அனைத்தையும் அர்ச்சுனன் கேட்டான். பின்னர் மாதலியின் தேரை இறக்கி, தோயமாபுரத்தின் கோட்டையை அடைந்தான்.
கோட்டையின் வாயிலை அடைந்த வுடன் அர்ச்சுனன், சித்திரசேனன் என்னும் கந்தருவனை, “அர்ச்சுனன் படையெடுத்து வந்திருக்கின்றான்” என்று தூதாக நிவாத கவசர்களுக்கு அனுப்பினான். பின்னர் அவர்கள் கேட்கும்படி, தன் காண்டீப வில்லின் நாணொலியை எழுப்பினான்.
காண்டீப வில்லின் நாணொலியைக் கேட்டவுடன், பகைவனாகிய இந்திரன் தான் போருக்கு வந்து விட்டான் என்று சந்தேகம் கொண்டனர். சித்திரசேனன் தூதாகச் சென்ற பின்னர்தான், மண்ணுல கத்து மைந்தன் அர்ச்சுனன் போரிட வந்துள்ளான் என்பதை அறிந்தனர். அதனால் அவர்கள், “வலிமை மிக்க சிங்கத்தின் குகைக்குள்ளேயே அற்ப நரி ஒன்று போரிட வந்துள்ளதுபோல நம்மு டைய உண்மை வலிமை அறியாது அந்த மானிட அர்ச்சுனன் போரிட அசட்டுத் தைரியத்துடன் நம்முடைய கோட்டைக் குள்ளே வந்துள்ளான்” என்று அர்ச்சுனனு டைய உண்மை வலிமை அறியாது ஏளனம் செய்தனர். உடனே மூன்றுகோடி அசுரர் களும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொண்டு, “அந்த குன்றுதோறாடும் பன்னிருகை வேலவனாலேயே நம்மை வெல்ல முடியவில்லை. இந்த மானிடன் நம்மை வென்றுவிட போகிறானாம் ” என்று இகழ்ந்து பேசி, அர்ச்சுனனைத் தாக்கலாயினர்.
அர்ச்சுனனுடன் போர்
நிவாத கவசர்கள் கூர்மையான தெய்வீகக் கணைகளையெல்லாம் அவன் மேல் ஏவினர். அவற்றையெல்லாம் அர்ச் சுனன் தன் ஒப்பற்ற காண்டீப வில்லி னின்று அனுப்பிய கணைகள் மூலம் அழித்தான். நிவாத கவசர்களாகிய அவர்கள் அர்ச்சுனன் மேல் சக்கரம், மழு, சூலம், நெருப்பை கக்குகின்ற வாள், கதை, பேரீட்டி, (தோமரம்) முதலான ஆயுதங் களை அடுக்கடுக்காக ஏவினார்கள். எல்லா வற்றையும் அர்ச்சுனன் தன் காண்டீப வில்லினின்று புறப்பட்ட கணைகள் கொண்டு வீழ்த்தினான். அர்ச்சுனன் விடுத்த கணைகளை யெல்லாம் அறுத்து தள்ளிய அவர்கள் அர்ச்சுனனின் தேர்ப்பாகனும், குதிரைகளும் கலங்கும்படி கடும் போர் செய்தார்கள்.அதனைப் பொறுக்க மாட்டாது அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கலானான்.
அந்தப் பிரம்மாஸ்திரம், கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பாக சென்று, யானை, குதிரைகள் தேர்களை எரித்த தோடு, ஒருகோடி அவுணர்களின் உயிரையும் குடித்தது.
முற்றும் அழிந்த நிவாத கவசர்கள்
எஞ்சிய இரண்டு கோடி பேர் ”எங்களைக் கொல்ல வரும் அர்ச்சுனன் எங்கே உள்ளான்?” என்று தேடிக் கொண்டுவர, அவர்கள் மீது அர்ச்சுனன் ஒருவனே தனியாக நின்று சரமாரியாக அம்புகளைப் பொழிந்தான். அவற்றை யெல்லாம் அறுத்த அந்த நிவாத கவசர்கள், அர்ச்சுனன் மேல் மழையென அம்புகளைப் பொழிந்தார்கள். அவற்றையெல்லாம் அர்ச்சுனன் விலக்கி, வைஷ்ணவாஸ் திரத்தை ஏவினான். அது ‘இம்’ என்னும் முன்னே எழுநூறு எண்ணூறு காதம் பாய்ந்தது. அசுரர்களின் உடலையெல்லாம் பிளக்க ஆரம்பித்தது. தலைகளை வீழ்த்தியது. அதனால் கவந்தங்கள் எல்லாம் அந்த போர்க்களத்தில் எங்கணும் கூத்தாடின. பேய்கள் நடனமாடின. இரத்த ஆறு பெருக்கெடுத்தோடியது. தப்பிப் பிழைத்தவர்கள், விண்ணிற்குச் சென்று அங்கிருந்து மேகாஸ்திரத்தை ஏவினார்கள். அதனை அர்ச்சுனன் அக்னியாஸ்திரத்தை விட்டு எங்கணும் கனல் கொப்பளிக்க அந்த மேகாஸ்திரத்தைத் தடுத்தான். பின்னர் நிவாத கவசர்கள் சுழல் காற்று வீசி உயிர்களை யெல்லாம் கொல்லும்படியான வாயுவாஸ்திரத்தை விட்டார்கள். அர்ச்சுனன், அந்த வாயு வாஸ்திரத்தை உறுதியோடு தாங்கி தவிடுபொடியாக்கும் படியான மலைமய மான சைலாஸ்திரத்தை ஏவினான். அதனால் வாயுவாஸ்திரம் தன் சக்தி இழந்து கீழே விழுந்தது. பின்னர் அவர்கள் மோகாஸ்திரத்தை ஏவினார்கள். அது எல்லா இடங்களிலும் இருளை பரப்பியது. அதோடு காற்று, கனல் முதலிய வற்றைச் சொரிந்து உலகினை நாசமாக் கியது. அர்ச்சுனன் அந்த அஸ்திரத்திற்கு எதிராக உள்ளதும் மாயைகளையெல்லாம் நீக்க வல்லதுமான மோகாஸ்திரத்தை ஏவி னான். அது மோகாஸ்திரத்தின் வலிமை யாவற்றையும் அழித்து வெற்றிகரமாக அர்ச்சுனனிடத்து வந்து சேர்ந்தது. பின்னர் நிவாத கவசர்கள் மாயை புரிந்து எல்லா அரக்கர்களும் உயிர் பெற்று எழும்படியாகச் செய்தனர். அவர்கள் அனைவரும் அர்ச்சுன னைச் சூழ்ந்து கொண்டு நிற்க அவன் அசைவற்று நின்றான்.
இரணியாபுரம்
அந்த நேரத்தில் அசரீரி, “வாயில்கை சென்று கலந்திருக்கும் காலத்து நின் கையிலுள்ள பாசுபதாஸ்திரத்தை விடுக” என்றுகூற, அவ்வாறே அவர்கள் செய்கின்ற காலத்து, அர்ச்சுனன் தவம் செய்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை, முறைப்படி மந்திர உச்சாடனம் செய்து ஏவினான். அந்த தெய்வீகப் பாசுபதாஸ்திரம் மூன்று கோடி அரக்கர்களையும், அவர்களின் நாற்படை களையும் அழித்துச் சாம்பலாக்கியது. அனைவரையும் அழித்துச் சாம்பலாக்கிய பின், பாசுபதாஸ்திரம் அர்ச்சுனன் கையகத்தே திரும்ப வந்து சேர்ந்தது.
நிவாத கவசர்களை முற்றாக அழித்த பின், அர்ச்சுனன் மாதலியை நோக்கி, “தேரினை இந்திர லோகத்திற்குச் செலுத்து வாயாக” என்றான். அவனும் சூரியனின் ஏழு குதிரைகள் கட்டிய தேரை அருணன் விரைவாகச் செலுத்துவதுபோல இந்திர லோகத்தை நோக்கிச் செலுத்துகின்ற பொழுது, அர்ச்சுனன் ஆகாயத்தின் மத்தியில் பொன்னினாலாகிய கோபுரம் ஒன்று இருப்பது கண்டு மாதலியை நோக்கி, “அதோ! அந்தரத்தில் தெரிவது என்ன?” என்று கேட்டான். அதற்கு அம்மாதலி, ‘அர்ச்சுனரே! அந்த அந்தரத்தில் இருப்பது பொன்னாலாகிய நகரமாகிய ‘இரணியாபுரம் என்பதாகும். அதனை ஆண்டு வருபவர்கள் ‘காலகேயர்கள்’ அவர்கள் உன் தந்தையாகிய இந்திரனுக்குப் பகைவர்கள்” என்று கூறினான்.
அர்ச்சுனன் அதனைக்கேட்டு, “என் தந்தைக்குப் பகைவர்களா? அவர்களையும் அழிப்பேன்” என்று கூறி, மாதலியிடம் தேரினை அங்கு செலுத்துமாறு கூறினான். மாதலியும் தேரினை இரணியாபுரம் நோக்கிச் செலுத்தினான். தேரின் பேரொலி யையும் அர்ச்சுனன் வில்லினது நாணொலியையும் காலகேயர் கேட்டுத் திடுக்கிட்டனர். “இந்த பேரொலியானது ஆறுமுகப் பெருமான் மயில் வாகனத்தின் மீது அமர்ந்து வருகின்ற ஓசையோ? யுகாந்த வெள்ள நீர்ப் பேரோசையோ? என்ன ஓசை என்று தெரியவில்லையே” என்று எண்ணி அவரவர் தத்தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து பார்க்கும் பொழுது தேர் மீது வருகின்ற அர்ச்சுனனைக் கண்டார்கள். அருகே வந்த அர்ச்சுனனைக் கண்டு, “இவர்கள் யார்? முன்னே நம்மிடத்து தோற்றவர்களோ? ஆறுமுகக் கடவுளோ! இவனுக்கு ஆறுமுகங்கள் இல்லையே! இயமனோ! அவன் இங்கு வருவதற்கு அஞ்சுவானே ” என்று பலவாறு எண்ணி னார்கள். பின்னர் (அர்ச்சுனன் என்கிற ) சாதாரண மானிடன் ஒருவன் வருவதை பார்த்து பற்களைக் கடித்துக்கொண்டு கண்களில் தீப்பொறி பறக்க அர்ச்சுனனைச் சூழ்ந்து கொண்டனர்.
அலட்சியப் பேச்சு
இரணியாபுரத்து அசுரர்கள் நல்ல அழகுடையவர்கள்; அதனால் தன்னை சூழ்ந்து கொண்ட அவர்களை எப்படி கொல்வது என்று முதலில் தயங்கினான். ஆனால் அவர்களோ, “தேவர்களின் ஏவல்படி எங்களுடன் போரிட வந்த அற்ப மானிடனே! ஏன் எங்களுடன் போரிட வந்தாய்? உன்னால் எங்களை வெல்ல முடியுமா? உன் உயிர்மேல் உனக்கு ஆசையில்லையா? உயிர்மேல் ஆசையிருந் தால் ஒடிவிடு” என்று அலட்சியமாகப் பேசலானார்கள். அவர்கள் பேசியதற்கு வேறு எதுவும் பதில் கூறாமல் அர்ச்சுனன், “உங்கள் அனைவரையும் யமனுலகிற்கு அனுப்ப வந்தவன் நான்” என்று கூறினான். அதனால் அவர்கள் கோபங்கொண்டு அர்ச்சுனன் மேல், வேல், வாள், மழு, கதை, சூலம், சக்கரம் முதலான படை களை மழை போல் சொரிந்தனர். அர்ச் சுனன் அவற்றையெல்லாம் அறுத்துத் தள்ளி, அவ்வசுரர்களது உடலங்களை இரத்த வெள்ளத்தில் மிதக்கும்படி செய் தான். காயமுற்ற அந்த இரணியாபுரத்து அசுரர் கூட்டம், தம் இரணிய நகரோடு விண்ணிடத்தே, மறைந்து கொண்டு, மாயமான போர்களை நடத்தினார்கள். அர்ச்சுனன் அவர்கள் செய்த மாயைகளை யெல்லாம் அழித்து, அந்த இரணிய நகரம் எங்கெங்கு செல்கின்றதோ அங்கெல்லாம் இயமன் என்று சொல்லும்படி படைகளை ஏவி அழித்திட்டான். அந்த காலகேயர் களின் இந்திர ஜால வித்தைகள் எல்லாம் அர்ச்சுனனிடம் பலிக்கவில்லை.
காலகேயர்களும் அழிந்தனர்
சாதாரணக் கணைகளினால் இவர்களை அழிக்க முடியாது என்று உணர்ந்த அர்ச்சுனன், மீண்டும் பாசுபதாஸ்திரத்தை எடுத்து, உரிய மந்திரங்களைச் சொல்லி, தியானித்து, முறைப்படி செலுத்தினான். அந்த அம்பு ஒவ்வொருத்தருக்கு ஓர் அம்பாக மாறி அந்த காலகேயர்கள் கூட்டத்தையே அழித்து விட்டது. பனை மரத்திலிருந்து விழுகின்ற பனம் பழங்கள் போல அந்த அசுரர்களின் தலைகள் எல்லாம் கீழே விழுந்து உருண்டு ஓட, உடல்கள் எல்லாம் இரத்த வெள்ளத்தில் கூத்தாடலாயின.அர்ச்சுனன் அம்பினாலும், நான்முகன் கொடுத்திருந்த ஆயுள் அவர்களுக்கு முடிந்து விட்டதனாலும், அவர்கள் வாழ்ந்த இரணியாபுரமும், அந்த காலகேயர்களாகிய அசுரர்கள் கூட்டமும் அழிந்து அடிச்சுவடே இல்லாமல் போயிற்று. நிவாத கவசர்களோடு சேர்த்து காலகேயர்களையும் வென்ற அவனது வெற்றிச்சிறப்புக்களை மாதலி மனமாரப் பாராட்டினான். பின்னர் தேரினை இந்திர லோகத்திற்குச் செலுத்தினான்.
அர்ச்சுனன் பெற்ற மாபெரும் வெற்றிகளை, சித்திரசேனன் முன்னே சென்று இந்திரனிடம் கூறினான். இந்திரன் மனமகிழ்ச்சியுடன் மற்றைய தேவர்கள் புடைசூழ அர்ச்சுனனை எதிர்கொண்டு வரவேற்றார். தன் மகனை ஆரத் தழுவினார். பின்னர் ஐராவதத்தின் மேல் தன்னோடு அர்ச்சுனனை ஒருங்கே அமர வைத்துக்கொண்டு அமராவதி பட்டணத்தையே மகிழ்ச்சியுடன் வலம் வந்தார்.
விஞ்சையன்
பொறாமையுற்ற விஞ்சையன் ஒருவன், ”சின்னாள் பல்பிணி சிற்றறிவுடைய அற்ப மானிடனுக்குத் தேவலோகத்து அரசனாகிய தேவேந்திரன் தன்னொக்க சிறப்புக்களைக் கொடுக்கலாமோ?” என்று கோபமாகக் கேட்டான். அதற்குத் தேவேந்திரன், ”பத்திரிகாசிரமத்தில் நர நாராயணராய்த் தோன்றிய அவர்கள் இன்று நாராயணன் கண்ணனாகவும், நரன் அர்ச்சுனனாகவும் அவதரித்துள்ளார்கள். அர்ச்சுனன் திருமாலினிடத்துத் அப்பொழுது நரனாக இருந்து திருமந்திரத்தை உபதேசம் பெற்ற சிறப்புப் பெற்றான். இந்தத் துவாபரயுகத்தில் பரந்தாமனுக்கு மைத்துனனாக இருக்கின்றான். எனவே இவற்றையெல்லாம் உணராது என்னோ டொக்க தந்த உயர்ந்த வரவேற்பினை பழித்து பேசுதல் கூடாது” என்று கூற அவ்விஞ்சையன் வாயடங்கினான். தேவர்கள் அர்ச்சுனனுக்கு மேலும் பல சிறப்புகளைத் தந்து வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தனர்.
அதன்பின் மாதலி மூலம் இந்திரன் தோயமாபுரம், இரணியாபுரம் ஆகிய இடத்தில் வாழ்ந்த நிவாதகவச காலகேயர்களை வென்ற வரலாற்றை கேட்டு அறிந்து, தன்னால் செய்ய முடியாத செயலை தன் மகன் செய்தானே என்று பெரிதும் வியப்புற்றார். மனங்களிப்புற்ற அவர் அர்ச்சுனனுக்கு வேண்டிய தெய்விக ஆயுதங்களையெல்லாம் கொடுத்தார்.
ஆயுதங்களையெல்லாம் பெற்ற அர்ச்சுனன், தன் தமையனாரைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. அவரை பார்த்து மகிழ உத்தரவு கொடுக்கும்படி பணிந்து கேட்க, “இந்த அமராவதிப் பட்டணத்தில் சில நாட்கள் தன்னுடைய சிறப்புமிக்க விருந்தினராக இருக்க வேண்டும்; பின்னர் பூவுலகம் செல்ல லாம் ” என்று கூறிய அவர் அவனுக்கென்று அழகிய மாளிகை ஒன்றைக் கொடுத்து, பணிபுரிய ஐயாயிரம் பெண்டிர்களையும் அனுப்பி வைத்தார்.
அதற்குப்பின் இந்திரன், முனிவரை அழைத்து, உரோமச “தாங்கள் காம்யகவனம் சென்று தர்மபுத்திரரை பார்த்து, இங்கு அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாற்றையும், நிவாதகவச காலகேயர்களை வென்ற நிகழ்ச்சிகளையும் மற்றும் அவன் பெற்ற சிறப்புகளையும் கூறுவீர்களாக அதோடு அமராவதிப் பட்டணத்தில் என்னுடைய விருப்பப்படி சில நாட்கள் தங்கியிருந்து வருவான் என்றும் சொல்வீர்களாக” என்று கூறி அனுப்பினார். உரோமச முனிவரும் தர்மபுத்திரர் இருக்கும் வனமாகிய காம்யக வனத்திற்கு சென்றார்.
மகாபாரதம் – 21 நிவாதகவசர் – காலகேயர் வதைச் சருக்கம்… அர்ச்சுனனுடன் போர் | Asha Aanmigam