இந்திரபிரத்த நகரில் பாண்டவர்கள் சிறப்புற நடத்திய இராசசூய யாகம் இனிது முடிந்தது. வந்திருந்த அரசர்களும், பீஷ்மர், விதுரர், துரோணர் முதலானவர்கள் விடை பெற்றுச் சென்றுவிட்டனர். எல்லாரும் சென்றபின், வியாசபகவான், விடை பெற்றுச் செல்ல, யுதிஷ்டிரரிடம் வந்தார். யுதிஷ்டிரர் எழுந்து வணங்கி, தகுந்த ஆசனம் கொடுத்து, அமரச் செய்து, பின் தானும் அவர் அருகில் அமர்ந்தார்.
அப்பொழுது வியாசபகவான், “குந்தி புத்திரனே! பெறற்கரிய சக்கரவர்த்தி என்னும் பெரும் அந்தஸ்தை அடைந் துள்ளாய், குருவம்சமே உன்னால் பெருமை பெற்றது . நெடிது நீ வாழ்க. நான் போவதற்கு விடை கொடுப்பாயாக” என்று கூறினார்.
வியாசரின் அறிவுரை
அப்பொழுது, குலத்துப்பிதாமகரும். குருவுமான வியாசபகவானின், திருப்பாதங் களைத் தொட்டு வணங்கிய யுதிஷ்டிரர், “எம் குலப் பெரியோரே! கொடிய தீச் சகுனங்கள் பல தோன்றியுள்ளதாகவும், அவற்றினால் கெடுதி உண்டாகப் போவ தாகவும், நாரதர் முதலான பெரியோர்கள் கூறியுள்ளார்கள். இப்பொழுது சிசுபாலன் கொல்லப்பட்டதனால், அந்தக் கெடுதி நீங்கிவிட்டதா? (அல்லது) இனிமேல்தான் அக்கெடுதிகள் உண்டாகுமா? எல்லாம் அறிந்த நீங்கள் அதனை எங்களுக்குக் கூறவேண்டும்” எனக் கேட்டார்.
யுதிஷ்டிரர் கூறியதைக் கேட்ட வியாச பகவான், “யுதிஷ்டிரரே! தீச்சகுனங்கள் பல தோன்றியுள்ளது உண்மைதான். இன்னும் பதின்மூன்று ஆண்டுகள் உங்களுக்குப் பெரும் கஷ்டகாலந்தான், க்ஷத்திரியகுலம் அழிவதைத்தான் இத்தீச் சகுனங்கள் காட்டின. பெரும்போர் நடைபெறவுள்ளது. அரசர்களும், வீரர்களும், ஏராளமான பேர் மாண்டு போவார்கள். குருகுல வம்சமே நாசமாகிற பெரும் ஆபத்து வரப்போகிறது. அந்த அழிவிற்கு உன்னை அறியாமல் நீயே காரணமாகப் போகிறாய். நீயும் உன் சகோதரர்களும், கெளரவர்களிடம், பகை கொண்டு பேர் அழிவு நேரும் படியான நிலை ஏற்படப் போகின்றது. எந்த அறிவைக் கொண்டும், இதனைத் தடுக்க முடியாது. மேலும் இனி நடக்கப் போவதை, யாராலும் தடுக்க முடியாது. அதற்காக மனம் கலங்காதே.தைரியமாக இரு; ஐம்புலன்களை அடக்கி, ஜாக்கிரதை யாக நாட்டை ஆண்டு கொண்டிரு” என்று கூறி வாழ்த்திச் சென்றார்.
வியாசர் சென்றபிறகு, யுதிஷ்டிரர் மிகுந்த கவலையுற்றார். தன் சகோதரர்களி டம், வியாச பகவான் கூறியவற்றைச் சொல்லி, “சகோதரர்களே! வியாசர் கூறி யதைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அதிலும் அரசர்கள் அழிவிற்கு நான் காரணமாவேன், என்ற செய்தி என் உள்ளத்தை அரிக்கின்றது. இன் னும் இத்தகைய நிலையில், நான் உயிர் வாழ வேண்டுமா? என எண்ணுகின்றேன்” என்று மனம் நொந்து கூறினான்.
தர்மர் உறுதிமொழி ஏற்றல்
அதனைக் கேட்டு அர்ச்சுனன், “அண்ணா! நீங்கள் மனம் தளர்ச்சி அடைய வேண்டாம் அறிவின் துணைகொண்டு நன்கு சிந்தித்துச் செயல்பட்டால், நிச்சயம் மேன்மை உண்டாகும். குலநாசத்தை தடுக்க முடியும்” என்றான். இதனை மற்றவர்களும், ஆமோதித்தனர். அப் பொழுது யுதிஷ்டிரர் மீண்டும், “தம்பியர் களே! இறைவன் நம்மைக் காப்பானாக. பேரழிவிற்கு நான் காரணமாக இருப்பேன் என்று, நம் குலப்பிதாமகர் வியாசர் கூறியுள்ளார். அவ்வாறு நேராமலிருப் பதற்கு, நான் இன்று சபதம் செய்கின்றேன். இன்று முதல் இன்னும் பதின்மூன்று ஆண்டுகாலம் வரையிலும், என் தம்பியரை யும் மற்ற அரசர்களையும், கடிந்து பேச மாட்டேன். மேலும் என் குலத்தவரின் விருப்பப்படி நடந்துகொள்வேன். பெரும் போர் மனவேறுபாட்டினால்தான் நடக் கின்றது. அந்த மனவேறுபாட்டிற்கு, நான் இடம் கொடுக்கமாட்டேன். அதன்மூலம் பெரும் நிந்தனைக்கும் ஆளாகமாட்டேன். நம் குலப்பிதாமகர் வியாசபகவான் அறிவுரைப்படி, நான் பழிக்கு ஆளாகாமல் மற்ற நம் குலத்தவர் (துரியோதனாதியர்) விருப்பப்படி நடந்து, பூசல் வராமல் தடுப்பேன் .இஃது உறுதி’ என்று கூறி னார்.
இங்கே ஒன்றை நாம் நினைக்க வேண்டி யுள்ளது. பின்னால் வரும் கதையைப் பார்க்கும் போது, தருமர் எடுத்த இந்தச் சபதம்தான் போர்க்குக் காரணமாகின்றது. எனலாம். இந்தச் சபதமே சகுனியும் துரியோதனனும், சூதாட அழைத்ததைத் தருமர் மறுக்க முடியாமல் சூதாடச் செய் தது. அதனால் நாடு, நகரம், தம்பியர், திரௌபதி ஆகிய அனைவரோடு அவர் தன்னையும் பணயம் வைத்துத் தோற்க நேரிடுகின்றது. பின்னர் திரௌபதியைத் துரியோதனாதியர் அவமானப்படுத்தவும் நேரிடுகின்றது. பாண்டவர்கள் கெளரவர் களை அழிப்பதாகச் சபதமும் கொள்ள நேரிடுகின்றது. அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் கொள்ள நேரிடு கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக பெரும் போரும் குல நாசமும் நேரிடு கின்றது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா போட்ட பிச்சையினால் பிழைத்த பரிட்சித்தைத் தவிர கெளரவர், பாண்டவர்கள் பெயரைச் சொல்ல யாருமே இல்லாமல் போய்விட நேர்ந்தது. ஆக, மனிதனுடைய சாதுர் யமும், சங்கல்பங்களும், முயற்சிகளும் விதியின் காரண மாகத்தான் எண்ணிய நல் நோக்கத்திற்கு நேர் விரோதமான முடி வுக்குப் போய் விடும் என்பதற்குத், தருமபுத்திரருடைய இந்த உறுதியான சபதமே, பெரிய அசைக்க முடியாத சான்றா யிற்று எனலாம்.
துரியோதனன் பட்ட அவமானம்
இந்திர பிரத்த அரண்மனையில் தங்கி யிருந்த துரியோதனன், தன் மாமன் சகுனி யுடன் மயன் கட்டிய, அந்த மாபெரும் அழகான அரண்மனையைச் சுற்றிபார்க்க வந்தான். அங்குள்ள கண்ணைக்கவரும் அற்புதமான காட்சிகளையெல்லாம், கண்டு களித்தான்; வியந்தான். ஒரு மண்டபத்தின் நடுவில் அமைந்திருந்த, படிகக்கல்லினால் ஆன தளவரிசை இருக்குமிடத்திற்குச் சென்றான். அதைத் தண்ணீர் என்று தவறாக எண்ணி, தான் உடுத்தி இருந்த ஆடைகளை உயரப் பிடித்துக் கொண்டு, அப்பால் சென்றான். பின்னர்தான், அருமையான படிகக்கல்லினால் ஆன தளவரிசை, என அறிந்து ஏமாந்தான். அதனால் பெரிதும் வருத்தமடைந்தான். பின்னர் அழகான ஒரு நீர்நிலையைப் படிகத்தளவரிசை,என்று எண்ணி அதன் மேல் நடந்து செல்ல முயன்றான். உடுத்தியிருந்த ஆடைகளுடன் தண்ணீரில் விழுந்தான். இரண்டாவது முறையாக ஏமாந்தான். அதோடு அவன் விழுந்ததைப் பார்த்த பீமனும், திரௌ பதியும், ஏவலர்களும், கேலியாகச் சிரிக்க லாயினர். அதனைக் கண்ட தருமர் சிரித்த வர்களைக் கண்டித்து, புதிய ஆடைகளைக் கொடுத்து உபசரித்தார். இது துரியோதன னுக்கு, பெருத்த அவமானமாய்ப் போய் விட்டது. அடுத்து வந்த படிகக்கல் தளவரிசையைத் தண்ணீர் நிறைந்த சிறிய குளம் என்று எண்ணி, துணிகளையெல் லாம் உயரப்பிடித்துக் கொண்டு தாண்ட முயன்று ஏமாந்தான். இதனைக் கண்டும் அங்குள்ளவர் சிரித்தனர். இவை மட்டுமா? படிகக் கதவினால் மூடப்பட்ட வாயிலை, அது வாயில் என்று அறியாமல் அதனைக் கடக்க முயன்றான். அதனால் தன் தலையில் அடிபட்டுக் கீழே விழுந்தான். மற்றோர் இடத்தில், வாயில் கதவைத் திறக்கமுடியாது தடுமாறினான். இவற்றைக் கண்டு அர்ச்சுனன், நகுலன் முதலானோர் சிரித்தனர். அன்று இராமபிரான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, தன்னுடைய வில்லின் மூலம் களிமண் உருண்டையினை கூனியின் இடுப்பில் அடித்தான். அதனை அப்படியே உள்ளத்தில் வைத்து, அவனுக்கு முடிசூட்டுகின்ற காலத்து கைகேயி மூலம் காட்டிற்குப் பதிநான்கு ஆண்டுகள் அனுப்பித், தான் பழி தீர்த்துக் கொண்ட தோடு மட்டுமல்லாது, இராமகாதைக்கே ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி னாள் அந்தக் கூனி. அது போலவே, பாண்டவர்களும், திரௌபதியும், துரியோ தனனுக்கு உதவி செய்யாமல் ஏளனமாகச் சிரித்தது, பின்னால் பெரிய சோதனைகளை அவர்கள் சந்திக்க காரணமாகிவிட்டது. மேலும் இச்செயல், துரியோதனனுடைய பொறாமை என்னும் நெருப்பிற்கு, எண்ணெய் வார்த்தது போலாயிற்று.
துரியோதனனின் பொறாமையும்-கோபமும்
இதனால் துரியோதனன் மிகவும் மனம் நொந்தான். இதுமட்டுமல்லாமல், யுதிஷ்டி ரரது சபாமண்டபத்தில் பல தேசத்து அரசர்கள், வணங்கிக் கப்பம் செலுத்து தலையும், பல அரசர்கள் நண்பர்களாய் இருத்தலையும் காணக்காண, அவன் உள்ளத்தில் பொறாமையும், கோபமும், போட்டிப் போட்டுக் கொண்டு எழுந்தன. மேலும் இராசசூய யாகத்தினால், பாண்ட வர்கள் பெற்ற புகழும், செல்வமும், அவன் உள்ளத்தைப் பெரிதும் வாட்டியது. இந்த மனப் புழுக்க நிலையிலேயே, அவன் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் மாமன் சகுனியுடன் அஸ்தினாபுரம் சென்றடைந்தான்.
அஸ்தினாபுரம் சென்றபின், துரியோ
தனன், மிகுந்த கவலையுற்றவனாய் இருப்பதைக் கண்டு மாமன் சகுனி, “துரியோ தனா! இந்திரபிரத்தத்திலிருந்து வந்தபிறகு, நீ மிகுந்த கவலையுடன் இருக்கின்றாய். என்ன காரணம் ? நான் அறிந்து கொள்ள லாமா?” என்று கேட்டான்.
சகுனியுடன் ஆலோசனை
அதற்கு அந்தத் துரியோதனன், “என் பிரியமுள்ள மாமா! யுதிஷ்டிரன் இராசசூய வேள்வியைச் செய்து பலரும் வணங்கும் படியான பெரிய சக்கரவர்த்தியாகி விட்டான். தேவேந்திரன் போல ஆட்சி புரிகின்றான். வேள்வியின் போது, பல மன்னர்கள் முன்னிலையில் சிசுபால வதம் நடந்தது. அதனால் மற்ற அரசர்கள், பாண்டவர்களின் வலிமையைக் கண்டு அடங்கிப்போய்விட்டனர். எல்லா அரசர் களும், அடங்கி ஒடுங்கி, அவர்களுக்குக் கப்பம் கட்டுகின்றனர். சிசுபாலனோடு, ஜராசந்தனையும், வதம் செய்தார்கள். அதனால் பேரும்புகழும் செல்வமும் பெற்றார்கள். தண்ணீரின் உயரத்திற்கு ஏற்ப உயர்வடைகின்ற தாமரை போன்று, மேலும் மேலும், வளர்ந்து கொண்டே செல்கின்றார்கள். அது மட்டுமல்லாது, இந்திரபிரத்தம் என்ற ஒரு புதிய நகரத்தை உருவாக்கி, அதிலே தங்களுக்கு என்று பிரம்மாண்டமான, அரண்மனை கட்டியுள் ளார்கள். அந்த அரண்மனையைப் பார்க்கச் செல்லும் பொழுது, சில இடங்களில் நானே சற்றுத் தடுமாறினேன். அதைக் கண்டு பாண்டவர்கள் மட்டுமல்ல, அந்தச் சிறுக்கி திரௌபதியும், என்னைப் பார்த்துச் சிரித்தாள். இவற்றையெல்லாம் காணும் பொழுது, என் நெஞ்சு துடிக்கின்றது. என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த அந்தத் திரெளபதியைப், பழிவாங்க வேண் டும் என்ற வெறி என் உள்ளத்தில் எழுந் துள்ளது. அவர்களுக்குக் கண்ணனுடைய பரிபூரண ஆசியும், பீஷ்மர், விதுரர் போன்றவர்களின் நல்வாழ்த்தும் உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்தபின், நான் எவ்வாறு வருத்தப்படாமலிருக்க முடியும்? நான் உயிருடன் இருந்து என்ன பயன்?” என்று கூறி உள்ளம் பொருமினான்.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமா?
இவற்றையெல்லாம் கேட்ட சகுனி, ”துரியோதனா! பாண்டவர்கள் உன் சகோத ரர்கள், அவர்களுடைய செல்வ வளர்ச்சி யைக் கண்டு பொறாமைப் படுதல் கூடாது. தங்களுக்கு நியாயமாகக் கிடைத்த பாகத்தை, அவர்கள் அனுபவிக்கின்றார் கள். மற்றவர்களுக்கு எந்த விதத் துரோக மும் செய்யாமல், தங்கள் பாகத்தை வைத்துக் கொண்டு அதனை அபிவிருத்தி செய்து வருகின்றார்கள். அவர்களுக்குக் கண்ணன் பெருந்துணையாக இருக்கின் றான் என்று சொல்லுகின்றாய். உனக்கு உன் ஆருயிர் நண்பன் கர்ணன் இருக்கின்றானே. மேலும் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, ஜயத்ரதன், போன்றவர்கள் எக்காலத்தும் உனக்கு பக்கபலமாக விளங் குவார்கள். நான் என்றும் உன்னுடன் இருப்பேன் ” என்று நடுவு நிலையோடு பேசுவது போலப் பேசிப்பின் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினான்.
ஆறுதல் வார்த்தைகளைக் கூறிய சகுனி யைப் பார்த்து, துரியோதனன், “மாமா! இவ்வளவு துணைவர்கள் இருக்கும்போது, நாம் ஏன் யுத்தம் செய்து, பாண்டவர்களை இந்திரப்பிரத்தத்திலிருந்து துரத்தக் கூடாது” என்று கேட்டான். அதனைக் கேட்ட சகுனி, “வேண்டவே வேண்டாம். அது ஆபத் தானது. அர்ச்சுனன், ஒருவனை மட்டும். நாம் அனைவரும் சேர்ந்தால் கூட, வெல்ல முடியாது. அப்படியிருக்க போர் என்பது உன்னுடைய எண்ணத்தை எக்காலத்தும் நிறைவேற்றாது. ஆனால் யுத்தமின்றிப் பாண்டவர்களை வென்று, அவர்களுடைய நாடு நகரங்களைப் பறிக்க, ஒருவழி உள்ளது. அது எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றான். அதன்மூலம் அவன் உள்ளத்தில், ஓர் ஆசையை எழுப்பினான். உடனே துரியோதனன், “மாமா! கத்தி யின்றி, இரத்தமின்றி, யுத்தம் செய்யாமல் பாண்டவர்களை வெல்ல வழி உண்டா?” என்று மிகுந்த ஆவலோடு கேட்டான். அதற்கு சகுனி, ”துரியோதனா! நான் சொல்வதை நன்றாகக் கேள். யுதிஷ்டிரன் சூதாட்டத்தில், விருப்பமுடையவள். ஆனால் அவனுக்குச் சரியாக ஆடத் தெரியாது. ஓரளவு தெரியும். எனக்கு நன்றாக ஆடத் தெரியும் என்பது மட்டு மன்று, என்னை யாராலும் வெல்ல முடி யாது. எனவே நாம் அவனை நம்முடன் சூதாட அழைக்க வேண்டும். அவன் ஆட ஒப்புக் கொண்டால், உனக்காக நான் ஆடுவேன். நிச்சயம் ஜெயிப்பேன். அவனு டைய நாட்டையும், செல்வத்தையும், யுத்தமின்றி சூதாட்டத்தில் வென்று, உன்னிடம் ஒப்படைப்பேன். ஆனால் சூதாட உன் தந்தையின் அனுமதி தேவை” என்றான். அதனால் கண்ணிலான் திருத ராஷ்டிரர் பால் கண்ணியமில்லா அனுமதி பெற, துரியோதனனும் சகுனியும் அவர் பால் சென்றனர்.
திருதராஷ்டிரரின் துயரம்
முதலில் சகுனி, திருதராஷ்டிரரை வணங்கி, “அரசர் பெருமானே! துரியோ தனன் முன்னைப் போல உற்சாகமாக இல்லை. மிகுதியான அளவு இளைத் துள்ளான். உள்ளத்தில் துயரம் குடி கொண் டிருத்தலே அதற்குக் காரணம். அவனு டைய துயரத்திற்கு, என்ன காரணம் என்பதை நீங்கள் அறியவில்லை” என் றான். மகன் மனத்துயரத்தில் மூழ்கியுள் ளான், என்பதை அறிந்தவுடன், ஒரு தந்தைக்கு இயல்பாக வரும் மனத்துயரம் திருதராட்டிரருக்கு ஏற்பட்டது. அதனால் அதன் காரணத்தை அறிய விரும்பித் துரியோதனனை நோக்கி, “மகனே! துரியோதனா! நீ ஏன் வருத்தமுறுகிறாய்? உன் வருத்தத்திற்குரிய காரணம் யாது சொல்?” எனக் கேட்டார். அதற்கு துரியோதனன், “அரசே! நான் சரியாக உண்டு, உடுத்து, நீண்ட நாட்கள் ஆகின் றன. பாண்டவர்கள் மேலும், மேலும், புகழும், செல்வமும், மதிப்பும், பெற்று வருகின்ற னர். உயர்ந்த இராசசூய வேள்வியைச் சிறப்பாக முடித்துவிட்டனர். எல்லா அரசர்களையும், தன் கீழ்க் கொண்டு வந்துவிட்டனர். அதனால் சக்கரவர்த்தி என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டனர். நாள்தோறும், மன்னர்கள் பொன்னையும், மணியையும், கப்பமாக வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றனர். மயனால் படைக்கப்பட்ட அழகிய மணிமண்டபம், பல அதிசயங்களைக் கொண்டனவாக உள்ளது” என்று கூறியதோடு, அவன் மேலும் பாண்டவர்கள், திரௌபதி முன்னி லையில், அந்த மணிமண்டபத்தில் படிகக் கற்களால் ஆகிய தரையைக் குளம் என ஏமாந்ததையும், படிகக்கல்லினால் ஆன வாயில் போன்ற சுவரினைக், கடக்க முயன்றபோது அடிபட்டுக் கலங்கி நின்றதையும், மற்றோர் உண்மையான வாயிற்கதவைத் திறக்க வழி தெரியாமல் விழித்ததையும், எடுத்துக் கூறித் தான் அவர்கள்முன் அவமானப்பட்ட பாட்டை எடுத்துக் காட்டினான். என்னைப் பார்த்துச் சிரித்த திரெளபதியைப், பழிவாங்க வேண்டுமென்ற வெறி என்பால் உள்ளது. தந்தையே ! “புகழ்பெற்ற ஒருவனுக்கு ஏற்படுகின்ற இகழ்ச்சியானது, அவனுக்கு ஏற்படுகின்ற மரணத்தைவிட, மோச மானது. அந்நிலையில் தான் நான் உள்ளேன். அதற்கு ஒரே வழி அவர்களைப் போன்று பெருஞ் செல்வமும் புகழும் நான் அடைய வேண்டும். இல்லாவிடில் நான் இறப்பது மேல்” என்று தந்தை மனம் துடிக்கத் துடிக்கப் பேசினான்.
கெடுமதியாளன் சகுனி
இராமாயணத்திற்கு ஒரு கூனி, சூழ்ச்சி செய்து இராமனைக் காட்டிற்கு அனுப்பி யவள். அதன் பின்னர் நடந்த இராம ராவண யுத்தத்திற்கு அவள் காரணமாகவில்லை. இராவணனுடைய தங்கை, சூர்ப்பனகை தான் காரணமானாள். இந்தச் சகுனியோ, மாளாத மாபாரதப்போர் ஏற்படக் காரண மாக அமைந்தான். அதனால் அவனுடைய சூழ்ச்சி கடைசி வரை இருந்தது. அதனால் கௌரவர் முழுவதுமே அழிந்தார்கள். பாண்டவர்களிலும் கண்ணனால் காப் பாற்றப்பட்ட உத்தரையின் சிறு குழந்தை பரிக்ஷித்து மட்டும்தான்; இறுதி வரை சூழ்ச்சி செய்து வந்த அவன், துரியோதனன் வீழ்ந்த அன்றுதான் அவனும் மாண்டான். எனவே இராமாயணத்தில் வரும் கூனியைவிட, இந்தச் சகுனி கொடுமை யானவன் ஆவான். அத்தகைய கெடுமதி யானன், சகுனியின் சூழ்ச்சி இனிமேல்தான் முழுமையாக ஆரம்பமாகிறது. நாகத்திற்கு பல்லில் மட்டும் தான் விஷம் உண்டு. இவனோ, அங்கமெலாம் விஷம் உடைய வன். அத்தகைய தீவினையாளன் சகுனி தான், துரியோதனனிடம், “துரியோதனா! யுதிஷ்டிரன் பெற்றுள்ள செல்வத்தை அடைய விரும்பினால், அதற்கு என்னிடம் ஒரு வழி உள்ளது. சூதாடுபவர்களில் என்னை மிஞ்சியவர்கள் இவ்வுலகில் யாருமில்லை; தருமனுக்கு இந்த ஆட்டம் சரியாகத் தெரியாது. ஆனால் ஆட மட்டும் ஆசை; எனவே கபடமான முறை யில் ஆடி அவனுடைய நாடு, நகரம், செல்வம் அனைத்தையும் கவர்ந்து கொள்ளலாம். அதற்கு முதலில் அவனைச் சூதாட அழைக்க வேண்டும். அதற்குமுன் உன் தந்தையிடம் அனுமதி வாங்கு என்று கூறினான்.
இதனைக் கேட்ட துரியோதனன் தரும னுடன் சூதாடுவதற்குரிய அனுமதியை, தன் தந்தை திருதராட்டிரரிடம் சென்று கேட் டான். ஆனால் திருதராட்டிரர் சூதாடு வதற்கு அனுமதி கொடுக்க தயங்கினார். அதனால் அவர், “மகனே! எனக்கு நீ மூத்தமகன், பட்டத்தரசியின் புத்திரன்; நீண்ட காலம் சிறப்புடன் வாழவேண் டியவன்; அதற்கு நீ பாண்டவர்களைப் பகைத்துக் கொள்ளுதல் கூடாது. தரும வழியில் செல்லுகின்ற தருமபுத்திரனை, ஏன் வீணாகச் சூதாட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்கிறாய். இது நல்ல செயலாக எனக்குப் படவில்லை. மேலும் பாண்டவர் களுக்கு, உன் பேரில் எந்தப் பகையும் இல்லை; பொறாமையும் இல்லை. அப்படி யிருக்க ஏன் இந்த வீண் வேலை?” என்று தன் மகன் நீண்ட காலம் வாழ வேண்டும். என்ற நல்லெண்ணத்தினால் நியாயத்தை எடுத்துக் கூறினார்.
பாண்டவர்களை சூதாட அழைத்தல்
“கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே” என்பார்கள். அதனால் தந்தைகூறிய அறிவுரை, தனயனுக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் அவன், “தந்தை யே! உணவு வகைகளின் சுவை, அவற்றில் மூழ்கியிருக்கும் கரண்டிக்குத் தெரியாது. அது போல நீதி சாஸ்திரங்களில் மூழ்கி யுள்ள நீர்,உலகநடையை அறியாது பேசு கின்றீர். சாதாரண மக்களுக்குப் பொறுமை யும், திருப்தியும், தருமமாகும். அதுமட்டு மன்று; வெற்றி என்பது, அறவழியில் வரவேண்டும் என்பது அவர்களுக்குத்தான். ஆனால் நம்மைப் போன்ற க்ஷத்திரியர் களுக்கு வெற்றியே முக்கியம். அது தர்ம வழியா, அல்லது அதர்ம வழியா, என்பதை ஆராய வேண்டிய அவசியமில்லை. மேலும் பொறுமையும் திருப்தியும்,நமக்கு ஏற்புடையவையல்ல” என்று விதண்டா வாதமாகக் கூறினான். அந்த சமயம் பார்த்து சகுனி, பாண்டவர்களைத் தன்னுடன் சூதாடச் சொல்லி, அதன் மூலம் நாட்டை யும், செல்வத்தையும், கவரலாம் என்று தன் யோசனையைத் திருதராட்டிரர் மனத்தில் படும்படி சொல்லிவைத்தான். மைத்துனன் யோசனைக்குத், தன் தந்தை எதுவும் சொல்லாதிருப்பதைக் கண்ட துரியோதனன் உடனே, தன் தந்தையிடம் “குந்தியின் மைந்தன் தருமபுத்திரனை எங்களுடன் ஆட அந்தத் தருமனிடம் சொன்னால் மட்டும் போதும். அவனைச் சம்மதிக்க வைப்பதை எங்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றான்.
துரியோதனன் கோரிக்கையை ஏற்கவும் முடியாது,நிராகரித்துவிடவும் முடியாத நிலையில் திருதராட்டிரர் தன் மைந்த னிடம், “உன் சிறிய தந்தை விதுரரைப் பார்த்து எந்த முடிவையும் எடுக்கலாம்” என்றார். ஆனால் துரியோதனன் அதனை ஏற்கவில்லை. அதனால் அவன், “விதுரர் சாதாரண தருமத்தைத்தான் உபதேசிப்பார். அது நம் வெற்றிக்கு உதவாது. மேலும் வியாசரும், விதுரரும், நம்முடைய முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குகின்றவர்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்பதும், கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் வீழ்வதும் ஒன்றுதான். அதுமட்டுமன்று; விதுரருக்கும் நம்மிடம் உண்மையான அன்பு கிடையாது. பாண்டவர்களிடம் தான் அவருக்குத் தனி பிரியம். இது எனக்கு நன்றாகத் தெரியும்” என்றான்.
சிற்பிகளுக்கு உத்தரவிடுதல்
அதற்குப்பின் திருதராட்டிரருக்கு, துரியோதனன் பேச்சை ஏற்காமல் இருக்க முடியவில்லை. அதனால், அவர் சிற்பி களை அழைத்து, “சிற்பிகளே! நீங்கள் ஆயிரக்கணக்கான தூண்கள் உள்ளன வாயும், நூற்றுக்கணக்கான வாயில்கள் உள்ளனவாயுமுள்ள ஓர் அழகிய மணி மண்டபத்தைக் கட்டுங்கள். அதன் தள வரிசை, இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டன வாக இருக்கவேண்டும். பார்ப்பதற்கு விண் ணுலகம், மண்ணுலகம், முதலான எல்லா உலகங்களிலுமுள்ளவர்களைக் கவர்கின்ற முறையில் அஃதாவது, இதை விடச் சிறந்தது வேறு எங்கும் இல்லை, என்று வியந்து மூக்கில் ஆள்காட்டி விரலை வைக்கும் அளவில், தோற்றமுடையதாக இருக்கவேண்டும். மண்டபத்தைக் கட்டி முடித்தபின், எனக்கு சொல்லி அனுப் புங்கள்” என்று கட்டளையிட்டார். அதன் பின் தம்பியான விதுரரை அழைத்து வரும் படி ஏவலர்களை ஏவினான். ஏவலர்களும், மன்னருடைய அழைப்பைக் கூற, விதுரர் அழைப்பை ஏற்றுத் தமையனைச் சந்திக்கப் புறப்பட்டார். புறப்பட்ட அவர் நடந்த எல்லாவற்றையும் அறிந்து, தன் தமைய னைச் சந்தித்தார். திருதராட்டிரரும் நடந் ததையெல்லாம் தம்பியிடம் கூறினார். உடனே விதுரர், தன் தமையனாரின் பாதங் களில் விழுந்து வணங்கி, “அண்ணா! நீர் செய்கின்ற ஏற்பாடு நல்ல விளைவை ஏற்படுத்தாது. சூது, என்பது மிக மோச மானது. அரசன் ஒருவன் தான் விரும்பு கின்ற தொழிலாகச், சூதினை மேற் கொள் வானாயின் அத்தகைய மன்னனை புகழ், கல்வி, செல்வம் ஆகியன மட்டுமல்லாது நல்ல உணவும், உடையும், கூட சாராவாம். அதோடு சூதாட்டத்தில் வெற்றி வந்தாலும், அவன் அதனை விரும்பக்கூடாது. ஏனெ னில் தூண்டிலிலுள்ள இரும்புத் துண்டை தனக்குரிய இரை, என்று கருதி விழுங்கு கின்ற மீன் போன்று அவர்களுக்கு அழிவு நிச்சயம். மேலும் அதன் காரணமாகக் கலகம் ஏற்படும்; குலமும் நாசமாகும். அதனால் தயவு செய்து சூதாட்டத்திற்கு அனுமதி கொடுக்காதீர்கள்” என்று வேண்டிக் கொண்டார்.
மகனுக்கு அறிவுரை
மகன் மேலுள்ள ஆசையினால் திருதராட் டிரர் விதுரர் கருத்தை ஏற்கவில்லை. அதனால் அவன், “விதுரா! நல்லதோ, கெட்டதோ, சூதாட்டம் நடக்கட்டும். அதனைத் தடுக்கக் கூடிய வலிமை என்பால் இல்லை. எல்லாம் விதியின் கட்டளை. அதனை யாராலும் தடுக்க முடியாது. எனவே யுதிஷ்டிரனை அழைத்து வா. அவனிடம் இங்கு சூதாட்டம் நடைபெறப் போகின்றது, என்பதையும் சொல்லிவிடு” என்றார். புறக்கண்ணோடு அகக்கண்ணும் இல்லாத திருதராட்டிரர், விதுரர் சென்ற பின் துரியோதனனை அழைத்து, “மகனே சூதுவேண்டாம். சூதினால் விரோதமே வளரும். பெரும் அழிவு நேரும் என நான் அஞ்சுகின்றேன்” என்று எவ்வளவோ கூறிப்பார்த்தார். ஆனால் துரியோதனன் முரட்டுப் பிடிவாதத்திற்கு முன், அவருடைய அறிவுரைகள் எல்லாம் பயனற்றுப் போயின. அரசனின் கடமை களையும், விதியின் வலிமையையும் திருதராட்டிரர் நன்கு அறிந்திருந்தும், புத்திரன் மேலுள்ள அளவற்ற பாசத்தினால் மனவுறுதியற்று, அரைமனதோடு மகன் சொல்லுக்கு இசைந்தார்.
திருதராட்டிரர் கட்டளைப்படி, விதுரர் இந்திரபிரத்த நகருக்குச் சென்று யுதிஷ்டிரர் மாளிகையை அடைந்தார். விதுரரின் வருகையை அறிந்த யுதிஷ்டிரர், ”பெரி யோனே! உம்முடைய முகத்தில் கவலைக் குறிகள் தென்படுகின்றன. மகிழ்ச்சியற்ற வராய் விளங்குகின்றீர், காரணம் என்ன? பெரியப்பா முதல் அனைவரும் நலமா? தாங்கள் இங்கு வந்த காரியம் யாது?” என்று கேட்டார்.
விதுரர் அதற்கு, ”மகனே! யுதிஷ்டிரரே! அனைவரும் நலமாகவே உள்ளனர். நீங்கள் கட்டியதைப் போன்ற எழில் வாய்ந்த மணி மண்டபம் ஒன்று, கெளரவர்கள் அஸ்தினா புரத்தில் நிர்மாணம் செய்துள்ளார்கள். அம்மண்டபத்தின் அழகை, நீர்,நின் தம்பியருடன் நேரில் வந்து காணவேண்டும் என்று, அவர்கள் விரும்புகிறார்கள். அத்துடன் நீ அவர்களுடன் சூதாடவும் வேண்டுமாம். இதை உன்னிடம் தெரி விக்கும்படி மன்னர் திருதராட்டிரர் எனக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்றார்.
விதுரரின் கருத்தை ஏற்ற தர்மர்
“சூதாட்டம் என்பது நாசத்தை விளை விக்கக் கூடியது; நல்லவன் சூதாட்டத்தில் இறங்கமாட்டான். ஆனால் நாங்கள் உங்கள் சொற்படி நடப்பவர்கள். உங்கள் கருத்து யாது? அதன்படி நடக்கிறோம்” என்றார் யுதிஷ்டிரர்.
விதுரர்,”அறநெறியில் செல்லும் அறி வுடை மகனே! சூது என்பது நாசத்தை விளைவிக்கும் என்பது, யாவரும் அறிந்த செய்தி; அதனால் அதனைத் தடுப்பதற்கு முயற்சி செய்தேன். என்னால் முடிய வில்லை. இப்பொழுது உங்களை அரசர் அழைத்திருக்கின்றார்; உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்” என்றார்.
அறநெறி தவறாத யுதிஷ்டிரர் தன் னிலையிலிருந்து தாழ்ந்து, விதுரர் கூறியதை ஏற்றுக் கொண்டு தன் தம்பியர் களுடனும், திரௌபதியுடனும்,ஏவலர் களுடனும் புறப்பட்டு ‘விதிமுன் செல்ல, தருமம் பின் இறங்கி ஏங்கிக் கை பிசைந்து நிற்க’ அஸ்தினாபுரம் புறப்பட்டார். அற நெறியாளனாகிய தருமபுத்திரர் சூதாட் டத்திற்கு ஒப்புக்கொண்டு ஏன் சென்றார் என்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம். (1) விதிபிடர் பிடித்து உந்தியது, (2) யுதிஷ்டிரருக்குச் சூதாட்டத்தில் மோகம் உண்டு, (3) அரச குலப் பண்பாட்டின்படி சூதாட்டங்களுக்கோ, வேறு பந்தயங்க ளுக்கோ, விடுத்த அழைப்பை மறுத்தல் கூடாது, (4) “பெரும் போர் வருதற்குத் தான் காரணமாயிருப்பேன்” என்று வியாசர் கூறிச் சென்றதால், அதனைத் தடுப்பதற்காக ”என் குலத்தவரின் விருப்பப்படி நடந்து கொள்வேன். மாறுபட்டு நடந்து, போருக்குக் காரணமாக இருக்க மாட்டேன்” என்று (தருமபுத்திரர்) எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை.
பாண்டவர்கள் அஸ்தினாபுரம் செல்லல்
ஆறுகளையும், பெரிய காடுகளையும், அழகிய சோலைகளையும், கடந்து பாண்ட வர்கள் அஸ்தினாபுரம் அடைந்தனர். அங்கு ஒரு விடுதியில் தங்கினர். அப்போது விதுரர் தர்மரிடம் வந்து, “மகனே! தீய எண்ணத் துடன், உன் பெரிய தந்தை உன்னை அழைத்துள்ளார். சூதாட்டத்தின் மூலம் உன் நாட்டையும், செல்வத்தையும், அபகரித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். நீ ஜாக்கிரதையாய் இரு” என்று கூறினார். அதற்குத் தருமபுத்திரர், “நீங்கள் கூறியது உண்மையாக இருக்கலாம்,என்றாலும் என்னை அழைத்தபின் நான் வாராமல் இருப்பது முறையன்று. என்னால் தீங்கு யாரிடத்தும் நேரிடக் கூடாது என்பதற்காக. மாறுபட்டு நடந்து கொள்ளமாட்டேன். என்று நான் உறுதி பூண்டுள்ளேன். எல்லாம் நன்மையாக முடியட்டும்” என்றார்.
அதன்பின் தருமபுத்திரர், திருதராட்டி ரரால் அழைக்கப்பட்டார். அதன்படி சென்று, திருதராட்டிரரைச் சந்தித்தார். பின்னர் பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானவரைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் ஆசி பெற்றார். அதன்பின் கர்ணன், துரியோதனன், துச்சாதனன், ஜயத்ரதன் போன்றவர்களைச் சந்தித்தார். அடுத்துக் காந்தாரியைக் கண்டு வணங்கி ஆசி பெற்றார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. பாண்டவர்கள் உறக்கத்தினின்று எழுந்தனர். காலைக் கடன்களை முடித்தனர். நீராடி, உணவு உண்டனர். பின்னர் சூதாட்டக்காரர்கள் அழைக்க, அவர்கள் சபாமண்டபத்தை அடைந்தார்கள்.
மண்டபத்தில் நுழைந்த தர்மர் தன் தம்பியருடன் வணங்க வேண்டியவர்களை வணங்கி, வாழ்த்த வேண்டியவர்களை வாழ்த்தி, ஆசி வழங்கி, சந்திக்க வேண்டிய மன்னர்களைச் சந்தித்து நலம் விசாரித்து, பின்னர் தத்தமக்குரிய ஆசனங்களில் தம் தம்பியருடன் அமர்ந்தார்.
சகுனியின் மாயச் சூது
அப்போது காந்தார நாட்டு மன்னன் சுபலன் மகன் சகுனி, தர்மரைப் பார்த்து, ”அரசே! சபை நடுவில் சூதாட்டத்திற்குரிய துணி விரிக்கப்பட்டிருக்கின்றது. எல்லோ ரும் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றோம்” என்றான்.
அதற்குத் தரும புத்திரர், ”அரசே! சூது என்பது பாவச்செயல்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன், தனக்குப் பொழுது போக்குத் தொழிலாகச் சூதினைக் கருதுவானாயின் அவனிடத்து, புகழ், கல்வி, செல்வம்,நல்லுணவு, நல்லுடை என்ற ஐந்தும் தங்கா என்று பெரியோர் கூறியுள்ளதை அறியவில்லையா? சூதாட்டத்தில் வெல்லும் ஆற்றலுடையவன் ஆனாலும் அதனை விரும்பக்கூடாது என்று அறவோர்கள் சொன்னதை நீ கேட்டதில்லையா? எனவே சூது பெரியதீமைபயப்பது. உண்மையான வீரனுக்குச் சூதாடுவது அழகாகாது. போரில் வெல்லுவதே ஒழுங்கான முறையாகும்; எனவே தவறான வழியில் சென்று, என்னை வெல்ல வேண்டாம்” என்றார்.
உடனே சகுனி, “அரசே! அறிவை உபயோகித்து, சூதில் வெற்றி பெறலாம். இதில் எந்தவிதக் குற்றமுமில்லை. பய மின்றி பந்தயம் வைத்து, என்னுடன் விளையாடலாம் வா” என்றான். அதற்குத் தருமபுத்திரர், “யுத்தம் மூலம் பெறுகின்ற வெற்றியே, உண்மையான வெற்றி. சூதாட் டத்தின மூலம் பெறுகின்ற வெற்றி, உண்மையான வெற்றி ஆகாது ; அது அற நெறிக்கு மாறானது. பிறரை ஏமாற்றக் கூடியது. மேலும் இச்சூதாட்ட வீரர்களை யாரும் விளையாட்டு வீரர்களைக் கவுரவிப்பது போலப் போற்றுவதில்லை. மாறாகச் ‘சூதாடிகள்’ என்றே இகழ்வர்” என்றார்.
இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்த தர்மர்
இப்பொழுது யுதிஷ்டிரர் உள்ளத்தில் பழக்க தோஷத்தினால் ஆடலாம் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தது. மற்றொரு பக்கத்தில், தருமமன்று என்று எண்ணி ஆடக்கூடாது என ஓர் எண்ணம் இருந்து, ஆடுவதைத் தடுத்துக் கொண்டு இருந்தது. ஆக, இருதலைக்கொள்ளி எறும்பு போல, தத்தளித்துக் கொண்டிருந்த அவர் மன நிலையை நன்கு புரிந்து கொண்ட, அசகாய சூரனான சகுனி, “சூதாடுவதை அதர்மம் என்று நினைப்பாயாயின், அல்லது உன் உள்ளத்தில் என்னுடன் ஆடப்பயம் இருக்குமாயின், நீ ஆடவேண்டாம்.தர்மத் தின் பேரில் சாக்குப் போக்கு சொல்ல வேண்டாம்” என்று ஒரு போடு போட்டான்.
மனவுறுதியை இழந்தவாறு, “அரசே, சூதாடலாம் வா என்று என்னை அழைத்து விட்டீர். அழைத்த பின்னர் மறுப்பதில்லை. என்பது நான் கொண்ட பிரதிக்ஞை. விதியின் கைப்பிடியில் நான் இப்பொழுது உள்ளேன். நடப்பது நடக்கட்டும். நான் இப்போது யாரோடு ஆடவேண்டும் சொல்க” என்றார் துன்பப்படுகுழியில் விழப்போகும் அந்த யுதிஷ்டிரர்.
அதற்குத் துரியோதனன், “அரசே! பந்தயப் பொருளை நான் வைப்பேன். என் மாமா சகுனி எனக்காக ஆடுவார்” என்றான். தருமபுத்திரர் துரியோதனன் ஆடினால், அவனை எளிதில் தோற்கடித்து விடலாம் என்று இதுகாறும் எண்ணி யிருந்தார். சகுனி ஆடுவான் என்று சொல்லப்பட்டதனால், அவனுக்குரிய சாமர்த்தியத்தை எண்ணித் தயங்கியபடியே, “ஒருவர் பந்தயம் வைப்பது, அவருக்காக மற்றவர் ஆடுவது, என்பது எனக்குத் தவ றாகத் தோன்றுகின்றது” என்றார். உடனே, சகுனி, “உனக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் சாக்குப்போக்குச் சொல்கின்றாய்” என்று கூறி அவரை இகழ்ந்தான். தன்னால் சகுனியுடன் ஆடி அவனை வெல்ல முடியும். என்ற வீண் நப்பாசை தருமர் உள்ளத்தில் எழுந்ததனால், பொல்லாத சகுனியுடன், தீங்கு தரக்கூடிய பொல்லாத சூதாட்டத்தை ஆட ஒத்துக் கொண்டார். “அதர்ம சாத்தான் குடியேறப் போகின்றது. இனி இங்கிருத்தல் கூடாது ” என்று எண்ணி, தருமமகள் கண்ணீரும் கம்பலை யுமாய், அம்மண்டபத்தைவிட்டு வெளியேறினாள்.
அந்த மணிமண்டபம் நிறையக் கூட்டம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் நடுவு நிலையோடு இருக்க வேண்டிய திருதராட்டிரர் சுயநலப்பேய் பிடித்தாட்ட ஒருபக்கமே சார்ந்து, அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர், போன்றவர்கள் நடக்க இருக்கும் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது,செயலற்று அமர்ந்திருந்தார்கள். அரசிளங் குமாரர்கள், அடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்று அறிய, ஆவலோடு இருந்தார்கள்.
இழிவு தரும் சூதாட்டம் தொடங்கியது
ஆட்டம் துவங்கியது. முதலில் யுதிஷ் டிரர், ”அரசே! என்னுடைய மாலைகளில் மிகவும் சிறப்புடையதும், பொற்கட்டி யினால் உண்டாக்கப்பட்டதுமான, விலை யுயர்ந்த இந்த இரத்தினமாலையை என்னு டைய பந்தயப் பொருளாக வைக்கிறேன். இதற்குத் தகுதியான பொருளை எதிர்ப் பந்தயமாக வைத்து ஆட்டத்தைத் தொடங்கலாம்” என்றார்.
அதற்குத் துரியோதனன், “இரத்தினங் களுக்கும் விலையுயர்ந்த பொருள்களுக்கும் என்னிடத்தில் குறைவில்லை; நானும் அதே போன்ற இரத்தின மாலை வைக் கிறேன்” என்றான். சூதாட்டத்திலே வல்ல சகுனி, காய்களை எடுத்து உருட்டினான். ‘ஜெயித்தேன்’ என்றான்.
உடனே யுதிஷ்டிரர், “மோசமான இந்த ஆட்டத்தில் என்னை வென்றுவிட்டாய்; போகட்டும், பொற்காசுகள் நிரம்பிய பெட்டிகளையும், தங்கக்கட்டிகளையும், பந்தயமாக வைக்கிறேன்” என்றார் தர்மர். சகுனி உடனே காய்களை உருட்டினான். அவற்றையும் வென்றேன்’ என்றான்.
உடனே யுதிஷ்டிரர், புலித்தோலினால் மூடப்பட்டதும், சதங்கை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வெண்மை நிறமுடையதும், எட்டுக் குதிரைகளால் இழுக்கும் தன்மையுடையதுமாகிய, தன்னு டைய அழகான தேரைப் பந்தயப் பொரு ளாக வைத்தார். வஞ்சனையே உருவான சகுனி, அதனையும் வெற்றி கொண்டான். இல்லை, இல்லை தருமர் அதனையும் தோற்றார். வெண்மை நிறமுடைய குதிரை களை வைத்தார் தோற்றார். யானைகள், பசுக்கள், ஆடுகள், இலட்சக்கணக்கான பணிப்பெண்கள், முதலான எல்லாவற்றை யும் படிப்படியாக வைத்தார். படிப்படியாக எல்லாவற்றையும் தோற்றார். பின்னர் அர்ச்சுனன் வசம் இருந்த, கந்தர்வக் குதிரையை வைத்தார். அதனையும் இழந் தார். யுதிஷ்டிரர் இன்னும் பல விலையு யர்ந்த பொருள்களை, அடுத்தடுத்து வைத்து ஆடி, அடுத்தடுத்து, தோற்றுப் போனார். வெற்றிக் கொண்டாலும், ஆட்டத்தை நிறுத்தமாட்டான். ஏனெனில் இன்னும் வெற்றி பெற வேண்டுமென்ற பேராசை. தோல்வியுற்றவனும், ஆட்டத்தை நிறுத்த மாட்டான். ஏனென்றால் இழந்த பொருள் களை மீட்கவேண்டுமென்ற வெறி. அந்த நிலையில் தான், இங்கு சகுனியும் தருமரும் ஆடி வந்தார்கள். ஆட்டமானது நிற்கவே இல்லை. வெற்றிக் களிப்பிலே துரியோதன னும் சகுனியும் சூதாடலாயினர். தருமரோ இழந்ததை மீட்க வேண்டுமென்ற வெறியிலே சூதாட்டத்தை நிறுத்தாது ஆடலானார்.
விதுரர் மன்றாடல்
இதனைக் கண்ட விதுரர், மனங்கொதித் தார். உடனே திருதராட்டிரரிடம் சென்றார். அவரை வணங்கினார். ”அரசே! ஆட்டத்தை நிறுத்த உத்தரவிடுங்கள். அதர்மம், இங்கு தலைவிரித்தாடுகின்றது.
துரியோதனனின் இந்த வெறிச்செயல் அவனுக்கு மிகுந்த மோசமான கெடுதலை யுண்டு பண்ணும். ஏன்? அது குலநாசத் திற்கே, வழி வகுக்கலாமென அஞ்சுகின் றேன். மலைச்சரிவை எண்ணாமல் மழைக் காலத்திலே தேன் எடுப்பதிலே குறியா யுள்ளவன், அந்த மலைச்சரிவினால் அழிந்து போவான். அது போலப் பின் வருகின்ற பெருங்கேட்டினை நினைக்காது துரியோதனன் தான் அழிவதற்குரிய செயல் களையே ஆக்கபூர்வமாகச் செய்து வரு கின்றான். இதன் காரணமாகக் கெளரவர் முழுவதுமே அழிந்து போக வேண்டி யிருக்கும்.
”தான் வீழ்வதற்குத் தானே பெரும் பள்ளத்தைத் துரியோதனன் தோண்டிக் கொண்டிருக்கின்றான். அருள் கூர்ந்து அரசே! நான் பணிந்து கேட் கின்றேன். ஆட்டத்தை நிறுத்த உத்தர விடுங்கள். மகனுக்கு அடுத்தடுத்து சூதாட்டத்தில் வெற்றி உண்டாகின்றது என்ற மகிழ்ச்சியில் திளைக்காதீர்கள். நாளை உங்கள் மகனுக்கு அடுத்தடுத்து பேராபத்து நேரும் போது உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தடுக்கவும் முடியாது. இந்த மகிழ்ச்சி குறுகிய காலமே தான் நிற்கும். அதனால் முதலில் கேடு கெட்ட சகுனியை அவன் நாட்டுக்கு அனுப்புங்கள். பாண்டவர் களிடம் நீங்கள் பாரபட்சமாக நடந்து கொள்ள வேண்டாம்” என்று பலவாறு மன்றாடினார்.
சுயநலப் பேய் பிடித்தாட்டுகின்ற திருத ராட்டிரரோ வாய் மூடி மௌனியாகவே இருந்தார். துரியோதனன், விதுரர் கூறிய தைக் கேட்டு மிகவும் கோபங்கொண்டு, ”விதுரரே! உம்மிடத்தில் நடுவு நிலைமை என்பதே இல்லை. எப்பொழுதும் எங்களை இகழ்ந்தே பேசுகின்றீர். பாண்டவர்க ளிடத்தில்தான் உங்களுக்கு எப்பொழுதும் பிரியம். அவர்களைத்தான் எப்பொழுதும் புகழ்ந்து பேசுகின்றீர்; உங்களை எங்க ளோடு சேர்த்து வைத்திருப்பதானது பாம்பை மடியில் வைத்திருப்பது போன்ற தாகும். எங்களுக்கு எதிராகப் பேசி எங்கள் கோபத்திற்கு ஆட்பட வேண்டாம்” என்று கோபத்தோடு கூறினான்.
விதுரரின் கோபம்
விதுரர் அதனைக் கேட்டு, துரியோத னனை நோக்கி, “மகனே! இனிக்க இனிக்கப் பேசி குழி தோண்டுபவர்களைத்தான் நீ நம்புகின்றாய். ஆனால் இடித்து நன்மையானவற்றை எடுத்துச் சொன்னால் நீ அதனை ஏற்க மாட்டாய். உண்மையை அறிந்து சொல்லுகின்றவர்களது அறிவை யும் அழித்து, தானும் அறியான் ஆயினும் அதற்காகத் தளர்ச்சியடையாது குற்றம் செய்கின்ற மன்னனுக்கு உறுதியாயின வற்றை எடுத்துக் கூறல் அமைச்சனுக்குக் கடமையாகும். அதனைத்தான் நான் செய் கின்றேன். ஆனால் அது உனக்கு வேப்பங் காய் போலக் கசக்கிறது. என்னுடைய கடமை என்பது ஒன்றுண்டு; அதனைத்தான் செய்து வருகின்றேன். தவறு கண்ட விடத்துச் சுட்டிக் காட்டுகின்றேன். அது உங்களுக்குத் தீயதாகப் படுகின்றது அதற்கு நான் என்ன செய்ய முடியும் ? நீங்கள் இருவருமே செல்வமும் புகழும் பெற்று வாழவேண்டுமென்பது தான் என் விருப்பம். அதற்காக நீ செய்வதற்கெல்லாம் நான் தாளம் போட்டுக் கொண்டிருக்க முடியாது” என்று சற்று ஆவேசமாகக் கூறினார்.
அதே நேரத்தில், காரியத்திலே கண்ணா யிருக்கும் சகுனி, யுதிஷ்டிரரைப் பார்த்து, ”யுதிஷ்டிரரே! நீ பெரும்பொருளை இழந்து விட்டாய். மேலும் பந்தயம் வைப்பதற்கு ஏதேனும் பொருள் உள்ளதா?” என்று கேட்டார். எப்படியாவது இழந்த பொருளை மீட்க வேண்டும் என்ற வெறி யிலே இருக்கின்ற யுதிஷ்டிரர் விடுவாரா? உடனே அவர், ‘லட்சம் கோடிக்கு மேல் பொருள் உள்ளது. அதைப் பந்தயப் பொரு ளாக வைக்கிறேன்” என்றார் ஆக்ரோஷ மாக. சூதாட்டத்தில் சாந்தமாயிருப்பவ ருக்கும் ஆக்ரோஷம் வந்துவிடும். அந்த நிலையில்தான் தருமர் இருந்தார் என்ப தனை எண்ணிப் பார்க்க வேண்டும். அவற்றையும் சகுனியிடம் இழந்தார். பின்னர், யுதிஷ்டிரர், “சிந்து நதியின் கிழக்கே பர்ணாசி என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பசுமந்தைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், குதிரைக் கூட்டங்கள் முதலானவற்றையும் பந்தயப் பொருளாக வைக்கிறேன்” என்றார். சகுனி அவற்றையும் ‘ஜெயித்தேன்’ என்றான்.
அனைத்தையும் இழந்த தருமர்
அதன்பின் யுதிஷ்டிரர், “இந்த நாடும் நகரமும், அதில் வாழும், மக்களும் பிற உயிர்களும் என்னுடைமைகள்; அவற்றை யும் பந்தயப்பொருளாக வைக்கிறேன் ” என்றார். அவற்றையும் ‘வென்றேன்’ என்றான் சகுனி. யுதிஷ்டிரர் சளைக்க வில்லை. “அதோ கரிய நிறமும், சிவந்த கண்களும், பெரிய தோள்களும், நெடிய கைகளும் உடைய நகுலனைப் பணயம் வைக்கிறேன்” என்றார். மாயச் சதி வல்ல சகுனி ‘அவனையும் வென்றேன்’ என்றான். அடுத்து, “தர்மங்களை அறிந்தவன்; ஞானவான்; மிகுந்த புலமை பெற்றவன்; சகாதேவன் என்னும் பெயரினன் என் இளையதம்பி”இவனைப் பந்தயப் பொரு ளாக வைப்பது தவறு என்று தெரிந்தும் வைக்கின்றேன்” என்றார். அடுத்த விநாடி தம்பி சகாதேவனை இழந்தார்.
யுதிஷ்டிரர் எங்கே சூதாட்டத்தை நிறுத்தி விடுவாரோ என்ற அச்சத்தில் அந்தத் தீய சகுனி அடுத்த விநாடியே, “தருமபுத்திரரே! உன்னுடைய மதிப்பில் மாத்ரி மைந்தர்கள், குந்தி மைந்தர்களை விடத் தாழ்ந்தவர்கள் போலும்! அதனால் அவர்களை வைத்து ஆடமாட்டாயா?” என்று கேலியாகக் கூறினான்.
இதனைக் கேட்டவுடன் யுதிஷ்டிரர் கோபங்கொண்டு, ” ஏ மூடனே! உன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைத்தாய் போலும்! மேலும் என்னு டைய தர்ம நெறியை நீ அறியவில்லை. அதனால்தான் எங்களிடையே பிரிவுணர்ச் சியை உண்டாக்குகிறாய். உன் ஆசையில் மண் விழத்தான் போகின்றது” என்று கூறிய அவர், “பகைவர்களை ஒரே அம்பில் வெற்றி கொள்பவன்; யுத்தத்தில் எங்களைக் கரை சேர்க்கும் நாவாய் போன்றவன்; வெற்றியைத் தவிர வேறு அறியாத விசயன்; பந்தயப் பொருளாக வைக்கத் தகுதியற்ற மிக உயர்ந்தவன்; அந்த அர்ச்சு னனைப் பந்தயப் பொருளாக வைக்கி றேன்” என்றார். அதற்காகவே காத்திருந்த சகுனி தாமதிக்காது காயை உருட்டினான். சற்றும் தாமதிக்காது ‘அர்ச்சுனனை வென் றேன்’ என்றான். துரதிருஷ்ட வெள்ளம் யுதிஷ்டிரரை அடித்துச் செல்லலாயிற்று. ஆனாலும், அவர் அதனையும் சமாளித்துக் கொண்டு,கண்களில் கண்ணீர் மல்க, ”போரில் யானை போன்றவன்; அவ மதிப்பை ஒருபோதும் சகியாதவன். அரசர் களுக்கு அச்சத்தை உண்டாக்கும், வச்சிரா யுதம் ஏந்திய இந்திரன் போன்றவன். வலிமைக்கு ஈடில்லாதவன். அத்தகைய பீமனைப், பந்தயமாக வைக்கின்றேன்” என்றார். உடனே சகுனி காயை உருட்டி னான்.’வென்றேன்’ என்றான்.
தன்னையே பந்தயப் பொருளாக்கிய தர்மர்
”இன்னும் ஏதாவது பொருள் இருக் கிறதா” என்று மகிழ்ச்சியாகக் கேட்டான் வஞ்சனைச் சகுனி. “நான் இருக்கின்றேன். என்னைப் பந்தயப் பொருளாக வைக்கின் றேன். தோற்றால் நான் உங்கள் அடிமை” என்றார் யுதிஷ்டிரர். உடனே சகுனி காயை உருட்டினான், அறம் சாய்ந்தது, மறம் தலை நிமிர்ந்து ஆடியது. சகுனியும் ‘வெற்றி கொண்டேன்” என்றான். அதன் பிறகு சகுனி சபையின் நடுவில் நின்று கொண்டு, பாண்டுபுத்திரர்கள் ஐவர் பெயரையும் வரிசையாக கூறி, வரிசையாக நிற்க வைத்து, அவர்களைச் சுட்டிக்காட்டி, ‘எனக்கு நியாயப்படி இவர்கள் அடிமை யானார்கள்’ என்று அச்சபையோர் முன்னிலையில் ஆரவாரத்துடன் பிரகடனம் செய்தான். சபையோர் கலங்கலாயினர்.
கலங்கும் சபையோரை மேலும் கலங்கச் செய்யச் சகுனி யுதிஷ்டிரரைப் பார்த்து, “யுதிஷ்டிரரே! நீ இழக்காத பொருள் இன்னும் ஒன்று உள்ளது. மின்னும் அமுதம் போன்றவள்; பாஞ்சாலன் தவப் புதல்வி, உங்களின் தேவி. பாஞ்சாலி. அவளை ஏன் சூதாட்டத்தில் வைக்கலா காது; வெற்றி கொண்டால், இழந்த எல்லாவற்றையும் மீட்டுக் கொள்ளலாம்” என்று ஆசைக்காட்டினான். அந்த ஆசைக்கு மயங்கினார் யுதிஷ்டிரர்.
பாஞ்சாலியைப் பணயம் வைத்தல்
“பாஞ்சால நாட்டின் தவப்பயனை, ஆவியில் இனியவளை, ஒவியம் நிகர்த்தவளை, தெய்வீக மலர்க்கொடியை, வடிவுறு பேரழகினை, ஆணி முத்தினை, சூதினில் பணயம்’என்றே அந்தக் கோமகளை, அந்தக் கோமகன் தருமர் குறித்திட்டார். வேள்விப் பொருளினையே புலை நாய் மென்றிட வைத்தல் போல், பொன் மாளிகை கட்டி, அதில் பேயினைக் குடியேற்றல் போல், ஆள் விற்றுப் பொன் வாங்கியே, செய்த அணிகலனை ஓர் ஆந்தைக்குப் பூட்டுதல் போல், உயிர்த் தேவியை, ‘அந்தோ! சீ, சீ,’ எனப் பல்லோர் இகழ, அந்தக் கோமகன் நெறி பிறழ்ந்து தாயம் ஆடி கீழ்மக்கட்கு ஆளாக்கினார். எங்கே இது அடுக்கும் என்றனர் மண்ண வரும் விண்ணவரும், சபையோர் நிலை கலங்கி நின்றனர். சான்றோர் பேய் அரசாட்சி செய்யப் போகின்றது. சாத்திரங் களைப் பிணந்தான் தின்னும்” என்றனர். பீஷ்மரும், துரோணரும், விதுரரும் செய்வ தறியாது கலங்கி நின்றனர். உடனே துரியோதனன் நெறி முறை தவறி துள்ளி எழுந்து, விதுரரை நோக்கி, ”போய்ப் பாண்டவர்களுக்குப் பிரியமான அந்தப் பாஞ்சாலியை அழைத்து வருக. எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணாக, இனி இருக் கட்டும்” என்று ஆணவத்தோடு கூறினான்.
விதுரர் கண்டிப்பு
அதனைக் கேட்டு விதுரர், “மூடனே, தலைக்கனம் வந்து ஆடாதே. யமன் வீட்டுக் கதவைத் தட்டாதே! கயிற்றினால் கட்டப்பட்டுப் படு குழியில் தொங்கு கின்றாய்; அது தெரியாமல் மூடனைப் போலப் பேசுகின்றாய். வெற்றி வரவர அடக்கம் அதிகரிக்க வேண்டும். உனக்கோ ஆணவம்தான் ஏறிக் கொண்டே இருக் கின்றது. குருகுலப் பெருமைக்கேற்ற பேச்சுகள் உன் வாயிலிருந்து வரவில்லை; தகாத பேச்சுகள்தான் அடுக்கடுக்காக வெளிவருகின்றன. இது உன் அழிவுக்கு அறிகுறி ” என்று கண்டித்தார். பின் சபையோரைப் பார்த்து, “சான்றோர்களே! அமைச்சர் பிரதானிகளே! தருமபுத்திரன் தன்னை இழந்தபின் திரெளபதியை பணயம் வைக்க அவனுக்கு உரிமை யில்லை. இதனை அறிந்தும் அறியாதவன் போல நடித்து, கற்பின் கொழுந்தாகிய திரெளபதியை அவமானப்படுத்த எண்ணு கின்றான். திரெளபதியை வம்புக்கு இழுத் தால், தங்களின் மரண நாளை இப்பொழுதே எழுதிக் கொண்டார்கள் என்றுதான் அர்த்தம். என்னுடைய சொற் களை மதிக்காமல், இந்தத் திருதராட்டிரன் புத்திரர்கள் நரகத்துக்கு வழிதேடிக் கொள்கின்றார்கள்” என்று கோபமாகக் கூறினார்.
துரியோதனன் விதுரர் சொன்னதைக் கேட்டுச் சினங்கொண்டு, அவரிடம் மேலும் பேசாமல், தன் தேரோட்டி பிரதி காமியை அழைத்து, “தேர்ப்பாகனே! இந்த விதுரர், எப்பொழுதும் எங்கள் மேல் பொறாமை கொண்டவர். பாண்டவர்பால் அன்பு கொண்டவர்; அவர் அப்படித்தான் பேசுவார், சாபம் கொடுப்பார். அதைப் பற்றி நீ கவலைப்படவேண்டாம். பயப்பட வும் வேண்டாம். நீ போய் கணமிரண்டில் ‘பார்வேந்தன் பணித்தான்’ எனக்கூறிப் பாண்டவர் தேவிதனை, பாஞ்சாலியை, இப்பார் வேந்தர்மன்றினிலே அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
பாஞ்சாலி சபதம்
இந்த பாஞ்சாலி சபதம் மகாபாரதத்தில் வரும் மிக முக்கியமான பகுதியாகும். இந்தப் பகுதியில்தான் தருமமானது வீறு கொண்டெழுவது மட்டுமன்று, அதர்மத் தின் வீழ்ச்சிக்கும் நாள் குறிக்கப்படுகின் றது. எனவே தான் இப்பகுதி, தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனை ஒரு காவியமாக்கியதற்குக் காரணம் அவருடைய வானளாவிய, என்றும் நிலைத் திருந்த தேசபக்தியேயாகும்.
பாஞ்சாலியை அவர் சாதாரணப் பெண் ணாகவே எண்ணவில்லை. பாரத அன்னை யாகவே, உருவகித்துப் பேசுகின்றார் என்பதை, அவர் காவியத்தைப் படித்தவர் நன்குணரலாம். அதிலும் குறிப்பாக தருமரை, அவர் தம்பி பீமன் கடிந் துரைத்தல், பாஞ்சாலி சபதம் செய்தல் போன்றவை எக்காலத்தும் அழியாத உள்ளத்துணர்வைத் தூண்டுகின்ற அழியாத சொல்லோவியங்களாம். அதனால்தான் பொருத்தமான இடத்தில், அவர் பாடல்களையும் நடையையும், கையாண்டுள்ளேன். இனி கதைக்குச் செல்லலாம்.
திரௌபதியை அழைத்துவர தேர்ப்பாகன் செல்லுதல்
மன்னன் துரியோதனனுடைய கட்ட ளையை நிறைவேற்ற, தேர்ப்பாகன் பிரதிகாமி, திரெளபதி இருக்கும் இடத் திற்க்குள் நுழைந்து அத்திரௌபதியைக் கண்டு, “தாயே துருபதன் மகளே! யுதிஷ்டிரர் சூது என்னும் மயக்கத்தில் வீழ்ந்து யாவற்றையும் தோற்றார். உன்னையும் அத்துரியோதனனுக்கு, அச்சகுனி வலையில் ஆட்பட்டுத் தோற்று விட்டார். எனவே அத்துரியோதனன் வீட்டில் வேலை செய்வதற்காக, உன்னை அழைத்துப் போக வந்திருக்கின்றேன்” என்றான்.
இராஜ சூய யாகம் செய்து, மகாராணி யாக விளங்கும் ‘திரௌபதி இந்த எதிர் பாராத அழைப்பைக் கேட்டுத், திகைத்து நின்றாள். பின்னர் ஒருவாறு தேறி, அந்தத் தேர்ப்பாகனைப் பார்த்து, “பிரதிகாமி! என்ன வார்த்தை சொன்னாய்? யாரிடத்தில் சொன்னாய்? எந்த அரசன் தன் மனைவி யைச் சூதாட்டத்தில் பந்தயம் வைப்பான்? அவர்களுக்குப் பந்தயம் வைப்பதற்கு வேறு பொருள் எதுவும் இல்லையா?” என்று கேட்டாள். அதற்கு அந்தத் தேர்ப் பாகன், “ஆமாம் தாயே! வேறு ஒரு பொருளும் இல்லாததால்தான், உன்னை வைத்து ஆடி இழந்தார்கள்” என்று கூறியதோடு, யுதிஷ்டிரர் நாடு, நகரங்கள், செல்வங்கள், இழந்ததோடு தன் தம்பியரை இழந்ததையும், பின் தன்னையும் இழந்த தையும் இறுதியாக, தன் மனைவியை இழந்ததையும் எடுத்து விவரமாகக் கூறினான்.
திரௌபதியின் கேள்வி
பிரதிகாமி சொன்னவற்றையெல்லாம் கேட்ட திரெளபதி, தன் இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு பிளப்பது போன்ற ஒரு நிலையை அடைந்தாள். ஆழ்ந்த துன்பக் கடலில் மூழ்கினாள். க்ஷத்திரியப் பெண் ணானதால், ஒருவாறு தேறி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஏ தேரோட் டியே! சபாமண்டபத்திற்குப் போய் என்னைச் சூதில் வைத்துத் தோற்றவரை, அச்சபையோர் முன்னிலையில், ‘என் னைப் பந்தயப் பொருளாக முன்னே வைத்தாரா? அல்லது தன்னை எனக்கு முன் பந்தயப் பொருளாக வைத்தாரா?” என்று கேள்; என் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்துகொண்டு வந்தபிறகு என்னை அழைத்துப் போகலாம்” என்று கூறினாள்.
பிரதிகாமி அவ்வாறே போய் அந்தக் கௌரவர் சபையின்முன் அந்த யுதிஷ் டிரரைப் பார்த்து, திரௌபதி சொன்ன படியே கேட்டான். அதற்கு யுதிஷ்டிரர் மறுமொழி சொல்லாமல் உயிரற்ற பிணம் போல இருந்தார். அதனைக் கண்ட துரியோ தனன், பிரதிகாமியைப் பார்த்து,”ஏ தேரோட்டியே! அந்தத் திரெளபதியே இவ்விடம் வந்து தன் கணவரிடம் அந்தக் கேள்விகளைக் கேட்கட்டும். போய்த் திரௌபதியை அழைத்துவா” என்றான். உடனே பிரதிகாமி கவலையுடன் திரௌ பதி இருக்குமிடம் சென்று, “அன்னையே! சபையினர் உன்னை அழைக்கின்றனர். அந்த அற்பன், அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கின்றவன், உன் பெருமையை அறிய வில்லை போலத் தோன்றுகின்றது. யாவ ரும் தொழத்தக்க உன்னை, அந்தச் சபை யின் நடுவிலே நிறுத்த எண்ணியுள்ளான்” என்று கவலையோடு கூறினான்.
இதைக் கேட்ட திரௌபதி, “பிரதிகாமி! தர்மம் எப்பொழுதும் நம்மைக் காப்பாற் றும்; என்னுடைய நியாயமான இந்தக் கேள்வியை, அந்த நீதிமான்கள் நிறைந்த சபையிலே போய்க்கேள். அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதன்படி நான் நடப்பேன்” என்றாள். பிரதிகாமி மீண்டும் சபைக்குச் சென்று திரௌபதி சொன்னதை முறைப்படி தெளிவாகக் கூறினான். ஆனால் சபையில் உள்ளோர் துரியோதன னின் முரட்டுத்தனமான கோபத்திற்கு அஞ்சி, ஒன்றும் பேசாமல் வாய் மூடி மௌனியாகத் தலைகுனிந்து இருந்தனர்.
நொந்துபோன பிரதிகாமி
சூதாட்டத் தோல்வியின் காரணமாகப் பாண்டவர்கள் சோர்வும், மனத்துயரமும் அடைந்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு தலைகுனிந்து நின்றனர். அப்போது துரியோதனன் பிரதிகாமியைப் பார்த்து, ”திரௌபதியை உடனே அழைத்து வா” என்றான். துரியோதனனுக்கும் திரௌ பதிக்கும் அடிக்கின்ற பந்து போலத் தான் ஆகிவிட்டதை எண்ணி, நொந்து கொண் டிருந்த அந்தப் பிரதிகாமி, துரியோதனன் சொன்னதைக் கேட்டவுடன், “இங்கேயோ அரசன் கட்டளை; அங்கேயோ திரௌ பதியின் கோபம். யாருக்கு நான் பயப் படுவது? அவளிடம் என்ன சொல்வது? என ஒன்றும் புலப்படாமல், அவன் சபையினரைப் பார்த்து, “திரெளபதிக்கு நான் என்ன பதில் சொல்வது?” என்று மனம் நொந்து அஞ்சிக் கேட்டான்.
பிரதிகாமி இவ்வாறு உரைத்ததைக் கேட்டவுடன், துரியோதனன் கடுங்கோபம் கொண்டான்.”அந்தச் சிறுக்கியோ இந்தப் பொடிப்பாகன் அழைக்க வர மறுக்கின்றாள். இவனோ, இந்தச் சின்னப்பயல் பீமனுக்கு அஞ்சியே போகத் தயங்குகின்றான்; நடுங்குகின்றான்” என்று கூறிய அத்துரியோதனன், தன் தம்பி துச்சாதன னைப் பார்த்து, ”தம்பி துச்சாதனா! நீயே சென்று, அந்த அடிமை திரெளபதியைப் பிடித்து இழுத்துக் கொண்டுவா! இந்தப் பாண்டவர்களால், பஞ்சைப் பரதேசிப் பயல்களால், நம்மை என்ன செய்ய முடி யும்?” என்று இறுமாப்புடன் கூறினான்.
கதறி ஓடிய திரௌபதி
இதைக் கேட்டதும் துச்சாதனன் மிக மகிழ்ச்சியடைந்து, விரைந்து திரௌபதி இருப்பிடம் போய்ச் சேர்ந்தான். திரெளபதி யைப் பார்த்து,”ஏ பாஞ்சாலி! இங்கே வா! இனி நீ பாண்டவர் தேவியும் அல்லள்; புகழ் மிக்க பாஞ்சாலத்தான் மகளும் அல்லள், நீ புவி ஆள்கின்ற வேந்தனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சீ. மன்னரின் பரந்த சபையில், எங்கள் நேசச் சகுனியோடு சூதாடி உன்னைத் தோற்று விட்டான். இன்று ஆடி விலைப்பட்ட தாதி நீ.உன்னை ஆள்பவன், எங்கள் அண்ணன் துரியோதனன். மன்னர் கூடியிருக்கும் சபை யிலே உன்னை கூட்டி வருக என்று கட்டளையிட்டுள்ளான். அதனால் வெட்கத்தைவிட்டு என்னுடன் புறப்படுக” என்றான். காய்ச்சிய இரும்புக் குழம்பு காதிலே விழுந்தது போலத் துச்சாதனன் கூறிய சொற்கள், அவள் காதுகளில் விழுந்த வுடன் கதறினாள்; பதறினாள்; அழுது கொண்டே திருதராட்டிரர் அரண்மனையினுள் புகுந்தாள்.
ஒடிக்கொண்டிருந்த அவளைத் துச்சாத னன் இடைமறித்து, அவளின் கருமையான அடர்த்திமிக்க நெடிய கூந்தலைத், தன் முரட்டுக் கைகளால் பற்றி இழுத்தான். இராஜ சூய யாகத்தின் போது மந்திரங் களால் பரிசுத்தமான நீரால், அபிஷேகம் செய்யப்பெற்ற அந்தப் புனிதக் கூந்தலை, அந்தத் தீயச்சக்தியாகிய துச்சாதனன், பற்றி இழுத்துக் கொண்டு சபைக்கு விரைந்து வந்தான். ‘மிக மிக அக்கிரமமான செயலில் அதீத துணிச்சலுடன், தட்டிக் கேட்பார் யாருமில்லையென்று எண்ணிக் கௌரவ ராக்ஷஸர்கள் இறங்கிவிட்டார்கள்” என்றார்கள் சிலர். “பெண் பாவத்தைக் கொட்டிக் கொள்கிறார்கள்; இந்தப் பாவம் இவர்களைச் சும்மாவிடாது, கூண்டோடு அழிக்கும்” என்றார்கள் வேறுசிலர்.வேறு சிலர், “நல்லவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவர்கள், நீண்ட நாள் வாழமாட்டார்கள். நரகத்திலே சேர்வார்கள்” என்று சாபமிட்டனர்.
திரௌபதியை இகழ்ந்த துச்சாதனன்
அப்பொழுது திரௌபதி உடல்குன்றி, உள்ளம் குன்றி, “தீயவனே! நான் மாத விடாயில் இருக்கின்றேன். ஒற்றையாடை யுடன் இருக்கும் என்னைச், சபைக்கு இழுத்துச் செல்லுதல் தகாது” என்றாள். அதற்கு அந்தத் துச்சாதனன், “நீ எந்தக் கோலத்தில் இருந்தாலும், எங்களுக்குக் கவலையில்லை. நீ எங்களால் ஜெயிக்கப் பட்ட ஓர் அடிமைப் பெண்” என்று அவளை மேலும் இழுத்துக் கொண்டு சென்றான். அப்பொழுது அவளுடைய ஆடையும் கலைந்தது; கூந்தலும் கலைந் தது. வெட்கமும், கோபமும், பிடுங்கித் தின்றன. அவள் கதறியபடியே, “துச்சா தனா! இந்த நிலையில் என்னைச் சபைக்கு அழைத்துச் செல்லாதே; அங்குள்ளவர் அனைவரும் நீதிமான்கள்; சாத்திரங்களை அறிந்தவர்கள்; அவர்கள் கோபத்திற்கு ஆளாகாதே! ஏன் பாண்டவர்கள் கூட இதனைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பின்னர் யார் வந்தாலும் தேவர்களே வந்தாலும், உங்களைக் காப் பாற்ற முடியாது. அழிந்து போவீர்கள்” என்று கூறிய அவள் சபையின் முன் வந்து, “சான்றோர்களே! தர்மமும்,ஒழுக்கமும், அழிந்தா போய்விட்டது?” என்று கேட் டாள். சபையில் நின்றிருந்த தன் கணவன் மார்களைக் கடைக்கண்ணால் பார்த்தாள். அவளைக்கண்டு அவர்களோ சொல்லொ ணாத் துயரம் அடைந்தனர். அப்பொழுது துச்சாதனன், அவளைப் பார்த்து “ஐவர்க் கும் தேவியாகிய நீ தாசி!” என்று இகழ்ந் தான். கர்ணனும், சகுனியும், அவனை வாயாரப் புகழ்ந்தனர். துரியோதனன். கர்ணன், துச்சாதனன், சகுனி என்ற இந்த நால்வர் கூட்டணி தவிர மற்ற அனைவரும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் இருந்தனர்.
அப்பொழுது பிதாமகர் பீஷ்மர் எழுந்து நின்று, திரெளபதியைப் பார்த்து, “பாக்கிய வதியே! திரௌபதியே! மனைவி கணவ னுக்குக் கட்டுப்பட்டவள். யுதிஷ்டிரர் மிகுந்த தர்மவான். இதிலே எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவரே, கெளரவர் களால் தான் வெல்லப்பட்டதாக, ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் அடிமையான யுதிஷ்டிரர், உன்னைப் பந்தயமாக வைத்து ஆடியது சரியா தவறா,என்று என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. என்றா லும் ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அஃதாவது யுதிஷ்டிரர், கௌர வர்களும் சகுனியும் விரித்த வஞ்சனை வலையில், தன்னை அறியாமல் அகப் பட்டுக் கொண்டார். அதனால் உன் கேள்விக்கு என்னால் பதில் கூற முடிய வில்லை ” என்று ஈரொட்டாகப் பதில் கூறினார்.
நீதி கேட்ட திரெளபதி
அதனை அடுத்து, திரௌபதி, “சூதில் வல்லவர்களும், அயோக்கியர்களும், நேர்மையற்றவர்களும், ஒன்று சேர்ந்து மோசமான சூழ்ச்சி செய்து என் அரசனை ஏமாற்றி, என்னைப் பந்தயப் பொருளாக வைக்கச் செய்ததை சான்றோர்களே! வேதம் வல்லவர்களே! நீதிமான்களே எவ்வாறு ஒப்புக் கொண்டீர்கள். அடிமையான ஒருவன், தன் மனைவியை எவ்வாறு பந்தயப் பொருளாக வைக்க முடியும்? வேத சாத்திரங்களில் கரை கண்டவர் களெல்லாம், நடக்கின்ற அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். மனைவிகள், பெண்கள், மருமகள்கள் படைத்த கெளரவர்கள் பலர், இந்தச் சபை யில் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் என் நிலை நேரலாம். எனவே என் கேள்விக்குத் தகுந்த பதிலைச் சொல்லுங்கள்” என்றாள்.
இவ்வாறு அழுதுகொண்டு அநாதை போல நின்ற, திரெளபதியைப் பார்த்துத் துச்சாதனன் பல கீழ்த்தரமான வார்த்தை களால் திட்டினான். அப்பொழுது அவள் இருந்த பரிதாப நிலையைக் கண்டு, பீமன் கொதிப்படைந்தான். அதனால் அவன் தமையன் என்றும் பாராது யுதிஷ்டிரரையே இடித்து பேசத் தொடங்கினான்.
அவன் பேசிய உணர்வுபூர்வமான அந்தக் கொதிப்புமிக்க உரைகளைத், தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரைத் தவிர வேறு யாராலும், அதே உணர்வுடன் சொல்லமுடியாது. இது நிச்சயம்; நிச்சயம். ஆதலின் அவருடைய உணர்ச்சிபூர்வமிக்க பாடல்கள், அப்படியே இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்பாடல்கள் :
சூதர் மனைகளிலே – அண்ணே! தொண்டு மகளிருண்டு, சூதிற் பணயமென்றே – அங்கோர் தொண்டச்சி போவதில்லை (1)
ஏது கருதி வைத்தாய்? அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலவிளக்கை – அன்பே வாய்ந்த வடிவழகை (2)
பூமியரச ரெல்லாம் கண்டே போற்ற விளங்கு கின்றாள் சாமி புகழினுக்கே – வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன் (3)
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி யிழந்துவிட்டாய், தவறு செய்துவிட்டாய் – அண்ணே! தருமம் கொன்று விட்டாய் (4)
சோரத்தில் கொண்டதில்லை – அண்ணே சூதில் படைத்ததில்லை. வீரத்தினால் படைத்தோம் -வெம்போர் வெற்றியினால் படைத்தோம் (5)
சக்கரவர்த்தி என்றே – மேலாம் தன்மை படைத்திருந்தோம் பொக்கென ஓர் கணத்தே – எல்லாம் போகத்தொலைத்துவிட்டாய் (6)
‘நாட்டையெல்லாம் தொலைத்தாய் அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம் மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் (7)
துருபதன் மகளைத் – திட்டத் துய்மன் உடன் பிறப்பை இருபகடை என்றாய் – ஐயோ! இவர்க் கடிமை என்றாய். (8)
இதுபொறுப்ப தில்லை – தம்பி எரிதழல் கொண்டுவா கதிரை வைத்திழந்தான் – அண்ணன் கையை எரித்திடுவோம் (9)