வடதிசை நோக்கிச் சென்று கொண் டிருந்த அர்ச்சுனன், வழியில் தன்னை எதிர்த்த க்ஷத்திரிய மன்னர்கள் சிலருடன் போரிட்டு வென்று, அவர்களை திறை செலுத்தச் செய்தான். பின்னர் கலிங்க நாட்டையும், கடக நாட்டையும், வென் றான். அந்நாட்டு மன்னர்களைக் கப்பம் கட்டச் செய்தான். ‘துயுமத்தேசனன்’ என்னும் மன்னனை வென்று, அவனைப் படைத்தலைவனாக்கிக் கொண்டான். இவ்வாறு பல வெற்றிகளைக் குவித்த அர்ச்சுனன், ‘பிராக்ஜ்யோதிஷம்’ என்று நாட்டை அடைந்து, அந்நாட்டு மன்னன் பகதத்தன் என்பவனோடு, கடும் போர் புரிந்தான். அப்போர் எட்டு நாட்கள் நடை பெற்றது. அர்ச்சுனனின் தனி ஆற்றலை யுணர்ந்த, அப்பகதத்தன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். அர்ச்சுனன் அவனைத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு, “பகதத் தரே! இனி நீர் என் நண்பர். எனவே உன்னைக் கப்பம் கட்டும்படி, உத்தரவிட மாட்டேன் என்றாலும், அண்ணா தரும புத்திரர் இராசசூயயாகம் மிகச் சிறப்பான முறையில் செய்யவுள்ளார். அதற்கு வேண்டிய பொருளைத் தருக” என்று கூற, அவனும் அவ்வாறே அளிப்பதாக ஒப்புக் கொண்டான்.
அந்தர்கிரி, உபயகிரி, போன்ற மலை நாடுகளுக்குச் சென்று அவற்றையும் வெற்றிக்கொண்டான். அவர்களிடம் இருந்து பெரும் பொருளைத் திறையாகப் பெற்றான். பின்னர் உலூகதேசத்தில் வசிக்கும் ‘பிருகந்தன் ‘ என்னும் மன்னனோடு கடும் போரிட்டு, அவனை வென்று, இரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றான். அடுத்துக் காஷ்மீர் நாட்டு மன்னனை வென்றான். அடுத்து உரகா புரியில் வசிக்கும், ‘ரோசமானன்’ என்ப வனை வென்றான். அவனிடமிருந்து விலைமதிக்க முடியாத, உயர்ந்த ஜாதிக் குதிரைகளைக், கைப்பற்றிக் கொண்டு வந்தான். அடுத்து இமயமலையையும், நிஷ்குடமலையையும், ஒரே போரில் வென்றான். இவ்வாறு பல நாடுகளை வென்ற அர்ச்சுனன் பொன்னும், பொருளும், இரத்தினங்களும், குதிரைகளும், யானைகளும், தேர்களும் என எண்ணி லாதன, கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டுவந்தான். பின் தருமரிடம் ஒப்படைத்து, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் மாளிகை அடைந்தான்.
தருமரிடம் விடை பெற்றுக்கொண்டு கீழ்த்திசை நோக்கிச் சென்ற பீமன், பாஞ்சால நாட்டை வென்று, வேண்டிய கப்பத்தைப் பெற்றான். விதேக நாட்டை வென்ற பீமன், தசர்ணா நாட்டை அடைந்து, அந்நாட்டு மன்னன் சுதர்மாவை வென்று, பின் அவனைத் தன் சேனைத் தலைவனாக்கிக் கொண்டான். அதன்பின் அசுவமேதசுவா, சுகுமாரன், சுமித்திரன், என்னும் அரசர்களை வென்றான். அடுத்து சேதி நாட்டுக்குச் சென்றான். அந்நாட்டு மன்னன், சிசுபாலன் பாண்டவரிடம் எந்தப் பகையும் கொள்ளாதவன். ஆகையினால் போரிட விரும்பாமல் பீமனிடம், “படை யுடன் புறப்பட்டு வரக்காரணம் யாது பீம சேனரே!” என்று கேட்டான். அதற்கு பீமன், “என் தமையனார் தருமபுத்திரர் இராசசூய யாகம் செய்ய உள்ளார். அதன் காரணமாக என் படையுடன், பல நாடுக ளுக்குச் சென்று, வென்று பின் இந்நாட் டிற்கு வந்துள்ளேன்” என்றான். அதைக் கேட்டுச் சிசுபாலன் மகிழ்ந்தான். பீமனை அன்புடன் வரவேற்று, தங்கள் நாட்டில் சிறப்பு விருந்தினராகப் பதின்மூன்று நாட்கள் தங்கியிருக்கும்படி செய்து, பின்னர் யாகத்திற்கு வேண்டிய பொன் னையும், பொருளையும், கொடுத்தனுப் பினான். பின்னர் கர்ணனுடைய அங்க நாட்டிற்குச் சென்று, அவனை வெற்றி கொண்டான். அடுத்து மலை நாட்டு மன்னர், பலரை வெற்றி கொண்டான். இவ்வாறு பல நாட்டு மன்னர்களை வெற்றிக்கொண்டு சந்தனம், அகில், இரத்தி னங்கள், முத்துக்கள், பொன், வெள்ளி, பவழம், தந்தம் முதலிய விலைமதிப் புடைய, உயர்ந்த பொருள்களைக் காணிக் கையாகப் பெற்றுத் திரும்பினான். அவற்றைத் தருமரிடம் ஒப்படைத்து, அவரை வணங்கி ஆசி பெற்றான்.
சகாதேவன் வெற்றிகள்
பீமன், அர்ச்சுனன், போன்றே மாத்ரி மைந்தன் சகாதேவன் அணி தேர், புரவி, ஆட்பெரும்படையுடன், தெற்குத் திசை நோக்கிச் சென்றான். முதலில் சூரசேன தேசத்தை வென்றான். பல நாடுகளை வெற்றி கொண்ட பின்பு, குந்திபோஜனி டம் சென்றான். தன் பெயரன் தருமபுத்திரர் இராசசூய யாகம் செய்கிறார், என்பதை அறிந்து மகிழ்ச்சிகொண்டு, நிறைய பொன்னையும், பொருளையும், கொடுத் தான். அதன்பின் மாஹிஷ்மதி நகரை ஆண்டு வந்த நீலன் என்பவன்பால் சென் றான். அவன் அக்னி பகவானைத் துணை யாகப் பெற்றிருந்தான். ஏனெனில் தன் மகளை அக்னி தேவனுக்குக், கன்னிகா தானமாகத் திருமணம் செய்து கொடுத்திருந் தான். அதனால் சகாதேவன் நீலனுடைய நகரை அடைந்தவுடன், அவனுடைய யானை, தேர், குதிரை, காலாள், முதலானவை கரிந்து போனவை போலக் காணப்பட்டன. நீலனுக்கு, அக்னி துணை யாக இருக்கிறான் என்பதை அறிந்த சகா தேவன், அக்கினி பகவானைப் பலவாறு துதித்துத் தன்னைக் காப்பாற்றும்படி, வேண்டிக் கொண்டான். அதன்பின் பூமி மறையும்படி, தர்ப்பைப் புல்லைத் தன் சேனைகளின் முன்னே பரப்பி, அக்னி தேவனைக் குறித்துத் தவம் செய்தான்.
அக்னி பகவான் அருள்கூர்ந்து, நீலனி டம் சகாதேவனை வரவேற்று உபசரிக்கும் படியும், வேண்டியன கொடுத்து உதவி புரியும் படியும் கூறினான். மருமகன் அக்னி கூறியதை ஏற்ற நீலன், தருமர் இராசசூய யாகம் செய்கிறார் என்பதையும், அதற்காகச் சகாதேவன் வந்திருக்கிறான் என்பதையும் அறிந்து, வேண்டிய பொன்னையும் பொரு ளையும் கொடுத்து, அச்சகாதேவனை வழி அனுப்பினான். ‘திரிபுரன்’ என்ற அரசனை வென்ற பின்பு, கங்கையில் புனிதமான காவிரியினால், செழித்து விளங்கும் சோழ நாட்டை அடைந்தான். சோழ நாட்டு மன்னன், சகாதேவனை வரவேற்று வேண்டிய பொருளைக் கப்பமாகக் கொடுத் தான். கொக்கு பறக்கும்; குருவி பறக்கும்; புறா பறக்கும்; ஆனால் இங்கு மீனும் பறக்கும்; அதாவது மீன் கொடி பறக்கின்ற பாண்டிய நாட்டை அடைந்தான். அந் நாட்டு மன்னன் சித்ரவாகனன், தன் மகள் சித்ராங்கதையை, அர்ச்சுனனுக்குத் திரு மணம் செய்து கொடுத்து மாமனார் ஆனவன். ஆதலின் அவன் சகாதேவனை இன்முகத்துடன் வரவேற்று, பலவிதமாக உபசாரங்களைச் செய்து, சில நாட்கள் தன்னுடன் தங்கியிருக்கும்படியும் செய் தான். புறப்படும் போது, வேண்டிய பொன் னையும், பொருளையும் வாரிக் கொடுத் தான். அதே போல சகாதேவன் தன் தமை யன் அர்ச்சுனன் மகன் பப்புரு வாகன னுக்கு, நிறைய பொன்னையும் பொருளை யும் பரிசாகக் கொடுத்தான். அவனை நன்கு வாழ்த்தினான். அங்கிருந்து சித்ரவாகன மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு, குறுமுனி அகத்தியர் தங்கி தண்டமிழ் வளர்த்த, பொதிய மலைச் சாரலை அடைந் தான் .
அடுத்து தாமிரபரணி நதிக்கரையை அடைந்தான். தாமிரபரணி நதிக்கரையில் இருந்து கொண்டு, தன் தமையன் பீமசேனனுக்கும் இடும்பிக்கும் பிறந்த வனான, கடோத்கஜனை நினைத்தான். இந்தக் கடோத்கஜன், தன் தாய் இடும்பி யிடமே இடும்ப வனத்தில் வாழ்ந்து வருபவன்; ராக்ஷஸ வம்சத்தைச் சேர்ந்த வன் ; கார்மேகம் போன்ற கரிய நிறமுடை யான். பனைமரம்போல் நெடிய தோற்றம் உடையவன்; நெடிய கைகளைப் பெற்றி ருப்பவன்; கோரைப்பற்களையும், சிவந்த மயிர்முடியையும், செம்பட்டை நிறமான அடர்த்தியான மீசையையுடையவன். அச் சந்தரத்தக்க தோற்றமுடையவன். வலிமை யில் அவனுக்கு நிகர் அவனே. அத்தகைய வன், தன் சிற்றப்பன் சகாதேவன் தன்னை நினைத்தவுடன் அவன்முன் வந்து நின்றான்.
வீடணன் அளித்த வெகுமதிகள்
கடோத்கஜனைக் கண்ட சகாதேவன், “மகனே, கடோத்கஜா! உன் பெரிய தகப்பனார் தருமபுத்திரர் இராசசூய யாகம் செய்கின்றார். அதன் காரணமாக இலங்கையை ஆள்கின்றவனும், சிரஞ்சீவியாக வாழ்பவ னும், தென்னிலங்கை வேந்தன் இராவ ணன் தம்பியும், இராமபிரானிடம் அடைக் கலம் புகுந்து, அவரால் ஆட்கொள்ளப் பட்டவனுமாகிய வீடணன்பால் சென்று, யாகத்திற்கு வேண்டிய பொன்னையும் பொருளையும் பெற்று வருக” என்று கூறி, அவனைத் தழுவி, உச்சி மோந்து இலங் கைக்கு வழி அனுப்பினான். அவனும் தென்னிலங்கை சென்றான். “களிக்கின்றார் அலால் கவல்கின்றாரைக் காணேன்” என்று அநுமன், அன்று சீதையைத் தேடிச் சென்ற போது பாராட்டிக் கூறிய, செல்வச் செழிப்பு மிக்க இலங்கை மாநகரை அடைந்து, வீடணனைச் சந்தித்து, தான் வந்ததற்குரிய காரணத்தைக் கூறினான்.
அதைக் கேட்ட வீடணன் கடோத் கஜனை நோக்கி, “தருமர் என்பவர் யார்? அவருடைய வரலாறு யாது? அவர் ஏன் உன்னை அனுப்பினார்?” என்று கேட்க, கடோத்கஜன், பாண்டவர்களைப் பற்றிய வரலாற்றினை எடுத்துக் கூறியதோடு, தர்ம புத்திரர் செய்கின்ற இராசசூய யாகத் திற்காகப் பொருள்பெற வந்ததாகவும் கூறினான். மேலும் அவன், “யுதிஷ்டிரரின் இராசசூய யாகத்தையும், பாண்டவர் களுக்கு உதவியாக இருக்கின்ற இராமாவ தாரத்தின் மறு அவதாரமாகத் திகழ்கின்ற கண்ணபிரானையும், எண்ணிப் பார்க்கும் பொழுது நீவீர் கப்பம் செலுத்துவதற்கு உரியவராகிறீர்” என்றான். அனைத்தையும் கேட்ட தென்னிலங்கை வேந்தன் வீடணன், மிகுந்த மகிழ்ச்சியோடு அநேகப் பரிசுப் பொருள்களையும், தங்கக் கட்டிகளையும், தந்தக்கட்டில்களையும், பவழங்களையும், பதிநான்கு வயிரம் பாய்ந்த பனை மரங் களையும், பொற்றாமரை மலர்களையும், தந்தப் பல்லக்குகளையும், விலைமதிப் பற்ற கிரீடங்களையும், அழகிய பட்டாடை களையும், சகாதேவனிடம் கொடுக்கும்படி கடோத்கஜனிடம் கொடுத்தான். அவனும் அவையனைத்தையும் பெற்றுக்கொண்டு, வீடணனிடம் விடைபெற்றுக்கொண்டு, தன் சிற்றப்பன் சகாதேவனை அடைந்து அவனிடம் ஒப்படைத்தான். பின்னர் இராச சூய யாகத்திற்கு வருவதாகக் கூறி கடோத்கஜன், தன் இருப்பிடம் சேர்ந்தான். வேண்டிய அளவுக்கு அதிகமான பொருள் களைத் திரட்டிய சகாதேவன், அவற்றை யெல்லாம் காண்டவப் பிரத்தத்தில் இருக்கும், தன் தமையன் தருமபுத்திரரிடம் சென்று ஒப்படைத்து விட்டுத் தன் மாளிகையை அடைந்தான்.
நகுலன் வெற்றிகள்
அடுத்து நகுலன் மேற்குத்திசை நோக்கிச் சென்றான். ரோஹித் தேசத்தை அடைந்து அதனை ஆண்டு வந்த ‘மத்தமயூரகர்’, என்னும் இரண்டு அரசர்களோடு போரிட் டான். அவர்களை வென்று, வேண்டிய திறைப் பொருள்களைப் பெற்றான். அடுத்து, சைரீஷம், ஆக்ரோசன் என்ற இரண்டு நாடுகளை வென்றான். அதன்பின் பல்லவர், கிராதர், யவனர் முதலான வர்களை வென்றான். அவர்களிடம் கப்பமாகப் பெற்ற, பொருள்களையெல் லாம் பதினாயிரம் ஒட்டகங்களில் ஏற்றி, இந்திரபிரத்தம் அடைந்து, தன் தமைய னாரிடம் ஒப்படைத்தான். பின்னர் தன் அரண்மனை சேர்ந்தான்.
இராஜசூய யாகம் தொடக்கம்
இவ்வாறு தம்பியர்கள் எல்லாம் பல நாடுகளை வென்று வர, தருமபுத்திரர் தன்னுடைய நாட்டை நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். நாட்டில் பருவமழை தவறாது பொழிந்தது. வேளாண்மையும் தொழில்களும், வாணிகமும், நன்கு வளர்ச்சி அடைந்தன. பொக்கிஷம் நிரம்பி வழிந்தது. அமைச்சர் பிரதானிகள் ‘இராச சூய யாகம்’செய்வதற்கு ஏற்ற தருணம் இதுவே என்றனர். தரும புத்திரரும் அதனை ஏற்றார். அப்பொழுது கண்ண பிரான், வசுதேவரோடும் நிறைந்த செல்வத் தோடும், இந்திரபிரத்தம் வந்தார். கண்ண பிரான் வருகையை அறிந்து, அவரை, தருமபுத்திரர், தௌமியர், வியாசர் முதலானவர்கள் வரவேற்று உபசரித்தனர். கண்ணபிரானுக்கு இருக்க ஆசனம் தந்தனர். ஆசனத்தில் அமர்ந்தபின் கண்ணபிரான், தருமபுத்திரரைப் பார்த்து, “தருமபுத்திரரே! இராசசூய யாகம் செய்ய நீரே தகுதி பெற்றவர். அதுவும் இப்பொழுதே செய்ய லாம். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிடுங்கள். செய்யக் காத்திருக்கின் றோம்” என்று மகிழ்வுடன் கூறினார். தௌமியரின் அறிவுரைப்படி சகாதேவன். மற்றும் அமைச்சர் பிரதானிகள் யாகத் திற்குத் தேவையான கருவிகளையும் மங்கலப் பொருள்களையும், ஹோமத் திற்கு வேண்டிய பொருள்களையும், திரட்டிக் கொண்டு வந்தனர்.
வியாச மகரிஷி, வேதங்களே உருக் கொண்டு வந்தது போன்று, உயர்ந்த வேத விற்பன்னர்களை யாகத்திற்காக அழைத்து வந்தார். சத்தியவதியின் புதல்வரான அவரே அந்தத் தர்மபுத்திரருக்குப் பிரம்மா வின் ஸ்தானத்தை வகித்தார். ‘சுஸர்மா’ என்பவர் சாமகானம் ஓத, நியமிக்கப் பட்டார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, யாகம் செய்வதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் சாத்திரப்படி, அந்த இடத்திற்குப் பூஜை செய்தனர். தர்மரின் அனுமதியின்படி சிறந்த சிற்பிகள் பெரியதாகவும், நறுமணம் கமழ்வதாகவும் உள்ள, சிறந்த கட்டடங்களைச் கட்டி னார்கள். தருமரின் ஆணைப்படி, சகா தேவன் தூதர்களைப் பல நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள அந்தணர்கள், க்ஷத்திரி யர்கள், வாணிகர்கள், பிற அறிஞர்கள் முதலியோரை அழைத்து வரச் செய்தான். அடுத்து தருமரின் ஆணையை ஏற்று, நகுலன் அஸ்தினாபுரம் சென்று, பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், அறநெறி தவறாத விதுரர், பெரிய தந்தை திருதராஷ் டிரர், கிருபர், துரியோதனனும் அவன் தம்பிமார்கள் முதலான அனைவரையும் அழைத்து வந்தான்.
யாகதீட்சை அந்தணர்கள் முறைப்படி தருமபுத்திர ருக்கு, யாகதீட்சை செய்து வைத்தனர். கேட்டையும் மூலமும் சேர்ந்த அமாவாசையன்று மான்தோலைப் போர்த்திக் கொண் டார். உடல் முழுவதும் வெண்ணெய் தடவி, யாகதீட்சை செய்து கொண்டார். பின் அந்தணர்களுடனும், தம்பியர்களுட னும், சுற்றத்தாருடனும், பிறநாட்டு மன்னர் களுடனும் யாகசாலைக்குச் சென்றார். இராசசூய யாகம் இனிது தொடங்க லாயிற்று.
யாகத்திற்குப் பீஷ்மர், துரோணர், கிருபர், திருதராஷ்டிரர், துரியோதனாதியர், காந்தார நாட்டு மன்னன் சுபலன், சகுனி, அசலன், விருக்ஷகன், சல்லியன். சோம தத்தன், பூரி, பூரிசிரஸ், அசுவத் தாமா, ஜயத்ரதன், துருபதன், சால்வராஜன், பகதத்தன், கடல் நாட்டு மன்னர்கள் முதலா னோர் வந்திருந்தனர். பலராமன், விராடன், பல்லவ நாட்டு அரசன், சிசுபாலன், குந்தி போஜ மன்னன், முதலானோரும் வந் திருந்தனர்.
பொறுப்புகளை ஒப்படைத்தல்
பின்னர் பீஷ்மர், துரோணர் போன் றோரை தருமர் எதிர்கொண்டழைத்து, தக்க மரியாதை செய்து, “இந்த யாகத்தில் கலந்து கொண்டு, எங்களைப் பெருமைப்படுத்த வேண்டும்” என்றார். யாகத்திற்குச் செய்ய வேண்டிய வேலைகளைத் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்தார். உணவு சமைத்தல், பரிமாறுதல் போன்ற வேலைகள் துச்சாதனனிடம் ஒப்படைக்கப் பட்டன; அரசர்களுக்கு மரியாதை செய்ய சஞ்சயன், பொன் நாணயங்களைப் பராமரித்துத் தட்சணை கொடுக்க கிருபர், விதுரர் நியமிக்கப்பட்டனர். அரசர்களிடம் கப்பம், காணிக்கை பெறுதல் முதலானவை துரியோதனன் வசம் ஒப்படைக்கப்பட்டது. காந்தாரி பெண்களுக்கு மரியாதை செய்த லைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கண்ணபிரானிடம் அந்தணர்களுக்குச் சிறப்புச் செய்தல், ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு உதவியாக அர்ச்சுனன் நியமிக்கப் பட்டான் இந்தப் பெரு வேள்வி நடத்த லுக்கு முதற்காரணம், திருமாலாகிய இந்தக் கண்ணபிரான் என்று உணர்ந்து, நாரதர் கெளரவத்துடன் கலந்து கொண்டார். யாதவர் அனைவரும் பெருந்தனக்குவிய லுடன், அங்கு வந்து சேர்ந்தனர். எல்லோ ரும் வாழ்த்தொலி எழுப்ப, ஜனக் கூட்டத்தைக் கடந்து கொண்டு, கண்ண பிரான் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வருகையினால் யாகசாலை பொலிவு பெற்றது. கிருஷ்ண பகவானுக்குத் தக்க மரி யாதை செய்து தருமர், அவரைப் பூசிக்கச் சிறந்த ஆசனம் ஒன்றை அப்பெருமானுக்கு அளித்தார். அவரும் அதில் அமர்ந்தார்.
கண்ணபிரானுக்கு முதல் மரியாதை
அப்பொழுது தருமர், “பிதாமகரே! யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும்? யாருக்குச் செய்வது தகுதி யுடையது?” என்று கேட்டார். அதைக் கேட்டுப் பீஷ்மர், மனத்தில் நன்கு ஆராய்ந்து பார்த்து, “நட்சத்திரங்களில் மிகவும் மேலானது சூரியன்; அது போல இங்குள்ளோர் யாவரிலும் மேலானவர் கண்ணபிரான், அவர் எல்லாரையும் விடப் பலத்திலும், குணநலத்திலும், மேம்பாடு டையவர்; எனவே அவரே முதல் மரியா தைக்குத் தகுதியானவர்” என்று கூறினார்.
அதன் பின்னர் பீஷ்மரின் அனுமதியின் பேரில், சகாதேவன் கண்ணபிரானுக்கு உயர்ந்த மரியாதையைச் செய்தான். பசு, அர்க்கியம், மதுபர்க்கம், ஆகியவற்றை அந்தப் பெருமானிடம் கொண்டுபோய் கொடுத்தான். அந்தச் சபையில் உள்ள மன்னர்கள், பெரிதும் மகிழ்ந்தனர். எல்லாரும் தங்கள் ஆரவாரம் மூலம் இதனை அங்கீகரித்தனர். சாத்திரப்படி நடைபெற்ற, இந்தப் பூஜையைக் கண்ணன் ஏற்றுக் கொண்டார்.
சிசுபாலன் எதிர்ப்பு
கண்ணபிரானுக்கு அளிக்கப்பட்ட முதல் மரியாதையை இடைஏழு வள்ளல்களில் ஒருவனான சிசு பாலன் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. (இடையேழு வள்ளல் கள் என்போர் (1) அக்குரன், (2) சக்தி மான்,(3) அந்திமான். (4) சிசுபாலன், (5) தந்தவக்கிரன், (6) கன்னன், (7) அரிச்சந்திரன்) அவன் பொறுமை இழந்தான். “பூபாலர் நிரம்பிய இந்தச் சபையில், கோபாலர்கள் முதல் மரியாதை பெறுவதா?” என்று கோபித்து எழுந்தான். கண்ணபிரானையும், தர்மரையும், பீஷ்மரை யும் வேண்டிய மட்டும் தூற்றலானான். இதனைக் கேட்டவுடன் சகாதேவன் கோபித்து, அவனை அவமதித்துப் பேசி னான். அதனால் சிசுபாலனின் கோபம் மேலும் வளர்ந்தது. பின் தருமபுத்திரரைப் பார்த்து, “தருமனே! தகுதியற்ற முறையில் குந்தி மைந்தனாகப் பிறந்தவன் நீ. ஆகையி னால், தகுதியற்ற காரியம் செய்கிறாய். உனக்கு ஆலோசனை சொன்ன பீஷ்மரோ, தாழ்ந்த இடத்தை நோக்கிச் செல்லும் நதியின் புதல்வன்; அவன் கூற்றுப்படி அக்ர பூஜையைப் பெற்றுக் கொண்டவனோ இடையன். இந்த அக்ர பூஜையை ஏற்ப தற்குத், தகுதி வாய்ந்த பலர் இந்தச் சபை யில் இருக்க, இந்த இடையனைத்தானா தேர்ந்தெடுக்க வேண்டும் ? இந்த விஷ யத்தில் பீஷ்மர் முறை தவறி நடந்துள்ளார். உன்னைப் போன்ற தர்மவான்கள், மனசாட்சிப்படி காரியம் ஆற்ற வேண்டுமே தவிர, பிறர் விருப்பத்திற்காகச் செய்யக் கூடாது.
அரசன் அல்லாத கண்ணன், எவ்வாறு முதல் மரியாதைக்குத் தகுதியுடையவன் ஆவான்? கண்ணன் என்ன அறிவில் சிறந்த வனா? மாடுகளின் பின்னால் போகின்ற வன்தானே! வயதில் மூத்தவனா? இந்தச் சபையில், வயதில் மூத்த அவனுடைய தந்தை வசுதேவர் இருக்கும்போது, அவ னுக்கு எவ்வாறு முதல் மரியாதை கொடுக்க லாம்? அப்படி கொடுத்தாலும் அவன் எவ்வாறு ஏற்கலாம்? கிருஷ்ணன் என்ன சிறந்த ஆசாரியனா? அந்தத் தகுதி துரோண ருக்கு அல்லவா இருக்கின்றது. அவருக் கல்லவா கொடுத்திருக்க வேண்டும்; மேலும்,குருவம்சத்தில், மூத்தவர் வியாச பகவான் உள்ளார், அவர் முதல் மரியாதை பெற உங்கள் கண்களுக்குத் தகுதியற்றவர் ஆகிவிட்டாரா? அரவக் கொடி வேந்தன், வணங்காமுடி மன்னன், துரியோதனன், சாஸ்திரங்களில் மேம்பட்ட அஸ்வத்தாமா. தான வீரன் கர்ணன், மத்திம நாட்டுப் பெருவீரன் சல்லியன், பாஞ்சால நாட்டு மன்னன், இவர்களுக்குப் பெண் கொடுத்த வன் வயதில் மூத்தவன் பெரு வீரன் துருபன், ஆசாரியர் கிருபர், போன்ற தகுதிவாய்ந்த சான்றோர் பலர் இருக்க, இடையர் குலத்திலே பிறந்தவன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். வெண்ணெய் திருடி உண்டவன். அதன் காரணமாகக் கோபியர்க ளிடத்து மத்தினால் மொத்துண்டவன். யசோதையினால், உரலில் கட்டப்பட்ட வன். இத்தகைய “உயர் உயர் பெருமை களை”யுடையவனுக்கா முதல் மரியாதை கொடுப்பது, அவனும் அதனை ஏற்பது! இது அடுக்குமா? அது மட்டுமா தர்ம வானான சராசந்தனுக்கு அஞ்சி, ஓடி கடல் நடுவே உள்ள துவாரகையில் புகுந்தவன் அல்லவா! அதனால், அவனை, அவனி டத்துப் பகையே இல்லாத, பீமனைக் கொண்டு அல்லவா அவனைக் கொன் றான்? தகுதியே இல்லாத இவனுக்கு ‘தருமன்’ என்று பெயர்சூட்டிக் கொண்டி ருக்கின்ற நீ அல்லாமல், வேறு எவன் தருவான்?” என்று கூறிய அவன் கண்ண பிரான் பக்கம் திரும்பி ”கிருஷ்ணனே! மாயக் கிருஷ்ணனே! வெண்ணெய் திருடி உண்டவனே! அதன் காரணமாகக் கோபியர்களால் கட்டிப் போடப்பட்ட வனே! யமுனை நதிக்கரையில் அவர்கள் சேலையை மறைத்து, விளையாட்டுக் காட்டியவனே! சராசந்தனுக்கு அஞ்சி ஓடியவனே! தகுதியற்ற நீ அக்ர பூஜையை எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்? நீ ஏற்றுக் கொண்டதானது, யாகத்திலிருந்து எழுந்த புனித அவிர்ப்பாகத்தை நாய் தின்பது போல உள்ளது.” என்று பலவாறு வைது, தான் அமர்ந்திருந்த, உயர்ந்த ஆசனத் திலிருந்து எழுந்து வெளியே நடந்தான். சிசுபாலன் சினங்கொண்டு வெளியேறியதைக் கண்ட தருமர் ஓடோடிச் சென்று. ”அரசே! நீ பேசிய பேச்சு அறத்தின் பாற்பட்டதன்று. இங்குள்ளவர்களில் வயதில் பெரியவர், தர்மம் அறிந்தவர், கங்கையின் புத்திரனான, பீஷ்மரே ஆவார். அவர் எதையும் அவசரப்பட்டுச் சொல்லமாட்டார். அவர் ஆராய்ந்துதான், கூறியுள்ளார். அதனால் கண்ணபிரானுக்குக் கொடுக்கப் பட்ட, அக்ர பூஜை முறையானதுதான். அதில் தவறு ஒன்றுமில்லை” என்றார்.
தருமனைப் பின்தொடர்ந்து பீஷ்மர், அங்குவந்து சேர்ந்தார். அவர், “பரந்தாம னாகிய கண்ணபிரானுக்குச் செய்யப்பட்ட, அக்ரபூஜையை ஏற்காத இத்துஷ்டனிடம் நம்முடைய நயமான, நல்ல வார்த்தைகள் பயன்படா. கண்ணபிரான் மூன்றுலகங் களும் வணங்கத்தக்க பெருமையுடையவர். அன்று ஆலிலைமேல் பள்ளி கொண்டு, அண்டசராசரங்களைக் காத்தவர். உலக முண்ட பெருவாயன்; அத்தகையவருக்கு, உறவின் பொருட்டு முதல் மரியாதை செய்யவில்லை; அவரே இச் சபையில் உயர்ந்தவர். அவரைத் தவிர உயர்ந்தவர்கள், வேறு யார் இருக்கின்றார்கள்? இருக்க முடியும்? ஆனால் சிசுபாலன் குறுகிய மனப்பான்மையில், சராசந்தனைக் கொல்லக் காரணமாக இருந்தார் என்ற எண்ணத்தில், முதல் மரியாதை செய்ததைக் குற்றமாகக் கருதுகின்றான். அவன் நடுவு நிலையோடு எண்ணிப் பார்க்கவில்லை. அது அவனுடைய விருப்பம். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்” என்றார்.
பீஷ்மர் உபதேசம்
பீஷ்மர் கூறிய வார்த்தைகள், சிசுபாலன் கோபத்தை மேலும் கிளறின. அவன் கோபத்தைக் கண்ட சகாதேவன், “சேதி நாட்டு மன்னன் சிசுபாலனே! அரசர்களில் சிறந்தவர் கண்ணபிரானே, இதில் இரண்டு வித கருத்துக்களே கிடையாது. மேலும் அவர் எங்களால் தொழப்படுபவர்; போற் றப்படுபவர்.உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போருக்கு வரலாம்” என்று கோப மாகக் கூறி அதட்டினான். அப்பொழுது மற்ற அரசர்கள் மௌனமாயிருந்தனர். சிசுபாலனுடைய கோபமோ, அதிகரித்தது அந்த நிலையில் பீஷ்மர் மேலும், “மன்னர் களே! சகாதேவன் கூறியது சரியான வார்த்தையே. அவர் நாம் வணங்கக் கூடிய பரம்பொருள் ; பகவான் இவ்வுலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, யாவரும் காணும்படியாக மானிட வடிவம் தாங்கி இங்கு வந்துள்ளார். அவரே நாராயணன், கேசவன்; தாமோதரன், வாசுதேவன், முகுந்தன், ஸ்ரீதரன், மாதவன், கோவிந்தன், மகா விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், இருடிகேசன், பத்மநாபன், பன்னிரு நாமத்தோன், அவன் பெயர் களைச் சொல்லச் சொல்ல வாய் இனிக்கும், சிந்தை குளிரும்; இம்மைக்கு மட்டுமன்று மறுமைக்கும், அதுவே தாரக மந்திரம். ஆலிலை மேல் பாலகனாய் வளர்ந்து, இவ்வுலகங்களைக் காத்தவன் அவனே; உலகமுண்ட பெருவாயன்1, ஒப்பிலா மாணிக்கம் உலக உயிர்களைப் படைக் கின்ற பிரம்ம தேவனின் தந்தையான அவர், உயிர்கள் எல்லாவற்றிற்கும் பிதாமகராய் உள்ளார்.
“பரத்துவம், வியூக நிலையில் இருந்து காட்சி அளிக்கின்ற அப்பெருமான் விபவநிலையில், கிருஷ்ணபரமாத்மாவாக, நம்மவரைக் காக்கும் பொருட்டு, நம்மீது கருணை கொண்டு, இன்று அவதாரம் செய்துள்ளார். வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமனாவதாரம்,இராமா வதாரம், போன்ற பல அவதாரங்கள் எடுத்த அப்பெருமான், இந்தத் துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்துள்ளார். இந்த அவதாரத்தில், இதுவரை எத்தனையோ அற்புதங்கள் புரிந்துள்ளார். குழந்தையாய் இருக்கும் போதே, வஞ்சனையாய் வந்த பேய்ச்சி பூதனையின் முலையுண்டு, அவள் உயிரைப் போக்கினார். கம்சன் ஏவிய கேசி, சகடாசூரன், முதலான பல அசுரர்களைக் கொன்றார். யமுனை நதி நீர்த்துறையில் காளிங்கன், என்ற கொடிய நாகத்தை அடக் கினார். தன் தாய்மாமன் கம்சன் அனுப்பிய குவலாயபீடம் என்ற யானையைக் கொன்றார். தன் ஆசார்யன் சாந்தீபினியின் மகனைக் கடலுக்குள் இழுத்துச் சென்ற, திமிங்கலத்தைக் கொன்று அம்மகனைக் காத்தார். உலக உயிர்களுக்குத் துன்பம் தந்த நரகாசூரனைக் கொன்று, ஆண்டு தோறும் கொண்டாடும் தீபாவளியை உருவாக்கி னார். இப்படி எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன், அவதாரங்கள் தோறும் பல உயிர்களைக் காக்கின்றான். நீர்க்குமிழி யானது நீரிலேயே தோன்றி, பின் அதி லேயே அமிழ்ந்து போதல், போல பரம் பொருளான ஸ்ரீமந்நாராயணனிடத்துத் தோன்றிய உலக உயிர்கள் அவனிடத்திலே ஐக்கியப்படுகின்றன. ஆதலின் அக்ர பூஜை அப்பெருமானுக்கு, முதலில் செய்வதில் எந்தவிதத் தவறுமில்லை.மாறாக நமக் கெல்லாம் நன்மையே தரும்” என்று கூறினார்.
போருக்கு ஆயத்தமான சிசுபாலன்
பீஷ்மர் இவ்வளவு விளக்கமாகக் கண்ணபிரானுடைய பெருமைகளைக் கூறியும், முடிவு காலமாதலின் சிசு பாலன் அதனை ஏற்கவில்லை. மற்ற அரசர்களை யெல்லாம், ஒன்று சேர்த்துக் கொண்டான். அவர்களைக் கொண்டு, யாக முடிவில் நடைபெறும் அபிடேகமும், கண்ணபிரா னுக்கு நடக்கும் பூஜையையும், நடக்க வொட்டாமல் தடுக்க முற்பட்டான். மேலும் போருக்கு ஆயத்தமானான். இதைக் கண்ட தருமபுத்திரர் மிகுந்த கவலை கொண்டு, பீஷ்மரிடம்,”பிதா மகரே! இந்தப் போரைத் தடுப்பதற்கு ஏதாவது வழி செய்யுங்கள், யாகம் இனிதாக நடைபெற வேண்டும்” என்றார்.
அதற்குப் பீஷ்மர், “தருமபுத்திரரே! அஞ்ச வேண்டாம். உறங்குகின்ற சிங்கத் தைக் கண்டு நாய்கள் குரைப்பது போல, இங்கு கூடியுள்ள அரசர்கள் கண்ணபிரா னுக்கு எதிராகப், போர் தொடுக்க முற்படுகின்றனர். சிசுபாலன் தான் போவது மட்டுமல்லாது அவர்களையும் யமலோ கத்திற்கு, அனுப்பத் திட்டமிட்டுள்ளான் போலும்/ அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றான்” என்று கூறினார்.
இதனைக்கேட்ட சிசுபாலன் மேலும் கோபம் கொண்டு,”ஏ பீஷ்மனே! இடைக் குலத்தைச் சேர்ந்த இந்தக் கண்ணனுக்கா பரிந்து பேசுகின்றாய்! அவன் அறிவில் பெரியவன் என்று எண்ணுகின்றாய். ஆற்றல்மிக்கவன் என்கிறாய்; சராசந்தன் விஷயத்தில், அவன் ஆற்றல் எந்த அளவு என்பது தெரிந்ததுதானே! உனக்கும் அந்தப் பாண்டவர்களுக்கு மட்டும் தான் அவன் உயர்ந்தவன்; கடவுள், எங்களுக்கில்லை” என்று பலவாறு கூறினான்.
இதனைக் கேட்ட பீமசேனன் மிகுந்த கோபங் கொண்டான். தன் கதாயுதத்தை எடுத்தான்; சிசுபாலனைக் கொல்ல முன் வந்தான்.அவனைத் தடுத்த பீஷ்மர், “பீமா! பொறு, பொறு. நீ கோபம் கொள்ள வேண் டாம். அவனுக்கு நேரம் நெருங்கிவிட்டது. அதனால்தான் கண்டபடி வாய்க்குவந்த வாறு உளறிக் கொண்டிருக்கின்றான்” என்று கூறிய அவர் சிசுபாலன் வரலாற் றைக் கூறலானார்.
மூன்று கண்கள் கொண்ட சிசுபாலன்
இந்தச் சிசுபாலன் சேதிநாட்டு மன்னன் மகனாகப் பிறந்தவன். பிறக்கும் பொழுதே மூன்று கண்கள்; நான்கு கைகள் இவனுக்கு இருந்தன. குரலோ, கழுதை கத்துவது போன்றிருந்தது. அந்த அளவு கர்ணகடூர மாயிருந்தது. அதனால் இவன் பெற்றோர் அச்சம் கொண்டனர். அக்குழந்தையை எங்காவது எறிந்துவிடலாம் என்று முடிவு செய்தனர். அப்பொழுது விண்ணிலிருந்து அசரீரி ஒன்று,”மன்னனே! உன் மகன், பெருமை மிக்கவனாக வாழ்வான். அதனால் இவனைப் பற்றி அஞ்ச வேண் டியதில்லை, கலக்கமின்றிக் குழந்தையைக் காப்பாற்று; இவனுக்கு இப்போது மரணம் இல்லை. இவனைக் கொல்லப் போகின்ற வனும் பிறந்துள்ளான்” என்று கூறியது. அவ்வாறு அசரீரியாய்ப் பேசியது ஒரு பூதம் ஆகும்.
அதைக் கேட்டவுடன், இவன் தாயான வள் குரல் வந்த திசையை நோக்கி, கை கூப்பி வணங்கி, “இந்தப் பிள்ளைக்கு எமனாய் உள்ளவன் யார் என்பதை அறிய விரும்புகின்றேன். தயவுசெய்து சொல் லுங்கள்” என்றாள். உடனே அசரீரியாய்ப் பேசிய அப்பூதம்,”எவன் மடியில் இக்குழந்தை தவழும் பொழுது, அதிகப் படியான கண்ணும், கைகளும் மறையுமோ, அவனே இவனுக்கு எமனாவான்,என்று கூறி மறைந்தது.இதைக் கேட்டு அனை வரும் வியந்தனர். அதன் பின்னர் வந்த பல மன்னர்கள், அக்குழந்தையை தங்கள் மடியில் வைத்துக் கொண்டனர். அசரீரி சொன்னபடி ஒன்றும் நிகழவில்லை. சேதிராஜன் மனைவி, பலராமர், கண்ண பிரானுக்கு, அத்தை முறையினள் ஆவாள். ஒரு நாள் இருவரும், தம் அத்தை குழந்தையைக் காண வந்தனர். அத்தையை வணங்கினர். முதலில் பலராமன் குழ குழந் தையை எடுத்து, மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சினாள். ஒன்றும் நிகழ வில்லை. அடுத்து, கண்ணபிரான் அக்குழந் தையை, மடியில் வைத்துக்கொண்டார். மடியில் வைத்துக் கொண்டவுடன், அதிகப் படியான கைகளும், கண்ணும், உடனே மறைந்தன. இதனைக் கண்டு சேதிராஜன் மனைவி, கலக்கமுற்றாள். கண்ண பிரானிடம் அப்பெருமாட்டி, “கண்ணா! நீ எனக்கு ஒருவரம் தரவேண்டும்” என்றாள். கண்ணபிரான் அதற்கு, “என்ன வரம் வேண்டும் அத்தையே! கேளுங்கள் தருகின் றேன்” என்றார். அதற்கு அவள், “கண்ணா! மணிவண்ணா! என்மகன் செய்யும் பிழை களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றாள். கண்ண பிரான், அதற்கு, “அத்தையே! எத்தனை பிழைகள் செய்தா லும், நான் பொறுத்துக் கொள்வேன், ஆனாலும் அத்தையே! அதற்கு ஓர் எல்லை இருக்கவேண்டும் அல்லவா! வேண்டு மானால் உங்கள் மனத் திருப்திபடி இவன் செய்கின்ற நூறு பிழைகளையோ, அல்லது வசவுகளையோ பொறுத்துக் கொள்கிறேன். அதற்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்பொழுது, அவனைத் தண்டிப்பேன்” என்று கூறினார். அவளும் அதனை ஏற்றுக் கொண்டாள்.
பீஷ்மரை நிந்தித்த சிசுபாலன்
இந்தச் சிசுபாலனுக்கு தனக்கு இக் கண்ணபிரான்தான் எமன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் இந்தச் சிசுபாலன் தன் தாய்க்குக் கொடுத்த வரத்தினால். இவன் தன்னைக் கொல்ல மாட்டான் என்ற அசட்டுத் தைரியத்தில், அவரைப் போருக்கு அழைக்கின்றான். வீணாக வைது கொண்டிருக்கின்றான். என்றாலும், இன்று கண்ணபிரானின் திருச் சக்கரத்தால் மாளத்தான் போகின்றான்” என்று பீஷ்மர் பீமனிடம் கூறினார். அதனைக் கேட்ட சிசுபாலன், மிகுந்த கோபத்துடன், “பீஷ்மா! எப்பொழுதும் இந்த மாடு மேய்க்கின்ற இடையனையே, புகழ்ந்து கொண்டிருக்கின்றாய். புகழ்ந்து பேச தகுதி வாய்ந்த மன்னர்கள், பலர் இருக்கின் றார்கள். வணங்காமுடி மன்னன் துரியோத னன் இல்லையா? தான வீரன் கர்ணன் இல்லையா? பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் இல்லையா? இன்னும் பகதத்தன், விராடன், சகுனி, போன்ற பல அரசர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாரேனும் ஒருவருக்கு முதல் மரியாதை செய்திருக்கலாம். இதன் மூலம் நீ மற்ற அரசர்களை, அவமதித்துவிட்டாய்” என் றான்.
சிசுபாலன் பேச்சைக் கேட்டு, மற்ற மன்னர்கள் பீஷ்மர் மேல் கோபம் கொள்ள லானார்கள். அவர்கள், “இந்த பீஷ்மன் மகாகர்வி. வயது முதிர்ந்தாலும், இவனிடத் துள்ள செருக்கு அடங்கவில்லை. இவனை முதலில் அனைவரும் ஒன்று சேர்ந்து கொல்ல வேண்டும்” என்றனர்.
பீஷ்மர் ஆவேசம்
இதனைக் கேட்ட பீஷ்மர் கோபமுற்று, ”என்னைக் கொன்றாலும் கொல்லுங்கள். எரித்தாலும் எரியுங்கள். உங்களை நான் தூசாகக்கூட மதிக்கமாட்டேன். நாங்கள் கண்ணபெருமானுக்குத்தான், முதல் மரியாதை கொடுப்போம். இதை வேண்டா மென்று சொல்வோர் போருக்கு வரட்டும். எம்பெருமான் சங்கு சக்கராயுதத்தினால் இறக்கத் தயாராய் இருக்கட்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.
இதனைக் கேட்டுச் சிசுபாலன், ஆத்திரம் அடைந்து, “அடே கண்ணா! உன்னைப் போருக்கு அழைக்கின்றேன். தைரிய மிருந்தால், என்னுடன் போரிடு; உனக்குக் காலமெல்லாம் தொண்டு செய்கின்ற பாண்டவர்களையும், அவர்கட்குத் துணையாக வருகின்றவர்களையும், இப்போதே கொல்லப் போகின்றேன். பாண்டவர் செய்த மரியாதையை, அரசனல்லாத நீ ஏற்றுக்கொண்டாய்; ஆதலின் முதலில் கொல்லப்படத்தக்கவன் நீயே” என்று கூறி, அங்கிருந்த அரசர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, கண்ணபிரானிடம் போரிட அந்த அவையைவிட்டு வெளி யேறினான். தனக்கு ஒரு கருத்துப் பிடிக்க வில்லையென்றால், இதிகாச காலத்தி லிருந்தே ‘வெளிநடப்பு’ செய்வது என்பது இருந்தது என்பதை இதன்மூலம் அறிய லாம்.
கண்ணன் போருக்கு தயாராகுதல்
சிசுபாலன் போரிட எழுந்ததும், கண்ணபிரான் கையில் திருச்சக்கரத்தையும் கதையையும் எடுத்துக் கொண்டு,தேரில் கருடக்கொடி பறக்கப், போருக்குத் தயா ரானார். பின்னர் தனக்குத் துணையாக வந்த மன்னர்களை நோக்கி, “மன்னர்களே! நீங்கள் தைரியத்துடன், உங்கள் சேனை களுடன் புறப்படுங்கள். இவன் எனக்குப் பல தீங்குகள் செய்துள்ளான். என் அத்தை மகனாய் இருந்தும், துவாரகையைக் கொளுத்தினான். ஒன்றல்ல பல யாதவப் பெண்களை, இழுத்துச் சென்றுள்ளான். இவை போன்ற பல தீமைகள், எனக்குச் செய்துள்ளான். இவன் மிகவும் கொடிய வன்; எங்கள் குலத்திற்கு விரோதி, இவன் செய்யும் நூறு குற்றங்களைப் பொறுப் பதாக, இவன் தாய்க்கு நான் வாக்குக் கொடுத்துள்ளேன். அதனால்தான் பொறுத் துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நூறு குற்றங்கள் புரிந்துவிட்டான். இனி பொறுப்பதற்கு இல்லை. இவன் என் கையால் மடிவது உறுதி” என்று உறுதி யாகக் கூறினார்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட சிசு பாலன், மேலும் ஆத்திரம் அடைந்தான். அதனால் அவன், “அடே வெண்ணெய்த் திருடியவனே! சூரியன், சந்திரன், அக்கினி குலத்தைச் சேர்ந்த புகழ்வாய்ந்த மன்னர்கள் இந்தச் சபையில் இருக்கவும், வீரத்தின் காரணமாகவா, வலிமையின் காரணமாகவா, செல்வச் செழிப்பின் காரண மாகவா, சாதாரண இடைக்குலத்தைச் சேர்ந்த உனக்கு, அக்ரபூஜை அளித்தார்கள். பிறந்த பொழுதே நீ தந்தை வசுதேவரும் தாய் தேவகியும் வணங்கி நிற்க, நீ செம்மாந்து இருந்தாய். ஒருத்தி மகனாய்ப் பிறந்து. ஒருத்தி மகனாய், வசுதேவர் தலையில் சுமந்து யமுனை ஆற்றைக் கடந்து சென்றுவிட்டு விட, நீ ஆயர் பாடியில் நந்தகோபன் மகனாக வளர்ந்தாய். உனக்குப் பால் கொடுக்க வந்த பூதனையை, அவளுடைய முலைப்பாலை உறிஞ்சியே, அவளைக் கொன்றாய். இடைச்சாதிப் பெண்களின் வீடுகள்தோறும் வெண்ணெயுண்டு, அதனால் மத்து அடி யுண்டு மொத்துண்டு, தயிர்ப் பானையில் பதுங்கி, ததி பாண்டவன் கருணையினால் அவனுக்கு மோட்சம் அளித்து, வெளி வந்தவன் அல்லவா நீ! விளாமரத்தின் மீது இளங் கன்றை எறிந்து இரண்டையும் அழித்தாய்.
யமுனை நீர்த்துறையில் காளிங்கன் என்ற ஐந்தலை நாகத்தின்மீது ஏறி மிதித்தாய். பறவையின் வாயொடு அலகையும் பிளந் தவன் அல்லவா நீ! அதுமட்டுமா? இடைச் சாதிப் பெண்களின் புடவைகளைக் கவர்ந்து, அவர்களை உன்னை வணங்கு மாறு செய்து, பின்னர் அப்புடவைகளை அவர்களுக்குக் கொடுத்தாய்; இந்திர னுக்காக சமைத்த அறுசுவை உணவை நீயே உண்டு, அதனால் அவன் கோபித்து ஏவிய ஏழு மேகங்கள் பொழிந்த பெரு மழையை, அன்று கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்துத் தடுத்து, அவன் பெருமையைக் குலைத்தாய்! சராசந்தனுக்கு அஞ்சி கடல் நடுவே துவாரகைப் பட்டினத்தை நிறுவிக் கொண்டாய்” என இவ்வாறு கூறிக் கண்ண பிரானைப் பழிக்கலானான். பின்னர் கண்ணனை நோக்கி, “நீ எனக்கு அருள் புரிந்தாலும், சினங்கொண்டு அழித்தாலும் ஒன்றுதான்” என்று கூறினான். அவன் கூறியன அனைத்தும் பழிப்பது போலப் புகழ்தல், என்னும் வஞ்சப்புகழ்ச்சியாகக் கொள்ளலாம்.
சக்கராயுதத்தினால் கொல்லுதல்
இறுதியில் சிசுபாலன், “கண்ணா, உன்னோடு போர் புரிய வேண்டுமென்ற விருப்பம், எனக்கு நீண்ட நாட்களாக இருக்கின்றது. அது இன்று நிறைவேறப் போகின்றது; இன்று உன்னையும் இந்தப் பாண்டவர்களையும், உனக்கு முதலில் அக்ரபூஜை கொடுக்கச் சொன்ன பீஷ்மரை யும், கொல்லப் போகிறேன் . தைரியமிருந் தால் எடு உன் பஞ்சாயுதங்களை, நானும் என் ஆயுதங்களை உன்மேல் தொடுக் கிறேன். இல்லையேல் தடுத்துக்கொள்” என்று கூறி, சிசுபாலன், கண்ணபிரான் மேல் கூர் முனையுள்ள அம்புகள் பலவற்றை ஏவினான். கண்ணபிரான் அவன் ஏவிய அம்புகள் அனைத்தையும், தன் சார்ரங்கம் என்னும் வில்லிலிருந்து தொடுத்த அம்புகளினால், தடுத்து அழித் தார். இருவரும் சளைக்காமல் போரிட்ட னர். பலவிதமான மாயைகள் புரிந்து, சிசுபாலன் கடுமையாகப் போரிட்டான். கண்ணன் சளைக் காமல் அவற்றை எளிதில் தடுத்து அழித்தார். பின்னர், சிசுபாலன் விட்ட அம்பு களினால் கண்ணன் தேர்க் குதிரைகள் அடிபட்டு, அலறலாயின. யார் வெற்றி கொள்வார்கள் என்ற நிலையில் லாது கடும்போர் புரிந்தனர். கண்ணபிரானின் தேர்ப்பாகன் தாருகன், “மாதவா! கேசவா! மதுசூதனா. இருவரும் சளைக்கா மல் பெரும்போரை நடத்துகின்றீர்கள். இது போல நடந்தால், இந்தப் போர் முடிய இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ? அறியேன். எனவே தங்கள் சக்கராயுதத்தை அச்சிசுபாலன் மேல் பிரயோகியுங்கள்; போர் முடிவுக்கு வரும்” என்றான்.
அதைக் கேட்டு கண்ணபிரான், “சனகாதி முனிவரின் சாபம் காரணமாக, வைகுண்ட வாசலில் திருதயுகத்தில் இருந்த ஜயவிஜயர் என்ற துவார பாலகர்கள், திதியின் மைந்தர்களாக இரணியகசிபு, இரணியாட்சன் ஆகப் பிறந்தனர். திருமாலாகிய நான் வராக அவதாரம் கொண்டு இரணியாட் சனையும், நரசிம்மாவதாரம் கொண்டு, இரணிய கசிபுவையும், கொன்று அருள்புரிந்தேன்.
திரேதாயுகத்தில் இராவண கும்ப கர்ணனாகப் பிறந்த இவர்களை, இராமாவதாரம் எடுத்து, சீதாப்பிராட்டியைச் சிறைப் பிடித்ததைக் காரணமாகக் காட்டிக் கொன்று அருள்புரிந்தேன். இந்தத் துவா பரயுகத்தில் அந்தத் துவார பாலகர்கள், சிசுபாலன், தந்திவர்க்கனாகப் பிறந்துள்ளார்கள். இப்பொழுதும் இந்தச் சிசுபாலன் எனக்கு எதிரியாக இருந்து, எனக்குத் தொல்லை கொடுத்த வண்ணம் இருக்கின்றான். எனவே என்னுடைய சக்சராயுதத்தினால் இப்பொழுது இவனை வீழ்த்தி, மீண்டும் பரமபதவாசல் துவார பாலகனாய் அனுப்புவேன்” என்று கூறி, தன் திவ்வியமான திருச்சுதர்சனம் என்னும் சக்கரத்தை எடுத்தார். அதனை அவன் மீது ஏவினார், அது விர்ரென்று சுழன்று, சுழன்று, சென்று சிசுபாலனின் தலையைத் துண்டித்து, மீண்டும் எம்பெருமான் பால் வந்து சேர்ந்தது.அவனும் மலையெனக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் இருந்து அழகிய பேரொளி, கண்டவர்களைக் கவர் கின்றவண்ணம் புறப்பட்டு, எம்பெரு மானை அடைந்து, அப்பெருமானை வணங்கி, அவரோடு சேர்ந்தது. இக்காட்சி யைக் கண்டவர்கள், வியப்பினால் தன்னை மறந்து சிறிது நேரம் இருந்து, பின்பு சுயவுணர்வு பெற்றவராய், எம்பெருமானை மனமாரப் போற்றித் துதித்தார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். முனி வர்கள், பல்லாண்டு பாடி வாழ்த்தினர்; பீஷ்மரும், பாண்டவர்களும் வணங்கிப் போற்றினர். அப்போது தர்மர் தன் தம்பி களைப் பார்த்து, “சிசுபாலனை அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய் யுங்கள்; கால தாமதம் வேண்டாம்” என்று கட்டளையிட்டார். அவரின் கட்டளைப்படி சிசுபாலனின் உடலை, நல்லடக்கம் செய்தனர். பின் கண்ணபிரானின் ஆணையால், சிசுபாலனின் மகனுக்கு முடி சூட்டப்பட்டது.
அதன் பின்னர் யாகமானது கலகங்கள் எல்லாம் அடக்கப்பட்டு, முறைப்படி நிறைவேறியது, அந்த யாகத்தைக் கண்ண பிரான் பாதுகாப்பாக இருந்து, சிறப்புடன் முறைப்படி நடத்திக் கொடுத்தார்.
வியாசர்,தௌமியர் போன்ற முனிவர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர். வறியவர்க்கும், அந்தணர்க்கும் ஏராளமாகத் தானம் வழங்கப்பட்டது. அப்பொழுது தருமபுத்திரர் அரசர் அந்தஸ்திலிருந்து, உயர்ந்த அரசர்க்கு அரசர் ஆகிய சக்கர வர்த்தி, என்னும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றார். அதன் மூலம் குருவம்சத்தின் புகழ் மேலோங்கியது. வந்திருந்த அனை வர்க்கும், அவரவர்க்கும் ஏற்பத்தக்க மரியாதை செய்து தருமரும் பாண்டவர்களும், வழி அனுப்பி வைத்தனர். கண்ணபிரானும் பாண்டவர்களிடமும், குந்தி தேவியிடமும், திரௌபதியிடமும், சுபத்திரையிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு துவாரகை சென்றார். பாண்டவர்கள் இந்திர பிரத்தம் திரும்பினர். அங்கு அவர்களுடன் துரியோதனன், சகுனி, துச்சாதனன், மட்டும் சில காலம் உடனிருந்தார்கள். பீஷ்மர், விதுரர், திருதராட்டிரர், துரோணர், அஸ்வத்தாமா, முதலானோர் விடைபெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன், அஸ்தினாபுரம் சென்றனர். துரியோதனன், அங்கு சில காலம் தங்கி யிருந்த காரணத்தில் ஏற்பட்ட பொறாமையே, பின்னால் அவன் நடத்திக் காட்டிய அதர்மச் செயல்களுக்குக் காரணமாயிருந்தது எனலாம்.