காண்டவ வன தகனத்தில், தப்பிப் பிழைத்தவை தக்ஷகன், மயன், அசுவ சேனன் என்னும் தக்ஷகனின் பாம்புக்குட்டி, மந்தபாலனின் கரிக்குருவியும் அதன் நான்கு பறவைக்குஞ்சுகளும் என ஆதி பருவத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த நால்வரில் மயன் என்பவன், ஒரு தேவதச்சன். காசியப முனிவருக்குத் திதியின் வயிற்றில் பிறந்தவன். அசுரர்க்குத் தச்சனாகவும் விளங்கியவன். சிற்ப சாத்திரம் செய்தவன் இவனே என்பர். மாளிகைகளையும், அரண்மனைகளையும், சங்கற்ப மாத்திரையாலே அற்புதமாக நிர்மாணிக்கும் ஆற்றல் படைத்தவன்; இவனுக்கு மாயாவி, துந்துபி என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தனர். இராவண னுடைய மனைவியும் கற்பில் சிறந்த நங்கையுமாக விளங்கிய, மண்டோதரி இவன் மகளேயாவாள். இவனை அசுரர் களின் கட்டளைகளைச் சிறப்பாகச் செய்யும் வேலைக்காரன் என்றே கூறலாம்.
காண்டவ வனம் எரியும்போது மயன். தக்ஷகனுடைய வீட்டில் அகப்பட்டுக் கொண்டான். அதனால், அவன் அந்த நெருப்புச் சுவாலையிலிருந்து தப்பி வெளியே ஒடினான். இதனைக் கண்ணபிரான் கண்டார். அப்பொழுது அக்னி தேவன் அவனைக் கொன்றுவிடும்படி அக்கண்ணபிரானைத் தூண்டினான். அப்பெருமானும் அவன் வேண்டுகோளை ஏற்று, அவனைக் கொல்லத் தம் சுதர்சனத் திருச்சக்கரத்தைக் கையில் எடுத்தார். அதனைக் கண்டு அஞ்சி மயன், ‘அர்ச்சுனா! என்னைக் காப்பாற்று’ என்று அவனிடம் சரண் புகுந்தான். அருச்சுனனும் அவனுக்கு அபயமளித்து, ‘மயனே! பயப்படாதே’ என்று ஆறுதல் கூறினான். தன் மைத்துனன் அர்ச்சுனன், அவனுக்கு அபயம் அளித்ததை அறிந்தவுடன் அப்பெருமான் அவனைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டார். ஆக, அன்று அருச்சுனனின் கருணை யினால் தெய்வத் தச்சனாகிய மயன் பிழைத் தான், அப்பொழுது காண்டீபம் என்னும் உயர்ந்த வில்லையும், நல்ல உயர்ந்த படைக் கலங்களையும், காற்றெனக் கடுகி ஓடும் தேரையும், கொடியையும், வெள்ளைக் குதிரைகளையும், அக்னி பகவானிடமிருந்து பெற்றதனால் அர்ச் சுனன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
மயன் கட்டிய மணிமண்டபம்
அப்பொழுது அர்ச்சுனனால் காப்பாற்றப் பட்ட மயன், அவன் செய்த நன்றியை நினைந்து நினைந்து பலமுறை வணங்கி, ”குந்தியின் மைந்தனே! அருச்சுனா! சீற்றம் கொண்ட கண்ணபிரானிடத்திருந்தும், அக்னி தேவனிடத்திருந்தும், என்னைக் காப்பாற்றினாய். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? மற்றவர் களால் செய்ய முடியாததும், பலர் கண்டு வியப்படையக் கூடியதுமான ஏதேனும் ஒன்றை உனக்குச் செய்ய விரும்புகின்றேன். விருப்பமானதைச் சொல்” என்று கேட்டுக் கொண்டான். அர்ச்சுனன் முதலில் எதுவும் வேண்டாமென்று மறுத்தான். ஆனாலும் மயன் விடாமல் வற்புறுத்தவே, “கண்ண பிரான் என்ன சொல்கின்றாரோ, அதைச் செய்க” என்று கூறிக் கண்ணபிரான் விருப்பத்திற்கு விட்டுவிட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணபிரான், “சிற்பிகளில் சிறந்தவனே! இப்பூவுலகில் தரும புத்திரருக்கு விருப்பமான ஓர் அழகிய மணிமண்டபத்தை யாவரும் .கண்டு வியப்படையும்படி கட்டுக” என்று கூறினார். மயனும் அவ்வாறே செய்வதாக ஒத்துக்கொண்டான்.
மயன் சிறிது காலம் மண்டபம் கட்டுதல் சம்பந்தமாய்ப் பல்வேறு சிந்தனைகள் செய்து, கண்ணபிரானுடனும், பாண்டவர் களுடனும், ஆலோசனை செய்து அவர் களின் அனுமதியைப் பெற்று, ஒரு நல்ல நாளில் மணிமண்டபத்தைக் கட்டத் தொடங்கினான்.
இதற்குபின் கண்ணபிரான், பாண்ட வர்கள், அன்னை குந்தி, திரௌபதி, சுபத்திரை, தௌமியர் போன்ற அனைவ ரிடமும் விடைபெற்றுக்கொண்டு “நீங்கள் நினைத்த நேரத்தில் நான் வருவேன்” என்று உறுதி கூறி, தாருகன் தேரோட்ட, துவாரகையை அடைந்தார்.
கண்ணபிரான் துவாரகைக்குச் சென்ற பின், மயன் கைலாசத்திற்கு வடக்கிலுள்ள மைந்நாகமலையைச் சார்ந்த பிந்துஸரஸை அடைந்து, மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்ற படிகக் கற்களையும், பல்வகையான இரத்தினங்களையும், வேண்டிய மற்ற பொருள்களையும் எடுத்துக் கொண்டு வந்ததோடு. நூறாயிரம் சுதாயுதங்களுக்குச் சமமான கதாயுதம் ஒன்றையும், தேவதத்தம் என்னும் சங்கினையும், ம். உடன் கொண்டு வந்தான். உயர்ந்த அந்தக் கதாயுதத்தைப் பெருவீரனாகிய பீமசேனனுக்குக் கொடுத் தான். தேவதத்தன் என்னும் அச்சங்கை வில்லுக்கு விசயன், எனப்படும் அர்ச்சுன னுக்குக் கொடுத்தான்.
அதன்பின் சில நாட்கள் கழித்து, மனதில் பலவிதமாகப் பல நாட்கள் ஆராய்ந்து, எல்லாப் பருவங்களின் சிறப்புக்கள் அடங்கிய மணிமண்டபம் ஒன்றை. அழகான முறையில் கட்டத் தொடங்கி னான். பதினாயிரம் முழம் நீளம், அகல முடையதாய், அம்மணி மண்டபத்தை உருவாக்கினான். அந்த மணிமண்டபத்தின் கண், பொன்மயமான மரங்கள் பலவற்றை உண்டாக்கினான். வானளாவிய உயரம் கொண்ட அம்மணிமண்டபம், சூரிய சந்திர சபையைப் போல ஒளி உள்ளதாய் விளங் கியது. மேலும் அம்மண்டபத்தின் நடுவில் தாமரை, குவளை, போன்ற மலர்கள் பூத்துக்குலுங்கும்படியான நீர் நிறைந்த குளம், ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும் வேலைப்பாடுகள் அமைந்த படிக்கட்டுக்கள் பொருத்தப் பட்டிருந்தபடியால், அக்குளத்தின் மையப் பகுதி, நீர் நிறைந்த குளமா அல்லது பளிங்குக் கற்களால் ஆகிய தரையா,என்று தெரிந்து கொள்ள முடியாது பார்த்தவர்கள் தடுமாறினர்.
இந்த நீர் நிலையைச் சுற்றி, ஏராளமான மரவகைகள், செழிப்புடன் விளங்கின. இந்த அழகிய மண்டபத்தை எண்ணாயிரம் பேர், பதிநான்கு மாதங்களில் கட்டி முடித்தனர். மண்டபத்தை முற்றிலுமாகக் கட்டி முடித்தபின், அச்செய்தியைத் தருமரிடம் கூறினான். அதன்பின் அர்ச்சுன னுக்குப் பரிசுப் பொருள்களாக, வேகமாகச் செல்லக் கூடிய வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், கோடி சூரியஒளிபோல் ஜொலிக்கக்கூடியதுமாகிய ஓர் அழகிய தேரையும், யுத்தக் களத்தில் பறந்து, விளங் கும் கொடிகளுக்கெல்லாம் மேம்பட்டுவிளங்கும், அனுமக் கொடியையும் கொடுத்து, அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
நாரதர் போற்றிய மண்டபம்
பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில், தருமபுத்திரர் தன் தம்பியர்களுடனும், தாய் குந்தியுடனும், திரௌபதியுடனும், சுபத்திரையுடனும் அந்த மணிமண்டபத் தினுள் பிரவேசம் செய்தார். அன்று வேதம் ஒதும் அந்தணர்களுக்குக் கோதானம், பூதானம், போன்றவற்றை மகிழ்வோடு வழங்கினார். மற்றவர்களுக்குச் சிறந்த அன்னதானம் செய்தார். அறிஞர் பெருமக்க ளுக்கு வேண்டிய பரிசுப் பொருள்களை வழங்கினார்.தர்மராசர், சபா மண்டபத்தில் சிம்மாசனத்தில் செம்மாந்து வீற்றிருக்க, ஆடல் பாடல்கள், இனிமையாக நடந்தன. முனிவர்களும், சான்றோர்களும்,நல்ல நீதிக்கதைகளை எடுத்துக் கூறினர்.
இவ்வாறு எந்தவிதக் கவலையும் இல்லாது, மகிழ்ச்சியுடன் ஆட்சி புரிகின்ற காலத்து, நான்முகனின் நற்புதல்வராகிய நாரதர் வீணை ஏந்தியபடி அங்கு வந்தார். அவரை, தருமபுத்திரர் தன் தம்பியரோடு மகிழ்ச்சியுடன் வணங்கி வரவேற்று, இருக்கை தந்து உபசரித்தார். அப்போது மயன் கட்டிய மண்டபத்தைச் சுற்றிலும் பார்த்துவிட்டுப், பெரிதும் பாராட்டிப் பேசினார். “இது போன்ற சபா மண்டபம், செல்வத்துக்கு அதிபதியாகிய குபேரனின் அளகாபுரியிலும் இல்லை; இம்மண் ணுலகத்திலும் இல்லை” என்றார். மேலும் அவர், “அயோத்தி என்னும் நகரை ஆண்ட திரிசங்கு,என்னும் மன்னனுக்கும் சத்திய வதி என்பவனுக்கும் மகனாகப் பிறந்தவன் அரிச்சந்திரன் என்பவன் ஆவான். இவன் தன் காலத்தில், எல்லா அரசர்களையும் வென்று அரசாண்டான். அம்மன்னன் கட்டளைப்படி, பல மன்னர்கள் கொண்டு வந்த திறைப் பொருளைக் கொண்டு உயர்ந்த இராசசூய யாகத்தைச் சிறப்புடன் செய்தான். அதனால், அவன் இந்திரனுக்கு நிகராக அவன் சபையில் அமர்ந்துள்ளான். இதனை அறிந்த உன் தந்தையான பாண்டு மன்னன், நான் பூவுலகம் வர இருப்பதை அறிந்து, உன்னையும் அந்த உயர்ந்த இராச சூய யாகத்தைச் செய்யும்படி கூறினார். எனவே நீ உன் தந்தை, பாண்டுவின் விருப் பத்தை நிறைவேற்றுவாயாக. அவ்வாறு செய்தால் நீயும் உன் முன்னோர்களும், தேவேந்திரன் சபையில் முக்கியமான இடத்தைப் பெறுவீர். ஆனாலும், அந்த யாகத்தைச் செய்வதால் உங்களுக்குப் பல துன்பங்கள் நேரிடலாம். அவையெல்லாம் கண்ணபிரானின் திரு அருளினால் சூரி யனைக் கண்ட பனிபோல நீங்கும்” எனக் கூறி, தன் இருப்பிடம் போய் சேர்ந்தார்.
இராஜசூய யாகம்
நாரதர் சென்ற பின்னர், தருமபுத்திரர் தன் தம்பியருடனும், அமைச்சர் பெருமக்க ளுடனும், தௌமியர், வியாசர் போன்ற முனிவர்களுடனும், முக்கியமான உற வினர்களுடனும் கலந்து இராசசூய யாகம் செய்வதைப் பற்றி ஆலோசிக்கலானார். அப்போது தருமபுத்திரர் அவர்களிடம், “அரசர்க்கு அரசராக இருப்பவரே செய்யத் தக்க, அப்பெரிய இராசசூய யாகத்தைச் செய்ய நான் தகுதியுடையவன்தானா?” என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் அந்த ஆலோசனையில் கலந்து கொண் டவர்கள் அனைவரும், “தருமபுத்திரரே! எல்லா அறநெறிகளையும் அறிந்து அவற்றின்படி நடக்கக்கூடியவர் நீர். எனவே இராசசூய யாகம் செய்ய நீர் முற்றி லும் தகுதியுள்ளவரே” என்று கூறினர்.
துவாரகைக்கு தூதர்
அதன்பின் தருமபுத்திரர், தங்களுக்கு என்றும் நல்வழி காட்டியாக விளங்கும் கண்ணபிரானைக் கலந்து, ஆலோசிக்க வேண்டும் என்று கருதி, அவரை அழைத்து வருமாறு, இந்திரசேனனைத் தூதனாகத் துவாரகைக்கு அனுப்பினார். தூதரும் விரைந்து சென்று துவாரகையை அடைந்து, கண்ணபிரானைக் கண்டு வணங்கி, ‘பெரு மானே! தருமபுத்திரர் தம் சுற்றத்தோடும். நண்பர்களோடும் தங்களைக் காண விரும்புகிறார்” என்றான். உடனே கண்ண பிரானும் வசுதேவரிடம் மற்ற சுற்றத்தாரிடமும் விடைபெற்றுக்கொண்டு இந்திரசேனனுடன் வந்தடைந்தார். இந்திரபிரஸ்தம்
இந்திரபிரஸ்தம் வந்தடைந்த கண்ண பிரானைக் கண்டவுடன், தருமபுத்திரர் அவரை வணங்கி, “பெருமானே! நான் இராசசூய யாகம் செய்ய விரும்பு கின்றேன். ஆனால், அதனை என்னுடைய ஆசையால் மட்டும் நிறைவேற்றிவிட முடியாது. எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியும் என்பது, உமக்கு நன்றாகத் தெரியும். எனவே அதனைச் செய்ய தகுந்த வழிகளை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்” என்று வேண்டினார். இதனைக் கேட்டவுடன் கண்ணபிரான், “அரசே! எல்லாக் குணத்தாலும் மேம்பட்டு விளங்கும் நீவிர், இராசசூய யாகம் செய்யத் தகுதியானவர். இதில் இரண்டுபட்ட கருத்துக்களுக்கு இடமே இல்லை. இத்தகைய யாகத்தைத் தங்கு தடையின்றி செய்யவேண்டுமானால், பல அரசர்களை வெல்லவேண்டும். துரியோதனன், பீஷ்மர், துரோணர், அசுவத்தாமா, கிருபர்,கர்ணன், சகுனி, சிசுபாலன் ஆகியவர்களை வெல்ல வேண்டும். அதுமட்டுமல்லாது ஜராசந்தன் என்பவனை முக்கியமாகக் கொல்ல முயற் சிக்க வேண்டும் இது என் யோசனை ” என்றார்.
அப்பொழுது தருமபுத்திரர், “நீங்கள் கூறிய அந்த ஜராசந்தன் என்பவன் யார்? அவன் வரலாறு யாது? அவன் ஏன் இன்னும் தங்களால் கொல்லப்படாமல் இருக்கின்றான்?” என்று அடுக்கடுக்காகக் கேட்க, கண்ணபிரான் ஜராசந்தன் வரலாற் றைக் கூறலானார்.
சண்ட கௌசிகர்
“மகத நாட்டில் ‘கிரிவிரஜம்’ என்னும் நகரம் ஒன்று இருந்தது. அதனை வலிமை வாய்ந்த ‘பிருகத்ரதன்’ என்னும் மன்னன் ஆண்டு வந்தான். மூன்று அக்குரோணி சேனைகளும், குபேரனைப் போன்ற பெருஞ்செல்வவளமும், அவன்பால் மிக்கிருந்தன. அவன், காசி ராஜனுக்கு இரட்டையராகப் பிறந்த புதல்வியர் இருவரை மணந்தான். இரண்டு பேரிடத் திலும் சரிசமமாக அன்பு காட்டி வந்த அவன், “நான் எப்பொழுதும் உங்கள் இருவரிடமும் வேறுபாடு காட்டாமல் நடுவு நிலையாக இருந்து செயல் படுவேன்” என்று உறுதி உறு அளித்து, அதன் படி அவர்களுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். எல்லாப்பாக்கியமும் பெற்றிருந்த அவனுக்கு, நீண்ட நாட்களாகப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அதனால். வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் இரு மனைவியருடன் காட்டிற்குச் செல்லலானான்.
ஒருநாள், ஒரு மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த கௌதம வம்சத்தைச் சேர்ந்த சண்டகெளசிகர் என்ற முனிவரைக் கண்டு, அவரை வணங்கி, தனக்குப் புத்திரபேறு இன்னும் வாய்க்காத குறையை எடுத்துக் கூறினான். இதனைக் கேட்டு அம்முனிவர், மனமுருகி, ஒரு மாமரத்தடியின் கீழிருந்து தவம் செய்தார். அப்பொழுது ஒரு மாங்கனி அம்மரத்திலிருந்து, கீழே விழும்பொழுது அவர் மடியில் வந்து விழுந்தது. அந்த மாம்பழத்தை எடுத்த அம்முனிவர், அதற்குப் புத்திர பாக்கியம் கிட்டுவதற் குரிய அரிய மந்திரத்தைச் சொல்லி, “அரசே! உன் எண்ணம் பலித்தது. இனி நீர் தவம் செய்ய வேண்டியதில்லை. இந்த அரிய பழத்தைக் கொண்டு போய், உன் இரு மனைவியர்களுக்கும் கொடு. உனக்கு நிச்சயம் புத்திரபாக்கியம் கிட்டும். இனி நீர் உன் நாட்டிற்குச் சென்று முன்போல நாட்டை இனிது ஆளலாம்” என்றார். அது கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த அம்மன்னன், அக்கனியை சரிசமமாக இரண்டு பாகமாக ஆக்கி, தன் இருமனை வியர்க்கும் சரிசமமாகக் கொடுத்தான். “நடுவு நிலையோடு வேறுபாடு காட்டாது நடந்து கொள்வேன்” என்று உறுதிமொழி அளித்தபடியால், அக்கனியைச் சரிசமமாகப் பகிர்ந்து கொடுத்தான். இருவரும் மகிழ் வோடு உண்டனர். அதனால் இருவருமே கருவுற்றனர். பத்து மாதம் கழித்து, இருவருக்கும், இரு கூறுகள் போட்டது போன்று, ஒரு கண், ஒரு காது, ஒரு கை ஒரு கால், அரை வயிறு, அரை வாய், அரை மார்பு என்ற தோற்றத்தோடு பாதி உட இலுடைய துண்டத்தை, இருவரும் ஈன்றனர். இரண்டு அரையாக உள்ள அத்தேகப் பிண்டங்களைப் பார்த்தவுடன், இரு அரசி யரும் பயந்தே விட்டனர். துயரமும் அடைந்தனர். உடனே அவர்கள் அந்த இரண்டு பாதிப்பிண்டங்களையும் துணி யால் மூடி, தோழியரிடம் கொடுத்து தெருக் குப்பைத் தொட்டியில் எறியச்செய்து விட்டனர்.
குழந்தையை காப்பாற்றிய அரக்கி ஜரை
அன்று இரவு, மாமிசத்தையும், இரத்தத் தையும் தசையையும் புசிக்கும். ‘ஜரை’ என்னும் ஓர் அரக்கி அந்தக் குப்பைத் தொட்டியருகே வந்தாள். அந்தக் குப்பைத் தொட்டியில் ஒரு குழந்தையின் இரண்டு பாதித் துண்டங்கள் தனித்தனியே இருக்கக் கண்டாள். அதனை எடுத்து உண்ண விரும்பினாள். உடனே எடுப்பதற்கு எளிதாயிருக்கும். என அவ்விரண்டையும் ஒன்றாகக் கூட்டி, எடுத்தாள். என்ன ஆச்சரியம்! ஒன்று சேர்த்தவுடன் அப்பிண் டங்கள் வலிமைமிக்க, ஒரு குழந்தையாக ஆகியது. அது மட்டுமல்லாது கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டும் உதைத்துக் கொண்டும், அழ ஆரம்பித்தது. குழந்தையாகப் பார்த்தவுடன் ‘ஜரை’ என்னும் அந்த அரக்கிக்குக் கொல்ல மனம் வரவில்லை. அதனால் மானுடப் பெண் வடிவந்தாங்கி, அக்குழந்தையை எடுத்துக் கொண்டு அரசனிடம் வந்து, ”மன்னவனே! இக்குழந்தை, சண்டகெளசிக முனிவரால் உனக்கு, உன் இரு மனைவியர் மூலமாகப் பிறந்தது. உன் தாதியர்களால் தூக்கி ஏறியப்பட்டு. இரண்டு கூறுகளாகிய பிண்டங்களை ஒன்று சேர்த்து, குழந்தை யாக்கி நான் காப்பாற்றினேன். இனி நீ இதனை வளர்க்கலாம். இவன் என் பெயரைத் தாங்கிப் பெரும் புகழ்பெற்று வாழ்வான் ” என்று கூறி அரசனிடம் கொடுக்க, இரு மனைவியரும் அன்புடன் வாங்கிக் கொண்டனர். குழந்தையைக் கொடுத்த அரக்கியை நன்றியுடன் போற்றினர். ‘ஜரை’ என்னும் அரக்கியால் இருபிண்டங்கள் ஒன்று சேர்க்கப்பட்டுக் குழந்தையாக ஆனதால், அக்குழந்தைக்கு ‘ஜராசந்தன்’ என்னும் பெயரிட்டனர். அக்குழந்தையை மகிழ்ச்சியுடன் சீரும் சிறப்புமாக வளர்க்கலாயினர். அக்குழந்தை யும் செல்வச் செழிப்புடன் வளர்ந்து, இளமைப் பருவத்தைக் கடந்து, மிடுக் குடைய வாலிபன் ஆனான். அதன்பின் பிருகத்ரதன், ஜராசந்தனுக்கு முடிசூட்டி, தன் மனைவியருடன் காட்டிற்குச் சென்று அரிய தவங்களைச் செய்து சொர்க்கம் புகுந்தான். சண்டகௌசிக முனிவருடைய ஆதரவு, அவனுக்கு இருந்தது. அதனால் அவர் கொடுத்த வரங்களையெல்லாம் பெற்று, பதினாயிரம் யானை பலம் கொண்டவனாகி, நாட்டைத் திறம்பட ஆண்டு வந்தான். எல்லா அரசர்களையும் வென்று, அவர்களை மேற்குத்திசைக்கு ஓட்டி விட்டான். மேலும் இவனிடம் போரிட அஞ்சி, பல தேசத்து மன்னர் களும், நாற்றிசையும் ஒடிவிட்டனர். பாஞ் சால மன்னர்களோ இவன் வலிமைக்கு முன் அஞ்சிக் கிடந்தனர். சிசுபாலன், என்பவன் இவன் படைத்தலைவனாக ஆனான். கபட யுத்தம் புரியும், வக்ரன் என்ற மன்னனும் ஹம்ச, டிம்பர்கள் என்ற மன்னர்களும், இவனுக்கு அடங்கினர். கம்சன் என்பவனின் இரண்டு புதல்வியர் களை இவன் மணந்து கொண்டான். (கம்சன் என்பவன் கண்ணபிரானின் தாய்மாமன் என்பது நினைவு கூறத்தக்க ஒன்றாம்.) தன்னுடைய அதீத பலத்தினால் மன்னர்கள் பலரைத் தன் வசப்படுத்தினான்.
நரமேத யாகம்
”நான் கம்சனைக் கொன்றதனால்,என் மீது அவனுக்கு விரோதம் ஏற்பட்டது. அதனால் அவன் வடமதுரையின் மீது, பதினெட்டு முறை மூன்று ஆண்டுகள் படையெடுத்தான். அவனுடன் நானும், என் தமையனார் பலராமனும் கடும் போரிட்டோம். வெற்றி பெற முடியவில்லை. அதனால் கடலின் நடுவே ‘குசஸ்தலி என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, வாழ்கின்றோம். அதுதான் ‘துவாரகை’ என்பதாகும். அங்கு பயமின்றி உள்ளோம்.
“அவன் இப்பொழுது எண்பத்தாறு அரசர்களைச் சிறைபிடித்து வைத்துள்ளான். இன்னும் பதிநான்கு அரசர்களைச் சிறை பிடிப்பானாயின். மொத்தம் நூறு அரசர்கள் சிறையில் அடைபட்டிருப்பர். அவர்களைக் கொண்டு. ‘நரமேத யாகம் செய்யத் திட்டமிட்டுள்ளான். அதை அவன் செய் தால், யாராலும் அவனை வெல்ல முடி யாது. அவனுடைய மாமனார் கம்சனும், ஹம்ச, டிம்பர்களும், இறந்துவிட்டதனால் அவன் தனியனாக உள்ளான், அவனைக் கொல்ல இதுவே தருணம். அதுவும் அவனை மல்யுத்தத்தின் மூலமாகக் கொல்லவேண்டும். அதற்காக என்னுடன் வலிமை வாய்ந்த பீமனையும், வில்லாற் றல் மிக்க விசயனாகிய அர்ச்சுனனையும், அனுப்புக” என்றார்.
தருமர் முதலில் அவ்விருவரையும் அனுப்பத் தயங்கினார். அப்பொழுது பீமன், “அண்ணா! முயற்சி இல்லாத அரசன், பலமுள்ள எதிரியை வெல்வதற் குத், தகுதிவாய்ந்த உபாயங்களை மேற் கொள்ளாதவன், இருந்தும் இல்லாதவனே ஆவான். அவன் அழிந்து போகக் கூடிய வனே. எம்பெருமான் கண்ணபிரானின் உபாயம், நமக்கு இருக்கின்றது. என்னிடம் வலிமை உள்ளது. அர்ச்சுனனிடம் வெற்றி உள்ளது. எனவே, எங்களைத் தயங்காது அனுப்புக. உங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தருவோம்” என்றான்.
ஜராசந்தனைக் கொல்ல புறப்படல்
அடுத்து அர்ச்சுனன், “அறநெறி பிழறாத அண்ணா! என்னிடம் மற்றவர்களை முறி யடிக்கும் திறமை உள்ளது. திறமைமிக்க உயர் க்ஷத்திரிய குலத்தில் பிறந்த நாம், பகைவரை அடக்க, அஞ்சுதல் அழகாகுமா? தாழ்ந்த குலத்தில் பிறந்தவன், திறமையோடு செயல்பட்டு வெற்றி பெற்றால் பெருமை அடைவான். திறமையற்றவன் எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் எத்தகைய ளப் பெற்றி நற்குணங்களைப் ருந்தாலும் தோல்வியே காண்பான். ஒருவன் வெற்றிக்குக் காரணங்கள் அவனுடைய நல் ஊக்கமும் துணிவுமே யாகும். இவை இல்லாத காரணத்தால் பலமுள்ளவனும் தோல்வி அடைவான். இந்த இராச சூய யாகத்தை சீரும் சிறப் புடன் நடத்த உங்களுக்கு எல்லாத் தகுதி களும் இருக்கின்றன. நம்முடைய எதிரி களை வென்று நம் ஆற்றலை வெளிப் படுத்துவோம்” என்றான். அப்பொழுது கண்ணபிரான், ஆற்றல் மிக்க ஜராசந்தனைத் தந்திரத்தினால்தான் கொல்ல வேண்டும், என்று கூறினார். அதன்பின் தரும புத்திரர் கண்ணபிரான் கருத்துக்கு இணங்கி, தம்பியர் பீமனையும், அர்ச்சுனனையும், அவருடன் அனுப்பினார். அதன்பின் அவர்கள் மூவரும் அந்தணர் வேடந்தாங்கி ஜராசந்தன் நகருக்குப் புறப்பட்டனர்.
பல நாடுகளைக் கடந்து மகத நாட்டை அடைந்தனர். பின்னர் ஜராசந்தனின் நகரான, கிரிவிரஜம் வந்து சேர்ந்தார்கள். மகத நாட்டின் தலைநகரான அந்தக் கிரவிரஜத்தின் வாயில் வழியாக உள்ளே நுழையாமல், அந்நகரத்தின் உயர்ந்த குன்றான, சைத்யகத்தின் சந்து வழியாகச் சென்றனர். முன் ஒரு சமயம், ஜராசந்த னுடைய தந்தை பிருகத்ரதன், காளை மாட்டின் வடிவம் கொண்டு வந்த வந்த அசுரன் ஒருவனைப் பிடித்து, அவன் தோலை உரித்து, அந்தத் தோலைக் கொண்டு மூன்று பேரிகைகள் செய்து, இந்த இடத்தில் வைத்திருந்தான். அந்தப் பேரிகைகளை அடித்தால், அவற்றின் சப்தமானது ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்பொழுது தேவர்கள், அங்கு மலர் மாரி பொழிந்து கொண்டே இருப்பர்.
நகருக்குள் நுழைதல்
அந்தப் பேரிகைகளைக் கண்ணன், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் கண்டனர். உடனே அம்மூவரும் அம் மூன்று பேரிகைகளையும், உடைத்து எறிந்தனர். பின்னர் அந்நகரின் மதில் போல் காட்சி அளிக்கும், சைத்யக மலையை நோக்கி விரைந்து நடந்தனர். அம்மலை மிக்க அகலமும்,உயரமும் கொண்டது. சந்தனம், புஷ்பம் போன்றவற்றைக் கொண்டு, வணங்கக்கூடிய தன்மை யுடையது. அத்தகைய அம்மலையின் சிகரத்தை, ஜராசந்தனின் தலையை உடைப்பது போல உடைத்தனர்.அதன் பின்னர், அம்மூவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அந்நகரத் திற்குள் நுழைந்தனர்.
அப்பொழுது நாட்டில் பல அப சகுனங்கள் தோன்றின. இதனை அறிந்த ஜராசந்தன், தோஷ நிவர்த்தியின் பொருட்டு விரதமும் உபவாசமும், மேற்கொண்டான். அந்தண வடிவம் மேற்கொண்டு வந்த அம்மூவரும், ஆயுதங்கள் இல்லா மல், கைகளையே ஆயுதங்களாகக் கொண்டு போரிட எண்ணி, நகரினுள் சென்றனர். அந்த நகரம் எல்லாவிதச் சிறப்புக்களையும், கொண்டதாக இருந்தது. அழகிய பல கடைகள் இருந்தன. ராஜ வீதியில் சென்ற அவர்கள், சில கடைகளுக்குச் சென்று பூமாலைகளையும், கனிகளையும், கற்பூரச் சிமிழையும் எடுத்துக் கொண்டனர். மாலைகளை வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். வெள்ளுடைகளை உடுத்தி னர்; ஒளி வீசும் குண்டலங்களைத் தரித்துக் கொண்டனர். ஆச்சாமரம் போன்ற, வலிமைமிக்க கைகளினால் சந்தனத்தைப் பூசிக்கொண்டனர். அகிற்புகை வாசனை யைப் பற்றினர். அவர்களின் அழகான தோற்றத்தைக் கண்டு கிரிவிரஜ மக்கள் வியப்படைந்தனர்.
மூவரும் வாயில் வழியாகச் செல்லாமல் மதில் வழியாக ஏறிக் குதித்து, ஜராசந்த னின் அரண்மனையை அடைந்தனர். அந்த அரண்மனையின் மூன்று கட்டுக்களைத் தாண்டி, சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் ஜராசந்தன் இருக்குமிடத்தை அடைந்தனர். ஜராசந்தன் அவர்களைக் கண்டவுடன் உயர்குலத்தவர்கள் என்று எண்ணி, எதிர் கொண்டழைத்துச் சாஸ்திரவிதிப்படி வணங்கி, “தங்கள் வரவு நல்வரவாகுக” என்று கூறினான்.
ஜராசந்தனுடன் சந்திப்பு
அப்பொழுது கண்ணபிரான் ஜராசந்த னிடம், “மன்னர் மன்னா! இவர்கள் இருவரும் ஒரு விரதத்தை மேற் கொண் டுள்ளனர். அதனால் நடு இரவிற்குமுன் பேசமாட்டார்கள். அதன் பின்தான் உன் னுடன் பேசுவார்கள்” என்றார். ஜராசந்தன் அவர்கள் அந்தணவடிவத்தில் இருந்தத னால், தங்குவதற்கு யாகசாலையில் ஏற்பாடு செய்து, அரண்மனை சென்று விட்டான்.
நடு இரவு வந்தது. ஜராசந்தன் அந்த அந்தணர்கள் மூவர் இருக்குமிடத்திற்கு வந்தான். அவர்களை வணங்கினான். அவர் களும், அவனை வாழ்த்தினர். பின்னர் ஜரா சந்தன் அம்மூவரையும் பார்த்து, “உங்கள் கைகளில் நாண் உறைத்த காய்ப்புக்கள் தெரிகின்றன. மேலும் க்ஷத்திரியக் குறிப்புக் களைத் தாங்கியுள்ளீர்கள்; அச்சமின்றி சைத்யகமலையின் சிகரத்தை உடைத் துள்ளீர்கள். வாயிலை விட்டு வேறு வழியில் வந்துள்ளீர்கள். நீங்கள் யார்? இங்கு வந்ததற்குரிய காரணம் யாது ?” எனக் கேட்டான். அதனைக் கேட்டவுடன் கண்ணபிரான், தன் இனிமையான குரலில், “நாங்கள் உண்மையில் அந்தணர்கள் இல்லை. நாங்கள் க்ஷத்திரியர்கள்தான். வீரமுடையவர்கள், எதிரிகளின் வீட்டிற்கு வழியல்லா வழியிலும், நண்பர்கள் வீட்டிற்கு நேர்வழியிலும் செல்லலாம். அந்த விதிப்படியே, உள்ளே நுழைந்தோம். நான் ஐம்புலன்களுக்குத் தலைவனாகிய வசுதேவன் மகன் கண்ணபிரான். இவர்கள் பாண்டு புத்திரர்கள். ஒருவன் பீமன், மற்றொருவன் அர்ச்சுனன். எண்பத்து நான்கு அரசர்களைச் சிறை பிடித்துள்ளாய். இன்னும் பதினாறு அரசர்களைச் சிறை பிடித்து நூறு அரசர்களாக்கி, அவர்களைக் களபலி கொடுத்து, நரமேத யாகம் செய்யத் திட்டமிட்டுள்ளாய். அது கொடிய குற்ற மாகும். க்ஷத்திரியகுலநாசம் செய்ய வந்த, உன்னைக் கொல்ல வந்துள்ளோம். சேனைமிகுதியைக் கொண்டு யாரையும் அழிக் காதே: அவமதிக்காதே. சிறைபிடித்துள்ள அரசர்களை விட்டுவிடு. இல்லையேல். எங்களுடன் போரிடு, உன்னை எமலோகத் துக்கு அனுப்பத்தான் வந்துள்ளோம் என்றார்.
கண்ணனுடன் வாக்குவாதம்
அதற்கு ஜராசந்தன், “ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்தவனே! இடைக்குலத்தைச் சார்ந்த நீயா நீயா என் என்னைக் கொல்லப் போகிறாய். நடக்காது. ஏற்கெனவே என்னிடம் மூன்று ஆண்டுகள், பதினெட்டு முறை போரிட்டுத் தோற்றாய். அதனால் என்பால் அச்சம் கொண்டு நீ பிறந்த வடமதுரையைவிட்டு ஓடினாய். ஓடினாய். கடல் நடுவே தஞ்சம் புகுந்தாய். அங்கு பாதுகாப்பாகக் கோட்டைகள் கட்டிக்கொண்டு, அதற்குத் துவாரகை என்று பெயரிட்டு நின் மனைவியரோடும். நின் தமையனோடும், பதுங்கி வாழ்கிறாய். உங்கள் மூவரையும் நான் இன்று கொல்லப்போகிறேன்” என்று கோபமாகக் கூறினான்.
அதற்குக் கண்ணபிரான், “ஜராசந்தனே! வீணாக ஏன் வீரம் பேசிக் கொண்டு திரிகிறாய். உன் வீரத்தை இந்தப் பாண்டவ சிங்கங்களிடம் காட்டு பார்க்கலாம் ” என்றார். ஜராசந்தன் அதைக் கேட்டு, “நான் எப்போதும். யாரையும் வெற்றிக் கொள்ளாமல், இருந்ததில்லை. க்ஷத்திரியர் களைப் பலி கொடுக்கப் பிறந்தவன் நான். உங்களையும் சிறையிலுள்ள க்ஷத்திரிய மன்னர்களுடன் சேர்த்து, பின் நூறாக்கி, ‘நரமேத யாகம் செய்யத்தான் போகிறேன். ஆகையினால் சிறையிலுள்ள அவர்களை நான் விட மாட்டேன். இவர்களையும் போரிட்டுச் சிறை பிடிப்பேன். நான் படைகளுடன் சேர்ந்துப் போரிடுவேன், தனியாக நின்றும் போரிடுவேன். இரண்டு மூன்று பேர் வந்தாலும் அவர்களையும் களையும் எதிர்த்துப் போரிடுவேன். இறுதியில் வெல்லுவேன்” என்றான். பின்னர் அம்மூவரிடமும் போரிட விரும்பிய அவன் முதலில் தன் மகன் சகாதேவனுக்கு முடிசூட்டி, ஆட்சியை அவனிடம் ஒப்ப டைத்தான். பின்னர் போரிடத் தயாரானான்.
பீமனுடன் மல்யுத்தம்
“ஜராசந்தன், யாதவ வம்சத்தவரால் கொல்லப்படத்தகாதவன். க்ஷத்திரியர் களால், கொல்லப்பட வேண்டியவன்” என்பது பிரம்மதேவன் கட்டளை. இதனை மனத்தில் எண்ணித்தான், கண்ணபிரான் தானே அவனைக் கொல்ல முயற்சிக்க வில்லை.
அதனால் போரிட வந்த ஜராசந்தனிடம் கண்ணபிரான். “ஜராசந்தனே! எங்களில் யாரிடம் போரிட விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு ஜராசந்தன், ”கண்ணா! நீ மாடு மேய்க்கும் இடைக்குலத்தைச் சேர்ந்தவன், அதுமட்டுமல்லாது உன்னைப் பலமுறை தோற்கடித்திருக்கின்றேன். அர்ச்சுனனோ, வயதில் சிறியவன். பீமன் தான் எனக்கு ஏற்றவன். ஏனெனில் நானும் அவனும் பதினாயிரம் யானை பலமுள்ள வர்கள். சமமானவனிடம், போர் செய்வது தான் பெருமை . அதனால் இப்பீமனிடம் மல்யுத்தம் செய்ய விரும்புகின்றேன் என்றான்.
ஜராசந்தன் மரணம் அடைதல்
அதனால், பீமசேனன் கண்ணபிரானின் ஆலோசனையையும், ஆசியையும், பெற்றுப் போருக்குத் தயாரான இருவரும் போரிடத் தொடங்கினர். கைகளையே, ஆயுதங்களாகக் கொண்டு போரிட்டனர். ஒருவரையொருவர் உடலால் இடித்துக் கொண்டனர். இடி முழக்கம் போல சப்தமிட்டனர். ஒருவரை யொருவர், குத்திக் கொண்டனர்; அடித்துக் கொண்டனர்; ஒருவர் கால்களையும், ஒரு கைகளையும், மற்றவர் மாறி மாறி முறுக்கிக் கொண்டனர். இரவு பகலாக மாறி மாறிப் போரிட்டனர். பதின்மூன்று நாட்கள் சளைக்காது போரிட்டனர். வெற்றி தோல்வியில்லாது போரிட்டனர். இதனைக் கண்ட கண்ணபிரான் பீமனைப் பார்த்து, “பீமா! உன்னுடைய, தெய்விக பலத்தை யும், உன் தந்தை வாயுபகவானின் பலத்தையும் சேர்த்து உற்சாகத்துடனும் ஊக்கத்துட னும் ஜராசந்தனுடன் போரிடு; இவனுக்கு உன்னால்தான் மரணம். அதனால் தளர்ச்சி யடையாமல் போரிடு” என்று கூறி உற்சாகப்படுத்தினார். ஊக்கமும் கொடுத் தார். அதனால் பீமன், புத்துயிர் பெற்றவன் போல் மிகுந்த ஊக்கத்துடன், போரிட லானான். அதனால், அவன் ஜராசந்தனை அப்படியே அலக்காகத் தூக்கி சுழற்றி வீசி ஏறிந்தான். சுதாரித்துக் கொண்டு எழுந்து போரிட வந்த அவனை பீமன், நன்றாகப் பிடித்துக் கொண்டு கைவேறு கால்வேறு என, அவன் உடலைச் சரிபாதியாகக் கிழித்துத், தனித்தனியாக இரண்டு கூறுக ளாக்கிக் கீழே போட்டான். என்ன ஆச் சரியம்! இரண்டு தனித்தனி கூறுகளும், ஒன்று சேர்ந்தன. உயிரும் வந்தது. மீண்டும் ஜராசந்தன் புத்துயிர் பெற்றான். முன்னை விட வலிமையுடன், பீமனுடன் போரிட லானான். மீண்டும் பிளந்து போட்டான். மறுபடியும் ஒன்று சேர்ந்தது, ஜராசந்தனாக உருவெடுத்து, கடுமையாகப் போரிட லானான். இதனைக் கண்டு பீமனும் தளர்ச்சியுற்றான். சுற்றியிருந்த அனைவரும் அஞ்சி நடுங்கினர்.
இறுதியாகக் கண்ணபிரான், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து, அதனை இரண்டாகப் பிளந்து, பின்னர் அதனை நுனி மாற்றி, அடி மாற்றி, அவை இருவேறு நேர் திசையில் இருக்கும்படி, கீழே போட்டுப் பீமனுக்குக் காண்பித்தார்.
“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்” (குறிப்பறிதல்) “ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணரவல் லானை, மகனேயாயினும் அவனை தெய்வத்தோடொப்ப நன்கு மதிக்க”. (குறிப்பறிதல்)
என்னும் இக்குறளுக்கு நல்லிலக்கண மாய்த் திகழ்ந்தவன் பீமன்தான். அதனால் கண்ணன், தர்ப்பையைப் பிளந்து, அடிநுனிமாறி போட்ட தன்மையின் ரகசியத்தை, பீமன் உடனே உணர்ந்து கொண்டான். உடனே ஜராசந்தனைப் பற்றி, இரண்டாகப் பிளந்து, பிண்டங்களின் தலைகளை மாற்றிப் போட்டான். அதனால் மீண்டும் இரண்டு பிண்டக் கூறுகளும் ஒன்று சேர வாய்ப்பில்லாது போய்விட்டது. அதனால் அவன் உயிர் நீங்கியது. நாட்டு மக்கள் அனைவரும், மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். மூவரும், ஜராசந்தன் சிறைபிடித்த மன்னர்கள், அனைவரையும் விடுவித்தனர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அந்த அரசர்கள், கண்ண பிரானை வணங்கி, “பெருமானே! மலைக் கோட்டையில் மிகுந்த துயரத்தோடு சிறைபட்டிருந்த, எங்களை விடுவித்தீர் அதனால் எவரும் அடைய முடியாத பெரும் புகழை அடைந்தீர்; நாங்கள் என்ன செய்ய வேண்டும் ? எங்களுக்குக் கட்டளை யிடுங்கள்” என்றார்கள். அதற்குக் கண்ண பரமாத்மா, “மன்னர் மன்னர்களே! தரும புத்திரர் இராச சூயயாகம்,செய்ய விரும்பு கின்றார். அதற்கு நீங்கள் யாவரும் உதவி செய்ய வேண்டும்” என்றார். அதைக் கேட்டு அம்மன்னர்கள், பெரிதும் மகிழ்ச்சி யடைந்து, ”வேண்டிய எல்லா உதவிகளை யும் செய்கிறோம்” என்று வாக்களித்தனர்.
சகாதேவன் முடிசூடல்
அப்போது ஜராசந்தன் புதல்வன், சகா தேவன் என்பவன், தன் அமைச்சர் பிரதானி களுடன் வந்து கண்ணபிரானுக்குப் பல இரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுத்து வணங்கினான். அச்சத்தோடு இருந்த அவனுக்கு, எம்பெருமான் அபயம் அளித்தார். உடனே சகாதேவன், “பெரு மானே! என் தந்தை செய்த தவற்றைத் தாங்கள் மனத்தில் வைக்கக்கூடாது. நான் உன்னைச் சரண் அடைகின்றேன். என்மீது இரக்கம் காட்ட வேண்டும். என் தந்தையை அடக்கம் செய்யத் தாங்களும், பீமார்ச்சுனர் களும் அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான். சரணாகதிவத்சலனான எம்பெருமான் அவனிடம் பரிவுகொண்டு, “சகாதேவா! உன் தந்தையை நல்லடக்கம் செய்வாயாக” என்றார். பீமனும் அர்ச்சுன னும் அதனை ஆமோதித்தனர். இதனைக் கண்டு நகர மக்கள், பெருமகிழ்ச்சி கொண்டு ஆரவாரம் செய்தனர். பின்னர் சகாதேவன் நகரத்திற்குச் சென்று, சந்தன கட்டைகள், தைல வகைகள், இவற்றைக் கொண்டு தகனம் செய்தான். தன் தம்பியரு டன் சேர்ந்து, தந்தைக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் போன்றவற்றையும், செய்து முடித்தான். பின்னர் அவனிடத்தில் வேண்டிய திறைப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, அவனை மகத நாட்டின் மன்னனாக முறைப்படி முடிசூட்டி வைத்தார். அதன்பின் அவன் தன் நாட் டிற்குத் திரும்பினான். கண்ணபிரான் மற்ற அரசர்களுக்கும் தக்க மரியாதை செய்து “அனைவரும் தருமன் நடத்தும் இராச சூய யாகத்திற்கு வரவேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டார். அவர்களும் மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொண்டனர்.
கண்ணபிரான் பீமனோடும், அர்ச்சுன னோடும், மற்ற அரசர்களோடும், அவர்கள் செலுத்திய திறைப் பொருள்களோடும் இந்திரப் பிரஸ்தத்தை அடைந்தார். தருமரைக் கண்டார். தருமர் கண்ணபிரான் தம்பியரோடு, ஜராசந்தன் வதம் நிகழ்த்தி முடித்து வந்ததை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்தார். கொண்டு வந்த திறைப் பொருள்கள் அனைத்தையும், கண்ணபிரான் தருமரிடம் ஒப்படைத்தார் தருமரோ ஜரா சந்தன் பயன்படுத்திய தெய்விகத் தேரை மட்டும், கண்ணபிரானிடம் கொடுத்தார். மற்ற அரசர்களைத் தருமபுத்திரர் தக்கபடி கெளரவித்து, அவர்களுக்கு விடை கொடுத் தனுப்பினார். அதன் பின் கண்ணபிரான், பாண்டவர்களிடமும், குந்தி, திரௌபதி, போன்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, தேரேறி துவாரகையை அடைந் தார். ஜராசந்தனுக்கும், கண்ணனுக்கும் ஏற்பட்ட விரோதத்திற்குக் காரணங்கள் :
1) கண்ணபிரான் பலராமனுடன் சேர்ந்து தன் தாய் மாமன் கம்சனைக் கொன்றார். பின்னர் உக்கிரசேனனுக்குப் பட்டாபி ஷேகம் செய்தார். கம்சன் கொல்லப்பட்டதை அறிந்ததும், ஜராசந்தன், கம்ச னின் மகனும் தன்னுடைய பேரனுமான சூரசேனனுக்குப், பட்டம் சூட்டினான். பின்னர் கண்ணபிரானால் முடிசூட்டப் பட்ட உக்கிரசேனனையும், யாதவர் குலமக் களையும் சிறைபிடித்தான்.
2) ஜராசந்தன் நரமேத யாகம் செய்வ தற்காக, நூறு அரசர்களைப் பலி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். அதுவரை 86 அரசர்களைச் சிறைபிடித்து வைத்தான். இன்னும் 14 அரசர்களைச் சேர்த்துப் பலி கொடுக்க, முயற்சி செய்து கொண்டிருந் தான்.
முதல் மரியாதை (அல்லது) சிசுபாலன் வதம்
ஜராசந்தன் வதம் முடிந்த பின்னர், கண்ணபிரானும், மற்ற அரசர்களும் தங்கள் தங்கள் நாட்டுக்குச் சென்றனர். தரும புத்திரர் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினார். முன்னர் நாரதர் சொன்னதை நினைத்துக் கொண்டு, இராஜசூய யாகத்தைச் சிறப்பாக முடிப்பது; எவ்வாறு எனத் திட்டமிட லானார்.
அவருடைய எண்ணத்தை உணர்ந்த அர்ச்சுனன், “மன்னாதி மன்னா! என்னிடம் வீரம் இருக்கின்றது. இராசசூய யாகம் செய்யத் தேவைப்படும் பொருள்களை நான் திரட்டுகின்றேன். அதற்காக எல்லா அரசர்களையும், கப்பம் கட்டச் செய்வேன். முதலில் குபேரனுக்குரிய வட திசைக்குச் சென்று, கப்பம் வசூலித்து வருகின்றேன்” என்று று கூறி, தருமரின் நல்லாசி பெற்று வட திசை நோக்கிப் பயணமானான். அவனைத் தொடர்ந்து சேனைகள் சென்றன.
மன்னர்களை வென்ற அர்ச்சுனன்
கிழக்குத் திசையை நோக்கிப் பீம சேனனும், தென்திசை நோக்கிச் சகா தேவனும், மேற்குத்திசை நோக்கி நகுல னும், தருமரிடம் ஆசி பெற்றுச்செல்ல, நண்பர்கள் கூட்டம் சூழப்பெற்றவராய்ச், சிறந்த பொருள் நலனுடன் தருமர் காண்டவப்பிரத்தத்தில் இருந்தார்.