அரக்கு மாளிகையில் எரிந்து போகாமல் தப்பிப் பிழைத்த பாண்டவர்கள், பாஞ்சால நகரத்திற்கு வந்து, திரெளபதியை மணம் புரிந்து, பாஞ்சால நகரத்தில் உள்ளார்கள் என்ற செய்தி, அத்தினாபுரத்து மக்கள் காதில் எட்டியது. அம்மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அங்க நாட்டு அதிபதி கர்ணன், வஞ்சனையே உருவமாகக் கொண்ட சகுனி, அரவக் கொடியோன் துரியோதனன், அவன் தம்பி துச்சாதனன் ஆகிய நால்வர் மட்டும். பாண்டவர் அரக்கு மாளிகையிலிருந்து தப்பினர், என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருத்தம் அடைந்தனர். மேலும் தங்களை யெல்லாம் தோற்கடித்துத் திரெளபதியை மணம். புரிந்தனர் என்பதைக் கேட்ட அவர்கள் மனம், எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல மேலும் மனம் நொந்தது. வஞ்சனையால் அவர்களைக் கொல்ல முயன்று, அது தோல்வியடைந்து விடவே, போரிட்டு அவர்களை வெல்ல வேண்டும் என்று, அந்நால்வரும் ஆலோ சனை செய்யலாயினர்.
இதை அறிந்த தரும சொரூபனான விதுரர், திருதராட்டிரரிடம் துரியோதனா தியர் செய்கையைச் சொல்ல, அவர் பாண்டவரை அழைத்து வருமாறு கூறி விட்டு, மேல் என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார்.
துரியோதனனுக்கு அறிவுரை
அப்பொழுது துரியோதனன், தன் தந்தையிடம் வந்து, ”தந்தையே! விதுரர் வார்த்தையை ஏற்காதீர்கள். ஏற்றால் பழியைத்தான் பெறுவீர்கள்; அவன் வஞ்சகன்; அவன் நட்பை நீக்குக” என்று கூறினான். அதனைக் கேட்டுத் திருத ராட்டிரர் மனம் நொந்து, ”சான்றோர் களால் போற்றப்படுகின்ற, விதுரரைப் பழிக்கக் கூடாது. எதனையும் ஆராயாது பாண்டவர்களைக் கொல்வேன், என்று கூறுகின்ற உன் தீய செயலை, அடியோடு விட்டுவிடு; மாறாக இருவரும் ஒன்றுபட்டு மண்ணாள்வதுதான் அழகு” என்று அறிவுரை கூறினார். அதற்குத் துரியோ தனன், “பீமனை விண்ணுலகிற்கு அனுப்பி விட்டு, எஞ்சிய நால்வரும் வருவார் களாயின், அவர்களோடு நட்பு கொண்டு வாழ்வேன்;எக்காரணம் கொண்டும் பீம னோடு, என்னால் ஒத்து வாழ முடியாது” என்றான். அருகிலிருந்த கர்ணன், ”பாண்ட வர் ஐவரையும் புறமுதுகிட்டு ஓடும்படி செய்யேனாயின், உங்கள் சோற்றை உண்டு என்ன பயன்? எனவே அவர்களுடன் போரிடுவதுதான் சிறந்தது ? ” என்று கூறினான்.
இவற்றையெல்லாம் கேட்ட திருதராட் டிரர் ஒன்றும் புரியாது ஏவலர்களை ஏவி, பீஷ்மர் முதலான சான்றோர்களை வரவழைத்து, மேல் என்ன செய்யலாம் என்று கூறி, அவர்கள் ஆலோசனையைக் கேட்கலானார். அப்பொழுது பீஷ்மர் எழுந்து, “மன்னவனே! பாண்டு புதல் வர்கள் பாண்டவர்களை, இங்கு வரவழைத்து, உங்கள் ஆளுகைக்குட்பட்ட பரப்பினை இரண்டு சம கூறுகளாக்கி, ஒரு பாப் கூற்றினைப் பாண்டு மைந்தர்களுக்குக் கொடுத்து, அவர்களை அங்கு உரிமை யுடன் வாழச் செய்தல்தான் சிறந்த வழி” என்றார். அதனைத் துரோணரும், அவர் மைத்துனர் கிருபாசாரியாரும், ‘நியாயமான யோசனை’ என்றனர்.
கர்ணன் அதனைக் கேட்டு, துரியோ தனனின் பகைவர்தான் இத்தகைய வார்த்தைகளைக் கூறுவார்கள்; அவற்றை ஆமோதிக்கவும் செய்வார்கள்” என்று இகழ்ச்சிபடக் கூறினான். அதனைக் கேட்ட துரோணர் கோபித்து, சீறி, “கர்ணா! அன்போடு அணைத்துக் காப்பாற்றி அனைத்துக் கல்வியையும் கற்றுக் கொடுத்த நாங்கள் பகைவர்கள்; செஞ்சோற்றுக்கடன் கழிக்கும் நீ ஒருத்தன்தான் நண்பன். எனவே நீ ஒருவனே நின்று, பாண்டவர்களை எதிர்த்துப் போரிட்டு, அவர்களை வென்று இந்த நாட்டைத் துரியோதனனுக்குக் கொடுத்துவிடு” என்று கூறினார்.
விதுரரின் அறிவுரை
உடனே விதுரர் துரோணரை வணங்கி, “ஐயனே! கர்ணன் கூறிய வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டி, பின்னர் தன் தமையனார் திருதராட்டிரரைப் பார்த்து, “அண்ணா! உன்னுடைய நாட்டை இரண்டு சரிபாதி யாகப் பிரித்து, துரியோதனனுக்கும் பாண்ட வர்க்கும் எந்தவித வேறுபாடும் வாராமல், கொடுத்துப் புகழொடு வாழ்க” என்றார்.
தம் தம்பியின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட திருதராட்டிரர் தம்பியைப் பார்த்து,”விதுரா! பாண்டவர்களைப் பாஞ்சால நகரினின்று அழைத்து வருக” என்று கூற,விதுரரும், பாஞ்சால நகருக்குச் சென்று அங்கு திருதராட்டிரர் கூறிய வார்த்தைகளையெல்லாம் சொல்ல, அவர்களும் அதனை நம்பி தம் தாயோடு அஸ்தினாபுரம் வந்து அடைந்தனர்.
சகுனியும், துச்சாதனனும், அவன் தம்பியரும், பாண்டவர்களை எதிர் கொண்டு வரவேற்க, அரண்மனைக்குள் சென்றனர். திரெளபதியும், குந்தி தேவியும் அந்தப் புரத்திற்குச் சென்றனர். பாண்ட வர்கள் பீஷ்மர், துரோணர், கிருபாசாரியார், திருதராட்டிரர் ஆகியவர்களை வணங்கி நிற்க, அவர்களும் வாழ்த்தினர். அதன்பின், அனைவரும் ஐந்தாண்டு காலம் ஒற்றுமை யாக இருந்தனர்.
தருமர் முடிசூடல்
அடுத்து, திருதராட்டிரர், முதலான சான்றோர்களைக் பீஷ்மர் கலந்து ஆலோசித்து, சுபயோக சுபதினத்தில் பல்லியங்கள் ஆர்ப்ப, முரசம் முதலாயின முழங்க, உயர்ந்த சான்றோர் ஆசி கூற, வேதம் வல்ல அந்தணர்கள் நான்மறை களை முழங்கி, வாழ்த்திட, திருதராட்டிரர் முன்னிலையில் தருமபுத்திரருக்குத் திருமுடி சூட்டப்பட்டது. நிலவுலக ஆட்சிப்பரப்பில் பாதிப்பகுதிக்குத் தருமர் அரசனாவார்,என்று பிரகடனம் செய்து, தருமபுத்திரருக்கு அழகிய திருமுடி சூட்டிய பின், ஒரு நாள் திருதராட்டிரர் கட்ட ளையையேற்று தருமபுத்திரர், கண்ணபிரா னோடும், தம்பியரோடும், குந்தி, திரௌ பதியோடும் நால்வகைப் படைகள் சூழ்ந்து வர, முன்பு பழைய அரசர்கள் ஆண்டதான நல்ல நகரமொன்று பின்பு அழிந்துவிட்டுக் காடாக நிலைபெற்றிருக்கும் காண்டவப் பிரத்தம், என்னும் காட்டுப் பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார். அஃது துரியோதனன் துர்ப்போதனையால், திருதராட்டிரர் பாண்டவருக்கு விட்ட இடமாகும்.
அத்தகைய காண்டவப் பிரத்தத்தி லிருந்து ஆட்சிச் செய்வதற்காக, அங்கு அழகிய நகரம் ஒன்றினை அமைக்க வேண்டுமென்று கண்ணபிரான் கருதி, தேவர் தலைவனான இந்திரனை அழைத்துத் தன் கருத்தைக் கூறினார். கண்ணனின் கட்டளையை ஏற்ற இந்திரன், “எவ்வுலகத்திலும், இதற்கு நிகர்வேறு இல்லை, என்னும்படியாக ஓர் அழகிய நகரம் அமைத்திடுக” என்று தன் பரிவாரங்களில் ஒருவனும், தேவத்தச்ச னுமாகிய, விசுவகர்மாவுக்குக் கட்டளையிட்டான்.
இந்திரன் வியந்த நகரம்
அவனும் பல நவரத்தினங்களை வரிசையாகப் பதிக்க வைத்து, பொன்னால் முற்றும் விளங்கும்படி செய்து, எந்த உலகத்திலும் இதற்கு முன் நிர்மாணித்த நகரங்கள் எல்லாவற்றிலும், பெருமையிலும், செல்வத்திலும், அழகிலும், சிறப் பிலும், ஏழு மடங்கு பொலிவு பெறும்படி, சிற்ப சாத்திரத்தில் வல்லோர் அதிசயிக் கவும், நாரணன் முதலானோர் வியப்படை யவும். ஆகப் பல்வகை வளப்பங்கள் பொங்கிப் பெருகக், கண்டோர் விரும் பும்படி, அமைத்தான். அந்நகரத்தின் அகழி பாதலளத்தளவு சென்று பரந்திருந்தது. மதிலோ, விண்ணைத் தாண்டி நின்றது. உயர்ந்த கோபுரங்கள், சிறப்பான அரசவை மண்டபங்கள், வறியவர்கள் உணவு பெற்றுப் போக அழைக்கின்ற கொடித் தோரணங்களையுடைய நீண்ட நெடு வீதிகள்; மகளிர்கள் நடனம் பழகும் நடனச் சாலைகள், அந்தணர் முதலான நால்வகை வருணத்தாரும், தனித்தனியாக வசிக்கக் கூடிய மாளிகைகள்; குதிரைப் பந்திகள் யானைக் கூடங்கள், தேர்ச் சாலைகள் எங்கணும் நிறைந்து விளங்கின. அவை மட்டுமா! மருத நிலங்களில் நெடிதுயர்ந்த கரும்புகள், கடலென அலைகள் மோது கின்ற குளங்கள், கற்பகச் சோலைகள், உயர்ந்த பூஞ்சோலைகள், முதலானவை நிறைந்து இருந்தன.
எல்லா நவரத்தினங்களுக்கும் உறைவிட மாம் என்று விண்ணவர், மண்ணவர் எல்லோரும் கொண்டாடும்படியாக, அந் நகரம் அமைந்திருந்தது என்று தேவர்களும் விண்ணவர்களும் வியந்து போனார்கள். பொன் மயமான தொரு மேருவை அழித்து, பூமியில் ஒரு நகரமாக அமைத்துள்ளார் களே என்று சிற்பிகள் வியப்படைந்தார்கள். இந்திரன், இந்த நகரத்தின் பொலிவைப் பார்த்துத் தனது அமராவதிப் பட்டணத்தை வெறுத்தான். குபேரனோ, தன்னுடைய அளகாபுரி, இந்நகரம் எழும் பியதனால் இரண்டாந்தர நகரமாக, ஆகிவிட்டதே என்று வருந்தினான். மற்ற மற்ற தேவர்கள் தங்கள் தங்கள் நகரங்கள், இந்த நகரத்தின் அழகிற்கு முன்நிற்க முடியாததாகிவிட்ட னவே என்று கண்ணீர் விட்டார்கள்.
இந்திரப் பிரத்தம்
தேவலோகத்திலுள்ள உயர்ந்த பொருள்கள் எல்லாம். இந்நகரில் உள்ளன. இந்நகரில் உள்ள பொருள்கள், தேவலோகத் தில் இல்லை என்று சொல்லும்படியாக உண்டாக்கிய அந்நகரத்தின் சிறப்பினை, ஆயிரம் நாக்குகள் பொருந்திய ஆதிசேட னாலும், அளவிட்டுச் சொல்ல முடியா தென்றால் எம்போன்றவரால் இதனை வருணித்துச் சொல்ல முடியாது, என்று கவிஞர்கள் கூறுவார்கள். ஆக நான்முகனும் ஆதிசேடனும், வாயினால் வருணித்துச் சொல்ல முடியாததைத் தன் அறிவுத் திறமையினால், ஒப்பற்றதோர் நகரத்தை தேவ சிற்பியாகிய விசுவகர்மா, மிக அற்புத மாக அமைத்தான்.
இலக்குமியின் பிறப்பிடமாகிய இந்த நகரத்திற்கு, அத்தகைய மாபெரும் நகரத்தை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்த இந்திரனுடைய பெயரினால். அதற்கு ‘இந்திரபிரத்தம் ‘ என அருமறை முதல்வனும், ஆதி நாயகனும் ஆன பரந் தாமன் கண்ணபிரான், பெயர் வைத்தார். அப்பெயரை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர்.
அழகிய இந்திர பிரத்த நகருக்குக் கண்ணபிரான் வாழ்த்துக்கூற, சான்றோர் ஆசி கூற,பாண்டவர்கள் தம் தாயார் குந்தி தேவியுடனும், சுபயோக சுபதினத்தில் குடியேறினார்கள். வந்தவர் அனைவரும் தத்தம் இடம் சென்றனா. கண்ணபிரானும் துவாரகை நகர் சென்றார்.
சிறந்த முறையில் பாண்டவர்கள் இந்திரபிரத்தத்தில் இருந்து கொண்டு ஆட்சி செய்து வருங்காலத்தில், தரும புத்திரர் சபைக்கு ஒரு நாள் நாரத முனிவர் வந்தார். வந்தவரைத் தருமபுத்திரர் எதிர் கொண்டு வரவேற்று, வணங்கி, முகமன் கூறி, ஆசனத்தில் அமரச் செய்தார். பின்னர் தம்பியர் நால்வரும் சென்று அவரை வணங்கி நின்றார்கள். அப்பொழுது நாரதர், ஐந்து பேருக்கும் ஒரு பெண் பத்தினியாக இருப்பதனால், அவர்களுக்குள் பகை ஏற்படலாம் என்று எண்ணி, அதனைத் தவிர்க்க ஒரு கதையைச் சொல்லலானார்.
மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றவர்கள்; மூன்று உலகங்களையும் வென்றவர்கள்; வடமேருமலைச் சாரலில் ஓர் அழகிய மாநகரம் உருவாக்கி அங்கு வாழ்கின்ற வர்கள்; தேவர்களும் முனிவர்களும் அஞ்சி நடுங்கும்படியான வலிமை கொண்ட வர்கள்; நால்வகைப் படைகளையும் பெறற்கரிய ஆயுதங்களையுமுடையவர்கள்; மண்ணுலக மாந்தர்களுக்கு, இயமனாக விளங்கக்கூடியவர்கள், அவர்கள் தான் சுந்தர், உப சுந்தர் என்ற இரு அசுரர்கள் ஆவர்.
திலோத்தமை
அவர்கள் செய்கின்ற துன்பங்களை யெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், தேவர்கள் நான்முகனிடம் முறையிட் டார்கள். எவராலும் அழிக்கப்பட முடியாத வரங்களைப் பெற்றிருத்தலை, நான்முகன் எண்ணிப் பார்த்தான், அதனால் பெண் களது அழகினில் ஓர் எள்ளளவு எடுத்து, அதனை அழகிய பெண்ணான திலோத் தமையை உருவாக்கினான். அதன்பின் நான்முகன், சுந்தர், உப சுந்தர்களைக் கொல்லும் சூழ்ச்சியை அவளிடம் சொல்லிக் கொடுத்து, அந்த இருவரிடமும் அனுப்பினான். ஒற்றுமையாய் இருந்த அசுரர் இருவரும் அத்திலோத்தமையைப் பார்த்து,”நீ யார்? உன் வரலாறு என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், ”எனக்கு பெயர் திலோத்தமை. நான்முக னால் உருவாக்கப்பட்டவள்; “எனக்கு ஏற்ற கணவனைப் பல இடங்களில் சென்று பார்த்தேன். ஒன்றும் பிடிக்கவில்லை. இன்று இங்கு வந்தேன். உங்கள் இரு வரைப் பார்த்தேன். உங்கள் இருவரையுமே பிடித்துள்ளது. எனவே இருவரும் போரிட்டு உங்கள் வல்லமையைக் காட் டுங்கள். வெல்பவரை நான் மணக்கிறேன்” என்றாள்.
நாரதரின் அறிவுரை
ஒற்றுமையாய் இருந்த அவர்கள் திலோத்தமை மேல் வைத்த காதலினால், மாறுபட்டு விரோதம் கொண்டனர். அதனால் “இந்தப் பெண் எனக்குத்தான்” என்று அந்தப் பெண்ணுக்கு இருவருமே உரிமை கொண்டாடினார்கள். அதற்காக இருவரும் கடும் போரிட்டு அழிந்து போனார்கள். அந்த திலோத்தமை வந்த காரியம் முடிந்ததென்று, மகிழ்ச்சியுடன் நான்முகனிடம் போய்ச் சேர்ந்தாள். அவர் களால் பெருந்துன்பம் அடைந்த தேவர்கள், மாந்தர்கள், முதலான அனைவரும் பெருமகிழ்வு கொண்டார்கள்.
போகின்ற இடங்களில் எல்லாம் கலகம் செய்து, ஒற்றுமையைக் கெடுக்கின்றவர் நாரதர் என பெயர் பெற்ற அவர், சுந்தர், உப சுந்தர், கதையைப் பாண்டவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டிய இன்றி யமையாமையை, எடுத்துக்காட்டுவதற் காகக் கூறினார். அதன் பின் அவர் மேலும், ”பாண்டவர்களே! திரெளபதியை மணந்து கொண்ட நீங்கள், எக்காலத்தும் மன வொற்றுமை கெடாதிருக்கவேண்டும். அதற்காக ஒரு நியதியை வகுத்துக் கொள் ளுங்கள்” என்று கூறிய அவர் மேலும். “நீவிர் ஐவரும் ஆண்டிற்கு ஒருவராகத் திரௌபதியுடன் கூடி வாழ்ந்திருக்க வேண்டும். அந்த ஒரு வருடத்திற்குள் இவள் அந்த ஒருத்தரோடு சேர்ந்திருக்கும் போது, வேறொருவர் கண்டால் பாவம் உண்டாகும். அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கு, பார்த்தவர் ஒரு வருட காலம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வர வேண்டும். இந்த நியமத்தைத் தவறாமல் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’, என்று கூறி நாரதமா முனிவர் அவ்விடத்தைவிட்டு அகன்றார். பாண்டவர்களும், நாரதர் கூறியபடியே வாழ்ந்து மனவொற்றுமை யோடு விளங்கினார்கள்.