ஏகசக்ர நகரத்தில், பாண்டவர்கள் தங்கள் தாயுடன் வாழ்ந்து வருகின்ற காலத் தில், பாண்டவர்கள் ஐவரும், குந்தியும், அரக்கு மாளிகையில் மாண்டு போயினர் என்ற அவச்சொல், துருபதன் காதில் விழுந்தது. அதைக் கேட்டு அவன் பெரிதும் வருந்தி னான். “இவள் பல மன்னர்கள் இறத்தற்கு மூலமாகிப் பாண்டவர்களுக்கு உரியவளாய் இருப்பாள்” என அசரீரி இவள் பிறந்த காலத்தில் கூறியதையும்,தன் குருவானவர் தம் ஞானக் கண்ணால் உண்மை உணர்ந்து, பாண்டவர்கள் இறந் திலர். உயிரோடு இருக்கின்றார்கள்” என்று கூறித் தேற்றியதையும், சோதிடர்கள். பாண்டவர்கள் இறக்கவில்லை என்றதை யும். மனத்தில் எண்ணி ‘பாண்டவர்கள் வருவர்’ என்று உள்ளத்தைத் தேற்றிக் கொண்டு,எப்படியும் திரெளபதி அர்ச் சுனனை மணாளனாக அடைவாள் என்று கருதினான். சோதிடர் மொழி, குருமொழி. வான்மொழி, ஆகியவற்றில் முழு நம்பிக்கை கொண்டு அவன், அப்பாண்ட வர்களை வெளிக்கொணர வேண்டும் என்று உறுதி செய்துகொண்டு, திரௌபதி யின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். அவன் சுயம்வரம், நடக்க இருக்கும் நாளைக் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாது, ‘தன் மகள் திரெளபதி தானே விரும்பி மாலை அணிபவனுக்கு அவள் உரியவள்’ என்றும் ஓலையில் எழுதி தூதுவர் மூலம், எல்லா நாட்டு மன்னர் களுக்கும் செய்தி அனுப்பினான். திரௌபதியின் சுயம்வரச் செய்தியை அறிந்த, இளம் அரசர் கூட்டம் மலரினை மொய்க்க வண்டுகள் வருவது போலப் பாஞ்சால நகரத்தில் திரண்டனர்.
திரௌபதியின் சுயம்வரம்
பாஞ்சால தேசத்திலிருந்து வந்த அந்தணன் ஒருவன், திரெளபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைப் பாண்டவர்க்கு அறிவிக்க, அவர்களும் உடனே தங்கள் தாயுடன், பாஞ்சாலப்பதி நோக்கி உடன் அந்தணர் பலர் துணைக்கு வரச் சென்றனர். வழியில், வேத வியாசர் அவர்களைக் கண்டு,”பாண்டவர்களே! பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன், உங்களோடு சம்பந்தம் செய்து கொள்ளும் விருப்பத் தால்தான் நாளை திரௌபதிக்குச் சுயம்வர ஏற்பாடு செய்துள்ளான். எனவே வேக மாகச் சென்று, சுயம்வர மண்டபத்தை அடையுங்கள். திரௌபதியின் மணமாலை பெற்றபின், உங்கள் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துங்கள். அதுவே உங்கள் ஆண்மைக்குரிய செயலாகும்” என்று கூறி அவர்களை வாழ்த்திச் சென்றார்.
அடுத்து வழியில், தன்னை எதிர்த்த சித்திரதன் என்னும் கந்தருவனை அர்ச் சுனன் எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித் தான். பின்னர் அவனைத்தன் நண்பனாக்கிக் கொண்டான். அவன் ஆலோசனைப்படி, தௌமிய முனிவர் என்பவரைத் தங்களுக் குரிய புரோகிதராக பாண்டவர்கள் ஆக்கிக் கொண்டார்கள். அங்கிருந்து, பாஞ்சால நாட்டுக்குச் செல்லும் வழியில், பல நல்நிமித்தங்கள் தோன்றின. அவற்றை யெல்லாம் பாண்டவர்கள் கண்டு, திரௌ பதியைப் பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டார்கள். அடுத்து, பாஞ்சால நகரத்தில் புகுந்து தங்கள் தாய் குந்தி தேவியை, ஒரு குயவன் வீட்டில் இருக்கச் செய்து, தௌமிய முனிவருடன், பேரரசர்கள் கூடிய அந்தப் பெரிய சுயம்வர மண்டபத்தினை அடைந்தார்கள். சுயம்வர மண்டபத்தில் பேரரசர்கள் பலர், திரௌபதி தங்களுக்குத்தான் மணமாலையிடுவாள் என எண்ணித் தங்கள் தங்கள் ஆசனத்தில், கனவு கண்டு கொண்டு செம்மாந்து வீற்றிருந்தனர்.
திரெளபதியோ.”நான் யாருக்காக நெருப்பிலிருந்து தோன்றினேனோ, அந்த அர்ச்சுனனுக்குத்தான் மாலையிடுவேன்; பிற அரசர்களுக்கு எக்காலத்தும் மாலை சூட்ட மாட்டேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்தால், நான் தோன்றிய நெருப் பிலேயே விழுந்து இறப்பேன் இது சத்தி யம்’ என்று கூறினாள். அதனைக் கேட்ட தோழியர், ‘சோதிடம் பொய்க்காது’ என் றும், ‘தெய்வம் உன்னைக் காப்பாற்றும்’ என்றும், ஆறுதல் கூறித் தேற்றினார்கள்.
அடுத்து அவளை நன்கு அலங்காரம் செய்து, தோழியர் சுயம்வர மண்டபத்திற்கு அழைத்து வந்தார்கள். அவளைக் கண்ட அரசர்கள், மன்மதன் கணைகளுக்கு இலக்காகி உள்ளம் வெதும்பி ஆசனத்தில் அமர்ந்து இருந்தனர்.
வில்லை வளைக்க முடியுமா?
அந்த நிலையில், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் மகன் திட்டத்துய்மன் சுயம்வர மண்டபத்திற்கு வந்து, மண்டபத் தில் அமர்ந்திருந்த மன்னர்களின் உள்ளத் தில், கூரிய வேலை பாய்ச்சியது போலச் சில வார்த்தைகளைக் கூறலானான்.
‘வீரம் செறிந்த மன்னர்களே! வில் இங்கே இருக்கின்றது. எய்வதற்குரிய அம்புகள் அதோ உள்ளன; மேலே சுழலும் சக்கர வடிவ இயந்திரத்தினது நடுவில், மச்ச இலக்கு ஒன்று சுழன்று கொண்டே இருக் கின்றது. அந்தச் சுழலும் மச்ச இலக்கை யார் வீழ்த்துகின்றாரோ, அவருக்கு என் தங்கை திரௌபதி மணமாலையிடுவாள்” என்பன அந்த வார்த்தைகள். இந்தச் சொற்கள் எனக்கு, எனக்கு, என்று கர்வம் கொண்டு அமர்ந்திருந்த அரசர்களின் செவிகளில், ஓராயிரம் இடிகள் தாக்குவன போலப் பாய்ந்தன. சிலர் இந்த வார்த்தை களைக் கேட்டுத் திரௌபதியின் மேலிருந்த ஆசையையே விட்டு விட்டார்கள். சிலர் – திரௌபதியை மணக்க வேண்டுமென்ற பேராசை கொண்டு வந்தவர்கள், ”வில்லை வளைத்து மேலே சுழலுகின்ற மச்ச இலக்கை வீழ்த்தவேண்டும் என்று திட்டத்துய்மன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று அந்த முயற்சியையே கைவிட் டார்கள். சிலர் திட்டத்துய்மன் வார்த்தை யைக் கேட்டு, திரௌபதியை அடைய வேண்டும் என்ற பேராசையால் வில்லை வளைக்கும் முயற்சியை மேற்கொண்டார்கள்.
திரௌபதியைச் சுயம்வர மண்டபத் துக்கு அழைத்து வந்த தோழியர்கள், அரவக்கொடியோன் துரியோதனன், காந்தார நாட்டு மன்னன் சகுனி, தான வீரன் கர்ணன், பலராமன், கண்ணன், அவன் தம்பி சாத்தகி, சேதிநாட்டு மன்னன் சிசுபாலன், கண்ணனைப் புறங்காட்டி துவாரகைக்கு ஓடச் செய்த சராசந்தன், தனக்கு நிகர்தானே, என்னும் நரகாசூரன் மகன் பகதத்தன், முதலானவர்களைச் சுட்டிக் காட்டி, அவரவர்களின் வீரப் பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டு வந்தனர்.
பார்வையாளராக வந்த கண்ணபிரான்
பார்வையாளராக வந்திருந்த கண்ண பிரான், பலராமனையும், யது குலத்து மன்னர்களையும், ‘பாண்டவர்கள் மாறு வேடத்தில் வந்திருப்பார்கள்” என்று கூறிப் போட்டியில் கலந்து கொள்ளவொட்டாது தடுத்திட்டார். பல நாட்டு மன்னர்கள் அந்த வில்லை எடுத்து, நாணேற்ற முடியாது விழுந்தார்கள். அவர்களில் சல்லியனும் ஒருவன் ஆவான். இருந்தாலும் யார் வெல்லுகிறார்கள், என்பதைப் பார்ப்பதற் காக அங்கிருந்தான். பகதத்தன் என்பவன் வில்லினை எடுத்து நாண் கயிற்றை மாட்ட முடியாமல் கீழே விழுந்தான்; சராசந்தனோ நீண்ட நாண்கயிற்றை, பூட்டுக்கோடியின் ஒருமார்பு தூரம் வரையிலும் கொண்டு போய், பின்னர் இயலாது தளர்ந்து வீழ்ந் தான். சேதி நாட்டு மன்னன் சிசுபாலன், வில்லின் அருகில் வந்து, அதனை எடுத்து நாணேற்றி, உளுந்தளவு மிச்சம் இருக்கும் போது தூக்கி எறியப்பட்டு முழங்கால் மடிந்து பூமியில் விழுந்தான். அரவு உயரத்தோன் துரியோதனன், விரல் நான்கு தூரமேயுள்ளது என்று சொல்லுமளவும் நாணினைக் கொண்டு போய், மாட்ட முயன்று தோல்வியுற்றுக் கீழே விழுந்தான். கனகமழை பொழியும் வண்மை கைகளை யுடைய சூரியன் புதல்வன் கர்ணனோ, சிறப்புப் பொருந்திய நாண் கயிறு மயிர்க் கடை தூரத்தில் உள்ளது என்று சொல்லும் படி, வில்லை வளைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அதன் கால் முனையானது தன் கிரீடத்தைத் தாக்க, தரையில் வீழ்ந்தான். ஆக அரவுயர்த்தோன், முதலாக உள்ள அனைத்து அரசர்களும், அந்த ஒரு வில்லுக்கு ஆற்றார்களாகி, வலிமை குன்றி மனமழிந்து, ஏமாந்து, ஒன்றும் செய்ய மாட்டாதவர்களாய்த் தலைவணங்கித் தத்தம் ஆசனங்களில் வெட்கி, ஓவியம் போல் அமர்ந்தனர்.
அப்பொழுது, “மன்னர் மரபில் தோன்றி, தன் இரு தோள் வலியால் மண்ணை யாளும் மன்னவர்க்கு அல்லாமல்,மறை களைக் கற்று வல்ல மறையவர்களாகிய அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்கள், குறித்த இலக்கை வீழ்த்தினால் அவர்க்கும் மங்கை திரௌபதி மணமாலை சூட்டுவளோ?” என்று, மறையவர் வடிவில் வந்த மன்னாப்புகழ்பெற்ற வில்லுக்கு விசயன் எழுந்து கேட்க, திட்டத்துய்மன், “மறைய வர்கள், குறித்த மச்ச இலக்கை வீழ்த்தினால் அதில் என்ன குறையுள்ளது? அது பெருமை யல்லவா! மறையவர்களும் இலக்கை வீழ்த்தலாம்” என்றான்.
அர்ச்சுனன் அம்பெய்தல்
சொன்னவுடன் மறையவர் கூட்ட நடுவில் இருந்த அர்ச்சுனன், வெற்றி வீரன் என நடந்து வந்து, கிளர்மகுட வயவேந் தர்கள் எல்லாம் வெட்கித் தலை குனியும் படி, எந்தவிதத் தளர்வும் இல்லாமல் வில்லை வளைத்து, நாணை எளிதாக உயரப்பூட்டி, அம்பைத் தொடுத்து, ‘வில் வித்தைக்கு ஆசாரியன் இவன்தான். வேறுயாரும் இலர்” என்று அங்குள்ளோர் போற்றும்படியாக, மேலே இயந்திர சக்கரத்தில் பொருந்திச் சுழல்கின்ற மச்ச வடிவில் உள்ள இலக்குக் கீழே விழும்படி அடித்துத் தள்ளினான். அதுகண்டு அந்த ணர்கள் அகமகிழ்ந்து ஆரவாரித்தார்கள்; வானோர்கள் விண்ணிலிருந்து மலர் சொரிந்து வாழ்த்தினார்கள்.
நெருங்குதற்கு அரிய வில்லை இவன் எளிதில் வளைத்துவிட்டானே, என்று அங்கிருந்த அரசர்களின் முகமெல்லாம் கருகின; வெட்கத்தால் தலைகள் எல்லாம் குனிந்தன. அந்த நேரத்தில், அழகிய நீலமலைபோல நெடிது நின்ற அந்த அந்தணனை, “இவன் அர்ச்சுனன் போல உள்ளான்” என எண்ணி, மணமாலை யோடு வந்த பாஞ்சால நாட்டு கன்னி திரௌபதி, பாங்காக அவனைப் பரிந்து நோக்கி, தேன் பொருந்திய மணமா மணமாலையை மலையருவிபோலத் தோன்ற, அவன் தோள்களில் பொருந்தும்படி அணிவித் தாள். உடனே மறையவர் வடிவில் வந்த அர்ச்சுனன், தேவர்கள் துந்துபிமுழங்க. பல்வகை வாத்தியங்கள், பாங்குடன் இசைக்க, அந்தப் பெரிய சபையில் உள்ளோரை ஏறெடுத்தும் பாராதவனாய், திரௌபதியுடன் சந்திரனும் உரோகிணியும் போலவும், மன்மதனும் இரதியும் போலவும், வில்லினைக் கையில் எடுத்துக் கொண்டு தன் உடன்பிறந்தவர்கள் இருபக்கத்திலும் நெருங்கிவர, வெற்றி வீரனாய், தன்னிகரற்றவனாய், செம்மாந்து, அவ்விடத்தினின்று புறப்பட்டுச் செல்லத் தொடங்கினான்.
அதுகண்டு, சுண்ணிலான் மகன். துரியோதனன் உடனே எழுந்து, மற்றைய அரசர்களை நோக்கி, “தனியாக வந்த ஒருவன். மந்திரம் சொல்லக்கூடிய மறைய வன் இங்குள்ள வீரமிக்க மன்னர்களை யெல்லாம் அவமானப்படச் செய்து, திரௌ பதியை உரிமையாக்கிக் கொண்டு செல்ல, பார்த்துக் கொண்டு வாளா இருக்கின்றீர் களே? நீங்கள் வீரமிக்க க்ஷத்திரிய மரபில் வந்தவர்களா? அல்லது போர் என்றால் நடுங்கும் கோழைகளா?” என்று கூறி அவர்களைத் தூண்ட, அம்மன்னர்களும், உத்வேகத்தோடு அர்ச்சுனன் மேல் போர் தொடுக்க எழுந்தனர்.
எதிரிகளை விரட்டிய அர்ச்சுனன்
உடனே அர்ச்சுனன், திரௌபதியைத் தருமரிடம் இருக்க வைத்துவிட்டு, பீமனை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று, எதிர்த்துப் போரிட சித்தமானான். பின்னர் இருவரும் கடும் போரிட்டு எதிர்த்த மன்னர் களைப் புறங்காட்டி ஓடச் செய்தார்கள். பிராமணன், என்று எதிர்த்த கர்ணனை எளிதாக அர்ச்சுனன் தோற்கடித்தான். அதே போல பீமனை எதிர்த்த சல்லியன் எதிர்த்து நிற்க முடியாது அல்லலுற்று அவமானம் அடைந்து ஓடினான். நகுலனை எதிர்த்த துச்சாதனன், கதியும் அவ்வாறே ஆயிற்று. சகாதேவனும் துச்சாகன் முதலான மன்னர் களுடன் போரிட்டு, எளிதில் தோற்கடித் தான். தோற்ற கர்ணன், சல்லியன் முதலாக அனைவரும், “பிராமணர்களோடு போரிடு வது எங்களுக்கு இகழ்ச்சியேயாகும்” என்று வீராப்புப் பேசிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றனர். அவர்களின் பெருவீரத்தைக் கண்ட மற்றைய மன்னர்கள், பெரியோர்கள் எல்லாம், “இவர்கள் உண்மையில் அந்தணர்கள் அல்லர்; அரக்கு மாளிகையிலிருந்து தப்பி வந்த பாண்டவர்களே” என்று ஐய முற்றனர். பின்பு எல்லாவற்றையும் உணர்ந் திருக்கும் பரந்தாமன் கண்ணபிரான். “இவர்களுடன் போர் செய்வது வீண்’ என்று கூறி விலக்க, அனைவரும் தத்தம் நகர் போய்ச் சேர்ந்தனர். அங்கு வந்த தன் முன்னவன் பலராமனிடம், இவர்கள் அந்தணர்கள் அல்லர் பாண்டவர்களே” என்று கூற, அவனும் வியப்படைந்து வாழ்த்தினான்.
பகிர்ந்து உண்ணுங்கள்
அதற்குப் பின் ஐவரும், திரெளபதி யோடு குந்தி இருக்குமிடம் சென்றார்கள். தங்கள் தாயிடம் நுகரப்படும் பொருள் ஒன்றைக் கொண்டு வந்தோம் என்றார்கள். உள்ளே இருந்த குந்தி என்ன கொண்டு வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளா மல், “நீங்கள் கொண்டு வந்தது தேவா மிர்தம் போன்ற தாக இருந்தாலும் அதனை ஐவரும் ஒருங்கே உண்ணுங்கள்” என்றாள். பின் உள்ளே இருந்த குந்தி வெளியே வந்தாள். அங்கு சித்திரச்சிலைபோன்று விளங்கும் பாஞ்சால நாட்டுக்கன்னி திரௌ பதியைக் கண்டாள். மனமகிழ்ந்தாள், ஆனால், “உண்ணும் உணவு, என்று ஐவரும் பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டேனே. தெரியாமல் என்ன வார்த்தை சொல்லிவிட்டேன்” என்று வருத்தப்படலானாள்.
உடனே தருமன், “தாயே உன் வாக்கு சாதாரணமானதன்று; வேதத்தின் வாக்கு. உன் எண்ணத்தின் படியே, நாங்கள் ஐந்து பேரும் மனப்பூர்வமாக விரும்புகிறோம். நீங்கள் வருந்த வேண்டாம்” என்று சொல்ல,குந்தி, “இஃது எல்லாம் விதியின் விளைவு போலும்!” என்று எண்ணித் தேறுதல் அடைந்தாள். அதன்பின் பலராமனும், கண்ணபிரானும், குந்தியை வணங்கி, தருமர் முதலானோரை நலம் விசாரித்து, பின்னர் அவர்கள், “நாங்கள் துவாரகை சென்று திரௌபதி விவாகம் நடக்கும் நாளில், இங்கு வந்து திருதராட்டிர ரோடு ஆராய்ந்து வேண்டுவன செய்வோம்” என்று கூறிச் சென்றனர்.
துருபதன், திட்டத்துய்மனை அழைத்து ”நாம் வைத்த சுயம்வரத்தில் வெற்றி பெற்று, நம்முடைய கிருஷ்ணையை அழைத்துச் சென்ற அவர்கள் யார்? என்பதை, அவர்கள் அறியாது மறைந்து நின்று அறிந்துவா” என்று கூறி அவனை அனுப்பினான். அவனும் பாண்டவர் தங்கி யிருக்கும். குயவன் வீட்டிற்குச் சென்று மறைவாக நின்று பார்த்தான். பின்னர் பார்த்ததை, அப்படியே தன் தந்தையிடம் வந்து, “தந்தையே! நான் சென்று பார்க்கும்போது எல்லோருமே இருந் தார்கள். கர்ணனைத் தோற்கடித்தவனும் (அர்ச்சுனன்), சல்லியனைத் தோற்கடித்த வனும் (பீமனும்) ஆகிய இரண்டு பேரும். அந்த ஊரில் உள்ள அந்தணர் வீடுகளில் பிக்ஷை எடுத்துக் கொண்டு வந்து தன் தாய் முன் வைத்தார்கள்.
தாயோ நம் கிருஷ்ணையை அழைத்து, “திரௌபதியே! இதில் ஒரு பாகத்தை அந்தணர்களுக்கும் வறியவர்களுக்கும் எடுத்துவை. மீதியை இரண்டாகப் பகுத்துச் சரி பாதியைத், சல்லியனைத் தோற்கடித்த வனுக்குக் கொடு” என்றாள். “மீதியை நான்கு பங்காகப் பிரித்து மற்றைய நால்வர்க்கும் கொடு” என்றாள். அவ்வாறே நம் கிருஷ்ணை செய்து கொடுக்கும் போது மிஞ்சி நின்றதைத் தானும், அந்த வயது முதிர்ந்த தாயும், எடுத்துக் கொண்டார்கள்.
“பிறகு ஐவரும் ஓலைப் பாயில் தனித் தனியே ஓரிடத்தில் படுத்துக் கொண்டார் கள். நம் கிருஷ்ணை அந்த வயது முதிர்ந்த தாயுடன், ஒலைப்பாயில் படுத்துக் கொண்டாள்” என்று கூறிய அவன் “அவர்கள் பாண்டவர்களே ஆவார்கள்” என்று கூறினான். துருபதன் மேலும், “அவர்கள் யார் என அறிதற்பொருட்டுத் தூதுவரிடம், பல்வகை விலைமதிப்புமிக்க பொருள்களையும், சிறந்த படைக்கலங் களையும், அந்தணர் வடிவில் இருந்த பாண்டவர்களுக்குத்தான் கொடுத்ததாக, அவர்களிடம் கூறுக,, என்று சொல்லி அவற்றை அனுப்பினான். அவர்களோ படைக்கலங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, விலைமதிப்புடைய அந்தச் சீர்வரிசைப் பொருள்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இதைக் கண்டு துருபதன், அவர்கள் பாண்டவர்களே என உறுதி செய்து கொண்டு, தன் மைந்தன் திட்டத்துய்மன் மூலம், அவர்களை அழைத்து வரச் செய்தான். அவர்களும் திட்டத்துய்மனுடன் தேரேறி துருபதனைக் கண்டு வணங்கினர். அவனும் அவர்களை அன்புடன் தழுவிக் கொண்டான்.
மனம் வருந்திய துருபதன்
அதன்பின், துருபதன் அவர்களை நோக்கி, “நீங்கள் யார்? உண்மையை உரையுங்கள்” என்றான்; அவர்களும் அவன் வேண்டுகோளை ஏற்று, துருபதன், திரௌபதி, திட்டத்துய்மன் ஆகியவர் மன மகிழும்படி, “தாங்கள் பாண்டவர்கள் தான்” என்று கூறி உண்மை வடிவத்தைக் காண்பித்தனர். பின்னர் துரியோதனனால் ஏற்பட்ட இன்னல்களையெல்லாம், குறிப் பாக, அரக்கு மாளிகை ஆபத்தை எடுத்துக்கூறி, அவற்றிலிருந்து தாங்கள் தப்பித்த விதத்தையெல்லாம் ஆதியோடந்த மாகக் கூறினர். “எல்லாம் விதியின் செயல்” என்று கூறிய துருபதன் “திரௌ பதிக்கும், அர்ச்சுனனுக்கும், இன்றே திருமணம் செய்திடலாம்” என்றான். அதனைத் தருமபுத்திரர் கேட்டு, “ஐயா! திரௌபதியை நாங்கள் ஐந்து பேரும் திருமணம் செய்து கொள்ள உள்ளோம்” என்றான். அதனைக்கேட்ட துருபதன் திடுக் கிட்டு, “ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் தான் என்பது உலகநியதி; அவ்வாறிருக்க, ஒருத்தியை ஐந்து பேரும் மணத்தல் என்பது எந்த நியதியில் அடங்கும்? இது நடக்கக் கூடாதே” என்று கூறி மனம் வருந்தினான்.
அந்த நிலையில், அம்மன்னனின் ஐயத்தை நீக்கும் பொருட்டுப், பாண்டவர் களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் வேத வியாசர் அங்கு வந்தார். அவரின் பாதங் களில், அனைவரும் வணங்கி, முகமன் கூறி வரவேற்று, பொன்னார் ஆசனத்தில் அமரச் செய்தனர். முக்காலமும் உண உணர்ந்த மாபெரும் முனிவர் ஆகையினால் அவர், துருபதனுடைய மனத்திலுள்ள ஐயத்தைப் போக்குவான் வேண்டி, “குற்றமற்ற பாண்டவர்கள் ஐவர்க்கும் திரெளபதியை வேதவிதிப்படி, மணம் செய்து கொடுக்க வேண்டியதற்குரிய காரணத்தைக் கேட்பாயாக” என்று கூறி திரௌபதியின் முற் முற பிறப்பு வரலாற்றை எடுத்துச் சொல்ல லானார்.
பாஞ்சாலியின் முற்பிறப்பு
பாஞ்சால நாட்டு மன்னரே! இப் பிறப்பில் அக்கினியில் தோன்றி உன் தவச் செல்வியாக விளங்கும் கிருஷ்ணை, என்று சொல்லப்படுகின்ற திரெளபதி,முற் பிறப்பில் நளாயினி என்ற பெயருடைய வளாய், கற்பில் சிறந்த நங்கையாய், வேதங் களில் வல்ல, மௌத்கல்ய முனிவர்க்கு மனைவியராய் விளங்கினாள். தன் மனைவி யின் கற்பினைச் சோதிக்கும் பொருட்டு, அம்மௌத்கல்ய முனிவர், யாவரும் அருவருக்கின்ற, அருகே செல்வதற்கே அஞ்சுகின்ற ஏன்! தொடுதலுக்கும் பயப்படு கின்ற. குட்ட நோயுடன் முதுமைப் பருவத்தையும், உடையவராகத் தோற்றம் கொண்டார். ஆனால் நளாயினி முன்னிருந்தபடியே, எந்தவித வெறுப்பும் கொள்ளாது, கற்பில் சிறந்த நங்கையாக விளங்கி, அவர் கட்டளையிடும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வந்தாள். ஒரு நாள் அம்முனிவர் தன் அழுகிய, விரலை தான் உண்டு மிகுதியாக இலையில் இருந்த உணவில் விழச் செய்து, அப்பால் சென் றார். அப்பொழுதும் அவள், எந்தவித வெறுப்போ, அசூயையோ, கொள்ளாமல் அழுகி விழுந்த அவ்விரலை அப்புறப் படுத்திவிட்டு, அந்த உணவை உண்டாள். அதனைக் கண்ட மௌத்கல்ய முனிவர் மனமகிழ்ந்து, தன் தவமகிமையால் நோய்மிகுந்த வடிவத்தை விட்டொழித்து, காமனிலும், சிறந்த கட்டழகு வடிவத்தைக் கொண்டு எதிரே நின்றார். அதனைக் கண்டு நளாயினி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒருநாள், வாலிபனான மௌத்கல்ய முனிவர் தன் மனைவி நளாயினியை அன்போடு அழைத்து, “நளாயினி! பதிக்கு ஏற்ற பதிவிரதையாய் நடந்து கொண்டாய், அதனால் நீ வேண்டிய வரத்தைக் கேள். நான் கொடுக்கின்றேன்.” என்றார்.அதற்கு நளாயினி, “அன்பரே! உங்களுடன் இடையறாது எக்காலத்தும் இன்பம் அனுபவிக்க வேண்டும். அதுவே எனக்குப் போதும்” என்றாள். அதன்பின் அவர்கள் காடுகளிலும், மலைகளிலும்,சோலை களிலும், குகைகளிலும் சென்று, பல்வகை வடிவங்கள் தாங்கி, நெடுங்காலம் இன்பம் அனுபவித்தனர். பின்னர் நளாயினி இறந்தாள்.
நளாயினி
இறந்த நளாயினி மறுபிறப்பில் இந்திர சேனை,என்ற பெயருடையவளாய்த் தோன்றி, முற்பிறப்பில் கணவனாக வாழ்ந்த மௌத்கல்ய முனிவரையே வந்தடைந்தாள். அம்முனிவரோ அவ ளுடன் இருக்க விரும்பாமல், தவம் செய்ய முடிவு செய்து காட்டிற்குச் சென்று விட்டார்.
முனிவர் சென்றதை அறியாத இந்திர சேனை, கூடுதல் இன்பத்தைப் பெற வேண்டுமென்று விரும்பி, சிவபெருமா னைக் குறித்துக் கடுந்தவம் செய்தாள். சிவபெருமான் அவள் முன்தோன்றி. ”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இந்திரசேனை, அப்பெருமானிடம், ”ஐயனே! எனக்கு இப்பொழுது கணவன் வேண்டும் தாருங்கள்” என ஐந்து முறை கேட்டாள். அப்பெருமானும் ‘ஐந்து பதி பெறுக’ (பதி -கணவன்) என்று வரங்கொடுத்தார். அதனைக் கேட்ட இந்திரசேனை, “நீங்கள் ‘ஐந்து பதி பெறுக’ என்று வரங்கொடுத் தீர்கள். அது இப்பூவுலகத்திற்குப் பொருந் தாதே ” என்றாள். “நீ ஐந்துமுறை அடுக்கிக் கேட்டதனால், உனக்குக் கணவன்மார் ஐவர் ஆயினர். ஆனால் இப்பிறப்பில் அன்று. அடுத்த பிறப்பில், ஐந்து கணவன் மாரைப் பெறுக” என்று சிவபெருமான் அதற்குப் பதில் கூறினான்.
அதற்குப் பின்னர், சிவபெருமான் அவளைக் கங்கையில் நீராடி வரும்படியும், அங்ஙனம் மூழ்கி எழும்பொழுது, முதலில் எதிரில் தோன்றி ஏதாவது கேட்கும் ஆண்மகனைத், தன்பால் அழைத்து வரும் படியும் அப்பொழுது அவள் கணவனைக் காட்டுவதாகவும் கூறினார். சிவபெருமான் ஆணைப்படியே, அப்பொழுதே ஒரு கணவனைப் பெறாமல், அடுத்த பிறவியில் ஐந்து கணவர்களைப் பெறவேண்டி யுள்ளதே என்ற சோகத்தோடு, கங்கையில் மூழ்கி எழுந்தாள். அப்பொழுது அவளது கண்களினின்று பெருகிய கண்ணீர் பொற்றாமரையானது, அந்த விந்தைச் செயலை அங்கு வந்து பார்த்த இந்திரன், “அம்மையே! இது என்ன விந்தை” என்று கேட்டு அவளை அணுகினான். அதற்கு அவள், “என் துன்பத்திற்குக் காரணமான வர் சிவபெருமான். என்னுடன் வந்தால் அச்சிவபெருமான் என் அழுகைக்குக் காரணம் கூறுவன்” என்றாள். அந்த இந்திரன், இந்திர சேனையுடன் சிவபெரு மானிடம் சென்றான்.
இந்திரனை சிறையிடல்
தன்பால் வந்த இந்திரனைப் பார்த்து, சிவபெருமான். “இந்த இந்திர சேனையை மணந்து கொள்க” என்றார். ஆனால் இந்திரன் அதனை ஏற்கவில்லை. அதனால் சிவபெருமான் கோபித்து. “முன்னர் ஒருமுறை இங்கு வந்தபோது, எனக்கு வணக்கம் “செலுத்தாது சென்றாய். இப்பொழுது நான் கூறிய வார்த்தையையும் மறுத்து பேசுகின்றாய். உன்னைப்போல மதங்கொண்டு முன்னம் வந்த இந்திரர்கள் நான்கு பேர், இந்தக் குகையினுள் அடை பட்டுள்ளனர். நீயும் அவர்களுடன் விழுந்து கிடப்பாய்” என்று கூறினார்.
குகையினுள் விழுந்த அவன், மற்றை நால்வரோடு சேர்ந்து வந்து, ”எம் தலை வனே! எங்களுக்கு அருள் புரிவாயாக” என வேண்டி நின்றான். உடனே சிவபெருமான் அவர்களை நோக்கி, “ஐந்து இந்திரர் களாகிய நீங்கள், மண்ணுலகில் அவதரித்து அங்கு பிறக்கும் இந்திர சேனையை மணந்து, சில காலம் இன்பத்துடன் வாழுங் கள்” என்று கூறினார். அப்பொழுது அந்த இந்திரர் ஐவரும், ‘நாங்கள் மானிடராகப் பிறக்கப் போகின்றோம். ஆகையினால் எங்களுக்குத் தந்தையராக யமன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள் ஆகியவர்கள் இருக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினர். அவ்வாறே சிவபெருமானும் அருள் புரிந்தார். அந்தச் சாபத்தினது காரணத்தினால்தான், யமனது புத்திரனாக யுதிஷ்டிரன் என்ற தருமனும், வாயுவின் புத்திரனாக பீமனும், இந்திரனது புத்திர னாக அர்ச்சுனனும், அசுவினி தேவர்களின் மைந்தர்களாக நகுல சகாதேவர்களும் ஆக, அந்த இந்திரர்கள் ஐவரும் இப்பிறப்பில் பிறந்துள்ளனர். அந்த இந்திரசேனைதான் இன்று நெருப்பில் திரெளபதியாகத் தோன்றியுள்ளாள். “ஆதலின் பாண்டவர் கள் ஐவரும், இந்தத் திரெளபதிக்கு உரிய கணவர்கள் என்று முற்பிறப்பிலேயே வகுக்கப்பட்டுள்ளது, என்ற இந்தப் பூர்வீக வரலாற்றை அறிந்து அதற்கேற்றபடி நடந்து கொள்க” என்று கூறிய வேத வியாசர், துருபதனுடைய ஐ ஐயத்தைத் தீர்ப்பான் வேண்டி, மேலும் அவனுக்கு ஞானக் கண்ணைத் தந்தார். அந்த ஞானக்கண்ணின் மூலம் துருபதன் தன் உள்ளத்தில் தோன்றிய ஐயங்களையெல்லாம் போக்கிக் கொண்டான்.
துருபதன் சம்மதம்
அதன்பின் துருபதன், தன் மகள் திரௌ பதியைப் பாண்டவர்களுக்குத் திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டான். அதனால், சுபயோக சுபதினத்தில், கண்ணபிரான் முன்னிலையில், சௌமிய முனிவர் முதலாக பலமுனி சிரேட்டர்கள், திருமணச் சடங்குகளையெல்லாம் குறைவில்லாமல் செய்ய, திரௌபதியின் கழுத்தில் தருமர் முதலில், திருமாங்கல்ய நாணை அணி வித்தார். அதே மாதிரி அதற்குப் பின் திருமணச் சடங்குகளை ஒவ்வொரு முறையும் செய்ய பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும், வரிசைமுறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தருமர்க்குப் பின் நால்வரையும், தனித்தனியே மணக்கும் போது ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு முறையும் அக்கினிப் பிரவேசம் செய்து மீண்டு எழுந்ததனால், ஒவ்வொருவரையும் மணக்கும் போதும், திரெளபதி கன்னி யாகவே இருந்தாள். இவ்வாறு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
துருபதன், பாண்டவர்கட்குத் திரௌ பதியை மனைவியாகத் தாரை வார்த்துக் கொடுத்த பின்னர், மருமக்கட்கு ஏற்பப் பொருந்திய அழகிய தேர்களையும், யானை களையும், குதிரைகளையும், காலாட்படை களையும், நிலபுலங்களையும், பலவித மானச் செல்வங்களையும் இன்னும் விலை மதிப்பற்ற பொருள்களையும், வரிசைப் பொருள்களாக வழங்கினான்.