பீமன் பதினாயிரம் யானை பலம் பொருந்தியவன். அவனொடு அக்காலத் தில், துரியோதனன், ஜராசந்தன், கீசகன், பகாசூரன், என்ற நால்வரும் பதினாயிரம் யானை பலம் கொண்டவர்களாய் இருந் தார்கள். இத்தகைய இந்த நால்வரையும் பீமன்தான் கொன்றான். என்பதை நினைவில் கொண்டால், அந்த பீமனுடைய அதீத பலத்தின் தன்மையை அறிந்து கொள்ளலாம். அத்தகைய அளவு கடந்த பலத்தின் காரணமாகத்தான் பீமன். அர்ச்சுனன், தருமர் ஆகிய இருவரையும் தன்னிரு தோள்களிலும், நகுல சகாதேவர் களை தன் இரு பக்கத்து இடுப்பிலும், தாய் குந்தியை முதுகிலும் எளிதாகச் சுமந்து கொண்டு, பலயோசனை தூரம் கடந்து ஒரு மலைப்பக்கம் வந்து சேர்ந்தான் (யோசனை எட்டு மைல் அல்லது பதின்மூன்று கிலோமீட்டர்).
அம்மலைப்பகுதியில், பீமன் தன் தாயோடும் சகோதரர்களோடும் இளைப் பாறிக் கொண்டிருந்தான். அப்பொழுது கதப் பெண் வந்தாள். அங்கு ஓர் இராக்கதப் அவள் பெயர் இடும்பி என்பதாம். அவள் வலிமைமிக்க பீமனைக் கண்டாள். கட்டழகான அவன் தேகத்தைக் கண்டாள். அதனால் அவன் மீது காதல் கொண்டாள். அதனால் அவள் பீமனிடம் வந்து, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு “நாங்கள் அஸ்தினா புரத்தைச் சேர்ந்த பாண்டவர்கள். வாரணா வாசியில் நேர்ந்த ஆபத்திலிருந்து தப்பி இங்கு வந்துள்ளோம். என் பெயர் பீமன்” என்று கூறித் தங்களுக்கு நேர்ந்த துன்பத் தினைச் சுருக்கமாகக் கூறினான்.
இடும்பி
அதனைக் கேட்ட இடும்பி, “இந்த வனம் என் அண்ணன் இடும்பனுடையது. நான் அவன் தங்கை இடும்பி. மனிதர்களை உண்பதற்காக நான் இங்கு வந்தேன். என் அண்ணன்தான் மனிதவாசனை இங்கிருந்து வீசுதலை அறிந்து என்னை இங்கு அனுப்பி னான். வந்த இடத்தில் உன்னுடைய அழகினையும், வலிமையையும் பார்த்து உன்னைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. மாறாக உன்னைக் கட்டித் தழுவவே விரும்புகின்றது. எனவே, என் அண்ணன் இங்கு வந்து பார்த்து நம்மைக் கொல்லுவதற்கு முன், உன்னை நான் வேறிடத்தில் கொண்டு செல்கிறேன். என்னுடன் வா” என்று காமம் மீதுறக் கூறி, அவனைத் தன்னுடன் வரும்படி அழைத் தாள் .
அவள் கூறியதை ஏற்க மறுத்த பீமன், “இராக்கதப் பெண்ணே! மனிதர்களாகிய நாங்கள், இராக்கதர்களோடு உறவு கொள் வது தகாது. அதோடு என் சகோதரர்களை யும்,என் தாயையும், விட்டு நான் வர மாட்டேன். நீ வந்த வழியே சென்று விடு; உன் அண்ணன் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்றான். அந்த நேரத்தில் இடும்பன் அங்கு வந்தான். தன் தங்கை இடும்பி, சாதாரண மனிதனைக் காதலிப் பதைக் கண்டு, கோபமுற்று, “நமக்கு உணவாகப் போகின்ற மனிதரைக் காதலிப்பது கூடாது” என்று கூறிச் சீறினான். பின்னர் பீமனைப் பார்த்து, “அடே மனிதப்பயலே! உனக்கு உயர்ந்த அரக்க குலப் பெண் வேண்டுமோ? உன்னைக் கொன்று, இப்பொழுதே தேவ லோகத்திற்கு அனுப்பு கின்றேன். அங்கு தேவ மகளிரைக் காதலித்துக் கொண்டிரு” என்று கோபத்தோடு அவனுடன் போரிடலானான். பீமனும் பின் வாங்காது அவனோடு போரிட்டான்.
மலையும் மலையும், மோதினாற் போலவும் மதயானையும் மதயானையும், மோதிக் கொண்டாற் போலவும் இருவரும் மோதிக் கடும் போரிட்டனர். இடி இடித்தாற் போல, இருவர் தோள்களும் மோதிக் கொள்ளக் கடும் போரிட்டனர். இறுதியில், வலிமை மிக்க யானையை அஞ்சாத சிங்கம் ஒன்று, கொல்லுவது போல பீமன் அந்த இடும்பனைக் கொன்று, அவன் உடம்பை நாய்களும், நரிகளும், பேய்களும், தின்ன வீசி எறிந்தான். அதனைக் கண்ட குந்தியும், அவன் சகோதரர்களும், “இனி, இந்த பீமன் எத்தகைய பகையையும் வீழ்த்துவான்” என்று எண்ணி மனம் மகிழ்ந்தனர். இடும்பியும், தன் காதலுக்குத் தடையாயிருந்த இடும்பன் கொல்லப்பட்டதைக் கண்டு, பீமன் மீது கொண்ட மயக்கத்தால் மகிழ்ந்தாள்.
தன் மீது காதல் கொண்ட இடும்பியைக் கண்டு பீமன், “பெண்ணே! வலிமை வாய்ந்த அரக்கர் குலப் பெண்ணாகிய உன்னை, மனிதனாகிய நான் மணந்து கொள்ளுதல் தகாது. மேலும் என் தமையன் திருமணம் செய்து கொள்வதற்கு முன், உன்னை மணந்து கொள்ளமாட்டேன். ஏற்கனவே துரியோதனன், சகுனி போன்ற வர்களால் நாங்கள் பெரிதும் துன்பமடைந் துள்ளோம். அதனால் இந்த நிலையில், இப்பொழுது உன்னை மணப்பது சரியன்று. மேலும் உன்னுடைய உள் மனதில் என்ன உள்ளது, என்பதை என்னால் அறிய முடிய வில்லை. நீராழம் கண்டாலும் காணலாம்.
உங்களைப் போன்ற பெண்களின் நெஞ்சாழத்தைக் காண முடியாது’ என்று கூறி மறுத்தான்.
இடும்பியை மணந்த பீமன்
அதனைக் கேட்ட இடும்பி, அன்னை குந்தியிடம் சென்று தான் பீமன்மேல் கொண்டிருக்கும், காதலை எடுத்துக் கூறினாள். முக்காலமும் உணர்ந்து எடுத்துக் கூறுகின்ற, தன் ஆற்றலைச் சொல்லி, அவர்களுக்கு என்றும் துணையாயிருப்ப தாக உறுதி அளித்தாள். அதோடு அவள், “பீமன் என்னை ஏற்றுக் கொள்ளா விட்டால், நெருப்பில் வீழ்ந்து இறந்து விடுவேன்’ என்று உறுதியாகச் சொன்னாள். இதையெல்லாம் கேட்ட தாய் குந்தியும்,தருமரும் பீமனைப் பார்த்து, ”இடும்பியை மணந்து கொள். உனக்கு நன்மையே விளையும் ” என்றார்கள். அவனும் அவர்களுடைய கருத்தை ஏற்று, அவர்கள் முன்னிலையிலேயே இடும்பியை மணம் செய்து கொண்டான்.
முக்காலமும் உணர்ந்த இடும்பி, சாலி கோத்திர வனத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் மூழ்கினால், வியாசர் வருவார். அவர் உங்கள் துன்பத்தைப் போக்குவார்” என்றாள். அவ்வாறே பாண்டவர்களும், குந்தியும் சாலிகோத்திர வனத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் மூழ்கினார் கள். அப்பொழுது இடும்பி கூறியபடியே, வியாசமுனிவர் அங்கு வந்தார். அவரின் பொன்னடி போற்றி வணங்க அவர் அவர் களை நோக்கி, “பாண்டவர்களே! குந்தியே! நீங்கள் சாலிகோத்திர மாமுனிவர் ஆசிரமம் சேர்ந்து, அங்கேயே சில நாட்கள் தங்கி, பின் அந்தணர் வேடங்கொண்டு, ஏகசக்ர நகரத்தை அடைந்து, வேத்திர கீயத்தில் வசித்திருங்கள். அதன்பின் உங்களுக்கு நன்மை கிடைக்கும் ” என்றார். அவ்வாறே பாண்டவர்கள் ஐவரும், தங்கள் தாயோடு சாலிகோத்திர முனிவர் ஆசிரமம் அடைந்தார்கள்.
அங்கு திருமணம் செய்து கொண்ட பீமனும் இடும்பியும், மனம் ஒன்று பட்டு மகிழ்ச்சியோடு இன்பத்தில் மூழ்கிக்களித்தனர். அவர்களுக்குப் பீமனைப் போலவே, வலிமை வாய்ந்த கடோத்கஜன் என்னும் பெயருடைய மைந்தன் பிறந்தான். அந்தக் கடோத்கஜன், பாண்டவர்களையும் பாட்டி குந்தியையும் வணங்கி, “நீங்கள் நினைக்கும்போது நான் வந்திடுவேன்” என்று கூற, தந்தையரும் பாட்டியும் விடை கொடுக்க, தன் தாய் இடும்பியுடன் இடும்ப வனத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
பின்னர் பாண்டவர்கள், தம் தாயோடு அந்தணர் வேடம் தாங்கி, ஏகசக்ர நகரத்தை அடைந்தனர். அந்த ஊரில் அந்தணர்கள் வாழ்கின்ற இடத்திற்கு, ‘வேத்திர கீயம்’ என்று பெயர். அந்த இடத்திற்குச் செல்லவே, அங்குள்ள அந்தணப் பெரு மக்கள் இவர்களை எதிர் கொண்டு வரவேற்றனர். அவர்களில் ஓர் அந்தணன் தங்கள் வீட்டில் குடியிருக்கும்படி கேட்டுக் கொள்ள, அவர்கள் வீட்டில் தங்கினர். ஒவ்வொரு நாளும், ஓர் இல்லத்தில் விருந் தினராய் இருந்து காலம் கழித்து வந்தனர்.
பகாசூரன்
ஒரு நாள் காலையில் அவர்கள் குடியிருக் கின்ற வீட்டிற்குச் சொந்தமான அந்தணப் பெண் ஒருத்தி மிகுந்த வேதனையோடு அழுது கொண்டிருந்தாள். குந்தி அவள் அருகே சென்று தாயுள்ளத்தோடு, அவள் அழுதற்குரிய காரணம் யாது ? எனக் கேட்டாள். அதற்கு அந்த அந்தணப் பெண், ‘அம்மா! இந்த ஊரின் எல்லையில் பகாசூரன், என்பவன் வாழ்ந்து வருகின் றான். அவனுக்கு நாங்கள் நாள் தோறும் அறுசுவையோடு கூடிய ஒரு வண்டி உணவையும், எங்கள் குல மனிதனையும், பலி கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஒப்பந்தப்படி கொடுக்காவிட்டால், எங்கள் ஊரையே நாசம் செய்துவிடுவான். இன்று எங்கள் வீட்டுமுறை; எனக்கு ஒரே புத்திரன். அவனை அனுப்பினால், பின் எனக்குச் சந்ததி இல்லாமல் போய்விடும். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? விதி எங்களை வாட்டுகின்றது” என்று அழுது கொண்டே கூறினாள்.
அதனைக் கேட்ட குந்தி, அவளுடைய நிலையைக் கண்டு மனமிரங்கி, “அம்மையே/ அஞ்ச வேண்டாம். அழாதே! எனக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றார் கள். அவர்களில் வலிமை வாய்ந்த ஒரு வனை, அந்தப் பகாசூரனிடம் அனுப்பு கின்றேன். ஒரு வண்டி சோறு மட்டும் அவனுடன் அனுப்புக. அவன் அந்த இராக்கதனிடம் பலியாக மாட்டான். அந்த இராக்கதனை, அவன் பலி கொள்வான். இன்றோடு உங்கள் துன்பம் நீங்கிவிடும்” என்று கூறினாள். அதன்பின் குந்தி, தன் பிள்ளைகளை அழைத்து பீமனை அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறினாள். அப்பொழுது தருமன், “மற்றவர்களைத் தேர்ந்தெடுக்காது பீமனை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்டார்.
வலிமை மிக்க பீமன்
அதற்குக் குந்தி, “தருமா! பீமன் பிறந்த போது, வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. அவன் பிறந்த பத்தாம் நாள், நான் அவனை இடுப்பில் தூக்கிக் கொண்டு குளத்திற்குச் சென்று நீராடி, மீண்டும் அவனை இடுப்பில் வைத்துக் கொண்டு, மலையின் ஓரமாக ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது புலி ஒன்று எதிரே வந்து, என்னைத் துரத்தியது. அப்பொழுது இடுப்பில் இருந்த குழந்தை தவறி, எதிரே இருந்த ஓர் ஆழமான பள்ளத் தில், அதுவும் பாறையின் மேல் விழுந்து விட்டது. தற்செயலாக அங்கு வந்த உன் தந்தை பாண்டு, புலி என்னைத் துரத்தி வருவதைப் பார்த்து, அதனைத் தன் அம்பினால் கொன்று என்னைக் காப்பாற்றி விட்டுக், குழந்தை பெரிய பள்ளத்தில் அகன்ற பாறையின் மேல் விழுந்து விட்டதே, என்று பயந்து கொண்டு ஓடிப் போய்ப் பார்த்தார்.”நானும் குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ” என்று அஞ்சி அங்கு ஓடினேன். அங்கு நாங்கள் நினைத்ததற்கு மாறாக, கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டு, செம்பவளவாயைத் திறந்து சிரித்துக் கொண்டு, எங்களைப் பார்த்தது; அடுத்து அக்குழந்தை விழுந்த இடத்திலுள்ள கற்பாறையைப் பார்த்தால், அது பொடிப் பொடியாகப் போயிருந்தது. பின்னர் நாங்கள் இருவரும், குழந்தையின் வலிமையைக் கண்டு ஆச்சரியம் அடைந் தோம். பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்தோம். அங்கு அதற்குக் கண்மிச்சில் படப்போகிறதென்று திருஷ்டி கழித்தோம். யாரிடமும் அதனைச் சொல் லாமல் இருந்து விட்டோம்” என்று கூறிய குந்தி,அத்தகைய வலிமை மிக்க வனைத்தான் இன்று அனுப்புகிறேன். அவன் நிச்சயமாக வெற்றி வீரனாகத் திரும்பி வருவான்” என்றாள். அதனைக் கேட்ட சகோதரர்களுக்குப், பீமனைப் பற்றிய பயம் நீங்கியது.
பின்னர் பீமன், குந்தியின் கட்டளையை ஏற்று புறப்படுவதற்கு முன், சகோதரர் நால்வரோடு அறுசுவை உணவை உண் டான். அந்த அந்தணப் பெண் அறுசுவை யோடு கூடிய கறி, சோறு முதலிய உணவை வண்டி நிறையக் கொட்டி நிரப்பி, “ஐயா! நீங்கள் தான் எங்கள் உயிரைக் காக்க வேண்டும்; உங்களைத்தான் நம்பியிருக்கின் றோம்” என்று வேண்டி நின்றாள்.
பகாசூரனுடன் சண்டை
அடுத்து, இரண்டு கடாக்கள் பூட்டிய உணவு நிறைந்த அந்த வண்டியிலே, பீமன் ஏறிக் கொண்டு, காட்டு வழியே சென்று பகாசூரன் இருக்குமிடம் அடைந்தான். அவனோ, உணவு வண்டி குறிப்பிட்ட நேரத்தில் வராததால், பசியால் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தான். பசி யால் வாடிக் கொண்டிருக்கும் அவனைத் தூரத்திலேயே பார்த்துவிட் டான். அதனால் அவன் பார்க்கும்படியாக வண்டியிலிருந்த சோற்றை, நன்றாகக் குழம்பு போன்றவற்று டன் கலந்து வாரி உண்ண ஆரம்பித்தான். பசியால் சோர்ந்து போயிருந்த பகாசூரன், அதனைப் பார்த்து விட்டான். உடனே கோபத்தோடு, பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு, கண்களில் தீப்பொறி பறக்க வேகமாக ஓடிவந்து பீமனைப் பற்றிக் கொண்டு, “அடே! சிறுவனே! எனக்கு வைத்திருந்த உணவை, எந்தத் தைரியத்தில் உண்ணு கின்றாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று படப் படப்புடன் கூறி, அவன் பிடரியில் ஒரு குத்து ஓங்கிவிட்டான். உண்டசோறு அடித்த குத்தினால் நன்றாகச் சீரணமாகி விட்டது. அதற்குப்பின் அவன் குத்திய குத்துக்களைப் பொருட்படுத்தாமல், பீமன் ஒரு பருக்கையும் இல்லாமல், அனைத்தை யும் உண்டு ஏப்பம் விட்டான். பின்னர் எழுந்து நின்று, “அடே அரக்கனே! இப்பொழுது உன்னுடைய போர்த்திறங் களையெல்லாம் என்னிடம் காண்பிக்க லாம்” என்று கூறி அவன் மார்பிலே ஒரு குத்து குத்தினான். அதனை அந்த அரக்க னால், தாங்க முடியவில்லை. சற்று சோர்ந் தான். பின்னர் சுதாரித்துக்கொண்டு, எழுந்து மிகுந்த கோபத்துடன், அருகிலுள்ள மரங்களையெல்லாம் பிடுங்கி மிகுந்த கோபத்துடன் அவன் மீது வீசினான். பீமனும், அவற்றையெல்லாம் தன் இரு கைகளால் நாசம் செய்தான். அவனும் அவ்வாறே அரக்கன் மீது, மரங்களை வீசினான். அவனும் அவற்றையெல்லாம் நாசம் செய்தான். பின்னர் நேருக்கு நேர் நின்று மோதலாயினர். இருவருடைய மலை போன்ற தோள்கள் மோதின. கால்கள் மோதின. கைகளால் அடித்துக் கொண்டார்கள். கற்கள் பறந்தன; மரங்கள் பறந்தன. மலைகள் பறந்தன; வெற்றி தோல்வியின்றி இருவரும் கடுமையாகப் போரிட்டனர். விண்ணவர் அஞ்சினர். இறுதியில் பீமன், பகாசூரன் கால்களை இறுகப்பற்றித் தரதரவென்று இழுத்து, அவற்றைப் பொடிப் பொடியாகும்படி நொறுக்கினான். தலையைத் திருகி அவன் உயிரை எடுத்தான். இறந்து பிணமான அவனை, உணவு கொண்டு வந்த வண்டியிலே ஏற்றிக்கொண்டு, ஏகசக்ர கிராம மக்களெல்லாம் பார்க்கும்படி செய் தான். பின்னர் அவனை அடக்கம் செய்யும் படி கூறினான். அதன்பின் நீராடி, ஏகசக்ர நகரமெங்கும், மங்கல விளக்குகள் ஏற்றி வரவேற்க, தன் வீடு புகுந்தான். தன் தாயாரையும், தருமபுத்திரரையும், வணங்கினான். தன் தம்பியர்கள் தன்னை வணங்க, அவர்களைத் தழுவிக்கொண்டு, ஆசி கூறி னான். வீட்டுக்குரிய அந்தணன் குடும்பத் தினர், அவனைப் பரிவோடு வாழ்த்தினர். அந்த நகரமே, பீமனின் செயற்கரிய செயலை வெகுவாகப் பாராட்டி நீண்ட நாள் வாழும்படி பிரார்த்தித்தது.
இறந்து கிடந்த பகாசூரனை, அனை வரும் பார்த்து தங்களின் நீண்ட நாளைய கவலையோடு, அவனையும் சேர்த்து எரித்தனர். ஏகசக்ர நகரமே, மிக முக்கிய மாக வேத்திரகீயமே பீமனின் செயலை நன்றியுணர்வுடன் பாராட்டியது. அங்கு பாண்டவர்கள் எந்தவிதக் குறைவு மில்லாமல் சிலகாலம் வாழ்ந்து வந்தனர்.