விசித்திரவீரியன் இறந்தவுடன், அவனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளையும், சாமகிரியைகளையும், பீஷ்மர் செய்து முடித்தார். இப்பொழுது பரிமள கந்தியின் இரண்டு மைந்தர்களும் இறந்து விட்டதனால், அவளுடைய மருமகள் களான அம்பிகை, அம்பாலிகை கைம் பெண்களாக ஆனார்கள். அதோடு புகழ் மிக்க சந்திர வம்சத்திற்கு, ‘வாரிசு இல்லை’ என்றாகிவிட்டது. அதனால் பரிமளகந்தி மிகுந்த துயரம் அடைந்தாள். தன் மகன் களுக்கு எந்த ஆண் வாரிசும் இல்லாது போய் விட்டதே என்ற கவலை அதிகமாகி விட்டது. அதனால் அவள் பீஷ்மரை அழைத்தாள். அவரும் வந்து தன் தாயை வணங்கினார்.
பரிமளகந்தியின் கட்டளை
அவரை அன்புடன் நோக்கிப் பரிமள கந்தி, “என் அன்பிற்குரிய திருமகனே! புகழ் பெற்ற நம் சந்திரகுலம், வாரிசு இல்லாமல் போய்விட்டது. இதை இப்படியே விட்டு விடக் கூடாது. வாரிசு உண்டாவதற்கு ஒரு வழி இருக்கின்றது. அது உன்னால் முடியும்: சொல்கிறேன் கேள்” என்று கூறிய அவள், “பீஷ்மா! கணவனை இழந்து கைம் பெண்ணான இளம் பெண், சந்ததி விருத்தி யின் பொருட்டு, கணவனுடைய சகோதர னுடனோ (அல்லது) முனிவருடனோ சேர்ந்து, மகப்பேறு பெறலாம் என்ற ஒரு கொள்கை நம் குலத்தில் உள்ளது. முன்னர் பரசுராமர், தன் தந்தை ஜமதக்னி முனிவரைக் கார்த்தவீரியார்ச்சுனன் என்ற க்ஷத்திரியன் கொன்று விட்டான். என்பதற் காக அவனையும் அவன் சந்ததியினரையும் கொன்று வாரிசே இல்லாமல் செய்து விட்டான். கைம்பெண்களான அந்தப் பெண்களுக்கு ரிஷிகள் தான், புத்திரப் பாக்கியம் தந்தனர் என்பதை நீ அறிவாய். விசித்திரவீரியனின் தமையனான, உன்னா லேயோ அல்லது ரிஷிகளாலேயோ என் மருமகள்களுக்குப் புத்திரப் பாக்கியம் உண்டாக்கலாம். அது தவறில்லை. முனிவர்கள் தருதலைவிட, நீ புத்திரப் பாக்கியம் தருதலே மேல். அது தான் என்னுடைய விருப்பம். நீதான் சந்திர குலத்தை விளங்கச் செய்ய வேண்டும். தாயின் கட்டளைப்படி நடந்தால், உன் விரதத்திற்குப் பங்கம் நேராது. மகனே என் கருத்தை ஏற்றுக் கொள்” என்றாள். அதைப் பீஷ்மர் கேட்டார். அது இரு காதுகளிலும் இரும்பினைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. தாயே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என் உயிரே போனாலும், உங்கள் கருத்தை ஏற்கமாட்டேன். அன்று நான் செய்த சபதத்தை, எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும் மீறவே மாட்டேன். என் ஆசான் பரசுராமர் கூறியதையே நான் கேட்கவில்லை. இப்பொழுது தானா கேட்பேன்? வாரிசு உண்டாவதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள். அதனை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்.
அதனைக் கேட்ட பரிமளகந்தி, “மகனே. இனியும் உன்னை நிர்ப்பந்தப்படுத்தலில் யாதொரும் பயனுமில்லை. மற்றொரு வழியை சொல்கிறேன். உனக்குச் சம்மத மிருந்தால், அந்த வழியில் வாரிசு அடைய லாம் ” என்றாள். பீஷ்மர் அதனைக் கூறு மாறு பணிவுடன் கேட்க, பரிமளகந்தி, “மகளே! நான் கன்னிப் பெண்ணாக இருக் கின்ற காலத்தில், அஃதாவது உன் தந்தை சந்தனு மன்னனை மணந்து கொள்வதற்கு முன், எனக்கும் பராசர முனிவருக்கும் வேதவியாசன் என்பவன் பிறந்து, காட்டிலே அரிய தவம் செய்து கொண்டிருக் கின்றான். தவ ஆற்றல் மிக்கவன். முக்கால மும் அறிந்தவன். அவன் நான்கு வேதங் களை வகுத்துத் தந்ததோடு, பதினெண் புராணங்களையும் இயற்றியுள்ளான். அவன் உனக்கு மூத்தவன். அவனைக் கொண்டு நம் குலத்தை விளங்க வைக்கலாமா? உன் கருத்து என்ன? என்று கூறி வேதவியாசர் தனக்குப் பிறந்த வரலாற்றைத் தெளிவாகக் கூறினாள். (வேத வியாசர் பிறப்பு ஏற்கனவே சொல்லப் பட்டுள்ளது.)
விசித்திர வீரியனின் மூத்தவராகவும் வேத வியாசர் இருக்கின்றார். முனிவராக வும் இருக்கின்றார். சந்திர குல வம்சத்தை விளங்க வைக்க, அவரே பொருத்தமானவர் என்று கருதி, பீஷ்மர் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
பரிமளகந்தியும், தன் மூத்த புதல்வனா கிய வேதவியாசரைத் தன் பால் வர வேண் டும், என்று சிந்தை செய்தாள். பிறந்தவுடன் நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் நான் வருவேன் என்று தன் தாயிடம் சொல்லிச் சென்றார். ஆதலின் தாய் தன்னை வரும்படி நினைத்தவுடன், வேதவியாசர் செஞ்சடை முடி துலங்க, மார்பில் முப்புரி நூல் இலங்க, வேத மந்திரங்களை நாக்கு உச்சரிக்க, தண்டு, கமண்டலத்தோடு, அன்னையின் முன் வந்து நின்று வணங்கி, “தாயே/என்னை அழைத்ததற்குரிய காரணம் யாது?” எனக் கேட்டார். அதற் குப் பரிமளகந்தி, தன் இரண்டு மகன்களும் காலத்தின் கோளாறினால், இறந்ததைக் கூறி, அதனால் சந்திரன் முதலாக உள்ள புகழ் மிக்க குரு வம்சம், சந்ததியில்லாமல் அழியப் போகிறது என்பதை எடுத்துச் சொல்லி, அதைத் தடுப்பதற்காக உன் உதவி தேவைப்படுகிறது” என்றாள். அதற்கு வியாசர், “தாயே! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். செய்யக் காத்திருக்கின்றேன்” என்றான்.
அதற்குப் பரிமளகந்தி, “மகனே நம் குல முறைப்படி உன் கொழுந்தியருடன் கூடி, வலிமையும், பொலிவும், அறிவும் மிக்க புதல்வர்களைப் பெற்றுத் தந்து, நம் குலம் விளங்கச் செய்வாய்” என்றாள். வேத வியா சர் வேதங்களைக் கற்று கரை கண்ட வராதலின், வேத விதிகளையும், குல முறைகளையும் நன்கு உணர்ந்து, தாயின் கட்டளையை ஏற்றுக் கொண்டார். பின்னர் மருகியரை அழைத்து, கணவன் சகோதரர் களிடம் கூடுவதில் தவறில்லை, என்பதைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியதோடு, அல்லாமல் வேத வியாசர் அவர்களின் கணவருக்கு மூத்தவர், என்பதையும் எடுத்துக் கூறி அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தார்.
கண்ணற்ற மகன் பிறப்பான்
பின்னர் இருவரையும் அலங்கரித்து இருள் செறிந்த நேரத்தில் படுக்கை அறைக்கு முதலில் அம்பிகையை அனுப்பி னாள். அவளும் உள்ளே சென்றாள். இளம் பெண். அழகான இளமையோடு, வாலிபப் பருவத்தில் வியாசர் இருப்பார்,என்று கனவு கண்டு கொண்டு சென்ற அவள், திரியுண்ட சடை ; நீண்ட தாடி; காவி வேட்டி; தண்டு; கமண்டலம், நெற்றியில் திருமண் ஆகிய இந்தக் கோலத்தோடு, இருந்ததைக் கண்டாள். அருவருப்புக் கொண்டாள். கண்களை மூடிக் கொண் டாள். வியாசர் தாயின் கட்டளைப்படி, அந்த நிலையிலே அவளுடன் சேர்ந்து பின்னர் வெளியே வந்தார். தன் தாயை அழைத்து, “தாயே! உன் மருமகள் அருவருப்போடு கண்களை மூடிக் கொண்டு, சேர்ந்ததனால் பதினாயிரம் யானைகள் பலமுடைய, கண்ணற்ற மகன் பிறப்பான்” என்று கூறினார்.
இரண்டு குழந்தைகள் பிறந்தன
அதனால் வருத்தமுற்ற பரிமளகந்தி, “அடுத்த மருமகள் அம்பாலிகையை, அலங்கரித்து அனுப்புகின்றேன். அவளுக் காவது நல்ல பிள்ளை பிறக்க வேண்டும்” என்று வியாசரிடம் கூறி, அவளைப் படுக்கை அறைக்கு அனுப்பினாள். அவளும் அம்பிகைப் போலவே அங்கு இருப்பவன் இளமையான அழகுடைய வாலிபனாக இருப்பான், என்று கனவு கண்டு கொண்டு சென்றாள். ஆனால் அங்கு செஞ்சடையும் நீண்ட தாடியும் கொண்ட முனிவரைப் பார்த்து அச்சம் கொண்டாள். உடல் வெயர்த்தாள். அந்த நிலையிலேயே வியாசர் அவளுடன் சேர்ந்தார். பின்னர் வெளியே வந்தார். “அம்மா! உன் மருமகள் என்னைப் பார்த்து, அச்சங் கொண்டு உடல் வெயர்த்திட்டாள். அந்த நிலையிலேயே அவளுடன் கூடியதால், அவளுக்கு நல்ல அறிவுடைய, பலமுள்ளவனாக, வெண்ணிறமுடையவனாக ஒரு மகன் பிறப்பான் ” என்ற கூறி சென்று விட்டார். அவர் கூறியபடியே அம்பிகைக்குக் கண்ணற்ற திருதராட்டிரனும், அம்பாலி கைக்கு உடலெல்லாம் வெளுத்திருக்கும் பாண்டுவும் பிறந்தனர். இத்தகைய இரண்டு குழந்தைகளைக் கண்டு பரிமள கந்தி துயரமுற்றாள்.
அதனால் பரிமளகந்தி நல்ல அறி வுடைய, அங்கஹீனமில்லாத அழகுமிக்க குழந்தையைப் பெற வேண்டுமென்று கருதி மீண்டும் வியாசரை நினைக்க அவரும் வந்தார். தன்னுடைய எண்ணத்தை வியாசரிடம் கூறி, முதல் மருமகள் அம்பி கையை, நன்கு அலங்கரித்து நல்வார்த்தை கூறி படுக்கையறைக்கு அனுப்பினாள். வியாசரைப் பிடிக்காத அவள், மாமியாரி டத்தில் ‘முடியாது’ என்று சொல்வதற்கு அச்சங் கொண்டவளாய், யாருக்கும் தெரி யாமல், தன் தோழியை அலங்கரித்துத், தனக்குப் பதிலாகப் படுக்கையறைக்கு அனுப்பினாள். தலைவியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும், என்ற எண்ணத் தினால் மற்றவர்களைப் போல அச்சமோ, அருவருப்போ, கொள்ளாது மிகுந்த அன்பு டன் வியாசருடன் இணைந்தாள். வியா சரும் மகிழ்ச்சி கொண்டார். பின்னர் தாயை அணுகி, “அம்மா அறக்கடவுளே (இமயன்) உனக்குப் பேரனாகப் பிறப்பான். சிறந்த நீதிகளைச் சொல்லுகின்ற ஞானவானாக விளங்குவான். எந்தக் குறையும் இல்லாது பொலிவுடன் இருப்பான். ஆனால் அவன் அம்பிகையின் மகனாகப் பிறக்க மாட்டான். அம்பிகை அனுப்பிய தோழி யின் மகனாகப் பிறப்பான்” என்று கூறி விட்டு, இனி என்னை எக்காரணம் கொண்டும், இந்த விஷயத்துக்காக நினைக்காதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி, அங்கிருந்து அகன்று விட்டார்.
அந்த வேத வியாசர் கூறியபடியே, அறக் கடவுளாகிய இமயன், மனிதப் பிறவியாக அம்பிகை தாதி வயிற்றில் பிறந்தான். அவர் தான் எல்லா அற நெறிகளையும் கற்று அதன்படி நடக்கும் அழகுமிக்க விதுரர் ஆவார் .
விதுரரின் முற்பிறப்பு
மனவுறுதியும், சாஸ்திர அறிவும், பெற்று வாய்மையிலும் தவத்திலும், நிலைத்து நின்று, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மாண்டவ்யர் என்ற மாமுனிவர், ஊருக்கு வெளியே ஒரு காட்டில் சிறிய ஆசிரமம் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆசிரமத்தின் வெளியிலே இருந்து கொண்டு உலக ஞாபகமின்றிக் கடுந்தவம் செய்து கொண் டிருந்தார். அப்பொழுது சில கொள்ளையர் கள், மன்னவனுடைய செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு, அரசனு டைய காவலர்கள் துரத்திவர, செய்வது அறியாது, மாண்டவ்யரின் ஆசிரமத்தில் ஒளித்து வைத்து விட்டு, அங்கேயே பதுங்கிக் கொண்டார்கள்; கொள்ளையர் களைத் துரத்தி வந்த காவலர்கள், ஆசிரமத் திற்கு வெளியே தவம் செய்து கொண்டி ருந்த மாண்டவ்யரை அணுகி, “முனிவர் பெருமானே! இந்தப் பக்கம் சில கொள்ளை யர்கள் வந்தார்களே பார்த்தீர்களா” என்று கேட்டனர்.உலக ஞாபகமின்றிக் கடுந்தவம் செய்து கொண்டிருந்ததனால், அவர்கள் கேட்டவை அவர் காதில் விழவில்லை. அதனால் விடையளிக்காது மௌனமா யிருந்தார். பலமுறை கேட்டும், மௌனமே அவர் பதிலாய் இருந்தது.
கொள்ளையர்களின் தலைவன்
அதற்குள் சில காவலர்கள், ஆசிரமத்துக் குள் நுழைந்து சோதனையிட்டனர். அங்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்த செல்வ மும் இருந்தது. கொள்ளையடித்த கொள்ளையர்களும் இருந்தார்கள். உடனே அக்கொள்ளையர்களைக் கைது செய்தனர். அதன் பின் அக்காவலர்கள் “எவ்வளவு கேட்டும் பதில் சொல்லாததனால், இந்தப் பிராமணர் தான் அரசரின் செல்வத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்களின் தலைவன் போலும்!” என்று எண்ணி, அவரையும் அக்கொள்ளையர்களோடு கைது செய்து, அரசன் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
“ரிஷி வேஷம் போட்டிருக்கும் இந்தப் பிராமணன் தான், கொள்ளையர்களின் தலைவனாக உள்ளான். அந்தப் பிராமண னின் கட்டளைப்படி, இந்தக் கொள்ளையர் கள் அரசனின் செல்வத்தைக் கொள்ளை யடித்து, அந்தப் பிராமணன் ஆசிரமத்தில் பதுக்கி வைத்தனர்” என்று அம்முனிவர் மேல் குற்றம் சாட்டினர்.
காவலர்கள் கூறியதைக் கேட்ட மன்னன், எதையும் ஆராயாது கோபம் மட்டும் கொண்டு, முனிவரைக் கழுவில் ஏற்றும்படி ஆணையிட்டான். அரசனின் ஆணைப்படி தர்மாத்வான மாண்டவ்யர், கழுவிலேற்றப்பட்டார். கழுவிலேற்றப் பட்ட, மாண்டவ்யரோ வெகு காலம் வரை உயிரோடு இருந்தார். பலர் அவரிடம் வந்து, “நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள். இந்தப் பயங்கரமான தண்டனையை அனுபவிக்கிறீர்கள்” என்று கேட்டனர். அதற்கு அந்த முனிவர், “இந்தப் பிறவியில் யான் அறிந்தவரை, எவருக்கும் நான் எந்தவிதத் துன்பமும் செய்ததில்லை. முற்பிறவியில், நான் ஏதோ பிறருக்குத் துன்பம் செய்துள்ளேன் போலும்! அதனால் தான் இந்தத் தண்டனையை அனுபவிக் கிறேன்” என்றார்.
கழுவில் ஏற்றப்பட்ட மாண்டவ்ய முனிவர் ஊணும், உறக்கமுமின்றி, நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பதை அறிந்த, மற்ற முனிவர்களும், பொது மக்களும், சான்றோர்களும், வந்து அவரைப் பார்த்தார் கள். வியப்பு அடைந்தார்கள். இந்தச் செய்தி கழுவிலேற்ற ஆணை கொடுத்த மன்னன் காதில் போய் விழுந்தது. அவனும் அவரை வந்து பார்த்தான். அவருடைய தவ ஆற்றலைக் கண்டு பிரமித்து நின்றான். “நான் தான் தவறு செய்து விட்டேன்” என்று வருந்தி, வணங்கி, பொறுத்தருளு மாறு விண்ணப்பித்து, அவரைக் கழுவி லிருந்து இறக்க உத்தரவுவிட்டான். கழுவி லிருந்து இறங்கிய மாண்டவ்யர் மன்ன னைக் கோபிக்கவில்லை. “முற்பிறவியில் செய்த வினையின் விளைவே” என்று எண்ணி அமைதி கொண்டார்.
இளம் பருவத்தில் செய்த பிழை
அதன் பின்பு, உயர்ந்த கடுந்தவத்தைச் செய்து மற்றைய முனிவர்களுடன் யம புரம் சென்றார். அங்கு, உயிர்களின் வினை களுக்கேற்ப தண்டிக்கும் அதிகாரம் பெற்ற யமனைக் கண்டு, “நடு நிலையில் நின்று நீதி வழங்கும் தருமராசனே! என்ன தீவினை செய்தேன்,என்று நான் பூவுலகில் கழுவி லேற்றப்பட்டேன்; கூறுங்கள் ” என்று கேட்டார். அதற்கு யமன், “முனிவரே! உன்னுடைய இளம் பிராயத்தில் தும்பி, வண்டு போன்றவற்றைப் பிடித்து, அவற் றிற்குத் துன்பம் கொடுத்து, ஆனந்தப்பட் டாய். அதன் விளைவை, முதுமைப் பருவத் தில் அனுபவித்தாய்” என்றான். அதற்கு முனிவர் பெருமான், “அறம் எது? பாவம் எது? என்று பிரித்துப் பார்த்து, அறியும் அறிவு இல்லாத இளம் பருவத்தில், செய்த பிழைக்கு ஈடாக, வயதான காலத்தில் ஒரு பெரிய தண்டனையை ஏற்கச் செய்வது, எந்த வகையில் நியாயமாகும்? அதிலும் உலகப் பற்றற்றுத் தவம் செய்கின்ற, என் போன்ற முனிவருக்கு எவ்வாறு பொருந்தும்?” என்று கேட்டார். அதற்கு யமன் “உயிர்கள் யாவும் எனக்கு ஒன்றுதான். அதிலும் உயிர்களைப் பறிப்பதில், நான் இளையவர் என்றோ, முதியவர் என்றோ, குழந்தைகள் என்றோ, மன்னர்கள் என்றோ, வறியவர்கள், என்றோ பேதம் பார்ப்ப தில்லை. விதியின்படி தான் நடக்கும். விதியை யாராலும் வெல்ல முடியாது. எனவேதான், நீ சிறு வயதில் செய்த சிறு பாவம், உன்னை விடாமல் தொடர்ந்து முதுமையில் பற்றி உனக்குப் பெரிய தண்டனையை, வாங்கிக் கொடுத்தது” என்றான்.
யமன் சொன்ன பதிலில் மாண்டவ்ய முனிவருக்குத் திருப்தியில்லை. அதனால் அவர், “இன்று தொடங்கி, பிறந்தது முதல் பதிநான்கு ஆண்டு வரை உயிர்கள் எந்தப் பாவம் செய்தாலும், அவர்களை அந்தப் பாவத்தின் விளைவு பற்றாதிருக்க வேண் டும் “என்று இளஞ்சிறுவர்களுக்கு அருள் செய்தார். (அதனால்தான் இளம் பிள்ளை கள் குற்றம் புரிந்தால், அவர்களைச் சிறைக்கு அனுப்பாது சீர்திருத்தப் பள்ளி கட்கு அனுப்புகிறார்கள் போலும்!) அதோடு அந்த யமனைப் பார்த்து, “தரும ராசனே! நான் இளம் வயதில், அறியாமல் செய்த குற்றத்திற்காக எனக்குப் பெருந் தண்டனை கொடுத்தாய். ஆதலால், நீ இப்பூவுலகில் தாதி மகனாய்ப் பிறந்து, அறிவு, ஆற்றலும் பெற்று சிறந்த நீதி மானாகத் திகழ்வாயாக” என்று அவனுக் குச் சாபம் கொடுப்பது போலக் கொடுத்து, உலக உயிர்களுக்கு நல்வழி காட்டும் ஒரு மகானை அஸ்தினாபுரத்திற்கு அனுப்பி அருள் செய்தார்.
அந்த மாண்டவ்ய முனிவரின் சாபம் பெற்ற யமன்தான், இப்பொழுது விசித்திர வீரியன் மனைவி அம்பிகை தாதி, வயிற் றில் விதுரர் என்ற ஓர் உத்தம புருஷனாக அவதரித்தார்.
கர்ணன் பிறப்பு
வியாசருடைய அருளால், குரு வம்சம் தழைக்கப் பிறந்த திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, நன்கு வளர்ந்து வந்தனர். எல்லாக் கலைகளையும் பீஷ்மரிடம் சுற்றுச் சிறந்தவராயினர். பிறவிக் குருடனாகிய திருதராட்டிரன், ராஜநீதி சாஸ்திரங்களில் கரை கண்டவன். ஆதலால், பீஷ்மர் அவனைக் குரு நாட்டிற்கு மன்னனாக்கினார். குதிரை யேற்றம், விற் பயிற்சி போன்றவற்றில் சிறந்து இருத்தலோடு, தர்ம சாஸ்திரங் களிலும் சிறந்து விளங்கியிருத்தலால், பாண்டுவைத் திருதராட்டிரனுக்கு உதவி யாக இருக்க வேண்டுமென்று, சேனைத் தலைவன் ஆக்கினார். அறநெறிகளையும், நீதி சாஸ்திரங்களை, அறிந்திருத்தலோடு நுட்பமான அறிவையும், எவற்றையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலையும், பெற்றிருத்தலால் விதுரரைத், திருதராட்டிர னுக்கு உதவியாக, அமைச்சராக ஆக்கினார். இவ்வாறு சில காலம் மூன்று சகோதரர் களும், ஒற்றுமையாக பீஷ்மரின் தலைமை யின் கீழ் குரு நாட்டை ஆட்சி புரிந்து வந்தனர்.
அடுத்து, பீஷ்மர், காந்தார நாட்டு மன்ன னாகிய கபலன் என்பவனுக்கு, “நின் எழில் மிகு புதல்வி காந்தாரியை மணம் செய்து கொடுக்கவும் “என்று ஓர் ஓலை எழுதி, தூதர் மூலம் அதனைக் கொடுத்தனுப்பி னார். காந்தார நாட்டு மன்னன் கபலனும், பீஷ்மர் வீரத்திற்கு அஞ்சியோ, என்னவோ தன் மகளைத் திருதராட்டிரனுக்கு மணம் செய்து கொடுக்க இசைந்தான். இருவருக் கும் சிறந்த முறையில் திருமணம் நடந்தது. கற்பு நெறியில் சிறந்த காந்தாரி,தனக்குக் கண்ணில்லாதவன் கணவனாக வரப் போகின்றான் என்பதை அறிந்தவுடன், “எனக்குக் கணவராக வரப் போகின்ற வருக்கு கண்ணில்லை என்றால், எனக்குக் கண்பார்வை ஏன்? இதனால் இந்தக் கண்ணால், இந்த உலகத்தைப் பார்க்க மாட்டேன்” என்று கூறி அதனை உறுதி செய்கின்றாற்போலப், பொற்பட்டயத்தால் தன் இரு கண்களையும் கட்டிக் கொண் டாள். அதேபோலத்தான் வாழ் நாள் முழுவதும், அந்த மாதரசி இருந்து விட்டாள். தன் சகோதரிக்குக் கண்கள் இருந் தும், கண்ணில்லாத நிலை ஏற்பட்டுள்ளதே என்று வருந்தி, அதற்குக் காரணமான பீஷ்மரைச் சார்ந்த குரு குலத்தையே, அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, காந்தாரியுடன் அவள் சகோதரன் சகுனி, உட்பகையை உறுதியாக உள்ளத் தில் பற்றிக் கொண்டு, அஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்தான்.
இனி கர்ணன் பிறப்பைப் பார்ப்போம்.
குந்தி
உயிர்களுக்கு உயிராக விளங்கக் கூடிய, எம்பெருமான் கண்ணபிரானுடைய பாட்ட னும், யாதவ குல திலகனுமான, சூரன் என்பவனுக்குப் பிரதை என்று ஒரு மகள் இருந்தாள். அவள் அழகிலும், பண்பிலும் சிறந்து இருந்தாள். தன் அத்தை மகனாகிய, குந்திபோஜனுக்குக் குழந்தை இல்லா திருந்தபடியால், தான் முன்பு வாக்களித் திருந்தபடி, சூரன் தன் குழந்தையாகிய பிரதையை அக்குந்திபோஜனுக்குச் சுவீகார மகளாகக் கொடுத்தான். அக்குந்திபோஜ னும், மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை தன் மகளாக ஏற்றுக் கொண்டு, உயர்நிலையில் வளர்த்து வந்தான் குந்திபோஜன் மகளாகவே, பிரதை அங்கு நன்கு வளர்ந்த மையால், அக்குழந்தையைக் ‘குந்தி’ என்றே எல்லோரும் அழைக்கலாயினர்.
அவள் சிறு பெண்ணாக இருந்த காலத் தில், குந்திபோஜனுடைய அரண்மனைக் குத் துருவாச மாமுனிவர் வந்தார். குந்தி போஜனும் அவரை வணங்கி, முகமன் கூறி, தன் அரண்மனையிலேயே தங்கி யிருக்கும்படி வேண்டிக் கொண்டார். அவரும், அம்மன்னன் அரண்மனையில் ஒரு வருடம் தங்கியிருந்தார். குந்திபோஜன் அம்முனிவருக்குப் பணிவிடை செய்யத். தன் மகள் குந்தியை அவருடன் இருக்கச் செய்தான். துருவாசமுனிவர் தங்கியிருந்த அந்த ஒரு வருட காலத்தில், குந்தி, மிகக் கவனத்துடனும், முனிவர் மனம் கவரும் படியும்,அன்போடு பணிவிடைகள் செய்து வந்தாள். எதற்கெடுத்தாலும்.கோபங்கொண்டு சாபமிடும் அத்துர்வாச முனிவரையே மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்குப், பணிவிடை செய்தாள் அக் குந்தி
தனக்குத் தூய உள்ளத்தோடு, பணி செய் கின்ற குந்தி மணக்கப் போகின்ற கணவ னுக்குப், பின்னால் ஏற்படப் பே போகும் ஆபத்தை ஞானக் கண்ணால் அறிந்த அம் முனிவர், “அப்பெண்ணுக்குப் பாதுகாப் பாக இருக்கட்டும் “என்று கருதி ஒரு திவ்விய மந்திரத்தை உபதேசித்து, அவளிடம், ”பெண்ணே நான் உபதேசித்த மந்திரத்தைப் பக்தியுடன் கூறி, நீ எந்த தேவனை அழைக்கின்றாயோ, அந்த தேவன், அந்தக் கணமே உன் எதிரில் தோன்றி, தன் ஆற்றலால் ஒரு வீரமிக்க தரும நெறி தவறாத புத்திரனைக் கொடுத் தருள்வான்” என்ற அன்போடு கூறியருளி னார். பின்னர் துருவாசர், குந்தி போஜனி டம் விடைபெற்றுத் தவம் செய்ய புறப்பட்டுச் சென்று விட்டார்.
சூரிய பகவான்
சிறு பெண் அல்லவா! முனிவர் உப தேசித்த மந்திரம் பலிக்குமா, என்ற சந்தே கம் அவள் உள்ளத்தில் எழுந்தது. அதனால் அதனைச் சோதனை செய்து பார்க்க எண்ணிய அவள், நிலாமுற்றத்திற்குச் சென் றாள். அங்கு வானத்திலே ஒளிக் கதிர் களைப் பரப்பி, உலகெல்லாம் பகலாக்கி வரும் சூரியனுக்குரிய மந்திரத்தை, துர் வாசர் சொல்லிய முறையுடன் கூறினாள். உடனே வானம் மேகங்களால் மறைக்கப் பட்டது. எங்கணும் இருள் சூழ்ந்தது. அழகிய ஆயிரம் கிரணக் கதிர்களை வீசிக் கொண்டு சூரிய பகவான், மான் போன்ற கண்களில், மருண்ட பார்வையுடன், விளங்கிக் கொண்டு இருக்கும் குந்தியின் அருகில் வந்து, மிகுந்த ஆசையுடன் அவளைத் தன் வயப்படுத்தும் சக்தியுடன் எதிரில் நின்றான். அவனைக் கண்டதும் அஞ்சிய குந்தி ‘நீ யார்?’ எனக் கேட்டாள். “நான் இவ்வுலகினையெல்லாம் பகலாக ஆக்கி, ஒளிக்கதிர்களை வீசி வரும் சூரியன். நீ புத்திரனைக் கொடுக்கும் மந்திரத்தை ஓதியதனால், நான் உன்னிடம் வந்தேன்” என்று கூறி அவளைத் தழுவ முயன்றான். உடனே குந்தி, ‘என்னைத் தொடாதே’ என்று சீறினாள். அதைக் கேட்டுச் சூரியன் நிதானமாக ”பெண்ணே! நானாக இங்கு வரவில்லை. நீ உன் மந்திரத்தின் மூலம் அழைத்ததனால்தான் வந்தேன். என்னைத் தடுத்தாயானால், என் கோபத்திற்கு ஆளாவாய்; நான் சபித்திடுவேன். அது மட்டுமல்லாது, மந்திரத்தை உனக்குச் சொல்லிய துருவாசர் கோபத்திற்கு ஆளா வாய். அவருடைய சாபம் வந்து சேர்ந்தால், உன் குலமே அழிந்து விடும்” என்ற கூறிய அவன் மேலும், “பெண்ணே! பயப் படாதே. என்னுடன் சேர்வதனால், உன் தகப்பன் சீறுவான் என்று எண்ணாதே. ஏனெனில் குழந்தை பிறந்தவுடன், முன் போலவே நீ கன்னித்தன்மையுடையவளா இருக்கும்படி செய்து விடுவேன். மேலும் மூவுலகும் புகழும்படியான, ‘தான வீரன்’ என்று போற்றும்படியான, ஒரு மகன் உனக்குப் பிறப்பான். அவன் என்றும் நிலைத்திருக்கும்படியான பேரும் புகழும் பெறுவான்” என்று பலவாறு கூறி அவள் அச்சத்தைப் போக்கினான்.
அச்சம் நீங்கிய குந்தி, சூரியன் சொல்லை ஏற்க, அச்சூரியனும் அவளோடு கூடினான். கர்ப்பத்தைத் தந்து, உடனே அவ்விடம் விட்டு அகன்று, விண்ணில் ஒளிக்கதிர் களை வீசி உலகெல்லாம் பகலாக்கினான். கர்ப்பத்தைத் தரித்த குந்திக்கு, உடனே ஒப்பற்ற வீரனும், கொடையில் மிக்க வனும், சூரியனைப் போன்ற ஒளியை உடையவனும், கவச குண்டலங்களை உடலோடு தரித்தவனும், ஆக ஒரு மகன் பிறந்தான். சூரியனுடைய வரத்தின் காரணமாகக், குந்தி மீண்டும் கன்னித் தன்மை அடைந்தாள்.
மந்தாகினி நதி
பிறந்த அழகான ஆண் குழந்தையைக் கண்டு குந்தி பெருமகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அந்த ஆனந்தம், சிறிது நேரமே இருந்தது. பின்னர் அவளுக்குப் பயம் ஏற்பட்டது. பழிவந்து விடுமோ, என்று அஞ்சினாள். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள். அதனால் அவள், கவச குண்டலங்களோடு பிறந்த அக்குழந்தையை, ஒரு பெட்டியில் வைத்து அக்குழந்தையின் கீழ் தன் சேலையை வைத்து, மெத்தென்று இருக்கச் செய்து, கண்களில் கண்ணீர் அருவியைப் போலப் பெருக, அருகில் சென்று கொண்டி ருந்த மந்தாகினி நதியில், அப்பெட்டியைச் செலுத்தினாள். அப்பெட்டியும் ஆற்றோடு சென்றது.
கங்கையாற்றில் (மந்தாகினி) மிதந்து வந்த அப்பெட்டியை அந்த ஆறு, தன் அலைகளாகிய கைகளால் எடுத்து, அசையு மாறு தாலாட்டிக் கொண்டே தூக்கிச் சென்றது. கங்கையிலே அசைந்து, அசைந்து வருகின்ற அப்பெட்டியை, நீர் எடுத்துப் போகும்படி வந்த தேர்ப்பாகனாகிய அதிரதனும், அவன் மனைவியாகிய ராதேயும், கண்டு அப்பெட்டியைக் கரை யோரம் தள்ளி, கரையில் சேர்த்து, தங்கள் இல்லத்திற்கு அப்பெட்டியைக் கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் ஆவலோடு அப்பெட்டியைத் திறந்து பார்த்தனர். ஒளி வீசும் கவச குண்டலங்களோடு, பவள வாயினால் புன்முறுவல் சிந்தி, ‘இந்தா இந்தா பெற்றுக் கொள்’ என்று சொல்வதைப்போல, இரு கைகளையும் நீட்டிக் கொண்டு, ஓர் அழகான ஆண் குழந்தை அப்பெட்டியில் இருக்கக் கண்ட னர். அப்பொழுது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இறைவன் அருளால்தான், அக்குழந்தை கிடைத்தது என்று எண்ணினர். அதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்றனர். கவச குண்டலங்களோடு பிறந்தமையால், ‘கர்ணன்’ என்று பெயரிட்டனர். சீரும் சிறப்புமாய், தன் பிள்ளையென வளர்த்து வந்தனர். அக்குழந்தையும், தேர்ப்பாகன் அதிரதனுடைய மைந்தனாக, இளம்பிறைச் சந்திரன் போலச் சீரோடும். சிறப்போடும். வளர்ந்து வந்தான். பல கலைகளையும் கற்று, சிறந்த ஆற்றல் மிக்க வீரனாகவும், அறிவுடையவனாகவும், திகழ்ந்தான். கல்வியை மேலும் கற்க வேண்டுமென்ற விருப்பம் அவன் உள்ளத்தில் எழுந்தது. பீஷ்மருக்குக் கல்வி கற்பித்த, பரசுராமரிடம் கற்க வேண்டுமென்ற ஆவல் அவன் உள்ளத்தில் எழுந்தது. அந்தணருக்கும். க்ஷத்திரியருக்குமே கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய பரசுராமர், தேர்ப்பாகன் மைந்தனாகிய தனக்குக் கல்வி கற்றுக் கொடுப்பாரா? என்ற ஐயம், அவன் உள்ளத் தில் எழுந்தது. கல்வியை மேலும் மேலும் கற்றுச் சிறந்தவனாக விளங்க வேண்டு மென்ற வெறியில், அவன் அந்தண வடிவம் கொண்டு, அப்பரசுராமரிடம் சென்று தன்னை அந்தணன் எனக் கூறிக் கொண்டு, அங்கு சில நாட்கள் குருகுல வாசம் செய்து தமிழர் படைக்கலப் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம், மற்றும் பல கலைகளைப் பயின்று வல்லவன் ஆனான். தனக்கு நிகர் யாரும் இல்லை, என்ற அளவில் வில்லாற் றலில் சிறந்து விளங்கினான். அதோடு யாரும் எளிதில் கற்றுக்கொள்ள முடியாத, பிரம்மாஸ்திரப் பயிற்சியையும் பெற்றான்.
வண்டு
இவ்வாறு பரசுராமரிடம் கல்வியைப் பயின்று கொண்டு வரும் நாளில், ஒருநாள் பரசுராமர் தன் மாணவன் கர்ணன் தொடை யில், தலை வைத்து உறங்கிக் கொண்டிருந் தார். வண்டு ஒன்று கர்ணன் தொடையைக் குடைந்து, இரத்தத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தது, வலியும் எடுத்தது. எழுந் தால் குருவின் உறக்கம் கலையுமே, என்று எண்ணினான். குருவின் உறக்கம் கலையக் கூடாது என்ற குரு பக்தியினால், அவன் அந்த வலியையும் பொறுத்துக் கொண் டான். ஆனால் வண்டு விடவில்லை. அவனுடைய குரு பக்திக்குச் சோதனை கொடுப்பது போல, மேலும் மேலும் துளைத்துக் கொண்டே சென்றது. அதனால் இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்தோடியது. அவ்வாறு அந்த இரத்தம் பெருகி ஓடி, பரசு ராமரின் உடலை நனைத்தது. பரசுராமரின் உறக்கம் அதனால் கலைந்தது. எழுந்து பார்த்தார். கர்ணனின் தொடையை வண்டு ஒன்று கடித்துத் துளைத்துக் கொண்டிருப்பதையும், அதிலிருந்து இரத்தம் ஆறாய்ப் பெருக்கெடுத்து, ஓடுவதையும் கண்டார். நடந்ததை அறிந்து கொண்டார்.
பரசுராமரின் சாபம்
கர்ணனின் குருபக்தியை அவர் மெச்ச வில்லை. மாறாக அவர் அவன் மேல் மிக்க கோபங்கொண்டு, “கர்ணா! நீ அந்தணன் இல்லை. அந்தணனாயிருந்தால், இந்தக் கொடிய வலியைத் தாங்கிக் கொண்டிருக்க மாட்டாய். க்ஷத்திரியனாகத்தான் இருக்க வேண்டும்.குலமாறிப் பொய் சொன்ன நீ யார்?” எனக் கேட்டார். உடனே பரசு ராமரை வணங்கி, “நான் தேர்ப்பாகன் அதி ரதன் வளர்ப்பு மகன். அந்தணன் அல்லன்; தமிழர் படைக்கலப் பயிற்சியைக் கற்க வேண்டு மென்ற பேராவலினால், இந்தத் தவற்றைச் செய்தேன்; பொறுத்தருள்க” என வேண்டி னான். ஆனாலும் பரசுராமரின் கோபம் தணியவில்லை. அதனால், ‘க்ஷத்திரிய குலத் தையே இருபத்தொரு தலைமுறை, வேரறுத்த நான் சுற்றுத் தந்த கல்வி யனைத்தும்,உனக்குத் தக்க சமயத்தில் பயன்படாதொழியட்டும் ” என் என்று சாப மிட்டார். சாபத்தைப் பெற்ற கர்ணன் துக்கத் துடன், அஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்தான்.
அந்தச் சாபத்தின் விளைவு, பதினேழாம் நாள் போரிலே எழுந்தது. தேரோட்டியாக இருந்த சல்லியன், போர்க்களத்தில், அர்ச்சுனன் மார்பின் மீது குறி வைத்து அம்பு எய்து, அவனைக் கொல்லும்படி கர்ணனிடம் கூறினான். ஆனால் கர்ணனோ அவன் வார்த்தையைக் கேட்காமல் மறுத்து, அர்ச்சு னன் கழுத்திற்குக் குறி வைத்து அம்பினை எய்தான். ஆனால், அர்ச்சுனன் தேரோட்டியாக இருந்த பார்த்தசாரதி ஆகிய கண்ணபிரான், தன்னுடைய தேரைப் பூமியிலே அழுத்த, கர்ணன் விட்ட அம்பு, அர்ச்சுனன் தலையிலுள்ள திருமுடியை அடித்துக் கீழே வீழ்த்தியது. தலைக்கு வந்தது, தலைப் பாகையோடு போயிற்று. என்ற அளவில் அன்று அர்ச்சுனன் பிழைத்தான். பரசுராமரிடத்தில், பெற்ற சாபத்தினால்தான் கர்ணன் இந்த தவறைச் செய்தான்.
இச்சாபமே, அவனுடைய இறப்பிற்குக் காரணமாயிற்று. என்றாலும், கர்ணன் தானத்திலும், படைக்கலங்களைப் பயன் படுத்துதலிலும், உலகோர் போற்றும்படி தன்னிகரற்று தன் வாழ்நாளில் விளங்கி னான். என்பது வெளிப்படை.
பாண்டவர் – கெளரவர் தோற்றம்
சூரியனால் கன்னித்தன்மையை மீண்டும் பெற்ற குந்தி, திருமணம் செய்து கொள்வதற்கேற்ற பக்குவநிலை அடைந் தாள். யது குலத்தரசனாகிய சூரன் (குந்தி யின் பெற்ற தந்தை) என்பவர், அரச குமாரர் களைக் கொண்டு சுயம்வரம் நடத்துவான் வேண்டி, அனைத்து அரச குமாரர்களையும் வரவழைத்தார். எழில்மிக்க குந்தியை அடைய, மலரை வண்டுகள் தேடி நாடி வருவன போல நான், நீ, என்று போட்டி போட்டுக் கொண்டு, ஏராளமான அரச குமாரர்கள் சூரன் அரசவைக்கு வந்தனர். குரு நாட்டுச் சேனைத் தலைவனாகிய பாண்டுவும், அங்கு வந்திருந்தான். செம்மாந்து வீற்றிருந்த அரசர்கள் நிறைந்த சபையில், குந்தி மணமாலையை ஏந்தி வர, தோழி ஒவ்வொருவரின் வரலாற்றைக் கூறி வர, அனைவரையும் பார்த்து வந்த அந்தக் குந்தி இறுதியில், விலங்கின அரசன் சிங்கம் போலப் பெருமிதத்துடன் வீற்றி ருந்த, பாண்டுவின் கழுத்தில் மண மாலையை அணிவித்தாள். அதனைக் கண்டு மகிழ்ந்த சூரன், பாண்டுவுக்கும், குந்திக்கும் விமரிசையாகத் திருமணத்தை நடத்தினார். அதன்பின் மணமக்கள் இரு வரும், அஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்தனர். சில நாட்கள் கழித்து, இராஜவம்சத்து வழக்கப்படியும், பீஷ்மருடைய ஆலோ சனைப்படியும் மத்திர தேச மன்னன், தன் பெண் மாத்ரி தேவியை, பாண்டு மன்ன னுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அதன் பின் இரு மனைவியருடன், பாண்டு மன்னன் மகிழ்ச்சியுடன் இன்ப வாழ்க்கை நடத்தி வந்தான்.
முனிவரின் சாபம்
பாண்டுவின் இந்த இன்ப வாழ்க்கை விதியின் காரணமாக நீடிக்காது போயிற்று. ஊழ்வினை முன்னே இழுத்ததால், பாண்டு தன் இரு மனைவியருடன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இமயமலைச் சாரலை அடைந்தான். நன்கு வேட்டை யாடி, பல விலங்குகளைக் கொன்றான். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து, தன் இரு மனைவியருடன் ஓய்வு எடுத்துக் கொண்டி ருந்தான். அப்பொழுது, சற்று தூரத்தில் ஓர் ஆண் மானும், பெண் மானும் சேர்ந்து மகிழ்ச்சியோடு இருத்தலைக் கண்டான். வினையின் காரணமாக, அதனைக் கண்ட பாண்டு அந்தக் கலைமானை நோக்கி ஓர் அம்பினைச் செலுத்தினான். அந்த அம்பானது, கலைமானின் உடம்பைத் தாக்க, அம்மான் கீழே விழுந்து உயிர் துறந்தது.
கீழே விழுந்த அக்கலைமான், அம்பு துளைத்த மார்புடனே, ஒரு முனிவர் வடிவத்தில் எ எழுந்து நின்று, பாண்டுவை நோக்கி, “மன்னனே! என் பெயர் கிந்தமன். நாங்கள் விரும்பிய வடிவத்தை எடுத்து ஒன்று சேர்ந்து இன்புறுவோம். அதே முறையில், இன்று நாங்கள் மான் வடிவம் எடுத்து இன்புற்று இருந்தோம். இன்புற்று இருக்கும் நேரத்தில், நீ அம்பினை எய்தாய். எனவே நீ உன் மனைவியுடன் சேர்ந்து போகத்தில் ஈடுபட்டால், உடனே மாண்டு போவாய்” என்று சாபமிட்டு உடனே கீழே விழுந்து இறந்தார். பெண் மான் வடிவத் தில் இருந்த, அவர் மனைவியும் சுய உரு பெற்று, தன் கணவன் இறந்திருக்கும் நிலையைக் கண்டு, மனம் வெதும்பி, ஆறாத்துயருற்று, செந்தீயில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டு, கணவன் பின் சென்றாள்.
முனித் தம்பதியினர் இறந்ததற்கும், கொடிய சாபத்தைத் தான் பெற்றதற்கும், தானே காரணம் என்று எண்ணி எண்ணிப், பாண்டு மனம் நொந்தான். அதனால் அரச போக வாழ்வை அவன் விரும்பவில்லை. காமம், குரோதம், லோபம், மதம், மோகம், மாச்சரியம் என்னும் ஆறு உட் பிகைகளை வெல்ல எண்ணினான். அதற்கு ஏற்றது தவம் செய்தலே, என முடிவு கண்டான். உடனே தன்னுடைய சேனைத் தலைவன் பொறுப்பை பீஷ்மரிடமும், விதுரரிடமும் ஒப்படைத்தான். தன் இரு மனைவியருடன் இமயமலையைச் சார்ந்த சந்ச்ருங்க பர்வதத்திற்குத் தவம் செய்யச் சென்று விட்டான். அங்குக் காமக்கனலை விடுத்துத் தவத்தினர்க்குரிய ஓமக்கனலை வளர்த்து மெய்ஞ்ஞானம் பெறலானான்.
காந்தாரி கர்ப்பம் அடைதல்
அதேவேளையில், வியாசர் அருளால் திருதராட்டிரன் மனைவி காந்தாரி க கர்ப்பம் தரித்தாள். இதனைக் கேள்வியுற்ற பாண்டு தானும் மகப்பேறு பெற வேண்டுமென்று விரும்பினான். உடனே தன் மனைவி குந்தியை அழைத்து, “குந்திதேவியே! இவ் வுலகில் பெறுகின்ற பேறுகளில் மிகச் சிறந்த பேறு அறிவறிந்த மக்கட் பேறல்லவா! தானம், தவம், விரதங்கள் முதலானவற்றை மிகுதியாகச் செய்தாலும் புத்திரப்பேறு இல்லையென்றால், அவர் கள் ‘புத்’ என்ற நரகத்தைத்தான் அடைவார் கள். நற்கதி அடைய மாட்டார்கள். விதி யின் காரணமாக, நானோ முனிவர் சாபத் தைப் பெற்றுவிட்டேன். ஆதலின் என் மூலம் மக்கட்பேறு பெற வாய்ப்பில்லை. தவறாக எண்ணாதே. வேத விதிப்படித்தான் கூறு கின்றேன். நின்னுடைய அருள் இருப்பின் அம்மக்கட்பேறு கிட்டும். அதாவது முனிவர், அல்லது தேவர் அல்லது அந்தணர் மூலம், சந்ததி விருத்தி செய்யலாம் என்று சாஸ்திரங்கள் கூறு கின்றன. அதன்படி நீ செய்வாய்” என்று வியாச பகவான் மூலம், தான் பிறந்ததை எண்ணி இவ்வாறு கூறினான்.
அதனைக் கேட்ட குந்தி தேவி திடுக் கிட்டு, தன் மணாளரை நோக்கி, “என் அன்பிற்குரியவரே! நீர் எதற்காகச் சொல் கிறீர்கள் என்பது எனக்குப் புரிகின்றது. என்றாலும் கற்புடைய மாதர் பிறர்மேல் மனம் வையார் அல்லவா?” என்று கூறி மறுத்தாள். அதனைக் கேட்ட பாண்டு, “குந்தி தேவி/ சற்று நன்கு ஆராய்ந்து பார்த்தால் இதில் தவறொன்றுமில்லை என்பதை நீ அறிவாய். சாரததண்டாயனி என்னும் கேகய மன்னனுக்குப், புத்திரபாக்கியம் இல்லாது இருந்தது. அதனால் கற்பில் சிறந்த சிருதசேனை என்னும் தன் மனை வியை அழைத்துத், தேவர் மூலமோ முனிவர் மூலமோ, அந்தணர் மூலமோ, ஆண் மகனைப் பெற்றுத் தருமாறு அம் மன்னன் வேண்டிக் கொண்டான். அம் மனைவியும் கணவன் சொல் தட்டாது. ஆண் பிள்ளை பிறப்பதற்காக அக்னியில் ஓமம் செய்து முடித்தபின், அந்தக் கிரியை களைச் செய்த அந்தணனுடன் கூடினாள். அதன் காரணமாக அவள், துர்ஜயன் முத லான மூன்று மகாரதர்களைப் பெற்றாள். அதேபோல ஸௌதாசன் என்ற மன்னன், மதயந்தி என்ற தன் மனைவியிடம் வசிட்ட முனிவர் மூலமாய், அச்மகன் என்ற புத்திரனைப் பெற்றான். இன்னும் சொல் வதற்கு நிறைய உண்டு. என்றாலும் நம் குரு வம்சத்தில் உன் மாமியார்களாகிய அம்பிகை, அம்பாலிகை என்ற இருவரும் எங்கள் பெரிய தந்தையார் வேதவியாசர் மூலம்தானே, எங்களைப் புதல்வர்களாக அடைந்துள்ளார்கள் என்பதனை நீ நிதரி சனமாகப் பார்க்கவில்லையா”என்று பலவாறு கூறி அவளைத் தேற்றினான்.
அதன் பின்னர் குந்தி மகப்பேறு பெறு வதற்குரிய தன் அனுபவ வழியைக் கூற லானாள்.
“பிற ஆடவரைச் சேரேன். துர்வாசர் எனக்குச் சிறு வயதில் அருளிய மந்திரத்தின் மூலம், தேவர்களைச் சேர்ந்து மகப் பேற்றினை அளிப்பேன்” என்று கூறிய அவள், கர்ணன் பிறப்பைக் கூறுவதைத் தவிர்த்தாள். இதனைக் கேட்டவுடன் பாண்டு மகிழ்வடைந்து. “குந்தி நான் பெரும் பாக்கியசாலி, உனக்கு வரம் கொடுத்த, அந்த துர்வாச முனிவரை வணங்குகிறேன். அறத்தின் துணையின்றி நாட்டை ஆள்வது கடினம். எனவே தரும் தேவதையை அழை; அத்தேவதையிடம் புத்திரப்பேற்றை வேண்டு; அத்தேவதை மூலம் நம் குலம் தழைக்கட்டும். அவன் நிச்சயம் தர்ம வழியில் நடப்பவனாக இருப்பான் உலகில் புகழையும் கெளரவத்தையும் பெறுவான். எனவே முனிவர் அருளிய மந்திரத்தை, உச்சரித்து அத்தரும தேவதையை வழிபாடு செய்க” என்று கூறி குந்திக்கு அனுமதி வழங்கினான்.
தர்மரின் பிறப்பு
உடனே குந்தி யமனை மனத்தில் நிறுத்தி அவனை வழிபாடு செய்து, பின் துர்வாசர் அருளிய மந்திரத்தை எடுத்துக் கூறினாள். உடனே தருமராசன் என்று சொல்லப்படும் யமன், அவன் முன் தோன்றி, அவளோடு சேர்ந்தான். அதன் பயனாக, “இப்பூவுலகம் முழுவதும் அறநெறியோடு இவன் ஆண்டு பாதுகாப்பான்” என்று முனிவர்கள் கூற, தேவர்கள் வாழ்த்த, ஐப்பசி மாதம் வளர் பிறை, பஞ்சமி திதி, கேட்டை நட்சத்திரத் தில் யுதிஷ்டிரன்,என்று சொல்லக்கூடிய தருமராஜன், பிறந்து பாண்டுவின் மனக் குறையைப் போக்கி அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்.
செழுந்தவப்பயனால், குந்தி அழகான ஆண் மகனைப் பெற்றாள், என்பதைக் கேட்ட காந்தாரி, பொறாமையுற்று இரண்டாண்டு காலமாய் வயிற்றில் தாங்கி வந்த கர்ப்பத்தைக் கல்லால் இடித்துக் கொண்டாள். அதனால் கர்ப்பம் சிதைந்து குழம்பாகி, வெளியே வந்து விழுந்தது. அவற்றையெல்லாம் வாரிக் கொட்ட காந்தாரி முனைந்த அளவில், வியாசர் வந்து தடுத்தார். “என்ன காரியம் செய்து விட்டாய். அவசரப்பட்டு விட்டாயே” என்று கூறி, வியாசர் சிதைந்த கர்ப்பச் சிதைவுகளையெல்லாம் ஒன்று சேர்த்து, அதனை நூறு பாகமாகச் செய்து நூறு தாழி களில், உருகின நெய்யைப்போல இட்டு வைத்து, பின்னர் எஞ்சிய ஒரு சிறு பாகத்தை ஒரு கலசத்தில் இட்டு வைத்தார். பின்னர் கண்ணிலான் மனைவியான காந்தாரியை நோக்கி, “பெண்ணே! முன்னைப் போல அவசரப்பட்டு விடாதே! இத்தாழிகளில் உள்ள தசைப் பிண்டங்கள், குழந்தை வடிவம் பெறும் வரையிலும், கையாலும் தொடக் கூடாது. நன்கு பாதுகாப்பாக வைத்திருந்தால், உனக்கு வலிமை மிக்க நூறு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கும். என்னுடைய இந்த வார்த்தை பழுதாகாது” என்று கூறிச் சென்றார். காந்தாரியும் முன்னைப் போலச் செய்யாமல், கவனத் துடன் அந்தத் தாழிகளை நன்கு பாதுகாத்து வந்தாள். ஒரு நாள் விண்ணிலிருந்து இரத்த மழை பொழிந்தது; கோள்களெல்லாம் தன்னிலையிலிருந்து மாறித் தீங்கு விளை விக்கும், தன்மையில் இருந்தன. நரிகள் ஊளையிட்டன; கழுதைகளும், கழுகு களும், காக்கைகளும், அமங்கலமாய்ச் சப்த மிட்டன. அந்த வேளையில் பாம்புக் கொடியையுடைய, துரியோதனன் பிறந் தான். அனைவரும் அவன் பிறந்த வேளையைப் பார்த்து அச்சம் கொண்டனர்.
பீமன் பிறந்தான்
துரியோதனன் பிறந்த அடுத்த நாள் பாண்டுவிற்கு, நல்ல வலிமைமிக்க மகனைப் பெற வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அதனால் தன்னுடைய விருப் பத்தைக் குந்தியிடம் வெளியிட்டான். அவளும் தன் கணவன் கட்டளையை ஏற்று, வாயு பகவானை வழிபட்டு, துர்வாசர் அருளிய மந்திரத்தினைப் பயபக்தியுடன் கூறினாள். அந்நிலையில் வாயுபகவான், உடனே தோன்றி அவளைச் சேர்ந்தான். பலமிக்க குழந்தை ஒன்றைப் பெற்றெடுத் தாள். சிம்மத்தில் குரு, துலாத்தில் சூரியனு டன், மக நட்சத்திரத்தில், சூரியனும் சேர்ந்த போது, சுபமான திரயோதசியில் பீமன் என்ற வலிமை வாய்ந்த அக்குழந்தை (துரி யோதனன் பிறந்த மறுநாளே) உச்சிப் பொழுதில் பிறந்தது.
பீமன் பிறந்த மறு நாளே, துரியோதனன் தம்பியராகிய துச்சாதனன், முதலான தொண்ணூற்று ஒன்பது பேரும், அடுத்தடுத்து உலகெங்கிலும், தீய நிமித்தங்கள் தோன்றப் பிறந்தனர். அவர்களுக்குபின் கலசப்பானையிலிருந்து, பெண் குழந்தை வேண்டும் என்ற காந்தாரியின் விருப்பப்படி, துச்சளை என்ற பெண் பிறந்தாள். அவள்தான் பின்னர் அபிமன்யுவைக் கொன்ற சயத்திரதனை மணந்தவள்.
காந்தாரியோடு வாழ்ந்த அக்காலத்திலேயே திருதராட்டிரனுக்கு. ஒரு வைசியப் பெண் மூலம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தையே ‘யுயுத்சு’ என்பவன் ஆவான். அந்த யுயுத்சு பிற்காலத்தில், புகழ்மிக்க வனாகவும் அறிவுள்ளவனாகவும், திகழ்ந் தான். ஆக, திருதராட்டிரனுக்கு, துச்சளை, யுயுத்சு என்பவர்களோடு சேர்த்து நூற்று இரண்டு மக்கள் ஆயினர்.
அர்ச்சுனன் பிறப்பு
இரண்டு குழந்தைகளைப் பெற்றும் பாண்டுவின் ஆசை தீரவில்லை. வில்லாளி களுக்கெல்லாம், சிறந்த வில்லாளியாக விளங்கும் தலை சிறந்த ஒரு மகனைப், பெற வேண்டும் என்று நினைத்து, அதனைக் குந்தியிடம் கூறினான். குந்தியும் அதனை ஏற்றுக் கொண்டு, இந்திரனை வழிபட்டு துர்வாசர் சொன்ன மந்திரத்தைப் பயபக்தியுடன் கூறினாள். உடனே இந்திரன் அவள் முன் தோன்றி, அவளை மருவி னான். ‘உனக்கு நல்ல அழகுடையவனும், எவ ராலும் வெல்ல முடியாத விற்பயிற்சி உடையவனுமாகிய, புகழ்மிக்க ஒப்பற்ற மகன் பிறப்பான்” என்ற கூறி அருள் செய்து சென்றான். அவன் கூறியபடியே, பங்குனி உத்தர நன்னாளில் மங்கல நிமித்தங்கள் எங்கணும் தோன்றப், பகற் பொழுதில் பற் குணன் என்ற அழைக்கப்படும், அர்ச்சுனன் பிறந்தான்.
அவன் பிறந்தபோது, விண்ணில் ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. “குந்தியே உனக்குப் பிறந்த இம்மகன் பெரு வீரன். சிவபெருமானுக்கு ஒப்பானவன். வில்லாற் றலில், இவனை வெல்பவர் யாரும் இல்லை. பாசுபதம், என்னும் அஸ்திரத் தைச் சிவபெருமானிடம் பெறப்போகின்ற வன். குருகுல வம்சத்துக்கே பெரும் புகழ் தரக் கூடியவன்” என்று கூறியது. அதைக் கேட்டுக் குந்தி பெரிதும் மகிழ்வடைந்தாள். விண்ணவர்களும், மண்ணவர்களும், பெரிதும் ஆனந்தம் அடைந்தனர். அற நெறிக்கு ஒரு மகன், வலிமைக்கு ஒரு மகன், வில்லாற்றலுக்கு ஒரு மகன் என ஒப்பற்ற மூன்று புதல்வர்களைப் பெற்ற தைக் கண்டு, பாண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான். நகுலன், சகாதேவன் தன் தமையன் திருதராட்டிரனுக்கு, நூற்றுக்கு மேற்பட்ட புதல்வர்கள் பிறந்த தைக் கண்டு, பாண்டுவிற்கு மேலும் பிள்ளைகளைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டு, குந்தியிடம் மேலும் ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரும்படி கேட்டான். அதனை ஏற்க மறுத்துவிட்டு, தன் சகோதரி மாத்ரியை அழைத்து, அவளுக்குத் துர்வாசர் அருளிய மந்திரத்தை உபதேசித்து, “நல்ல பிள்ளைகளைப் பெறுவாயாக என்று வாழ்த்தி, எப்படி அதைச் செய்ய வேண்டும் என்பதையும் கூறினாள். மாத்ரி மகிழ்ச்சியோடு அம் மந்திரத்தைக் கற்றுக் கொண்டு, அசுவினி தேவர்களை எண்ணி அம்மந்திரத்தை உச்சரித்தாள். அசுவினி தேவர்கள், தேவ மருத்துவர்கள். இவர்கள் இருவராயிருப்பர். அத்தகைய இருவரும், மாத்ரி தேவி முன் தோன்றினர்.பின்னர் தனித்தனியே மாத்ரி தேவியைக் கூடினர். இரண்டு அழகான பிள்ளைகளை உருவாக்கித், தங்கள் உலகம் சென்றனர். அப்பொழுது அசரீரி எழுந்தது. “இவர்கள் அசுவினி தேவர்களிலும் மேம் பட்டவர்கள்; தருமம், குலம், ஒழுக்கம், கல்வி, வலிமை, அழகு ஆகிய அனைத் திலும் மேம்பட்டவர்களாக, விளங்கு வார்கள்” என்று கூறியது. அவ்விருவரும் நகுலன், என்றும் சகாதேவன்,என்றும் அழைக்கப்பட்டனர். ஆக இந்த ஐந்து பேரும், பாண்டவர்கள் எனப்பட்டனர். திருதராட்டிரனுக்குப் பிறந்த நூற்று இரண்டு பேரையும், கெளரவர்கள் என அழைத்தனர்.
ஐந்து சிறந்த புதல்வர்களைப் பெற்ற தைக் கண்டு பாண்டுவும், அன்னையராகிய குந்தி தேவியும், மாத்ரிதேவியும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அந்த ஐவரும், மன்மதனுக்கு ஒப்பாகிய வனப் பினையும், முருகவேளுக்கு ஒப்பாகிய வல்லமையையும் பெற்று, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார்கள். வசுதேவர் அனுப்பியபுரோகிதராகிய, காசிப கோத்திரத்தைச் சேர்ந்த பிராமண சிரேஷ்டர் ஒருவர், பாண்டு மைந்தர்கள் ஐவருக்கும், உப நயனம் செய்து வைத்தார். கடல் சூழ்ந்த உலகினை வில்லினால் வெற்றி கொண்ட வரும், சத்சிருங்கமென்னும் மலையில் தவம் செய்து கொண்டிருந்தவருமான, சுக்ர ராஜன் என்பவரின் நற்பயிற்சியினால் பாண்டவர்கள் வில் வித்தையில் சிறந்து விளங்கினார்கள். அப்பொழுது இந்தத் சத் சிருங்க பர்வதத்தில்தான், பாண்டு தன் மனைவியருடன் தவம் செய்து கொண்டி ருந்தான், என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். சுக்ரராஜன் என்பவ ரின் பயிற்சியினால், பீமன் கதைப் போரி லும், தருமன் ஈட்டி எறியும் போரிலும், நகுல சகாதேவர்கள் கேடகங்களைத் தாங்கி கத்தி எடுத்துச் செய்யும் போரிலும், அர்ச்சுனன் இரண்டு கைகளாலும் பத்துத் திக்கிலும், அம்புகள் விட்டுச் செய்யக் கூடிய போரிலும் சிறந்து விளங்கினார்கள்.
பாண்டுவின் மரணம்
இவ்வாறு நாட்கள் சில சென்றன. சோலைகளில் எல்லாம் செந்நிறத் தளிர்கள் தோன்ற, குயில்கள் இனிய குரல் எழுப்பிக் கூவ, மலர்களெல்லாம் நறுமணம் பரப்ப, வண்டுகள் எல்லாம் ரீங்காரம் செய்ய, முழு நிலவு, பிரிந்த காதலர்கள் துன்பத்தை மிகுவிக்க, மன்மதன் செங்கோலோச்ச, இளவேனிற்காலம் வர, மாத்ரியின் பேரழகு உள்ளத்தை வருத்த, பாண்டுவின் தவநிலை தளர்ந்தது. பெற்ற சாபம் மறந்தது. அதனால் மாத்ரியோடு கூடி இன்பம் பெற வேண்டுமென்று விரும்பி அவளைக் கூடினான். கூடி முடிந்தபின் கிந்தம முனிவன் சாபப்படி பாண்டுவின் உயிர் ஒடுங்கிப், பின்னர் சொர்க்கம் சென்றது. தன் கணவன் உயிர் போனதை உணர்ந்து, மாத்ரி தேவி வாய் விட்டு அரற்றலானாள். அவளுடைய அழுகுரலை கேட்டு, குந்தி தன்னுடைய மைந்தர்களு டன் வந்து பார்த்தாள்; கணவன் இறந்து கிடப்பதைக் கண்டாள். என்ன நடந்தது என்பதையும் அறிந்தாள்; அரற்றினாள்; புலம்பினாள்; வாய்விட்டு அலறினாள்; முனிவரின் சாபம் பலித்து விட்டதே, என்று கூறி ஏங்கினாள். சத்ச்ருங்க பருவத் தில் வாழும் முனிவர்கள், உடனே வந்து பாண்டு இறந்து கிடந்ததைக் கண்டு வருந் தினர்; பாண்டு மனைவியரையும், புதல்வர் களையும், ஆறுதல் கூறித் தெளிவித்தனர். தன்னால் தானே இந்த நிலை ஏற்பட்டது. என்று மாத்ரிதேவி வருந்தினாள். “தன் குழந்தைகளையும் உன் குழந்தைகள் போலப் பாதுகாக்க வேண்டும் என்று குந்தி தேவியிடம் கூறி, மாத்ரி தேவி பாண்டுவுடன் ஈம எரியுள் புகுந்தாள். சாத்திர முறைப்படி தருமரை முன்னிருத்தி, ஈமக் கடன்களையும், சரமக் கிரியை களையும், செய்து முடித்தனர். எல்லாக் கடன்களும் முடிந்தபின், முனிவர்கள் ஐந்து மைந்தர்களையும், குந்தியையும் அஸ்தினா புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
குந்தி, அஸ்தினாபுரத்திற்குத் தன் கணவனையும், சகோதரியையும் இழந்து பெருந்துக்கத்தோடு ஐந்து மைந்தர்களுடன் போய்ச் சேர்ந்தாள். பாண்டவர்கள் ஐவரும் பிதாமகர் பீஷ்மரையும், பெரிய தந்தை திருதராட்டிரரையும், பெரிய தாயார் காந்தாரியையும், சிற்றப்பா விதுரரையும் கண்டு வணங்கினார்கள். அவர்கள் அனை வரும், தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலை கண்டு இரங்கினர். ஆறுதல் கூறினர். திருதராட்டிரர், தன் தம்பி புத்திரர்களைத் தழுவிக் கொண்டு, தன்னுடைய பிள்ளை கள் நூற்றிருவரோடு சேர்த்து ஆதரித்து வளர்த்து வரலானார்.
தன் அத்தை, கணவனைப் பறிகொடுத்து, அஸ்தினாபுரம் வந்ததை அறிந்த கண்ணன், தன் அத்தைக்கும், அத்தையின் புதல்வர்களுக்கும் ஆறுதல் கூற, தன் தந்தையாகிய வசுதேவரோடும், தாயாகிய தேவகி யோடும், தமையன் பலராமனோடும் குந்தி போசனோடும், யது குல மன்னன் சூர னோடும் (வசுதேவன் தந்தை) அஸ்தினா புரம் வந்தார். வந்த அனைவரும், பாண்ட வரையும், குந்தியையும் தேற்றி ஆறுதல் கூறினர். பின்னர் பிதாமகர் பீஷ்மர், திருத ராட்டிரர், விதுரர் ஆகியோரைக் கண்டு, அன்போடு தழுவிக் கொள்ள, அவர்களும் வந்தவர்களுக்கு நல் உபசாரம் செய்தனர். பின்னர் பரந்தாமன் கண்ணபிரான், திருத ராட்டிரரிடம், “தந்தையை இழந்த மைத் துனர் பாண்டவர்களையும், கணவனை இழந்த அத்தை குந்தி தேவியையும் இனிக் காப்பது உங்கள் பொறுப்பு” என்று கூறித் தன் சுற்றத்தோடு துவாரகை மீண்டார்.
”பாண்டு இறந்தபோது தருமபுத்திரனுக்கு வயது பதினாறு; பீமனுக்கு பதினைந்து; அர்ச்சுனனுக்கு பதிநான்கு, நகுல சகாதேவருக்கு வயது பதின் மூன்று; தருமனுக்கு ஓர் ஆண்டு இளையவன் துரி யோதனன். துரியோதனனை விட பீமன் ஒரு நாள் இளையவன். பீமனுக்கு அர்ச் சுனன் 9 மாதம் 18 நாள் இளையவன்; அதேபோல பீமனுக்குப் பலராமன் 18 நாள் இளையவன்; பலராமனைவிட, கண்ணன் மூன்று மாதம் இளையவன்; அதனால் துரியோதனனுக்குக் கண்ணன் 3 மாதம் 19 நாள் இளையவன் ஆகின்றான். துரியோத னன் தம்பியர் அனைவரும் அடுத்தடுத்த நாட்களில் பிறந்தவர்கள். எனவே துரியோ தனனுக்கு இறுதித் தம்பியாகிய துஷ்ய ராஜன் 99 நாட்கள் சிறியவன். எனவே துரியோதனனும் அவன் தம்பியரும் கண்ணபிரானுக்கு மூத்தவராகிறார்கள்.
மகாபாரதம் – 8 சம்பவச் சருக்கம், பரிமளகந்தியின் கட்டளை என்ன..!? Asha Aanmigam