காலச்சக்கரம் சதா சுழன்று கொண்டிருக்கிறது. அதில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கின்றன. இப்பொழுது நாம் கலியுகத் தில் வாழ்ந்து வருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைக் காலத்தில் திரேதா யுகத்தில் இராமாயணம் நிகழ்வதாயிற்று. புண்ணிய நதியாகிய கங்கா நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் என்பது ஒன்று இருந் தது. அது அக்காலத்தில் மிகப் பெரியதாக விளங்கியது. அந்த ராஜ்யத்துக்குள் சரயு நதி பாய்ந்து கொண்டிருந் தது சரயு நதி கங்கா நதிக்கு உபநதியாகும். கோசல ராஜ் யத்தை ஆண்டு வந்த அரசர்கள் எல்லாரும் சூரிய குலத் தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் பலர் மேன்மை தங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். அன்னவர்களுள் மனுச் சக்கரவர்த்தி, இஷ்வாகு, ரகு ஆகியவர்கள் குறிப் பிடத்தக்க தகைமை வாய்த்திருந்தனர். கோசல ராஜ்யத் துக்கு அயோத்யா பட்டணம் தலைமை நகராகத் திகழ்ந் திருந்தது. அப்பட்டணத்தின் அமைப்போ பாராட்டுதற் குரிய அரிய பாங்குகள் பல படைத்திருந்தது. அயோத்யா என்னும் சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்னும் பொருள் வருகிறது. அக்காலத்தில் அது எவ்விதத்திலும் தோல்வியடைந்தது கிடையாது.
சூரிய குலத்து அரசர்களுள் தசரதச் சக்கரவர்த்தி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் கீர்த்தி மிக வாய்க்கப் பெற்றவர். அவர் நெடுங்காலம் செங்கோல் தாங்கி முறையாக நாட்டை ஆண்டு வந்தார். தசம் என்பது பத்து எனப் பொருள்படுகிறது. ரதம் என்பது தேர். தசரதன் என்னும் சொல் பத்துத் தேர்களை ஏக காலத்தில் நடாத்த வல்லவன் என்று பொருள்படுகிறது. மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்பு களெல்லாம் தசரதச் சக்கரவர்த்தியிடம் இனிது அமைந் திருந்தன. தடுக்க முடியாத பாங்கில் போர் வந்து வாய்த்தபோது அதைத் தசரத மன்னன் திறமையுடன் சமாளித்தார். நிலவுலகில் போர் ஏதுமில்லாது அமைதி யுற்றிருந்தகாலை அவர் அக்காலத்தைக் குடிமக்க ளுடைய நலனுக்காக நன்கு பயன்படுத்தி வந்தார். அசுரர்களை எதிர்த்துத் தேவர்களுடைய நலனுக்காக அந்தத் தேவர்களோடு சேர்ந்து வெற்றிகரமாகப் போர் புரிந்த சிறப்பு இந்த அயோத்தி மன்னவருக்கு உரிய தாயிற்று. தம்முடைய குடிமக்களை ஒரு தந்தையின் பாங்கில் இவர் பராமரித்து வந்தார். தம்முடைய குடும்பக் காரியமானாலும் சரி, குடிமக்களுடைய நலம் ஆனாலும் சரி அவைகளைப் பற்றிய திட்டங்களை எல்லாம் இவ்வரசர் நன்கு ஆலோசித்துச் செய்வார். எப்பொழுதும் முனிவர்களையும் சான்றோர்களையும் அணுகி அன்னவர்களுடைய அபிப்பிராயங்களை அனு சரித்தே மேலாம் காரியங்களையெல்லாம் இவர் நன்கு நிர்வகித்து வந்தார். இவருக்குப் பக்க உதவியாயிருந்த மந்திரிமார்களெல்லாம் ஆட்சித் திறமை மிக வாய்க்கப் பெற்றவர்கள். சுயநலத்துக்கு அவர்கள் முற்றிலும் புறம்பானவர்கள். இனி, குடிமக்களோ முறையாகக் கல்வி பயின்றவர்கள் ஒழுக்கத்தில் நன்கு நிலைநின்றவர்கள். அவர்கள் எல்லாரும் உழைப்பாளிகளாக இலங் கினர். நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் அவர்கள் ஊக்கம் மிகப் படைத்திருந்தனர். வேந்தனுக்கும் வைய கத்துக்கும் இடையில் ஒற்றுமை மிக வாய்த்திருந்தது. எல்லார் உள்ளத்திலும் திருப்தி நிறைந்திருந்தது. நாடெங் கும் ஆனந்தம் குடிகொண்டது. இவை யாவுக்கும் மேலாக இயற்கைத் தாயின் தயவு வேண்டியவாறு அமைந்திருந்தது. நிலமகளோ செழிப்பு மிக வாய்க்கப் பெற்றவள். விளைவை வேண்டியவாறு அவள் வழங்கி வந்தாள். பருவத்துக்கேற்ற பிரகாரம் அளந்தெடுத்து மழை பொழிந்து வந்தது. தசரதச் சக்கரவர்த்தியின் ஆட்சியிலே மானுடர் முயற்சியும் தெய்வ சம்பத்தும் இனிது ஒன்றுகூடியிருந்தன. பூலோக வைகுண்டமாகக் கோசல நாடு காட்சி கொடுத்தது.
தசரத மன்னனுடைய வாழ்விலே சம்பத்துக்கள் யாவும் வாய்க்கப் பெற்றிருந்தது வாஸ்தவம். ஆயினும் அவருடைய விருத்தாப்பிய தசையில் வியாகுலம் ஒன்று அவருடைய உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆண்டுகள் பல கடந்து போய்விட்டன எனினும் அவ ருக்கு மகப்பேறு ஏதும் அதுவரை வாய்க்கவில்லை. அதைப் பற்றிய துயரம் அவர் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. இந்த ஒரு குறையை முன்னிட்டு ஏனைய வாய்ப்புக்கள் யாவும் பயனற்றவைகளாய்ப் போய்விட்டன. மகப்பேறு ஒன்றை நாடி அவருடைய உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது. இக்குறையை அகற்றுதற்கு ஏற்றதொரு வைதிகச் சடங்கைச் செய்வது பொருந்தும் என அவருக்குப் புலப்பட்டது. அதைக் குறித்துச் சான்றோர்களுடைய அபிப்பிராயம் யாதோ என்று ஆவலுடன் வினவினார். அதில் ஈடுபடுவது முறை என்னும் ஆமோதிப்பு அவர்களிடமிருந்து வந்தது. ‘புத்திர காமேஷ்டி யக்ஞம்’ ஒன்று நன்கு நிறைவேறு மானால் புத்திர பாக்கியம் வாய்ப்பதும் உறுதி. அந்த யாகத்தை முறையாக நிறைவேற்ற வல்லவராக ரிஷ்ய சிருங்கர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அச்சான் றோரைச் செங்கோல் தாங்கிய மன்னர் பக்தி பூர்வமாக அணுகினார். முனிவரும் மன்னனுடைய வேண்டுதலுக்கு மகிழ்வுடன் சம்மதம் கொடுத்தார். அரசனுடைய அதிருஷ்டத்துக்கு அச்சம்மதமே நல்ல அறிகுறியா யிற்று புத்திர காமேஷ்டி யக்ஞமோ நிறைவேற்றுதற்கு மிகக் கடினமானது. கிரியா விசேஷங்கள் பலப்பலவாக அதில் அமைந்திருந்தன. அயோத்யாபுரி அரசாங்கத்தில் இடம்,பொருள், ஏவல் ஆகியவைகள் வேண்டியவாறு அமைந்திருந்தன. அவை யாவும் இந்த யாகத்துக்காக வென்றே நன்கு பயன்பட்டன.
புத்திர காமேஷ்டி யக்ஞம் சிக்கல்கள் பல படைத்தது. இம்மியளவு பிசகினாலும் அது பயனற்றுப் போகும். அதற்குரிய நியதிகளை முறையாக நிறை வேற்ற எல்லார்க்கும் இயலாது. இக்காலத்திய பௌதிக விஞ்ஞானிகள் ஆபத்து நிறைந்த ஜடசக்தியை எங்ஙனம் திறமையோடு கையாளுகிறார்களோ அதேவிதத்தில் பழங்காலத்து ரிஷிகள் சித்சக்தியைத் தவத்தின் வாயி லாக நன்கு பயன்படுத்தினர். ஜடசக்திக்கு நிகராகச் சித்சக்தியையும் ஆக்கத் துறையில் பயன்படுத்தலாம், அல்லது அழிவுத் துறையிலும் பயன்படுத்தலாம். ரிஷ்ய சிருங்க முனிவர் அதை ஆக்கத் துறையில் பயன்படுத்து வதில் நிபுணராயிருந்தார். அவருடைய ஆணைக்கு உட்பட்டு தசரதச் சக்கரவர்த்தியும் அவருடைய மனைவி மார் மூவரும் மிகக் கடினமான விரதங்களுக்கு உட் பட்டனர். தவத்தின் மேலாம் நிலை என்றே அதை இயம்பவேண்டும். நியதிகள் யாவற்றையும் ஒழுங்காகவும் முறையாகவும் தமிழர் ராஜ குடும்பம் நிறைவேற்றியது.
இதே வேளையில் பரலோகத்தில் சம்பவம் ஒன்று நேர்வதாயிற்று தேவர்களெல்லாரும் சிருஷ்டிக் கர்த்தாவாகிய பிரம்மதேவனை அணுகித் தங்களுக்கு அமைந்திருந்த கஷ்டத்தைத் தெரிவித்தனர். லங்கா புரியை ஆண்டு வந்த தமிழர் இராவணன் வரம்பு கடந்த ஆக்கிர மிப்புகளில் ஈடுபட்டிருந்தான் மனிதனைத் தவிர வேறு எந்த மூர்த்தியினாலும் அவனைக் கொல்ல முடியாது என்னும் வரத்தை அவன் பிரம்ம தேவனிடமிருந்து பெற்றிருந்தான். அந்த வரத்தைக் குறித்து அவன் படைத் திருந்த செருக்கு வரம்பில் அடங்காது. மனிதனை அவன் ஒரு துச்ச ஜந்துவாகக் கருதினான். ஆதலால் மனிதனிடத்திருந்து தனக்கு அழிவு வரலாகாது என் னும் வரத்தை அவன் கேட்கவில்லை. தேவர்கள் யாரா லுமே அழித்துவிட முடியாத அரக்க வேந்தனுக்கோ ஆணவம் தலைக்கு மேல் ஏறியிருந்தது. தேவகணங் களை அவன் சித்திரவதை பண்ணி வந்தான். இக் கொடுமையை வானவர்கள் படைப்புத் தெய்வத்திடம் சமர்ப்பித்தனர். அந்த வரத்தைக் கொடுத்திருந்த நான் முகக் கடவுளுக்கே அது சமாளிக்க முடியாத நெருக்கடி யாயிற்று. ஆதலால் விண்ணவர்களை அழைத்துக் கொண்டு அந்த அயனார் வைகுண்டத்துக்குச் சென் றார். பிரபஞ்சம் முழுவதுக்குமே ஏற்பட்டிருந்த தொல் லையை வைகுண்டவாசியாகிய மஹாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். புன்முறுவல் பூத்தவராக ஹரி சிறிது நேரம் அமைதியுற்றிருந்தார். பூலோகத்தில் தசரதச் சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டி யக்ஞத்தை முறையாக நிறைவேற்றி வருவதால் நாராயணன் தாமே அந்தச் சக்கரவர்த்தியினுடைய நான்கு புதல்வர்களாக அவதரித்து வருவதாகவும் பூலோகத்தில் தமிழர் இராவணனால் நிகழ்ந்து வந்த இன்னல்களை ஒழுங்குப் படு்த்துவதாகவும் பகவான் உறுதி கூறினார்.
பூலோகத்தில் தசரதச் சக்கரவர்த்தியின் புத்திர காமேஷ்டி யக்ஞம் உச்சநிலை எய்தியது. வேள்விக் கனலினின்று காட்சிக்கரிய பிரகாச மூர்த்தி ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் பாயசம் நிறைந் திருந்த கனகக் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதச் சக்கரவர்த்திக்குக் கருணையோடு எடுத்துக் கொடுத்தார். கலசத்திலிருந்த அமிர்தத்தை மஹாராணி மார் மூவருக்கும் எடுத்து வழங்கும்படி அந்தத் தேவதை யிடமிருந்து ஆணை பிறந்தது அமிர்தத்தை அருந்து வதன் விளைவாக அவர்களுக்குக் கருத்தரிக்கும் என்கின்ற நற்செய்தியும் தெரிவிக்கப்பட்டது. பிறகு அத் தெய்வம் தீயின் உள்ளேயே அந்தர்தானம் ஆனார். சக்கரவர்த்தியானவர் பாயசத்தின் செம்பாதியை மூத்த மஹாராணியாகிய கௌசல்யாதேவிக்கு எடுத்து வழங்கி னார். கால் பங்கை சுமித்ரா தேவிக்குக் கொடுத்தார். மற்றும் உள்ள கால் பங்கை கைகேயி தேவிக்குக் கொடுத்தார். பொற்கலசத்தில் ஒட்டியிருந்த பகுதியை வழித்தெடுத்து சுமித்ரா தேவிக்கு இரண்டாம் தடவை யாக வழங்கினார். இச்செயலின் விளைவாக தேவி மார் மூவரும் கருத்தரிக்கலாயினர். அவர்கள் கர்ப்பவதிகளாக இருந்தபொழுது பரமனைக் குறித்து வந்தனையும் வழிபாடும் ஓயாது நிகழ்ந்து கொண்டிருந்தன.
காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. கிரகங்கள் தத்தம் மார்க்கங்களில் உருண்டோடிக் கொண் டிருந்தன. அவைகளுள் ஐந்து கிரகங்கள் அவ்வவைகளுக் குரிய வீடுகளை ஏகோபித்து எய்தலாயின. இது நிகழ்வதற்கரிய ஒரு சம்பவம். இவ்வேளையில் பிறப் பெடுக்கின்றவன் தெய்விகம் முழுதுமே வாய்க்கப் பெற்றவனாக இருப்பான். சித்திரை மாதத்தில் சுக்ல பட்சத்தின் ஒன்பதாம் நாளன்று இந்த நல்ல வேளை வந்து அமைவதாயிற்று. அப்பொழுது கௌசல்யா தேவி இராமனைப் பெற்றெடுத்தாள். சில நாட்களுக்குப் பிறகு கைகேயி தேவி பரதனை ஈன்றெடுத்தாள். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு சுமித்ராதேவி இலட்சு மணனையும் சத்ருக்கனனையும் இரட்டையர்களாகத் தோற்றுவித்தாள். இங்ஙனம் பிறப்பெடுத்திருந்த சகோதரர்கள் நால்வரிடத்தும் தர்மமும் சத்தியமும் சிரத்தையும் வீரியமும் ஏகோபித்துத் திகழ்வனவாயின. தொடரும்…
இராமாயணம் – 2 பால காண்டம் – தமிழர் இராவணன் வரம்பு