ஸ்ரீயப்பதியான மூர்த்தியானவர், ஸ்ரீமந் நாராயண கருடாழ்வானை நோக்கிக் கூறலானார்.
“ஓ காசிப புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி நான் சொல்லப் போவதையும் கேட்பாயாக. பூர்வஜன்மத்தில் செய்த பாபத்தினாலேயே உலகில் பிறவியெடுத்த ஜீவன் மரிக்கிறான். கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால், ஒரு கிரியையும் செய்ய வேண்டுவதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இறந்தால், சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து, ஊர்க் குழந்தைகளுக்கு, பால், பாயாசம், போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும். குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லி உள்ளது போலச் சில கர்மங்களைச் செய்யலாம். விருஷோற்சனமும், விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்ததிற்காகச் செய்ய வேண்டியதில்லை. மரித்தவன் பாலகனாயினும் இளைஞனாயினும் விருத்தனாயினும் உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங்குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும். இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும். பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும் மூன்று வயது வரையில் பாலகன் என்றும் ஆறு வயது வரையில் குமரன் என்றும் ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்று சொல்ல வேண்டியதென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வைனதேயனே! பிறந்த பதினாறு மாதம் வரையில் சிசுவென்றும் இருபத்தேழு மாதங்கள் வரையில் பாலகன் என்றும் ஐந்து வயது வரையில் குமரன் என்றும் ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்றும் பதினாறு வயது வரையில் கைசோரன் என்றும் சொல்வதுண்டு. கடைக் குலத்தில் பிறந்த எந்த ஜாதியாரும் பூணூலை அணியலாகாது. பிரம, க்ஷத்திரிய, வைசியரே பூணூல் அணிதல் வேண்டும். ஐந்து வயது நிறைந்தும் பூணூல் பூண்டேனும், பூணாமலேனும் ஒருவன் இறப்பானாகில் அவனைக் குறித்து அதிக மந்திரங்களைச் சொல்லாமல், பத்து நாட்களுக்குப் பிண்டம் போட வேண்டும். அவ்வாறு இறப்பவனுக்கு உடலோடுங்கூடிய வாழ்வும், பெற்றோரோடு சிநேகமும், விஷயங்களில் உடன்பாடும், மற்றவையும் சிறிது காலமேயாகையால், கிரியைகளும் குறைவாயிற்று. ஐந்து வயதுக்கு மேல், பன்னிரண்டு வயதிற்குள்ளேனும் அல்லது பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்து விட்டால் விருஷோற்சனம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். ஆனால் சபிண்டீகரணம் செய்யலாகாது. பால், தயிர். வெல்லம் முதலியவற்றைச் சேர்த்துப் பிண்டம் போடல் வேண்டும். குடம், குடை, தீபம் முதலியவற்றைத் தானம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் இறந்தவன். மறுபிறவியில் உலகத்தில் மரமாகத் தோன்றுவான். அந்த மரம் நெல் குத்தும் உலக்கை செய்யப் பயன்பட்டு விடும். பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோத்திஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால். மரித்தவன் மறுஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால் அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத் தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்லுகிறது.
‘சூரியன் ஒருவனே உளன் : சந்திரனும் ஒருவனேதான். தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து, அவற்றின் உள்ளே பார்த்தால், ஒவ்வொரு குடத்திலும் பகற்பொழுதில் சூரியனும். பௌர்ணமி இரவுகளில் சந்திரனும் தோன்றுவது போல. ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாகப் பிறக்கிறான். ஆகையாலேதான் பெரும்பாலான பிள்ளைகள், தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகிறார்கள். ஆயினும் குருடனுக்குக் குருட்டுப் பிள்ளையும். ஊமைக்கு ஊமைப்பிள்ளையும். செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று. தனயனுக்கும் பொருந்தியிருக்கும்” என்றார் திருமால்.
கருட பகவான். பரமபதியை வணங்கித் தொழுது துதித்து, “ஜெகந்நாதா! உலகில் தன் புத்திரன் என்றும் தன் மனைவி வயிற்றில் பிறந்த புத்திரன் என்றும், புத்திரர்கள் பத்து வகையினராக இருக்கிறார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவன். விலைமகளைப் புணர்ந்து, புத்திரனைப் பெற்றான் என்றால் அந்தப் புத்திரன் அவனுக்குக் கருமம் செய்யலாமா? அவ்வாறு அந்த விலைமகளுக்குப் பிறந்த பிள்ளை அவனுக்குக் கருமஞ் செய்தால். அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? ஒருவனுக்குப் பிள்ளையே பிறக்காமல் பெண் மட்டுமே பிறந்திருக்கிறாள். அந்தப் பெண்வயிற்றுப் புத்திரனும் இலன். அவன் மரித்தால் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும்? இவற்றை விளக்கியருள வேண்டும்” என்று கேட்டான்; பக்தவத்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்:
“புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால், ‘புதி’ என்ற நரகத்தை அந்த ஜன்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்குமே புத்திரன் பிறந்தால் அவன் குலத்துப் பிதிர்த்தேவர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்குப் பத்துப் புத்திரர்கள் பிறந்தார்கள் என்றால் அவர்களில் முதல் மகனே அதாவது தலைச்சனே தன் தந்தை மரித்தால், அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்யக் கடமைப்பட்டவன். உரிமையும் உடையவன், மற்ற ஒன்பது புத்திரரும் அவனது இகலோக வாழ்வுக்குச் சாதகமாவார்களே அன்றிப் பரலோக சாதகத்துக்கு முற்றிலும் உரியவராக மாட்டார்கள்.
தனக்குத் தன் மனைவியின் வயிற்றில் பிறந்த புத்திரன்தான் மரித்த காலத்தில் செய்யத்தக்க செய்கடன் எல்லாம் செய்யத்தக்கவன். செய்யக் கடமைப்பட்டவனும் ஆவான். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள், இறந்த தகப்பனைக் குறித்து சிறிது காமங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக்கடவர். ஒருவன், தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த மரிப்பானாகில் இறுதிக் காலத்தில் நல்லுலகை பிறகே அவன் யடைவான். கொள்பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகையடைவான். பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன், அந்தப் பெண்ணுக்கு விலை கொடாமல், திருத்துழாயோடு அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க. அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல், அந்தப் புத்திரன் தன் குலத்து இருபத்தொரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.
அவ்வாறு பிறந்த புத்திரனே தாய் தந்தையருக்குக் கர்மஞ் செய்யத் தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடைய காதற் கிழத்தியின் மகன் சிறிது கருமம் மட்டுமே செய்யலாம். அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின் செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன், தன்னைப் பெற்றவனைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது. காமக் கிழத்தியின் புத்திரராயினும் அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம். ஆனால் அந்தணர்க்குப் போஜனம் முதலியன செய்விக்கலாகாது. போஜனத்தின் பொருட்டு அரிசி முதலியவற்றைக் கொடுக்கலாம். அதைக் கொடுக்காமல், சொந்த மனைவிக்குப் பிறந்த மகனைப் போலவே தன்னை நினைத்துக் கர்மங்களைச் செய்யலாகாது.
“சற்புத்திரன் தீர்த்த யாத்திரை செய்யலாம். தனது பிதுரரைக் குறித்து, அன்ன ரூபமாயும் ஆமை ரூபமாயும் ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தத்தைச் செய்யலாம். வேசி புத்திரன் தீர்த்த யாத்திரை செய்யின், அன்ன ரூபம் தவிர மற்ற இரண்டு ரூபங்களில் எந்த ரூப சிரார்த்தத்தையும் செய்யலாம். சூத்திர மரபில் எந்த ஜாதியராயினும் அன்ன ரூபமாய்ச் சிரார்த்தம் செய்தால், செய்தவனும் சாப்பிட்ட பிராமணனும் பிதுர்த்தேவரும் நரகமடைவது போல, வேசி புத்திரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின். அவனும் சாப்பிட்ட பிராமணனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள்.
“பறவையரசே! ஒரு பார்ப்பனிக்கும் பிராமண சாதிக்குத் தாழ்ந்த ஜாதியான் ஒருவனுக்கும் பிறந்த புத்திரனும், பிராமணன் மகளுக்கும் சந்நியாசிக்கும் பிறந்த புத்திரனும், பிரம்மகுல மங்கைக்கும் சூத்திரனுக்கும் பிறந்த புத்திரனும், சகோத்திரத்தில் மணஞ் செய்து கொண்டவருக்குப் பிறந்த புத்திரனும் சண்டாளராவர். ஒருவன் தன்னுடைய ஜாதியிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவள் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால் மக்கள் அனைவரும் சற்புத்திரனையே பெறுதல் வேண்டும்!” என்றார் திருமால்.
கருட புராணம் – 14 புத்திரர்கள், பௌத்திரர்கள் கர்மம்