புகழ் மிக்க சந்திர வம்சத்தைச் சேர்ந்த யயாதியின் மரபில் வந்தவன் மதிநாரன் என்னும் அரசன் ஆவான். இவனை அந்திய நாரன் என்றும் அழைப்பர். இவன் சரஸ் வதி நதி தேவியைக் கூடி திரஸ்து என்னும் புதல்வனைப் பெற்றான். அந்தத் திரஸ்து என்பவன் ‘காளிந்தி’ என்பவளை மனைவி யாக ஏற்று அவள் மூலம் இலிலன் (நீலன்) என்னும் புத்திரனைப் பெற்றான். அந்த இலிலன் என்பவன் ரதந்திரி (இரதந்தை) என்பவளைத் திருமணம் செய்து கொண்டு துஷ்யந்தன், சூரன், பீமன், ப்ரவசு, வஸு என்னும் ஐந்து மைந்தர்களைப் பெற்றான். மூத்தவன் துஷ்யந்தன் ஆதலின் அவன், இலிலனுக்குப் பின்னால் முடி சூட்டிக் கொண்டு அரசன் ஆனான்.
இந்தத் துஷ்யந்தன் வலிமை மிக்கவன். பெரிய மலைகளையே தன்னிரு கைகளால் எடுக்கும் ஆற்றலுடையவன். அதோடு மன்மதனையும் தோற்கடிக்கும் பேரழ குடையவன். இத்தகைய சிறப்புக்களை யுடைய இந்தத் துஷ்யந்தன் அணிதேர், புரவி ஆட்பெரும்படையுடன் வேட்டைக் குச் சென்று பல மிருகங்களை வேட்டை யாடினான். அதனால் களைப்புற்றான். அருகே ஓடிய கங்கா நதியில் நீராடி, களைப்பு தீர்ந்தான். பின்னர் அருகிலுள்ள சோலையில் போய் உடன் வந்தவர்கள் சூழ அமர்ந்து இளைப்பாறினான்.
பேரழகு பொருந்திய நங்கை
களைப்பாறிய அம்மன்னன், அச்சோலை யினுள் ஓர் ஆசிரமம் இருக்கக் கண்டான். அங்குள்ள ஏவலர்களால், அது தவத்தில் உயர்ந்து விளங்கும் கண்ணுவ முனிவரின் ஆசிரமம் என்று அறிந்தான். அதனால் அக் கண்ணுவ முனிவரை வணங்கி, அவரு டைய ஆசி பெற வேண்டும் என்று விரும்பிய துஷ்யந்தன், தன்னுடன் வந்தவர் களை விட்டு நீங்கி, கண்ணுவ முனிவர் ஆசிரமத்துள் புகுந்தான். அப்போது கண்ணுவ முனிவர் அங்கு இல்லை. காய் கனிகளைப் பறித்து வருவதற்காக வெளியே சென்றிருந்தார். அங்கு, தேவ மகளோ! பாற்கடலில் தோன்றிய பவள வல்லியோ! வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலை மகளோ, மலைமகளோ என்று ஐயுறுமாறு பேரழகு பொருந்திய நங்கை ஒருத்தி இருக்கக் கண்டான்.
பற்றற்ற முனிவர் ஆசிரமத்தில் அழகு பொருந்திய நங்கை இருக்கக் கண்டு வியந்து, இவள் யாராயிருப்பாள் என்று எண்ணிய அரசன் முன் சகுந்தலையாகிய அப்பெண் வந்து “நீங்கள் யார்?” என்று கேட்டாள். “நான் இந்நாட்டை ஆளும் அரசன் துஷ்யந்தன்” என்றான். உடனே ஆசனம் தந்து இன்சொல் கூறி வரவேற்றாள். பின்னர் நாணத்தினால் முகம் சிவந்து ஒரு தூணின் அருகே சென்று மறைவாக நின்றாள்.
ஆசனத்தில் அமர்ந்த மன்னன் அந்த அழகு நங்கை சகுந்தலையை நோக்கி, “அண்டமெல்லாம் புகழும் முனிசிரேட்ட ராகிய கண்ணுவ முனிவர் எங்கே?” என்று கேட்டான். அதற்கு அந்நங்கை, “காட்டின் கண்காய் கனிகள் பறித்துவரச் சென்றுள்ளார், இரண்டு நாழிகைக்குள் வந்து விடுவார்” என்றாள்.
அதன்பின் துஷ்யந்தன், “பெண்ணே நீ யார்?” எனக் கேட்டான். அதற்கு அவள், “நான் விசுவாமித்திர முனிவருக்கும் தேவ மங்கை மேனகைக்கும் மகளாகப் பிறந் தவள். கண்ணுவ முனிவரின் வளர்ப்புப் பெண்ணாக வளர்ந்து வருகின்றேன்” என்றாள். அதனைக் கேட்ட மன்னன் வியப்புற்று, “முற்றும் துறந்த முனிவ ராகிய, விசுவாமித்திரரின் பெண் என்கிறாயே. அஃது எவ்வாறு?” என்று கேட்டான்.
அதனால் சகுந்தலை தன் பிறப்பினைப் பற்றிக் கூறலானாள் :
விசுவாமித்திரர்
நான்முகனது புதல்வனாகிய குசன் என்பவரின் கொள்ளுப் பேரன் கெளசிகன் ஆவார். அவர் அரசராக இருந்தார். ஒரு முறை தன் பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். வேட்டையாடி முடிந்ததும் அங்கு ஓர் ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருந்த வசிட்டமாமுனி வரை அணுகி அவரை வணங்கி நின்றார். அவரும் மன்னனை வாழ்த்தி வரவேற்றார். பின்னர் தம்மிடம் இருந்த காமதேனு என்ற தெய்விகப் பசு மூலம் அரசருடன் வந்தி ருந்த அனைவருக்கும் வேண்டிய அறுசுவை உணவு அளித்தார். அனைவரும் மகிழ்ந்த னர். வசிட்டமாமுனிவரிடத்திலிருந்து விடைபெறும் பொழுது கெளசிக மன்ன னுக்கு ஓர் எண்ணம் வந்தது. “கேட்டதை எல்லாம் கொடுக்கக்கூடிய இந்தக் காம தேனு ஒரு துறவியிடத்தில் பயனில்லாது இருப்பதைவிட அரசனாகிய என்னிடத்தில் இருந்தால் பலருக்கு வெகுவாகப் பயன் படுமே” என்பதுதான் அந்த எண்ணம்.
உடனே மன்னன் கெளசிகன் வசிட்டமா முனிவரிடம் சென்று வணங்கி, “இப்பசுவை எங்களிடம் கொடுத்தால் பலருக் குப் பயனுள்ளதாயிருக்கும். ஆகையால் எங்களுடன் இப்பசுவை அனுப்புங்கள்” என்று கேட்டார். ” அது விண்ணுலகத்துப் பசு. தேவேந்திரனுக்குரியது. அதனால் அதனை என்னால் கொடுக்க முடியாது” என்று கடுமையாகச் சொல்வதை விரும் பாது, “இப்பசு என்னுடையது அன்று, அப்பசு வருவதாயின் அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறி தன் விருப்பமின்மை யைக் குறிப்பாகக் காட்டினார்.
அதை உணராத மன்னன் பசுவை அழைத்து வரும்படி கட்டளையிட, காவலர்கள் அதனைக் கட்டி இழுத்துச் சென்றனர். தெய்வப்பசு அல்லவா அது! அது எளிதில் கட்டினை முறித்துக் கொண்டு இழுத்துச் சென்றவர்கள் அனைவரையும் தாக்கிவிட்டு, மீண்டும் வசிட்டர்பால் வந்தது.
இதனைக் கண்டு கெளசிகரின் குமா ரர்கள் “இதற்கெல்லாம் காரணம் இந்த வசிட்ட முனிவரே” என்று தவறாக எண்ணி அவரைத் தாக்கலானார்கள். அவர் சினந்து நோக்க அனைவரும் அந்தக் கணமே சாம்பலாயினர். பார்த்தார் கெளசிக மன்னன், தன் குமாரர்கள் அனை வரும் சாம்பலாகிப் போனதைக் கண்டு வெகுண்டு, வசிட்டமா முனிவர் மேல் சரமாரியாக அம்புகளை எய்தார். அவர் மௌனமாகத் தன் எதிரே பிரம்ம தண்டத்தை ஊன்றினார். அவர் விட்ட அம்புகள் எல்லாம் பிரம்ம தண்டத்தை தாண்டி செல்லவில்லை. அனைத்தையும் அது விழுங்கிவிட்டது. சிவபெருமான் கொடுத்த அம்பினை எய்தார். அதுவும் பயனில்லாது போய் விட்டது. எத்தனை தெய்விக அம்புகள் விட்டாலும் வசிட்ட ரின் தவ ஆற்றலுக்கு முன் நிற்காது அவை அனைத்தும் அழிந்து விட்டன. பார்த்தார் கெளசிக மன்னர், “இனி இவருடன் போர் செய்து பயனில்லை. இத்தகைய வலிமை இவருக்கு வந்தது தவத்தின் ஆற்றலால். எனவே இவரைத் தவத்திலே வெல்ல வேண்டி கடுந்தவம் செய்வேன். இவர் வாயால் என்னை ‘பிரம்மரிஷி’ என்று சொல்ல வைப்பேன்” என்று சபதம் செய்து அரச போகத்தையெல்லாம் விட்டு, கீழ்த்திசை அடைந்து கடுந்தவம் புரியலானார்.
அவருடைய தவ ஆற்றல் தேவலோகத் தையே சுட்டெரிக்கச் செய்தது. இந்திரன் நடுங்கினான்.”என்ன செய்வது?” என்று யோசித்தான். பின்னர் அவர் தவத்தைக் கெடுக்க அழகில் சிறந்த தேவமாதுவாகிய மேனகையைக் கெளசிகர் தவம் செய்யு மிடத்திற்கு அனுப்பினான்.
விண்ணுலகவாசியான நான் மண்ணுலகில் வாழ முடியாது
மேனகையும் பூவுலகத்திற்கு வந்து கௌசிகரின் எதிரில் நின்று தன்னுடைய அழகையெல்லாம் காட்டி மயக்கலானாள். கெளசிகரும் அவளின் அழகிலே மயங்கி னார். அதனால் தவத்தைக் கலைத்து விட்டு அவள் மேல் மோகம் கொண்டு அவளோடு கூடினார். அதன் பயனாக ஓர் அழகான பெண் குழந்தை பிறந்தது. “விண்ணுலக வாசியான நான் மண்ணுலகில் வாழ முடியாது. மண்ணுலகில் பிறந்த இக் குழந்தையை விண்ணுலகிற்கு எடுத்துச் செல்ல முடியாது” என்று கூறி மேனகை அக்குழந்தையை விட்டு விட்டு விண்ணுலகம் சென்றாள். கெளசிகரும் குழந்தைக் குக் கேடு வராதபடி ஓர் இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, பாதியில் நின்ற தவத்தை முடிக்கச் சென்று விட்டார். தாய் தந்தையர் இருந்தும் என் ஊழ்வினையால் அநாதையாக விடப்பட்டேன். அநாதையாக அழுது கொண்டிருந்த என்னை, கழுகு போன்ற சகுந்தப் பறவைகள் பாதுகாத்து வந்தன.
அவ்வழியே வந்த கண்ணுவ முனிவர் அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்துத் தன் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார். சகுந்தப் பறவைகள் என்னைக் காத்ததனால், எனக்குச் ‘சகுந்தலை’ எனச் சான்றோர் முன்னிலையில் பெயர் சூட்டி எந்தக் குறையுமில்லாது அன்புடன் வளர்த்து வருகின்றார்.
அதன் பின் கெளசிக ராஜா தனக்கு வந்த பல இடுக்கண்களை வென்று, கடுந்தவம் செய்து விசுவாமித்திரர் ஆனார். அது மட்டுமல்லாது தன் சபதப்படியே வசிட்டர் வாயால் ‘பிரம்மரிஷி’ என்று அழைக்கப் பட்டார்.
எனவே என்னைப் பெற்ற தந்தை விசுவாமித்திரர். வளர்ப்புத் தந்தை கண்ணுவ முனிவர்.
இவ்வாறு தான் அறிந்தவரை, சகுந் தலை, தன் பிறப்பினைப் பற்றித் துஷ்யந்த மன்னனுக்கு எடுத்துக் கூறினாள்.
எண் வகை மணம்
கண்டவர்க்கு மயக்கம் தரும் அவள் அழகும், இனிக்கும் சொல்லும் அம்மன்ன னுக்கு அவள் மேல் மையல் ஏற்பட்டது. அவள் அழகில் மயங்கினான். அதனால் அவளது கையைப் பிடித்தான். அவளோ, அவன் கைக்குள் அகப்படாது தள்ளி நின்று, அவனை நோக்கி, “அரசே! என் தந்தை தாரைவார்த்துத் திருமணம் செய்து கொடுத்த பின்தான் கூடலாம்” என்றாள். அதற்குத் துஷ்யந்தன், பெண்ணே, திரு மணம் என்பது எட்டுவகையில் நடக்கும். அவற்றைச் சொல்லுகிறேன் கேள்.
1) பிரமம் பிரம்மச்சாரியாய்த் திருமணத்திற்குத் தகுதியுடையவனாய். இருப்பானுக்குக் கன்னிகையை அலங்கரித்து தீ முன்னர் தாரைவார்த்துக் கொடுப்பது (அறநிலை ).
2) பிரசாபத்தியம் – தலைவன் பெற்றோர் வேண்ட, தலைவியின் பெற்றோர் மறுக் காது உடன்பட்டு தலைவியை அலங்கரித்து தீ முன்னர் தாரைவார்த்துக் கொடுப்பது (ஒப்பு).
3) ஆரிடம் – ஒன்றாவது, இரண்டாவது ஆனும் ஆனேறும் வாங்கிக் கொண்டு, கன்னிகையை அலங்கரித்துத் தீ முன்னர் தாரைவார்த்துக் கொடுப்பது (பொருள் கோள் ).
4) தெய்வம் : வேள்வி ஆசிரியனுக்குக் கன்னிகையை அலங்கரித்துத் தீ முன்னர் கொடுப்பது.
இவை நான்கும் கைக்கிளைக்கு உரியனவாம்.
5) காந்தருவம் கொடுப்பாரும் பெறு வாரும் இன்றித் தலைவியை தலைவன் எதிர்ப்பட்டுத் தாமே கூடுவது.(யாழோர் கூட்டம், களவொழுக்கம்)
இதனை அன்பின் ஐந்திணையில் சேர்ப்பர்.
6)ஆசுரம் – தலைமகட்குப் பொன் பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்வது (அரும்பொருள் நிலை)
7) இராக்கதம் தலைமகள் தன்னினும், தமரினும் பெறாது வலிதில் கொள்வது.
8) பைசாசம்: துயின்றோள் மாட்டும் களித்தோள் மாட்டும் உறவு கொள்வது (பேய் நிலை)
இம்மூன்றும் பெருந்திணைபாற்படும் என்று சொல்லிய துஷ்யந்தன் “இந்த எண் வகை மணத்தில் ஒன்றாகிய காந்தருவத் திருமணம் செய்து கொள்வது நல்லது. அஃது அறத்திற்கு மாறுபட்டதன்று.நம் முன்னோர் ஏற்றுக் கொண்ட திருமணம் தான் ” என்று அவள் மனதைத் தொடும்படி நயமாகக் கூறினான். துஷ்யந்தன் பரிவுடன் கூறியதைக் கேட்டு, சகுந்தலை மனம் நெகிழ்ந்து, ”என்னிடத்து நின் காரணமாகப் பிறக்கும் புதல்வனுக்கு அரசுரிமை தருவ தென்றால் கூடுவேன்” என்று பின் வரு கின்ற ஆபத்தினை உணராது கூறினாள். அவன் அவள் கருத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அவளோடு மகிழ்ச்சியுடன் கூடினான். அவளைப் பிரிந்து போவ தற்கு முன், அவன், “நான் ஊர் அடைந்த பின் உன்னை வரவழைத்துக் கொள்வேன்” என்று கூறி, விடை பெற்றுச் சென்றான்.
கண்ணுவ முனிவர் ஆசிரமத்துக்கு வந்தார்
துஷ்யந்தன் போன சிறிது நேரத்திற்கெல் லாம் வெளியே சென்றிருந்த கண்ணுவ முனிவர் ஆசிரமத்திற்கு வந்தார். சகுந்தலை இத்தனை நாள் இருப்பதைப் போல இல்லாமல் வேறுபட்டிருப்பதைக் கண்டார். தன் ஞானக்கண்ணினால் நடந்ததை அறிந்து கொண்டார். இருந்தாலும் சகுந்தலையின் வாயில் உண்மை வர வேண்டுமென்று எண்ணி, அவளைப் பார்த்து, ”அருமை மகளே! அஞ்சற்க, நடந்ததை மறைக்காது தெளிவாகக் கூறுக” என்றார். அனைத்தையும் மறைக்காது அஞ்சியபடியே முனிவரிடம் கூறினாள். “அரசனுடைய பெருந்தேவியாகும் பேற்றினைப் பெறப் போகின்றாள்” என்று எண்ணியபடியால் முனிவரின் சினம் தணிந்தது. அதனால் அவர் “மகளே! நல்ல புதல்வனைப் பெற்று வளமோடு நீடு வாழ்க” என வாழ்த்தி அருளினார்.
அத்தினாபுரி சென்றனர்
சில நாட்கள் சென்றது. துஷ்யந்தனோடு ஒரு நாள் கூடியதனால் சகுந்தலை கர்ப்பமுற்றாள். பத்து மாதம் சுமந்து ஓர் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத் தாள். முனிவர் அக்குழந்தைக்குப் ‘பரதன்’ என்று எக்காலத்தும் அப்பெயர் விளங்கு மாறு வைத்தார். ஐந்தாம் ஆண்டில் க்ஷத்திரியக் குழந்தை ஆதலின் வேதத்தில் விதித்துள்ளபடி உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்தார். வேதங்களைச் சுரம் தவறாமல் ஓத வைத்தார். மீமாம்சை, நியாயம்,புராணம், தர்ம சாஸ்திரங்கள் முதலானவற்றைக் கற்பித்தார். அதோடு அரசர்க்குரிய நீதி நெறிகள், யானை ஏற்றம், குதிரைச் சவாரி, படைக் கலப் பயிற்சி போன்றவற்றையும் அவன் திறம்படக் கற்கும்படி கற்பித்தார். குழந்தைக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியது. சொன்ன வாக்குப்படி துஷ்யந்தன் சகுந்தலையையும், அவள் மகனையும் அழைத்துப் போக வரவே இல்லை. அதனால் கண்ணுவ முனிவர் பெயரன் பரதனையும், மகள் சகுந்தலையையும், தன் சிஷ்யர்கள் துணை யோடு அனுப்பினார். சகுந்தலையும் தன் மகன் பரதனோடு அத்தினாபுரி சென்று துஷ்யந்தன் அவையை அடைந்து, அவனைக் கண்டு வணங்கி நின்றாள். தன் மகனைப் பார்த்து, “மகனே! உன் தந்தைக்கு வணக்கம் சொல்” என அவன் கேட்கும்படி கூறினாள்.
பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதனால், கண்ணுவ முனிவர் ஆசிரமத்திற்குச் சென்றதையும், அங்கு சகுந்தலையைக் கண்டதையும், அவளைக் கந்தர்வ மணம் செய்து கொண்டு அவளோடு கூடியதையும் துஷ்யந்தன் மறந்து விட்டான். அதனால் அவன், ‘பெண்ணே நீ யார்? இந்தப் பாலகன் யார்? உன் மகனா? அவ்வாறு என்றால் இவன் தந்தை யார்? அவர் வந்திருக்கின்றாரா? எதற்காக வந்துள் ளீர்கள்?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான். அவன் கேட்ட கேள்விகளைக் கேட்டுச் சகுந்தலை திடுக்கிட்டாள்.
சகுந்தலையின் வேண்டுகோள்
ஆனாலும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவள், “மன்னவா! பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் வேட்டையாட வந்த சமயத்தில் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் காந்தருவ விவாகம் செய்து கொண்டு என்னுடன் இன்பம் அனுபவித்ததை மறந்து விட்டீரா? அல்லது மறந்தது போல நடிக்கின்றீரா? இந்தப் பாலகன் உனக்குப் பிறந்த நம் மகன். இவனுக்கு ஆட்சியுரிமை கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்துத் தான் அன்று என்னைக் கூடினீர். அதையும் மறந்துவிட்டீரா? அதுமட்டுமல்லாது அன்று என்னைப் பிரியுங்காலத்து ஊருக்குச் சென்று என்னை அழைத்துக் கொள்வேன் என்று சொன்னீர்களே, அதுவாவது ஞாபகம் உள்ளதா? அதுவும் இல்லையா? நீங்கள் சொன்ன சொல்படி வராமல் போனதால் என் வளர்ப்புத் தந்தையான கண்ணுவ முனிவர் என்னையும், என் மகனையும் இத்தனை நாள் பாதுகாத்து இன்று அனுப்பினார். இப்பாலகன் பெயர் பரதன். இவனுக்கு வேண்டிய அனைத்துக் கலைகளையும் கண்ணுவ முனிவரே கற்பித்து, கல்வி கேள்விகளில் சிறந்திருக்கச் செய்ததோடு சிறந்த வீரனாகவும் ஆக்கி யுள்ளார். நீங்கள் சொன்னபடி இன்றாவது எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று வேண்டிநின்றாள்.
சகுந்தலை கூறிய அனைத்தும் செவிடன் காதில் சங்கு ஊதினது போல் ஆயிற்று. அதனால் அவள் கூறியதை அவன் நம்பவே இல்லை, மாறாக, “பெண்ணே! உன்னை நான் பார்த்ததே இல்லை. உன்னை எப்பொழுதுமே பார்க்காத பொழுது நான் எவ்வாறு கூடியிருக்க முடியும்? நீ கூறிய அனைத்தும் கட்டுக்கதையே. மகாராண ஆக வேண்டும் என்ற பேராசையா இவ்வாறு கூறுகிறாய். பேசாமல் இங்ருந்து போய்விடு” என்று கோபத்துடன் கூறினான்.
சகுந்தலை அதனைக் கேட்டு அழுகையும், வேதனையும், கொண்டு கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி வர அங்குள்ள அவையினரைப் பார்த்து, ”அவையினரே! சான்றோர்களே! மங்கை சூதகம் உற்றால் கங்கையில் நீராடலாம். கங்கையே சூதகம் உற்றால் எங்கு போய் நீராடுவது? அதுபோலக், குடிமக்கள் பொய் பேசின், குற்றம் புரியின் அரசன் அதனை ஆராய்ந்து அவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பான். மன்னனே பெரிய பொய்யை மனசாட்சி இல்லாமல் கூறின் யாரிடம் போய் முறையிட முடியும்? அவனுக்கு யார் தண்டனை கொடுக்க முடியும்? இனி, இந்த நிலவுலகத்தில் எங்கிருந்து நியாயம் கிடைக்கும்? உண்மை என்பதே அழிந்து விட்டதா? யோசியுங்கள்.
நீதிக்கு அடுக்குமா?
”பெண்களுக்கான மனவலிமை, தெய்வம், என்பன அவர்களுடைய கணவர்கள் தானே தவிர, வேறு யார் இருக்கின்றார்கள்? இத்தகைய உண்மையை நன்கு தெரிந்திருந் தும் குற்றம் புரிகின்றீரே! இது நியாயமா? தர்மமா? நீதிக்கு அடுக்குமா?
“உலகிலுள்ள சான்றோர்கள் தன் மனைவி மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென நாள் தோறும் தெய்வத்தை வழிபடு வார்கள். விரதம் இருப்பார்கள். ஏன்! உயிரையும் கொடுப்பார்கள். ஆனால் உங்கள் அரசரோ தன்னுடைய மனைவியை யாரென்றே தெரியவில்லை என்கிறார். தனக்குப் பிறந்த மகனைத் தன் மகன் இல்லை என்கிறார். பிறர் மனைவியை விரும்பிய இராவணனும், ஆணவம் மிக்க சூரபதுமனும் கூட தங்கள் மனைவியரை, இவ்வாறு அல்லற்படுத்தவில்லை. இவரைப்போல நெறி தவறியவரை, நான் கண்டதே இல்லை. சாதாரண குடிமகன் ஒருவனுக்கு மனைவியும், மகனும் உயிரும் உடலும், போன்றவர்கள் ஆவார்கள். அரசனுக்கும் அது பொருந்தக் கூடியதே. எனவே மன்னனே! எங்களை ஆட்கொண்டு ஏற்பீராக. உங்களுக்கு வாழ்வில் எல்லா இன்பமும் கிடைக்கும்” என்று பலவாறு கூறி அழுதாள்.
எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போ
இவ்வாறு சகுந்தலை பலவாறு கூறியும், துஷ்யந்தன் மனம் தெளியாது, “ஏன் இவ்வாறு புலம்பிக் கொண்டிருக்கின்றாய். இங்கு இருப்பது பயனற்றது. எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய்ச் சேர்வது தான் உனக்கு நல்லது. இனி நீ இங்கிருந்து போகலாம்” என்று நிர்த்தாட்சண்யமாகக் கூறி விட்டான்.
துஷ்யந்தனின் கடூர மொழிகளைக் கேட்ட சகுந்தலை, கண்களில் கண்ணீர் பெருகி, உடல் சோர, உள்ளம் சோர் வடைய, துன்பக் கடலில் மூழ்கித் தவித் தாள். பின்னர் ஒருவாறு தேறி, “அரசே! என் தந்தை கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் நீர் சொன்ன ஆசை வார்த்தைகளை நான் சொல்லவில்லை என்று உங்கள் மனசாட்சி யைத் தொட்டு என் முகம் பார்த்துக் கூறுங் கள், என்றாலும் இவ்வாறு நடந்தது நான் முன் செய்த தீவினையே. மற்றவரை பழி சொல்லி என்ன பயன்? நான் பிறந்த அப்பொழுதே என்னைப் பெற்ற தாயும் (மேனகை), என்னை இவ்வுலகத்திற்குத் தந்ததற்குக் காரணமாக இருந்த என் தந்தை யும், (விசுவாமித்திரர்) சிறிதும் கருணை யில்லாது, பச்சைக் குழந்தையென்றும் பாராமல் மண் மேல் வீசி எறிந்துவிட்டுச் சென்று விட்டனர். என்னைப் பாதுகாத்த சகுந்தப் பறவைகளுக்குரிய கருணையும், அவர்களுக்கில்லாது போய்விட்டது. எனவே பாவியேனாகிய நான் பெற்றோரை பிறந்த அன்றே இழந்துவிட்டேன். இன்றோ என் கணவரை இழக்கின்றேன். பற்றிக் கொள்ளக் கொழு கொம்பின்றி நான் அநாதையாய் எல்லாரோலும் கைவிடப் பட்டு நிற்கின்றேன். தெய்வம் என்ற உண்மைப் பொருள் இருக்குமாயின் அத்தெய்வம் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். ஐயோ கடவுளே” என்று பலவாறு புலம்பி அழுது, புரண்டு கண்களில் கண்ணீர் கடலெனப் பெருகத் தன் புதல்வன் பரதனுடன் மன்னன் அவையை விட்டு வெளியேறினாள்.
“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்ற பழமொழிக்கு ஏற்பத் தெய்வமே அசரீரியாக வந்து சகுந்தலைக் குத் துணை புரிந்தது. அதாவது அப் பொழுது ஓர் அசரீரி ஒலி ஒன்று எழுந்தது. அது, “துஷ்யந்த மன்னனே! பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் நீ இச்சகுந்தலையை விரும்பி கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் அவளைக் கந்தர்வ மணம் செய்து கொண் டாய். அதன் மூலம் வலிமை மிக்க பரதன் என்ற மகனை இச்சகுந்தலை மூலம் பெற்றாய். இது பொய்யன்று, உண்மையே. ஆதலின் அவளை ஏற்க நீ மறுக்காதே. இப்பொழுது வெளியேறிச் சென்ற அவளை அழைத்து, அவளுடன் கூடி இனிது வாழ்வாயாக” என்று கூறியது. துஷ்யந்தன் மட்டுமல்லாது, அங்கு கூடியிருந்த அவை யினரும், அசரீரி கூறியவற்றைத் தெளி வாகக் கேட்டனர். உடனே அவையினரும் ”அசரீரி கூறிய வார்த்தைகள் நிச்சயம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். எனவே மன்னன் இந்நங்கையை மனைவி யாகவும்,இப்பிள்ளையை மகனாகவும் ஏற்க வேண்டும்” என்று மன்னனிடம் கூறினர். அப்பொழுதுதான் துஷ்யந்த னுக்குப் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் தான் கண்ணுவ முனிவர் ஆசிரமத்திற்குச் சென்றதும், அங்கு சகுந்தலையிடம் இன்பம் அனுபவித்ததும் நினைவுக்கு வந்தது.
துர்ப்பாக்கிய நிலை
உடனே சகுந்தலையையும், மகன் பரதனையும் அழைத்து வருமாறு கட்டளை யிட்டான். அவர்களும் திரும்ப வந்தார்கள். தான் கூறியவற்றைப் பொறுத்தருளுமாறு அவர்களிடம் வேண்டிக் கொண்டான். ”பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் கண்ணுவ முனிவர் ஆசிரமத்திற்கு நான் வந்ததையும் அங்கு உன்னோடு இணைந்ததையும் மறந்து விட்டேன். அதனால்தான் இந்தத் துர்ப் பாக்கிய நிலை ஏற்பட்டது. என்றும் பழி காரனாக இருக்கக் கூடிய நிலை, தெய்வத்தின் கருணையால் தவிர்க்கப் பட்டது. பொறுத்தருள்க” என்று மனம் வருந்திக் கூறினான். பின்னர் சகுந் தலையைத் தன் மனைவியாகவும், பர தனைத் தன் பிள்ளையாகவும் ஏற்றுக் கொண்டு அரண்மனையுள் புகுந்தான். மனைவியோடும், மைந்தனோடும் அநேக காலம் இன்பத்தோடு அரசாட்சி செலுத்தி னான். முதுமைப்பருவம் வந்தவுடன் தன் பிள்ளை பரதனுக்குத் திருமுடி சூட்டி, பின் வனம் புகுந்து அங்கு தவம் செய்து சொர்க்கம் புகுந்தான்.
ஸர்வதமனன்
பரதனுக்கு ஆறு வயதானபோதே, அவன் கண்ணுவ முனிவர் ஆசிரமத்துக்கு உபத்திரவம் செய்து கொண்டிருந்த, புலி களையும், சிங்கங்களையும், யானை களையும் அடக்கி, தன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள மரங்களில் கட்டி விளை யாடினான். மிகுந்த வலிமையுள்ள அசுரன் ஒருவனைத் தன் முழங்கால்கள் அடிகளி னாலேயே உயிரை மாய்த்துவிட்டான். அந்த அச்சத்தினால் அசுரர்களும், அரக்கர் களும் அந்த ஆசிரமத்திற்கு வருவதில்லை. இத்தகைய ஆற்றல்மிக்க செயல்களைக் கண்ட ஆசிரமவாசிகள், இவன் எல்லா வற்றையும் அடக்குவதனால் ‘ஸர்வத மனன்’ என்னும் பெயருள்ளவனாக இருக் கக்கடவன் என்று அவனுக்குச் சிறப்புப் பெயரிட்டனர்.
இளமையிலேயே வீரமிக்கவனாக இருந்த பரதன், ஆட்சி பொறுப்பேற்றதும் முன்னை விட பல அசுரர்களையும், அரக் கர்களையும் வென்று ‘இவன் முன்னின்று முடிக்கும் முருகனோ! கோதண்டத்தை ஏந்திய இராம பிரானோ!’ என்று போற்றும் படி வலிமையுடன் நாட்டை ஆண்டான். பல நாடுகளை வென்று, நூறு அசுவமேத யாகங்களைச் செய்தான். கண்ணுவர் போன்ற மகரிஷிகளுக்கு வேண்டிய மரியாதைகள் செய்தான். அதனால் அரசர் களில் சிறந்தவன் என்று புகழ் பெற்றான். இவன் காசிராஜன் மகளாகிய சுனந்தை என்பவளை மணம் புரிந்து புமன்யு என்னும் மகனைப் பெற்றான். இம்மகனை ‘குரு’ என்றும் கூறுவர். இத்தகைய பெருவீரனாக விளங்கிப் புகழ் பெற்று வாழ்ந்ததனால் தான் இவன் மரபினர் ‘பாரதர்’ என்று அழைக்கப்பட்டனர். நம் நாட்டிற்கும் ‘பாரத கண்டம்’ என்ற பெயர் வந்தது. ஆக இப்பாரதன் காலம் முதலாக ‘பாரத வம்சம்’ ஜனமே ஜயன் காலம் வரையில் பெரும் புகழுடன் வாழ்ந்தது.
இரண்டாயிரத்து நானூறு புதல்வர்கள்
பரதன் மகனாகிய ‘புமன்யு’ (பூமன், குரு) சிறந்த முறையில் குரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குப் பின் சுகோத்திரன் என்பவன் ஆட்சிரியுமை பெற்றான். அவன் சுவர்ணை என்பவளை மணந்து அத்திகன் (ஹஸ்தி) என்பவனை மகனாகப் பெற்றான். அத்தி கன் சிறந்த முறையில் யாவரும் போற்ற நாட்டை ஆண்டதோடு, தன் பெயர் என்றும் நிலைத்திருக்கும்படியாக ஓர் அழகிய நகரை உருவாக்கினான். ஹஸ்தி என்று சொல்லப்படும் அத்திகன் உருவாக்கிய தனால் அந்நகரத்திற்கு ‘ஹஸ்தினாபுரம்’ (அத்தினாபுரம்) என்ற பெயர் வந்தது. அந்நகர்தான் அவனுக்குப்பின் வாழ்ந்த குரு வம்சத்தார் அனைவருக்கும் தலைநகராக விளங்கியது.
அவனுக்குப்பின் நிகும்பன் (விகுஞ் சனன்) என்பவன் பட்டத்துக்கு வந்தான். அவனுக்குப் பின்னால் அஜமீடன் (அசா மீளன்) என்பவன் அரசனானான். அவன் ருக்கு (ரிஷை), கௌசல்யை, விசாலை என்ற மூன்று நங்கையரை மணந்தான். அம்மூவர் மூலம் இரண்டாயிரத்து நானூறு புதல்வர்களைப் பெற்றான். (வியாசபாரதம் இவன் கைகேயி, நாகை, காந்தாரி, விமலை, ரிக்ஷை என்ற ஐவரை மணந்து அவர்கள் மூலம் இரண்டாயிரத்து நானூறு புதல்வர்களைப் கூறுகிறது.) பெற்றான் என்று
இந்த இரண்டாயிரத்து நானூறு புதல்வர் களில் நற்பண்பு நற்செய்கைகள் உடைய வனும், ருக்குவின் மகனாக விளங்கிய வனும் ஆகிய ‘ஸம்வரணன்’ என்பவன் சூரியன் மகளாகிய தபதி என்பவள் மூலம் ஓர் அழகிய ஆண் மகனைப் பெற்றாள். அவன் பெயர் குரு என்பதாம். இவன் ஸம்வரணனுக்குப்பின் ஆட்சியுரிமை பெற்றான். இவன் ஆட்சி செய்யும் போது நீதித்துறையிலும், வேள்வித்துறையிலும், குடிமக்களுக்கு நன்மைகள் செய்கின்ற தன்மையிலும் யாவர்க்கும் ‘குரு’ என்று போற்றும்படியாக விளங்கினான். அதனால் தான் அவன் மரபினர் ‘குரு வம்சத்தவர்’ என்று போற்றப்பட்டனர். இதனை, வில்லி புத்தூரார் (குருகுலச் சருக்கம்) தம்முடைய பாடலில்,
“வருகுலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் குருகுலத்தவர் என்னும்படி பேரிசை கொண்டான்”
என்று கூறியதோடு அமையாது, “இந்தச் சந்திர குலத்தைத் தவிர மற்றைய சூரிய குலம், அக்கினி குலம் போன்ற குலங் களிலும் இவனுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை” என்கிறார். இத்தகைய பெருமை வாய்ந்தவன் ‘குரு’ மன்னன் ஆவான்.
மகாபாரதம் – 6 துஷ்யந்தச் சருக்கம்… பேரழகு பொருந்திய நங்கை