கருட புராணம் – 13 | பூவுலகில் உடலோடு சஞ்சரிக்கும் ஜனன மரண விதிகள்

0
10

கருடபகவான் ஆதிபகவானைத் தொழுது வணங்கி, “சர்வேசா! பூவுலகில், பிரம, க்ஷத்திரிய, வைசிய. சூத்திரர் என்ற நான்குவகைக் குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களல்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகுப்பினரும் இருக்கிறார்களல்லவா? அவர்களில் வாலிபனாயினும், பாலனாயினும், விருத்தனாயினும், தனவானாயினும், தரித்திரன் ஆயினும், கருணையுடைய வள்ளலாயினும், கஞ்சனாயினும், கருமியாயினும், ஞானியாயினும், அஞ்ஞானியாயினும், அறிஞனாயினும், அறிவிலி ஆயினும், விதவானாயினும், படிப்பறிவில்லாதவன் ஆயினும், உலகாளும் அரசனாயினும், ஆண்டியாயினும், உத்தமப் பிராமணனாயினும், மிக இழிந்த குலத்தோனாயினும் அவர்கள் ஒவ்வொரும் குறிப்பிட்ட காலத்தில் அவ்வாறு இருந்து பின்னர் இறத்தலுக்குக் காரணம் என்ன என்பதை நவின்றருள வேண்டும்” என்று வேண்டினான்.

நிலங்கடந்த நெடுமுடியண்ணலான நெடுமால். “கருடனை நோக்கி, “வைனதேயா! நீ கேட்ட கேள்வி ஒரு சிறந்த கேள்வி தான். அதற்குரிய விடையைக் கூறுகிறேன்; கேள்.” உயிரினங்கள் மரிக்கும் காலத்தில் ஜீவனைக் கவர்வதற்கென்றே காலன் என்பவன் நியமிக்கப் பெற்றிருக்கிறான். உலகத்தில் வாழ்கின்ற ஜீவர்கள், அவர்கள் செய்யும் பற்பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மாய்கிறார்கள். மரித்தவன் வீட்டில் உணவருந்துவோனும் பிறனுடைய மனைவியைப் புணர்வதற்கு இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழிதொழிலைச் செய்பவனும் வாழ்நாளை இழப்பார்கள். இகவாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் உறுதியானதான நல்வினைகளைச் செய்யாதவனும் பெரியோர்களைப் போற்றி செய்து பூஜியாதவனும், தூய்மையில்லாதவனும் தெய்வ பக்தி இல்லாதவனும், பாபங்களையே அறிந்திருந்தும் செய்பவனும் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள்.

பிறருக்குக் கேடு நினைப்பவனும் கேடு செய்பவனும், பொய்யுரைப்போனும் ஜீவன்களிடத்தில் கருணை இல்லாதவனும், சாஸ்திர முறைப்படி வாழாதவனும், தனக்குரிய அறநெறிகளைத் தவிர்த்து, பிறருக்குரிய கர்மங்களைச் செய்பவனும் யமலோகத்தில் வேதனைப்படுவார்கள். புண்ணிய தீர்த்தம் ஆடாத நாளும், ஜபவேள்விகள் செய்யாத திவசமும், தேவாராதனை செய்யாத தினமும், புனிதரான மஹான்களையும் உலகிற்கு நல்லவைகளைச் செய்யும் நல்லவர்களை வழிபடாத பகலும், சாஸ்திரம் உணராத நாளும், வீணாளேயாகும். சூத்திரதமரபில் பிறந்தவன் பிரம குலத்தினரே தெய்வம் என்று நினைத்துப் பக்தி செய்து, அவரிட்ட தொழிலைப் புரிந்து, தாசனாய் இருப்பானாகில், அவன் நற்கதியை அடைவான். அவன் வேறொரு கர்மமும் செய்ய வேண்டுவது இல்லை. அவன், உயர்ந்த ஜாதியருக்குரிய கர்மங்களைச் செய்வானேயாகில் நலிவுறுவான்.

கருடா! மனித தேகம் என்ன, பூவுலகில் உடலோடு சஞ்சரிக்கும் எந்த ஜீவனின் தேகமும் நிச்சயமற்றது. நிராதாரமானதாகவுள்ளது. சுக்கில சுரோணிதத்தால் உண்டாவது. அன்னபானாதிகளால் விருத்தியடைவது காலையில் வயிறு நிரம்ப உண்ட அன்னம் மாலையில் நசித்துவிடும். உடனே பசிக்கும். மீண்டும் அன்னம் உண்ணாவிடில் மெய் தளரும், குலையும், ஆகையால் சரீரம் அநித்தியமானதென்றும் அது கர்ம வினையினால் வருவது என்றும் எண்ணி மீண்டும் பூவுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு, நற்கர்மங்களைச் செய்ய வேண்டும்.

ஓ, வைனதேயா! பூர்வ கர்மத்தால் வருகின்ற தேகத்தை யாருடையது என்று கூறலாம்? அதை வீணாகச் சுமந்து திரிந்து மெலிகின்ற ஜீவனுடையது என்று சொல்லலாமா? அன்னவஸ்திரம் கொடுக்கும் தலைவனது எனலாமா? கர்ப்பமுண்டுபண்ணும் தந்தையினுடையது எனலாமா? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயினுடையது எனலாமா? தாயைப் பெற்றவனாகிய மாதா மகனது எனலாமா? பிதாவைப் பெற்ற பிதா மகனது எனலாமா? விலை கொடுத்து அடிமைப்படுத்தும் எஜமானனது எனலாமா? தொழில் கொடுத்து கூலி கொடுக்கும் மற்ற ஜீவனது எனலாமா? உடலைச் சாம்பலாக்கும் அக்னியினுடையது எனலாமா? அல்லது அதனை ஈர்த்துப் பிய்த்துண்ணும் குள்ள நரிக்குரியது எனலாமா? ஜீவன் போன பிறகு, புழுவாகவும் விஷ்டையாகவும் சாம்பராகவும் அழியும் உடலானது, ஒருவருடையதும் அல்லவென்று முடிவதை அறிந்து ஓர்ந்து, சரீரத்தின் மீது ஆசை வைக்காமல். பகவத், பாகவத ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும்.

பாபங்கள் என்பவை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. அதிகமான பாவங்களைச் செய்தவன் நாய் நரி முதலிய இழிந்த ஜன்மம் அடைவான். ஜீவன், கர்ப்பவாசம் செய்யும் காலத்தில், தாயினுடைய மல மூத்திராதிகளால் அதிகமாகத் துன்பங்களையடைவான். இறப்பதைவிட பிறப்பதில் உள்ளதான துன்பத்தையும் கர்மாதியையும் எண்ணி. ஜீவனானவன் நல்ல ஒழுக்க நற்பண்புகளுடன் ஜீவிக்க வேண்டும். தாய் வயிற்றில் இருந்து பிறந்தவன் பால்ய வயதில் உண்ட விளையாட்டுகளால் தனக்கு உறுதியாக உள்ளது எது என்பதை அறிவதில்லை. முதுமைப் பருவத்தில் சோர்வாலும் கிலேசத்தாலும் ஒன்றையும் உணர்வதுமில்லை. இவ்விதம் உறுதியை உணராமல் ஒழிபவரே மிகப் பலராவர். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் எவனோ. அவனே நிரதிசய இன்ப வீடாகிய நமது உலகையடைவான்.

கர்ம வினைகளாலேயே ஜீவன் பிறந்து பிறந்து இறக்கிறான். பிறந்து அதிக வயது உலகில் வாழாமல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மரிப்பது என்பது மகா பாபத்தினால் என்பதை அறிவாயாக. கொடிய பாவம் செய்தவனே பிறந்தவுடனே மரித்து, மீண்டும் பிறந்து மடிகிறான். அவன் பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் கணக்கென்பதில்லை. பூர்வ ஜன்மத்தில் நல்ல நெறிப்படி வாழ்ந்து, தான தர்மங்களை மனங்கோணாமல் செய்து வரும் சேதனன், பூமியில் பிறந்தால் அவன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகம் சேர்வான்.

ஓ, வைனதேயா! கர்ப்பந் தரித்த ஆறு மாதத்திற்குள் அந்தக் கர்ப்பம் எந்த மாதத்திலாவது கரைந்து விழுந்ததாயின் விழுந்த மாதம் ஒன்றாயின் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றாயின் மூன்று நாட்களும், நான்காயின் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறாயின் ஆறு நாட்களும், கர்ப்பத்தை கருவுற்றிருந்த மாதாவுக்கு மட்டுமே சூதகத் தீட்டு உளதாகும். பிதாவுக்கு அத்தீட்டு இல்லை. அவன் செய்ய வேண்டிய கர்மமும் ஒன்றுமில்லை. கருவழியாமல் பத்தாம் மாதத்தில் பிறந்து, மூன்று வயதுக்குள் மாண்டால், இறந்த அந்தக் குழந்தையை உத்தேசித்து பால் சோறும் தயிர் சோறும் ஊர்க் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்கு மேல் ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை இறந்து போகுமானால் மேற்சொன்னது போலவே பாலர்களுக்கு அன்னங்கொடுத்தல் வேண்டும். இவ்விதமில்லாமல் பிறந்த ஒரு மாதத்திற்குள் பிறந்த குழந்தை இறந்தால் அந்தந்த வர்ணத்தாருக்குரியபடி செய்து தீர்த்தமும் பாலும் பாயசம் முதலிய உணவுப் பொருள்களைத் திரவ வ டி வி ல் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

உலகில் பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் மீண்டும் பிறப்பதும் திண்ணமாகையால் இறந்த பிறகு மீண்டும் மறு பிறவியெடுக்காமல் மீளாவுலகெய்ய முயற்சி செய்யவேண்டும். அவ்விதம் முயற்சி செய்யாமலும், தான தர்மங்களைச் செய்யாமலும் வாழ் நாட்களையெல்லாம் வீண் நாட்களாக்கி விட்டு மாய்ந்த ஜீவன், பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற குலங்களில் ஏதேனும் ஒரு குலத்தில் தோன்றினாலும், ஒரு நாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியற்ற தரித்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, கூழ் குடிப்பதற்கு வகையில்லாமல வருந்தி, விரைவில் மடிந்து, மீண்டும் பிறப்பான்.”

“ஓ வைனதேயா! ஒருவன், தான் இறந்தால், மறு ஜன்மத்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். உலகம் முழுவதையும் ஆள வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது. தீர்த்தயாத்திரை செய்து புனிதநதிகளில் நீராடியவன் மனத்தூய்மையும் அடைவான். பொய் சொல்லாமல், கீழ்ப்படிதலுடன் இன்சொல் பேசுவோன் சகல சாஸ்திர சம்பன்னனாவான். ஏராளமான சம்பத்துகள் இருந்தும் தான தர்மஞ் செய்யாதவன், மறுபிறவியில் தரித்திரனாகப் பிறப்பான். ஆகையால் மனிதன். தனக்கு உள்ள சம்பத்துக்குத் தக்கபடி தான தர்மஞ் செய்ய வேண்டும்” என்று திருமால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here