சிவபெருமானின் சடையில் இருப்பவனும், பாற்கடலில் தோன்றிய தேவாமிர் தத்துக்கு முன் பிறந்தவனும், நட்சத்திரங் களின் தலைவனும், ‘மதி’ என்ற பெயரை யுடையவனுமாகிய அழகிய சந்திரன், வியாழன் என்னும் தேவ குருவின் பத்தினி யான தாரையைக் கண்டு காதல் கொண்டு அவளோடு கூடி ‘புதன்’ என்னும் புத்திர னைப் பெற்றான். அப்பொழுது ‘மனு’ என்ற அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ‘இளன்’ என்ற புதல்வன் பிறந்தான். அவன் ஒரு நாள் தேரில் ஏறிச் செல்லுகின்ற காலத்து, ”இங்கு வந்து நீராடுபவர்கள் ஆடவர்களாயிருப்பின் அவர்கள் பெண் களாக மாறுக” என்று உமையம்மை சாப மிட்டிருந்த குளத்தினைக் கண்டு, சாப விவரம் தெரியாது நீராடினான். உடனே அழகிய பெண்ணாக மாறினான். ‘இளை’ என்ற பெயரையும் பெற்றான்.
பெண்ணாக மாறிய இளை என்ற அந்த நங்கையை, சந்திரன் புதல்வனாகிய புதன் ஒரு சோலையில் கண்டு காதல் கொண் டான். கந்தர்வமணம் செய்து கொண்டு அவளைக் கூடினான். அவர்கள் இருவருக் கும் ஓர் ஆண் மகவு பிறந்தது. அக் குழந்தை தான் பிற்காலத்தில் ‘புரூரவா’ என்னும் பெயருடன் விளங்கி, பூமியிலுள்ளோர் அனைவரும் புகழ, தன் ஆணைச் சக்கரத் தைச் செலுத்தி ஒரு சிறந்த மன்னராகத் திகழ்ந்தார்.
ஒருநாள் ஊர்வசி என்னும் தேவ மாது ஒரு சோலையில் உலாவிக் கொண்டிருந் தாள். அவளின் பேரழகைக் கண்டு விரும்பிய அசுரர்கள் சிலர், அவளைப் பற்றி இழுத்துக் கொண்டு விண் வழியே செல்லலாயினர். செய்வதறியாது அவள் கதறலானாள். அவளின் அழுகுரலைக் கேட்ட தேவர்கள், அவளுக்கு அபயம் கொடுத்து அசுரர்களோடு போரிட்டனர். ஆனால் அவர்களால் வலிமை மிக்க அசுரர் களை வெல்ல முடியவில்லை. உடனே புரூரவா மன்னரிடம் முறையிட்டனர். உடனே அவர் விண்ணுலகம் சென்று அசுரர் களோடு கடும் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தார். பின்னர் இந்திரனுடைய தூதுவனாய் புரூரவா (புரூரவரசு) பூமிக்கு வந்து, அங்கு ஊர்வசியை மணந்து கொண்டார். திருமாலின் தொடையில் தோன்றிய ஊர்வசியோடு புரூரவரசு மகிழ்ந்து இன்பத்தோடு இருக்கும் நாளில், அவர்களுக்கு ‘ஆயு’ என்ற மகன் பிறந்தான். இந்த ஆயு, ‘ஸ்வர்ப்பானவி’ என்பவளை மணந்து நகுஷன், விருத்த சர்மா, ரஜி, கயன், அநேநஸ் என்ற புதல்வர்களைப் பெற்றான். இவர்களுள் நகுஷன் என்பவன் பற்று அற்றவனாய் விளங்கித் தவத்தை மேற்கொண்டான். அதோடு நூறு அசுவ மேத யாகமும் செய்து முடித்தான். அத னால் அவன் தேவர்களுக்கு அதிபதியாகித் தேவேந்திரன் ஆனான்.
இந்திராணி மீது காதல்
தேவேந்திர பதவி கிடைத்தவுடன் அவனுக்குக் கர்வம் வந்தது; பெண் பித்தும் சேர்ந்தது. அதனால் இந்திராணி மேலேயே காதல் கொண்டான். அவளுடன் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையும் எழுந்தது. அதனால் சப்த முனிவர்கள் சுமக்க, பல்லக்கில் இந்திராணி இருக்கு மிடம் நோக்கிச் சென்றான். சப்த ரிஷிகளில் அகத்தியர் குள்ளமானவர். அதனால் மற்ற வர்கள் செல்கின்ற வேகத்தில், அவரால் செல்ல முடியவில்லை. எனவே பல்லக்கு நிதானமாகச் சென்றது. அவனுக்கோ இந்தி ராணியை விரைவில் கண்டு அவளோடு இன்ப உறவு வைத்துக் கொள்ள வேண்டு மென்று துடிப்பு. ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பார்கள். அதனால் அவன் அறிவும் மழுங்கிவிட்டது. ‘ஓடு ஓடு’ என்ற பொருளுடைய ‘ஸர்ப்ப’ என்ற சொல்லை இருமுறை கூறி, விரைவாகச் செல்லுமாறு தவத்தில் சிறந்த, அந்த முனிவர்களை அதட்டினான். ‘குணமென்னும் குன்றேறி நின்றார் சினம் கணமேயும் காத்தல் அரிது’ அல்லவா; அதனால் தழற்புரைக் கடவுள் தந்த தமிழை உலகிற்கு அருளியவரான அகத்தியர் சினங்கொண்டு ‘ஸர்ப்ப ஸர்ப்ப’ என்று நீ கூறியபடியால் உண்மையிலேயே ‘ஸர்ப்பமாகுக’ என்று சபித்தார்.அதனால் நகுஷன் இந்திரபதவியை இழந்ததோடு பாம்பாக மாறி, நிலத்தில் வந்து விழுந் தான். ஆக, சான்றோர்களைப் பழித்ததனால் கீழ்க்கதிக்கு உள்ளானான் நகுஷன்.
அத்தகைய நகுஷனின் புதல்வன் யயாதி என்பவன் ஆவான். இவன் யாவரினும் அருள் மேம்பட்டு விளங்கியவன். அவன் அசுர குருவாகிய சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானையை மணந்து, அவள் மூலம் யது, துருவசு என்ற இரண்டு பிள்ளை களைப் பெற்றான். இனி, அந்த யயாதி மன்னன் எவ்வாறு தேவயானையை மணம் செய்தான் என்பதைப் பார்ப்போம்:
மிருத ஸஞ்சீவினி
அசுரர்களின் அரசனாகிய வ்ருஷபர்வா (இடபமன்னன்) என்பவன் இப்பூவுல கத்தை ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அசுரர்களின் குல குருவாகிய சுக்கிராச் சாரியார் வந்து, தேவர்களை அடிமைப் படுத்துவதற்குரிய பல்வேறு உபாயங் களைச் சொல்லலானார். இதனைக் கேட்ட இந்திரன் தேவர் கூட்டத்தோடு அசுரர்கள் மேலே படையெடுத்து அவர்களைக் கொல்லலாயினான். உடனே சுக்கிராச்சாரி யார் தான் கற்ற ‘மிருத ஸஞ்சீவினி’ என்னும் அற்புத வித்தை மூலம் இறந்த அரக்கர்களையெல்லாம் மீண்டும் உயிர் பெறச் செய்தார். இதனை அறியாது தேவர் கள் அசுரர்களோடு பலமுறை போரிட்டுத் துவண்டு போயினர். தேவர்கள், இறந்த அசுரர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவ தற்கு சுக்கிராச்சாரியார் பெற்றி ருந்த ‘மிருத ஸஞ்சீவினி’யே காரணம் என அறிந்தனர். ஆனால் அந்த வித்தையைத் தேவ குருவாகிய பிரகஸ்பதி அறிந்திருக்க வில்லை.
தேவயானை மீது காதல்
இதை அறிந்த இந்திராதி தேவர்கள், தேவ குரு பிரகஸ்பதியின் மூத்த புதல்வ னாகிய ‘கசன்’ என்பவனிடம் சென்று, சுக்கிராச்சாரியாரிடம் சென்று ‘மிருத ஸஞ் சீவினி’ வித்தையை எப்படியாவது கற்று வரும்படி கூறி அவனை அனுப்பினார்கள். அவனும் சுக்கிராச்சாரியாரிடம் சென்று, அவருக்கு உண்மைச் சீடனாய் இருந்து அவரின் மனம் கோணாமல் நடந்து, பல கலைகளைக் கற்றதோடு ‘மிருத ஸஞ் சீவினி’ வித்தையையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டான்.
அதே சமயத்தில் சுக்கிராச்சாரியாரின் பெண் தேவயானை மீது கசன் காதல் கொண்டான். இதனை அசுரர்கள் எவ்வாறோ அறிந்து மனம் பொறாமல் கசன் காட்டுக்குச் செல்லும் சமயம் பார்த்து, கசனைக் கொன்று துண்டு துண்டுகளாக ஆக்கி நாய்களுக்கு இட்டுச் சென்று விட்ட னர் . கசன் இறந்ததை அறியாத தேவ யானை,தந்தை சுக்கிராச்சாரியாரிடம் சென்று, காட்டுக்குச் சென்ற தன் காதலன் கசன் வரவில்லையே எனக் கூறி வருந்தி னாள். சுக்கிராச்சாரியார், அவனுக்கு நேர்ந்த பேராபத்தைத் தம் ஞானக் கண்ணால் அறிந்து, தான் கற்ற ‘மிருத ஸஞ்சீவினி’ என்னும் உயிர் பிழைக்கும் வித்தை மூலம் அவனை உயிர் பெறச் செய்தார்.அவனும் உறங்கி விழிப்பதைப்போல எழுந்தான். பின் தன் ஆசானை வணங்கினான். தேவ யானையைக் கண்டு மனமகிழ்ந்தான்.
கசன் உயிர் பெற்று எழுந்ததை அறிந்த அசுரர்கள், மீண்டும் அவன் காட்டுக்குச் சென்றபொழுது, அவனைக் கொன்று, பொடிப்பொடியாக்கி, மதுவில் கலந்து, சுக்கிராச்சாரியாருக்கே, அவர் பருகுகின்ற பானம் எனக் கூறிக் கொடுத்தனர். அந்த அசுரர்களின் ஏமாற்று வேலையை உணராது, அந்த அசுர குரு அதனைப் பருகி விட்டார். காட்டுக்குச் சென்ற கசன் வராததை அறிந்த தேவயானை மீண்டும் தன் தந்தையிடம் ‘கசன் இன்னும் வரவில்லையே’ என்ற கூறி வருந்தினாள். அவரும் மகள் கூறியதைக் கேட்டு, தம் ஞானக் கண்ணால் அசுரர்கள் செய்த கொடிய செயலை அறிந்தார். உடனே அவர் தம் வயிற்றுக்குள்ளிருக்கும் கசனை உயிர் பெறச் செய்தார். பின் அவனிடம் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்த பின், ‘மிருத ஸஞ்சீவினி’ வித்தையால் தன்னை உயிர்ப்பிக்குமாறு கூறினார். உயிர் பெற்ற கசனும் ஆசான் சொல்படியே அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து, தான் கற்ற வித்தை மூலம் இறந்த ஆசானை மீண்டும் உயிர் பெறச் செய்தான். உயிர் பெற்றெழுந்த ஆசானைக் கசன் வணங்கினான். கசன் உயிர் பெற்று எழுந்து வந்ததைக் கண்டு தேவயானை களிப்புற் றாள்.
நீ எனக்குத் தங்கையாவாய்
சில காலம் அவர்களுடன் இருந்த கசன் விண்ணுலகம் செல்ல எண்ணி, தன் ஆசானிடம் விடை பெற்றான். பின்னர் தேவயானையிடம், தான் விண்ணுலகம் செல்ல விடை தருமாறு கேட்டான். தேவ யானையோ அதனைக் கேட்டு வருந்தி அழுது, “அன்பரே! நான் உன்னைக் காதலிக்கின்றேன். எனவே என்னை மணந்து கொள். இந்த உலகத்திலேயே இன்பமாயிருக்கலாம். விண்ணுலகம் செல்ல வேண்டாம்” என்று கூறித் தடுத் தாள் . அதனைக் கேட்ட கசன், “நங்கையே! நான் சில காலம் உன் தந்தையின் வயிற் றில் இருந்தேன். நீ யாரால் தோன்றினாயோ அவராலே நான் மறு பிறவி எடுத்தேன். இனி, நீ எனக்குத் தங்கையாவாய்.எனவே உன்னை மணந்து கொள்ளுதல் முறை யன்று” என்று கூறி அவள் வேண்டு கோளை ஏற்க மறுத்து விட்டான்.
கசன் கூறியதிலுள்ள உண்மைத் தன்மையை உணராத தேவயானை, அவன் மீது கோபங்கொண்டு, “என் தந்தையிடத் தில் கற்ற மந்திரத்தின் பயன் உனக்குப் பொய்யாகக்கடவது” எனச் சாபமிட்டாள். இதனைக் கேட்ட கசன் கோபங்கொண்டு, ‘மிருத ஸஞ்சீவினி” என்ற அற்புத மந்திரம் எனக்கு உதவாமல் போனாலும் என்பால் கற்றவர்க்குப் பயன்படும் அல்லவா! அது போதும்” என்று பதில் கூறியதோடு நில்லாது, “முனிவர் பெண்ணாகிய உனக்கு அந்தணர்களோ முனிவர்களோ கணவராக வர மாட்டார்கள். க்ஷத்திரிய மன்னர்கள் தான் உனக்கு மாலையிடுவார்கள்” என்று எதிர்ச் சாபம் கொடுத்தான். அதன் பின்னர் கசன் விண்ணுலகம் சென்று அங்கு, தேவர் களுக்கு உயிர்ப்பிக்கும் மிருத ஸஞ்சீவினி வித்தையைக் கற்றுக் கொடுத்தான். அதனைக் கற்றுக் கொண்டு,தேவர்கள் அசுரர்களோடு போரிட்டு அவர்களை அழித்தனர்.
இந்திரன் காற்றாக மாறினான்
அந்தக் காலக் கட்டத்தில் விருஷபர்வா என்ற அரசன் ஒருவன் இப்பூவுலகத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவனுடைய மகள் சர்மிஷ்டை என்பவள் ஆவாள். நல்ல அழகி. ஒரு நாள் சர்மிஷ்டை தன் தோழியர் ஆயிரவர் சூழ, நீர் நிறைந்த ஓர் அழகிய குளத்திற்குச் சென்று, தன் ஆடைகளை யெல்லாம் களைந்துக் கரையில் வைத்து விட்டு, அக்குளத்தில் நீராடிக் கொண்டிருந் தாள். அவளைப் போலவே அந்த நேரத் தில் தேவயானையும், அந்தக் குளத்தி லேயே நீராடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த இந்திரன் காற்றாக மாறி வீசியதன் காரணமாகத் தேவயானை கரையில் வைத் திருந்த ஆடைகளோடு சர்மிஷ்டை ஆடை கள் கலந்து விட்டன. நீராடியபின் கரை யேறிய சர்மிஷ்டைக்கு, அவள் தோழியர் தங்களையும் அறியாமல் தேவயானையின் ஆடைகளை எடுத்துச் சர்மிஷ்டைக்குக் கொடுத்து அணியச் செய்தனர். அவளும் தேவயானை ஆடைகள், என்று தெரியாமல் அணிந்து கொண்டாள். தன்னுடைய ஆடைகளை, சர்மிஷ்டை அணிந்திருந் ததைத் தேவயானை பார்த்து விட்டாள்.
மிகுதியான கோபத்தோடு தேவயானை, சர்மிஷ்டை அணிந்திருந்த ஆடைகளைப் பற்றி இழுத்து, “நான் அந்தணர் குலத்தில் பிறந்தவள். நீயோ க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவள். என்னுடைய ஆடையை நீ அணியலாமோ? அதனால் என் ஆடை தூய்மை இழந்துவிட்டது?” எனக் கூறி னாள். அதனைக் கேட்ட சர்மிஷ்டையும் கோபங் கொண்டு, “என் தந்தை முன், உன் தந்தை பஞ்சாங்கம் முதலியன உரைத்து, அவரிடமிருந்து பொருள் பெறுகிறார். அத்தகைய யாசகருடைய மகளாகிய நீ, குலத்தில் உயர்வு தாழ்வு கற்பிக்கலாமோ” என்று கூறியதோடு மட்டுமல்லாது, அத்தேவயானையை அருகிலிருந்த ஒரு கிணற்றில் தள்ளி விட்டாள். உள்ளே விழுந்த தேவயானை, கிணற்றில் முளைத் திருந்த செடியினைப் பற்றிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள்.
சர்மிஷ்டை பணிப்பெண்ணாதல்
அப்பொழுது அந்தக் காட்டில் வேட்டையாட வந்த யயாதி மன்னன், கிணற்றினுள் தேவயானை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவளைக் கிணற்றிலிருந்து, அவள் ( தேவயானை) வலக்கை கொடுக்க, அதனைப் பற்றிக் கொண்டு வெளியே கொணர்ந்தான். பின்னர் “அவள் யார்? எதனால் இத்துன்பம் நேர்ந்தது” என்பதனைக் கேட்டு அறிந்து, தேவயானையை, அவள் இல்லத்திற்கு அனுப்பினான். அவனும் தன் நகரத்திற்குத் திரும்பினான்.
அதன் பின்னர் தேவயானை நடந்த வற்றையெல்லாம் தன் தந்தை சுக்கிராச் சாரியாரிடம் கூறினாள். அவர் அதனைக் கேட்டுக் கோபங்கொண்டு, “யார் பாவி களுடன் வசிக்கின்றார்களோ அவர்களும் பாவியாவார்கள். ஆகையால் உன்னைக் கிணற்றில் தள்ளிய அந்த பாவிகள் வசிக்கும் மண்ணையே நாம் மிதிக்கக் கூடாது” என்ற கூறி, தன் மகள் தேவயானையை அழைத்துக் கொண்டு அந்நகரை விட்டு வெளியே ஒரு சோலை யில் தன் மகளுடன் தங்கினார்.
நடந்தவற்றையெல்லாம், அசுர மன்னன் விருஷபர்வா அறிந்து, தன் குரு இருக்கு மிடம் சென்று, அவரை வணங்கி, ”ஐயன்மீர்/ அறிவில்லாமல் என் பெண் செய்த தவற்றுக்கு நான் மன்னிப்பு கோரு கிறேன். நீங்கள் அவளுக்கு விதிக்கும் தண்டனையை அவளை ஏற்கச் செய்கின் றேன். என்னுடன் நகரத்தில் வந்து இருங் கள்” என்று வேண்டிக் கொண்டான். அதனைக் கேட்ட தேவயானை, “அரசே! உன் மகள் சர்மிஷ்டையை, ஆயிரம் தோழியர்களுடன் சேர்த்து, எனக்குப் பணி விடை செய்வதற்காகப், பணிப்பெண்ணாக அனுப்பினால் நானும் என் தந்தையும் உன் நகரத்திற்கு வருவோம்” என்று நிபந்தனை விதித்தாள். அவள் நிபந்தனையை ஏற்ற மன்னன், “ஒரு குலத்திற்காக ஒருவனைக் கைவிடலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தையே கைவிடலாம்; ஒரு நாட்டிற் காக, ஒரு கிராமத்தையே கைவிடலாம்; ஆத்ம முக்திக்காக பூமியையே கைவிட லாம்” என்ற விதிப்படி என் குலத்திற்காக என் பெண்ணை உங்களிடம் ஒப்படைக் கிறேன்” என்று கூறி, தன் மகள் சர்மிஷ் டையை ஆயிரந்தோழியர்களுடன் அனுப்பி னான் . தந்தையின் கட்டளைப்படி சர்மிஷ்டை முதலான தோழிமார்கள் தேவ யானைக்கு உரிய பணிவிடைகளைச் செய்து வர, அவளும் அவற்றை ஏற்று, தன் நலனுக் காகக் கெளரி விரதம் இருக்கலானாள்.
மணமாலையிடுங்கள்
ஒரு நாள் யயாதி மன்னன், தேவயானை இருக்குமிடம் வந்தான். அங்கு தேவ யானையோடு சர்மிஷ்டை முதலான தோழியர்கள் இருப்பதைக் கண்டான். அவர்களும் அரசனை வரவேற்று உபசரித் தனர். அப்பொழுது யயாதி மன்னன் தேவ யானையைப் பார்த்து, “நீ யார்” எனக் கேட்டான். அதற்குத் தேவயானை, “மன்னரே! என்னை அறிந்தும் அறியாதவர்
போல ‘நீ யார்’ எனக் கேட்கின்றீரே.
கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டி ருந்த என்னை, நீங்கள்தானே உங்கள் கை கொடுத்து, காப்பாற்றினீர். அதற்குள் என்னை மறந்து விட்டீரே? உங்களைப் பார்த்ததிலிருந்து உங்கள் ஞாபகமே, என் உள்ளத்தில் படிந்துள்ளது. அன்று நீங்கள், உங்கள் வலக்கை கொடுத்து என்னைக் கிணற்றிலிருந்து தூக்கி விட்டீர்கள்.இன்று நான் காம வெள்ளத்தில் மூழ்கியுள்ளேன். இன்றும் அன்று போலவே அருள் கூர்ந்து கை கொடுத்து தூக்கி விடுங்கள். அஃதாவது எனக்கு மணமாலையிடுங்கள்” என்று வேண்டினாள்.
க்ஷத்திரியனுக்கே மாலையிடுவாய்
அதனைக் கேட்ட யயாதி, “பெண்ணே! க்ஷத்திரிய மன்னனாகிய நான் பிராமணப் பெண்ணாகிய உன்னை மணத்தல் முறையோ?சாத்திரவிதி சம்மதிக்குமா?” என்றான். அதற்குத் தேவயானை, “மன்னரே! என்னுடைய தந்தை சுக்கிராச் சாரியார்,என்னைத் தங்களுக்கு மணம் செய்து தருவாரேல் நீங்கள் என்னை ஏற்பீர் களா?” என்று கேட்டாள். அதற்கு மன்னன், ”உன் தந்தை நான்கு வேதங்களையும் கரை கண்டவர். அவர் அறியாத சாத்திர விதி எதுவுமில்லை. அவர் இசைந்து உன்னை மணம் செய்து கொடுக்க முன் வந்தால் நான் ஏற்றுக் கொள்வேன்” என்று பதில ளித்தான். உடனே அவள் தன் தந்தையிடம் சென்று, தன் விருப்பத்தைக் கூறினாள். தன் வலக்கரம் கொண்டு பற்றிக் கிணற்றிலி ருந்து தேவயானையைக் காப்பாற்றியதை யும், ‘க்ஷத்திரியனுக்கே மாலையிடுவாய்” என்று தேவயானைக்கு, கசன் சாபம் கொடுத்ததையும் நினைவு கூர்ந்து, வேத விதிப்படி தன் மகள் தேவயானையை, யயாதி மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அதன்பின் யயாதி மன்னன் தேவயானையோடு அவள் தோழி சர்மிஷ்டையையும் சேர்த்து அழைத்துக் கொண்டு தன் நகரம் போய்ச் சேர்ந்தான். அங்கு தேவயானையுடன் இனிய முறையில் இல்லறம் நடத்தினான். அதன் பயனாக அவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒருவன் பெயர் யது. மற்றவன் பெயர் துர்வசு என்பதாகும்.
ஒரு நாள் யயாதி மன்னன் அழகிய ஒரு பூஞ்சோலையில் சர்மிஷ்டையைக் கண் டான். சர்மிஷ்டை அவன் மீது காதல் கொண்டு, தன்னை மணந்து கொள்ளுமாறு அப்பொழுது கூறினாள். அதற்கு யயாதி மன்னன், “சர்மிஷ்டை! உன்னைத் தேவ யானையின் தோழியாக என்னுடன் அனுப் பும்போது, “ராஜகுமாரியான உன்னைக் கௌரவமாக நடத்தும்படி கூறியதோடு உன் மீது காதல் கொள்ளக் கூடாது” என்று சுக்கிராச்சாரியார் கூறியுள்ளார். எனவே உன் காதலை ஏற்க முடியாது” என்று கூறினான். ஆனாலும் சர்மிஷ்டை விடவில்லை. ”உன்னைச் சரணடைந்தேன். சரணடைந்த வரைக் கைவிடுவது அழகன்று. எனவே என்னோடு இணைவது தான் சரி” என்று சாதுரியமாகப் பல வார்த்தைகளைக் கூறி, அவனை ஒப்புக் கொள்ள வைத்தாள். அவனும் அவளைக் கந்தவர்வ விவாகம் செய்து கொண்டு, அவளுடன் கூடி ஓர் ஆண் மகனைப் பெற்றான். அவன் பெயர் ‘த்ருஹ்யு’ என்பதாம்.
சர்மிஷ்டைக்கு மூன்று குழந்தைகள்
சர்மிஷ்டைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிந்த தேவயானை ‘இக் குழந்தை உனக்கு எவ்வாறு பிறந்தது?’ என்று கேட்டாள். ஒரு ரிஷியின் வரத்தி னால் பிறந்தது என்று பதிலளித்தாள். யயாதியும் ஒரு ராஜரிஷியாதலின் அவ்வாறு கூறினாள். அதன் பின்னர் அவளுக்கு யயாதி மூலமாக இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்த இரண்டு குழந்தைகளின் பெயர் அனு, பூரு என்ப தாகும். மூன்று குழந்தைகளும் நன்கு சீரும் சிறப்போடு வளர்ந்தன. ஒரு நாள் வீதியில் மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களை அப்பொழுது அங்கு வந்த தேவயானை கண்டு, அவர்கள் யயாதியின் சாயலைப் பெற்றிருப்பதைக் கண்டு ஐயமுற்று, “குழந்தைகளே! நீங்கள் யார்? உங்கள் பெற்றோர் யார்?” என்று கேட்டாள். அதற்கு அந்தப் பிள்ளைகள், “நாங்கள் யயாதியின் பிள்ளைகள். எங்கள் தாய் சர்மிஷ்டை” என்றனர். தேவயானை கோபங்கொண்டு உடனே தந்தை சுக்கிராச் சாரியாரிடம், தன் கணவன் மூலமாக சர்மிஷ்டைக்கு மூன்று குழந்தைகள் பிறந் திருத்தலையும், அதன் மூலம் தன் கணவன் தனக்குத் துரோகம் செய்திருத்தலையும் கூறினாள். இதைக் கேட்டவுடன் சுக்கிராச் சாரியார்,”மன்னவனே! எல்லா தருமங் களையும் அறிந்தவன் நீ. அப்படி இருந்தும் அதர்மமான வழியில் ஒழுக்கம் தவறி நடந்துள்ளாய். ஆகையால் என் மகளுக்குத் துரோகம் இழைத்த நீ நரை, திரை, மூப்பு, எய்தி,வெண்மை தலை மயிரை உடைய வனாய், தோல் சுருக்கத்தைப் பெற்று வெற்றி கொள்ள முடியாத மூப்பினை அடைவாயாக” என்று சாபமிட்டார். உடனே யயாதி மன்னன் அவரை வணங்கி. தன்னை மன்னிக்கும்படி வேண்டியதோடு, சர்மிஷ்டையின் வேண்டுகோளைத் தன்னால் மறுக்க முடியாது போய்விட்டது என்று சமாதானம் கூறினான்.
யயாதி கூறிய சமாதானப் பேச்சால் சுக்கிராச்சாரியார் கோபந்தணிந்தது. அதனால் யயாதியை நோக்கி, “நின் புதல் வர் ஐவரில் யாரேனும் ஒருவனுக்கு நின் முதுமைப் பருவத்தை அளித்து, அவனு டைய இளமைப் பருவத்தைப் பெற்று,சில காலம் இன்பமாக வாழ்ந்து, அதன் பின்னர் நீ பெற்ற இளமைப் பருவத்தை கொடுத் தவனுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டு, முதுமையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று சாப விமோசனம் தந்தார். அதன் மூலம் தேவயானையின் கோபத்தை அகற்றினார். தன்னிருப்பிடம் சேர்ந்தார்.
ராஜ்ய உரிமை கிடையாது
சுக்கிராச்சாரியார் இட்ட சாபம் உடனே பலிக்கலாயிற்று. நரை, திரை, மூப்பு எய்தி மிகுந்த தளர் நிலை அடைந்தான். தேவ யானையின் புதல்வர்களாகிய யது,துர்வசு என்பவர்களை சில காலம் தனக்கு இள மைப் பருவத்தைக் கொடுத்து, முதுமைப் பருவத்தை ஏற்குமாறு கூறினான். அவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். உடனே யயாதி மன்னன் கோபங்கொண்டு, “மூத்த மகனாகிய உனக்கோ உன் சந்ததியின ருக்கோ ராஜ்ய உரிமை கிடைக்காமல் போகட்டும்”என்று யதுவை சபித்தான். அதேபோல முதுமைப் பருவத்தை ஏற்க மறுத்த துர்வசுவுக்கு, “உன் சந்ததியினரு டன் நீ நரக லோகத்தை அடைந்து துன்பப் படுவாய்” என்று சபித்தான்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பின்னர் சர்மிஷ்டையின் புதல்வர்களா கிய த்ருஹ்யு, அனு, பூரு ஆகியவர்களை அழைத்துத் தன் முதுமைப் பருவத்தைச் சில காலம் ஏற்று, அதற்குப் பதிலாக இளமைப் பருவத்தைக் கொடுங்கள். சில காலம் கழித்து உங்கள் இளமைப் பருவத்தை உங்களுக்கே கொடுத்து விடு கிறேன் என்றான். முதல் இருவரும் அதனை ஏற்க மறுத்து விட்டனர். அதனால் கோபங்கொண்டு திருஹ்யுவிற்கு, “நான் விரும்பியதைக் கொடாமையால் நீ விரும்பிய எதையும் அனுபவிக்காமல் அவதிப்படுவாய்” என்று சாபம் தந்தான். அடுத்து வந்த அனுவிற்கு, ‘உன் சந்ததி யினர் இளமைப் பருவத்திலேயே இறந்து போவார்கள்’ என்று சாபம் தந்தான். அறிவில் மிக்கவனான இளைய மைந்தன் பூரு என்பவன் மட்டும் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற வாக்கிற்குக் கட்டுப்பட்டுத், தந்தையின் முதுமைப் பருவத்தை ஏற்று, இளமைப் பருவத்தைத் தந்தைக்குக் கொடுத்து அழியாப் புகழ் பெற்றான். இளமைப் பருவத்தைப் பெற்ற யயாதியும் சில காலம் இன்பமாக வாழ்ந்து, பின்னர் தான் பெற்ற இளமையை, வழங்கிய பூருவுக்கே கொடுத்து, அவனையே அரசனாக்கினான். பின்னர் இரண்டு மனைவியருடன் யயாதி காட்டிற் குச் சென்று கடுந்தவம் செய்தான்.
மூத்த மகன் யதுவிடம் பிறந்தவர்கள் யாதவர்கள் ஆனார்கள். துர்வசுவிடம் இருந்து தோன்றியவர்கள் யவனர் எனப்பட்டனர். த்ருஹ்யுவின் புதல்வர்கள் ‘போஜர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
அனுவின் புத்திரர்கள் ‘மிலேச்சர்கள்’ ஆனார்கள். பூருவினிடமிருந்து பௌரவ வம்சம் தொடங்கியது. இதனால் சந்திர வம்சம் ‘பௌரவ வம்சம்’ என வழங்கும் சிறப்பினைப் பெற்றது.
அனலிடை, புனலிடை, நின்று ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தவம் செய்து யயாதி சொர்க்கம் புகுந்தான். அங்கு, இந்திரனிடம், தேவர்களும் முனிவர்களும் செய்த தவத்தினை அவமதித்துத், தான் செய்த தவத்தினையே, உயர்வாகக் கூறித் தற்பெருமை பாராட்டிக் கொண்டான். அதனை அறிந்த இந்திரன், “மேலோர்கள் செய்த தவத்தினை நீ அவமதித்தமையால், நீ செய்த தவத்தின் பயன் இன்றோடு அழிந்து விட்டது. எனவே நீ பூமியில் போய் விழுக” என்று கோபத்துடன் கூறினான். யயாதி தன் குற்றத்தை உணர்ந்து தன்னை மன்னிக்கும்படி கூறினான். அதனால் இந்திரன் அவனைப் பூமிக்கு அனுப்பாமல் ஆகாயத்தில் சாதுக்கள் இடையே தங்கும்படி அனுப்பினான். அவனும் சாதுக்கள் ஆகிய தவத்தினர் முன்னிலையில் தன் கால்கள் பூமியில் தோயாதபடி நின்றான். பின்னர் அந்தச் சாதுக்களைப் பார்த்து “நீங்கள் யார்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் பூவுலகத்தைச் சிறந்த முறையில் ஆண்ட யயாதியின் பெண் மாதவியின் புத்திரர்கள். அஃதாவது யயாதியின் தெளகித்திரர்கள்” என்றார்கள். “அந்த யயாதி நான்தான்” என்று கூற, அவர்கள் வியப்படைந்து “நீங்கள் இங்கு வந்ததற்குரிய காரணம் யாது ” என்று கேட்டனர். அவனும் தான் அங்கு வந்த விதத்தை எடுத்துக் கூறினான்.
யயாதியின் தௌளகித்திரர்கள்
பின்னர், சாதுக்களாகிய தெளகித்திரர்கள் யயாதியைச் சிலவற்றிற்கு விளக்கம் தருமாறு கேட்டனர். அவனும் அதற்குரிய பதில்களைக் கூறினான். அவை:
1) அறம் : ஆத்மாவினுடைய, ஹிதத்தாலே ஊக்கத்துடன் இருப்பது. வித்தையினாலும், தவத்தினாலும், பிறப்பினாலும் நிர்ணயிக்கப்பட்டு பூஜ்ய நிலையை அடையலாம்.
2) பாவம் : நல்ல செயல்களுக்கு விரோதி; பணிவில்லாதவனிடமும், அயோக்கியனிடமும் காணப்படும். இந்தப் பாவத்தைச் சாதுக்கள் ஏற்பதில்லை. இந்தப் பாவ பயத்தைப் போக்குகின்றவை நான்காகும். அவை : 1) அக்னி ஹோத்திரம் 2) மௌனம் (இந்திரிய நிக்கிரகம், புலனடக்கம்) 3) வேதமோதுதல் 4) யாகம் செய்தல்.
3) சுவர்க்கம் : தவம், தானம், புலனடக் கம், மனத்தை ஒரு வழிப்படுத்தல், உள்ளும் புறமும் ஒத்திருத்தல், பிற உயிர்கள் மாட்டுக் கருணை, தீமை செய்வதற்கு நாணப்படுதல் முதலானவை சுவர்க்கலோகத்தின் பெரிய வாயில்கள்.
4) கும்பி (நரகம்) : புண்ணியம் போன பின் நரகம் சித்திக்கும். பாவம் செய்கின்ற வர்கள் ஏழு பிறப்பும் பல முறை எடுத்துத் துன்புறுவர்.
5) கருவுற்பத்தி : புஷ்பங்களையும், பழங்களையும், காய்களையும் பிறவற்றை யும் உண்பதனால் உண்டாகும் இரத்த மானது புருஷ வீரியமாக மாறுகிறது. அது புருஷனால் விடப்பட்டு பெண்ணின் சுரோணிதத்தைச் சேர்கிறது. அஃது அவ்விடத்தில் கர்ப்பமாகத் தரிக்கின்றது.
நான்கு ஆசிரம நிலைகள்
1) பிரம்மச்சரியம் : இதனை மேற்கொண்டவன் பிரம்மச்சாரி. இவன் பண்புள்ள வனாய், புலனடக்கமுடைய வனாய், போது மென்ற மனம் உடையவ னாய், ஊக்க முள்ளவனாய், மேலும் மேலும் கற்பதை விடாதவனாய் இருத்தல் வேண்டும்.
2) கிரஹஸ்தம் (இல்லறம் ) : இதனை மேற்கொண்டவன் இல்லறத்தான் (அ) கிரஹஸ்தன் என அழைக்கப்படுவான். இவன் அறவழியில் பொருளை ஈட்ட வேண்டும். ஒல்லும் வகையால் இடை விடாது தானம் செய்ய வேண்டும். வருகின்ற விருந்தினர்களை இன்முகம் காட்டி, இன்சொல் கூறி உபசரிக்கக்கடவன்; பிறர் பொருள்மேல் ஆசை வைக்காதவன்.
3) வானப்பிரஸ்தம் : இதனை மேற் கொண்டவன் வனத்தில் வாழும் முனிவன் ஆவான். பாவ காரியங்களைச் செய்யாத வன்; பிறரைத் துன்புறுத்தாதவன்; உணவை அடக்கியவான். இத்தகையவன் மேலான சித்தியை அடைவான்.
4) சந்நியாசம் (துறவு) : இதனை மேற் கொண்டவன் சந்நியாசி (அ) துறவி என்று அழைக்கப்படுவான். நற்குணங்கள் நிரம்பி யவன்; எப்போதும் புலனடக்கம் மேற் கொள்பவன். எல்லாவற்றிலும் பற்று இல்லாதிருப்பவன் (பற்றற்றான்). தனக் கென்று ஒன்றுமில்லாதவன். ஓரிடத்திலும் தங்காதவன்.
இவற்றையெல்லாம் கேட்ட யயாதியின் தெளகித்திரர்கள் (ஒருவனுடைய மகள் வயிற்றில் பிறப்பவன் தெளகித்திரன் என்றும், அவனுடைய மகன் வயிற்றில் பிறப்பவன் பௌத்திரன் என்றும் அழைக்கப்படுவர்.) மகிழ்ச்சி அடைந் தார்கள். பின்னர் யயாதியும் அவன் தெளகித்திரர்களும் சுவர்க்கம் சேர்ந்தனர்.
மகாபாரதம் – 5 சந்திர வம்சம் – யயாதிச் சருக்கம்… இந்திராணி மீது காதல்