குருக்ஷேத்திரத்தில் நடந்த மாபெரும் பாரதப் போரில் கௌரவர்கள் நூற்றுவரும் மாண்டனர். அவர்கள் வமிசமும் அழிந்தது. அவர்கள் உற்றார், உறவினர்களும் அழிந்தனர். அதேபோல் பாண்டவர் தரப்பில் பாண்டவர்கள் ஐவர் மட்டும் எஞ்சி நின்றனர். பாண்டவர்களுக்குத் திரௌபதியினிடத்துப் பிறந்த இளம் பஞ்ச பாண்டவர்களை அசுவத்தாமன் தன் ஆத்திர புத்தியால் நடு இரவில் பாண்டவர்கள் என்று நினைத்து கொன்றான். அர்ச்சுன னுக்குச் சுபத்திரையிடத்துப் பிறந்த இரவானோ, களப்பலிக்கு ஆளாகி, எட்டாம் நாளில் போரிட்டு வீரமரணம் அடைந்தான். பீமனுக்கு இடும்பி யினிடத்துப் பிறந்த கடோத்கஜனும் பாரதப் போரில் வீரப்போரிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான். அர்ச்சுனனுக்குச் சுபத்திரை யிடத்துப் பிறந்தவனாகிய அபிமன்யு பதின்மூன்றாம் நாள் போரில் சயத்திரதன் செய்த சூழ்ச்சியினால் யுத்த நெறிகளுக்கு மாறாகக் கர்ணன் முதலானோர் சுற்றி வளைத்துக்கொள்ள, தன்னந்தனியனாக இருந்து அவர்களுடன் வீரப்போரிட்டு இறுதியில் வீரசுவர்க்கம் புகுந்தான். ஆக, பாண்டவர்களின் வாரிசுகள் அனைவருமே யுத்தக்களத்தில் மாண்டு போனார்கள். அந்நிலையில் அபிமன்யுவின் மனைவியும், விராடனின் மகளுமான உத்தரையின் வயிற்றில் தங்கிய கர்ப்பம் ஒன்றுதான் பாண்டவர்களின் வாரிசு என விளங்கியது. அதற்கும் அசுவத்தாமனால் ஆபத்து வந்தது. எவ்வாறு எனில், சொல்வோம்:
பரிக்ஷித்து
திரௌபதியின் குழந்தைகளான இளம் பஞ்சபாண்டவர்களை அசுவத்தாமன் கொன்றுவிட்டதை அறிந்து பாண்டவர் களும், கண்ணபிரானும் அவனை அழிக்க, தேடிக் கொண்டு போனார்கள். வியாசர் பக்கத்தில் மறைவாக இருந்த அசுவத் தாமன், ஒரு துரும்பை எடுத்து, மந்திரம் சொல்லி, ‘இது பாண்டவர் வம்சத்தை முற்றிலும் அழிப்பதாக’ என்று கூறி ஏவினான். அது நேராக எஞ்சியிருந்த உத்தரையின் கர்ப்பத்திலிருந்த சிசுவைத் தாக்கியது.
பாண்டவர் வம்சம் அத்துடன் அடை யாளமில்லாமல் அழிந்திருக்க வேண்டும். ஆனால், எம்பெருமான் கண்ணபிரா னுடைய அருளால், உத்தரையின் வயிற்ற கத்து உருவான கர்ப்பத்திலிருந்த பிண்டம் காக்கப்பட்டது. அதனால் உத்தரையிடத்து ஆண் குழந்தை ஒன்று அழகாகப் பிறந்தது. அப்பெரு மானுடைய ஸ்பரிசம் பட்டதால் அக் குழந்தைக்குப் ‘பரீக்ஷித்து’ என்ற பெயர் வந்தது. கௌரவர்கள் அனைவரும் ‘பரி க்ஷயம்’ எனப்பட்ட நாசத்தையடைந்த பிறகு உத்தரையினிடத்தில் பிறந்ததனால் அக்குழந்தைக்குப் ‘பரீக்ஷித்து’ என்ற பெயர் வந்தது எனவும் கூறுவர்.
அவன்தான் கல்வி கேள்விகளில், சிறந்து விளங்கி, தர்மபுத்திரருக்குப் பின்னால் அஸ்தினாபுரத்து அரசனாகப் பாண்டவர் குலம் விளங்க ஆட்சிபுரிந்தான். அவன் பத்திராவதி என்பாளை மணந்தான். பரீக்ஷித்துக்கு அவளிடம் தோன்றியவன் தான் ஜனமே ஜயன் என்பவன். இவன் காசி தேசத்து மன்னனாகிய ஸவர்ணவர்மா என்பவனின் மகளாகிய வபுஷ்டமை என்பவளை மணந்துகொண்டான்.
சத்திர யாகம்
இவன் நாடு நலம்பெறும் பொருட்டுச் சத்திரயாகம் செய்யலானான். சத்திரயாகம் என்பது பன்னிரண்டு ஆண்டுகள் செய்யக் கூடியதாகும். அந்தக் காலத்தில் அந்தணர் முதலான அனைவருக்கும் தானம் செய்தல் வேண்டும். விலங்குகள், பறவைகள் போன்ற அஃறிணை உயிர்களைப் போற்ற வேண்டும். இந்த யாகம் அநேகக் கர்த்தாக்களினால் செய்யப்படுவதாகும்.
இத்தகைய சிறப்புடைய யாகத்தை ஜனமேஜயன் முன்னின்று செய்து கொண்டிருக்கும்போது, தேவலோகத்தைச் சார்ந்த நாய்முகத்தையுடைய சரமை என்பவளின் மகனான சாரமேயன் என்பவன் அந்த ஜனமேஜயன் நடத்தும் யாகசாலைக்குள் புகுந்தான். புகுந்த சாரமேயனும் நாய் முகத்தை உடைய வனே. நாய் ஒன்று யாகசாலையினுள் புகுந்ததை ஜனமேஜயன் தம்பியரான சுருதசேனன், உக்கிரசேனன், பீமசேனன் என்ற மூவர் பார்த்துவிட்டனர். உடனே கோபங்கொண்டு தடி கொண்டு அதனை அடிக்கலாயினர்.
அடி தாங்கமாட்டாத அந்த நாய் குரைத்துக் கொண்டு தன் தாய் சரமையிடம் ஓடிச் சென்று, “தாயே! நான் சிறிதும் பிழை செய்யவில்லை. ஓமத்திரவியங்களைப் பார்க்கவும் இல்லை. தீண்டவும் இல்லை. முகந்து பார்க்கவும் இல்லை. ஆனால், யாகசாலைக்குள் புகுந்ததனைக் காரண மாகக் கொண்டு என்னை கொண்டு அடித்து விட்டார்கள்” என்று கூறி முறையிட்டது.
அதைக் கேட்ட சரமை என்னும் தாய், மன்னன் ஜனமேஜயனிடம் சென்று, ”மன்னா! எந்தத் தவறும் செய்யாத என் பிள்ளையை உன் தம்பியரைக் கொண்டு அடிக்கச் செய்தாய். உனக்குத் தம்பியர் இருப்பதுபோல எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. எனவே எனக்கு ஆதரவாகச் செயல்படுபவர் யாருமில்லை. பின்வரும் விளைவினை அறியாது என் பிள்ளையை உன் தம்பியர் அடித்ததனால் உனக்கு எதிர்பாராத ஆபத்து வரப் போகின்றது’ என்று சாபமிட்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. ஜனமே ஜயன் சத்திரயாகம் செய்து முடித்த பின்னர், குருக்ஷேத்திரத்தைவிட்டு, தன் தலைநகர மாகிய அஸ்தினாபுரம் புகுந்து, பெற்ற சாபத்தின் காரணமாக, சிறப்புடைய சோமசிரவுசு என்னும் முனிவரைக் கொண்டு சாந்தி வேள்வி செய்து, ஏற்பட்ட பாவத்தைப் போக்கி, சரமை கொடுத்த சாபத்தை எதிர்நோக்கியிருந்தான்.
உதங்கரின் தட்சணை
உதங்கர் என்னும் அறிவுசால் சீடர் பைதர் என்னும் மாமுனிவரிடத்து யாதொரு குறைவுமில்லாதபடி எல்லாக் கலைகளையும் ஐயந்திரிபறக் கற்றார். குருகுலவாசத்தையும்’ முடித்தார். அக்காலத்தில் எல்லாக் கலைகளையும் கற்றுக் குருகுலவாசம் முடித்தபின், சீடன், தன் ஆசானுக்கு, அவர் விரும்புகின்ற பொருளைத் தட்க்ஷிணையாகக் கொடுப்ப துண்டு அல்லது அவர் விரும்புகின்ற செயலை நிறைவேற்றிக் கொடுப்பதுண்டு. சீடன் அவ்வாறு செய்யக் கடமைப்பட்ட வன். அம்முறைப்படி உதங்கர் தன் ஆசானிடம், “ஐயா! நான் கொடுக்க வேண்டிய தக்ஷிணை யாது? சொல் லுங்கள் ” எனப் பணிவுடன் கேட்டார். அதனைக் கேட்ட பைதர் என்னும் அம்மாமுனிவர், குருதட்சணை கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அவன் நேர்மையைக் கண்டு மகிழ்ந்து, “தமது மனைவியார் விரும்பிக் கேட்பதைக் கொடுப்பாயாக” என்றார். அவரும் அவ்வாறே அவர் மனைவிபால் சென்று, வணங்கி, “தாயே, குருதட்சணையாக நான் கொடுக்க வேண்டியது யாது?” என்று கேட்டார்.
அதனைக் கேட்ட பைதரின் மனைவி, ”உதங்கரே! எனக்குப் பவுடிய ராஜாவின் மனைவி அணிந்துள்ள சிறந்து விளங்கும் குண்டலங்கள் வேண்டும். இன்றைய நான்காவது நாள், அந்தக் குண்டலங்களைக் காதில் அணிந்துகொண்டு, விருந்தினராக வரப்போகும் அந்தணர்களுக்குப், பெருமையுடன் விருந்திட வேண்டும். அதற்குள்ளாக அந்தக் குண்டலங்களைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுப்பாயாக ” என்று கூறினாள்.
உதங்கரும் அவ்வாறே பெற்று வருவ தாகச் சம்மதித்து, மன்னன் மனைவியை அணுகி, தான் வந்ததற்குரிய காரணத்தைக் கூறினார். நற்பண்புடையவள் அரசியாகை யால், அவளும் அவற்றைக் கொடுக்கச் சம்மதித்து, ”உதங்கரே! தக்ஷகன் என்னும் நாகராஜன், இக்குண்டலங்களைக் கவரச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். எனவே இந்தக் குண்டலங்களை எக்காரணத்தைக் கொண்டும் கைசோரவிடாமல் ஜாக்கிரதை யாய் எடுத்துக் கொண்டு உன் ஆசான் மனைவியிடம் கொடுக்கவும்” என்று கூறி, எச்சரித்து, தன் குண்டலங்களைக் கழற்றி உதங்கரிடம் கொடுத்தாள்.
தக்ஷகன்
உதங்கர் பவுடிய மன்னன் வேண்டு கோட்கிணங்கி, அவன் அரண்மனையில் சிராத்த உணவு உண்டு, அங்கேயே சிறிது நேரம் தங்கினார். பின் அந்திப் பொழுதில் அந்திக்கடன் செய்வான் வேண்டி, மடியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அக்குண்ட லங்களை அரசியின் எச்சரிக்கையை மீறி ஒரு பக்கம் வைத்துச் சென்றார்.
அவர் வைத்தவுடனே, அவர் பின் தொடர்ந்து, முனிவர் வேடத்தில் வந்த தக்ஷகன் அக்குண்டலங்களைக் கவர்ந்து கொண்டு பாதலம் நோக்கிப் பாய்ந்து செல்ல, அதனைக் கண்ட உதங்கர் அந்தத் தக்ஷகன் பின் தொடர்ந்து பாதலம் சென்றார். அதற்குள் தக்ஷகன் மறைந்து விட்டான். என் செய்வார் பாவம்! குருவின் விருப்பத்தை நிறைவேற்ற முடிய வில்லையே என்று வருந்தினார். அங்கு வாழும் நாகர்களைப் போற்றித் துதித்துக் குண்டலங்களைப் பெற்றுத் தரும்படி கெஞ்சியும், ஒரு சிறிதும் பயனில்லாமல் போய்விட்டது. ஆசானின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே என்று மனம் வருந்திய உதங்கர் அது பொருட்டுத் தன் உயிர் விடவும் துணிந்தார்.
மகிழ்ச்சியடைந்த உதங்கர்
அப்பொழுது ஒரு குதிரையில் ஒரு தேவமகன் ஏறிவந்து அவர் எதிரில் நின்றான். அவனிடம் உதங்கர் தான் குண்டலங்களைத் தன் அஜாக்கிரதையால் இழந்த விதத்தை எடுத்துக் கூறி வருந்தி னார். உதங்கருடைய சோகத்திற்குரிய காரணத்தை அறிந்த அந்தத் தேவமகன் மனங்கசிந்து, அன்போடு தான் ஏறி வந்த குதிரையின் காதில் மந்திரம் ஒன்று சொல்லி ஊதச் சொன்னான். உதங்கரும் அவ்வாறே செய்தார். உடனே பேரிடி இடித்தாற்போன்ற பேரோசை, கேட்கின்ற வர்களின் காதுகள் தவிடுபொடியாகும்படி எழுந்தது. இடியோசைக்கு நாகங்கள் அஞ்சுமாதலின் எழுந்த பேரோசையைக் கேட்டு நாகர்கள் அஞ்சினார்கள். நடுங்கினார்கள். தனக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று அஞ்சிய தக்ஷகன் தான் கவர்ந்து சென்ற குண்டலங்களை உதங்க ரிடம் திருப்பிக் கொடுத்தான். பெற்றுக் கொண்ட உதங்கர் மிக்க மகிழ்ச்சியடைந் தார். கிடைத்ததற்குக் காரணமாக இருந்த தேவமகனுக்கு நன்றி செலுத்தினார். பின்னர் குதிரை மேலேறி மண்ணுலகம் வந்தார்.தன் ஆசான் மனைவியிடம் அவள் விரும்பிய குண்டலங்களைக் கொடுத்தார். பின்னர் தன் ஆசானை வணங்கினார்.
அப்பொழுது ஆசான், “தாமதமாக வந்ததற்குக் காரணம் யாது?” எனக் கேட்க, உதங்கர், “ஐயா! என்னுடைய அஜாக் கிரதையினால் அரசன் மனைவி கொடுத்த குண்டலங்களைத் தக்ஷகன் கவர்ந்து கொண்டு பாதலம் சென்றுவிட்டான். நானும் அவனைப் பின்தொடர்ந்தேன். குதிரை மேலேறி வந்த ஒரு தேவமகன் உதவியினால், பாதலத்திலிருந்த தக்ஷகன் கவர்ந்து சென்ற குண்டலங்களைத் திருப்பிக் கொடுத்தான். அவற்றைப் பெற்றுக்கொண்டு வரும்போது மற்றொரு தேவமகன் ரிஷபத்தின் மேல் ஏறிவந்து, ”இந்த ரிஷபத்தின் கோமயத்தை உன் ஆசான் பருகியுள்ளார். நீயும் பருகினால் உனக்கு நல்லது” என்று கூற அதனைப் பருகினேன். பின்னர் இங்கு வந்தேன். அதனால் தாமதம் நேர்ந்துவிட்டது” என்று நடந்தன அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். மேலும் உதங்கர், “அந்தப் பாதலத்தில் இரண்டு பெண்கள் கறுப்பும் வெண்மையும் நிறம் கொண்ட நூலிழை களைத் தமது விரல்களில் சுற்றி, மாற்றி மாற்றி ஆடைகளை செய்து கொண்டிருந்த னர். அதோடு அங்கு பன்னிரண்டு ஆரக்கால்களைக் கொண்ட சக்கரத்தை ஆறு குமாரர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள்” என்று தான் கண்ட காட்சிகளைக் கூறி, அவற்றிற்குரிய விளக்கத்தையும் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
காலத் தேவதைகள்
அதற்கு ஆசிரியராகிய பைதர், “உதங்கரே! நீ வரும் போது ரிஷபத்தில் ஏறி வந்தவன் இந்திரன். அந்த ரிஷபம் ஐராவதம் என்னும் யானை. அந்த ரிஷபத் தின் கோமயத்தை மறுப்பு சொல்லாமல் பருகினாய். அது கோமயம் அன்று; தேவா மிர்தம். அது உனக்கு நன்மையே பயக்கும். பாதலத்தில் கறுப்பும் வெண்மையும் நிறம் கொண்ட நூலிழைகளைத் தமது விரல் களில் சுற்றி மாற்றி மாற்றி ஆடை செய்து கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி தாதா என்பவள். பொருள்களை அவள் உருவாக்குவாள். மற்றொருத்தி விதாதா. உருவாக்கிய பொருள்களுக்கு வேண்டிய மாறுதல்களைச் செய்பவள். இருவரும் காலத் தேவதைகள். கறுப்பும் வெண்மையு மாகிய நூல்கள் இரவு பகல் ஆகும். ஆரக் கால்கள் பன்னிரண்டும் சித்திரை முதலாக வுள்ள பன்னிரண்டு மாதங்கள் ஆகும். ஆரக்கால்கள் பன்னிரண்டு சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆறு குமாரர்கள், கார் காலம், குளிர் காலம், முன் பனிக் காலம், பின் பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்னும் ஆறு பருவங்களைக் குறிக்கின் றன. சக்கரம் என்பது ஓர் ஆண்டாகும். இந்தச் சக்கரத்தைச் சுற்றிவரும்படி அருள் செய்பவன் வருணன் என்று சொல்லப் படும் மேக தேவன் ஆவான். அந்தக் குதிரை என்பது அக்னி. ரிஷபத்தின் கோம யமாகிய தேவாமிர்தத்தைப் பருகியதால் தான் நாகலோகத்தில் அழியாமல் இருந் தாய்” என்று கூறினார். அதற்கு மேலும் அவர், “நீ ஆசான் ஆணையைக் கண்ணும் கருத்துமாக இருந்து நிறைவேற்ற முயன்ற தனால்தான் இந்திரன் முதலானோர் அந்தத் தக்ஷகனிடமிருந்து உன்னைக் காத்தனர். செயற்கரிய செயலைச் செய்தாய் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இனி நீ காட்டில் தவமேற்கொள்ளலாம்” என்று கூறி உதங்கருக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
சர்ப்ப யாகம்
உதங்கர் நெடு நாள் தவம் செய்தார். ஆனாலும் அவர் மனதில் தக்ஷகன் செய்த தீங்கு மறையவே இல்லை. அதனால் ஒரு நாள் ஜனமே ஜயன் அவைக்கு வந்து அம் மன்னனிடம் தனக்குத் தக்ஷகன் செய்த தீங்கினை எடுத்துக் கூறி, அத்தக்ஷகனின் குலமே முற்றிலும் மடியும்படி சர்ப்பயாகம் செய்யும்படி கூறினார். அதற்கு ஜனமே ஜயன், “முனிசிரேஷ்டரே! உங்களுடைய கோபம் எனக்கு நன்றாகப் புரிகின்றது. என்றாலும் ஒருவன் செய்த தவறுக்காக அவன் குலத்தையே அழித்திடுதல் நியாயமா?” என்று கேட்டான்.
அதற்கு உதங்கர் பின்வரும் கதையைக் கூறலானார். பிருகு வம்சத்தில் உருரு என்ற முனிவர் பிறந்து நலமுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் பிரமத்வரை என்பதாகும். பிரமத்வரை என்பதற்குப் பெண்களில் சிறந்தவள் என்பது பொருளாகும். தன்னுடைய பெயரின் பொருளுக்கேற்ப நற்குணவதி யாய் அந்த நங்கை வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவளைப் பாம்பு ஒன்று கடித்தது. அதனால் அவள் இறந்து போனாள். மனைவியை இழந்த உருரு முனிவர் பெருந்துக்கத்தில் மூழ்கினார். அப்பொழுது அசரீரி ஒன்று, “உன்னுடைய ஆயுளில் சரி பாதியை உன் அன்பு மனைவிக்குக் கொடுத் தால் அவள் உயிர் பெற்று எழுவாள்” என்றது. அசரீரி கூறியபடியே உருரு முனிவர் தன் ஆயுளில் பாதியை மனை விக்குக் கொடுக்க, அவள் உயிர் பெற்று எழுந்தாள். முனிவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஒருவன் செய்த நன்மை, தீமைகள் அந்த குலத்தையே பாதிக்கும்
என்றாலும், தன்னுடைய ஆயுளைப் பாதியாகக் குறைத்ததற்குக் காரணமான நாகங்கள் மீது அளவில்லாத கோபம் ஏற்பட்டது. அதனால் அவர் கண்ணில் பட்ட பாம்புகளையெல்லாம் அடித்துக் கொன்று கொண்டு வந்தார். ஒரு நாள் தன் கண்ணில் பட்ட ஒரு பாம்பை அடித்துக் கொல்ல முயல, அப்பாம்பு, “ஐயனே! என்னை நீ அடித்துக் கொல்லக் காரணம் யாது?” என்று கேட்டது. அதற்கு உருரு முனிவர், “ஒரு பாம்பு என் மனைவியைக் கடித்துக் கொன்று விட்டது. அதனால் எல்லாப் பாம்புகளையும் கொன்று வருகிறேன்” என்றார். உடனே அப்பாம்பு, “ஒருவர் செய்த பிழைக்காக அந்தக் குலத்தையே அழிக்கலாமா? இது நியாயமா?” என்று மன்னனே! நீ கேட்ட மாதிரியாகவே அப்பாம்பு கேட்டது. அதற்கு அந்த உருரு முனிவர், “ஒருவன் செய்த தீமை,நன்மை கள் அந்தக் குலத்தையே பாதிக்கும். ஆகையால் உன்னைக் கொல்லத்தான் போகிறேன் ” என்று தன் கையிலுள்ள தடியை எடுத்து அதனைக் கொல்ல ஓங்க, என்ன ஆச்சரியம்! அந்தப் பாம்பு ஒரு முனிவராய் எழுந்து நின்றது.
அந்த முனிவர் உருரு முனிவரைப் பார்த்து, ”ஐயா! என் பெயர் சகத்ரபாதன். விளையாட்டாக என் நண்பராகிய ஒரு முனிவர் மேல் ஒரு துரும்பை எடுத்து பாம்பு என்று அச்சுறுத்தி வீசினேன். அவரோ, “என்னைப் பாம்பு வடிவம் எடுத்துப் புரளுவாய்” என்று சபித்தார். அது கேட்டு நான் அஞ்சி என் பிழை பொறுக்குமாறு வேண்டினேன். அதற்கு அவர், “உருரு என்ற முனிவர் இங்கு வருவார். அவர் பார்வைபட்டால் உன் சாபம் நீங்கும் ” என்று அருள் செய்தார். ”உம்மால் இன்றைய தினம் பாம்புருவம் நீங்கப் பெற்றேன்” என்று கூறிய அம்முனி வர், மக்களைத் தண்டித்தல், மக்களைக் காத்தல், அவர்களிடம் கடுமையாயிருத் தல் ” போன்றவை அரசர்களுக்குரியன. “கொல்லாமை, பொறுமை, வேதங்களை மறவாமை என்பன அந்தணர்க்குரியன. அரசர்களுக்குரிய தண்டித்தல் போன்றவை அந்தணராகிய உமக்கு ஏலாது. எனவே நீங்கள் இனி இந்தப் பாம்புகளைக் கொல்லுதலை விட்டொழிக” என்று அறிவுரை கூறினார். மேலும் “ஏற்கனவே சர்ப்பங்களுக்கெல்லாம் தாயாகிய கத்ரு என்பவள், தன் புதல்வர்களாகிய சர்ப்பங் களை ஜனமே ஜயன் செய்யும் யாகத்தில் விழுந்து இறக்கும்படி சாபமிட்டுள்ளாள். அந்தச் சாபம் சர்ப்பங்களுக்கு எதிராக இருக்க, நீ ஏன் பாம்புகளை அடித்துக் கொன்று வீண் பழியைத் தேடிக் கொள்கின் றாய். இனி இந்தச் செயலைச் செய்யாதே” என்று கூறினார். அதைக் கேட்டுச் சர்ப்பங் களைக் கொல்வதாகப் பூண்டிருந்த நியமத்தை விட்டு விட்டு, தன் மனைவி யாகிய பிரமத்வரையிடத்துச் சென்று, அவளோடு இனிது வாழ்ந்திருந்தார்.
கத்ரு
இவ்வாறு கூறிய உதங்கர், “ஜனமே ஜய மகாராஜனே! உருரு முனிவரின் வரலாற் றால் ஒருவன் பூமியில் செய்த பாவங்கள் அவன் சார்ந்த குலத்தவரையும் பாதிக்கும் என்பதை அறிக” என்றார். அதன்பின் ஜனமே ஜயன், “முனிவர் பெருமானே! சர்ப்பங்களின் தாய் கத்ரு என்பவள், தன் பிள்ளைகளாகிய சர்ப்பங்களைச் சபித்த தாகக் கூறினீர்களே. அதற்குரிய காரணம் யாது?” என்று கேட்க, உதங்க முனிவர் அந்த வரலாற்றைக் கூறலானார்.
அருணோதயம்
காசிபர் என்னும் முனிவருக்கு வினதை, கத்ரு என்னும் இரு மனைவியர் இருந்த னர். மூத்தவள் வினதை. இளையவள் கத்ரு. மூத்தவள் வினதை இரண்டும், இளையவள் கத்ரு நூற்றைந்துமாகக் கருப்ப முட்டை களாகத் தரித்து அவற்றை ஜாக்கிரதையாகத் தாங்கி வந்தனர். குறித்த காலத்தில் இளையவளாகிய கத்ரு தரித்த முட்டை யுடைந்தது. ஆதிசேடன், வாசுகி முதலாக வுள்ள நூற்று நான்கு பேருடன் ஒரு பெண்ணும் அம்முட்டையிலிருந்து வெளிப் பட்டனர். இளைய அப்பெண்ணின் பெயர் ஜாத்தார் என்பதாகும். இதனைக் கண்டு வினதை மனம் சகியாதவளாய் கருப்ப முட்டையைச் சிதைக்க இருவரில் ஒருவன் மட்டும் அம்முட்டையிலிருந்து தோன்றி னான். அவன் பெயர் அருணன் என்பதாம். பிறந்தவுடன் அருணன் தன் தாயை நோக்கி, “அம்மா! பூரணமாகச் சரீரம் உருவாவதற்கு முன்னமே அவசரப்பட்டு முட்டையைச் சிதைத்து என்னை முடமாக்கி விட்டாயே” என்று வருந்திக் கூறிய அவன், “நீ அவசரப் பட்டு என்னை முடமாக்கிப் பெற்றதால் இளையாட்கு நீ ஏவல் புரிவாய்” என்று சபித்தான். அவள் தன் தாய் என்ற நினைவு வரவே கோபத்தை விட்டு மனமிரங்கி, “இனிப் பெறப் போகும் புதல்வன் உன்னை விடுவிப்பான்” என்று சாப விமோசனம் தந்து, சூரியனின் தேர் செலுத் தும் சாரதியாகச் சென்றான். அதனால்தான் சூரியன் உதிப்பதற்கு முன் உள்ள சிறிது நேர வேளையை அவன் பெயரால் ‘அருணோதயம்’ என்று அழைக்கின்றோம்.
அதன்பின் வினதை இரண்டாவது முட்டையை அதுவே உடையும் வரை ஐநூறு வருடங்கள் நன்கு பாதுகாத்து வரலானாள். ஒருநாள் தமக்கையும் தங்கை யும் ஒரு கடலிடத்து வெண்மையான உச்சைச்சிரவம் என்ற தேவலோகத்துக் குதிரையைக் கண்டனர். அக்குதிரை, ஏனைய குதிரைகளுக்கு அரசனாக இருப் பது. திருப்பாற் கடலைக் கடைந்த காலத்து அதனின்று வெளிப்பட்டுத் தேவேந்திரனி டம் சென்று அவனுக்கு உரியதாக ஆனது.
பந்தயம்
இதனைக் கண்ட வினதை, “இந்தக் குதிரை என் கண்ணைப் பறிக்கும் அளவு வெண்மையாக இருக்கின்றதே ” என்று வியந்து கூறினாள். அதனைக் கேட்டு கத்ரு, தமக்கைக்கு எதிராகச் சொல்ல வேண்டு மென்ற கருத்தில், “அக்குதிரை முழு வெண்மை இல்லை. வாலில் மட்டும் கறுப்பு நிறம் தென்படுகிறது” என்று குதர்க்கமாகப் பேசினாள். “அவ்வாறு இல்லையே” என்றாள் முன்னவள். “இல்லை வால் மட்டும் கறுப்பாக இருக்கின்றது” என்று இளையவள் வீராப் புடன் சாதித்தாள். பின்னர் இருவரும் தங்கள் கருத்தை நிலை நாட்ட ஒரு பந்தயம் வைத்தனர்.
“மறுநாள் வந்து அக் குதிரையைப் பார்க்க வேண்டும். வினதை கூறியபடி அக்குதிரை முழு வெண்மையாக இருந்தால் வினதைக்குக் கத்ரு பணிவிடை செய்ய வேண்டும். கத்ரு கூறியபடி வாலில் கறுப்பு இருந்தால் கத்ருவுக்கு வினதை பணிவிடை செய்ய வேண்டும்” என்பதே அப்பந்தயம் ஆகும். பின்னர், ‘மறுநாள் பார்த்துக் கொள்வோம்’ என்று சொல்லிச் சென்றனர்.
பந்தயத்தில் தான் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி பிடித்த கத்ரு, தன்னுடைய நூற்று நான்கு புதல்வர்களை அழைத்து, ”உச்சைச் சிரவத்தின் வாலினைக் கறுப்பாகச் செய்ய வேண்டும்” என்று கூறினாள். ஆனால் புத்திரர்கள் யாரும் பழியான செயலைச் செய்ய மாட்டோம்” என்று சொல்லிவிட்டனர். அதனால் கத்ரு சினங்கொண்டு பிள்ளைகள் என்றும் பாராமல், “ஜனமே ஜயன் செய்யப் போகும் சர்ப்ப யாகத்தில் நீங்கள் விழுந்து மரிப்பீர்களாக” என்று சாபம் கொடுத்தாள். ஆனால் தாயின் சாபத்திற்கு அஞ்சிய கார்க் கோடகன் என்னும் பாம்பு மட்டும் உச்சைச் சிரவத்தின் வாலைக் கறுப்பாக்குவதாக ஒப்புக் கொண்டது. மறுநாள் இருவரும் உச்சைச் சிரவத்தினைப் பார்க்கச் சென்றார் கள். தன் தாயிடம் ஒப்புக் கொண்டபடி கார்க்கோடகன் உச்சைச்சிரவத்தின் வாலைச் சுற்றிக் கொண்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது வால் கறுப்பு நிறமாய் இருப்பது போலத் தெரிந்தது. தமக்கையும் தங்கையும் கண்டார்கள். தங்கை கத்ருவிற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தான் தோற்றுவிட்டதாகக் கத்ருவிடம் வினதை ஒப்புக் கொண்டாள். அதனால் பந்தயப்படி வினதை, தன் தங்கை கத்ருவிற்கு அடிமை ஆனாள். தங்கை இட்ட பணிகளை வினதை செய்து வந்தாள்.
வினதை கருவாகத் தரித்திருந்த முட்டை பரிபூரணமாக வளர்வதற்கு ஐநூறு வருடங் கள் ஆயின. நன்றாக வளர்ந்த அம்முட்டை யிலிருந்து ‘பெரிய திருவடி’ என்று போற்றப்படுகின்ற கருடன் தோன்றினார். கருடனும் தன் தாயோடு கூடி கத்ருவுக்கு ஏவல் புரிந்து வந்தார். தங்கைக்குத் தமக்கையாகிய தன் தாய் பணிவிடை செய்வது கருடனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் கருடன் தன் தாயிடம் “சிறிய தாயாரிடம் அடிமையானதற்குரிய காரணத்தைக் கூறுக” என்று கேட்டார். தாய் வினதை நடந்தவை அனைத்தையும் கூறினாள்.
தேவாமிர்தம்
தாய் சொன்னதைக் கேட்ட கருடன், வலிமை மிக்க நாகர்களைப் பார்த்து, ‘நான் என்ன செய்தால் எங்கள் இருவரையும் இந்த அடிமைத் தனத்திலிருந்து நீக்கு வீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த நாகர்கள்,”தேவலோகத்திலுள்ள தேவாமிர் தத்தைக் கொண்டு வந்து கொடுப்பாயாயின் உங்கள் இருவரின் அடிமைத்தனத்தை நீக்குவோம்” என்றனர். உடனே கருடன் தன் தாயிடம் விடை பெற்றுக் கந்தமாதனம் சென்று அங்கு தன் தந்தையாராகிய காசி பரைக் கண்டார். நடந்தவை அனைத் தையும் தன் தந்தையிடம் கூறிய கருடன், தேவாமிர்தத்தைப் பெற வந்திருப்பதாகச் சொன்னார். தனயனின் முயற்சியைப் பாராட்டிய காசிபர் தேவாமிர்தம் கொண்டு வரும்படியான வழியையும் கூறினார். தந்தையின் ஆசியைப் பெற்ற கருடன் மனமகிழ்ந்து தேவாமிர்தத்தைக் கொண்டு வரத் தேவலோகம் செல்லலானான்.
தேவர்கள் புறங்காட்டி ஓட்டம்
தேவ குருவாகிய பிரகஸ்பதி, கருடன் அமிர்தம் கொண்டு செல்ல வந்திருப்பதை அறிந்து, இந்திரனிடம் கருடனின் வலிமையைக் கூறி, “தேவாமிர்தத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வாயாக ” என்றான். பிரகஸ்பதியின் சொல்படியே இந்திரன் அமிர்த கலசத்தைத் தேவர்களைக் கொண்டு காக்கலானான். கருடன் அதற் கெல்லாம் அஞ்சாது, அமிர்த கலசம் இருக்குமிடத்தை நெருங்கினார். காவல் இருந்த தேவர்கள் கருடனிடம் கடும் போரிட்டனர். தங்கள் ஆயுதங்களை யெல்லாம் அவர் மேல் ஏவினர். கருடனோ அதற்கெல்லாம் கலங்காது, தன் அலகாலும் இரு சிறகுகளாலும் அவர்கள் விட்ட ஆயுதங்களையெல்லாம் தவிடு பொடியாக்கினார். பிறகு, கருடன் தன் போர்த் திறமையால் தேவர்களைப் புறங் காட்டி ஓடச் செய்தார்.
அமுத கலசத்தினைச் சுற்றி நாற் புறமும் வைத்திருந்த அக்னியை, எண்ணாயிரத்து நூறு வாய்களை உருவாக்கி, அந்த வாய் களின் மூலம் நதிகளின் நீரினைக் குடித்து வந்து அவற்றை அந்த அக்னியின் மேல் சொரிந்து அந்த அக்கினியை அவியச் செய்தார். அமுத கலசத்தின் மேலே நிலை யில்லாமல் சுற்றிக் கொண்டேயிருக்கின்ற இயந்திரமாகிய இரும்புச் சக்கரத்தின் ஆரக் கால்களின் சந்தில் உடலைச் சுருக்கிக் கொண்டு நுழைந்து, பின் இரண்டு ஆரக் கால்களைக் கிழித்து, அவற்றில் இரண்டு பாம்புகளை நுழைத்து, அவற்றைத் துண்டு களாக்கி இடைவெளியைப் பெருகச் செய்தார். பின் பெருத்த இடைவெளியின் வழியே எளிதாக உள்ளே சென்று அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு திரும்பலா னார்.
அமிர்த கலசத்தோடு திரும்பிய கருட னோடு இந்திரன் கடும் போரிட்டான். அவன் ஏவிய வச்சிராயுதம் முதலான ஆயுதங்கள் அவரை (கருடனை) ஒன்றும் செய்யாதது கண்டு அச்சம் அடைந்தான். தனக்கு வந்து உதவும்படி திருமாலை நினைத்தான். திருமால் கருடன் போரிடு கின்ற ஆற்றலைக் கண்டு வியந்து அவரைப் பாராட்டிப் புகழ்ந்தார். அதோடு ‘தனக்குக் கொடியும் வாகனமுமாக இருப்பாயாக’ என்று அருள் செய்தார். வேண்டிய வரங்களையும் தந்தார். திருமாலே கருடனைத் தனது கொடியாகவும், வாகன மாகவும் ஆக்கிக் கொண்ட பிறகு, இந்திரன் கருடனோடு போரிட விரும்பவில்லை; அதனால் இந்திரன் கருடனை அழைத்து “கருடனே! உன் வீரத்தைக் கண்டு பாராட்டு கின்றேன். இனி நம்மிடையே போர் வேண்டியதில்லை. இனி நாம் நண்பர் களாகவே இருப்போம். நான் உனக்கு அமிர்த கலசத்தைத் தருகின்றேன். அதைக் காட்டி உன் அன்னையை மீட்டுவிடு. ஆனால் அந்த அமிர்த கலசம் நாகர் களுக்குப் போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ” என்று கூறியதோடு பாம்பு களைக் கொல்லும்படியான ஆற்றலையும் கருடனுக்குத் தந்தான்.
நீங்கள் அடிமையில்லை
இந்திரனிடமிருந்து பெற்று வந்த அமிர்த கலசத்தை, தருப்பைகளின் மத்தியில் வைத்து விட்டு, “நீராடிப் பரிசுத்தமாய் வந்து அமிர்தத்தை உட்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய இறவாமை கிடைக்கும்” என்று கருடன் கூறினார். அமிர்த கலசத்தைப் பார்த்தவுடன் ”உன் தாயை அழைத்துக் கொண்டு போக லாம். எங்களுக்கு நீங்கள் அடிமை யில்லை” என்று நாகர்கள் கூறி நன்னீரில் நீராட அவ்விடத்தை விட்டு சென்றார்கள். கருடனும் தன் தாயை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். கருடனும், நாகர்களும் போய்விட்டதை அறிந்த இந்திரன், உடனே, தாமதிக்காமல் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்றான். நன்னீரில் நீராடி பரிசுத்தமாக வந்த நாகர்கள் அமிர்த கலசத்தைக் காணாது வருந்தினர். தருப்பை களின் மேல் அமிர்த கலசம் இருந்ததனால், அந்த அமிர்தத்திலிருந்து ஓரிரு சொட்டு களாவது அந்தத் தருப்பைகளில் சிதறியிருக் கும் என்று எண்ணி அந்தத் தருப்பைகளை நாகர்கள் நாக்கினால் தடவிப் பார்த்தனர். தருப்பைகளிலிருந்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை. மாறாக அந்தத் தருப்பைகளின் இருபுறமும் உள்ள கூர்மை யானது அவற்றின் நாக்கினை அறுத்தது. அதனால் அந்த நாகர்களின் நாக்குகள் இரண்டாக ஆயின. அன்றிலிருந்து பாம்பு களுக்கு இரட்டை நாக்குகள் என்பர். புனிதமான தேவாமிர்த கலசத்தைத்
தருப்பைப் புற்கள் தாங்கியிருந்தபடியால்
தருப்பையானது எம்பெருமானுக்கு உகந்த தாக ஆயிற்று. ஏனைய நாகர்களின் உபத் திரவம் தாங்க முடியாமல், மூத்தவனாகிய ஆதிசேடன் கடுந்தவம் புரிந்து, பிரமனது கிருபையால் பூமியைச் சுமக்கும் பேறு பெற்றான். மற்றைய வாசுகி முதலான நாகங்கள் கத்ருவின் சாபத்திற்கு அஞ்சி வாழ்ந்திருந்தன.
சாபம் நீங்கும்
கடுமையான தவத்தை மேற்கொண்டு தம் சரீரத்தைக் குறைத்ததனால் சரத்காரு என்று பெயர் பெற்ற, சிவபெருமான் போன்ற ஆற்றல் மிக்க முனிவர் ஒருவர், தமது மூதாதையர்கள் நரகத்தில் வீழாது மோட்சத்தை அடைவான் வேண்டி தன்னு டைய பெயரையே கொண்ட ஒரு பெண்ணை மணந்து அவள் மூலமாக ஒரு நற்புத்திரனைப் பெற விரும்பினார். அதனால் அவர் வாசுகி முதலான நாகர் கள் வாழும் இடம் வந்து சேர்ந்தார். “தங்களோடு உதித்த ஜரத்காருவை அதே பெயருடைய ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கையில் தங்கள் தாய் கத்ரு மூலம் பெற்ற சாபம் நீங்கும்” என்று நாகர்களில் ஒருவனான ஏலாபத்ரன் என்பவன் அறிந்து, தங்கை ஜரத்காருவை அதே பெயருடைய அங்கு வந்திருந்த ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று மற்ற சகோதரர்களிடம் சொல்ல, அவர்கள் அனைவரும் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டனர். பின்னர் தங்கை ஜரத் காருவை, வந்திருந்த ஜரத்காரு முனிவ ருக்குத் தாரை வார்த்து, கன்னிகாதானத் திருமணம் செய்து கொடுத்தனர்.
ஆண் குழந்தை பிறந்தது
திருமணம் ஆனவுடன் ஜரத்காரு முனி வர் தம் மனைவி ஜரத்காருவிடம், “நீ எனக்குக் கோபம் உண்டாகும்படி செய்தால் நான் உன்னை விட்டுப் போய் விடுவேன்” என்று சொல்ல, மனைவியும் கணவனுக்குக் கோபம் உண்டாகாதபடி நடந்து கொண் டாள். சில நாட்கள் அவர்கள் வாழ்க்கை இன்பமாகக் கழிந்தது. ஜரத்காரு கர்ப்ப முற்றாள். ஒரு நாள் ஜரத்காரு தன் கண வரை, மாலைக்கடன் செய்வதற்கு சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்னமேயே எழுப்பிவிட்டாள். உறங்கிக் கொண்டிருந்த முனிவர் அதனால் எழுந்து கோபித்து “நீ என்னை சூரிய அஸ்தமனம் ஆவதற்கு வெகு நேரம் இருப்பதற்கு முன்னமேயே எழுப்பிவிட்டாய். இனி நான் உன்னுடன் இருக்க மாட்டேன்” என்று கூறிப் புறப்பட லானார். மனைவி ஜரத்காரு தன் செயலுக்கு வருந்தி “நான் இனி எவ்வாறு வாழ்வது” என்று கேட்டாள். அதற்கு அம் முனிவர் “உன்னை உன் மகன் நன்கு காப்பாற்றுவான். அவன் பெரியவனாகும் வரை உன் தாய் வீட்டில் போய் இரு” என்று சொல்லிவிட்டுச் சிறிதும் தாமதிக் காமல் தவம் செய்ய காட்டிற்குச் சென்று விட்டார். ஜரத்காருவும் தன் தாய் கத்ரு வீட்டிற்குச் சென்றாள். அங்கு ஜரத்காரு வுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘ஆஸ்திகன்’ என்று பெயர் வைத்தார்கள். “இக்குழந்தையால் தாங்கள் பெற்ற சாபம் நீங்கும்” என்று மகிழ்ச்சி கொண்டு மாமன்களாகிய நாகர்கள் சீரும் சிறப்புமாக அக்குழந்தையை வளர்த் தார்கள்.
இவ்வாறு நாகர்களின் வரலாற்றைச் சொல்லிக்கொண்டு வந்த உதங்க மாமுனிவர் மீண்டும், ‘தக்ஷகன் முதலிய நாகங்கள் அழிந்திடுமாறு சர்ப்பயாகம் செய்க’ என்று ஜனமே ஜயனிடம் கூறினார். அதனைக் கேட்ட மன்னன் நிதானமாக, “உதங்கமாமுனிவரே! நாகர்கள் மேல் நீங்கள் ஏன் கோபம் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் ஒருவன் தீமை செய்யின் அவனைத்தான் தண்டிக்க வேண்டும். மாறாக அவன் குலத்தையே அழிக்க நினைப்பது’எந்த வகையில் தர்மம்?” என்று கேட்டான்.
அதைக் கேட்ட உதங்கமாமுனிவர், ”மன்னவனே! எனக்கு மட்டும் அந்நாகர் கள் தீங்கு செய்யவில்லை. தன் பெரிய அன்னை வினதையை, தன் தாய் கத்ரு விற்கு ஆதரவாக, அதர்மமான செயலைச் செய்து அடிமைப்படுத்தினார்கள். இவை மட்டுமா! எல்லாவற்றிற்கும் மேலாக உன் தந்தை பரிக்ஷித்துவைக் கொன்றதும் தக்ஷகன் என்னும் நாகமாகும். எனவே அந்தப் பாவிகளைக் கொன்றால் உனக்குப் பழி வராது. புகழே உண்டாகும்” என்று கூறி, மன்னனுக்கு அவன் தந்தை பரிக்ஷித்து, தக்ஷகனால் கடியுண்டு இறந்த வரலாற்றைக் கூறலானார்.
பரிக்ஷித்து மன்னன் வேட்டையாடுதல்
அர்ச்சுனன் மகனாகிய அபிமன்யுவிற் கும், விராட நாட்டு மன்னன் மகளாகிய உத்தரைக்குப் பிறந்தவர்தான் பரிக்ஷித்து என்பவர். பாண்டவர், கௌரவர் ஆகிய வருக்கு ஒரே வாரிசாக விளங்கியவர். துரியோதனன் முதலான அனைவரும் மாண்டு போன பின்னர் அசுவத்தாமன் தன் ஆத்திரத்தால் அறிவிழந்து பாண்டவர் களைக் கொல்வதாக நினைத்து, திரௌபதி யிடத்துப் பிறந்த இளம் பஞ்ச பாண்டவர் களைக் கொன்றான். அதனால் திரௌபதி பெருந்துன்பம் அடைந்தாள். தருமபுத்திர ரிடம் வந்து, “பாவியான அசுவத்தா மனைத் வீழ்த்த யாரும் இல்லையா?” என்று கூறிக் கதறினாள். திரெளபதியின் கதறலைக் கேட்டதும் பாண்டவர்கள் உடனே அசுவத்தாமனைத் தேடிப் புறப் பட்டார்கள். உடன் கண்ணனும் சென்றார். கங்கை நதிக்கரையில் வியாசர் பக்கத்தில் மறைவாக இருந்ததைக் கண்டார்கள். அவர் களுக்கு முன்பே அசுவத்தாமன் அவர் களைப் பார்த்து விட்டு, கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து, “இது பாண்டவர் வம்சத்தை வேரோடு அழிக்கட்டும்” என்று கூறியதோடு, அதற்குரிய மந்திரத்தைச் சொல்லி அஸ்திரமாக்கி விட்டான். அது சென்று உத்தரையின் கர்ப்பத்தைத் தாக்கி யது. அது பாண்டவ வம்சத்தை அடையாள மில்லாமல் அழித்திருக்க வேண்டும். ஆனால் எம்பெருமான் கண்ணபிரானு டைய திருவருளால் கர்ப்பத்திலிருந்த உயிரற்ற பிண்டம் காக்கப்பட்டது. அவர்தான் பாண்டவர்கள் கௌர வர்களுக்குரிய ஒரே வாரிசாக விளங்கிய பரிக்ஷித்து மன்னர் ஆவார். இப்பரிக்ஷித்து மன்னர் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அநேக மிருகங்களைக் கொன்றார். பின் ஒரு வேங்கையைப் பார்த்து அதனைக் கொல்ல எத்தனித்தார். அது அதற்குள் அவரிடத்திலிருந்து தப்பி ஓர் அடர்த்தி யான புதரில் மறைந்து கொண்டது. அப் புலியை தேடிய அவர் எங்கும் அதனைக் காணாதவராய், அரிய தவத்தைச் செய்து கொண்டிருந்த சமீகர் என்னும் முனிவரை நெருங்கி, “முனிவரே! இங்கு வேங்கைப் புலி வந்ததா? நீங்கள் பார்த்தீர்களா? சொல்லுங்கள்” என்று கேட்டார். முனிவர் தன்னை மறந்து ஆழ்ந்த நிட்டையில் இருந்ததனால் அவர் மன்னனுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.
முனிவரின் மகன் கோபம்
அதனால் பரிக்ஷித்து மன்னன் கோபித்து, பின் வரும் விளைவினை அறியாது ஆத்திரத்துடன், அங்குக் கிடந்த ஒரு செத்த பாம்பைக் குற்றமற்ற அம்முனிவர் கழுத் தில் மாலையாகப் போட்டு தன் நகர் போய்ச் சேர்ந்தார். முனிவரைப் பார்க்க வந்த அம்முனிவரின் மகன் சிருங்கி என்ப வனிடம், கிருசன் என்ற முனி மகன் பரிக்ஷித்து, அவன் தந்தைக்குச் செய்த அடாத செயலைக் கூறினான். உடனே சிருங்கி என்னும் அந்த ரிஷி புத்திரன் கோபங்கொண்டு, “என் தந்தையிடத்துத் தகாத செயலைச் செய்த அப்பரிக்ஷித்து மன்னன் இன்றைக்கு ஏழாம் நாள் தக்ஷகன் என்னும் பாம்பினால் கடியுண்டு இறப் பானாக” என்று சாபமிட்டான். பின்னர் தந்தையின் கழுத்திலிருந்த பாம்பு மாலையை எடுத்து வீசி எறிந்து விட்டு, தந்தையிடம் நடந்ததைக் கூறியதோடு தான் சாபமிட்டதையும் கூறினான்.
எல்லாம் விதியின் விளைவு
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்புடைய அம்முனிவர் மிகவும் வருந்தி, ”பரிக்ஷித்து மன்னவன் எல்லாரி லும் உயர்ந்த பண்புடையவர். இருந்தாலும் அவர் சாபம் பெற்றது விதியின் விளைவே” என்று எண்ணி, அவர் எதற்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டு மென்ற நல்ல எண்ணத்தினால், கெளரமுகர் என்ற சீடனிடம் பரிக்ஷித்து மன்னர் பெற்ற சாபத்தை எடுத்துக் கூறி, அதனால் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அச்சீடனும் முனி வர் சொன்னதை அப்படியே பரிக்ஷித்து மன்னரிடம் கூறி, (அம்மன்னரை) ஜாக்கிரதையாக இருக்கும் படி கூறினான். ‘எல்லாம் விதியின் விளைவு’ என்று எண்ணிய பரிக்ஷித்து மன்னர் கடலின் நடுவில் ஒற்றைத் தூணோடு கூடிய மேல் மாளிகையைப் பாதுகாப்பான முறையில் இருக்கும் படியாகக் கட்டுவித்து ஆறு நாட்கள் அதனுள் இருந்தார். ஏழாம் நாள் பரிக்ஷத்து மன்னரைக் கொல்ல தக்ஷகன் அம்மன்னர் பால் சென்று கொண்டிருந் தான்.
அப்பொழுது காசியபர் என்னும் அந்தணர், மன்னரைப் பாம்பு கடித்தால், தன் மந்திரச் சக்தியால் அவரை உயிர் பெற்றெழச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அம்மன்னரிடம் சென்று கொண்டிருந்தார். தக்ஷகன் அந்த அந்தணரைப் பார்த்து விட்டான். எதற்குப் போகிறார் என்பதையும் அறிந்து கொண் டான். உடனே அந்த தக்ஷகன் காசியபரிடம் வந்து, “அந்தணரே! நீர் எங்கு எதற்காகப் போகின்றீர் என்பதை நான் அறிவேன். அதனால் நான் இங்கே இருக்கும் அந்த ஆலமரத்தைத் தீண்டுகிறேன். அது உடனே நீறாகி விடும். நீறாகிப்போன அந்த ஆல மரத்தைப் பழையபடி செழிப்புடைய ஆலமரமாக ஆக்கிவிட்டால் நிச்சயம் நீ என்னுடைய தீண்டுதலினின்று அம் மன்னரைக் காப்பாற்றுவாய்” என்று கூறி அங்கிருந்த செழிப்பான ஓர் ஆலமரத்தைத் தீண்டியது. உடனே அம்மரம் நீறாகிப் போனது. காசியப முனிவரோ அதனைக் கண்டு அஞ்சாமல் தன் மந்திரச் சக்தியினால் மீண்டும் செழிப்புடைய பழைய ஆல மரமாக நிலை நிறுத்தினார். இதனைக் கண்ட தக்ஷகன் “இவன் மன்னரைக் காப்பாற்றி விடுவான் போல உள்ளதே ” என்று எண்ணி, அவனுக்குப் பெரும் பொருள் கொடுத்து பரிக்ஷித்து மன்னரிடம் செல்லவிடாது வந்த வழியே போகும்படி செய்து விட்டான். அக்காலத்திலும் இத்தகைய லஞ்ச லாவண்யம் இருந்தது போலும்!
பரிக்ஷித்து மன்னரை நாகம் தீண்டியது
பின்னர் தக்ஷகன் மறையவர் வேடந் தாங்கி, கையில் எலுமிச்சைப்பழம் ஒன்று ஏந்தி பரிக்ஷித்து இருக்கும் அரண்மனையுள் புகுந்து அவரிடம் கொடுத்தது. அதனை அம்மன்னர் பழம் என்று எண்ணி முகர்ந் தார். அந்த அளவில் தக்ஷகன் தன் சுய வடிவம் கொண்டு அவரைத் தீண்டிவிட்டு, தான் வந்த காரியம் முடிந்துவிட்டது என்ற திருப்தியோடு நாகலோகம் சேர்ந்தான். பரிக்ஷித்து மன்னன் விண்ணுலகம் சென்று எம்பெருமான் திருமாலின் திருப்பாதம் அடைந்தார்.
அம்மன்னனுக்குரிய ஈமக்கிரியை முதலானவற்றை உன்னைக் கொண்டு செய்வித்தபின், உன் உற்றார், உறவினர், அமைச்சர் பிரதானிகள் முதலானோர் உனக்குத் திருமுடி சூட்டி உன்னைத் தங்கள் அரசனாக ஏற்றனர் – என்று கூறி முடித்தார் உதங்கர்.
மகாபாரதம் – 3 | ஆதி பருவம் – உதங்கச் சருக்கம் – உதங்கர் கூறியது | Mahabharata