பராசர மகரிஷியின் புத்திரர் புகழ் பெற்ற வியாச பகவான். வியாசர் வேதத்தைத் தொகுத்துக் கொடுத்தவர். இவரே மகாபாரதம் என்னும் புண்ணியக் கதையை உலகத்துக்குத் தந்தவர்.
பாரதத்தைத் தம் மனத்தில் யாத்த பின் இதை எவ்வாறு உலகத்துக்குத் தருவது என்று வியாசர் சிந்தித்தார். பிரம்மனைத் தியானித்தார். பிரம்மதேவன் பிரத்தியட்ச மானதும் வியாசர் கைகூப்பித் தலைவணங்கி, “பகவானே! சிலாக்கியமான நூல் ஒன்று என்னாலே மனதில் செய்யப்பட்டிருக்கிறது. இதை எழுதுகிறவர் யாரும் பூமியில் இல்லையே,” என்றார்.
பிரம்மதேவன் வியாசரை மிகப் புகழ்ந்து, “ரிஷியே! உம்முடைய நூலை எழுதுவதற்காகக் கணபதியைத் தியானம் செய்யும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.வியாச மகரிஷி விநாயகரைத் தியானிக்க அவரும் எழுந்தருளினார். அவரை வியாசர் முறைப்படி பூஜை செய்து, “கணநாதரே! பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
விக்நேசுவரர், “சரி, அப்படியே செய்கிறேன். ஆனால் எழுதும்போது என்னுடைய எழுதுகோல் நிற்காது. நிற்காமல் சொல்லிக் கொண்டே போக வேண்டும். அப்படியானால்தான் நான் உமக்காக எழுத முடியும்” என்றார்.
இந்தக் கடுமையான நிபந்தனையை வியாசர் ஒப்புக்கொண்டு, “பொருளை அறிந்துகொண்டே நீர் எழுதிக் கொண்டு போக வேண்டும்” என்று எதிர் நிபந்தனை ஒன்று கேட்டார்.
கணபதி நகைத்துவிட்டு இதற்குச் சம்மதித்தார். அதன் மேல் மகரிஷி பாரதம் பாட ஆரம்பித்தார். ஆங்காங்கு பொருள் விளங்காத முடிச்சுகளை அமைத்துச் சற்று நேரம் விக்நேசுவரர் தயங்கி நின்ற காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு வியாசர் அநேக சுலோகங்களை மனத்தில் கவனம் செய்து முடித்துக் கொள்வார். இவ்வாறு பாரதம் வியாசரால் பாடப்பட்டுக் கணநாயகரால் எழுதப்பட்டது.
அந்தக் காலத்தில் அச்சுக் கிடையாது. கல்வி கற்றவருடைய ஞாபக சக்தியே நூல்களுக்கு ஆலயமாக இருந்தது. வியாசர் தாம் எழுதுவித்த பாரதத்தை உடனே முதலில் தம்முடைய புத்திரரான சுகமுனிவருக்குச் சொல்லி வைத்தார். பிறகு தம் சிஷ்யர்கள் பலருக்கும் சொல்லி வைத்தார். இல்லாவிடில் நூல்கள் கெட்டுப் போய் விடலாம் அல்லவா?
தேவர்களுக்குப் பாரதம் சொன்னவர் நாரதர் என்றும், கந்தர்வர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும். யக்ஷர்களுக்கும் சுகர் சொன்னார் என்றும் கதை. மனித லோகத்திற்காகப் பாரதத்தைச் சொன்னவர் வியாசருடைய முக்கிய சிஷ்யரும் தருமசீலரும், வித்துவானுமான வைசம்பாயனர் என்பது பிரசித்தம். பரீக்ஷித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜய ராஜா நடத்திய ஒரு பெரிய யாகத்தில், அவனால் ஏவப்பட்டு வைசம்பாயனர் பாரதத்தை விஸ்தாரமாகச் சொன்னார். வைசம்பாயனர் சொன்ன இந்தப் பாரதத்தைப் பிறகு பௌராணிகரான சூதர் நைமிசாரணியத்தில் சௌனக ரிஷியின் தலைமையில் ரிஷிகளை யெல்லாம் சபையாகக் கூட்டி அவர்களுக்குச் சொன்னார்.
“தர்மார்த்தங்களை உபதேசிப்பதற்காக வியாச பகவான் பாடிய பாரதக் கதையை நான் கேட்டிருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்று சூதர் சொன்னவுடன், தபோதனர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“ஜனமேஜய ராஜாவின் யாகத்தில் வியாசர் உத்தரவின்படி, வைசம்பாயனர் சொன்ன மகாபாரதக் கதையையும் உப கதைகளையும் நான் கேட்டு, பிறகு பல தீர்த்தங்களுக்கு யாத்திரை போய், பாரதயுத்தம் நடந்த போர்க்களத்தையும் பார்த்துவிட்டு, உங்களைத் தரிசிக்க இங்கே வந்தேன்” என்று ஆரம்பித்து, மகாபாரதம் முழுவதையும் சொன்னார்.
சந்தனு மகாராஜாவுக்குப் பின் சித்திராங்கதனும் அவனுக்குப் பின் விசித்திரவீரியனும் ஹஸ்தினாபுரத்தில் அரசாண்டார்கள். விசித்திரவீரியனுக்குத் திருதராஷ்டிரன், பாண்டு என்ற இரு குமாரர்கள். மூத்தவன் பிறவிக் குருடனானபடியால் பாண்டுவுக்கு ராஜ்யபட்டாபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ்ய பாலனம் செய்துவந்த பாண்டு, தான் செய்த ஒரு தவறுக்காக மனைவிகளுடன் வனத்துக்குத் தவம் செய்யப் போய் அங்கேயே பல நாட்கள் வசித்து வந்தான்.
வனத்திலிருக்கும்போது குந்தியும், மாத்ரியும் பஞ்சபாண்டவர்களைப் பெற்றார்கள். பாண்டு காட்டி லேயே இறந்துவிட்டான். ரிஷிகள் பஞ்சபாண்டவர்களைப் பால்ய பருவம் முடியும் வரையில் பார்த்துவந்து, யுதிஷ்டிரனுக்குப் பதினாறு வயது ஆனதும், எல்லோரையும் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துக் கொண்டு போய்க் கிழவர் பீஷ்மரிடம் ஒப்புவித்தார்கள்.
பாண்டவர்கள் வேத வேதாந்தங்களையும், க்ஷத்திரியர்களுக்கு வேண்டிய கலைகளையும் வெகு சீக்கிரத்தில் கற்றுக் கொண்டு எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்து கொண்டார்கள். திருதராஷ்டிரன் மக்களான கெளரவர்களுக்கு இவர்களைக் கண்டு பொறாமை உண்டாயிற்று. அவர்களுக்குப் பலவகைத் தீங்குகளைச் செய்யத் தொடங்கினர்.
கடைசியாக, குலத்துக்குத் தலைவரான பீஷ்மர் எல்லோருக்கும் சமாதானம் சொல்லி, கௌரவாகளுக்கும், பாண்டவர்களுக்கும் ஒப்பந்தம் செய்து வைத்தனர். அதன்பின் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்திலும் கௌரவர் ஹஸ்தினாபுரத்திலுமாகத் தனியாக இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள்.
இப்படியிருந்து வந்தபோது அந்தக்காலத்து க்ஷத்திரிய வழக்கத்தின்படி கௌரவர்களுக்கும், பாண்டவர் களுக்கும் ஒரு சூதாட்ட விழா நடந்தது. அதில் கௌரவர்களுக்காக ஆடின சகுனி யுதிஷ்டிரரைத் தோல்வியடையச் செய்து, அதன் பயனாகப் பதின்மூன்று வருஷம் பாண்டவர்கள் வனவாசம் செய்யும்படி நேர்ந்தது. அப்படியே அவர்கள் ராஜ்யத்தை விட்டு, திரௌபதி யையும் அழைத்துக் கொண்டு வனம் சென்றார்கள்.
பன்னிரண்டு வருஷங்கள் ஆரண்யத்திலும், பதின்மூன்றாவது வருஷம் மறைவாகவும் சூதாட்ட நிபந்தனைப்படி கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். அப்போதும்,அவர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டிருந்த துரியோதனன் அதைத் திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. அதன்பேரில் யுத்தம் நடந்தது. பாண்டவர்கள். துரியோதனாதிகளைக் சாம்ராஜ்யத்தை அடைந்தார்கள். கொன்று இதற்குமேல் பாண்டவர்கள் 36 வருஷம் ராஜ்ய பரிபாலனம் செய்தார்கள். பிறகு பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்களும் திரௌபதியும், மரவுரி தரித்து வனம் சென்றார்கள்.
இதுவே பாரதக் கதையின் சுருக்கம். நம்முடைய நாட்டின் பழம்பெருங் காப்பியமாகிய இந்த அற்புத நூலில் பாண்டவர்கள் சரித்திரமல்லாமல் எத்தனையோ உபகதைகளும் இருக்கின்றன. எண்ணற்ற முத்துக்களும், ரத்தினங்களும் கிடைக்கும் மகாசமுத்திரத்தைப் போன்றது மகாபாரதம். இதுவும் ராமாயணமும் நம்முடைய நாட்டின் தருமத்துக்கும் பண்பாட்டுக்கும் வற்றாத ஊற்றுகள். அவற்றை மக்கள் படித்தும் கேட்டும், வரும்வரையில் நம்முடைய நாட்டின் பண்பாட்டுக்குச் சேதமில்லை.
மகாபாரதம் – 2 | புண்ணியக் கதை | கணபதி ராயசம் Mahabharata