வேத வடிவினனாகிய கருடன் சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி,”ஹே, பரமாத்மா! ஒருவன் மனத் தூய்மையோடு, தானதர்மங்களைத் தன் கையாலேயே செய்வானாயின் அதனால் அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தானதர்மம் செய்வார்களானால் அதனால் உண்டாகும் பயன் என்ன? தான தர்மம் செய்யும்போது முறை தவறாகச் செய்தால் ஏற்படும் பயன் என்ன? இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்!” என்று விண்ணப்பஞ் செய்ய, பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார்.
“கலுழனே! மனத் தூய்மையில்லாமலும் மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ, அத்தனைப் பயனும் சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவைத் (தானம் வாங்குவோரும் நல்லவராக இருக்க வேண்டும்) தானஞ் செய்தாலும், அத்தானத்தால் உண்டாகி விடும். ஒருவன் இறந்த பிறகு அவனைக் குறித்துச் செய்யப்படும் லட்சம் கோதானங்களுக்கு என்ன பயனோ, அத்தனைப் பயனும் அவன் இறக்கும் காலத்தில் செய்யும் ஆயிரங் கோதானத்தாலேயே கிட்டி விடும். ஆகையால்தான், கலுழனே! ஒருவன் தனது மரண காலத்திற்குள்ளேயே கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வது மிகவும் நல்லது என்பதைத் தெரிந்துகொள்
“தானமும் நல்லதாக இருக்க வேண்டும். தானம் வாங்குவோரும் நல்லவராக இருக்க வேண்டும். தானம் கொடுக்கப்படும் இடமும் நல்லதொரு க்ஷேத்திரமாக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவனுடைய மனமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். இவையனைத்துமே ஒருங்கு சேர்ந்து விட்டால், அது ஒரு கோடிப் பயனைத் தரும். கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம், நாளுக்கு நாள் விருத்தியடையும். தானத்தை வாங்கிக் கொள்பவர் உத்தமராக இருந்து விட்டால், தானம் கொடுப்போனுக்கு அதிகப் புண்ணியமுண்டாகும். விஷத்தைப் போக்கும் மந்திரமும், குளிரைப் போக்கக் கூடிய அக்கினியும் தத்தமது சக்திகளைத் தத்தமது செயலால் இழந்து விடுவதுமில்லை. அந்தச் சக்திகள் குறைவதுமில்லை. அதுபோலவே. தானம் வாங்கும் உத்தமரும் அவருடைய நற்கருமத்தாலும் நல்லொழுக்கத்தாலும் குற்றமற்றவராவர்”
”உத்தமப் பயனையடைய விரும்புவோன் கோதானம் முதலிய தானங்களைச் செய்யும்போது வேத சாஸ்திரங்களை ஓதியுணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்க வேண்டும். வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும் பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்குக் கோதானம் கொடுத்தால், அந்தக் கோதானமே தானங்கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும். மேலும் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான். ஒரு பசுவை, ஒருவனுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். எப்போதாயினும் ஒரு பசுவைப் பலருக்குத் தானமாகக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்து, அந்தத் தானத்தை வாங்கியவர் அதை விற்று அந்தத் தொகையைப் பங்கு போட்டுக் கொண்டாலும் ஒருவர் ஒரு மாதம் வைத்திருப்பது, மற்றொருவர் அடுத்த மாதம் வைத்திருந்து அனுபவித்துக் கொள்வது என்று விதித்து கொண்டாலும், தானம் கொடுத்தவன் தனது ஏழு தலைமுறையினரோடு நெடுங்காலம் நரகத்தில் செய்வான்.” வாசஞ் செய்வான்.
சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானங் கொடுப்பவன், அந்தப் பிறவியிலாவது மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான். அந்தப் பயன், பெட்டியில் வைத்துப் பூட்டிய பொருளாகவே நினைக்கத் தக்கது. அதிகத் உடையவன் பிறகு தனம் அவனது பிள்ளைகள், அப்பனுக்கென்று பக்தியாகவும் சிரத்தையோடும் மனத் தூய்மையோடும் கிருத்தியங்களால் அவன் அடையக்கூடிய நல்லுலகைவிட மேலானதாகிய உலகத்தைப் புத்திரன் இல்லாதவனும் தரித்திரனுமாகிய ஒருவன் சொற்ப அளவுடைய தர்மத்தைத் தான் வாழுங் காலத்தில் தானே தன் கையால் செய்வானாகில் அடைந்து விடுவான்.
கலுழனே! அயலூருக்குப் பயணம் செல்பவன் கட்டுச் சோற்றைக் கையிலே கொண்டு செல்வானாகில், எவ்வாறு வழியிலே பசியைப் பற்றிய கவலையே இல்லாமற் செல்வானோ, அவ்வாறே ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில் அன்னதானம். கோதானம் முதலிய தானங்களைத் தன் கையாலேயே செய்து விடுவானேயாகில் மரணமடைந்து செல்லும்போது பசி தாகம் எதுவும் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான். கையிலே கட்டமுதைக் கட்டிக் கொள்ளாமல் செல்பவன் பசி தாகத்தால் வருந்துவதைப் போல, தான தர்மங்களைத் தான் வாழுங் காலத்தில் தன் கையாலேயே செய்யாதவன் இறந்து செல்லும்போது வழியில் அதிகத் துன்பமடைவான்.
புனிதமான தலத்தில் புண்ணிய காலத்தில் செய்த நல்வினையாகிய நற்கருமம். நெய் பெய்த அக்கினி ஓங்கி வளர்வதைப் போலப் பயனாக வளரும். புண்ணிய க்ஷேத்திரமில்லாத எந்த இடத்திலாயினும், புண்ணிய காலமல்லாத எந்தவொரு காலத்திலேனும் விருஷோற்சனம் செய்து, நல்ல ஒழுக்க சீலமில்லாத அந்தணனுக்குத் தானம் கொடுத்து விட்டாலுங்கூட அந்த விருஷோற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால், உத்தம க்ஷேத்திரத்தில் உத்தம காலத்தில் உத்தமப் பிராமணனுக்குத் தானம் கொடுத்தால் என்ன பயன் உண்டோ, அந்தப் பலன் நிச்சயமாகக் கைகூடும். ஆகையால் ஒரு மனிதன் நற்கதியடைவதற்கு முதற் காரணமாக அமைவது விருஷோற்சனமேயாகும்.
கலுழனே! இன்றிருப்போர் நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகையால், நல்ல காரியங்களையும் நற்செயல்களையும் நாளை செய்துகொள்வோம் என்று நினைக்காமல் நற்கர்மங்களை நினைத்தவன்றே செய்வது நல்லது. புத்திர பாக்கியமுடையவன் தன் கையால் எந்தவொரு தருமத்தையும் செய்யாமல் இறப்பானேயாகில் நற்கதியடையமாட்டான். புத்திரனேயில்லாதவன் நல்வினைகளைச் செய்து மரிப்பானாகில் நற்கதியை அடைவான். யாகம் செய்வதையும் கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும்விட விருஷோற்சனம் செய்வதே மிகவும் உத்தமமான நற்கருமமாகும்.
கார்த்திகை மாதத்துப் பௌர்ணமியிலாவது. மற்றெந்தப் புண்ணிய தினத்திலாவது, உத்தராயண காலத்து சுக்கில பட்சத்திலாவது. கிருஷ்ண பட்சத்திலாவது, துவாதசியிலாவது தூய மனத்தோடு உத்தமமான திருத்தலத்தில் நல்ல திதி யோக நட்சத்திரத்தில். நல்ல முறையில் வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த ஒழுக்கமுடைய அந்தணர்களை வருந்தி அழைத்து, சுபம் ஓமம் முதலியவற்றைச் செய்விக்க வேண்டும்.
மேலும் தன்னைத் தூய்மையாளனாகச் செய்து கொண்டு, நவக்கிரகங்களையும் பூஜித்து, மாதுர்தேவதைகளை அர்ச்சனை செய்து, பூர்ணாகுதி கொடுத்து மஹாவிஷ்ணுவைக் குறித்து சிரார்த்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக் கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால் நன்றாக அலங்கரித்து, மேலும் நான்கு ஆண் கன்றுகளோடு அந்தக் காளைக் கன்றானது அக்கினியை வலம் வரச் செய்து, வடதிசை நோக்கி நின்று அந்த ரிஷபக் கன்றை நோக்கி, “தருமமே நீயே ரிஷபமானாய்! பிரமனாலே ஆதியில் படைக்கப்பட்டாய்!” என்று சொல்லி இறந்தவனுக்காகத் தானஞ் செய்தால் அவனைக் குறித்தும், செய்பவன் தனக்கே செய்து கொள்வானாயின் தன்னைக் குறித்தும் அதன் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரைத் தன் கரத்தால் ஏந்தி, தன் சிரசின் மீது. புரோக்ஷித்துக் கொண்டு. ஆண்கன்றுகளோடு அந்த ரிஷபக் கன்றையும் விட்டு விட வேண்டும்.
கருடா! இந்த விருஷோற்சனமானது இறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டதேயானால், உடனடியாக ஏகாதிஷ்ட சிரார்த்தத்தைச் செய்துவிட வேண்டும். இறவாதிருப்பவன் தனக்குத் தானாகவே செய்து கொள்வானாயின் தனக்குப் பிரியமாக இருக்கும் நற்பொருள்களை அந்தணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். விருஷோற்சனம் செய்யா விட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது. ஆகையால் அந்த விருஷோற்சனம் செய்யாமலேயே. மற்ற நற்கருமங்களைத் தனக்குத் தானே செய்து கொண்டாலுங்கூட மரித்த பிறகு புத்திரர் முதலியவர்கள் பற்பல நல்வினைகளைச் செய்தும்கூட அவற்றால் எந்தவிதப் பயனுமில்லை என்று உணர்வாயாக. ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தை சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து, ததியாராதனம் செய்து பலதானமும் கொடுக்க வேண்டும். பருத்தியாடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து. அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து, ஆராதனை செய்து, நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
வைதரணி என்ற நதியை தீத் துன்பமில்லாமல் கடக்கும் பொருட்டுக் கரும்பினால் ஓடஞ் செய்து. வெண்பட்டினால் அதைச் சுற்றி, நெய் ஊற்றிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள்ளே வைத்து, ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தைப் பிராமணனுக்குத் தானமாகக் கொடுத்தால் நலமுண்டு.”கருடனே! எள். இரும்பு, பொன். பருத்தி, உப்பு, நவதானியங்கள் ஆகியவற்றையும் தவிர்க்காமல் தகுதி வாய்ந்த அந்தணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாலும் போதுமானது. சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் திலதானமும் சய்யாதானமும் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களுக்கும் தட்சணையை அதிகமாகக் கொடுத்து அந்தணரை உவிப்புடன் ஏற்கச் செய்ய வேண்டும். சய்யாதானம் வாங்கும் அந்தணனை இருக்கச் செய்து தானம் செய்வது சிறப்புடையது. புத்திரன் இல்லாமல் இறந்தவனுக்குப் பௌத்திரன் முதலியவர்களில் யாராவது செய்தால் நற்கதியுண்டாகும்.
தன் சக்தியை அனுசரித்து நித்தியதானம் செய்பவன் யாவனோ, அவன் தன் வாழ்வின் இறுதியில் நற்கதியை அடைவான். உடலானது திடமாக இருக்கும் போதே திருவணை முதலிய க்ஷேத்திராடனமும் கங்கை யாத்திரையும் செய்ய வேண்டும். தாய் தந்தையர் இறந்த பிறகு ஆண்டாண்டுதோறும் அவர்களுக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். தாய்,தந்தை, குரு முதலியவர்க்குத் தன்னால் இயன்ற புண்ணியத்தைச் செய்து கொடுக்க வேண்டும். கருடா! மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது, அந்தணர்க்கு எவன் ஒருவன் பூரி (தக்ஷிணை) கொடுக்கிறானோ அவன் தான் வேண்டிய நல்லவைகளை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான், யோகிகள், சந்நியாசிகள், துறவிகள் முதலி யவர்கள் எந்த லோகத்தை அடைவார்களோ, அந்தப் புண்ணிய லோகம் அவனுக்குக் கிட்டி விடும். கருடா! ஒருவன் மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியை பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்” என்று கூறியருளினார்.