வெள்ளிப் பனிமலை போல் காட்சிதரும் திருக்கயிலைத் திருமாமலை எனும் சிவக்கோவிலில் நவரத்தின மணி சிம்மாசனத்தில் திருசடைப் பெருமான் பார்வதிதேவியோடும், முருகப் பெருமானோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாக எழுந்தருளியிருந்தார்.
பூதகணத்தவர்களும், வேதமுனிவர்களும், வித்யாதரர்களும் கயிலையில் சிவநாமத்தைத் தியானித்துக் கொண்டிருந்தனர்.
பார்வதிதேவியார் ஈசனிடம், “பிரபோ! நமது குமரன் முருகனின் அருமை பெருமைகளைத் தேவரீர் திருவாய் மலர்ந்து அருள வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார். முக்கண்ணப் பெருமான் மனம் மகிழ, மால்மருகன் மகிமையை இயம்பலானார்.
“பார்வதி! நமது கண்களில் நின்றும் அவதரித்த செல்வன் கங்கையால் ஏற்கப்பட்டதால் காங்கேயன் என்னும் நாமம் பூண்டான்.
சரவணப் பொய்கையில் வளர்ந்தமையால் சரவணபவன் எனும் திருநாமம் கொண்டான்.
கார்த்திகைக் கன்னியரால் பால் அருந்தி வளர்ந்தமையால் கார்த்திகேயன் எனும் நாமம் பெற்றான்.
உனது சக்தியால் ஆறு உருவமும் ஓர் உருவமாய் மாறியதால் கந்தன் எனும் நாமம் பூண்டான்.
நமது ஆறுமுகங்களும் கந்தனின் ஆறுமுகங்களானதால் ஆறுமுகன் எனும் பெயர் கொண்டான்.
”நம் குமரன் ஆறுமுகத்தான்! நமக்கு வெளிப் படையாகத் தெரியும் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமாக ஞானியர் கண்களுக்கு மட்டும் புலப்படும் அதோமுகமும் சேர்ந்து நம் முருகனும் ஆறுமுகங்களைக் கொண்ட ஞானத்தின் சொரூபியானான்.
சக்தி வேறல்ல; சிவம் வேறல்ல என்பது போல் நான் வேறல்ல; அவன் வேறல்ல இருவரும் பிரணவ சொரூபிகள்! அவனும் நம்மைப் போல் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்த பரம்பொருளாய் விளங்குபவன்.
நீ பர்வதராஜன் புத்திரியாக அழைக்கப்படுவதால் நம் குமாரன் பர்வதநந்தனன் என்று பெயர் பெற்றான்.
என் நெற்றிக் கண் அனலில் பிறந்ததால் நம் குமாரன் அக்னிகுமாரன் என்று பெயர்பெற்றான்.
அனைவருடைய இதயகமலத்தையும் ஆசனமாகக் கொண்டிருப்பதால் குஜன் என்று பெயர் பெற்றான். தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கி வழிபடும்படியாக பெருமை பெற்றதால் சுப்ரமண்யன் என்று பெயர் பெற்றான்.
மஹாசேனைகளான ஆத்மாக்கள் அகத் தூய்மையோடு வணங்கி அவனுடைய வசத்தில் இருப்பதால் நம் முருகன் மஹாஸேனவன் என்று அழைக்கப்படுகிறான்.
தேவர்களுக்குத் தலைவனாக இருந்து அவர்கள் துயரத்தைத் துடைப்பவன் ஆதலால் ஸேனானி என்று பெயர் பெற்றான்.
இவ்வாறு நம் புதல்வனுக்கு நாமங்கள் பல உண்டு. இவன் நாமத்தை மனம் உவந்து ஜபிப்போருக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனும் நான்கு புருஷார்த்தந்தங்களும் சித்திக்கும்.
அவன் தேஜஸுகளுக்கெல்லாம் ஒப்புயர்வற்ற தேஜஸாக விளங்குபவன். அவன் கருணை மிகும் கடைக்கண் பார்வையால் சகல லோகங்களும் இயங்கு கின்றன. அகில லோகங்களையும் அனுக்கிரஹம் செய்யும் பொருட்டு ஆறுமுக மூர்த்தியாய் – பன்னிரண்டு கைகளும் பதினெட்டு கண்களும் கொண்டு திருத்தோற்றம் தருகிறான். புவனமெல்லாம் இவன் கட்டளைக்கு அடிபணிந்துதான் இயங்குகின்றன.
இப்படி நமது குமாரனின் சிரயசைச் சொல்லிக் கொண்டே போகலாம்!” என்றார். மைந்தனின் புகழைக் கேட்டு பார்வதி பெருமை கொண்டாள்.
இறைவனின் திருவாயால் முருகனின் வைபவத்தைச் சொல்லக் கேட்ட பார்வதிதேவியார் முருகனுக்கு முத்தமாரி பொழிந்து கொஞ்சி மகிழ்ந்தார்கள்.
விதவிதமான வைரபொன்மணி ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தார்கள்.
வைரப் பொன் மணி அணிகள் முருகனின் திருமேனியை மேன்மேலும் அலங்கரித்தன. திருஅரை யிலே தங்க மணிகள் பொறித்த கிங்கிணி- திருச்செவியில் மகரகுண்டலங்கள் – அணி மார்பில் மரகத மணி மாலைகள், ருத்ராக்ஷ மணி மாலைகள், நவரத்தின பொன் அணிகள், திருவெண்ணீறு பிரகாசிக்கும் திருநெற்றியில் வீரப்பட்டிகை.
முருகனின் அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.
முருகப் பெருமான் காப்புபருவம், செங்கீரைப் பருவம், தாலாப்பருவம், சப்பாணி பருவம், முத்தப் பருவம் போன்ற பருவங்களைக் களிப்புடனே கடந்து பாலகனாக விளங்கினான்.
பாலப்பருவ விளையாட்டைத் தொடங்கினான் முருகன்.
பாலமுருகன் தமது சகோதரர்களான நவவீரர்களு டனும், லக்ஷம் வீரர்களுடனும் சேர்ந்து பற்பல திருவிளை யாடலை நிகழ்த்தினார்.
திருமுருகனின் அற்புத விளையாட்டைக் கண்டு அகில லோகங்களும் பொங்கி பூரித்தன.
ஈசனும் ஈசுவரியும் மூத்தகுமாரரான கணேச மூர்த்தி யும், முருகனின் விதவிதமான வேடிக்கை வினோதங் களைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி பூண்டனர்.
சிறு தேர் உருட்டி விளையாடி பதினான்கு லோகங்களையும் உற்சவ உற்சாகத்தில் மூழ்கச் செய்தார்.
பால்மணம் மாறாத பருவத்திலேயே பவனவாய்க் கந்தன் உமையம்மை வியக்கும் வண்ணம் தமது இளையவர்களான வீரவாகு, வீரகேசரி முதலியோ ருடனும், இலட்சம் வீரர்களுடனும் பற்பல திருவிளை யாடல்களை புரிந்து மகிழ்ந்து ஆனந்தித்தவர்.
ஒப்புயர்வற்ற மன்றங்களிலும், ஒங்கி உயர்த்த குன்றங்களிலும், நறுந்தேன் சிந்தும் அழகுச் சோலைகளிலும் முருகன் மென் சீரடியை மெல்லப் பதித்து உலா வந்தவர்.
தாமரைக் குளங்களிலும், பூக்களைச் சுமந்து வரும் புண்ணிய நதிகளிலும் நீராடிக் களித்தார்.
இந்திரலோகத்திலும், சந்திர சூரிய மண்டலங்களிலும், அஷ்ட திக்குகளிலும் விந்தைகள் பல புரிந்தார்.
ஆறுமுகத்தோடு ஆடி வருவார்; ஆறுமுகமும் ஒருமுகமாய்ப் பாடி வருவார்.
வேதியராய் வருவார்; எதிலும் வித்தகராய் விளங்குவார்; வீரராய்த் திகழ்வார்.
புவனம் எங்கும் பொங்கிப் பொலிய வெண்புரவி, யானை,பொற்தேர், யாளி, புட்பக விமானம் ஆகியவற்றில் எழுந்தருளுவார்!
மேகத்திடையே மூழ்கி மறைந்து செல்வார்; கடல் இடைத் தாவுவார்; வீணைகளில் பண் இசைப்பார்.
ஆறுமுகப் பெருமான் அகிலமெங்கும் சென்று, அரிய திருவிளையாடல்களைப் புரியலானார்.
மலைகள் பலவற்றை ஒன்றாக ஓரிடத்தில் சேர்த்து, பின்னர் அவற்றைத் தலைகீழாக மண்ணிலே நிறுத்தி மகிழ்வார்.
ஏழு கடல்களை இணைத்து ஈடில்லா இன்பம் எய்துவார். மாமேரு மலையைப் பாதாளத்திலே புகுத்திப் பேரின்பக் கூத்தாடுவார். கங்கை நதியை அணை போட்டுத் தடுத்து நீந்திக் களிப்பார்.
பாதாளத்திலுள்ள எண்வகைக் கொடிய கருநாகங்களையும் பிடித்துப் பெருமலைகளோடு சேர்த்துக் கட்டி மலைச் சக்கரங்களாலான தேரைச் செலுத்துவார்.
மதயானைகளை ஒன்றோடொன்று போரிடச் செய்து பனியிடைப்பட்ட மலர் போல் முகம் மலர்ந்து நிற்பார்.
அஷ்டவசுக்கள், சித்தர்கள்,தேவ தேவாதியர்கள், நவபிரஜாபதிகள் ஆகியோரைக் கதிகலங்கும் படிச் செய்து சிந்தை மகிழ்வார்.
சூரிய மண்டலத்தைச் சந்திர மண்டலத்துக்கும் சந்திர மண்டலத்தைச் சூரிய மண்டலத்துக்கும் மாறி மாறி இருக்கச் செய்து களிப்பார்.
முருகவேளின் இத்திருவிளையாடல்களைக் கண்ட அசுரர்கள் அஞ்சி நடுங்கினர். அரிய சக்தி படைத்த ஞானக் குமரனை இன்னாரென்று அவர்களால் அறிய இயலவில்லை!
குன்றுதோறும் ஏறி விளையாடும் குமரவடிவேல வனின் உருவத்தைக் காண முடியாத அஞ்ஞானிகள் தானே அசுரர்கள்! அத்தீயவர் கண்களுக்கு அருட்கொழுந்தின் திருவுருவும் தீரமும் எங்ஙனம் புலப்படும்!
அக்கொடிய அசுரர்களால், வேலவனின் வீர விளையாட்டுக்களின் எதிரொலியைத் தான் கேட்க முடிந்தது. அவர்களால் அதற்குக் காரணகர்த்தாவான கந்தக் கடவுளை மட்டும் காண முடியவில்லை.
அசுரர்கள் கண்களுக்குப் புலப்படாத கந்தன் அமரர்கள் கண்களுக்கும் புலப்படவில்லை. அமரர்களும் அஞ்சி நடுங்கினர்.
சூரிய சந்திரர்கள், தேவர்கள் முதலியோர் ஒன்று கூடினர். தேவேந்திரனிடம் சென்று முறையிடுவது என்று தீர்மானித்தனர். இந்திரனிடம் இச் செய்திகளைச் சொல்லினர்.
அமரர்கோன், “இதைப் பற்றித்தான் நானும் சிந்தித்து வருகிறேன். எனது கண்களுக்கும் அந்த மாயாவினோதன் யாரென்று புலப்படவில்லை, நாம் அனைவரும் ஒருங்கே சென்று நான்முகனைக் கண்டு விளக்கம் பெறுவோம்” என்று கூறினான்.
மேருமலையை விட்டு அமரர்கோன் ஐராவதத்தில் அமர்ந்து மற்றவர்கள் பின்தொடரப் புறப்பட்டான்.
அதேசமயத்தில் பரமனிடம் பற்றும், பக்தியும் உடைய மண்ணுலகத்தார் கண்களுக்கு மட்டும் முருகன் தமது திவ்விய தரிசனத்தைத் தந்தருளினார்.
ஐயனின் திருத்தோற்றத்தைக் கண்டு, “அசுரர்கள் அழிவது உறுதி” என்று மண்ணுலகத்தார் மகிழ்ந்தனர்.
அசுரர்களைப் போலவே தேவர்களின் ஞானக் கண்களும் ஊனக் கண்களாகி விட்டதைக் கண்டு கந்தக் கடவுள் அவர்கட்கு உண்மையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார்.
தேவர்களின் முன்னால் ஒரு திருமுகத்தோடு காட்சி அளித்தார்.
அவர்கள் நடுங்கும்படி மலைகளை அசைத்துக் காட்டினார். தேவர்கள் ஆர்ப்பரித்தனர்.
முருகன் துள்ளிக் குதித்து தேவர்களின் கிரீடங்களை, தாமரை இதழ்களைப் பிய்த்து எறிவது போல் பறித்து எடுத்தார்; எட்டு திக்குகளிலும் வீசி எறிந்தார்.
மதி இழந்த தேவர்கள் முடி இழந்தார்கள். பிரம்மனைச் சந்திக்கப் புறப்பட்டவர்கள் முருகனோடு சமருக்குத் தயாராயினர்.
இப்பாலகன் இத்தனைப் பராக்கிரமசாலியா? மாயங்கள் பல காட்டும் கொடிய ஆற்றல் மிக்கவனாய் அல்லவா காணப்படுகிறான். இவனைப் போரிட்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும்” என்று சூளுரைத்தான் தேவேந்திரன்!
ஆறுபடை கொண்ட வேலவனிடம் நான்கு படை கொண்ட தேவர்கள் போருக்குப் புறப்பட்னர்.
இந்திரன் ஐராவதத்தின் மீது அமர்ந்து வச்சிராயுதம், வில், வாள் முதலிய ஆயுதங்கள் தாங்கி, போருக்கு ஆயத்த மானான். மற்ற தேவர்களும் பற்பல ஆயுதங்களைத் தாங்கிப் போருக்கு அணிவகுத்தனர்.
அமரர்களுக்கு அபயம் கொடுக்கத் திரு அவதாரம் செய்த முருகக் கடவுள், தேவர்களின் அறிவற்ற தன்மையை எண்ணி குறுநகை சிந்தினார்.
அவரது குறுநகையிலே சரிந்து வீழ்ந்த மலைகள் பல! அம்மலைகளால் தேவர்களின் படைகள் சின்னாபின்ன மானது.
ஆத்திரமுற்ற தேவர்கள் முருகனை நோக்கிப் படைக்கலங்கள் பலவற்றை வீசினர். அவைகள் அனைத்தும் மலர்களாக அவன் பாதங்களில் வீழ்ந்தன. அமரர்கள் அஞ்சி ஓடினர்.
அமரர்கோன் கண்களிலே கோபாக்கினிப் பற்றிட வச்சிராயுதத்தை முருகன் மீது ஏவினான்.
அறிவிலிகள் அகந்தையால் ஆர்ப்பரித்தனர்.
கந்தனின் கருணை வச்சிராயுதத்தைப் பொடி மணல் போல் தூள் தூளாக்கியது.
ஐராவதம் வெகுண்டு, பயங்கரமாக பிளறிக் கொண்டு ஆறுமுகனை அணுகியது.
கந்தன் கணை தொடுத்தார். கந்தன் விடுத்த கணையானது யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து அதனைக் கொன்றது.
சினம் பொங்க எழுந்த இந்திரன், சரவணன் மீது சரமாரி பொழிய எண்ணி, வில்லில் ஓரம்பிற்கு நாணேற்றினான். அதற்குள் கந்தன் ஏவிய கணை, அமர வேந்தனின் மார்புக் கவசத்தையும், கொடியையும் சிதைத்தது.குமரன் அடுத்தடுத்து தொடுத்த கணைகள், ஆர்ப்பரித்த அமரர் தலைவனைக் குருதி வெள்ளத்தில் தள்ளியது.
தலைவனின் தலை உருண்டதும் வருணன், வாயு, காலன், அக்கினி, சந்திரன், சூரியன் முதலியோர் சரவணனைச் சூழ்ந்து நின்று போர் புரியத் தொடங்கினர்.
முருகன் நான்கு அம்புகளை அடுத்தடுத்துத் தொடுத்தார்; வருணனைக் கொன்று வெற்றி கண்டார்.
ஐந்து பாணங்களைத் தொடுத்து காலனின் கண்களை மயங்கச் செய்தார்.
சந்திரன் ஓரம்பிற்கும், சூரியன் மூவம்பிற்கும் முறையே தங்கள் வலிமை இழந்தனர்.
இரு கணையால் வாயுவின் வாழ்க்கையை இருளாக்கினார்.
அக்கினியை மூன்று கணைகளால் வென்றார். எஞ்சிய தேவர்களோ கந்தக் குமரனின் அம்பிற்கு அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்தனர்.
வெற்றி வாகை சூடிய சேவற்கொடியோன், மட்டில்லா மகிழ்ச்சி பூண்டார். முன் போல் மலைகளை எல்லாம் உருளச் செய்து, திருவிளையாடல்கள் புரியத் தொடங்கினார்.
முருகனின் அருட் செயலையும், தேவர்களின் மூடச் செயல்களையும், வெகு நேரமாகக் கண்டு கொண்டிருந்த நாரதர், விரைந்து சென்று தேவர்களின் குருவான பிரகஸ்பதியைக் கண்டார். தாம் நேரில் கண்டதை அவரிடம் விளம்பினார்.
நாரதர் விளம்பியைதைக் கேட்டு, தேவகுரு மனம் வெதும்பினார். நாரதருடன் போர்களத்திற்கு வந்தார். மடிந்து கிடந்த அமரர்களைக் கண்டார். கண் கலங்கினார். எம்பெருமானை மனதில் தியானித்தார்!
முருகப் பெருமான் அவருக்குப் பேரின்பக் காட்சி அளித்தார்.குமரனின் கமல மலர்ப் பாதங்களைப் பணிந்து எழுந்தார் பிரகஸ்பதி! அமரர்களுக்காக உயிர்ப் பிச்சை கேட்டார்!
“எம்பெருமானே! அசுரர்களின் தொல்லைத் தாளாமல் அமரவேந்தன் மற்ற தேவர்களோடு மேருமலையில் வந்து மறைந்திருந்தான். தேவர்கள், சரவணப் பொய்கையில் ஐயனின் திரு அவதாரத்தைத் தரிசித்தனர். தங்களின் திருவருளால், அசுரர்களை அழித்து மீண்டும் அரசைப் பெற நினைத்து பலகாலம் தவம் இருப்பவர்.
ஆனால் ஐயன் இவ்வாறு குமரனாக எழுந்தருளி திருவிளையாடல்கள் புரிந்ததை அவர்கள் எவ்வாறு அறிய முடியும்! தங்கள் தொண்டனான தேவேந்திரன் தங்கள் தண்டனைக்கு ஆளாகி விட்டான், பிள்ளைகளின் தவற்றைப் பெற்றோர்களன்றி வேறு எவரே மன்னித்து அருள்புரிய வல்லர்? ஞான வடிவான ஐயனே! மதி கெட்டுப்போன தேவர்களின் பிழையைப் பொறுத்து அவர்கள் உய்யுமாறு திருவருள் புரிய வேண்டும்.”
முன்னைப் பழம் பொருட்கெல்லாம் முன்னைப் பழம் பொருளாகிய முருகக் கடவுள், வியாழ பகவானின் வேண்டுகோளுக்கு இணங்கினார். இந்திரன் முதலிய அத்தனை தேவர்களையும் மீண்டும் ஞானம் பெற்று எழச் செய்தார்.
தேவாதிதேவர்கள் அனைவரும் மெய்யறிவு பெற்றனர். முருகனின் திருவடிகளில் முடிபட பன்முறை வணங்கினர்.
தேவர்களைத் தண்டித்து, பின்னர் இரட்சித்த முருகன் தேவதண்டன ரக்ஷக மூர்த்தியாக விளங்கினார். முருகப் பெருமான் தமது விசுவரூபத்தைத் தேவர்களுக்கு காட்டினார்.
ஈரேழு உலகங்களும், மலைகளும், கடல்களும், அண்டங்களும் விசுவரூபத்தில் காணப்பட்டன. மேலும் வாயு, வருணன் முதலியோரும் சிவனும், சிவசக்தியான கௌரியும், பிரம்மனும், திருமாலும், பூமகளும், பாமகளும், சந்திரன், சூரியன், அக்கினி, இந்திரன், காலன் மற்றும் பிரம்ம உருத்திரர்களும் காணப்பட்டனர்.
அருட் தோற்றத்தை ஞானக் கண்களால் திருவடி முதல் திருமுடிவரைக் கண்டு, அனைவரும் பேரின்பம் எய்தினர்.
“தேவர்களே! எமது வீரத்தை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இத் திருவிளையாடல் புரிந்தோம்.”
இறைவன் தமது விசுவரூபத்தை மறைத்து, திருமுருகப் பரம்பொருளாய் விளங்கினார்.
தேவர்கள் கண் பெற்ற பேற்றை எண்ணி மெய்யுருகி நின்றனர்.
வானவர் கோமான் கந்தனது கமல மலர்ப் பாதங்களில் வீழ்ந்து பணிந்து மொழி குழறி, மெய் விதிர்த்து, ”எம்பெருமானே! அருவமும், உருவமுமாகி எங்களை ஆட்கொண்ட பேருருவத்தின் திருவடியே! அடியேனும், அமரர்களும் ஐயனைப் போற்றி வணங்கி, தொண்டுகள் புரிய, விண்ணுலக ராஜ்யத்தைத் தேவரீர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அசுரர்களின் செருக்கை ஒடுக்கி எங்களைக் காத்திடுவீர்” என்று வேண்டினான்.
செவ்வேள், இந்திரனின் அன்பிற்கு அருள் செய்து, ”தேவேந்திரா! நீ எமக்கு அளித்த இந்த அரசை உனக்கே திருப்பித் தருகிறேன். நீங்கள் எனது சேனைகள். நான் உங்கள் சேனாதிபதி! எமது தலைமையில் அசுரர்கள் தலைகளைக் கொய்து, செங்கோலையும், சிம்மாசனத் தையும் உனக்கு அளித்து அருளுவோம்” என்று திருவாய் மலர்ந்தார்.
அமரேந்திரன் முருகனின் திருவடி போற்றி, “அமரர் குலம் காக்கப் பேரருள் புரியும் பெருமானே! அடியேன்கள் தேவரீருடைய சேனைகளாக, ஐயன் எங்களுக்கு தேவ சேனாதிபதியாக எழுந்தருள நாங்கள் என்ன தவம் செய்தோம்!” என்று பணிவன்போடு கூறினான்.
இகம், பரம், வீடு என்னும் மூன்றையும் கொடுத்தருளும் கருணைக் கடலாகிய கந்தக் கடவுளின் திருவடியில் வீழ்ந்தான் தேவேந்திரன்
“தயாநிதி! தேவரீருடைய திருவிளையாடல் வைபவத்தால் நிலை குலைந்துபோன மலைகள், கடல்கள், உலகங்கள், உயிர்கள் முதலியனவெல்லாம் முன்போல் நிலைக்க ஐயன் திருவருள் புரிய வேண்டும். அத்துடன், இந்த அடியேனுக்கு ஐயனது சேவடிக் கமலங்களைச் சென்னி மீது வைத்துப் பூசித்து வழிபடும் பேரின்பத்தையும் அளிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
கருணை மழை பொழியும் கந்தன், “அண்டங்கள் அனைத்தும் பண்டை நிலையை அடையக் கடவன ” என்று ஆணையிட்டார். அக்கணமே அவை யாவும் முன்னை நிலையை அடைந்தன.
இத்தகைய முருகனின் வீரச் செயல்களைக் கண்டு மகிழ்ந்த தேவேந்திரன், அக்னிதேவனுக்கு தீபம் கொடுக்கிறேன் என்று ஒருவன் முன் வந்தாற்போல் அகிலத்தை எல்லாம் ஆளும் ஆறுமுகப் பரம் பொருளுக்கு அரசை அளிக்க முன்வந்தான். முருகன் தமக்குள் குறுநகை புரிந்து கொண்டார்.
முருகப் பெருமான், கயிலைக்குச் செல்ல திருவுள்ளம் கொண்டு புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்து தேவாதி தேவர்கள் சிவநாமத்தைச் சிந்தையிற் கொண்டு முருகன் நாமத்தை விண்ணெட்ட முழக்கினர்.
கயிலை மலை சிகரத்தை அடைந்த தேவாதி தேவர்கள் திருமுருகனை தேவசேனாதிபதியாக எழுந்தருளச் செய்து வழிபட எண்ணினர். தங்கள் எண்ணத்தை, முருகப் பெருமானிடம் பணிவன்போடு பகர்ந்தனர். முருகனும் அவர்கள் ஆசைக்கு அருள்செய்து ஏற்றுக்கொண்டார்.
பிரம்மதேவன் தேவசிற்பியான விசுவகர்மாவை தம் முன் வரும்படி சித்தம் கொண்டதும் விசுவகர்மா அவர்முன் தோன்றினார். நான்முகனை நமஸ்கரித்தார்.
”விசுவகர்மா! நம்மை எல்லாம் ரக்ஷிக்க அவதரித்து அருள் புரியும் ஆறுமுகப் பெருமானுக்கு தேவசேனாதி பதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப் போகிறோம். அதனால் தாங்கள் இந்த இமயமலைச் சாரலில் அதி அற்புதமான நந்நகரத்தோடு கூடிய மாளிகை ஒன்றை நிர்மாணித்துத் தரவேண்டும்.
பிரம்ம தேவரின் அண்புகட்டளையைச் சிரமேற் கொண்டு வெகுவிரைவில் நகரத்தையும், நவரத்தினங் களால் இழைக்கப்பட்ட அலங்கார மணி மாளிகையையும் கட்டி முடித்தான் தேவதச்சன்.
அந்த நந்நகரம் பல யோசனை தூரம் கொண்டதாக விளங்கியது.
எங்கு பார்த்தாலும் வானத்தைப் பார்த்த உப்பரிகைகள், கோபுரங்கள் கூடகோபுர மாடமாளிகைகள், பிரம்மாண்டமான மதிற்சுவர்கள், அலங்காரவளைவுகள், உயர்ந்த கொடிமரங்கள் என்று பார்ப்போரை பிரமிக்க வைக்கும் தேஜோமயமான நகரத்தை நிர்மாணித்தார்.
கோடி சூரிய பிரகாசம் பொங்கும் நகரத்தின் பொலிவு கண்டு தேவர்கள் மயனைப் போற்றிப் புகழந்தனர். மும்மூர்த்திகள் பார்த்து வியந்து விசுவகர்மாவை புகழ்ந்து அருள் செய்து பெருமை சேர்த்தனர்.
பிரமிக்க வைக்கும் சிற்ப கலை வண்ணம் பொங்கும் நவரத்தின மாளிகையின் நடுவே முருகப் பெருமான் எழுந்தருளுவதற்கு திவ்யமான பொன்மணி அலங்காரம் பொங்கும் சிம்மாசனம் போடப்பட்டிருந்தது.
பட்டாபிஷேக வைபவ நந்நாள் அன்று முருகப் பெருமானை தேவாதி தேவர்கள் சம்பிரதாயப்படி ஆசனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
தேவாதி தேவர்களும், வசிஷ்டர் முதலிய முனிவர்களும், அந்தண சிரேஷ்டிரர்களும் புண்ணிய நதியின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தார்கள்.
நான்முகன், விஷ்ணு மற்றும் தேவசேனைகளுக்கு முருகப் பெருமானே சேனாதிபதியாக எழுந்தருளும் படியான அபிஷேகம் செய்தனர்.
அமரர்கோன் திருமஞ்சனம், சந்தனம், நறுமலர்,தூபம், தீபம், நிவேதனப் பொருட்கள் முதலியவற்றால் கந்தவேளுக்கு ஆராதனை செய்தார். திருமுருகனைத் தேவ சேனாதிபதியாக பட்டாபிஷேகம் செய்து அகமகிழந்தனர் தேவாதி தேவர்கள்.
கந்த பெருமான் முகம் மலர, ”தேவேந்திரா! நீ எமக்கு பட்டாபிஷேகம் செய்து மகிழ்ந்த இந்த கந்த வெற்பு கந்தவரை என்றும் கந்தகிரி என்றும் நாமம் பெறும்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
இந்த சுந்தரமான பட்டாபிஷேக வைபவத்தின் போது மந்திரங்கள் முழங்கின. துந்துபி வாத்தியங்கள் ஒலித்தது. எங்கும் இன்னிசை இன்பம் மழையெனப் பொழிந்தது.
“தேவசேனாதிபதி முருகனுக்கு ஜே!” என்ற கோஷம் அஷ்ட திக்குகளையும் குலுங்கச் செய்தது.
கந்த புராணம் – 9 திருமுருகன் திருவிளையாடல்… அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி