பெரிய திருவடியான கருடாழ்வான், ஸ்ரீமந் நாராயண பகவானைத் தொழுது, “வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடியதான பிரேத ஜன்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயவுசெய்து கூறியருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். சர்வாந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயண பகவான் கருடனை நோக்கிக் கூறலானார்:
“ஓ கருடா! மனிதர்கள் இறந்தவுடன் செய்ய வேண்டிய கருமங்களைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக.
பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பிய யாவரும் தாம் இறப்பதற்கு முன்னதாகவே தமது கையாலேயே விருஷோற்சர்க்கம் செய்தல் வேண்டும். ஐந்து வயதுக்கும் மேற்பட்ட யார் இறந்தாலும் அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவருக்கு பிரேத ஜன்மம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம். பிரேத ஜன்மம் வராமல் இருப்பதற்கு இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. உயிரோடு இருக்கும்போதோ, இறந்த பிறகோ யாருக்கு விருஷோற்சர்க்கம் செய்யப்பட்டதோ, அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. விருஷோற்சர்க்கம் செய்யாமல், வேறு இந்த எந்த வகையான தானதர்மங்களைச் செய்தாலும், விரதங்களை அனுஷ்டித்தாலும், வேள்விகளைச் செய்தாலும் பிரேத ஜன்மம் பீடிக்காமல் ஒழியாது” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.
கருடன் அவரை வணங்கி, “பகவானே! இந்த விருஷோற்சர்க்கம் என்பதை ஒரு மனிதன் இறப்பதற்கு முன்பாயின் எந்தக் காலத்தில் செய்யவேண்டும்? இறந்த பிறகாயின் எச்சமயத்தில் செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பயன் என்ன? அதைத் தயவு செய்து சொல்லியருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான.
அதற்கு அடியார்க்கு எளியவரான கருணையங் கடவுள், கருடனை நோக்கி, “கலுழனே! இறந்தவனைக் குறித்து விருஷோற்சர்க்கம் என்பதைச் செய்யாமல், சிரார்த்தம் முதலிய எதைச் செய்தாலும் அவற்றால் அவனுக்குப் பயன் ஏதும் ஏற்படாது. எவனுக்கு, அவன் உயிர் நீங்கிய பதினொன்றாம் நாளன்று விருஷோற்சர்க்கம் செய்யப்படவில்லையோ, அவனுக்குப் பிரேத ஜன்மம் நிச்சயமாக ஏற்பட்டே தீரும். அது உறுதி. விருஷோற்சனம் செய்யப்பட்டால், இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடையாமல், பெரியோர்கள் அடைகின்ற உலகத்தை அடைவான். முக்தி தரும் க்ஷேத்திரங்களில் ஏதாவது ஒன்றில் இறந்தவன், எமனால் பீடிக்கப்படாமல், நல்ல உலகத்தை அடைவான். விருஷோற்சனம் எவனுக்குச் செய்யப்பட்டதோ, அவனும் அத்தகைய உலகையடைவான். புத்திரனாவது, மனைவியாவது, பெண் வயிற்றுப் பிள்ளையாவது பெண்ணாயினும் விருஷோற்சனம் செய்யலாம். இறந்தவனுக்குப் புத்திரன் இருப்பானாயின், அந்தப் புத்திரன் மட்டுமே விருஷோற்சனத்தைச் செய்ய வேண்டும். வேறு யாரும் அதைச் செய்யலாகாது” என்று கூறினார்.
அதைக் கேட்டதும் கருடன் அவரை வணங்கி, “ஸ்ரீ வாசுதேவா! புத்திரன் முதலிய உரியவர் ஒருவரும் இல்லாதவனும் இல்லாத பெண்ணுமாக இருந்து ஒரு நபர் மடிந்தால், அந்த நபருக்கு உரிய உத்திரக் கிரியைகளை யார் செய்ய வேண்டும்? இந்த விஷயத்தைப் பற்றித் தெளிவாகக் கூறியருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான். அதற்கு ஸ்ரீமந் நாராயணர், “கலுழனே! பிள்ளையில்லாமல் இறந்தவன், நரகத்தையடையாமல் நல்லுலகை ஒருபோதும் அடையமாட்டான். ஆகையால், எத்தகைய அரிய கர்மத்தைச் செய்தாகிலும் ஆண் மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவன் தனக்காக நல்வினை எதையுமே செய்து கொள்ளாமல் இறந்தாலுங்கூட, அப்படி இறந்தவனுக்கு அவனுடைய புத்திரர்கள் கிருத்தியங்களைச் செய்யாமல் விட்டு விட்டாலும் அவன் இரவு பகலாக, பசியோடும் தாகத்தோடும் ”ஐயையோ! ஐயையோ!” என்று கூச்சலிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து திரிந்து, பிறகு புழுக்கள், கிருமிகள் முதலியவற்றின் ஜன்மங்களை எடுத்து, மீண்டும் மனித ஜாதியில் கடையோன் வயிற்றில் பிறந்து பிறந்து மரிப்பான்”
”ஆகையால் ஒரு மனிதன் வியாதியால் பீடிக்கப்படுவதற்கு முன்பும், வயோதிகத்தை அடைவதற்கு முன்பும், செயல்கள் ஒடுங்கிப் போவதற்கு முன்னரும் தான் நல்லுலகை அடைய வேண்டியதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன்,அத்தகைய நற்கர்மங்களைச் செய்யக் கடவன். அவ்வாறு செய்யாமல், பிறகு செய்து கொள்வோம். என்று ஆலோசிப்பானாயின், அது தீப்பற்றி வீடு எரியும்போது, அதை அணைக்க அந்த நேரத்தில் கிணற்றைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுவதை ஒக்கும்!” என்று கூறினார்.