மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இன்று முதல் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் சாமி தரிசனம் முடிந்து கோவிலுக்குள் எங்கும் உட்கார அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட 65 வயதிற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும், கோவில்கள், கோவில் மண்டபங்களில் திருமணம் செய்யும் பக்தர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் :
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை பூஜை காலங்கள், திருவிழா புறப்பாடு காலங்கள் நீங்கலாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். உடல்வெப்ப நிலை பரிசோதனை, கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்திய பின் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். 10 வயதிற்குட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், நோய்வாய்ப்பட்டோர் கோவிலுக்கு வர அனுமதியில்லை
தேங்காய், பழம் கொண்டு வர அனுமதியில்லை. அர்ச்சனையும் செய்யப்படாது. கோவிலுக்குள் எங்கேயும் உட்கார அனுமதியில்லை. கோவிலுக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது.
பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுவர். ரூ.100, ரூ.50 சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் கிழக்கு வாசல், அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குளம் கிழக்கு பகுதி, தெற்குப்பகுதி, கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்கு செல்ல வேண்டும்.
கட்டண சீட்டுள்ள பக்தர்கள் தெற்கு கோபுரம், கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக செல்ல வேண்டும். அம்மன் தரிசனம் முடிந்து சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், பத்ரகாளி அருகில் உள்ள வழியே வெளியேறி பழைய திருக்கல்யாண மண்டபம், அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும். மற்ற கோபுர வாசல்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.