மருது சகோதரர்கள் ஆண்டு வந்த தமிழகத்தின் புகழ்பெற்ற மாவட்டமான சிவகங்கையில் அமைந்துள்ளது காளையர் கோவில். இந்த கோவிலை இன்றும் தேவகோட்டை ஜமீன் பரம்பரை சேர்ந்த குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலின் பெயர் சொர்ணகாளீஸ்வரர் என்பதாகும். இந்த கோவில் சிவகங்கையின் காளையர் கோவிலின் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு காளையர் கோவில் என பெயர் வரக்காரணம் இங்கு அமைந்துள்ள இறைவனின் பெயர் காளிஸ்வரர் என்பதாகும்.
காளீஸ்வரன் என்கிற பெயரே மருவி காளையார் என்றானதாக சொல்லப்படுகிறது.
சங்க காலத்தில் இந்த ஊரை கானப்பேர் என்று அழைத்து வந்துள்ளனர். இதற்கு இலக்கியத்தில் சான்றும் உண்டு புறநானூற்றின் 21 ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார் இந்த இடம் குறித்து குறிப்பிட்டு உள்ளார். சுந்தர மூர்த்தி நாயனார் அவர்கள் இங்குள்ள இறைவனை 9 ஆம் நூற்றாண்டில் காளை என அழைத்து பாடியுள்ளார். அந்த பாட்டின் அடியை ஒற்றியும் இந்த பகுதிக்கு காளையர் கோவில் என்ற பெயர் அமைந்திருக்கலாம்.
மேலும் இத்திருப்பெயர் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், சுந்தரர் சிவபெருமானை தரிசிக்க இங்கு வந்த போது ஊர் எல்லையில் அவர் நுழைய முற்படுகையில் பாதையெங்கும் சிவலிங்கம் நிறைந்திருந்ததாம் நடக்கக்கூட பாதையின்றி இருப்பதை கண்டு காளீஸ்வரரை வணங்க முடியாத வருத்தத்தில் அவர் வருந்திய போது, இறைவன் தன்னுடைய காளையை சுந்தரரை நோக்கி அனுப்பினார். அந்த காளை நடந்து வந்ததில் புது பாதை உருவாகியுள்ளது அதன் வழியே வந்து தன்னை தரிசிக்கலாம் என்ற அசரீரி ஒலிக்க கேட்டு மகிழ்ச்சியடைந்து இறைவனை தரிசித்தார் எனவே இந்த ஊர் காளையர் கோவில் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்பது நம்பிக்கை.
இந்த கோவில் சரித்திர புகழ் மிக்க ஆனைமடு என சொல்லப்படும் குளம் உண்டு. இங்கு தான் ஐராவதம் தன்னுடைய சாபம் விமோசனம் பெற வந்து இருந்ததாகவும், அப்போது தான் எந்த மனிதர்களின் கண்ணிலும் படக்கூடாது என்பது அதன் விதி, ஆனால் இங்கே ஐராவதம் வந்த சமயம் ஒரு மனிதர் ஐராவதத்தை பார்க்க நேர்ந்ததால் மனிதரின் பார்வையிலிருந்து தப்ப தன் தலையை மண்ணில் புதைத்ததாகவும் அங்கிருந்து பெருகியே நீரே இங்கு குளமாக உள்ளது என்பது புராணக்குறிப்பு.
எல்லா ஆலயத்திலும் ஒரே ஒரு மூலவர் இருக்க இங்கு மட்டும் மூன்று மூலவர்களும் அதற்குரிய தேவியர்களும் உண்டு. சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவல்லி, சோமேஸ்வரர் – சவுந்திரநாயகி, சுந்தரேஸ்வரர் – மீனாட்சி ஆகிய மூன்று தெய்வங்கள் இங்கே உண்டு. தங்க பள்ளியறை இந்த கோவிலில் இருந்து தனிச்சிறப்பு. இங்குள்ள சொர்ண காளீஸ்வரரை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.