சித்ரா பவுர்ணமி நான்னாளில் கள்ளழகர் வைகையில் கால் பதிக்கும் நேரத்தில் பக்தர்கள் பரவசத்தோடு எழுப்பும் கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டும். அதை கேட்கும் பலருக்கும் கண்களில் கண்ணீர் பெருகும். இந்த ஆண்டு கள்ளழகர் மதுரைக்கு வராவிட்டாலும் வைகை ஆறு போல உருவான செயற்கை ஆற்றில் இறங்கி அருள்பாலித்திருக்கிறார். மதுரையில் வைகை ஆறு வந்தது எப்படி கள்ளழகர் ஏன் வைகையில் இறங்குகிறார் என்று பல புராண கதைகள் உள்ளன. அந்த சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சொக்கநாதருடன் கல்யாணம். அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம் என்றால் சும்மாவா? ஊரே விழாக்கோலம் பூண்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் பூத கணங்களும் மதுரைக்கு புறப்பட்டு வந்தனர்.
அறுசுவை விருந்துகள் தயார் செய்யப்பட்டது. மலை மலையாக சாதம் சமைக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேர் சாப்பிட்டும் உணவு காலியாகவில்லை. மலை மலையாக குவிந்திருந்தது.
அதைப்பார்த்த அன்னை மீனாட்சி, உணவுகள் இவ்வளவு இருக்கிறதே என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார்.
மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர்.
தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.
அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்… தாகம்… என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை பூமியில் வைத்து அழுத்த அங்கு ஒரு நதியை உருவானது. அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை” என ஆயிற்று என்கிறது புராண கதை.
கால் வைக்கும் கள்ளழகர்
தன் தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. திருமணம் முடிந்த பின்னர்தான் அழகர் மதுரைக்கு வர அதே சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது ஒரு புராண கதை.
மற்றொரு புராண கதை வேறு மாதிரி உள்ளது. சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் ‘மண்டூகோ பவ’ என சாபமிட்டார்.
உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, வைகை தீர்த்த கரையில் நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என என்று அதற்கான வழியை சொன்னார் துர்வாசர்.
இந்த புராண கதையின் படியே வைகைக் கரையில் தவம் செய்யும் சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகையில் கால் பதிப்பதாக புராணங்கள் விவரிக்கின்றன. இந்த ஆண்டு செயற்கை வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு நாளை சாப விமோசனம் தரப்போகிறார்.