ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை தமிழக அரசே நேரடியாக நியமிக்க பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் நூற்று எட்டு வைணவத் தலங்களில் முதன்மையானது ஆகும். ஸ்ரீரங்கம் கோயிலின் 50வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் கடந்த 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். தற்போது, மூன்று ஆண்டுகள் கழித்து ஜீயர் நியமனம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்து மத தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்த, சந்நியாசம் பெற்ற, கோயில் ஆகமங்களையும் வழிபாட்டு முறைகளையும் அறிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தகுதி உடையவர்கள் ஜூன் 8ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் இந்த அறிவிப்புக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், சட்டப்படியும் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டும் ஜீயர் நியமனம் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.