மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று வீட்டில் முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்வது நல்லது. இப்படி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை இன்னல்களும் நீங்கி, இனி வர இருக்கும் ஆபத்துகளும் உங்களை நெருங்காமல் ஓடி விடும். முருகன் காக்கும் கடவுளாக நின்று உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பார்.
ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகள் 6 மணிக்கு ஏற்றி வைத்து கார்த்திகை விரதம் இருந்து உணவேதும் உண்ணாமல் இருப்பவர்களுக்கு திருமண தடை, தொழில் தடை, வருமான தடை, மனக்கஷ்டம், குழப்பம் என்று எந்த பிரச்சனைகளும் எளிதில் தீர்வதாக ஐதீகம் உள்ளது.
காலையில் இருந்து மாலை விளக்கேற்றி முடியும் வரை விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
ஆறு மணிக்கு விளக்குகளை ஏற்றி வைத்து முருகனுக்குரிய கவசங்கள், பாராயணங்கள், ஸ்லோகங்கள் மந்திரங்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவற்றை வாசிக்க வேண்டும். ஸ்கந்த குரு கவசம் பாடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இறை அருளை முழுமையாகப் பெற்று தரும்.