கந்தக் கடவுளுக்கு உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும், தோஷங்கள் நீங்கவும், பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து அறுபடைவீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால், அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம். அந்த வகையில் நலன்களை அள்ளித் தருவதில் ஏலத்தூர் முருகன் கோயில் சிறப்பு வாய்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் அருகே உள்ள கலசப்பாக்கம் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது ஏலத்தூர் நட்சத்திரக் கோயில். இங்கு எழுந்தருளி இருக்கும் முருகன் சுயம்பு மூர்த்தி ஆவார். முருகப்பெருமான் சிவலிங்க வடிவில் அமைந்திருப்பதால் அவருக்கு “சிவசுப்ரமணியன்’ என்று பெயர்.
உற்சவர் முருகன் மலை மேல் வள்ளி தெய்வானையோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மலையடிவாரத்தில் உள்ள குளத்தில் என்றும் நீர் வற்றுவதே இல்லை. மலை மேல் ஒரு சுனை உள்ளது. உடம்பில் மரு உள்ளவர்கள் இச்சுனையில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக் கொண்டால் மரு நீங்கி விடுகிறதாம்.
பங்குனி உத்திரத் திருநாள் இங்கு பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று முருகன் ஊருக்குள் சென்று, அங்குள்ள நதியில் தீர்த்தவாரி கண்டருள்வார். இப்பகுதி மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவிற்குத் தவறாமல் வந்து விடுவார்கள். முருகனை தவறாமல் வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்று, இறை நிலையை அடையலாம்!