நம் மண்ணின் தெய்வங்கள் மகத்தானவை. இந்த மண்ணையும் மக்களையும் காக்க சுயம்புவாக உருவானவை பல. அப்படி, சுயம்புவாகத் தோன்றிய தெய்வங்களைக் கண்டறிந்து மக்கள் கோயில் எழுப்பி வழிபட ஆரம்பித்தனர்.
காலம் காலமாக இந்தக் கோயில்கள் மக்களின் குறை தீர்க்கும் கூடங்களாக மாறி நிலைத்து வந்துள்ளன. அப்படி ஒரு கோயில்தான் கோடாத்தூர் அருள்மிகு ராஜலிங்கமூர்த்தி திருக்கோயில்.
லிங்க வடிவில் முருகன்
இந்தக் கோயிலில் ராஜலிங்கமூர்த்தியாக அருள்பாலிப்பவர் முருகப்பெருமானே. லிங்க வடிவில் இரண்டு சிறிய கற்கள். அவற்றின் அருகே ஒரு வேல் என சுயம்புவாக ஸ்வாமி எப்படி எழுந்தருளினாரோ, அதே திருவடிவிலேயே வழிபடுகிறார்கள். இந்தக் கோயில் உருவான திருக்கதை சிலிர்ப்பானது.
முன்னொரு காலத்தில் வழிப்போக்கர்கள் இருவர் சாலையின் ஓரத்தில் இருந்த சிறு கற்களைப் பிடுங்கி எறிய முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. மாறாக அவர்களின் முயற்சியால் கற்களிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. பயந்துபோனவர்கள் ஊருக்குள் ஓடி இந்தச் செய்தியைக் கூறினர். ஊர் மக்களும் வந்து இந்த அதிசயத்தைக் கண்டு செய்வதறியாது திகைத்தனர். அடுத்து வந்த நாள்களில், இந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கள் தாமே இந்தக் கற்களின் அருகில் வந்து பால் சொரிந்தன. பால் ஒரு துளிகூட வெளியே தெறிக்காதவண்ணம் கற்கள் அதை ஈர்த்தன.
இந்த அதிசயத்தையும் கண்ட மக்கள், தங்களைக் காக்க வந்த தெய்வமே இந்தக் கற்கள் என்று அறிந்து அருகே வேல் ஒன்றை நட்டுவைத்து, முருகக் கடவுளாக வழிபட ஆரம்பித்தனர். இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. மாறாக அவரின் வேலுக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் முருகக் கடவுள் மட்டுமன்றி, சந்திரசேகர பிடாரியம்மன், கூழக்கருப்பன் ஆகியோரின் சந்நிதிகளும் அமையப் பெற்றுள்ளன. ராஜலிங்கமூர்த்தி சந்நிதியின் இடப்புறத்தில், சந்திரசேகர பிடாரியம்மன் வீற்றிருக்கிறாள். தரிசிக்கும் பக்தர்களுக்குத் தன் கருணைப் பார்வையால் துயர்தீர்க்கும் எழில் வடிவோடு அன்னை காட்சி தருகிறாள்.
இங்கு முத்துவீர கருப்பண்ணசாமிக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இவரது சந்நிதிக்கு முன்பாக, ஆண் மகாமுனி மற்றும் பெண் மகாமுனி என இரண்டு பிரமாண்ட திருமேனிகளை அமைத்திருக்கிறார்கள். இதேபோல் கோயிலிலுள்ள ‘கூழக்கருப்பன்’ என்கிற `குற கருப்பன்’ சந்நிதியிலும் இரு முனிகளின் திருவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருகிலேயே பெரிய பெரிய மணிகளும் வேலாயுதங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து கருப்பனிடம் வேண்டிக்கொண்டு குறை தீர்ந்த பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தியவையே இவை என்கின்றனர் கோயில் சார்ந்தவர்கள்.
கூழக்கருப்பன் சாமிக்கு வெளிச்சம் என்றால் மிகவும் இஷ்டமாம். ஆகவே, கருங்கல் ஒன்றை நட்டுவைத்து அதன் உச்சியில் கண்ணாடியிலான கூடுபோன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள் பெரிய அளவிலான மண்ணெண்ணெய் விளக்கைவைத்து, தினமும் எக்காலமும் எரிய விடுகிறார்கள். இங்கு முனிக்கும் கருப்பனுக்கும் ஆடு, கோழிகள் பலியிடும் வழக்கம் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
கோயில் மரங்களில் காணப்படும் வௌவால்களை இந்தக் கிராமத்து மக்கள் தங்களின் காவல் தெய்வங்களாகவே நினைத்து வணங்குகிறார்கள். கோயிலின் மகிமைகள் குறித்து, ஆலய நிர்வாகி சண்முகவேலிடம் பேசினோம்.
“இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகள் பழைமை கொண்டது. இங்கிருக்கும் ராஜலிங்கமூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரிடம் வைத்த வேண்டுதல்கள் தவறாமல் பலிக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், இந்தக் கோயிலைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறார்.
உடனே கோயில் பூசாரி, ‘பச்சைத்தண்ணியில்கூட விளக்கெரிய வைப்பார் எங்கள் ராஜலிங்கமூர்த்தி. அவரை இழிவாகப் பேச வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த ஆங்கிலேயர், ‘பச்சைத் தண்ணியில் விளக்கெரிந்தால், என் குதிரைமீது துண்டைப் போட்டு, குதிரையை விரட்டிவிடுவேன். அந்தக் குதிரையில் உள்ள துண்டு எங்கு தரையில் விழுகிறதோ, அந்த எல்லை வரைக்குமான நிலத்தைக் கோயிலுக்கே எழுதி வைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
பூசாரியும் அருகிலிருந்த கிணற்றில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துவந்து, அதில் திரியைப் போட்டு தீபமேற்றியிருக்கிறார். பச்சைத் தண்ணீரில் விளக்கு எரிந்தது. அதைப் பார்த்து வியந்த அந்த ஆங்கிலேயர் ராஜலிங்கமூர்த்தியை வணங்கி, தான் சொன்னபடியே குதிரைமீது துண்டைப் போட்டு ஓடவைத்திருக்கிறார். அந்தத் துண்டு பத்து ஏக்கர் நிலத்தைக் குதிரை தாண்டியபோது கீழே விழுந்ததாம். உடனே, அந்தப் பத்து ஏக்கர் நிலத்தையும் கோயிலுக்கே எழுதிவைத்துவிட்டார் அந்த அதிகாரி.
அமாவாசை, பௌர்ணமி நாள்களில் சிறப்பு பூஜை நடக்கும். ஒவ்வொரு வருடமும் தெலுங்கு வருடப் பிறப்பு அன்று ராஜலிங்கமூர்த்தி கோயிலில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடி திருவிழா நடத்துவோம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி போய் காவிரியில் தீர்த்தம் எடுத்துவந்து, திருவிழாவை தடபுடலாகக் கொண்டாடுவோம்” என்றார் சிலிர்ப்புடன்.
கோயிலின் பூசாரி ராசப்பனிடம் பேசினோம். “ராஜலிங்கமூர்த்தி சந்நிதியைச் சுற்றி வேப்ப மரங்களும், புளிய மரங்களும் இருக்கின்றன. தல விருட்சம் மாவலிங்க மரம். எங்க ஊர் வறட்சியான ஊர். பழ மரங்களே ஊரில் இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கான பழந் திண்ணி வௌவால்கள் இங்கே வசிக்கின்றன. அவற்றையும் சாமியா வணங்கிட்டு வர்றோம். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, உடலில் ஏற்படும் பக்கவாதம், கைகால் முடம் உள்ளிட்ட பிரச்னைகள் தீர ராஜலிங்கமூர்த்தியை வணங்குவது சாலச் சிறந்தது.
பக்தர்களின் குறைகள் தீர்ந்ததும், ராஜலிங்கமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யச் சொல்வாங்க. பொங்கல் வைப்பாங்க. முத்துவீர கருப்பண்ணசாமிக்கும், கூழக்கருப்பண்ணசாமிக்கும் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்துவாங்க. இன்னும் சிலர் கூழக்கருப்பண்ணசாமி சந்நிதிக்கு முன்னாடி பெரிய மணிகளைச் சமர்ப்பிப்பதும், வேலாயுதங்களைக் கொண்டு வந்து நடுவதும் உண்டு’’ என்று பரவசத்தோடு பகிர்ந்துகொண்டார் ராசப்பன்.
இங்கே, ராஜலிங்கமூர்த்தி சந்நிதியில் விபூதியும், சந்திரசேகர பிடாரியம்மன் சந்நிதியில் குங்குமமும் பிரசாதமாகத் தருகிறார்கள். கோயிலின் தீர்த்தமாகப் பால் கொடுக்கப்படுகிறது. இந்தப் பாலை அருந்தினால், தங்களின் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!
பச்சைத் தண்ணீரில் விளக்கெரிந்த அற்புதம்!
எப்படிச் செல்வது?: கரூரிலிருந்து கோவைக்குச் செல்லும் வழியில், `தென்னிலை’ எனும் இடம் வருகிறது. அங்கிருந்து இடப்புற மாகப் பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ பயணித்தால், கோடந்தூர் ராஜலிங்கமூர்த்தி ஆலயத்தை அடையலாம் (தொடர்புக்கு: 94448 83330).