திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தினமும் கேரள அரசுக்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளும் பட்சியான சி.பி.எம் பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், ஸ்வப்னா போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கேரள அரசும், போலீஸும் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் போலி சான்றிதழ் கொடுத்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளார் ஸ்வப்னா. இந்த குற்றச்சாட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கேரள அரசின் ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்திலும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலும் பணிபுரிந்திருக்கிறார் ஸ்வப்னா சுரேஷ். எல்லா இடங்களிலும் பணியில் சேருவதத்காக மகாராஷ்டிராவில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் பல்கலை கழகத்தில் பி.காம் பட்டம் பெற்றதற்கான சான்றிதழை கொடுத்திருக்கிறார். தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிபோது ஸ்வப்னா சுரேஷின் சான்றிதழ்கள் போலியானவை என தெரியவந்தன. போலி சான்றிதழ் குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post