கடன் பிரச்னையால் மனைவியை கொன்று மகளை கத்தியால் குத்தியவர், கைது செய்யப்பட்டார்.பெங்களூரில் உள்ள மத்திகரேயைச் சேர்ந்தவர் தானேந்திரா, 48. இவரது மனைவி அனுசுயா, 42. இருவருக்கும் 13 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த தானேந்திரா, மனைவியை கொன்று, மகளை கத்தியால் குத்தி விட்டதாக கூறினார்.மத்திகரே போலீசார் அங்கு சென்று அனுசுயா உடலை கைப்பற்றி, கணவரை கைது செய்தனர். மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.போலீசார் கூறியதாவது:தனேந்திராவும், அனுசுயாவும் 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனை கட்ட முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.அதுபோல நேற்று முன்தினம் இரவு முழுக்க சண்டை நடந்தது. அதிகாலை 3:00 மணி அளவில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன், மகளையும் கத்தியால் குத்தினார். இதில் மகள் மயங்கி விட்டதால், இறந்து விட்டதாக நினைத்தார்.
இதையடுத்து, அவரும் தற்கொலை செய்ய நினைத்தார். ஆனால், அதற்கு துணிவின்றி காலை வரை மனைவி பிணத்தின் அருகில் உட்கார்ந்திருந்தார். காலையில் மகளுக்கு நினைவு திரும்பியதால், மீண்டும் அவரை குத்தி கொல்ல சென்றார். அப்போது மகள் கத்தி சத்தம் போடவே, பயந்து போய் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தானேந்திராவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.
Discussion about this post