திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தில், தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் மணிகண்டன். ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தான் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பத்திருக்கிறார். அதனை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து மணிகண்டனுக்கு முறையான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனால் மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ், முதல் தவணைக்கான நிதியை வழங்க, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் கிராம மேற்பார்வையாளர், மணிகண்டனிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த மணிகண்டன் மிகவும் சிரமப்பட்டு மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதனை மகேஷ்வரனிடம் கொடுத்துள்ளாராம்.
அடுத்தக்கட்டமாக, கீழ்த்தளம் மேலும் ரெண்டல் ஆகியவற்றை கட்டியவுடன் இரண்டாவது தவணைக்கான பணத்தை வழங்க, கிராம மேற்பார்வையாளர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை மணிகண்டன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீடு கட்டுமானத்திற்கான அடுத்தக்கட்ட பணிகளுக்கு பணம் தேவைப்பட்டதால் மிகுந்த உளைச்சல் அடைந்திருக்கிறார் மணிகண்டன். 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் கூட, இரண்டாம் கட்ட தவணைக்கான பணம் கிடைக்கவில்லை. சில நாள்களில் வந்து விடும் என மணிகண்டனிடம், கிராம மேற்பார்வையாளர் தெரிவித்திருக்கிறாராம்.
ஆனால் பல நாள்கள் ஆகியும் பணம் வரவில்லை. அதன் பிறகு மணிகண்டனுக்கு, மகேஷ்வரன் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியை பெற, லஞ்சம் கொடுப்பதற்காக, மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாலும், வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாலும் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி கொல்லி மருத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் கிராம மேற்பார்வையாளர் மகேஷ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
Discussion about this post