சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “குல்கர்னிக்கு எதிரான எங்களது போராட்டத்தால் மாநிலத்துக்குக் கெட்ட பெயர் வந்து விட்டதாக முதல்வர் சொல்கிறார். அவர் மகாராஷ்டிரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. குல்கர்னியின் முகத்தில் கருப்பு சாயம் பூசியது, மகாராஷ்டிராவின் நலனுக்காகத்தான். அதை பா.ஜ.க ஆதரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு உபதேசம் செய்கிறது. முதலில், நாட்டுப்பற்றுடன் தொடர்புடைய ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்னை ஆகியவை பற்றி பா.ஜ.க பேசட்டும். எங்கள் கட்சியின் தேசப்பற்று சார்ந்த நடவடிக்கைகள் பிடிக்காவிட்டால் மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசிலிருந்து பா.ஜ.க வெளியேறலாம்” என்றார் காட்டமாக.
தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தாலும், கூட்டணி ஆட்சியில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்து, வேறெந்த சம்பவத்திலும் சிவசேனாவும் பா.ஜ.க-வும் பெரிய அளவில் முட்டி மோதிக் கொள்ளவில்லை என்றாலும், இரு கட்சிகளுக்குமிடையே முன்னர் இருந்த அளவுக்கு நட்புறவு இல்லை என்றே சொல்லப்பட்டது. தொடர்ந்து 2018 ஜனவரியில், “ 2019 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிடும்” என்று அறிவித்தார் உத்தவ் தாக்கரே. இதையடுத்து, “இது சிவசேனாவுக்குத்தான் பின்னடைவு” என்று சொல்லி கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது பா.ஜ.க. 2019 பிப்ரவரியில், பா.ஜ.க மேலிடத்திலிருந்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்தது சிவசேனா. அந்தச் சமயத்தில் பா.ஜ.க தலைவராகச் செயல்பட்ட அமித் ஷா முன்னிலையில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “ஆட்சிப் பொறுப்பு மற்றும் பதவிகளில் இரு கட்சிகளுக்கும் சமமான பங்குண்டு” என்று உறுதியளித்தார்.
Discussion about this post