சர்வதேச யோகா தினம் உலகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது.நம் நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு நாட்டின் மிக முக்கியமான 75 இடங்களில் யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு மத்திய அமைச்சர்கள் தலைமை வகித்தனர்.
கர்நாடகாவின் மைசூரு அரண்மனை முன் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். அவர்களுடன் இணைந்து பிரதமரும் யோகாசனங்கள் செய்தார்.
அதன் பின் பிரதமர் மோடி பேசியதாவது:யோகாசனம் செய்வது தனிமனிதருக்கு மட்டுமின்றி இந்த சமூகத்திற்கு, தேசத்திற்கு, உலகிற்கே அமைதியை தரும். இது சற்று அதீத சிந்தனையாக பலருக்கு தோன்றலாம்.ஆனால் அது உண்மை தான் என்பதை நம் யோகிகள் நிரூபித்துள்ளனர். இந்த பிரபஞ்சமே நம் உடல் மற்றும் ஆன்மாவில் இருந்து தான் தொடங்குகிறது. நமக்குள் இருக்கும் அனைத்தையும் யோகா உணர்த்துகிறது; விழிப்புணர்வை உருவாக்குகிறது. இது உலகத்தை நோக்கிய விழிப்புணர்வாக விரிவடைகிறது.
யோகா இன்றைக்கு வாழ்க்கையின் அங்கம் மட்டுமின்றி வாழ்க்கை முறையாகவே மாறி விட்டது. ஒரு காலத்தில் யோகா, சில குறிப்பிட்ட ஆன்மிக மையங்களுக்கானதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு உலகின் ஒவ்வொரு மூலையிலும் மக்கள் யோகா செய்கின்றனர். இது சர்வதேச திருவிழாவாக மாறியுள்ளது. யோகா தனிமனிதருக்கானது என்பதை கடந்து ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கானதாக மாறிஉள்ளது.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட கடந்த இரண்டரை ஆண்டுகளில் யோகா செய்வோர் எண்ணிக்கை உலகம் முழுதும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கர்நாடகா கவர்னர் தார்வார்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்தியஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால், மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜா வாடியார் மற்றும் ராஜமாதா பிரமோதா தேவி ஆகியோர் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின், பிரதமர் மோடி, ராஜமாதா பிரமோதா தேவியின் அழைப்பை ஏற்று மைசூரு அரண்மனையில் காலை உணவு சாப்பிட்டார். அதில், மைசூரு பாக், மைசூரு மசால் தோசை உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
குஜராத்தின் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை முன் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல; உங்களுடனும், உலகத்துடனும், இயற்கையுடனும் ஒற்றுமை உணர்வைக் கண்டறியும் ஒரு வழியாகவும் இருக்கிறது. வளமான இந்தியா உருவாக ஆரோக்கியமான நாடு அவசியம். ஆரோக்கியமான நாடு அமைய ஆரோக்கியமான குடிமக்கள் அவசியம். ஆரோக்கியமான குடிமகனால் தான் நாடு வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய – சீன எல்லைப் பகுதிகளான லடாக், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பல ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ – திபெத் எல்லை போலீசார் யோகாசனத்தில் ஈடுபட்டனர். இமயமலையில், 17 ஆயிரம் அடி உயரத்தில் போலீசார் நேற்று யோகாசனங்கள் செய்தனர். சர்வதேச யோகா தினத்துக்காக, இந்தோ – திபெத் எல்லை போலீசார் பிரத்யேக பாடலை தயார் செய்து இசைத்தனர்.
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில், பெருநிறுவனங்கள் உற்சாகமாக பங்கேற்றன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களுடன் நேற்று காலையில் யோகாசனத்தில் ஈடுபட்டன.
குஜராத்தின் ஆமதாபாதில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி ஆகியோர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் யோகாவில் ஈடுபட்டனர். இதுபோல, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களும், சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டன.
Discussion about this post